அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/045-383
41. பார்ப்பார்களென்று சொல்லிக்கொள்ளுவோர்களுக்கும் பறையர்களென்று அழைக்கப்படுவோர்களுக்குமுள்ளப் பழயவிரோதத்தை பரக்கப்பாருங்கள்
நாம் இப்பத்திரிகையின் வாயலாய் பார்ப்பார்களென்போருக்கும், பறையர்கள் என்போருக்கும் பெளத்தமார்க்கத்தை அழிக்கவேண்டி நேரிட்ட பூர்வ விரோதமே நாளதுவரையில் வைத்துக் கொண்டு திராவிட பௌத்தர்களைத் தலையெடுக்கவிடாமல் தாழ்த்தி பறையர் பறையரென்று பதிகுலையச் செய்துவருகின்றார்களென்று விளக்கிவருகின்றோம்.
அதற்குப் பகரமாக இப்போதும் நடந்துவரும் அக்கிரமத்தைப்பாருங்கள்.
அதாவது:- செங்கற்பட்டு ஜில்லா மதுராந்தகம் தாலுக்கா, 96-நெம்பர்
ஓரத்தூர் கிராமத்தில் வாசஞ்செய்யும் பாப்பார்களெல்லாம் ஒன்றுகூடிக்கொண்டுப் பறையர்களென்னும் ஏழைக் குடிகளைப் பலவகைத் துன்பங்கள் செய்திருக்கின்றார்களாம்.
அவைகளை சகிக்கமுடியாமல் அக்குறைகள் யாவற்றையும் நமது ராஜாங்கத்தோருக்கு விளக்கவேண்டுமென்று கருதி யாவருங்கூடி கைச்சாத்திட்டு நமது பத்திரிகைக்கு எழுதியிருக்கின்றார்கள். அவற்றை இதனடியில் பிரசுரஞ் செய்திருக்கின்றோம். இதனைக் கண்ணுறும் கருணை தங்கிய நமது ராஜாங்கத்தார் எழியகுடிகளின்மீது இதக்கம் வைத்து இராஜாங்க யூரேஷிய அதிகாரிகளிலேனும், மகமதிய அதிகாரிகளிலேனும் ஒருவரை அனுப்பி அவற்றைத் தேறவிசாரிணைக்குக் கொண்டுவந்து அக்கிராமவாசிகளின் அக்கிரமங்களை அடக்கி ஏழைகளைப் பாதுகாப்பார்களென்று எதிர்பார்க்கின்றோம்.
பத்திராதிபர்
கடிதம்
நெ, 96, ஓரத்தூர் கிராமம்
ம-எம்-எம்-ஸ்ரீ,
க. அயோத்திதாஸ் பண்டிதரவர்கட்கு 96-ம் கிராமச்சேரியில் நீடூழியாய் வாசஞ்செய்யுங்குடிகள் யாவரும் தங்கள் மேலானகனத்தை வருந்தி யெழுதுவது யாதெனில்:- தங்கள் பத்திரிகையில் யாங்கள் எழுதியதை பிரசுரிக்கக் கோருகிறோம்.
மேல்கண்ட நெ96 மதுராந்தகம் தாலுக்காவைச் சேர்ந்த ஓரத்தூர் கிராமத்தில் வசிக்கும் பாப்பார்கள் சுமார் 27 வீட்டுக்காரர்களும் ஒன்றாய் சேர்ந்து சேரியில் வசிக்கும் 28 வீட்டுக்காரரையும் பறையர்கள் நீங்கள் எங்கள் பட்டாபூமியின் வழியாய்ப் போகப்படாதென்றும், ஏரியில் ஜலம் யாங்கள் மொள்ளக்கூடாதென்றும், அப்படி மீறி மொள்ளுபவர் குடங்களை உடைத்துவிடுவதாகவும் சொன்னதை கேட்டு சிலகாலம் பயந்து ஜலமெடுக்காமலிருந்தோம். எங்களுக்குள் சிலர் அவர்களிடந்தான் தொண்டுசெய்கிறவர்கள். ஆனதால் நாங்கள் ஞாயங்கேட்கப் போனால் எங்களை தடிகளாலும், மண்கட்டிகளாலும் அடிக்க வருகிறார்கள். கிராம கணக்கப்பிள்ளை, முன்சீப் இவர்களிடஞ் சொன்னாலும் அவர்கள் இரு தரத்தாரையும் பறையர்களுக்கு உதவியாயிருப்பதைக் கண்டால் உங்களையும் பல்வித வாதைகள் செய்வோமென்று பயமுறுத்துகிறார்கள். யாங்களோ கல்வியில்லாதவர்கள். எங்கள் பிள்ளைகள் வாசிக்கவும் பள்ளிக்கூடம் இவ்விடங் கிடையாது. அப்படியிருந்தாலும் பறையர்கள் படிக்கப்படாது. மாடுகளை காலையில் ஓட்டிக்கொண்டு போய் அவர்கள் மாட்டில் மடக்கிக்கொண்டு அதுகள் போடும் சாணத்தையும் எடுத்துக்கொள்கிறார்கள். காரணம் அந்த சாணத்தால் நாங்கள் முன்னுக்கு வந்துவிடுவோமென்னும் கெட்ட எண்ணமே தவிர மேய்காட்டில் எங்கள் மாடுகளும், ஆடுகளும் மேயக்கூடாதென்றும் காட்டில் காய்ந்தவிரகு பொருக்கி சமைக்கக் கூடாதென்றும், எங்களுக்கு ஏர்மாடுகள் இருக்கப்படாதென்றும், யாங்கள் சுத்த ஜலம் சாப்பிடக்கூடாதென்றும், வஸ்திரங்கள் சுத்தமாய் கட்டக் கூடாதென்றும், மாட்டிற்கு யாங்கள் புல் அறுக்கக்கூடாதென்றும் தடுத்து எங்கள் பயிறுகளுக்கும், ஆடுமாடுகளுக்கும் இடஞ்சல் செய்துவருகின்றார்கள். இந்தவூரில் யாங்கள் நஞ்சை, புஞ்சை மானியதீர்வை ஏறக்குறைய 100 ரூபாய் சர்க்காருக்கு செலுத்திக்கொண்டு வருகிறோம்.
நாட்டுப்புரத்தில் நாங்கள் படும்ட கஷ்டங்களை கவனிப்பார் யாருங்காணோம். சென்னையில் மாத்திரம் சுதேசிகள் சுயராட்சியங் கேட்கிறார்களே இப்பேர்கொத்த கொடும்நெஞ்சமுடையவர்களுக்கு சுயராட்சியங் கொடுத்துவிட்டால் முற்காலத்தில் எங்களை கற்காணத்திலும், கழுவிலும் ஏற்றியதாய் பெரியபுராணம் முதல் தற்கால சாட்சியிருக்கிறது.
அப்பகையையும் உடனே தேடுவார்கள் அப்படி வராமல் கவர்ன்மெண்டார் எங்களை சீர்தூக்குவார்களென்று கோருகிறோம்.
எங்களை வாதை செய்வதின் காரணம் நாங்கள் நாளுக்குநாள் சொந்தபூமியும் பயிரிடுஞ் சமுசாரிகளாகிவிடுகிறோம் என்றுதான். அன்றியும் சர்க்கார் தீர்வை கட்டப்போனால் அக்கிராரத்தை சுற்றிச்சுற்றி வரவேண்டியதாயிருக்கிறது. அப்படி அவதிப்பட்டு பணம் வைத்துக்கொண்டு முன்சீப் ஐயரைக்கண்டால் அவர் வாங்கிக் கொள்ளாமல் கெளண்டனென்னுஞ் சாதியான் மூலமாய் பெற்றுக் கொள்ளுவது வழக்கம். இதுவும் தவிர போஸ்ட் பெட்டியை அக்கிராரத்துக்குள் வைத்துக்கொண்டிருப்பதால் எங்கள் அவசரக் கடிதங்கள் தாமதப்பட்டுப்போகிறது. இப்படி பிராமணாளிடத்தில் பலவித ஹிம்சைகளை அனுபவித்துவரும் எங்களை கருணைதங்கிய பிரிட்டீஷ் கவர்ன்மெண்டார் முன்னுக்குக் கொண்டுவரும்படியாயும், கனந்தங்கிய (தமிழன்) பத்திராதிபர் எங்கள் இடுக்கங்களை கவனித்து காருண்ணிய கவர்மெண்டாருக்கு தெரியப்படுத்தவும் இதனடியில் கையொப்பமிட்ட யாங்கள் தெரிவித்துக் கொண்டோம்.
எங்களுக்குள் வரதனென்பவன் இந்த எடஞ்சல்களைப் போய் கேட்டதின்பேரில் நாலுபாப்பார்கள் அவனைக் கல்லுகளாலும், தடிகளாலும் அடித்து உதிரமே வரச்செய்துவிட்டார்கள். அவன் அதிகாரிகளிடம் பிரையாது செய்யப்போனப்பின் ஒரு வாழைக் குலையை வெட்டி வந்து முன்சீப் வீட்டுத் திண்ணையின்பேரில் வைத்து இந்த வாழைக்குலையைத் திருடினான் அடித்தோமென்று பொய்யைச்சொல்லுகிறார்கள்.
இப்படியாக எங்களுக்கு நேரிட்டுள்ள கஷ்டங்களை இங்கிலீஷ் ராஜாங்கத்தோருக்குத் தெரிவிப்பதுடன் மாஜிஸ்டிரேட்டவர்களும் சரியாக விசாரித்து ஏழைகளைக் காப்பாற்றும்படிக் கோருகிறோம்.
ஓரத்தூர் சேரிவாசிகள்,
- 2:33, சனவரி 27, 1909 -