அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/039-383

விக்கிமூலம் இலிருந்து

35. காங்கிரஸ் கூட்டத்தில் ம-அ-அ-ஶ்ரீ பி.பி. சுந்திரம் ஐயரவர்களின் பிரேரேபணை

சென்னையில்கூடிய காங்கிரஸ் கமிட்டியாரின் தீர்மானங்களுள் பதினோராவது தீர்மானத்தில் 1908 வருஷம் 7-வது ஆக்ட்டையும், 1908 வருஷம் 14-வது ஆக்ட்டையும் காலதாமதமின்றி ரத்து செய்துவிடவேண்டும் என்று ம-அஅ-ஸ்ரீ பி.பி. சுந்திரம் ஐயர் அவர்கள் பிரேரேபித்திருக்கின்றார்.

அதாவது மேற்கூறியுள்ள இரண்டு சட்டமும் சில புத்தியீனர்கள் புத்தியில்லா சில கொடுந்தொழில்களைச் செய்ய ஆரம்பித்தபடியால் அதை அடக்குவதினிமித்தம் இவ்வவசரச்சட்டம் ஏற்பட்டது. இச் சட்டம் வெளிவந்தவுடன் அந்த துஷ்டர்கள் யாவரும் அடங்கி போய்விட்டார்கள் ஆதலின் அவ்விருசட்டங்களையும் எடுத்துவிட வேண்டும் என்று வேணவரையில் பேசி முடித்திருக்கின்றார்.

இவரது கருத்தை தூரதேயப் பிரிதிநிதிகளிருவர் ஆமோதித்தும் பேசியிருக்கின்றார்கள் இவர்களது கருத்தும் விஷயபேதங்களுந் தேறவிளங்கவில்லை.

பத்திரிகைகளின் வாயலாகவும், கூட்டங்களிலும் இராஜநிந்தைகளேனும், இராஜ தூஷணைகளையேனும் செய்பவர்களை திட்டமாகத் தெரிந்துக்கொண்டவுடன் விசாரிணையின்றி தண்டிக்கத்தக்க விதிகளை வகுத்திருக்கின்றார்கள்.

அத்தகையச் சட்டமானது இராஜ துரோகிகளை மட்டிலும் பாதிக்குமேயன்றி இராஜவிசுவாசிகளை ஒருக்காலும் பாதிக்கமாட்டாது. அங்ஙனம் இருப்ப அதனை எடுத்துவிட வேண்டும் என்னும் காரணம் விளங்கவில்லை.

இராஜ தாரியில் மலமூத்திராதிகளை விகரிப்பிக்கலாகாதென்று சட்டம் வகுத்திருக்கின்றார்கள். அந்த சட்டம் இருப்பது தெரிந்தும் தண்டனையடைவதை உணர்ந்தும் மலமூத்திராதிகளை விசுரிப்பிக்காமல் இருக்கின்றார்களோ.

அன்னியன் பொருளை அபகரிப்போனுக்கு என்ன தண்டனை என்று விதிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வகையாக விதித்தும் வருகின்றார்கள் அவற்றைக் கண்டவர்களுக்கு அறிவு விளங்கி திருடாமலிருக்கின்றார்களோ.

ஒருவனை மற்றொருவன் கொலைச்செய்வானாயின் கொலையாளியைக் கொல்லவேண்டும் என்று சட்ட மேற்பட்டிருக்கின்றது. அம்மேறைக் கொன்றும் வருகின்றார்கள். அவற்றைக் காணுவோருக்கும் கேழ்ப்போருக்கும் பயமும், அறிவுந்தோன்றி கொலைபுரியாமலிருக்கின்றார்களோ இல்லையே.

இத்தகைய அனுபவக் காட்சிகளை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் கண்டிருந்தும் இராஜத்துவேஷ மறுப்புச்சட்டங்களை எடுத்துவிட வேண்டும் என்பது என்ன காரணமோ விளங்கவில்லை.

ஈதன்றி வங்காளம், பாம்பே முதலியாப் புறதேசங்களிலிருந்து வந்திருந்தப் பிரிதிநிதிகள் யாவரும் தேசத்தின் சீர்திருத்தங்களையும் குடிகளுக்குள்ளக் குறைகளையும் எடுத்துப்பேசியிருக்க நமது ஐயரவர்கள் மட்டிலும் சட்டத்தை எடுத்துவிடவேண்டும் என்று பிரே ரேபித்தது விந்தையேயாம்.

- 2:30; சனவரி 6, 1909 -