அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/054-383
50. கிராம உத்தியோகஸ்தர்களுக்கேனும் அவர்களைச் சார்ந்த குடும்பத்தோர்களுக்கேனும் அந்த கிராமங்களில் சொந்த பூமிகள் இருக்கப்படாது
இத்தேசத்தில் வாசஞ்செய்யும் பற்பல சாதியோரில் அவர்களுக்குள்ள குணாகுணங்களும் செயல்களும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோருக்குத் தெரிந்த விஷயமே.
அதாவது - சிலசாதியோர் தங்கள் கையிருப்பில் பத்தாயிரம் ரூபாய் ரொக்கமாய் இருந்தபோதிலும் பத்துகாதவழியில் ஒரு அணா தானம் கொடுப்பதாயிருந்தால் இடுப்பின் துணியை இறுகக் கட்டிக் கொண்டோடி இரப்பது வழக்கமாகும்.
அத்தகைய சாதியோருக்கு அந்தஸ்தான உத்தியோகங்களைக் கொடுத்து அதிக சம்பளங்களை அளித்தபோதினும் அவர்களுக்குள்ள பேராசை ஒழியாமல் ஏழைக்குடிகளை இதக்கமின்றி வாதித்து இன்னும் பணஞ்சேர்க்க முயலுகின்றார்கள். எவ்வகையிலென்னில்:
இதக்கமற்றவர்களும் பேராசையுள்ள சாதியோருக்கு கிராமங்களில் உத்தியோகமும் கொடுத்து அக்கிராமத்தில் சொந்தபூமியும் இருக்குமாயின் பரம்பரையாய் அக்கிராமத்தில் வாசஞ் செய்யும் பறையனென்னும் ஏழைக்குடியானவன் பதிகுலைந்து பாழடைய வேண்டியதேயாம்.
அதாவது ஓர் கிராம உத்தியோகஸ்தருக்கு ஒருகாணி பூமி அக்கிராமத்தில் இருந்து விடுமாயின் அவருக்கு ஏறு வேண்டியதில்லை, ஆளும் வேண்டியதில்லை, விதைமுதலுக்கு பணமும் வேண்டியதில்லை.
மற்றும் கிராம உத்தியோகஸ்தர்களின் பூமி எவ்வகையில் விளையுமென்பீரேல், ஒரு குடியானவன் ஏறுழுதுவிட வேண்டியது. ஒருகுடியானவன் விதை விதைத்து விடவேண்டியது. ஒரு குடியானவன் களை பிடுங்கி நாத்துநட்டு நீர்பாய்த்து பயிரை வளர்த்துவிடவேண்டியது. ஒரு குடியானவன் அறுப்பறுத்து அடித்து தூற்றி மணிகுவித்து கிராமவுத்தியோகஸ்தர் வீட்டில் சேர்த்து விடவேண்டியது. கிராம உத்தியோகஸ்தர் ஆண்டே அம்மாள் அடுக்கல் பானையையும், நெல்லுறை பண்டியை நிறப்பிக்கொள்ளுவது தான் அவர்களது கஷ்டம்.
கிராம உத்தியோகஸ்தர்களின் காணிவேலையை ஓர் குடியானவன் கவனிக்காமல் விட்டுவிடுவானாயின் அவனுக்கும், அவன் பூமிக்கும், அவனது ஏறுக்கும், உழவு மாட்டுக்கும் அன்றே அஷ்டமத்துச்சனியன் பிடித்ததுபோலாம்.
இத்தகைய சொந்தபூமி வாய்த்த கிராம உத்தியோகஸ்தர்களால் ஏழைக்குடிகள் படாதபாடுகளும் பட்டு உள்ள பூமிகளையும் விட்டு நாடோடி சீவிக்கப் போய்விடுகின்றார்கள்.
இவ்வகை உழுது பயிரிடும் உழைப்பாளிகள் ஊரைவிட்டுப் போய்விடுவார்களானால் கிராமங்களின் வயிறுகள் ஓங்குமோ, குடிகள் சீர்பெறுமோ, அரசர்களுக்கு ஆறுதல் உண்டாமோ, இல்லை.
குடியானவர்கள் உழைப்பினால் வரப்புயர நீருயரும், நீருயர பயிருயரும், பயிருயர குடிவுயரும், குடியுயர கோனுயரும் எனும் முதுமொழிக்கிணங்க கிராமக் குடிகள் ஆனந்தமாக உழைத்து பயிறோங்குமாயின் சகல சுகமுமுண்டாம். ஆதலின் குடில்களுக்கு இடுக்கங்கள் நேரிடா விஷயங்களை இராஜாங்கத்தோர் ஆலோசித்து கிராம உத்தியோகஸ்தர்களுக்காயினும், அவர்கள் பந்துக்களுக்காயினும் அக்கிராமத்தில் சொந்த பூமிகளிராமல் செய்யவேண்டும். இதுதான் கிராமங்களில் செய்யவேண்டிய முதல் சீர்திருத்தமாகும்.
- 2:44; ஏப்ரல் 14, 1909 -