அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/026-383

விக்கிமூலம் இலிருந்து

22. சாதிபேதமற்ற திராவிடர்களாகும் ஏழைக்குடிகளுக்கு நாஷனல் காங்கிரஸ் கமிட்டியார் யாதோருபகாரஞ் செய்யாவிட்டாலும் சென்னை மஹாஜன சபையோர் சிற்சில உபகாரங்கள் செய்யவில்லையோ என்பாரும் உண்டு

சென்னை மஹா ஜனசபையோர் உபகாரத்தை இவ்விடம் விளக்குகின்றோம். 1892 வருஷம் ஏப்ரல் மாதம் மஹாசபைக் கூடுவதாகவும், அக்கூட்டத்தில் ஏரிமராமத்துக்கள், கிணறுகளின் விருத்திகள், ரோட்டுகளின் மராமத்துக்கள், வெளிஜில்லாக்களின் சீர்திருத்தங்களைப் பேசுவதுடன் பறையர்களுக்கான

உபகாரங்களும் யோசிக்கப் போகிறபடியால் ஒவ்வோர் ஜில்லாக்களிலும் இருந்து பிரதிநிதிகள் வந்து அவரவர்களுக்குள்ளக் குறைகளை வெளியிட்டு சீர்திருத்தஞ் செய்துக் கொள்ளலாம் என்னும் விண்ணப்பம் அச்சிட்டு பலஜில்லாக்களுக்கும் அநுப்பியதுபோல் நீலகிரிக்கு எமக்குமோர் பத்திரிகை வந்துசேர்ந்தது. அவற்றை நாம் வாசித்து சாதிபேதமற்ற திராவிட கனவான்களுக்கு அறிக்கை செய்து ஓர் பெருங்கூட்டம் இயற்றி காங்கிரஸ் கமிட்டியாரவர்களுக்கு, நாம் அனுப்பியுள்ள பொதுநல விண்ணப்பத்தை அவர்கள் கவனியாது மஹாஜனசபையில் இவ்வேழைக்குடிகளைப் பற்றி ஏதோ ஆலோசிக்கப்போகின்றார்களாம். அதற்காக இவ்வேழைக் குடிகளில் யாதாமொருவர் இக்குலத்தோருக்கு என்று பிரதிநிதியாகச் சென்று காரியாதிகளை ஆலோசித்துவருவது நலமென்று கூறினோம். அதனை வினவிய அன்பர்கள் யாவரும் ஏகோபித்து தாங்களே அதற்குப் பிரதிநிதியாகச் சென்று காரியாதிகளை ஆலோசிக்க வேண்டும் என்று வழிசிலவு முதலியவைகளுக்கு வேணவுதவி புரிந்து எம்மை சென்னைக்கு அநுப்பிவைத்தார்கள்.

யான் இவ்விடம் வந்துசேர்ந்து விக்டோரியா டவுன் ஹாலில் கூடியுள்ள மஹாஜனசபை பிரதிநிதிகளுடன் யாமும் ஓர் பிரதிநிதியாய் உழ்க்கார்ந்திருந்தோம்.

அக்காலத்தில் அச்சபையில் அக்கிராசனாதிபதியாக வீற்றிருந்த ஆனரேபில் பி. அரங்கைய நாயுடுகாரவர்கள் எழுந்து நின்று சிலஜில்லாக்களின் குறைகளைச் சொல்லிக்கொண்டே வந்து (பறையர் பிராபலம்) என்னும் வாக்கியத்தை பென்சலாலடித்து இவர்களைப் பற்றி வேண்டி வரையில் சில துரைகள் எழுதியிருக்கின்றார்கள் ஆதலின் இவாள் குறைகளை நாம் ஆலோசிப்பதில் யாது பயனும் இல்லை என்று பேசிவருங்கால் சபையின் காரியதரிசி ம-அ-அ-ஸ்ரீ எம். வீரராகவாச்சாரியார் அவர்கள் அக்கிராசனாதிபதியை நோக்கி நீலகிரியிலிருந்து அக்குலத்தோருக்கு ஓர் பிரதிநிதி வந்திருக்கின்றாரென்று கூறினார்.

உடனே நாமெழுந்து சபையோருக்கு வந்தனங்கூறி ஐயா, இக் குலத்தோரைப் பற்றி சிலதுரைமக்கள் உபகாரம் செய்கின்றார்களென்று கூறி தாங்களெல்லோரும் மவுனஞ் சாதிப்பது அழகன்று, உங்களாலேயே இக்குலத்தோர் தாழ்த்தப்பட்டு சீர்குலைந்து இருக்கின்றபடியால் நீங்களே இவர்களை சீர்திருத்தி சுகம்பெறச் செய்ய வேண்டும் என்றேன்.

அதற்கு சபாநாயகர் இது உள்சீர்திருத்த சங்கமாதலின் இவர்களால் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.

யான் சபாநாயகரை நோக்கி ஐயா, உலகத்திலுள்ள சகலசாதியோருக்கும் தெய்வம் பொதுவென்றும், கோவில் பொதுவென்றும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அங்ஙனமிருக்க இக்குலத்தோரிலுள்ள வைணவ மதத்தோர்களை விஷ்ணுவின் கோவில்களுக்குள்ளும், சைவ மதத்தோரை சிவன் கோவில்களுக்குள்ளும் ஏன் சேர்க்கப்படாது. அப்படி சேர்ப்பதினால் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்க்கை சுகமடையமாட்டார்களா மதங்களும் பிரபலமடையாதா என்றோம்.

எல்லோரும் ஏகமயமாய் நின்று அப்படியே கோவிலுக்குள் சேர்க்கப்படாதென்று கூச்சலிடுங்கால் தஞ்சாவூர் பிரதிநிதி ம-அ-அ-ஸ்ரீ சிவராமசாஸ்திரியாரவர்கள் எழுந்து உங்கள் குலத்தோருக்கு மதுரை வீரசாமி, காட்டேரிசாமி, கருப்பண்ணசாமி கொடுத்திருக்கின்றோம். சிவன் சாமியும், விஷ்ணுசாமியும் உங்கள் குலத்தோருக்கு உரியதல்ல என்று ஆட்சேபித்தார்.

யாம் அவரை நோக்கி ஐயா, அங்ஙனமிருக்குமாயின் உங்கள் சுவாமிகள் எமக்கு வேண்டாம். இக்குலத்து சிறுவர்களுக்கு கிராமங்கள் தோறும் கல்விசாலைகள் வைத்து நான்காவது வகுப்புவரையில் இலவசமான கல்வி கற்பிப்பதற்கும் இக்குலத்து கிராம வாசிகளுக்கு அங்கங்கு வெறுமனேயுள்ள

பூமிகளைக் கொடுத்து ஆதரிக்கவேண்டும் என்று கருணைதங்கிய ராஜாங்கத்தோருக்கு உதவி கூறுபத்திரம் அதாவது (ரெக்கமென்டு) பத்திரமேனும் கொடுக்கலாகாதோ என்று கோரினோம்.

உடனே அவ்விடம் வந்திருந்த எல்லூர் பிரதிநிதி ம-அ-அ-ஸ்ரீ சங்கறமென்பவர் எழுந்து இக்குலத்தோரின் விருத்தி குறைகளையும், கஷ்டநிஷ்டூரங்களை சபையோருக்கு விளக்கி இவர்கள் இவ்விந்துதேசத்தின் முதுகெலும்பு போல் சகல சாதியோருக்கும் உதவியாக இருக்கின்றபடியால் இவர்களுக்கு வேண உபகாரம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

அவற்றை வினவிய ம-அ-அ-ஸ்ரீ இராஜா சர்சவலை இராமசுவாமி முதலியாரவர்கள் எழுந்து கலாசாலை விஷயத்திலும், பூமியின் விஷயத்திலும் இராஜாங்கத்தோருக்கு (ரெக்கமன்டு) பத்திரம் அனுப்பவேண்டும் என்று ம-அ-அ-ஸ்ரீ சங்கறமவர்களிடத்தில் முடிவு செய்ய அவர்களும் அவற்றை ஆமோதிக்க அவர் ஆமோதிப்புக்கு உதவியாய் என் பெயரையும் சேர்த்து பெருந்தொகையார் சம்மதத்திற்கு நிறுத்தினார்கள்.

அவ்வகை நிறுத்திய மூன்றாம் நாள் அடுத்த சங்கதிகள் ஒவ்வொன்றையும் பெருந்தொகையார் சம்மதத்தில் விட்டு முடிவுசெய்துவருங்கால் இவ்வெழிய குலத்தோர் சங்கதிவந்தது. அதாவது - கல்வி சாலைகளும், பூமியும் கொடுத்து ஆதரிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றவர் ம-அ-அ-ஸ்ரீ இராஜசர் சவலை இராமசுவாமி முதலியாரவர்கள். அதனை ஆமோதித்தவர் ம-அ-அ-ஸ்ரீ எல்லூர் சங்கறமென்பவர். அவர் ஆமோதித்த பிறகு பிரதி ஆமோதகர் க. அயோத்திதாச பண்டிதர் என்று கூறி இதன்விஷயம் சகலருக்கும் சம்மதந்தானோ என்று கேட்டதின்பேரில் பெருந்தொகையார் சம்மதம் இக்குலத்தாருக்கான உபகாரஞ் செய்ய வேண்டும் என்று முடிவுசெய்து நமது கருணைதங்கிய இராஜாங்கத்தோருக்கு எழுதி அவர்களும் இதங்கியக் கோரிக்கையை நிறைவேற்றி விட்டார்கள்.

அதினால் இத்தென்னிந்தியாவிலுள்ள குக்கிராமமெங்கணும் கலாசாலைகள் ஏற்படுத்தப்பட்டதன்றி சிற்சில இடங்களில் பூமிகளுங் கொடுக்கப்பெற்று வருகின்றார்கள்.

இத்தகைய இருதருமத்தில் வேண்டிய பூமிகளைக் கேழ்க்கும் இடங்களில் அண்டபாத்திய இடஞ்சலும், கல்விவிருத்தியில் அன்னியசாதி உபாத்திமார்கள் அலட்சிய போதனா செய்கையும் இவ்விருதருமங்களையும் விருத்தி பெறாமல் செய்துவருகின்றது. ஆதலின் நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரை வினவியுள்ள பத்துக் கோரிக்கைகளும் நிறைவேறுமாயின் இக்குலத்தோரின் சகல இடுக்கங்களும் நீங்கி சுகமடைவார்கள்.

- 2:19: அக்டோபர் 21, 1908 -