அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/041-383

விக்கிமூலம் இலிருந்து

37. தாழ்ந்த சாதியோர்களை ஈடேற்றுகின்றோம் என்று இன்னுந் தலையெடுக்கவிடாமற் செய்யும் ஈதோர் தந்திரம் போலும்

அதாவது நம்மையாளும் ஏழாவது எட்வர்ட் சக்கிரவர்த்தியாரவர்கள் எழியக்குடிகளின் மீது இதக்கம் வைத்து சகலக்குடிகளையும் சமரசமாக ஆதரிக்கவேண்டும் என்னும் எண்ணத்தை சகலரும் அறிய வெளியிட்டுள்ளபடியால் ஏதோ கருணைதங்கிய ஆங்கிலேயர்கள் தோன்றி எழியக் குடிகளை ஈடேற்ற ஏற்பட்டு வருவார்களாயின் நம்மால் தாழ்த்தி வைக்கப்பட்டுள்ளவர்கள் உயர்த்தப்பட்டு விடுவார்களே ஆதலின்,

நாமே அவர்களை ஈடேற்றுகிறோமென்று பத்திரிகைகளின் வாயலாகவும், கூட்டங்களின் மூலமாகவும் கூச்சலிட்டு வருவோமானால் இந்துக்களே தோன்றி எழியக்குடிகளை ஈடேற்றப் போகின்றார்கள். நாம் ஏன் அவர்களைப்பற்றி முனையவேண்டுமென்று அடங்கி விடுவார்கள்.

நாமும் இதே கூச்சலிட்டுக் கொண்டு அடங்கிவிடலாம் என்னும் ஆலோசனையின் பேரில் தோன்றியுள்ளார்கள் போல் காண்கின்றது.

எவ்வகையதென்னில் தற்காலம் சிலர் தோன்றி ஏழைகளுக்கு அன்னதானகூடம் ஏற்படுத்தியுள்ளோமென்று விளம்பரப்படுத்தி பணங்களை வசூல்செய்து தங்களை அடுத்த சாதியுள்ள ஏழைகளுக்கு மட்டிலும் அன்னதானம் அளித்துவருகின்றார்கள்.

அதுபோலவே இந்த ஏழைகளை ஈடேற்றும் சங்கத்தோரும் தங்கள் கூட்டத்தில் பணஞ் சேர்ந்தவுடன் சாதியுள்ள ஏழைகளை சீர்திருத்திவிட்டு சாதியில்லா ஏழைகளை ஏதுவிசாரணையின்றி விட்டுவிடவேண்டியதேயாகும்.

ஆதலின் ஏழைகளை யீடேற்ற வெளிவந்த கனவான்கள், சாதி பேதமுள்ள ஏழைகளையும் சாதிபேதமில்லா ஏழைகளையும் ஈடேற்றுவோம் என்பது வீண்முயற்சியேயாகும்.

அத்தகைய ஈடேற்றக் கூட்டம் யதார்த்தமாக ஏற்படுத்த வேண்டுமாயின் அக்கூட்ட அங்கங்கள் சாதிபேதமுள்ளவர்கள் ஐந்துபேர்களிருப்பார்களாயின், சாதிபேதமில்லாதவர்கள் பத்துபேரிருந்து நடத்துவார்களாயின் சகல ஏழைகளும் ஈடேறி முன்னுக்கு வருவார்கள்.

அங்ஙனமின்றி சாதிபேதம் உள்ளவர்கள் கூடிக்கொண்டு சாதிபேதமில்லா ஏழைகளை ஈடேற்றப்போகின்றார்கள் என்பது இந்த கலியுலகத்திலுமில்லை, இனிவருங் கலியுலகத்திலும் இல்லை என்பது திண்ணமாம்.

சென்றவாரம் இக்கூட்டத்தோரைப் பற்றி வரைந்திருந்தோம். அதாவது, விவேகக் குறைவால் தாழ்ந்துள்ள வகுப்பாரொருவரும் சாதித் தலைவர்களாலும், அவர்களின் அடியார்களாலும் விரோதச்சிந்தையால் தாழ்த்திக் கொண்டே வருவதினால் தாழ்ந்துள்ள வகுப்பார் ஒருவரும் ஆக இரு வகுப்பாருள் இவர்களுள் சாதித்தலைவர்களால் தாழ்த்தப்பட்ட வகுப்பாரை சிலசாதித் தலைவர்கள் கூடி உயர்த்திவிடப் போகிறோமென வெளிவந்தது விந்தை என்றே கூறியுள்ளோம்.

அதற்குப் பகரமாய் ஜனவரிமீ 6உ புதவாரம் வெளிவந்த சுதேசமித்திரன் பத்திரிகையில் தாழ்ந்த வகுப்பாரை சீர்திருந்த ஏற்பட்டக் கூட்டத்தில் மேற்கண்டபடி வகுப்பை சீர்திருத்த மிஸ்டர் எம்.ஐ. நெல்லப்பா என்பவர் ஒருவர் வந்து தோன்றி பஞ்சமர்களுக்காய் பன்னிரண்டு சீர்திருத்த முறைகளை வாசித்ததாக குறித்திருக்கின்றது.

இவ்வகை ஓர் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்காக ஓர் பிரதிநிதிவந்து அவர்களின் குறைவுகளை நிறைவு செய்யக் கேட்டுக் கொண்டபோது அவருக்கு உதவியாக ஆமோதித்துப் பேசினவர்கள் ஒருவரையும் காணோம். இவ்வகையாக அதே கூட்டத்தோரில் ஒருவர் வந்து பேசியபோது அவர் வார்த்தைகளை அமோதித்துப் பேச அன்பில்லாதவர்கள் தாழ்த்தப்பட்ட கூட்டத்தோரை உயர்த்துகிறோமென்று கூடியவை விந்தையிலும் விந்தையேயாம்.

இத்தகைய வீண் கூட்டங்களைக்கூட்டி அப்பிரயோசன வார்த்தைகளைப் பேசிவிட்டு அன்புடன் ஆதரிப்பவர்களையும் கெடுக்காமலிருக்கக் கோருகிறோம்.

- 2:31; சனவரி 13, 1909 -