அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/005-383

விக்கிமூலம் இலிருந்து

 

அரசியல்

 

1. அரசியல்

நாட்டுக்கு நல்லரசன் வந்தாலும் தோட்டிக்குப் புல்சுமைப் போகாதென்னும் அரசாங்கத்தால் குடிகள் விருத்தியடைவார்களா அன்றேல்,

நாட்டுக்கு நல்லரசன் வந்தால் தோட்டியும் கல்விகற்று அரச அங்கத்தில் ஒருவனாக விளங்குவதால் குடிகள் விருத்தியடைவார்களா.

யாப்பருங்கலைக்காரிகைச்சூத்திரம்

மழையின்றி மானிலத்தார்க்கில்லை - மழையும் / தவமிலாரில் வழியில்லை - தவமும்
அரசிலாரில் வழியில்லை - அரசனும் / இல்வாழ்வாரில் வழியில்.

வானம் சுருங்கில் தானம் சுருங்குமென்னும் மூதாட்டியின் வாசகப்படி மழையில்லாமற் போமாயின் நிலத்தில் வாழும் அறுவகை சீவர்கள் வாழ்க்கையும் குன்றும். நிலநோக்கி வானம் பெய்யாமைக்குக் காரணம் யாதோவெனில், சீலமிகுத்த ஞானிகளாகும் பிராமணர்கள் இல்லாமையினாலேயாம். பிராமணர்கள் இல்லாமைக்குக் காரணம் யாதோவெனில், நீதியும் நெறியும் வாய்மெயும் நிறைந்த விவேகிகள் இல்லாமையினாலேயாம். விவேக மிகுத்த பிராமணர்கள் இல்லாமைக்குக் காரணம் யாதோவென்னில் சாம, தான, பேத, தண்டம் என்னும் சதுர்வித உபாயமும் அன்புமிகுத்த அரசர்கள் இல்லாமையினாலேயாம். அன்பு மிகுத்த அரசர்களில்லாமைக்குக் காரணம் யாதோவெனில், வித்தை, புத்தி, ஈகை, ஒழுக்கம் நன்னெறி ஒற்றுமெயில்லாக் குடிகள் இல்லாமையினாலேயாம்.

அகிம்சாதருமம் ஈகை ஒற்றுமை இவைகள் நிறைந்த குடிகள் பெருகில், நீர்வளம் உயரும். நீர்வளம் உயரில், வரப்புயரும், வரப்புயரில், பயிறுயரும். பயிறுயரில், சருவசீவராசிகளும் உயரும். சருவ சீவராசிகள் உயரில் அரசாங்கம் உயரில் நீதியும் நெறியும் வாய்மையும் நிறைந்த ஞானிகள் பெருகுவார்கள். ஞானிகள் பெருகுவார்களாயின் வானமும் மும்மாரிபெய்து உலகம் சுகம்பெறும் என்பது சத்தியமாம்.

இத்தகைய நீதிநெறிகளைக்கடந்து என் வீட்டிற்கு வந்தால் என்ன கொண்டுவருவீர் உன்வீட்டிற்கு வந்தால் என்ன கொடுப்பீரென்னும் சுயப் பிரயோசனத்தை நாடி, நாலு நூறு குடிகளைக் கெடுத்து ஒரு முதலாளியாகிறதும் ஆயிரத்தெட்டு அபுத்த சாதிகளை ஏற்படுத்திக் கொண்டு ஒருவருக்கொருவர் ஒற்றுமெய் இல்லாமல் பல சாதிபேதங்களால் பல குணபேதங்களுண்டாகி ஒருவருக்கொருவர் பற்கடிப்பும் பெருகி நிற்கும் நிலையால், அரசநீதியாகிய செங்கோல் கொடுங்கோலாகத் தோற்றுகின்றது. நமக்குள்ள வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் கருணை ஒற்றுமெய் என்னும் சுத்த சீலங்களைப் பெருக்கிக்கொண்டு அரச நீதியை நோக்குவோமாயின், செங்கோல் செங்கோலாகவே விளங்கும். இவ்வகை விளங்கலாகிய கொடுங்கோலுக்கும் செங்கோலுக்கும் காரணம் நாமா. அன்றேல், அரசாங்கமா, உசாவுவாம்.

- 1:1; சூன் 19, 1907 -

ஓர் தகப்பனுக்கு நான்கு பிள்ளைகள் பிறக்குமாயின் அப்பிள்ளைகளை வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும் சன்மார்க்கத்திலும் பெருகச்செய்து தந்தை சுகமடைவதுடன் அவன் பெயருங் கீர்த்தியும் உலகத்திற் பரவும். அங்ஙனம் இராது பிள்ளைகளை சன்மார்க்கத்தில் விடுத்தும் அதனைக்கருதாது துன்மார்க்கத்தைப் பின்பற்றி சகோதர ஒற்றுமெயற்றுத் தாங்கள் தாங்கள் நிலைகுலைவதன்றி அன்னியர்களையும் நிலைகுலையச் செய்வார்களாயின் தந்தை மறக்கருணையால் தெண்டித்து, சீர்பெறச் செய்வதும் உண்டு.

அவ்வகை சீர்திருத்தஞ் செய்யாது அறக்கருணையால் பிள்ளைகள் போனபோக்கில் விடுவானாயின் அவர்களுங்கெட்டு தனக்கும் யாதொரு சுகமில்லாமற் போமென்பது திண்ணம்.

அதுபோல் ஓரரசனுக்குள் அமைந்த குடிபடை அமைச்சு ஒற்றுமெயிலும் நன்மார்க்கத்திலுமிருந்து சகலரும் சுகமடையவிரும்பி வாழ்க்கைத் துணை நலம் நுகர்வார்களாயின் தாங்களும் தங்கள் குடும்பங்களும் சுகமடைவதன்றி அரசனும் இராட்சிய பாரத்தை யெளிதிற் சுமந்து தானும் ஆறுதலடைவான்.

அங்ஙனம் இராது ஆயிரங் குடிகளைக் கெடுத்து அரை முதலாளி களாகிறதும், மூவாயிரங் குடிகளை வஞ்சித்து முழுவேதாந்திகளாகிறதும், பத்தாயிரம் குடிகளைப் பாழாக்கி பெரிய சாதிகளாக்கிக் கொள்ளுகிறதுமாகிய ஒற்றுமெய்க் கேட்டினாலும் ஒருவருக்கொருவரை தாழ்த்தியும் வஞ்சித்தும் குடிகெடுத்துவரும் வாழ்க்கைப் பிரிவினாலும் அரசனுக்கு இராச்சியபாரம் அதிகமாகத் தோன்றி அதை குறைப்பதற்காய் மறக்கருணையால் குடிகளை தண்டிக்க ஆரம்பிக்கின்றான். அந்த தண்டனை நீதிமார்க்கக் குடிகளுக்கு செங்கோலாகவும், அநீதிமார்க்கக் குடிகளுக்கு கொடுங்கோலாகவும் விளங்கும்.

இவ்விருவகை நீதிகளை நன்குணராது செம்மறி ஒன்றன்பின் ஒன்று மடிவதுபோல் விழுவோமாயின் நஷ்ட பாகம் நம்முடையதே. தந்தையிடத்தில் மைந்தர்கள் சென்று தங்கள் விருத்திக்காம் எதுக்களை வாதிட்டும் வற்புறுத்தியுங் கேட்பார்களாயின் தந்தை விருத்திபேதங்களை நன்காராய்ந்து கேட்கும் பொருளைக் கொடுத்தே தீர்ப்பன்.

அதற்குப் பகரமாய் சிலகாலங்களுக்கு முன்பு நமது நாட்டுக் குடிகளுக்கு ஆளுகைக்காரரால் பலவகைத் துன்பங்கள் நேரிட்டு வருவதை நன்குணர்ந்த காங்கிரஸ் கமிட்டியார் குடிகளின் கஷ்ட நிஷ்டூரங்களைக் கவர்ன்மென்றாருக்கு எழுதி கலைக்டருக்குள்ள மாஜிஸ்டிரேட் அதிகாரத்தை எடுத்து விடவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள்.

அதனை வாசித்த கவர்ன்மென்றார், குடிகளுக்கு நேரிடுந்துன்பங்கள் தங்களையொத்த இங்கிலீஷ் கலைக்கடர்களாலா அன்றேல் இச்சுதேச உத்தியோகஸ்தர்களாலா என உசாவுங்கால் இச்சுதேச உத்தியோகஸ்தர் தாசில்தார்களால் குடிகளுக்குத் துன்பம் நேரிடுகிறதென்று உணர்ந்து தாசில்தார்களுக்குக் கொடுத்திருந்த மாஜிஸ்டிரேட் அதிகாரத்தைப் பிரித்து விட்டதினால் குடிகளுக்கு நேரிட்டிருந்த துன்பங்களில் சிலது நீங்கி ஆறுதலடைந்தார்கள்.

மற்றுமுள்ள குறைகள் நீங்காது குடிகள் துன்புறும் காரணம் சுதேச மாஜிஸ்டிரேட்டும் சுதேச தாசில்தாரும் ஓரிடத்தில் அலுவல் நடத்திவதுனாலேயாம்.

- 1:2; சூன் 19, 1907 -

அதாவது ஒவ்வொரு ஜில்லாக்களுள் தாசில்தார்களும் முநிஷிப்புகளும் மற்றுமுள்ள சிப்பந்தி உத்தியோகஸ்தர்களும் சுதேசிகளாயிருந்து காரியாதிகளை நடத்திவருங்கால் விளையும் பயிர்களுக்கு மழையில்லாமல் காய்ந்துவிடுமானால் அவைகளைப் பார்வையிட்டு வரிகளைக்குறைக்க வேண்டியதற்கு குடிகள் முறையிட்டுக்கொள்ளுவதில் சுதேசிகளாகிய தாசில்தார், முநிஷிப்பு முதலிய உத்தியோகஸ்தர்கள் வந்து பார்வையிடப் போகிறார்களென்று சுதேசிகளாகியக் குடிகள் கேழ்விப்படுவார்களானால் அவர்கள் மனதில் பயமும் துக்கமுங் குடிகொண்டு திகைத்து நிற்கின்றார்கள். இதில் கலைக்ட்டரே நேரில் வந்து பார்க்கப் போகிறாரென்றுக் கேழ்விப்படுவார்களானால் அவர்கள் மனதில் ஆனந்தமும் ஓர்வகைக் குதுகலமும் பிறந்து எதிர் நோக்கிக் கார்த்திருக்கின்றார்கள். இவ்விருவகைச் செயல்களில் சுதேச உத்தியோகஸ்தர்களால் குடிகளுக்கு சுகமுண்டா, அன்றேல், கலைக்டர்களால் குடிகளுக்கு சுகமுண்டா என்றாராயுங்கால் சுதேச உத்தியோகஸ்தர்களால் குடிகளுக்கு இடுக்கமும் மன நடுக்கமும் உண்டென்றும், கலைக்டர்களால் குடிகளுக்கு ஆறுதலுந் தேறுதலும் உண்டென்றும் தெளிவாக விளங்குகின்றது. இத்தியாதி செயல்களில் கல்வியற்ற எளிய குடிகள் தங்கள் குறைகளை கலைக்டருக்குத் தெரிவிக்க சக்தியற்று நாளுக்குநாள் நசிந்து உள்ள பூமிகளையும் வஞ்சகருக்கு தாரைவார்த்து விட்டு வெளிதேசங்களிற் போய் பிழைக்கின்றார்கள், மற்றுமுள்ள எழிய குடிகளிற் சிலர் தங்கள் கஷ்டநிஷ்டூரங்களை கலைக்டருக்கு எழுதிக் கொள்ளுவார்களானால் அதைக் கலைக்ட்டர் பார்வையிட்டு தாசில்தாருக்கேனும் முநிஷிப்புக்கேனும் அதை அனுப்பி விசாரிக்கும்படி செய்வாராயின் அதிலேதேனும் தாங்கள் செய்துள்ள இடுக்கங்களை எழுதியிருக்குமாயின் அதற்குத் தக்கவடைப்பைக் கலைக்கடருக்கு எழுதிவிட்டு அவ்வகையாகத் தங்களிடுக்கங்களை எழுதினவனையும் அவன் குடும்பத்தையும் வையாமல் வைது, வதைக்காமல் வதைத்து அக்கிராமத்தில் தங்கவிடாது ஓட்டிவிடுகின்றார்கள். அல்லது ஏழைகள் எழுதிக்கொள்ளுங் குறைகளைக் கலைக்டர் பார்வையிட்டு யாரிடமும் சொல்லாமல் தானே நேரில் வந்து ஏழைக்குடியானவனை அழைத்து அவன் சங்கதிகளையும் நடந்த விருத்தாந்தங்களையும் பூர்த்தியாக விசாரித்து உத்தியோகஸ்தர்களைக் கண்டிக்க ஆரம்பிப்பாரானால் இவர்களெல்லோரும் ஒன்று கூடி வசூல் செய்யும் மாசூல்களுக்கும் குறைவுநேரிடும் வழிகளை உண்டு செய்து கலைக்டர்கள் பேரில் பலவகை நிஷ்டூரங்களை கவர்ன்மெண்டுக்கு எழுதி ஜில்லாக்களைவிட்டு மாற்றுவதுடன் மற்றுமுள்ளக் குடிகளையும் வஞ்சித்து மரத்தாலி கட்டி வருவதினால் நாளுக்குநாள் பயிரிடுங்குடிகள் நசிந்து பூமிகளைப் பண்படுத்தி பயிரிடுவதற்கு ஆட்களில்லாமலும் அப்படி பூமிகளை உழுது பயிரிடுவதற்கு முயற்சித்தபோதிலும் சுதேச உத்தியோகஸ்தர்களின் இடுக்கணுக்கே பெரும்பாலும் பயந்து பயிரிடுந் தொழிலாசையையும் மறந்து கூலிவேலையேனுஞ் செய்து பிழைக்கலாமென்று புறதேசங்களுக்குப் போய்விடுகின்றார்கள். ஒருவன் பணக்காரனாக நூறு குடிகளைக் கெடுக்கும் வஞ்சகச் செயல்களினால் குடிகளும் நசிந்து பூமிகளின் விருத்தியுங்குறைந்து தானியங்களும் மெலிந்து தேசம் பாழடைந்து வருகின்றது. இத்தியாதி சீர் கேட்டிற்கும் சுதேச உத்தியோகஸ்தர்களே காரணம் என்பது சுதேசப் பயிரிடுந் தொழிலாளராகிய கிராமவாசிகளால் பரக்க விளங்கும்.

- 1:3; சூலை 3, 1907

அரசியலென்றும் இறையாட்சியென்றும் அரசாங்கமென்றும் வழங்கும் விசாலமுற்று முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி என்னும் சதுர் வள நாடுகளும், இரத, கஜ, துரக, பதாதிகளென்னும் சதுரங்க சேனைகளும், சாம, தான, பேத தண்டமென்னும் சதுர்விதவுபாய மந்திராலோசனை அமைந்த அமைச்சர்களும், வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் என்னும் சதுர் முறைக்குடிகளும், நாடரண், காடரண், மலையரண், மதிலரணாகும் நான்கரண்களும், தனசம்பத்து, தானிய சம்பத்து, ஆடை சம்பத்து, ஆபரண சம்பத்தாகும் சதுர் வித சம்பத்துக்களுமாகிய ஆறங்கங்களுடைய நிலையே அரசாங்கமென்னப்படும்.

இத்தகைய அங்கத்தை பெற்ற அரசன் விவேகம், விடாமுயற்சி, ஈகை, தைரியம், விசாரணை, விழிப்பு கலைநூற் பயிற்சி, துணிபு, தருமம் நிலைநிருத்தல், அதருமம் நீக்கல், குற்றத்திற்கு நாணுதல், அந்தஸ்தை நிலைநிருத்தல், தேசத்தில் தனக்குவருங் கப்பங்கள் பெருகுவதற்கான வித்தியாவிருத்தி செய்தல், விருத்தியால் விளைந்த பொருட்களை சேர்த்தல், சேர்த்த பொருட்களை சிதரவிடாமற் கார்த்தல், கார்க்கும் பொருளை அறம் பொருள் இன்பத்திற் சிலவு செய்தல் - குடிகள் சொல்லுவதை நம்பாமல் தானே சென்று பார்வையிடல் குடிகளிடத்து மிருதுவான வார்த்தைக்கூறுதல், ஒருகுடியால் மற்றோர் குடிக்கு கெடுதி நேரிடாமற் கார்த்தல் தனதீகையை இனிய வார்த்தையால் அளித்தல், நெறிமுறை தவிராது குடிகளைக்கார்த்தல் குடிகளுக்குத் துன்பமணுகாது தேசவிருத்தியை (வரி தெளிவில்லை) விசாரித்து நன்மெய் பயக்குதல், செவ்விய விசாரணைச் செய்தல், நீதியின் தராசுகோல் பிடித்தல், குடிகளுக்கு நேரிடுந் துன்பங்களை தனக்குற்ற துன்பம்போற் கருதி கார்த்தலுமாகிய செயல்களின் செங்கோலைச் செலுத்துவானாயின் அவனை குடிகளுக்கோர் கொடையென்றும் துக்க மாற்றுந் துரையென்றும், இருளை அகற்றும் ஒளி என்றும் காக்கும் இறை என்றும் கொண்டாடுவார்கள்.

இவ்வகை ஆறங்கங்களும் இருபத்தைந்து அறச் செயல்களும் அமைந்த ஆளுகை உலகத்தில் எங்கு நடந்திருக்கும் என்றும் எங்கு நடைபெற்று வருகின்றது என்றும் ஆராயுங்கால் இத்தகைய நீதிநூற்களை தமிழ்பாஷையில் வரைந்துள்ளவர்களாகும் சாக்கையர்களின் வம்மிசவரிசையில் நடைபெற்றிருந்து மிலேச்சர்களென்னும் ஆரியர்களால் நிலைகுலைந்துவிட்ட போதிலும் தற்காலம் நமது தேசத்தை ஆண்டுவரும் ஆங்கிலேயரிடத்தும் ஜப்பானியரிடத்தும் அமெரிக்கர்களிடத்தும் இன்னிதிகள் நிறைவேறி வருகின்றது.

- 1:6; சூலை 24, 1907 -

ஆனால் நம்முடைய தேசத்தில் பௌத்தர்கள் அரசாங்கத்திற்குப் பின்பும், மகமதியர் அரசாங்கத்திற்கு முன்பும் ஓர்த் தமிழ் அரசாங்கம் இருந்ததாக வழங்குகின்றது.

அவ்வரசனுடைய ஆளுகையில் தன்னுடைய சபாகண்டத்தில் எப்போதும் தமிழ் வித்துவான்கள் சூழ்ந்திருக்கவேண்டுமென்றும் மந்திரி முதல் காவற்காரன் உட்பட ஒவ்வொருவனும் தமிழ் செவ்வனே கற்று வித்துவான்களாய் அரசனிடஞ்சென்று பேசவேண்டிய சங்கதிகள் யாவும் வெண்பா, விருத்தம், கலித்துறை, பல்லவச்சீர் முதலியப் பாடல்களால் தெரிவிக்கவேண்டியதென்றும் அங்ஙனம் வாசிக்காதவர்களை அரண்மனை உத்தியோகத்தில் வைக்ககூடாதென்னும் ஆக்கியாபனை வெளியிட்டிருந்தபடியால் ஒவ்வோர் உத்தியோகஸ்தர்களும் தங்கடங்கள் சங்கதிகளைத் தெரிவிக்க வேண்டுமாயின் பாடல்களால் தெரிவிப்பது வழக்கமாயிருந்தது.

இவ்வகை நிகழ்ந்துவரும் ஓர் நாள் இராணிக்கு கருப்பை வேதனைத் தோன்றியுள்ளதை அரசனுக்குத் தெரிவிக்குமாறு தோழிப்பெண் சென்று முன்னின்று சங்கதியை வெண்பாவிற் சொல்லலாமா, கலித்துறையில் சொல்லலாமாவென்று எண்ணிக்கொண்டு அரசன் முகத்தைத் தோழி பார்த்துக்கொண்டும், தோழியின் முகத்தை அரசன் பார்த்துக்கொண்டும் காலம் போக்கி “கண்ணுக்கினியகடையாட்டி, கருப்பை நோய், மண்ணிற்கிடந்து மடிகின்றாள்" என்றவுடன் அரசன் கோபித்து நீ சொல்வது வெண்பாவா, கலிப்பாவா என்றான். அரசே, வெண்பா என்றாள். வெண்பாசீர் சிதைந்த காரணம் என்ன என்றான், அரசே, அவசரம் என்றாள். அவசர வெண்பா உனக்குக் கற்பித்தவன் யார் என்றான். அப்பையரென்றாள். அரசன் வேவுகனை அழைத்து,

வேவுகனே வெகுவிரவிற்சென்று கூடம் / வித்துவான் அப்பையன்றனையழைத்து
மேவுமென் முன்னிலையில் கொண்டுவந்தால் / வேணவிசாரிணையுண்டு விவரமாக.

என்று சொல்லிப் பேசாமலிருந்தான். அதை உணர்ந்த வேவுகன் அரசனை நோக்கி விருத்தத்திற்கு இன்னும் இரண்டு சீர் குறைகிறதே என்றான். அரசன் இஃது அவசர விருத்தம் நீர் உடனே செல்லுமென்றான். தங்கள் சபையிலுள்ள வித்துவான்கள் ஆசிரியவிருத்தம் கலிவிருத்தம், மட்டுவிருத்தம் கற்பித்தார்களன்றி எனக்கு அவசர விருத்தம் கற்பிக்கவில்லையே என்றான். இவ்வகைக் காலப்போக்கில் இரண்டுநாழிகை கழிந்து இராணிக்கு அதிக நோய்க்கண்டு இன்னொரு தோழி ஓடிவந்தாள். அவள் வந்து நின்று,

அதிநோய்க்கண்டு அவ மடைகின்றாள் / பதியதையறியா பான்மயதென்னை
துதியதி நின்றோந் துரிதமாய்வந்து / சதிபடு நோய்க்குத் தகுமருத்துவமே.

என்றாள். அதைக்கேட்ட அரசன் தகுமருத்துவமே என்று முடித்தால் நான் மருத்துவஞ் செய்கிறதா, மருத்துவன் மருந்தளிப்பதா யாதும் விளங்காமல் முடிப்பாவின் எழுவாய்ப் பயநிலைக் கெட்ட காரணம் யாது என்றான்.

இவ்வீண் காலத்தால் அரணிக்கு மார்படைத்து சோர்ந்துவிட்டவுடன் தோழிகள் யாவரும் அரசனிடம் ஓடிவந்து பாக்களொன்றும் கூறாது இராணிக்கு மாரடைத்துக்கொண்டன் என்றார்கள்.

அதைக்கேட்ட அரசன் இராணியைப்போய் பார்க்காமல் வித்துவான்களிடம் சென்று நின்றவுடன் சகல வித்வான்களும் எழுந்து தாங்கள் இராணியை போய்ப் பாருங்கள் என்றார்கள்.

அரசன் வித்துவான்களை நோக்கி பாடல்களால் சங்கதிகளை விளக்கவேண்டும் என்று நீங்களே கற்பித்து தற்காலம் வசனமாகச் சொன்னக் காரணம் என்ன என்றான். இராணியின் ஆபத்தே காரணம் என்றார்கள்.

ஆபத்துக்கில்லா வித்துவான்கள் சுகத்துக்கிருப்பதில் பயன் யாது என்றான்.

பாட்டின் சுகத்தைக் கேட்டிருப்பதே பயன் என்றார்கள்.

முதல்வந்த தோழி வெண்பாவை சங்கரா பரண இராகத்தில் பாடவேண்டியிருக்க, தோடி இராகத்திற் பாடினாளே இதுதானோ பயன் என்றான்.

பகல் நாழிகை இருபதாகையால் தோடிக்கு காலமென்று பாடினாளாக்கும். தாங்கள் இராணியைப் பாருங்கோள் என்று அவசரப் படுத்தினார்கள். அரசன் சென்று இராணியைப் பார்க்குங்கால் ஐயமேற்கொண்டு பிரசவம் தடையுற்றது. தாமத மருத்துவத்தால் சிசுவும் நசிந்து தாயும் சுகயீனமுற்றாள்.

- 1:10; ஆகஸ்டு 21, 1907 -

துன்பங்களைக் கண்ட அரசன் (வரிகள் தெளிவில்லை)

என்று முடிக்குமுன் அரசன் வேவுகனைநோக்கி உன் பாடலின் பல்லவம் அனுபல்லவத்தை தாவியதோவென்றான்.

இல்லை என்று சொல்லிக்கொண்டு குதிரையை எட்டிப்பார்த்தபோது முற்றிலும் எறிந்து கீழேவிழக்கண்ட வேவுகன்,

முற்று மெறிந்துபோச்சு குதிரையாங்கு
முற்று மெறிந்து போச்சு.

என்று சொல்லுமுன் அரசன் வேவுகனை அதட்டி நீர் முந்தி சொன்ன காம்போதி முடிந்து போச்சா என்றான்.

அரசே, என் காம்போதி முடிவதற்குமுன் குதிரை முடிந்துவிட்டதென்றான். குதிரையை முடிப்பதற்கா இந்தப்பாடல் கற்றுக்கொண்டீர்கள் என்றான். அரசே, பாடல்களை நன்றாய்க் கற்றிருப்பவர்களைத்தான் அரண்மனை உத்தியோகத்திலும் ஆஸ்தான உத்தியோகத்திலும் வைக்கவேண்டும் என்று தாங்கள் ஆக்கியாபித்திருப்பதினால் பாட்டைக்கற்பதே பெரிதென்று எண்ணி செய்கைகளை மறந்து இராணியும் சுகயீனமானார்கள். மகவும் மடிந்து பட்டத்துக் குதிரையும் மாய்ந்ததே என்றான். வேவுகனே, இது என்னுடைய கருத்தல்ல, அப்பையர் போதனை என்றான். அப்பையர் வயிறுபிழைக்க அவர் வித்தையைத் தேடிக்கொண்டார். தாங்கள் நஷ்டமடைந்தீர், அப்பையர் நஷ்டமடைந்தாரா என்றான்.

அரசன் கொட்டாரத்தருகிற் போய் குதிரை வெந்து மடிந்திருப்பதைக் கண்டு அப்பையனை அழைத்து வாருங்கோள் என்றான். அரணியின் சுகயீனமும் மகவை மடிவும் குதிரை மாய்வுங்கண்ட அப்பையன் அரசனைக்கண்டால் அவதி நேரிடும் என்று அப்புறமே ஓடிவிட்டான். அதையறிந்த அரசன் மந்திரிகளை வரவழைத்து இனிப் பாடல்களால் சொல்லும் சங்கதியை நிறுத்தி வழக்கம்போல் அவரவர்கள் அலுவல்களை நடத்திவரும்படி உத்திரவளித்தான்.

அதுமுதல் அரசகாரியாதிகளும் குடிகளின் விசாரிணையும் முன்போல் நடந்து சகலரும் சுகமடைந்தார்கள்.

ஒருவன் வயிறுபிழைக்க அரசரையும் குடிகளையும் கெடுத்துப் பாழக்குவதும் உண்டு. அவ்வகை மிலேச்சர்களை எவ்வரசாட்சியில் கண்டாலும் அவர்களை அங்கு தங்கவிடாமல் துரத்துவதுடன் அவ்வகையார் வித்துக்களுக்கும் ஆஸ்தான உத்தியோகங்கள் கொடாமல் தடுப்பதே அரசாட்சிக்கு நிலையாம். இத்தகையோர் குணாகுணங்களை ஆராய்ச்சிச்செய்யாமல், ஐயா மெத்தப்படித்தவர் சகலகுணம் உடைத்தவர் என்று சேர்த்துக்கொள்ளுவார்களானால்.

- 1:14; செப்டம்பர் 13, 1907 -

தாங்களுங்கெட்டு தங்கள் அரசாங்கத்திற்கும் பழுதுண்டாகி குடிகளுக்கும் விரோதிகளாவார்.

காரணம் தங்களுடைய சுயப்பிரயோசனங் கருதி நூறு குடிகளைக் கெடுக்கும் மிலேச்சர்களுக்கு மேலான உத்தியோகங் கொடுத்து அவர்கள் சொல்லும் வார்த்தைகளை மெய்யென நம்பிக் குடிகளுக்கு வரி இறைகளை அதிகப்படுத்துவதால் ஏழைகுடிகள் தாங்கலாது தவித்து இல்லாதப் பொல்லாதவர்களாகின்றார்கள்.

இவ்வகையில்லாதக் குடிகளை சொல்லாது வாதிப்பது பசுவின் பாலை தினேதினே ஆகாரமூட்டி மெல்லமெல்ல கரப்பதைவிட்டு பசுவின் மடியை அறுத்துவிடுவதொக்கும்.

நீதி நூல்

குடிக்கொன் றிறைகொள்ளும் கோமகற்குற் கற்றா.
மடிகொன்று பால் கொள்ளு மாண்பே-குடியோம்பிக்
கொள்ளுமா கொன்வோர்க்குக் காண்டுமே மாநிதியம்
வெள்ளத்தின் மேலும் பல.

ஆதலின் வீணர்களும் சோம்பேரிகளும் பொய்யர்களுமாகிய ஓர் கூட்டத்தார் போதனைக்கு இணங்காமல் குடிகளுக்கு உண்டாகுங் கஷ்டநிஷ்டூரங்களையும் வரி யிறைகளையும் அரசர்கள் நேரிற்கண்டு விசாரித்து குறைகளை அகற்றிக் கொள்ளலைக் கொள்வாராயின் குடிகளும் குதூகலிப்பர்.

அத்தகைய அரசரருள் பெற்று வாழுங்குடிகள் ஒழுகவேண்டிய ஒழுக்கங்கள் யாதெனில்:

அரசன் விரும்பிச் செய்தலைத் தாங்களும் விரும்பிச்செய்தலும் அரசன் புகழ்ந்து நிற்போரைத் தாங்களும் புகழ்தலும் அரசனிகழ்ந்து நிற்றலை தாங்களிகழ்ந்துநிற்றலுமாகியச் செயல் பற்றல் வேண்டும்.

நீதி நூல்

இகழினிகழ்ந்தாங் கிறைமகனொன்று / புகழினி மொக்கப் புகழ்ப - விகன் மன்னன்
சீர்வழிபட்டதே மன்பதை மற்றென்செயு / நீர்வழிபட்ட புணை.

அரசன் ஒழுக்கத்தைப் பின்பற்றியக் குடிகளும், குடிகள் அன்பின் பெருக்கை நோக்கிய அரசனும் என்றும் குறைவில்லா நீர்வளம் நிலவளம் ஓங்கி சுகவாழ்க்கைப் பெருவார்கள்.

ஒருவன் சொல்லுவது மெய்யா அல்லது பொய்யாவென்று உணராமலும் மற்ற விவேகிகளை அடுத்து விசாரியாமலும் ஊரார் வளர்த்தக் கோழிகள் யாவற்றையும் அடித்துக் குப்பல் போட்டதுபோல் ஒவ்வொருவர் சொல்லும் பொய் வார்த்தைகளை நம்பிக் கொண்டு அரசாங்கத்தை விரோதிப்பதினால் அடியோடு கேடுண்டாய் அல்லலடைவது அவசியமாகும்.

இத்தகைய விரோதங்களை உண்டு செய்பவர்கள் யாரென்று உணர்ந்து அவர்கள் கூட்டத்தை விட்டகல்வது விவேகிகளின் கடனாம்.

அரசாங்கத்தை கெடுக்க முயலும் அறிவிலிகளின் குணாகுணங்களை அறிந்த அரசர்கள் அவர்களுக்குள்ள செறுக்கை அழிக்க முயலுங்கால் கெடுகுடிகள் தங்களுடன் ஏழை எளியோர்களையுஞ் சேர்த்துக்கொண்டு அவர்களையுங் கெடுக்க முயல்வார்கள்.

அவ்வகைக் கேடர்கள் வார்த்தையை சீடர்கள் போல் நம்புவதினால் இரும்பை அடிக்குமடி மரத்திற்குத் தாங்கி மண்ணாகுமென்பது திண்ணம்.

அரசனென்னுந் திரியோதனனை சுவாமியென்னுங் கிருஷ்ணன் எதிர்த்துப் பட்டப்பாட்டையுங் கெட்டகேட்டையுங் கதையாய்ப் படித்தவர்களறிய வேண்டியது அவசியமாகும். அதாவது,

அரசனை எதிர்த்த சுவாமிகளுக்கே அவ்வளவு அவதினேரிட்டிருக்க அரசை எதிர்த்தக் குடிகளுக்கு எத்தகயக் கேடுண்டாமென்பது சொல்லாமலே விளங்கும்.

அரசரை எதிர்ப்பதால் குடிகளுக்கவதியும் குடிகளை எதிர்ப்பதால் அரசருக்கு ஆற்றலில்லாமெயுமாம்.

அவதியுள்ளக் குடிகளுக்கு அமைதியில்லாமற்போம்.
ஆற்றலில்லா அரசர்களுக்குப் போற்றலில்லாமற்போம்.

- 1:24; நவம்பர் 27, 1907 -

குதிரையானது கொள்ளென்றால் வாயைத் திறப்பதுங் கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்ளுவதுபோல் அரசாங்கம் வேண்டுமா என்றால் ஆம் ஆமென்றும், ஆளுகை செய்வாயா என்றால் உக்-ஊ என்பதுபோல் ஆசை வெட்கமறியாது என்னும் பழமொழிக்கிணங்க அரசாங்கம் வேண்டுமென்றால் அதற்கமைந்தகுணம் நமது தென்னிந்தியாவில் எச்சாதியாருக்குண்டு.

அதாவது அரசனாக வேண்டியவனுக்குத் தன் குடிபிறப்பின்வாயலாய் இயல்பில் இருக்கவேண்டிய குணங்கள் எவையெனில்:-

எத்தகைய சுத்தவீரனைக்காணிலும் அஞ்சாமெய், அளிக்கும் ஈகை என்னும் தன்மகுணமே மிகுத்தமெய், ஆய்ந்து தெளியும் விவேக மிகுத்தமெய், ஊக்கமுடைத்தமெய் ஆகிய நான்கு குணங்கள் அமைந்த தேகியாயிருத்தல் வேண்டும்.

பூமியை ஆளுகை செய்வதில் விழிப்புடையவனாகவும் துணிவில் ஆண்மெய் உடையவனாகவும் இருத்தல் வேண்டும்.

தான் அறநெறியில் நிற்கவேண்டியதன்றி தனது குடிகளையும் அறநெறியில் நடாத்தி வீரத்தில் நின்று மானத்தைக் காப்பாற்றல் வேண்டும்.

தேச விருத்திச்செய்து நல்லவழியில் பொருளை சம்பாதித்து அவற்றை பிறர் கைக்கொள்ளாமற் காத்து அறம், பொருள், இன்பத்திற் செலவு செய்ய வேண்டும்.

குடிகளுடைய பார்வைக்கு அடக்கமுடையவனாகவும் அன்பனாகவுஞ் சாந்தமும் அமைதியுமுற்ற வாக்கை உடையவனாகவும் இருத்தல் வேண்டும்.

இனிமெயான வார்த்தைகளால் குடிகளுக்கீய்ந்து ரக்ஷித்தல் வேண்டும்.

குடிகளுக்கு இறையென்னும் புசிப்புக்கும் அவனே ஆதரை உடையவனாகவும் கார்த்தலுக்கும் அவனே ஆதரையுடையவனாகவும் இரக்ஷித்தலுக்கும் அவனே ஆதரையுடையவனாகவும் இருத்தல் வேண்டும்.

குடிகளால் தூர்த்தனென்றும் வஞ்சகன் என்றும் மிடியன் என்றும் கொடியன் என்றும் சொல்லத் தன் செவியால் கேட்டபோதிலும் அஃது தன்னிடத்தில் இல்லா குணங்களாதலின் அவர்கள் அறியாமெய்க்கு இரங்கி அறங்கூறல் வேண்டும்.

நீதிகோலாகுஞ் செங்கோலைக் கையிலேந்தி இனிய முகமலர்ச்சியுடன் நின்று தன்னவ ரன்னியர் என்றும் பட்சபாதம் இல்லாமல் அரசிறை நடாத்தி இழிந்த குடிகளை மேலேற்றி இரட்சித்தல் வேண்டும்.

இத்தகைய அறநெறியுள்ளோனை இறைவன் என்று கூறப்படும்.

நமது தென்னிந்தியாவில் இவ்வகை குணங்களைப்பெற்ற மேலோர்கள் யார், யாவரிடஞ் சுயராட்சியங் கொடுக்கலாம், என்பதை முதலாவது சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது. அஃதேனென்பீரேல்,

குப்பைகளையும் கூளங்களையும் ஆளும் முநிசிபல் ஆளுகைக்கு நம்மவர்களில் ஒவ்வொருவரை நியமித்திருப்பதில் நமக்கு எவ்வளவு சுகங்களை அளித்து வருகின்றார்கள். தங்களுக்கு வேண்டிய சுகங்களை எவ்வளவு தேடிக்கொள்ளுகின்றார்கள்.

கருணைதங்கிய ஆங்கிலேயர்களுடன் நம்மவர் கலந்து ஆளுகை நடத்துங்கால் தங்கள் சுயப் பிரயோசனத்தைத் தேடிக்கொள்ளும் அநுபவம் பிரத்தியட்சமாக விளங்க, மக்களை யாளும் ஆளுகையை இவர்கள் பெற்றுக்கொள்ளுவார்களானால் எழிய குடிகளுக்கு படுப்பதற்குப் பாயும், குடிப்பதற்குக்கூழும், நடப்பதற்குரோட்டு மற்றும் நாய்நரிகளுடன் மக்களும் உலாவவேண்டி வரும்.

ஆதலின் நமது தென்னிந்தியக் குடிகள் ஒவ்வொருவரும் அரசாங்கம் என்பதை கிள்ளுக்கீரைப்போல் எண்ணிக் கொள்ளாமல் பெரியாரைத் துணைப்பற்றி பிழைக்கும்வழி தேடல் வேண்டும்.

- 1:33; சனவரி 29, 1908 -

அரசனானவன் அறநெறியில் நிற்பதன்றி எதிரி பலத்தையுந் தன் பலத்தையும் தெரிந்துரைக்கக்கூடிய அறிவாளிகளாகும் பெரியோர்களை நேசித்தல் வேண்டும்.

தன் கேட்டினால் உண்டாகும் பிணிகளையும் மற்றும் துன்பங்களையும் நீக்கக்கூடிய விவேகமும் அவ்வகைத் துன்பங்கள் இனி அணுகாவகைகளாம் வழிகளை விளக்கும் விவேகமும் பொருந்திய அறஹத்துக்களை அணுகுதல் வேண்டும்.

அரசன் சாம தான பேத தண்டமென்னும் சதுர்வித உபாயங்களை அறிந்துக்கொண்டவனாயினும் இரத கஜ துரக பதாதிகளாம் சதுரங்க சேனைகளை நடாத்தும் உபாயங்களை அறிந்தவனாயினும் நீதியும் நெறியும் வாய்மெயும் நிறைந்த பெரியோர்கள் இவர்கள் என்று அறிந்து அவர்களை அணுகி நிற்றல் வேண்டும்.

தனக்கு மேற்பட்ட அறிவுடையோரைக் கண்டு கனஞ்செய்து அவர் போதித்த வழியில் நிற்றல் தான் பற்றியக் கோலுக்கு தலைமெயென்னப்படும். தன்னைச் சூழ்ந்து நிற்குங் குடிப்படை அமைச்சென்பவற்றுள் வரப்புயர கார்க்குங் குடிகளும், பின்முதுகு கொடாமல் காக்கும் படைகளும், தன்னலங் கருதாது மன்னலங் கருதி வருங்காலம் போய் காலங்கள் உணர்ந்தோதும் அமைச்சர்களையுங் கொள்ளல் வேண்டும்.

அன்பமைந்த குடிகளையும், அரயனைக் காக்கும் படைகளையும், காலமறிந்துணர்த்தும் அமைச்சர்களையும், தாயாதி கலகமற்றக் குடும்பத்தையும் பெற்ற அரசனை சத்துருக்கள் அணுகார் என்பதாம்.

நயவஞ்சகத்தையுஞ் சுயநலத்தையும் பாராது குடிகளும் படைகளும் அமைச்சர்களும் நீதிநெறியினின்று அரசனது ஏவலைக் கண்டிதமாகச் செய்யும் வல்லவர்களால் அரசன் சுகநித்திரை புரிவான்.

அரசனுக்குக் கண்டித நீதிநெறியன்றி அவன் மனம் கோணாது நயவஞ்சக நீதிபுகட்டும் அமைச்சர்கள் இருப்பார்களாயின் அவ்வரசு சத்துருக்கள் தோன்றாமலே தானே கெடுமென்பதாம்.

கைம்முதலில்லா வியாபாரிக்கு ஆதாயமில்லாததுபோல் தன்னைத் தாங்குஞ் சுற்றமில்லா அரசனுக்கு இராட்சியபாரம் அதிகரித்து நிலை பெயர்க்கும் என்பதாம்.

பெரியோர்களாகிய அறத்துக்களை அடுப்பதையும் நீதிநெறியோதும் பெரியோர்கள் கேண்மெயையும் விடுத்து ஒரு வஞ்சகனை அணுகுவதால் பத்துத் தீயநிலை மேற்கொண்டு பதிகுலையும் என்பதாம்.

சுயநலம் கருதி சூழ்ந்தவரைக் கெடுக்கும் சோம்பேரிகளாகும் சிற்றினத்தாரை நீக்கி பொதுநலங்கருதி பொய்ச்சாப்பகற்றும் பெரியோராகும் அறஹத்துக்களை அணுகி கொடுங்கோலை அகற்றி செங்கோலை நடாத்தவேண்டியதாம்.

- 1:34; பிப்ரவரி 5, 1908 -

அரசர் நடாத்தும் கோவில் செங்கோலென்றுங் கொடுங்கோல் என்றும் இருவகைப்படும். அவற்றுள் செங்கோல் என்பது தனது ஆளுகைக்கு உட்பட்ட குடிகளால் ஏதேனும் குற்றங்கள் உண்டாயின் நீதிநூற் பாராயண அமைச்சர்களை அருகில் வைத்துக்கொண்டு பட்சபாதம் இன்றி விசாரித்து தண்டித்தல்.

ஏன் இத்தகைய நடுநிலைமெயினின்று பட்சபாதம் இன்றி விசாரித்து தண்டித்தல் வேண்டும் எனில் சருவ சீலப்பிராணிகளும் மழைக்காக வானத்தை நோக்கி நிற்கும். அதுபோல் அரசன் ஆளுகைக்கு உட்பட்ட சருவ மக்களும் செங்கோல் என்னும் செவ்விய நீதிநெறிவாய்த்த மன்னனை நோக்கி நிற்பர். நீதியும் நெறியும் வாய்மெயும் நிறைந்து செந்தண்மெய் பெற்றவர்களாகும் அறஹத்துக்கள் ஓதியுள்ள நீதி நூற்களுக்கும் மெய்யறமாகும் தருமத்திற்கும் ஆதியாய் மன்னன் செவ்வியக்கோல் நிற்றலால் அதன் சிறப்பே உலகத்தின் முதல் எனப்படும்.

குடிகளுக்கு நேரிடுந் துன்பங்கள் யாவும் தனக்கு நேரிட்ட துன்பம்போலும், குடிகளுக்கு நேரிடுங் குறைகள் யாவும் தனக்கு நேரிடும் குறைகள்போலும் எண்ணி பாதுகாக்கும் மன்னன் பாதத்தை உலகம் பற்றிநிற்கும்.

இயல்பாகவே நீதியும் நெறியும் நிறைந்து செங்கோலோச்சும் மன்னவனது நாட்டில் காலமழையும் தேதிபயிறும் விளைந்து குடிகள் யாவரும் சுகமுற்று கோனுங் குதூகலிக்கும்.

குடிகளையே படைகளாகக்கொண்ட அரசன் கைக்கோல் செங்கோலாக விளங்குமாயின் எதிரி மன்னன் எறியும் வேற்கோல் என்னும் வேல் ஆயுதமானது விழலே மடிந்துவிழும். உலகத்தோருக்கு அருளறம் ஊட்டி காக்கும் அரசனை அவனது செங்கோலே காக்கப்படும். அறநெறியாம் அஷ்டாங்கமார்க்கமுறை நிலையே செங்கோலாதலின் அம்முறை பிறழா வாழ்க்கை மன்னுசீர் எனப்படும்.

செங்கோலின் அழகானது யாதெனில், குடிகளின் குற்றங்களை ஆராய்ந்து தெண்டித்தலும் பிறரால் தங்குடிகளுக்கு கேடுவராவண்ணம் காத்தலுமேயாம். செங்கோலின் குணமாவது யாதெனில், வேளாளன் பயிறுகளின் மத்தியில் தோன்றுங் களைகளை அப்புறப்படுத்தி பயிறை விருத்தி செய்வது போல் தனது குடிகளுடன் பஞ்சபாதகம் நிறைந்த தீயோரை நெறுங்கவிடாது காத்தலேயாம்.

நீதியும் நெறியும் வாய்மெயும் நிறைந்த செங்கோவின் நிலை யாதெனில் அறஹத்துக்களின் சிறப்பில் பற்றும் குடிகளின் பேரில் காருண்யமும் தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதமின்மெமேயாம்.

- 1:35; பிப்ரவரி 12, 1908 -

கொடுங்கோல் என்பவை யாதெனில், குடிகள் மீது அன்பு பாராட்டாது சீறிநிற்றலும் பலப்பொருட்களின்பேரில் அவாபற்றி நிற்றலும் கொலையையே தண்டனையாகக் கருதலுமாம்.

கொடுங்கோல் மன்னன் கொள்ளும் இறை எத்தன்மெய்த்தனில், வழிப் போக்கனை அம்பை எய்வேனென்னும் பயமுறுத்தி அவன் கைபொருளைப் பறிப்பதுபோலாம்.

தன்னாட்டில் நிறைவேறிவருந் தீங்குகளைக் கண்டு தெண்டிக்காமலும் தீயோர் மிகுதியை விலக்காமலும் தனக்குண்டாகுந் தீயகுணத்தைத் தானே பெருக்கி நாட்டை விட்டுவிடுவான்.

தன் நாட்டின் சீர்திருத்தத்தை முன் ஆலோசித்துப்பாராமலும், மந்திரவாதிகளைக் கொண்டாலோசியாமலும் முறைதப்பி நடாத்தும் ஆளுகையால் தன் குடிகளையும் வேற்றரசன் நாடோடச் செய்துவிடுவான்.

தனது ஆளுகைக்கு உட்பட்டக் குடிகளுக்கு எப்போதும் பயமும் ஆளுகையால் துக்கமும் பொறுக்காது கண்ணீர் விடுதலுமாகிய குடிகளின் குறையால் செல்வமானது படைகளால் அழிந்து பாழாகிவரும்.

கற்றவர்களாலுங் கல்லாதவர்களாலும் வலியோராலும் மெலியோராலுங் கொண்டாடும் மன்னவன் தன்னவனாகாது வன்னவனாய் வழுமேற்கொண்டு குடிகள் தழுவாது கோனென்று கூறலற்று குடிகளில் ஒருவனாக பாவிப்பர்.

மழையில்லாத காலத்து பயிறுகள் யாவும் மடிந்து மக்களும் வானோக்கி நிற்பதுபோல் கருணையற்ற மன்னவன் கொடுங்கோலைநோக்கிக் குடிகள் முகம் வாடி நிற்பர்.

அந்நாட்டிற் குடிகளுக்கு செல்வம் இருந்தும் இல்லாதவர்களாகவும், உரவினர் இருந்தும் அற்றவர்களாகவும், கற்றிருந்தும் கல்லாதவர் போலவும், சீலமிருந்தும் கோலமற்றவர்களாகவும் உன்மத்தர்போல் திகைத்து நிற்பர்.

குடிகளுக்கு நேரிட்டுள்ள குறைகளை உணர்ந்து அவற்றை நீக்கி ஆதரிக்காத நாட்டில் காலமழை பெய்து அதிதானியம் விளையாதென்பது குறிப்பு.

கோழிகளானது தன் குஞ்சுகளை தனது இருசெட்டைகளில் கார்த்து காலத்திற்குக் காலம் ஆகாரமூட்டி பருந்துக்குக் கொடுக்காது பாதுகாப்பதுபோல் குடிகளைத் தனது செங்கோலென்னுஞ் செட்டையிற் காக்காது கொடுங்கோலோச்சும் நாட்டில் பூமி விளையாமலும் பசுக்கள் கரவாமலும் அறுதொழிலாளராம் அறஹத்துக்கள் அற நூற்களை மறந்து நிற்பர்.

இத்தகைய செங்கோலோச்சுவதற்குக் கொடுங்கோ லோச்சுவதற்கும் குடிகளே காரணமாவர்.

எங்ஙனம் என்னில், கோழிக்குஞ்சுகளானது இறையை நாடி ஓடுமாயின் தன் தாய்க்கோழியும் அதனுடன் சென்று தீய்த்து ஆகாரங்காட்டும். அஃதின்றி தங்கள் சத்துருவாம் பருந்தை நாடி ஓடுமாயின் தாய்க்கோழி பதறி செட்டையாலுதறி சேரிடஞ் சேர்க்கும்.

அதுபோல் குடிகள் யாவருக்கும் உள்ள பொய், பொறாமெய், வஞ்சம், கள்ளருந்தல், கள்ளம் முதலிய செய்கைகளால் செங்கோலுங் கொடுங்கோலாக மாறும்.

குடிகள் யாவருக்கும் உள்ள அன்பும் ஆறுதலும் ஈகையும் இன்சொல்லும் பெருகிக்கொண்டே வருமாயின் கொடுங்கோலுஞ் செங்கோலாக மாறி சீருஞ் சிறப்பையுந் தரும்.

கொடும் புலிகள் வாழுங் காட்டிற்கு சிம்மமே அரசனாவன். செம்மறிகள் வாழுங் காட்டிற்கு இடையனே மேய்ப்பனாவன்.

பாலைநிலத்தில் நெற்பயிறும் நஞ்சைநிலத்தில் பூநீறும் விளையாது. சற்புத்திரராகிய குடிகளின் மத்தியிற் கொடுங்கோல் மன்னன் தோன்றான். துற்புத்திரராகிய குடிகளின் மத்தியில் செங்கோலோச்சு மன்னன் தோன்றான்.

ஆதலின் குடிகளாகிய நமக்குள்ள கொடுஞ்சினம், கொடும்பார்வை, கொடுஞ்செயல், கொடும் பொறாமெய், கொடு வாசை, கொடு மிடி, கொடு கேடு, முதலியவைகளை அகற்றி நின்று கொடுங்கோலை நோக்குவோமாயின் அக்கொடுங்கோலே செங்கோலாக விளங்கும்.

குடிகளாம் நமக்குள்ள நல்வாய்மெய், நற்கடைபிடி, நற்காட்சி, நல்லூக்கம், நல்லுணர்ச்சி, நல்லறிவு, நற்சேர்க்கை, நற்செய்கை முதலியவைகளை அகற்றி நின்று செங்கோலை நோக்குவோமாயின் அச்செங்கோலே கொடுங்கோலாகத் தோன்றி சீரழிப்பது சத்தியமாம்.

- 1:36; பிப்ரவரி 19, 1908 -

அரசனது கோல் செங்கோலாக மாறுதலுக்கும் கொடுங்கோலாக மாறுதலுக்கும் அரசனைச் சூழ்ந்துள்ள மந்திரவாதிகளாகும் அமைச்சர்களே மூலகாரணர் களாவர்.

அதாவது - காலதேச வர்த்தமானங்களை ஆராய்ந்து குடிகளுக்கு அறிவித்து காலம் அறிந்து விளைவிக்கவேண்டிய தானியங்களை விருத்தி செய்யவும் வானஞ்சுருங்கியக்கால் மழை பெய்வதற்கான முயற்சிகளைத் தேடவும் விருத்தியடைந்துள்ள தானியங்களை வேற்றரசரேனுங் கள்ளரேனும் அபகரிக்காவண்ணம் பாதுகாத்தலுமாகிய கன்மங்களை முன்னெண்ணி செய்தல் வேண்டும்.

தங்களுடைய தேசத்தில் எந்தெந்த பொருட்கள் விசேஷமாக விளைந்து பலனளிக்கின்றதென்றும் வேற்றரசர் எப்பொருட்களின் பேரில் ஆசைகொண்டு தேசத்தை அபகரிக்க எண்ணங் கொண்டிருக்கின்றார்கள் என்றும் வேவுகர்களால் உணர்ந்து அந்தந்தப் பொருட்களின் விருத்தியை அடக்கத்தில் ஆண்டு எதிரியாசர்களாண்டுவருங் கருவிகளுக்குத் தங்களிருப்பிலுள்ள கருவிகளுக்குமுள்ள பேதாபேதமாய்ந்து தங்கள் கருவிகளின் வீரத்தை மேம்படுத்தி வைத்திருப்பதும் அன்றி அரசனுக்கு அறிவித்து படைகளுக்கும் ஆயுத பழக்கத்தையும் விருத்திசெய்து வைத்தல் வேண்டும்.

குடிகள் தங்கடங்கள் செயல்களில் மனக்குறைவின்றி ஆனந்தத்திற் செய்து வரவும். உள்ள குடிகள் ஒருவருக்கொருவர் மனத்தாங்கலின்றி ஒத்து வாழத்தக்க நீதி நூற்களைப் புகட்டி ஒற்றுமெயடைச் செய்தலும் குடிகள் செய்யக்கூடாதவற்றைத் தவிர்த்து அதினால் உண்டாகுங் கேடுகளை விளக்கி பாதுகாத்தலும் பூமிகளின் கொழுமையையும் அதன் வரட்சியையும் தானியங்களின் விருத்தியையும் அதன் குறைவையும் குடிகளின் சுகத்தையும் அவர்கள் துக்கத்தையும் அப்போதைக்கப்போது அரசனுக்கு அறிவித்து வேண்டிய திருத்தங்களைச் செய்தல் வேண்டும்.

வேற்றரசர் படையுந் தங்கள் படையுங் கலந்து போர்புரியுங்கால் தங்கள் படையின் உச்சாகமானது அரசனைக் காக்கவேண்டும். தேசத்தைக் காக்கவேண்டும் என்னும் தீரத்தால் தங்கட் பிராணனைத் துரும்புபோல் எண்ணி யுத்தமுனையேறத்தக்க அன்பூட்டி ஆதரித்தல் வேண்டும்.

சிதறியக் குடிபடைகளை சேர்த்தலும் சேர்ந்துள்ள குடிபடைகளை ஆதரித்தலும் நூதனமாக வருங் குடிகளின் பூர்வதேயங்களையும் குணாகுணங்களையுஞ் செய்கைகளையும் நன்காராய்ந்து நகரத்துள் சேர்க்கவேண்டியவர்களை நகரத்துள்ளும் புறம்பே நிக்கவேண்டியவர்களைப் புறம்பிலும் வைத்து ஆதரித்தல் வேண்டும்.

பூமியை விருத்தி செய்யுங் காலங்கள் அறிந்து பூமிகளின் விருத்தியும், தானிய விருத்திகளின் காலமறிந்து தானியவிருத்திகளும், கனிவிருத்திகளின் காலமறிந்து கனிகளை விருத்திசெய்தலும், நெய்விருத்தி காலமறிந்து நெய்களை விருத்திசெய்தலும் பசுவிருத்தி காலமறிந்து பசுக்களை விருத்திசெய்தலும், லோகங்களை எடுக்குங் காலங்கள் அறிந்து லோகங்கள் எடுக்கவும், நவரத்தினங்கள் எடுக்கும் காலங்கள் அறிந்து இரத்தினங்கள் எடுக்கவும் அதனதன் விருத்தியை நாடி கைத்தொழில் நடத்தவேண்டிய காலங்கள் அறிந்து கைத்தொழில் நடத்துங் கலை நூல்களைக் கற்று அரசனுக்கு அறிவித்து இடைவிடாது குடிகளுக்கு விளக்கிவைத்தல் வேண்டும்.

குடிகளுக்கும் படைகளுக்கும் அரசனுக்கும் நேரிட்டுள்ள குறைகள் தங்களுக்கு விளங்காதிருந்தும் அரசனிடத்தில் தனக்கு விளங்குவதுபோல் வீண்வார்த்தை விளம்பாது தன்னினும் நீதிநெறி மிகுத்த மேலோரை அடுத்து அதன் மூலங்களை அறிந்து அரசனுக்கோதி உள்ளக் குறைகளைத் தீர்த்து ஒத்து வாழும்படிச் செய்யவேண்டும். குடிகளால் ஒருவருக்கொருவர் நேரிட்டுள்ள மனத்தாங்கல்களைத் தேறவிசாரித்து அரசனுக்கு விளக்கி தண்டித்தல் வேண்டும்.

அரசனுக்குள்ள அறத்தின் விஷயத்திலும் நீதியின் விஷயத்திலும், நெறியின் விஷயத்திலும் கண்ணோக்கம் வைத்துக் குறைவற நடத்தி வருதலிலும் தங்களிடத்துள்ள நீதிநெறி தருமத்திலும் நிலைபிறழாது நின்று அமைச்சல் அடைதல் வேண்டும். தாங்கள் கற்றுள்ள கலை நூற்களால் நுண்ணிய கருமமாயினும் எண்ணிச் செய்யத்தக்க உபாயங்களைத் தாங்கள் அறிவதுமன்றி அரசனுக்கும் அறிவித்து குடிகளுக்கும் போதித்துவரல் வேண்டும்.

உலகத்தோர் ஆனந்திக்கத்தக்கச் செயல்களையும் உலகத்தோர் பின்பற்றத்தக்கச் செயல்களையும் உலகத்தோர் சங்கம் அடையத்தக்கச் செயல்களையும் ஆராய்ந்து கடந்தகாலங் கடத்தி நிகழ்காலம் வருங்காலப்பலன்களை எண்ணிச் செய்தல் வேண்டும்.

அரசனுடைய தருமத்தையும் நீதிநெறிகளையுங் குறைக்கத்தக்க ஒரு மந்திரி அரசனின் பக்கத்திலிருப்பானாயின் நூறுகோடி வேற்றரசர்களை எதிரிகளாக்கிக்கொள்ள நேரிடும் ஆதலின் அரசன் தன் அறநெறி நீதிகளை விருத்தி செய்யத்தக்க அமைச்சர் அருகில் இருத்தல் வேண்டும்.

தன்மமில்லாக் கையும் நீதியற்ற வாக்கும் நெறியற்ற வாழ்க்கையும் வாய்த்த ஓரமைச்சன் அரசன் அருகில் இருப்பதைப் பார்க்கினும் அத்தேசத்தில் அவனையொற்றக் குடியானவன் ஒருவனில்லாமல் இருப்பது நன்று.

தொண்ணூற்றொன்பது நீதிநெறி வாய்த்த அமைச்சருடன் ஒரு நீதி நெறி கேடன் தன்னை நீதிநெறியுள்ளவன்போல் நடித்து சேர்வானாயின் அவர்களையுங் கெடுத்து அரசனையும் பாழாக்கி குடிகளையுங் கெடுத்து விடுவான்.

ஆதலின் அரசர்களின் அருகில் வாசஞ்செய்யும் அமைச்சர்கள் மட்டிலும் கலை நூற்கற்ற விவேகிகளாயிருப்பினும் அவர்கள் வம்மிஸவரிசை யோ நீதிநெறியின்பேரில் ஆசையுள்ளவர்களா, உலகப் பொருளின்பேரில் ஆசை உள்ளவர்களா என்று ஆராய்ந்து உலகப் பொருட்களின் பேரில் உள்ளாசைக் கொண்ட உலோபிகளாயின் அவர்களைத் தங்கள் அரண்மனைக் காவல் அடியேவலுக்கேனும் வைக்காமல் அகற்றல் வேண்டும்.

பின்வருங் காரியங்களை முன் எண்ணிப்பாராமல் தங்கள் கண்களுக்கு அழகும் வாட்டசாட்டமும் கலை நூற்கற்று தேர்ந்தவர்போல் பேசும் வார்த்தையும் தங்களுக்கு மெத்த உபகாரிபோல் நடிக்கும் நடிப்பும் உரவினனைப்போல் படிக்கும் படிப்புங் கண்டு அமைச்சருள் ஒருவனாகச் சேர்த்துக் கொண்டு அவனுக்குள்ள உலோப குணத்தையுந் தீயச்செயல்களையும் பின்பறிந்து நீக்குவதாயின் வேற்றரசருடன் கலந்து, இருந்த அரசுக்குத் தீங்கு கொண்டுவந்துவிடுவான். ஆதலின் அமைச்சநிலைக்கு பொருளாசையற்று அறநெறி வாய்மெய் நிறைந்தவர்களையே அமைத்தல் வேண்டும். அவர்களே அமைச்சர் எனப்படுவர்.

- 1:37; பிப்ரவரி 26, 1908 -

ஒவ்வோர் அரசனருகிலிருந்து ஆலோசனையூட்டும் அமைச்சர்களென்னும் மந்திரிகள் யாவரும் கலை நூற்களைக் கற்று கவிவாணரா யிருப்பினும் பொருளாசையற்ற புண்ணியவான்களாயிருத்தல் வேண்டும். அஃதேனென்பீரேல், பொருளாசை கொண்ட லோபியர்பால் மந்திராலோசனை நிலைக்காது. பொய்யும் பொருளாசையும் நிலைத்து குடிகளுக்கும் அரசனுக்கும் தீங்கை வளர்த்துவிடுவார்கள். அதினால் அரசனுக்கே இராட்சியபாரம் அதிகரித்து தாங்கமுடியாது தவிக்கும்படி நேரிடும். ஆதலின் அரசனருகில் வாழும் மந்திரவாதிகள் யாவரும் பொருளாசையற்று விவேகவிருத்திப்பெற்று தன்வலி பிறர்வலி அறிந்தூட்டும் மதி யூகிகளாய் இருத்தல் வேண்டும்.

அம்மதியூகத்தால் அரசனுக்குண்டாய கால வலியை கணிதத்தால் அறியும் வல்லபமும் அரசன் வல்லபமும் தங்கட் துணைவர்கள் வல்லபமும் முன்னாராய்ந்து பின்பு தங்களுக்கு எதிரியாகத் தோன்றும் வேற்றரசனுக்குடைய வல்லபங்களையும் நன்காராய்ந்து அரசனுக்கு ஊட்டி படைமுடக்கிற்கும் படை எடுப்பிற்கும் உறுதி கூறுவான். காலக்கேடுகளையும் காலசுகங்களையும் எதிரி வல்லபங்களையும் தன் வல்லபங்களையும் அறிந்தோதும் அமைச்சன் அரசனருகில் இருப்பானாயின் அரசன் எடுக்கும் முயற்சிகள் எவைக்குந் தடைகளில்லை என்பதாம்.

தன் வலி பிறர் வலி தன் காலம் பிறர்காலமறிவதற்கு அறிவிலிகளாகும் பொருளாசை மிகுத்தப் பேயர்களை அமைச்சர்களாக அமைத்து கொண்ட அரசர்கள் எத்தனையோ பெயர்கள் தங்கள் அரசாங்கங்களை இழந்து எழிய நிலை பெற்றார்கள். தன்னை மேலோனென்றும் மிக்க விவேகிகள் என்றுஞ் சொல்லிப் பொருளை சம்பாதித்து கொண்டு சீவிக்குங் காலவலி தன்வலி அறியா அமைச்சனால் அரசன் கெடுவான்.

மயிலிறகானது எளிய பாரம் உடையதாயினும் வண்டியின் இருசுக்குத் தக்கவாறு அதனை ஏற்றுவாராயின் பாரந் தாங்கும். அங்ஙனமின்றி இருசுக்கு மேற்பட்ட பாரத்தை ஏற்றுவதாயின் தாங்காது முறிந்துவீழ்வதுபோல் தன்வலி எதிரிவலி அறிந்தோதும் அமைச்சர்கள் அருகில் இல்லாமல் போவார்களாயின் அரசு கெடும் என்பதாம்.

ஓர் மரத்திலேறுகிறவன் தன் பளுவைத்தாங்குங் கிளைவரையிலும் ஏறல்வேண்டும். அங்ஙனமின்றி தன்னைத் தாங்காது முறிந்துவிடும் நிலைக்கு ஏறுவானாயின் கிளையும் முறிந்து தானும் விழுந்து மடிவதுபோல் தன்னினும் விவேகம் குறைந்த அமைச்சர்கள் வார்த்தையை நம்பும் தேசமாளும் மன்னவன் தானே கெடுவான் என்பதாம்.

தன்னிடத்துள்ள பொருள் ஆய்ந்து செய்யும் தருமமும் அவரவர்கள் விவேகங்களை ஆய்ந்து அமைக்கும் அமைச்கம் ஆறுதலுற்ற குடியும் அமைதியுற்ற படையும் அரசனது க்ஷாத்திரிய புஜபலத்தின் வலிதென்னப்படும்.

- 1:38; மார்ச் 4, 1908 -
யானையானது வேல் போன்ற கொம்பினை உடைத்தாய் மிக்க வலிமெய்ப் பெற்றிருக்கினும் புழுதியுற்ற சேற்றிற் புதைந்துவிடுமாயின் ஓர் சிறிய நரியை ஜெயிப்பது கஷ்டமாகும். அதுபோல் அரசனானவன் யுத்தத்திற்குச் செல்லுமுன் தனதமைச்சர்கள் வேற்றரச நாட்டின் இடபேதங்களை முன்பறிந்து காலாட்படைகட்கு அறிவித்தல் வேண்டும். இடபேதமறியா படைகள் சுத்தவீர மறவர்நிலை பெற்றிருப்பினும் இடத்தினிடுக்கத்தால் அழிந்துவிடுவர்.

அரணும் அகழியும் வாயலுமற்ற அரசனாயிருப்பினும் விசாலப் பண்ணை பூமியைப் பெற்று முயற்சியில் தளராக் குடிகளும் இடபேத ஆராய்ச்சி மிகுத்த அமைச்சனும் இருப்பானாயின் வேற்றரசனால் வெல்லுதற்கரிதாகும். இரக கஜ துரக பதாதிகள் மிகுத்த அரசன் தனது பொறாமெய்க்குத் தக்க அமைச்சர்கள் வார்த்தைகளை நம்பி சிறிய சேனையை உடைய வேற்றரசன் மீது படையெடுத்து செயித்தல் பழிக்கும் பாவத்திற்கும் ஏதுவாம். ஆதலின் வேற்றரசன் இடங் குடிபடை இவற்றை அமைச்சன் ஆராய்ந்து அரசனுக்கு ஓதி யுத்தஞ்செய்தல் அழகாம்.

அமைச்சன் ஆராய்ந்து செய்துவரும் கன்மங்களில் தனதிடத்தை வலிசெய்தலும், போரில் படை பயிற்றுதலுமாகியச் செயல் ஊக்கமிகுத் திருப்பானாயின் அரசன் கவலையற்றிருப்பான்.

நிலத்திலோடுந் தேர் கடலிலோடாது, கடலிலோடும் ஓடம் நிலத்தி லோடாது. ஆதலின் கடலினிட பேதங்களையும் நிலத்தினிட பேதங்களையும் அமைச்சன் ஆராய்ந்து அரசனுக்கறிவித்து யுத்தம் ஆரம்பித்தல் அழகாகும். முதலையானது ஆழமுள்ள நீரிலிருக்கும் வரையில் யானை சிம்ம முதலிய வலியசீவன்கள் யாவையும் ஜெயித்துவிடும். அதேமுதலை நீருள்ள இடத்தை விட்டு நிலத்தில் வந்துவிடுமாயின் அற்ப சீவன்களும் அம்முதலையை ஜெயித்துக்கொள்ளும்.

அதுபோல் அமைச்சனானவன் முக்கியமாக தனதிருப்பிடத்திலிருந்து செய்யும் யுத்தத்தையும் வேற்றரசனிடஞ் சென்று செய்யும் யுத்தத்தையும் நன்காராய்ந்து அரசனுக்கு ஓதி யுத்தமாரம்பித்தல் அழகாம்.

இவ்வகை இடங்களில் ஆராய்ச்சியில் மிகுந்த அமைச்சன் செயல்களால் எதிரி அரசர்களின் எண்ணம் பாழாகும் என்பதாம். இடங்கள் அறிந்து யுத்தஞ்செய்தல் தன்படைகளைக்கார்த்து எதிரியை செயிப்பதுடன் தானுமோர் துன்பமின்றி வருவான். தன் அரண் அகழியென்னும் இடத்தினது வலியால் அரசன் ஆறுதலுற்றிருப்பான்.

கொக்குகளானது தங்களுக்கு வேண்டும் இறையை நோக்கி வாய்திரவாமலுங் கண்மூடாமலும் பார்த்திருந்து இறையைக் கண்டவுடன் கவ்விக் கொள்ளுவதுபோல் அரசனும் தனது காலபலங் கூடுவரையில் கார்த்திருந்து வேற்றரசன்மேற் பாய்ந்து ஜெயமடைவான். அரசனானவன் தனது யுத்த ஆரம்பத்தை பனிகால மழைகாலங்களை ஆராய்ந்து தன் படை பலங்களை ஆராய்ந்து தன் காலப்போக்குகளை ஆராய்ந்து செய்வானாயின் ஜெயக்கொடி நாட்டுவான். எதிரியரசனை ஜெயிக்கவேண்டிய காலம் எதுவென்று அறிந்துகொள்ளும் வரையில் தான் ஒடுங்கினவனைப்போல் தலைகவிழ்ந்து தனக்கு உறுதியுண்டாகுங் காலம்வரில் எதிரியின் செறுக்கை அடக்கிவிடுவான்.

விவேகமுள்ள அமைச்சர்களால் தெளிவுற்றிருக்கும் அரசன் விவேகமற்ற வேற்றரசன் முறிந்து போர்புரிய ஆரம்பிப்பானாயின் அவனுக்குண்டாய கோபத்தின் காரணத்தையும் படையின் குறைவையுங் கண்டு இதக்கமுற்று விவேகம் ஊட்டி அவனது கோபத்தை ஆற்றி ஆதரிப்பான்,

ஆட்டுக்கடாவானது தனது எதிரிக்கடாவின் பேரிற்பாய்ந்து மோதுதற்கு பின் சென்று மோதுவது வழக்கம். அதுபோல் அமைச்சர்கள் அதியூகத்தில் தெளிந்த அரசன் தனது படை எழுச்சிக்குத் தக்ககாலம் வரும் வரையில் எதிரி அரசர்க்கு பின்னிடைந்தவன் போல் ஒதுங்கி காலம் வந்தவுடன் பாய்ந்து ஜெயக் கொடி நாட்டுவான்.

உலகமுழுவதும் ஆளவேண்டும் என்னும் எண்ணமுடையவன் அதற்குத் தக்கக் காலங்கள் அறிந்து செய்வானாயின் அவன் எண்ணம் முடியும். அதாவது தான் கண்டுபிடித்துள்ள ஆயுதபலமுங் காலபலமும் சரிவர நிற்குமாயின் அபஜெயம் அடையானென்பது கருத்து.

அரசனானவன் பயிறு விருத்திகாலத்தையும் படைபயிற்று காலத்தையும் படைஎழிற்சிகாலத்தையும் சீர்தூக்கிப்பார்த்து செய்துவருவானாயின், அவனது செல்வத்தை வேற்றரசன் கொள்ளானென்பதாம். காக்கையானது ஆந்தையைப் பகல்காலத்தில் வெல்லும். ஆந்தையோ காக்கையை இராக்காலத்தில் வெல்லும். அதுபோல் அரசன் தன் காலத்தையும் காலதேசத்தையும் நன்காராய்ந்து யுத்தஞ்செய்யல் வேண்டுமென்பதாம்.

- 1:39; மார்ச் 11, 1908 -

அரசனானவன் தனது யுத்த ஆரம்பத்திற்கேனும் குடிப்படை அமைத்தலுக்கேனும் தனதுயிர் நிலை காப்புக்கேனும் ஒவ்வொருவரைத் தெரிந்தெடுத்துக் காரியத் தலைவர்களாக்க வேண்டும்.

அரசரது தன்மகன்மங்களைக் குறைவற நடாத்துகின்றவனும், அரசனது பொருளை அபகரிக்காது பாதுகாக்கின்றவனும், அரசன் இன்பத்திற்கு இடையூறு செய்யாதவனும் அரசன் உயிருக்கு ஓர் தீங்கும் வராமல் காக்கின்றவனுமாகியவன் எவனோ அவனே நற்குடியிற் பிறந்தவன் எனப்படும்.

இத்தகைய குடிபிறப்பையும் அவனவன் குணாகுணச் செயலையுங் கண்டறியாது வாட்டசாட்டமுள்ள ரூபமுடையவனாகவும் கற்றவனாகவும் இருக்கின்றான் என்று எண்ணி அரண்மனை ஏவலில் வைப்பது அரயன் தீங்கடைவதற்கு ஆதாரம் எனப்படும்.

அதாவது பிச்சையேற்றே வளர்க்கும் குடும்பத்திற் பிறந்தப் பிள்ளையாயினும், அந்தரங்க விபச்சாரத்திற்கு விடுத்து அதினாற் சீவிக்கும் குடும்பத்திற் பிறந்தப் பிள்ளையாயினும், தனக்குந் தனது இஸ்திரீகளுக்கும் யாது மானக்கேடு வந்தாலும் அதை ஒருபொருட்டாகக் கருதாமல் செல்வப்பொருள் கிடைத்தால் போதும் என்று அலையும் குடும்பத்தில் பிறந்தப் பிள்ளையாயினும், ஒருவன் கல்விகற்று அரசனது ஆளுகை உத்தியோகத்தில் அமர்ந்து விடுவானாயின் தான் பிறந்த குடும்ப மிலேச்ச செய்கைகள் மாறாமல் பொருளாசை அதிகரிப்பால் அரண்மனையிலுள்ள நூறு குடிகளைக் கெடுத்து தான் தன்வந்தனாகத் தோன்றுவான்.

இவனது மிலேச்ச செய்கைகளை நாளுக்கு நாள் அறிந்துவந்த அரசன் இவனை நீக்கும்படி ஆரம்பிப்பானாயின் அவ்வரசனுக்கும் அரசாங்கத்திற்கும் தீங்கு விளைவிக்கத்தக்க தனது மிலேச்ச குணத்தைக் காட்டிவிடுவான்,

ஆதலின் அரசனது அரணும், அகழியும், ஆயுதங்களும், செல்வமும் குறைந்திருந்தபோதிலும் தன்னைச் சூழ்ந்துள்ள அமைச்சக் குடிபடைகள் நீதியையும் நெறியையும் வாய்மெயையும் நிறைந்துள்ள குடும்பங்களிற் பிறந்தவர்களாயிருப்பின் அவர்கள் நீதிநெறிக்காப்பே அரசாங்கத்தை சிறப்பிக்கச்செய்யும்.

அங்ஙனமின்றிப் பித்தளையைத்தீட்டிப் பிரகாசிக்கக் காட்டியபோதிலும் அதைப் பொன்னென்று நம்பாமல் உரைக்கல்லும் ஆணியுங்கொண்டு சோதிப்பதுபோல் அரச அங்கத்திற் சேர்ப்பவர்களின் உருவங்களைநோக்கி சேர்க்காமல் அவரவர்கள் குடும்ப குணாகுணச் செயல்கள் அறிந்து சேர்த்தல் வேண்டும்.

ஏனெனில் பொருளைச் சேகரிக்கும் பெரும் அவாக்கொண்டவனை அரசவங்கத்தில் ஒருவனாகச் சேர்த்துக்கொள்ளுவதால் அரசவங்கச்செயல்களில் அதியூக்கமற்று பொருள் சேர்க்கும் ஊக்கத்தால் அரசனையும் மற்ற அங்கத்தோர்களையும் விரோதிக்கச்செய்து அரசனுக்குத் தன்னை அதியுத்தமனைப்போற் காட்டி, அபிநயிப்பான்.

இத்தகைய நடிப்பைக் காணும் அரசன் இவனைப் பொய்யனாகக் கொள்ளாது மெய்யனாகக் கொள்ளுவானாயின் உள்ள அங்கத்தவர் யாவரையும் ஒட்டிவிட்டு தங்கள் சுற்றத்தோரைச் சேர்க்கும் சுயநோக்கத்தில் இருப்பான்.

இவ்வகை நோக்கத்தை அரசன் காணாது முழு நம்பிக்கையில் வைத்திருப்பானாயின் மற்றுஞ் சிலநாளைக்கும் அரசையே தன்னதாக்கிக் கொள்ள முயலுவான்.

ஆதலின் அரசவாட்சியிலிருக்கும் அங்கத்தவர் ஒவ்வொருவரும் பொருளாசையற்றப் புண்ணியர்களும் அருளாசையுற்றவன்பர்களும் நீதிநெறி அமைந்த நிபுணர்களாகும் மேன்மக்களாயிருப்பார்களாயின் சருவ உயிர்களையும் தங்களுயிர்போல் பாதுகாத்து குடிகளுக்கு நீதிநெறிகளைப் புகட்டி ஆதரித்து அரசனுக்கு ஆற்றலையும் ஆனந்தத்தையும் உண்டுசெய்து வைப்பார்கள்.

(இத்தொடர் கட்டுரை தொடர்ச்சியாக வராமலும் நிறைவு பெறாமலும் நின்று விட்டது)

- 1:41; மார்ச் 25, 1908-