அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/028-383
24. ஓர் வேஷபிராமண வேதாந்தி
1908 வருடம் ஜூன் மாதம் 28-ஆம் நாள் லண்டனில் வெளிவந்துள்ள நியூஸ் ஆப் ஓரல்ட் என்னும் பத்திரிகையிலுள்ள சங்கதியை அக்டோபர் மாதம் 29-ஆம் நாள் வெளிவந்த “பினாங்கக்கலாநிதி” பத்திரிகையில் கண்டு கவலையுற்றோம்.
அதாவது பிரமகுலத்தைச் சார்ந்தவரென்றும் கிருஷ்ணமூர்த்தியின் அவதாரத் தரித்த மகாத்துமா என்றும் பெயர் வைத்துக்கொண்டு சமஸ்கிருத பண்டிதரென்றும் வேதாந்த விஷயத்தில் அதி தேற்சியுள்ளவரென்றும் பம்பாய் நகரத்தில் சில ஐரோப்பியர்களை மாணாக்கர்களாக சேர்த்துவைத்துக் கொண்டு வேஷ பிராமண வேதாந்த நடிப்பு நடித்து வந்தனராம். இவரை மிக்கஞான வீரரென்று நம்பிய ஐரோப்பியராகும் மாக்ஸ்முல்லரவர்களும், மற்றுமுள்ளோரும் இவருக்கு வெங்கைய மகாத்துமா என்னும் மறுபெயரும் கொடுத்தார்களாம்.
இவர் பம்பாயில் செய்த படாடம்பம் போதாது ஐரோப்பாவுக்குச் சென்று அங்குள்ள மெறில்போரென்னும் நகரத்துள் ஓர் விசாலமுள்ள வீடெடுத்து சில ஐரோப்பிய புருஷர்களையும், இஸ்திரீகளையும் சேர்த்துக்கொண்டு வேதாந்தம் போதிப்பதாக விளம்பியவர் தனக்கு (டைப்) அடிக்கும் வேலைக்கு ஓர் பெண் கிராணிதேவை என்று விளம்பரப்படுத்தினாராம். அதைக்கண்ணுற்ற பிரான்சி சிறுமி ஒருவள் நேரில்வந்து கண்டவுடன் வேதாந்த மகாத்துமாவும் பெண்ணின் அருகில் உட்கார்ந்து சில சங்கதிகளைப் பேசிக்கொண்டே பெண்ணைக்கட்டி இருகப்பிடித்து முத்தமிட்டாராம். பெண்ணோ அதிக பயந்து மிரண்டோடி தனது பெற்றோரிடம் முறையிட பெற்றோர்கள் நீதியதிபரிடம் கொண்டு போய் விசாரித்து குற்றவாளிதானென்று தெரிந்தவுடன் நீதியதிபரால் ஆறுமாதம் கடுந்தண்டனை விதிக்கப்பெற்றராம்.
இத்தகைய வேஷவேதாந்திகளை நம்பி வீண்காலம்போக்கும் குட்டி வேதாந்திகளே! உங்கள் கூட்டத்தை நிலைபடுத்தி பொருள் சேகரித்து நமது குலச் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் கைத்தொழிலைக் கற்பியுங்கள். பணம் சம்பாதிக்கும் அதஷ்டமாகிய யோகம் பிறக்குமாயின் ஞானம் தானேயுதிக்கும். இவற்றைவிட்டு போலிவேதாந்திகளை நம்பி பிஞ்சியில் பழுக்கப்பார்ப்பது நஞ்சை உண்பதொக்கும். ஆதலின் நமதன்பர்கள் ஒவ்வொருவரும் வித்தை, புத்தி, ஈகை இவற்றை முன்பு பெருக்கி பின்பு சன்மார்க்கத்தில் நிலைக்கும்படிக் கோருகிறோம்.
- 2:23; நவம்பர் 18, 1908 -