அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/060-383
56. சுதேச சீர்திருத்தத்துள் சாதிபேதமற்ற திராவிடர்களாம் சுதேசிகளின் திருத்தம்
சாதிபேதமற்ற திராவிடர்களே இத்தேசத்தின் பூர்வக்குடிகளாகும். இவர்கள் பெரும்பாலும் தமிழ் பாஷா விருத்தியைக் கோரிநின்றவர்களாதலின் தென்னாட்டுள் தமிழரென்றும், வடநாட்டார் திராவிடரென்றும், திராவிட பெளத்தாளென்றும் வழங்கிவந்ததுமன்றி இலங்காதீவத்திலுள்ளோர் சாஸ்திரங்களிலும், சரித்திரங்களிலும் இப்பூர்வக்குடிகளை திராவிட பௌத்தர்கள் என்று வரைந்திருப்பதுமன்றி வழங்கிக்கொண்டும் வருகின்றார்கள்.
சாக்கைய முநிவரால் அருளிச்செய்த சத்திய தன்மமானது இவ் விந்துதேச முழுவதும் பரவி இருந்தகாலத்தில் இவர்களும் எங்கும் பரவி கணிதசாஸ்திர வல்லபத்தால் வள்ளுவர், சாக்கையர், நிமித்தகர்கள் என்றும், தமிழ்பாஷை இலக்கிய இலக்கணம் வாசித்துக் கவிபாடும் திறத்தால் கவிவாணர், பாணரென்றும், அக்கவிகளை யாழுடன் கலந்து பாடுவோரை யாழ்ப்பாணரென்றும், பூமிகளைப் பண்படுத்திப் பயிரிட்டு சருவ சீவர்களுக்கும் உபகாரிகளாகவும், ஈகையுள்ளோராகவும் இருப்போர்களை வேளாளர்கள் என்றும், ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை செட்டாக மாறி வியாபாரஞ் செய்வோர்களை வாணிபரென்றும், குடிகளைக் கார்த்து இராட்சிய பாரந் தாங்குவோர்களை மன்னவர்கள் என்றும், புத்தசங்கஞ்சேர்ந்து ஞானவிசாரிணை உள்ளவர்களை சிரமணர், சமணர்கள் என்றும், சமண நிலை முதிர்ந்து உபநயனம் பெற்று சருவ வுயிர்களையும் தன்னுயிர்போல் பாதுகாக்கும் தண் மெயாம் சாந்த நிலைபெற்று இரு பிறப்பாய் மாற்றிப் பிறக்கும் வல்ல மெய் உற்றோர்களை அறஹத்துக்கள், அந்தணர்கள் என்றும் வழங்கிவந்தார்கள்.
இப்பெயர்கள் யாவும் அவரவர்கள் தொழிலுக்கும், செயலுக்குத் தக்கவாறு விவேகிகளால் வகுத்தப் பெயர்களாகும்.
எவ்வகையிலென்னில் நமது விவேகடமிகுத்த பிரிட்டிஷ் துரைத்தனத்தார் தங்கள் ஆங்கிலோ பாஷையில் போதகர்களுக்குப் (பிரீஸ்டென்றும்)
அரசர்களுக்குக் (கிங்கென்றும்) யுத்தவல்லவர்களுக்கு (சோல்ஜர்களென்றும்) வியாபாரிகளுக்கு (மெர்ச்சென்டுகளென்றும்) பயிரிடுவோர்களுக்கு (அக்கிரிகல்ச்சரர்களென்றும்) வானசாஸ்திரிகளுக்கு (அஸ்டிரானமர்கள் என்றும்) அவரவர்கள் தொழிலுக்கும், செயலுக்கும் பெயர்கொடுத்திருப்பது போல் தமிழ்பாஷையில் வல்லவர்களான சமணமுனிவர்களால் மேற்கூறியுள்ள தொழிற்பெயர்களையும், செயற்பெயர்களையும் வகுத்து அழைத்து வந்தார்கள்.
இத்தகையத் தொழிற்பெயர்களையும், செயற் பெயர்களையும் பெற்றிருந்தபோதிலும் ஒவ்வொருவருக்குள்ள அன்பும், ஐக்கியமும் மாறாமல் திராவிடர்கள் என்னும் பொதுப்பெயரால் அழைக்கப்பெற்று திராவிடராஜன் மகளை சிங்களராஜன் மணம் புரிந்துக் கொள்ளுவதும், சிங்களராஜன் மகளை வங்காளராஜன் மணம் புரிந்துக் கொள்ளுவதும், வங்காளராஜன் மகளை சீனராஜன் மணம் புரிந்துக் கொள்ளுவதுமாகிய பேதமற்று ஒற்றுமெயுற்று வாழ்ந்துவந்தார்கள்.
அஃதெவ்வகையில் எனில் நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் துரைத்தனத்தாராகும் ஆங்கில அரசன் மகளை இருஷியராஜன் மணம் புரிவதும், ருஷியராஜன் மகளை பிரான்சிராஜன் மணம்புரிவதும், பிரான்சிராஜன் மகளை ஜெர்மனிராஜன் மணம் புரிவதுமாகிய பேதமற்றச் செயல்போல் இவ்விந்துதேச மன்னர்களும் கொள்வினை, கொடுப்பினை, உண்பினை, உடுப்பினை முதலிய விஷயங்களில் யாதொரு பேதமில்லாமல் ஒற்றுமெயுற்று வாழ்ந்து வந்தார்கள்.
அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி என்பதற்கிணங்க பூர்வ சுதேசக்குடிகளாம் திராவிடர்களும், வேளாளத் தொழிலாளியின் மகளை வாணிபத் தொழிலாளனும், வாணிபத் தொழிலாளியின் மகளை மன்னு தொழிலாளனும் மணம் புரிந்து ஒருவருக்கொருவர் பேதமின்றி சுகவாழ்க்கையிலிருந்தார்கள்.
இத்தகைய ஒற்றுமொற்று சிறப்படைந்த வாழ்க்கைக்கும் ஒழுக்கத்திற்கும் புத்ததன்ம சீர்திருத்தங்களே ஆதாரமாகும்.
அஃது எவ்வகையதென்னில் தற்காலமுள்ள சீனதேச பௌத்தர்களும், ஜப்பான் தேச பௌத்தர்களும், மங்கோலிய தேசப் பௌத்தர்களும், திபெத்திய தேசப் பெளத்தர்களும், பிரம்மதேசப் பௌத்தர்களும், இலங்கா தேசப் பௌத்தர்களுமாகிய உலகத்தோற்ற மனுக்களுள் அரையே அரைக்கால் பாகம் பெளத்த மாக்கள் கொள்வினை, கொடுப்பினை உண்டனை முதலியவற்றுள் யாதொரு பேதமுமின்றி வாழ்க்கைச் சுகம் பெற்றிருப்பது போல் சுதேசிகளாகும் திராவிட பௌத்தர்களும் கொள்வினை, கொடுப்பினை, உண்பினை முதலிய விஷயங்களில் யாதாமொரு பேதமின்றி ஒற்றுமெயுற்று சுகசீவிகளாக வாழ்ந்து வந்தார்கள்.
அத்தகைய பேதமற்ற வாழ்க்கையை அநுசரித்தே நாளது வரையில் சாதிபேதமற்ற வாழ்க்கையிலிருந்து பலதேசங்களுக்கும் களங்கமில்லாமல் சென்று சகலருக்கும் உபகாரிகளாக விளங்கிவருகிறவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களேயாகும்.
சாதிபேதமற்ற செயலைக்கொண்டும் முயற்சியும் உபகாரமுமுற்ற குணத்தைக் கொண்டும் இவர்களை புத்த தருமத்தைச் சார்ந்தவர்கள் என்று ஏற்றுக் கொள்ளலாமோ எனில் இன்னும் அனந்த ஆதாரங்களுண்டு.
அதாவது - அந்தோனி, ஜோசேப், மநுவேல் என்னும் பெயர்களைப் பெற்றபோது கிறீஸ்துவின் மார்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்பார்கள். உசேன் சாயப், மீராசாயப், காசிம் சாயப் என்னும் பெயர்களைப் பெற்றபோது மகமது மார்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்பார்கள். கிருஷ்ணன் நாராயணன், சீனிவாசன் என்னும் பெயர்களைப் பெற்ற போது விஷ்ணு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பார்கள். ஏகாம்பரன், வேலாயுதன், சுப்பிரமணியன் என்னும் பெயர்களைப் பெற்றபோது சிவமதத்தைச் சார்ந்தவர்கள் என்பார்கள். அவரவர்கள் பெயரால் அவரவர்கள் மதக்குறிப்பை அறிந்துக் கொள்ளுவதுபோல்,
சாதிபேதமற்ற திராவிடர்களுக்குள் நாட்டுப் புறங்களில் வேளாளத் தொழில் செய்வோர்களுக்கு பெரும்பாலும் முத்தன், முநியன், கறுப்பன், செல்லனென்னும் பெயர்களையே வழங்கி வருகிறார்கள். இப்பெயர்கள் யாவும் புத்தபிரானுக்குரிய ஆயிரத்தெட்டு நாமங்களில் சிலதுகளாகும்.
பின்கலை நிகண்டு
முத்தன் மாமுநி சுறுத்தன் / முக்குடைச் செல்வன் முன்னோன்
- 2:21; நவம்பர் 4, 1908 -
சாதிபேதமற்ற திராவிடர்கள் புத்ததன்ம சார்பால் மேற்குறித்தப் பெயர்களை நாளதுவரையில் வழங்கிவந்தபோதிலும் புத்தர் பெயர்களில் ஒன்றாகும் கடவுள் என்னும் பெயரையே நாளதுவரையில் சிந்தித்தும் வருகின்றார்கள்.
இவ்வகையாய் புத்தரை சிந்தித்துவருவதுமன்றி புத்ததன்மத்தைச் சார்ந்த அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளருக்குங் கன்மகுருக்களாகவும் வழங்கி வந்தார்கள்.
முன்கலை திவாகரம்
வள்ளுவர் சாக்கையரெனும் பெயர்மன்னர்க் குன்படு / கருமத் தலைவர்க்கொக்கும்.
இத்தகைய கன்மகுருக்கள் வடநாட்டில் பிரபலமாயிருந்ததை புத்தபிரான் பிறந்த வம்சவரிசையோர் பெயராலும், வடநாட்டிலுள்ள சாக்கையர் தோப்பின் பெயராலும் தெரிந்துக் கொள்ளுவதுடன், தென்னாடு திருவனந்தபுறச்சார்பில் வள்ளுவர் நாடென்று வழங்கும் நாட்டின் பெயராலுந் தெரிந்துக் கொள்ளலாம்.
வள்ளுவர், சாக்கையர், நிமித்தகர் என்னும் பெயர் பெற்றிருந்த கன்மகுருக்களே புத்ததன்மத்தைத் தழுவிய அரசர்களாகும் சீவகன், மணிவண்ணன் முதலியவர்களுக்கு கன்மகுருக்களாயிருந்து காரியாதிகளை நடாத்திவந்த அநுபவசரித்திரங்களை அடியிற் குறித்துள்ள காவியங்களாலும் அறிந்துக் கொள்ளலாம்.
சீவகசிந்தாமணி
பூத்த கொங்கு போற் பொன்கமந்துளா / ராச்சியார் நலக் காசெறூணனான்
கோத்த நிதித்தலக் கோதைமார்பினான் / வாய்த்த வன்னிரை வள்ளுவன் சொனான்
சூளாமணி
நிமித்தக னுரைத்தலு நிறைந்த சோதியா
னுமைத்தொகையிலாததோ ருவகை யாழ்ந்துகண்
ணிமைத்தில னெத்துணை தொழுதுமீர்மலர்
சுமைத்தொகை நெடுமுடி சுடரத்தூக்கினான்.
வேறு
தலைமகன்றானக்காகச் சாக்கைய / நிலைமைகொண்மனைவியா நிமிர்ந்தபூந்துணர்
நலமிகு மக்களா முநியர் தேன்களா / குலமிகுகற்பகங் குளிர்ந்துதோன்றுமே.
இவ்வகையாய் புத்ததன்மத்தைத் தழுவிய அரசர், வணிகர், வேளாளரென்ற மூன்று தொழிலாளர்களுக்குங் கன்மகுருக்களாக விளங்கினவர்கள் வள்ளுவர்களன்றி புத்தசங்கஞ்சேர்ந்து அறஹத்துக்களாகி ஞானகுருக்களாக விளங்கியவர்களும் வள்ளுவர்களே என்பதற்கு நாயனாரியற்றியுள்ள திரிக்குறள் ஒன்றே போதுஞ் சான்றாம்.
புத்தசங்கஞ்சார்ந்த சமணமுனிவர்களாலியற்றியிருந்த இலக்கிய இலக்கணங்களையும், ஞான நூற்களையும், சித்து நூற்களையும், சோதிட நூற்களையும், வைத்திய நூற்களையும் பரம்பரையாகத் தங்கள் கையிருப்பில் வைத்திருந்து அச்சிட்டுப் பிரசுரப்படுத்தியவர்கள் பெரும்பாலும் சாதிபேதமற்ற திராவிடர்கள் என்றே அந்தந்த நூன்முகங்களில் விளங்குகிறபடியால் அந்நூற்களின் தோற்றத்தாலும் இவர்களை புத்ததன்மத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறத்தகும்.
- 2:22; நவம்பர் 11, 1908 -
இவர்களது குணநிலை, பஞ்சகாவியங்களின் சரித்திர வாதரவினாலும் இவர்களுக்குள் அழைத்துக்கொள்ளும் பெயர்களினாலும், சிந்தித்துவரும் தெய்வத்தாலும் நெடுங்காலமாகவும், பரம்பரையாகவும் தங்கள் கையிருப்பில் வைத்திருந்து தற்காலம் அச்சிட்டு வெளிக்குக் கொண்டு வந்திருக்கும் வைத்திய நூல், நீதிநூல், ஞானநூல், கணித நூல் முதலிய சாஸ்திரங்களாலும், இவர்களை சாக்கைய பௌத்தர்கள் என்றேனும், திராவிடபெளத்தர்கள் என்றேனும் திட்டமாகக் கூறத்தகும்.
இத்தகைய ஆதாரமுள்ளவர்கள் தங்கள் குணச்செயல்களிலேனும் புத்ததருமத்தைத் தழுவி நிற்கின்றார்களா என்று ஆராயுங்கால் தங்களை பலவகை இம்சைகள் செய்தும், ஜீவனவிருத்திகளைக் கெடுத்தும், சுத்தஜலங்களை மொண்டு குடிக்கவிடாமலும், வண்ணார்களை வஸ்திரம் எடுக்கவிடாமலும், அம்மட்டர்களை சவரஞ் செய்யவிடாமலும் பல்வலி, இடுக்கங்களால் பதங்குலைத்துவரும் பராயசாதியோர்களில் ஒருவன் வியாதியால் பீடிக்கப்பட்டு வீதியில் விழுந்தபோதிலும், தவறி ஓர் கிணற்றில் விழுந்தபோதிலும், வண்டி குதிரைகளால் ஓர் விபத்து நேரிட்டபோதிலும் அதைக் கண்டுவிடுவார்களானால் தங்கள் சத்துருக்களாச்சுதே, தங்களை சீருக்கு வரவிடாமல் தடுப்பவர்களாச்சுதே என்று அவர்கள் செய்துவரும் தீங்குகள் யாவையும் எண்ணாமல் அவர்களுக்கு நேரிட்டுள்ள ஆபத்துகளினின்று நீக்கியெடுத்து சுகம்பெறச் செய்து வருகின்றார்கள்.
ஈதன்றி பராயசாதியோர்களின் பலவகை இடுக்கங்களால் சுகசீவனம் கிடைக்காவிடில் ஓர் வண்டியை இழுத்தேனும், விறகு சுமந்தேனும், புல் விற்றேனும் தன்னுடையக் குடும்பத்தை போஷிப்பார்களேயன்றி சூதினாலும், மோசத்தாலும், பொய்யாலும், வஞ்சினத்தாலும் சீவிக்கமாட்டார்கள்.
இவ்வகை குணச்செயல்களாலும் இவர்கள் புத்ததன்மத்தைத் தழுவிய ஜீவகாருண்யமும், முயற்சியும் உள்ளவர்கள் என்று கூறத்தகும்.
இவர்கள் நெடுங்காலமாக நல்ல அந்தஸ்திலும் விவேக விருத்தியிலும் இருந்த நிலை.
சாதிபேதமற்ற திராவிடர்கள் பராயசாதியோர்களால், பலவகை இடுக்கங்களைப் பெற்று சீரழிந்திருந்தபோதிலும்,
கிறிஸ்துவ மிஷநெரியார்களின் கருணையால் பி.ஏ., எம்.ஏ. முதலிய கவுரதாபட்டங்களைப் பெற்றுள்ளதுமன்றி அஜுர் செரஸ்ததார், ஆனரெரி சர்ஜன், ஸ்கூல் இன்ஸ்பெக்ட்டர், ரிஜிஸ்டிரார், ஆனரெரி மாஜிஸ்டிரேட் என்னும் கெளரதா உத்தியோகங்களிலும் இருந்து இராயபாதூரென்னும் சிறந்த பட்டங்களும் பெற்று இராஜவிசுவாசத்தினின்று காரியாதிகளை நடத்தி வந்ததுமன்றி நாளதுவரையில் நடாத்தியும் வருகின்றார்கள்.
இத்தகைய கல்வி கற்கக்கூடிய விவேகவிருத்தியும் உத்தியோகங்களைக் காப்பாற்றக் கூடிய ஜாக்கிரதையும், இராஜவிசுவாசத்தில் நிலைத்தலுமாகியச் செயல்களும் இவர்கள் ஆர்வத்திலிருந்த நல்ல அந்தஸ்தினாலும், விவேக விருத்தியாலும், புத்ததன்ம ஒழுக்கத்தினாலும் எங்கெங்கு தங்களை ஆதரித்தக் கூடிய இடங்கள் கிடைத்ததோ அங்கங்கு விவேக விருத்தியிலும், உத்தியோக, விருத்தியிலும், இராஜவிசுவாச விருத்தியிலும் நிலைத்திருக்கின்றார்கள்.
சாதிபேதமற்ற திராவிடர்களைப்போல் பராய சாதியோர்களால் நசுங்கி குன்றாமல் அவர்கள் சார்பாய் நிற்கும் படுகர், தொதுவர், கோத்தர், குறும்பர், வில்லியர், குறவர் இவர்கள் மீது மிஷநெரிமார்கள் வேண கருணைவைத்து கல்விபயிற்சி செய்துவந்தபோதினும் கல்வி விருத்தியும் உத்தியோக விருத்தியும் இல்லாமலே மயங்கி நிற்கின்றார்கள். காரணம் - இவர்கள் பூர்வம் நல்ல அந்தஸ்தில் இல்லாமல் தற்காலம் இருக்கும் நிலையிலேயே இருந்தவர்களாதலின் கருணை தங்கிய. மிஷநெரியார்கள் யாதுவிருத்தி செய்யினும் முழு விருத்தியடையாமல் இயங்குகின்றார்கள்.
சாதிபேதமற்ற திராவிடர்களோ அத்தகைய திகைப்பின்றி எங்கு கல்விவிருத்திக் கிடைக்கின்றதோ அங்கு விருத்தி பெற்று சுகமடைகின்றார்கள்.
இவ்விருத்தி சாதுரியத்தினாலேயே இவர்கள் பூர்வ புத்ததன்மத்தைத் தழுவி வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கத்தில் இருந்தவர்கள் என்பதை எளிதில் அறிந்துக் கொள்ளலாம்.
- 2:23; நவம்பர் 18, 1908 -
சாதிபேதமற்ற திராவிடர்கள் புத்த தன்மத்தை தழுவியக் களங்கமற்றச் செயல்கள்
சாதிபேதக் குறூரச் செயல்கள் அற்று வாழ்ந்து வந்தவர்களாதலின் எத்தேச எச்சாதியோர்களுடனும் கலந்து பேதமில்லா போக்குவருத்தில் இருக்கின்றார்கள்.
அதிககஷ்டத்துடன் பலதேசங்களுக்குச் சென்று பணம் சம்பாதித்த போதிலும் அவற்றை தான்மட்டிலும் அநுபவிக்காமல் தனது பந்து மித்திரர்களுக்கும் அளித்து போஷித்து வருவார்கள்.
இக்கூட்டத்தார் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வருவதினால் சத்துருக்கள் முன்னிலையில் சீவித்திருக்கின்றார்கள். இத்தகைய சீவ காருண்யமும், பரோபகாரச் செயலும் புத்ததன்ம அநுபவங்களேயாம்.
சாதிபேதமற்ற திராவிடர்கள் எதுவரையில் சுகநிலை பெற்றிருந்தார்கள் என்னும் காலவரை.
மகதநாட்டரசர்கள் அசோகச் சக்கிரவர்த்தி, மணிவண்ணன், சீவகன் முதலிய அரசர்கள் ஆளுகைவரையிலும் யாதொரு குறைவுமின்றி சகல சுகங்களையும் அநுபவித்துக் கொண்டு வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கங்களில் நிறைந்திருந்தபடியால் இவ்விந்துதேசம் முழுவதும் சீரும் சிறப்பும், அமைதியும், ஆற்றலும் பெற்றிருந்தது. இத்தேசத்தை பரதகண்டம் என்றும் இந்தியா என்றும் வழங்கிவருங்காரணம். பரதரென்பதும், வரதரென்பதும் புத்த பிரானுக்குரிய ஆயிரநாமங்களில் ஒன்றாகும். அவற்றுள் புத்தரது தன்மமும், பெளத்தவரசர் அரசாட்சியும் இத்தேசமெங்கும் நிறைந்திருந்தபடியால் வடபரதகண்டமென்றும், தென்பரத கண்டம் என்றும் சிலகால் வழங்கிவந்தார்கள்.
வீரசோழியம்
தோடாரிலங்குமலர் கோதிவண்டு / வரிபாடு நீடு துணச்சேர்
வாடாதபோதி நெறிநீழன்மேய / வர தன் பயந்த வறநூல்.
சூளாமணி
மற்றவர் மண்டில மதனுளூழியா / லேற்றிழிபுடையன லிரண்டு கண்டமாந்
தேற்றிய லிரண்டினுந் எலுந் தென்முகத்தது / பாற்றிரும் பகழினாய் பரதகண்டமே.
இவ்வகையாக வடபரதம், தென்பரதமென்று சிற்சிலர் வழங்கிவந்த போதிலும் பெரும்பாலும் புத்தபிரானை ஐந்தவித்து இந்தியத்தை வென்ற வல்லபங்கொண்டு இந்திரரென்னும் ஓர் பெயரால் அழைத்ததுமன்றி இத்தேசம் எங்கும் இந்திரர்விழா, இந்திரவிழாவென்று புத்தபிரான் பிறந்தநாளையும், அவர் பரிநிருவாணம் பெற்ற நாளையும் கொண்டாடிய குதூகலத்தால் புத்ததன்மத்தை இந்திர அறநூல், இந்திரர் தன்மமென்றும், புத்ததன்மத்தை அநுசரித்த மக்களை இந்தியர்கள் என்றும், அவ்விந்தியர்கள் வாசஞ்செய்த தேசத்தையும் இந்தியாவென்றும் அதனை எல்லைபகுப்பால் தென்னிந்தியா வடயிந்தியா என்றும் நாளது வரையில் வழங்கிவருகின்றார்கள்.
மணிமேகலை
இந்திரரெனப்படு மிறைவ தம்மிறைவன்றந்தநூற் பிடகம்.
இந்திர விழாக்கோல்.
சிலப்பதிகாரம்
இந்திரர்விழா
திரிக்குறள்
ஐந்தவித்தானாற்றலகல் விசும்புளார்க்கோமான் / இந்திரனேசாலுங்கரி.
அருங்கலைச்செப்பு
இந்தியத்தை வென்றான் றொடர்பாட்டோ டாரம்ப முந்தி துறந்தான் முநி.
இந்திராநகரென்று பெயர்வழங்கிவந்த விவரம்
சீவகசிந்தாமணி
சங்குவிம்முநித்திலஞ் / சாந்தோடேந்து பூண்முலை
கொங்குவிம்மு தோதைதாழ் / கூந்தலேந்து சாயலா
ரிங்கிதர் களிப்பினா / லெய்தியாடும் பூம்பொழில்
செங்கணிந்திர நகர்ச் / செல்வமென்ன தன்னதே.
காசிக்கலம்பகம்
பரவுபூண்டிந்திரர் திருவொடும் பொலிந்து / முடிவினு முடியா முழுநலங்கொடுக்குஞ்
புத்தபிரானை இந்திரரென்று கொண்டாடி இந்தியர்களெனப் பெயர் பெற்றவர்களுள் ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிடசாதியென ஒவ்வோர் பாஷையை சாதிக்குங் கூட்டத்தோருள் இந்திரர் தன்மத்தை எங்கும் பரவச் செய்து பெரும்பாலும் இந்திரவிழா கொண்டாடிவந்தவர்கள் திராவிடர்களேயாகும்.
இத்தகைய திராவிடர்கள் புத்தசங்கம் என்னும் இந்திர வியாரத்துட் சேர்ந்து சத்திய தன்மத்தைப் பின்பற்றி சமணநிலையினின்று தன்னைப் பார்ப்போர்களை பார்ப்பார்களென்றும், இஸ்திரீகள் சங்கத்துள் சேர்ந்தோர்களைப் பார்ப்பினிகள் என்றும் வழங்கிவந்ததுமன்றி பசுக்களையும், துறவிகளையும், பாலர்களையும், பெண்களையும், பார்ப்பார்களையும் இடுக்கஞ்செய்யாது காக்கும் அரசர்களாகவும் இருந்தார்கள்.
சீவகசிந்தாமணி
தன்பான் மனையா ளயலான் / றலைக்கண்டு பின்னு
மின்பா லடிசிற் கவர்கின்ற / கைப்பேடிபோல
நன்பால் பசுவேதுறந்தார் / பெண்டீர் பாலர் பார்ப்பா
ரென்பாரை யோம்பே ணெனின் / யானவனாவனென்றான்.
- 2:24: நவம்பர் 25, 1908 -
சாதிபேதமற்ற திராவிடர்களின் புத்ததன்ம தொழிற்பெயர்கள்
புத்தசங்கஞ் சேர்ந்து உண்மெய் உணர்ந்து தண்மெயுற்ற இரு பிறப்பாளருக்கு வடமொழியில் பிராமணரென்றும், தென்மொழியில் அந்தணர் என்றும்,
புஜபலபராக்கிரம க்ஷாத்திரியமிகுத்த சம்மாரகர்த்தர்களுக்கு வடமொழியில் க்ஷத்திரியரென்றும், தென்மொழியில் அரயரென்றும்,
ஒரு சரக்கைக்கொடுத்து மற்றொரு சரக்கை வாங்கி வியாபாரஞ் செய்வோர்களுக்கு வடமொழியில் வைசியரென்றும், தென்மொழியில் வாணிபர், செட்டியர், நாயகர், ரெட்டியரென்றும்,
கையையுங் காலையும் ஓர் இயந்திரமாகக் கொண்டு பலவகை சூஸ்திரங்களைச் செய்து பூமியைத் திருத்தி தானியவிருத்திச் செய்து சருவ சீவர்களுக்கும் உபகாரியானோர்களை வடமொழியில் சூஸ்திரர் சூத்திரரென்றும், தென்மொழியில் வேளாளர், மேழிச்செல்வர், பூபாக்கியரென்றும்,
இப்பூபாலர்களுக்கு தானியமுதலும் தனமுதலும் ஈய்ந்துக் காப்போர்களுக்கு முதலீவோர் முதலுடையோர் முதலியார்களென்றும்,
இவற்றுள் பயிரிடுந் தானியங்களை விற்கவும் வாங்கவும் உடையவர்களுக்கு பூவைசியரென்றும் மாடு முதலியவைகளைக் கொண்டு நெய், தயிறு, பால் விற்று தானியங்களை வாங்கிக் கொள்வோர்களுக்கு கோவைசியரென்றும், பொருள் கொடுத்து தானியம், நெய், பால் வாங்கி வியாபாரஞ் செய்வோருக்கு தனவைசியர் என்றும்,
மூன்றுபாகமாகப் பிரித்ததுமன்றி பூமியைத் திருத்தி விருத்தி செய்வோருக்கு உழவர், பள்ளர், உழவாளர், மேழியர், வேளாளரென்றும்,
பசுக்களின் விருத்திசெய்து அதன் பலனுகர்வோருக்கு கோவலர், இடையர், கோவிருத்தினர், இப்பரென்றும்,
பலப் பொருட்களை விற்று தனவிருத்திசெய்வோருக்கு வணிகர், நாய்க்கர், பரதரென்றும்,
- உப்புவிற்போருக்குப் பெயர் உவணரென்றும்,
கல்வியிற் தேறினோருக்குப் பெயர் கலைஞர், கலைவல்லோரென்றும்,
சகலகலை தெரிந்தோத வல்லோர்க்குப்பெயர் மூத்தோர், மேதையர், மேலோர், கற்றவர், விற்பன்னர், பண்டிதர், கவிஞர், அறிஞர், அவை வித்தையோரென்றும்,
தேகலட்சணங்களும், வியாதியின் குணாகுணங்களும் அறிந்து பரிகரிப்போருக்குப் பெயர் மருத்துவர், வைத்தியர், பிடகர், ஆயுள்வேதியர் மாமாத்திரரென்றும்,
மண்ணினாற் பாத்திரம் வனைவோருக்குப் பெயர் மண்ணீட்டாளர், குலாலர், குயவர், கும்பக்கரர், வேட்கோவர், சக்கிரி, மடப்பகைவரென்றும்,
கரும்பொன்னாகிய இரும்பை ஆளுவோருக்குப் பெயர் கன்னாளர், கருமார், கொல்லர், மருவரென்றும்,
மரங்களை அறுத்து வேலை செய்வோர்க்குப் பெயர் மரவினையாளர், மயன், தபதி, தச்சரென்றும் பொன்வேலை செய்வோர்க்குப் பெயர் பொற்கொல்லர் தட்டார், சொர்ணவாளர், அக்கரசாலையர் என்றும்
கல்லினும், மண்ணினும், மனை யுண்டுசெய்வோருக்குப் பெயர் மண்ணீட்டாளர், சிற்பாசிரியர் என்றும்
வஸ்திரங்களை வண்ணமாக்குவோர் பெயர் தூசர், ஈரங்கோலியர், வண்ணாரென்றும்,
வஸ்திரங்களைத் தைப்போருக்குப் பெயர் துன்னர், பொல்லர், தையற்காரரென்றும்,
உயிர்வதையாகிய கொலைபுரிவோர்க்குப் பெயர் களைஞர், வங்கர், குணுங்கர், மாதங்கர், புலைஞர், இழிஞரென்றும்,
செக்காட்டுவோர்க்குப் பெயர் சக்கிரி, செக்கார், கந்திகளென்றும்,
கள் விற்போர்க்குப் பெயர் துவசர், பிழியர், பிடியரென்றும்,
மதகரி யாள்வோர்க்குப் பெயர் பாகர், யானை பாகர், ஆதோணரென்றும்,
அரண்மனை காப்போர்க்கு பெயர் மெய்காப்பாளர், காவலர், கஞ்சுகி யென்றும்
மரக்கலம் ஓட்டுவோர்க்குப் பெயர் மாலுமி, மீகாமன், நீகாமனென்றும்,
இரதமோட்டுவோர்க்குப் பெயர் சூதன், வலவன், சாரதி, தேர்ப்பாகனென்றும்,
தோல்களை பதமிடுவோர்க்குப் பெயர் இயவர் தோற் கருவியாளர் என்றும்
தோற்பறைக்கொட்டி துளைக்குழலூதும் நரம்பு கருவியாளருக்குப் பெயர் குயிலுவரென்றும்,
ஓர் சங்கதியை மற்றவர்க்கு அறிவிப்போர்க்குப் பெயர் வழியுரைப்போர், தூதர், பண்புரைப்போர், வினையுரைப்போர், வித்தகரென்றும்,
இஸ்திரிபோகத் தழுந்தினோருக்குப் பெயர் பல்லவர், படிறர், இடங்கழியாளர், தூர்த்தர், விலங்கர், காமுகரென்றும்,
பொறாமெயுடையோர்க்குப் பெயர் நிசாதர், வஞ்சகரென்றும்,
பயமுடையோர்க்குப் பெயர் பீதர், சகிதர், பீறு, அச்சமுள்ளோரென்றும்,
அன்னியர்பொருளை அபகரித்து சீவிப்போருக்குப் பெயர் கரவடர், சோரர், தேனர், பட்டிகர், புறையோர், கள்ளரென்றும்,
கொடையாளருக்குப் பெயர் புரவலர், ஈகையாளர், வேளாளர், தியாகி, வேள்வியாளர் உபகாரரென்றும்,
தரித்திரர்க்குப் பெயர் நல்கூர்ந்தோர், அகிஞ்சர், பேதை, இல்லோர், வறியர், ஆதுலர், ஏழை உறுகணாளர், மிடியரென்றும்,
மாணாக்கருக்கு பெயர் கற்போரென்றும். ஆசாரியர்க்குப் பெயர் ஆசான், தேசிகர், உபாத்தியாயர், பணிக்கரென்றும்,
அரசர் முதல் வணிகர், வேளாளர் வரை முக்குலத்தோர்க்கும் கருமக்கிரியைகளை நடத்துவோர்க்கு பெயர் சாக்கையர், வள்ளுவர், கருமத்தலைவர், நிமித்தகரென்றும்,
அறிவுள்ளோர்க்குப் பெயர் அறிஞர், சான்றோர், மிக்கோர், மேலோர், தகுதியோர், ஆய்ந்தோர். ஆன்றவர், உலக மேதாவியர், மேன்மக்களென்றும்,
அறிவில்லார்க்குப் பெயர் பொறியிலார், கவர், நீசர், புள்ளுவர், புல்லர், தீயோர், சிறியசிந்தையர், கனிட்டர், தீக்குணர், தீம்பர், தேறார், முறையிலார், முகண்டர், மூர்க்கர், முசுடர், கீழோர், புல்லவர், கீழ்மக்களென்றும்,
- 2:25: டிசம்பர் 2, 1908 -
இத்தியாதி தொழிற்பெயருள் வேளாளரென்பதும், வாணியரென்பதும் சாதிப்பெயர்களாயிருக்க அவைகளையுந் தொழிற்பெயரிற் சேர்க்கலாமோ என்பாருமுண்டு.
முன்கலை திவாகரம், பின்கலை நிகண்டு முதலியவைகளில் அவற்றை தொழிற் பெயருள் சேர்த்துள்ளவற்றிற்குப் பகரமாய்
நறுந்தொகை - வாணிபம்
முதலுள பண்டங் கொண்டு வாணிபஞ்செய்
ததன்பய னுண்ணா வணிகரும் பதுரே
ஏறெழுபது - வேளாண்மெய்
ளெங்கோபக்கலிக்கடந்த / வேளாளர் வினைவயலு
பைங்கோல் முடிதிருத்த / பார்வேந்தர் முடிதிருத்தும்
பொங்கோதக் கனியானை / போர்வேந்தர் நடத்துகின்ற
செங்கோலைத் தாங்ருங்கோல் ஏறடிக்குஞ் சிறுகோலே.
திராவிட பெளத்தர்கள் அதனதன் செயலுக்கும், குணத்திற்கும், இடத்திற்கும் தக்கப்பெயர்களைக் கொடுத்து சாதிபேதமென்னும் களங்கின்றி சுகசீவிகளாக வாழ்ந்ததுமன்றி கிறீஸ்து பிறப்பதற்கு முன்பு 7-வது நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து தென்மேற்குக் கரையோரமாக பாபிலோனியாவுக்கு இதே திராவிட பௌத்தர்கள் சென்று வியாபாரங் கொண்டுங் கொடுத்தும் இருக்கின்றார்கள். இதனை, புட்டிஸ்ட் இண்டியா 116-வது பக்கம் காணலாம்.
புத்தபிரானால் பாணினியாருக்கு வடமொழியையும், அகஸ்தியருக்குத் தென்மொழியையும் ஈய்ந்து இந்துதேசம் எங்கும் பரவச் செய்தகாலத்திலும் அவ்வட்சரங்களை பட்டைகளிலும், ஓலைகளிலும், கற்பாறைகளிலும், செப்பேடுகளிலும், பொன்னேடுகளிலும் பதிந்து ஆதியிற் பாதுகாத்து வந்தவர்களும் திராவிட பெளத்தர்களேயாவர். மேற்கண்டபடி இண்டியா 119-ம் பக்கம் காணலாம்.
வீரசோழிய விளக்கம்
திடமுடைய மும்மொழியாத் / திரிபிடக நிறைவிற்காய்
வடமொழியை பாணினுக்கு / வருத்தருவி யதற்கிணையாய்
தொடர்புடைய தென்மொழியை / யுலகெலாத் தொழுதேத்த
குடமுனிக்கு வற்புறுத்தார் / கொல்லாற்று பாகர்.
இந்துதேசத்தில் புத்ததன்மம் பரவியிருந்த காலம் அசோகச் சக்கிரவர்த்தியின் காலமுதல் கானிஷ்க்காவலரயில் எங்கும் சிறப்புற்று சாதிபேதமென்னும் ஒற்றுமெய்க்கேடு இல்லாமல் ஒருவருக்கொருவர் ஐக்கியமுற்று வித்தையிலும், புத்தியிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் விளங்கி இந்திரவியாரங்கள்தோரும் வானசாஸ்திரிகளாகவும், ஞானசாஸ்திரிகளாகவும், வித்தியா சாஸ்திரிகளாகவும், வைத்தியசாஸ்திரிகளாகவும் விளங்கி சகல சுகமும் அனுபவித்து வந்தார்கள்.
கிறீஸ்து பிறந்த ஐந்தாவது நூற்றாண்டுகளுக்குப் பின்னும் மணிவண்ணன், சீவகன் என்னும் அரசர்களுடைய காலத்தில் வட இந்தியா குமானுடரென்னும்
தேசத்தில் மிலைச்சர், மிலேச்சர், ஆரியரென்னும் ஓர் கூட்டத்தார் வந்து குடியேறி மண்ணைத்துளைத்து அவைகளில் குடியிருந்து கொண்டு இத்தேசத்தோர் உதவியால் சீவித்துவந்தார்கள். அவர்கள் நிறமோ ஓர்வகை வெண்மையுடையவர்களும், அதிக உயரமுள்ளவர்களும், சீலமில்லாதவர்களும், நாணமில்லாதவர்களும், கொடுந்தொழில் உள்ளவர்களுமாக விளங்கி வந்தார்கள்.
சூளாமணி மக்கள்கதி
தீவினுள் வாழுங் குமானிடர் தேசத்து / மேவியுறைவு மிலைச்சரெனப்பெய
ராவரவருண் மிலைச்ச ரவரையும் / வீவருத் தாரோய் விலங்கினுள்வைப்பாம்.
வாலுநெடியவர் வளைந்த வெயிற்றினர் / காலுமொரோவொன் துடையர் கலையிலர்
நாலுஞ் செவியர் நவை செய் மருப்பினர் / சீலமடைவிலர் தீவினுள் வாழ்வார். மக்கட்பிறப்பினு மாத்திரமல்லது / மிக்கவெளிற்று விலங்குகளேயவர்
நக்கவுருவினர் நாணாவொழுக்கினர் / தொக்கனர் மண்ணே துளைத்துண்டுவாழ்வார். பூவும்பழனு நுகர்ந்துபொழின்மர / மேவியுரையு மிலைச்சர் மிகபல
ரோவலர் வாழ்வ தொருபளிதோமென் / றேவல் சிலைமன்ன வெண்ணி யுணர்நீ. தேசமிலைச்சரிற் சேர்வுடையாரவர் / மாசின் மனிதர் வடிவின ராயினுங்
கூசின்மனத்தர் கொடுந்தொழில் வாழ்க்கையர் / நீச ரவரை நீறினிழிப்பாம்.
- 2:26: டிசம்பர் 9, 1908 -
மிலைச்சரென்றும், மிலேச்சரென்றும் வழங்கி வந்தக் கூட்டத்தார் சீவனோபாயத்திற்காய் சில மித்திரபேதங்களைச் செய்து கொண்டு சீவகனிடஞ் சென்றபோது இவர்களது கொடுஞ் செயற்களை அறிந்த சீவகன் சீறிச் சினந்து துறத்தியிருக்கின்றான்.
சீவகசிந்தாமணி
செங்கட் புன்மயிர்த்தோல் திரைச்செம்முகஷ / வெங்கணோக்கிற்குப் பாக மிலேச்சனை செங்கட் விழியாற் றெறித்தான்கையா / ளங்கட்போது பிசைந்தடு கூற்றனான்.
இவ்வகையாய் மிலேச்சரென்றும், மிலைச்சரென்றும், ஆரியரென்றும் வழங்கிவந்த கூட்டத்தார் நாளுக்குநாள் வடயிந்தியா, தென்னிந்தியா எங்கும் பரவிவந்த காலத்தில் பௌத்த சங்கத்தோர் வாழும் இந்திரவியாரங்களில் தங்கியிருந்த சமணமுனிவர்கள் இயற்றியுள்ள கலைநூற்களில் மக்கட்பெயர்களுடன் இவர்கள் பெயரையும் கண்டிருக்கின்றார்கள்.
முன்கலை திவாகரம்
மிலைச்சர் பெயர் - மிலேச்ச ராரியர்.
பின்கலை நிகண்டு
மிலைச்சர்பே ராரியற்கா மிலேச்சரென்று ரைக்கலாமே.
ஆரியரென்றால் சிறந்தவர்கள் என்றும் மேன் மக்கள் என்றும், அந்தணர்கள் என்றும், பௌத்த சாஸ்திரங்களில் கூறியிருக்க இத்தமிழ் நூற்களில் ஆரியரென்னும் மொழிக்கு மிலேச்சர் என்னும் பொருளை எவ்வகையால் கூறக்கூடும் என்பாரும் உண்டு.
பிராக்கிருத பாஷையாகும் பாலியினின்று வடமொழியுந் தென்மொழியுந் தோன்றியுள்ளதினால் பெரும்பாலும் பௌத்தன்ம சாஸ்திரங்களில் பாலிமொழிகளையே தழுவிவருதலுண்டு.
அவற்றுள் அரிய அஷ்டங்க மார்க்கமென்றும், அரிய அரசர்கள் என்றும், அரிய அந்தணர்கள் என்றும், அரிய தன்மமென்றும் கூறியுள்ளார்களன்றி ஆரிய அஷ்டாங்க மார்க்கமென்றும், ஆரிய அரசர்கள் என்றும், ஆரிய அந்தணர்கள் என்றும், ஆரியதன்மமென்றும் கூறினார்களில்லை.
அதனினும் பாலிபாஷையில் தேவவென்னும் இத்திசித்தும், பிரமமென்னும் அதிசேனாசித்தும், அரியவென்னும் அநுசாசனிசித்தும் கூறியுள்ளவற்றுள் இம்மூன்றுக்கும் பொதுப் பெயர் பத்தி அரியாஸ் என்று மூன்றுவகை சிறந்த சித்துக்களுக்கும் பொதுப்பெயர் அரியரென்றே கூறியிருக்கின்றார்கள். இவற்றை தீக்கநிக்காயாவின் உட்பிரிவு சங்கித்தசுத்தாவிற் காணலாம்.
ஆதலின் பௌத்த நூற்கள் யாவற்றிலும் அரிய என்னும் மொழியை வழங்கிவந்திருக்கின்றார்களன்றி ஆரியவென்னும் மொழி வழங்கியதில்லை.
மற்றும் பௌத்தநூல் சுத்தனியாதாவின் உட்பிரிவு சப்பியசுத்தாவில் மண், பெண், பொன்னென்னும் மூவாசைகளையுந் தவிர்த்து பிறவியை ஜெயித்த மகாஞானி எவனோ அவனை அரியனென்றும், சிறந்தோனென்றும் வரையப்பட்டிருக்கின்றது.
மற்றும் சுத்தனிபாதா அதனுட்பிரிவு அத்த கவர்க்கா சுத்தகசுத்தாவில் அரியமாக்கா அதாவது பிணி, மூப்பை ஜெயித்தலே அரியமார்க்கமென்றும் வரைந்துள்ளார்கள்.
பாலிசுத்தம்
ஸத்தனு பஸிதி பக்கதிஞான / திஷடியி பாப ததாவநானம்.
சுத்த
அறிய அட்டாங்கிக் கோமாக்கா / நிர்புத்தி ஷர்மா காமீனோ
பத்தியனிபாதா.
சுத்த
நிஸ்ஸோ விஹா ரோ / நெய்பா விஹா ரோ
பிரஹமா விஹா ரோ / அரியா விஹா ரோ.
இத்தியாதி பௌத்த சூத்திரங்களிலும், அரியவென்னும் மொழியை சிறந்த நிலைகளில் குறிப்பிட்டிருக்கின்றார்களன்றி ஆரியவென்னும் மொழி கிடையாது.
ஆதலின் பெளத்தர்கள் எழுதியுள்ள கலைநூற்களில் அரிய வென்னு மொழிக்கு சிறந்த, சிரேஷ்டவென்னும் பொருளும், ஆரியரென்னு மொழிக்கு மிலைச்சர், மிலேச்சரென்னும் பொருளுங் குறித்திருக்கின்றார்கள்.
ஈதன்றி தம்மபாதா வென்னும் நூலில் தன்மமார்க்க நீதியில் நின்று ஆனந்தத்துடன் சாந்தமன அமைதி பெற்றவரெவரோ அவரே அரியர், நித்தியர், போதித்த நீதியில் ஆனந்தத்துடன் இருப்பர். பண்டிதாவென்று புத்தபிரானுக்குரிய நற்செயல் பெருக்கப்பெயராகவும், விவேகவிருத்தியின் பெயராகவும் குறித்திருக்கின்றார்கள்.
அப்பாலிமொழியை தற்காலம் இங்கிலீஷ்பாஷையில் அரியவென்றும், ஆரியவென்றும் சப்தபேதமின்றி வழங்கிவருகிறபடியால் பொருள் பேதப்பட்டிருக்கின்றது.
அரியரென்பது சிறந்தோரென்றும் ஆரியரென்பது மிலேச்சர்களென்றுங் கூறத்தகும். குமானிடர்தேசத்தில் தங்கியிருந்த மிலேச்சர்கள் இந்துதேசமெங்கும் பரவி யாசகசீவனத்தால் சீவித்து வந்தவர்கள் நாளுக்குநாள் இத்தேசத்தோர் புத்தமார்க்கத்தைத் தழுவி ஒற்றுமெயிலும், ஒழுக்கத்திலும் சுகம் பெற்று ஆந்தர், கன்னட, மராஷ்டக, திராவிடமென்னும் பாஷை பேதங்களன்றி மற்றுமோர் பேதங்களில்லாமல் வாழ்ந்துவருவதுடன் அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளர்களும், இந்திர வியாரங்களாகும் புத்தமடங்களிற்றங்கிய அறஹத்துக்களென்னும் அந்தணர்களையே பயபக்த்தியுடன் வணங்குவதையும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைப் புரிவதையும் பார்த்துவந்தார்கள்.
- 2:27, டிசம்பர் 16. 1908 -
அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் நால்வரின் தொழில் விவரம்
முன்கலை திவாகரம்
அந்தண ரறுதொழில்
ஒத லோதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் / யீத வேற்றவென் றிரு மூவகை
ஆதிகாலத் தந்தண ரறுதொழில்.
அரசரறுதொழில்
அரசரறு தொழிலோதல் வேட்டல் / புரைதீரப் பெரும்பார்ப் புரத்தவீதல்
கரையாறு படைக்கலங்கற்றல் விசயம்.
வணிகரறுதொழில்
வணிகரறுதொழில் ஒதல் வேட்டல் / யீத லுழவு பசுக்காத்தல் வாணிபம்
வேளாளரறு தொழிலுழவு பகக்கால
ரெள்ளிதின் வாணிபங்குயிலுவங்காருகவினை.
யொள்ளிய லிருபிறப்பாளர்க் கேவற்செயல்.
ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டக சாதி, திராவிடசாதியென்னும் நான்கு பாஷையை சாதிக்குங் கூட்டத்தோருள் அந்தந்த அறுவகைத் தொழில்களை எவ்வெவர் சரிவர சாதிக்கின்றார்களோ அவரவர் தொழிலையும், விவேகமிகுதியையும் கண்டு அந்தணரென்றும், அரசரென்றும், வணிகரென்றும், வேளாளரென்றும் அழைத்து வந்தார்கள்.
இத்தகைய நான்கு வகுப்பிற்கும் ஆதியாய் அறநெறியாம் மறையருளி ஆதியந்தணரென்று அழைக்கப் பெற்றவரும்,
சக்கிரவர்த்தித் திருமகனாகத் தோன்றி சந்திரபிறை முடியணிந்த இனிய தமிழ்மொழி ஈய்ந்து மன்னும் இறைகொண்டு இறையவனென்று அழைக்கப் பெற்றவரும்,
நவமணிகளாம் இரத்தினவர்க்கங்களையும், பவழம் முத்து முதலியவைகளையும், நவதானியங்களையும் விளக்கி ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை மாறிக்கொள்ளும் வகைகளை விளக்கி வணிகரென்று அழைக்கப்பெற்றவரும்,
பூமியை சீர்திருத்தி நஞ்சை, புன்செய் என்னும் தானியபேதங்களை விளக்கி அதனதன் விளைவு காலங்களையும் வகுத்து அதன் விளைவுகளுக்கும், விருத்திகளுக்கும் உங்கள் உள்ளத்தில் எழும் அன்பும், ஈகையுமே காரணமென்றும் விளக்கியச் செயலால் வேளாளருக்குத் தலைவன் என்று அழைக்கப்பெற்றவரும் புத்தபிரானேயாகும்.
இவைகள் யாவும் தொழிலைப் பற்றிவந்தப் பெயர்களாதலின் அத்தொழில்களின் விருத்தியை விளக்கிக்காட்டிய வேதமுதல்வனுக்கே அந்நான்கு பெயரையும் அளித்துள்ளார்கள்.
மூன்றழல் நான்மறை முநிவறத்தோய்த்து / மறைதீருகுத்தலின் மறையோனாகியும்
அந்தணநிலையும் மீனுரு கொடியும் / விரிதிலை யைந்தும் தேனுறை தமிழும்
திருவுரை கூடலும் மணத்தலின் / மதிக்குல மன்னனாகியும்
நவமணியெடுத்து நற்புலங் காட்டலின் / வளர்குறி மயங்கா வணிகனாகியும்
விழைதரு முழவும் வித்துநாறுந் / தழைதலின் வெள்ளான் தலைவனாகியும்.
அறநெறி யோதி ஆதியந்தணனா / மறை யருளித்தான் மநு.
குடியிறைக்கொண்டு குலவிறையாகி / படிதனை யாண்டான் பரன்.
நவமணியேற்று நறுநெல் வாணிபஞ்செய் / குவலய மீயந்தான் குரு.
மேழியைவிளக்கி விளைவெள்ளானென் / நாழியை யீய்ந்தா னறன்
இத்தகையத் தொழிற்கொண்டு புத்தமடங்களென்னும் இந்திர வியாரங்களில் தங்கி உபநயனம் பெற்று செல்லல், நிகழல், வருங்காலம் மூன்றினையுஞ் சொல்லும் இருபிறப்பாளனாகி மகடபாஷையில் அறஹத்தென்றும், மகட பாஷையில் பிராமணனென்றும், திராவிட பாஷையில் அந்தணரென்றும் அழைக்கப்பெற்ற சங்கத்து (மகாஞானிகளைக் கண்டவுடன் அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளர்களும் மிக்க பயபக்த்தியுடன் வணங்கி அவர்களுக்கு வேண்டியவைகளைக் கொடுத்து ஆசீர்பெற்றுவந்தார்கள். இவ்வகைக் குடிகளால் புத்தமடங்களிற்றங்கியுள்ள மகாஞானிகளாகும் அந்தணர்களுக்குள்ள சிறப்பையும், அரசர் முதல் சகல குடிகளும் அவர்களுக்கு அடங்கி ஒடிங்கிநிற்கும் அன்பையும் நாளுக்குநாள் பார்த்துவந்த மிலைச்சர்கள் இவ்வேஷத்தால்தான் நாம் சீர்பெற வேண்டுமென்றாலோசித்தார்கள்.
வடயிந்தியாவில் சாக்கையர் வியாரம், சாக்கையர் தோப்பென்றும், தென்னிந்தியாவில் இந்திரவியாரம், இந்திரவனமென்றும் வழங்கிவந்த கூடங்களில்
வசிக்கும் புத்தசங்கத்தோர் வடநாடெங்கும் பாலிபாஷையையும், தென்னாடு எங்கும் சமஸ்கிருதமும் தமிழ் பாஷையையும் வழங்கிவந்தார்கள்.
அவற்றுள் மிலேச்சர்களோ எனில் தமிழ் பாஷையை சரிவரப் பேசுதற்கில்லாமல் கற்று கொண்டபோதிலும் சமஸ்கிருத பாஷையையும் அதனதன் சுலோகங்களையும் நாளுக்குநாள் கற்று புத்தசங்கத்து புருஷர் மடங்களில் புருஷர்களும், இஸ்திரீகள் மடங்களில் இஸ்திரீகளுஞ் சேர்ந்து விசாரிணைகளில் இருந்தபோதிலும் ஆரியக் கூத்தாடினாலுங் காரியத்தின் பேரில் கண்ணென்னும் முதுமொழிக்கு இணங்கத் தங்கள் நாணமற்ற மிலேச்சகுணம் மாறாது இஸ்திரீகள் விபச்சாரத் தொழிலிலும், புருஷர்கள் பணவாசைப் பெருக்கிலும் மாறாமலிருந்தார்கள்.
- 2:28; டிசம்பர் 23, 1908 -
வேஷபார்ப்பான் வேஷ பார்ப்பினி விவரம்
மணிமேகலை
பார்ப்பினிசாலி காப்புக்கடைகழித்து / கொண்டோர் பிழைத்த கண்டமஞ்சித்
தென்றிசை குமரி யாடிய வருவோன் / சூன்முதிருய்க்க துஞ்சியருள்யாமத்
தீன்றகுழவிக் கீன்றாளாகி / தோன்றாதொடைவயி னிட்டனநீங்க
புரிநூன் மார்பீர் பொய்யுரையாமோ / சாலிக்குண்டோ நவரெனவுரைத்து
நான்மறை மாக்களை நகுவணநிற்ப / வோதவந்தணர்க் கொவ்வாவென்றே
தாதைபூதியந் தன்மனைகடிதர / வாங்கவர் கள்வனென் றந்தணருறைதருங் கிராமமெங்கணுங் கடிஞையிற் கல்லிட / மிக்கசெல்வத்து விளங்கியோம் வாழுந்
தக்கணமதுரைதான் சென்றெய்தி.
இச்செய்யுள் பேதபாடம், பாகுபலி நாயனார் ஏட்டுப்பிரிதியிலும், மார்க்கலிங்கப் பண்டாரம் ஏட்டுப்பிரிதியிலும், பார்ப்பினி சீலி என்றும் சீலிக்குண்டோ தவரென்றும் வரைந்து வைத்திருக்கின்றார்கள்.
அஃது எவ்வகைப் பாடபேதமாகினுமாகுக. பாலிபாஷையில் புருஷமடங்களில் உள்ளோரை பிக்குகள் என்றும், இஸ்திரீமடங்களில் உள்ளோர்களை பிக்குணிகள் என்றும் திராவிட பாஷையில் புருடமடங்களில் உள்ளோர்களை பார்ப்பார்கள், சீலர்கள் என்றும், இஸ்திரீமடங்களில் உள்ளோர்களை பார்ப்பினிகள், சீலிகள் என்றும் வழங்கி வந்தவற்றுள் மிலைச்சப் புருஷர்களும் மிலைச்சஸ்திரீகளும் மடங்களுட் சேர்ந்தவர்களில் ஓர் பார்ப்பினி தங்கள் நாணமற்றச் செய்கையால் கள்ள புருஷனைச் சேர்ந்து கர்ப்பமுண்டாகி அதை மறைப்பதற்குத் தீர்த்தயாத்திரைப் போவதாகச் சொல்லி வெளியேறி சிலதினத்துள் யீன்ற குழவியை இதக்கமின்றி காட்டில் போட்டுவிட்டு ஒன்றுமறியாதவள் போல் வந்துசேர்ந்தும் அப்பிள்ளை மற்றொருவன் எடுத்து வளர்த்து வருங்கால் பார்ப்பினி தவருள்ளவளென்றும், அப்பிள்ளையும் களவுபிள்ளையாம் புலைச்சி மகனென்றும், மிலைச்சி மகனென்றும் அறிந்த பௌத்தர்கள் அவர்கள் மீது கல்லெறிந்து கிராமத்தைவிட்டு நீக்கதென்மதுரைப்போய் சேர்ந்துவிட்டார்கள்.
அதுபோல் புருஷர் மடங்களில் சேர்ந்திருந்த பார்ப்பார்களும் பொருளாசைவிடாது களவாடுவதை உணர்ந்து அவர்களையுந் துறத்தி சிறையில் இட்டுக்கொண்டு வந்தார்கள்.
சிலப்பதிகாரம்
வார்த்திகன்றன்னைக் காத்தனரோம்பி / கோத்தொழி லிளையவர் கோமுறையின்றிப் படுபொருள் வவ்வும் பார்ப்பா னிவனென / விடுசிறைக்கோட்டத் திட்டனராக.
இத்தகையாய் மிலைச்சர்களின் நாணாச்செயல்களை நாளுக்குநாள் அறிந்துவந்த திராவிடபௌத்தாள் இவர்களைச் சங்கங்களில் சேர்க்காமல் துறத்திவிட்டதின்பேரில் மிலைச்சக் கூட்டத்தோர் யாவரும் ஒன்றுகூடிக் கொண்டு வடமொழி சுலோகங்களில் சிலவற்றையும் கணிதங்களில் சிலவற்றையும் கற்று வடநாட்டில் உள்ளக் கல்வியற்றக் குடிகளுக்குத் தங்களை பிராமணர்கள் என்றும், தென்னாட்டில் உள்ளக் கல்வியற்றக் குடிகளுக்குத் தங்களை அந்தணர்கள் என்றுஞ் சொல்லி வஞ்சித்தும் பொருள் பறித்து தின்று
வந்ததுமன்றி ஒடிங்கிப் பிச்சையேற்றுத் தின்றுவந்தவர்கள் அதிகாரப்பிச்சையில் ஆரம்பித்துக் கொண்டார்கள்.
மடங்களைச் சார்ந்த பிராமணர்களாகும் ஞான குருக்களும், சாக்கையர். வள்ளுவர், நிமித்தகர் என்னும் கன்மகுருக்களும், பாணர், கவிவாணரென்னும் வித்தியா குருக்களுமாகிய இவர்கள் கலை நூற்கள் யாவற்றிலும் தேர்ச்சியுள்ளவர்களாய் இருந்தார்கள்.
மற்றப் பெருந்தொகைக்குடிகளும் சிற்றரசர்களும் கலை நூற் பழக்கமின்றி கைத்தொழிலிலும், வியாபாரத்திலும், வேளாண்மெய்த் தொழிலிலும் மிக்க விருத்திபெற்றவர்களா இருந்தார்கள்.
அத்தகையக் கல்விக்குறைவால் மிலைச்சர்களின் மித்திரபேதம் அறியாது அவர்களையே அந்தணரென்றும், பிராமணரென்றும் எண்ணி அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்துவந்ததுமன்றி அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளருக்கும் கன்மகுருக்களா இருந்து தன்மகன்மங்களை நிறைவேற்றிவந்த வள்ளுவர், சாக்கையர், நிமித்தகர்கள் என்போர் தொழிலையும் அவர்களையே செய்யும்படி விட்டுவிட்டார்கள்.
வேஷபிராமணர்கள் தோன்றிய காலம் ஆதியந்தணர்கள் என்று கூறும் அறஹத்துக்கள் யாவரும் ஓடுகள் கையிலேந்தி பிச்சையேற்று உண்ண வேண்டியதுடன் தங்கட் கைகளில் பொக்கிஷங்களையேனும், வஸ்திரங்களை ஏனும் நாளைக்கு மறுநாளைக்கென்று சேர்த்துவைக்கலாகாதென்பது புத்தசங்கத்தோர் நிபந்தனையாகும்.
இவ்வேஷபிராமணர்களோ பொருளாசை மிகுந்தோர்களாதலின் தங்களுக்குத் தங்கள் குடும்பத்தோருக்கும் புசிப்புக்கும் வேண்டுமென்னும் ஆதரவுக்காய் பூமிகளை மானியமாகப்பெற்றுக் கொண்டுள்ள காலம் கிறீஸ்துப்பிறந்து நான்காம் நூற்றாண்டுகளுக்குப்பின்பே ஏற்பட்டுள்ளதாய் சிலாசாஸனங்களிலுள்ள ஆதாரங்களைக் கொண்டு பிரோபசர் பந்தார்க்கர் இந்திய சரித்திரத்தில் வரைந்திருக்கின்றார்.
- 2:29; டிசம்பர் 30, 1908 -
மிலைச்சர் ஆரியரென்ற கூட்டத்தார் வேஷபிராமண விருத்தி பெற்ற விவரம்
ஆயிரத்தி ஐந்நூறு வருடத்திற்குட்பட்ட இந்திரர் தேசமென்னும் இவ் விந்தியாவில் வந்து குடியேறிய மிலைச்சர்கள் நாளுக்குநாள் கல்வியற்ற சிற்றரசர்களையும், பெருங்குடிகளையுந் தங்கள் வசப்படுத்திக் கொண்டு அந்தணர், அரசர், வணிகர், வேளாளரென்ற தொழிற் பெயர்களை மேற்சாதி கீழ்ச்சாதி என்னும் சாதிப்பெயர்களாக மாற்றி கல்வியற்றோர் வாக்கால் வழங்கும் பாதையில் விட்டு வடநாட்டில் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரரென்னும் நான்கு தொழிற்பிரிவோருள் ஒவ்வொருவருக்கென்று வகுத்துள்ள அறுவகைத் தொழிலையுஞ் சரிவரச்செய்து வருபவர்களை சண் ஆளர் சண்ணாளரென சிறப்பித்து வழங்கிவந்தார்கள்.
வடநாட்டு பௌத்தர்கள் மிக்கக் கல்வியில் தேர்ந்தவர்களாயிருந்தபடியால் இம்மிலைச்சரின் வேஷபிராமணச் செய்கைகளை அறிந்து அடித்துத் துறத்த ஆரம்பித்துக் கொண்டார்கள்.
அதை தங்கள் வஞ்சநெஞ்சத்தில் பதித்துக் கொண்டு தங்கள் வேஷபிராமணத்தை அறிந்து துரத்தும் அறுதொழிலாளரை சண் ஆளர் சண்டாளரென்று கூறிவந்து தங்களை அடுத்தக் கல்வியற்ற சிற்றரசர்களுக்கும், பெருங்குடிகளுக்கும் சண்டாளர்கள் என்றால் ஓர்வகைத் தாழ்ந்த சாதியார், நீங்கள் அவர்களைத் தீண்டலாகாது நெருங்கிப் பேசலாகாதென்று கற்பித்துவந்தார்கள். இவர்கள் கற்பனைகளை மெய்யென்று நம்புங் கல்வியற்றக் குடிகள் சண் ஆளராம் மேன்மக்கள் வார்த்தைகளை நம்பாமல் கீழ்மக்களாம் மிலைச்சர்களின் வார்த்தைகளை நம்பிக்கொண்டு சண் ஆளரென்னும் சிறப்புமொழியை குணசந்தியால் சண்டாளர் சண்டாளரென்றும் இழிந்த குலத்தோரென்றும் வழங்கிவந்தார்கள்.
சண்முகமென்பது அறுமுகத்தையும் சண்மதமென்பது அறு சமயத்தையும் குறிப்பதுபோல் சண் ஆளமென்பது அறுவகைத் தொழிலைக் குறிப்பதாகும்.
மேன்மக்களாம் சண் ஆளர்களை சண்டாளர்களென்று இழிவுபடக் கூறிவருங்கால் விவேகிகளால் அவற்றைக் கண்டித்து பாலிபாஷையில் எழுதியுள்ள வசலசூத்திரம் :
கோபமுள்ளோனும், வஞ்சகனும், தப்பபிப்பிராயங்கொண்டவனும், பேதைகளை ஏமாற்றுபவனுமாய் உள்ளவன் எவனோ அவனே சண்டாளன்.
சீவயிம்சைகளைச் செய்வோனும், சீவர்கள் பேரில் அன்பில்லாதவன் எவனோ அவனே சண்டாளன்.
எவனொருவன் பட்டினங்களையும், கிராமங்களையும் கொள்ளையடித்து துன்பம் விளைவிக்கின்றானோ அவனே சண்டாளன்.
எவனொருவன் கிராமத்திலோ, காட்டிலோ, எவ்விடத்தும் தனதல்லாத ஏனையோர் பொருளை அபகரிக்கின்றானோ அவனே சண்டாளன்.
எவனொருவன் கடன் வாங்கி கேட்டபோது இல்லையென்று மறுதலிக்கின்றானோ அவனே சண்டாளன்.
சிறுபொருட்களின்பேரில் ஆசைவைத்து வழிபோக்கனைக் கொலைச் செய்து அப்பொருளை அபகரிப்பவன் எவனோ அவனே சண்டாளன்.
எவனொருவன் தனக்காகவேனும், ஏனையோர்க்காகவேனும் பொய்சாட்சி சொல்லுகின்றானோ அவனே சண்டாளன்.
என்றும் இருபது கீதைகளால் மிலைச்சராம் ஆரியர்களின் செயல்களாகும் பொல்லாங்கென்பவை யாவையுமே சண்டாளமென்று கூறி அன்னூலுக்கு வசலசூத்திரமென்னும் பெயரும் கொடுத்து விவேகிகளால் அவற்றைக் கண்டித்தும் வந்தார்கள்.
தென்னாட்டு திராவிட பௌத்தர்களை தீயரென்றும், பறையரென்றுந் தாழ்த்திய விவரம்
மிலைச்சராம் ஆரியர்கள் அரசர்களையும், பெருங்குடிகளையும் வயப்படுத்திக் கொண்டு இந்திர வியாரங்களைப் பற்றிக்கொண்டும், சங்கத்தோர்களை பலவகைத் துன்பஞ்செய்து ஓட்டியும், தன்மங்களை மாறுபடுத்திக் கொண்டும் வருங்கால் கலை நூல் வல்ல சங்கத்தோர்களுக்கும், கணிதவல்ல சாக்கையர், வள்ளுவர்களுக்கும், வித்துவ வல்லபாணர்களுக்கும் மனத்தாங்கலுண்டாகி இம்மிலைச்சர்களாம் ஆரியர்களை கிராமங்களுக்குள் வரவிடாமல் துரத்தியும் அவர்கள் அடிவைத்தயிடங்களிலெல்லாம் சாணத்தைக் கரைத்துத் தெளித்து அச்சட்டியையும் அவர்கள் ஓடிப்போன வழியில் உடைத்தும் வருவது வழக்கமாயிருந்தது.
இவ்வகையால் விவேகமிகுத்த சமணர்களும், சாக்கையர், வள்ளுவர்களும், பாணர்களுமாகிய திராவிடபௌத்தர்கள் யாவரும் வேஷபிராமணர்கட்டுக்குள் அடங்காமல் பராயர்களாகவேயிருந்துக் கொண்டு, மிலைச்சராம் ஆரியர்களின் வஞ்சகச் செய்கைகளைப் பறைந்துகொண்டே வந்தபடியால் மலையாளுவாசிகளாகுங் கொடுந்தமிழ் பௌத்தர்களை தீயர் தீயர்களென்றும், செந்தமிழ் பௌத்தர்களை பறையர் பறையர்களென்றும் வகுத்து வழங்கிவந்தவற்றுள் திராவிடபௌத்தர்களை மிலைச்சராம் ஆரியர்கள் கண்டவுடன் அவர்களடிக்கும் சாண நீருக்கு பயந்து ஓடுவது வழக்கமாயிருந்தது. அச்சமயம் இவர்களைக் கண்டோர்கள் அவர்களைக்கண்டு ஏன் ஓடுகிறீர்கள் என்றால் அவர்கள் தீயர்கள், பறையர்கள், தாழ்ந்த சாதியார் அவர்களைத் தீண்டலாகாது என்று சொல்லிக் கொண்டே ஓடிப்போவது மிலைச்சர்களின் வழக்கமாயிருந்தது.
- 2:30; சனவரி 6, 1909 -
இத்தேசக் குடிகளாகும் ஆந்திர கன்னட மராஷ்டக திராவிடர்களும் பிராமணவேஷம் ஆரம்பித்துக்கொண்ட விவரம்
இவ்வகையாக இன்னுஞ் சிலகாலம் மிலைச்சர்களை திராவிட பௌத்தர்கள் துறத்திக் கொண்டே வந்திருப்பார்களாயின் கல்வியற்ற சிற்றரசர்களும் பெருங்குடிகளும், மிலைச்சர்களின் வேஷபிராமணச் செயல்களை அறிந்துக் கொள்ளுவதுடன் விவேகமற்றவர்களுக்கு யதார்த்த பிராமணர்களின் செயல்களும் விளங்கிக்கொண்டே வரும்.
இதன் மத்தியில் இத்தேசக்குடிகளாகும் ஆந்திர, கன்னட, மராஷ்டக, திராவிடர்களுக்குட் சிலர் மிலைச்சர்கள் வேஷபிராமணச் செயல்களால் பெண்சாதிப் பிள்ளைகளுடன் சுகமாக வாழ்ந்து வருவதையும், சிற்றரசர்களும், பெருங்குடிகளும் அவர்களுக்கு வேண்டிய உபகாரங்களைச் செய்துவருதலையும் நாளுக்குநாள் பார்த்துவந்தவர்கள் இதுவே தந்திரமான சுகசீவனமென்று இவர்களும் பிராமண வேஷம் எடுத்துக் கொண்டார்கள்.
இவ்வகையாக மிலைச்சராம் ஆரியருடன் இத்தேச பலபாஷைக் குடிகளும் பிராமண வேஷமெடுத்துக் கொண்டபடியால் ஒருவருக்கொருவர் தங்கள் தங்கள் வேஷங்களை வெளிவிடாமல் உள்ளுக்குள் விரோதத்தை வைத்துக்கொண்டு பிராமணரென்னும் பொதுப்பெயரை வைத்துக் கொண்டாலும் ஒருவர் பெண்ணை ஒருவர் விவாகஞ் செய்துக்கொள்ளாமலும், ஒருவர் வீட்டில் ஒருவர் புசிப்பெடுக்காமலும், நீங்கள் எப்படி பிராமணரானீர்கள் என்றால் தாங்களெப்படி பிராமணரானீர்கள் என்னும் கேழ்விபிறக்குமென்று உள்ளுக்குள் விரோதசிந்தை இருந்தபோதிலும் வெளிக்குக்காட்டிக் கொள்ளாது எல்லோரும் கூடிக்கொண்டு சிற்றரசர்களையும், பெருங் குடிகளையும் தங்களுக்கடங்கியும் தங்களை தொழுதும் வரும் ஏதுக்களை செய்துவிட்டு விவேகமிகுதியால் சகல வேஷபிராமணர்களின் விவரங்களையும் வெளிக்குப் பறைந்துவந்த சமணமுனிவர்களையும், கணிதவல்லவர்களாகும் சாக்கையர் வள்ளுவர்களையும், வித்தியா வல்லவர்களாகும் பாணர்களையும், தீயரென்றும், பறையரென்றுந் தாழ்ந்த சாதிகள் என்றுகூறி மிலைச்ச வேஷபிராமணர்களும், இத்தேச வேஷபிராமணர்களும் ஒன்றுகூடிக்கொண்டு தங்களைச்சார்ந்த கல்வியற்ற சிற்றரசர்களாலும், பெருங்குடிகளாலும் அவமதிக்கச்செய்து வந்தார்கள்.
விவேகிகளை விரோதச்சிந்தையால் தீயரென்று கூறிவந்தபோது சமணமுநிவர்கள் மேலோரின்னாரென்றும் கீழோரின்னாரென்றும் விளக்கிய விவரம்.
பின்கலை நிகண்டு - மேன்மக்கள் பெயர்
சான்றவர் மிக்கோர் நல்லோர் / தகுதியோர் மேலோராய்ந்தோர்
ஆன்றவ ருலகமேதா / வியரறிஞர்கள் பேராசான்.
கீழ்மக்கள் பெயர்
பொறியிலார் கயவர் நீசர் / புள்ளுவர் புல்லர் தீயோர்
சிறியசிந்தையர் கனிட்டர் / தீக்குணர் தீம்பர் தேரார்
முறையிலார் முசுடர் மூர்க்கர் / மூகை பல்லவரே யாவர்
மறையிலாக் கலர்மூவாறு / வின்னவா ரியருங் கீழோர்.
மிலைச்சர்கள் மித்திரபேதமாங் கொடுஞ் செயல்களை அறிந்து தீயோரை அணுகா திருக்கவேண்டுமென்று கூறியச்செய்யுள்.
மூதுரை
தீயோரைக் காண்பதுவும் தீதேதிருவற்ற / தீயாச்சொற் கேட்பதுவும் தீது - தீயோர்
குணங்களுரைப்பதுவுந் தீது அவரோ / டிணங்கியிருப்பதுவும் தீது.
மேன்மக்களாகும் திராவிடபௌத்தர்களைத் தீயரென்றும், பறையரென்றும்
கூறி வேஷபிராமணர்கள் தங்களை உயர்ந்தசாதியென்றும் திராவிட பௌத்தர்களை தாழ்ந்தசாதி என்றும் வகுத்து வழங்கிவந்த காலத்தில் மேன்மக்கள் மிலைச்சர்களைக் கண்டித்தெழுதிய பாடல்கள்.
சிவவாக்கியர்
சாதியாவதேதடா சலந்திரண்ட நீரலோ
பூதிவாசமொன்றலோ பூதமைந்து மொன்றலோ
வேதுவேதகீதமும் ஊணுரக்க மொன்றலோ
சாதியாவதென்பதேது சாவுவாழ்வு திண்ணமே.
பறைச்சியாவதேதடா பாணத்தியாவதேதடா
யிறைச்சிதோலெலும்பிலே யிலக்கமிட்டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பாணத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பாணத்தியும் பரிந்து பாருமும் முளே
அவிரோதவுந்தியார்
அறுவகை சமயத்தரையு மெய்ப்பொருளு / மறுப்பத்து நாலுதற்கலையு
மறுவறப்பயின்று மாசறத்திகழு / மதிஞரா மவர்களே யெனினுங்
குறைவறத் தன்னைக்கொடுத்திடுங் குரவன் / குறைகழல் புனைந்தவரன்றேல்
பறையர் மற்றவரை பறையரே யெனினும் / அருளுடையவர் பரம்பரரே.
திருவாசகம்
வேதமொழியர் வெண்ணீற்றர் செம்மேனியர் / நாதப்பறையனர் என்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கு / நாதரின் னாதனா ரன்னே என்னும்.
- 2:31; சனவரி 13, 1909 -
சாதித்தலைவர்கள் பறையரென்னும் மொழியை பரவச்செய்த விவரம்
மிலைச்சர்கள் தங்களை உயர்ந்தசாதி பிராமணர்கள் என்றும், திராவிட பௌத்தர்களைத் தாழ்ந்தசாதி பறையர்கள் என்றும் கூறிவந்தவற்றுள் தாழ்ந்தசாதிகள் என்னும் மொழியையும், பறையரென்னும் மொழியையுந் திராவிட பௌத்தர்கள் கண்டித்துவந்தபடியால் இப்பறையன் என்னும் மொழியை எவ்விதத்தும் பரவச்செய்து இவர்களைப் பாழ்படுத்திவிட்டால்தான் புத்தமார்க்கமும் நசிந்துபோகும், நம்முடைய பிராமண வேஷங்களும் நிலைத்து சுகமடையலாம் என்று எண்ணி மிலைச்ச வேஷப்பிராமணர்களும், இத்தேச வேஷ பிராமணர்களும் ஒன்றுகூடிக் கொண்டு தங்களைச்சார்ந்த குடிகளுக்கும், சிற்றரசர்களுக்கும், கறுப்பாக இருக்கும் பருந்தைப் பறைப் பருந்தென்றும், வெண்மெயாயிருக்கும் பருந்தைப் பாப்பாரப் பருந்தென்றும், கறுப்பாயிருக்கும் மயினாவைப் பறை மயினாவென்றும் வெண்மெயாயிருக்கும் மயினாவை பாப்பார மயினாவென்றும், கறுப்பாயிருக்கும் பாம்பை பறைப்பாம்பு என்றும், வெண்மெயாய் இருக்கும் பாம்பைப் பாப்பாரப் பாம்பென்றும் சொல்லிவரும்படியானக் கற்பனையில் விடுத்து பார்ப்பானென்னும் மொழியையும், பறையன் என்னும் மொழியையும் பரவச் செய்துவந்தார்கள்.
அவர்கள் கற்பித்துள்ளவாறு கறுப்பாயிருக்கும் நாயைப் பறைநாயென்றும், வெண்மெயாயிருக்கும் நாயைப் பாப்பாரநாயென்றும் வழங்கினால் அம்மொழி தங்களை இழிவுபடுத்தும் என்று கருதி பறைநாயென்னும் மொழியை மட்டிலும் பரவச் செய்து திராவிட பௌத்தர்களை இழிவு படுத்திவந்தார்கள்.
மிலைச்சர்களை அடுத்தோர்கள் யாவரும் அக்காலத்தில் கல்வியற்றோர்களாதலின் பறைப்பருந்து யாது, பாப்பாரப்பருந்து யாது, பறைமயினா யாது, பாப்பாரமயினா யாது, பறைப் பாம்பு யாது, பாப்பாரப்பாம்பு யாதென்னும் பெயர் பேதங்களும், பொருள் பேதங்களும் அறியாது அவர்களின் போதனை மேறை சொல்லிவந்தார்கள்.
இவ்வகையாகப் பறையன் என்னும் மொழியை பல சீவர்களுக்கும் அளித்துப் பரவச்செய்ததுடன் புத்தபிரான் தாதையாகவிளங்கிய வீரவாகுச் சக்கிரவர்த்தியை சுடலைகாக்கும் பறையன் என்று கூறி அரிச்சந்திரவிலாசம் என்னும் ஓர்க் கட்டுக்கதையைப் புராணமாகவும், விலாசமாகவும் எழுதி அதினாலும் பறையென்னும் பெயரைப் பரவச் செய்தார்கள்.
அதற்காதரவாக பெளத்தமார்க்க நந்தனென்னும் அரசனை நந்தனென்னும் பறையன் என்று கூறி நந்தன் சரித்திரமென்றோர் கட்டுக்கதையும், நந்தன் சரித்திர கீர்த்தனமென்றோர் கட்டுக்கதையும் எழுதி அதன்மூலமாகவும் பறையன் என்னும் பெயரைப் பரவச்செய்தார்கள்.
சீவசெந்துக்களின் மூலமாகவும், புராணங்களின் மூலமாகவும், கீர்த்தனைகளின் மூலமாகவும் பறையன் என்னும் பெயரைப் பரவச் செய்ததுமன்றி ரெவரெண்டு ஜெபி. ராட்ளரென்னுந்துரை அகராதி ஒன்று எழுதிய காலத்தில் அவருக்கு எழுத்துதவியோராயிருந்தவர்கள் 1. வள்ளுவப்பறை, 2. தாதப் பறை, 3. தங்கலான் பறை, 4. துற்சாலிப்பறை, 5. குழிப் பறை, 6. தீப்பறை, 7. முரசப்பறை, 8, அம்புப்பறை, 9. வடுகப்பறை, 10. ஆலியப் பறை, 11. வழிப்பறை, 12. வெட்டியாரப் பறை, 13. கோலியப்பறை என்று இன்னுஞ்சில நூதனப்பெயர்களை வகுத்து அப்புத்தகத்தில் பதியவைத்து அதினாலும் பறையன் என்னும் பெயரைப் பரவச் செய்தார்கள்.
ஆனால் பாப்பார்களில் இன்னின்னப் பாப்பார்கள் என்று குறிப்பிடவில்லை. காரணம் - பிரம்மா முகத்திய குறிகள் அதிகப்பட வேண்டியதுடன் தங்களையும் இழிவுபடுத்தும் என்பதேயாம்.
திராவிடபௌத்தர்களாகும் மேன்மக்களை பறையர்கள் என்றே தாழ்த்தி பாழ்படுத்தவேண்டும் என்னும் அவர்களுக்குள்ள கெட்ட எண்ணத்தை இன்னும் அறியவேண்டுமாயின் முநிசபில் எல்லைகளுக்குள்ள வீதியின் முகப்பில் அடித்திருக்கும் பலகைகளிலுள்ளப் பெயர்களாலும் அறிந்துக் கொள்ளலாம்.
அதாவது - இப்பறையனென்னும் பெயரை பள்ளிக்கூடத்து சிறுவர்களும் ஒப்புக்கொள்ளாமல் அறுவெறுத்துவந்தபடியால் நமது கருணை தங்கிய ராஜாங்கத்தார் பறையரென்னும் பெயரை மாற்றிப் பஞ்சமரென்னும் பெயரை அளித்துக் கலாசாலைகளில் வழங்கச்செய்தார்கள்.
திராவிட பௌத்தர்களுக்கு எதிரிகளாகிய சாதித்தலைவர்கள் இவற்றை அறிந்து ஆ! ஆ! இப்பறையரென்னும் பெயரை எவ்வளவு பிரையாசையுடன் உரவச்செய்திருக்க அப்பெயரை மாற்றி பஞ்சமரென்று எழுதும்படி ஆரம்பித்துக் கொண்டார்களே, இப்பறையன் என்னும் பெயர் இனி மறைந்துபோய்விடுமே. இது மறையாமலிருப்பதற்கு யாது உபாயம் என்று கருதி மேன்மக்களாம் திராவிட பௌத்தர்கள் வாசஞ் செய்யும் வீதிகளில் எழுதி வைத்துள்ள பலகைகளில் பறைச்சேரி வீதி, பறைச்சேரி வீதி என்று நூதனமாக எழுதிப் பதிவுசெய்திருக்கின்றார்கள்.
இதன் மெய் பொய் அறியவேண்டியவர்கள் இவ்வெழிய குலத்தோர் வாசஞ்செய்யும் வீதிகளின் முகப்பில் பத்துவருஷங்களுக்கு முன்பு பலகைகளில் எழுதிவைத்திருந்த பெயர்களையும், இப்போது எழுதிவைத்திருந்த பெயர்களையும், ஒத்திட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.
இவ்வகையாக மாற்றியவற்றுள் மயிலாப்பூரைச்சார்ந்த வெங்கிடாஜலமுதலி வீதியென்று வழங்கி இக்குலத்தோர் வாசஞ்செய்துவந்த இடத்தை வெங்கிடாஜல முதலி பறைச்சேரி தெருவென்று நூதனமாக எழுதிக்கொண்டுபோய் பதித்தார்கள். அவ்விடமிருந்த விவேகிகள் அவற்றை முநிசபில் பிரசிடெண்டுக்கெழுதி தடுத்து முன்போலவே பதிவு செய்திருக்கின்றார்கள். தடுத்துக் கேழ்க்காதவிடங்களில் நூதனமாக பறைச்சேரித் தெருவென்றே முன்பு அப்பலகைகளில் இல்லா நூதன பெயரை வேண்டும் என்று பதிவு செய்துவைத்திருக்கின்றார்கள்.
- 2:32; சனவரி 20, 1909 -
வள்ளுவர்களை முதற்பறையர்களாகச் சேர்த்த விவரம்
சாக்கையர் வள்ளுவரென்று அழைக்கப்பெற்ற கணிதசாஸ்திர மேன்மக்கள் அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளருக்கும் கர்ம்ம குருக்களாயிருந்து அரசர் முதலியவர்களுக்குள்ள விவாக கன்மாதிகளையும், மரண கன்மாதிகளையும், புத்ததன்ம ஒழுக்கப்படி நிறைவேற்றிவந்தார்கள்.
முன்கலை திவாகரம்
வள்ளுவர் சாக்கியரெனும்பெயர் மன்னர்க் / குள்படு கருமத்தலைவர்க் கொக்கும்.
இத்தகைய கன்மகுருக்கள் தொழில்கள் யாவையும் வேஷபிராமணர்கள் தங்கள் மித்திரதேத்தால் அபகரித்துக் கொண்டபடியால், சாக்கையர், வள்ளுவர், நிமித்தகர் என்னும் மேன்மக்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் வேஷபிராமணர்களைக் கண்டவிண்டங்களில் எல்லாம் அடித்துத் துரத்த ஆரம்பித்துக் கொண்டார்கள். வள்ளுவர்களின் குருபட்டங்களை தாங்கள் அபகரித்துக் கொண்டு சீவிக்க ஏற்பட்டுவிட்டபடியாலும் வள்ளுவர்களாலேயே வேஷபிராமணர்கள் பெரும்பாலும் தேசத்தைவிட்டு துரத்தப்பட்டதினாலும் வஞ்சினமிகுதியால் வள்ளுவர்களை முதற்பறையர்கள் என்று வகுத்து விட்டார்கள்.
அடியிற்குறித்துள்ள பாடலால் வள்ளுவர்கள் புத்தமார்க்க அரசர்களுக்குக் கன்மகுருக்களாயிருந்தது தெளிவாக விளங்கும்.
சீவகசிந்தாமணி
பூத்தகோங்குபோல் பொன்சுமந்துளா / ராச்சியார்நலக் காசேறுணானான்
கோத்தநித்திலக் கோதைமார்பினான் / வாய்த்தவன்னிரை வள்ளுவன் சொன்னான்.
திராவிட பௌத்தர்களுக்கு சத்துருக்களாகிய பராயசாதியோர்கள் தங்களுக்குள்ள விரோதச் சிந்தையாலும், பொறாமேயாலும் ரெவரன்ட் ராட்ளர் டிக்ஷ்நெரியில் கொடுத்துள்ள பதின்மூன்று பறையன் என்னும் பெயர்கள் தமிழ் பாஷை விருத்தி கலை நூற்களாகும் திவாகரம், நிகண்டு முதலிய இலக்கிய நூற்களிலும், இலக்கண நூற்களிலும், பூர்வகாவியங்களிலும் ஒன்றிலும் கிடையாது. வேபிராமணர்களின் கட்டுக்கதை நூற்களிலுங் கிடையாது.
திராவிட பௌத்தர்களாகும் மேன் மக்களைத் தாழ்த்திப் பாழ்படுத்த வேண்டுமென்னும் கெட்ட எண்ணத்தினால் பதின்மூன்றுவகைப் பறையர்களுண்டென்று பொய்யாக வகுத்து மணிகளையும், குப்பைகளையும் ஒன்றுசேர்த்துவைத்திருக்கின்றார்கள்.
இவ்வகையாக திராவிட பௌத்தர்களாம் மேன்மக்களை பறையர்கள் என்றும், தாழ்ந்த சாதியோர் என்றும் கூறிவந்த பெயர்கள் மகமதியர்கள் ஆளுகை வரையில் கேழ்வியில்லாமல் இருந்தது, கருணையும், விவேகமும் மிகுத்த பிரிட்டிஷ் ராஜாங்கம் வந்து தோன்றியபோது இவர்களைத் தாழ்த்தி வரும் விஷயங்கள் சிலது விசாரிணைக்கு வந்ததுடன் எலீஸ்துரை அவர்களால் கணிதசாஸ்திரிகளாகும் வள்ளுவர்கள் நூற்களையும், வித்துவ சாஸ்திரிகளாகும் பாணர்கள் நூற்களையும் அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்து விட்டார்.
இவற்றுள் நாயனார் இயற்றியுள்ளத் திரிக்குறளுக்கு நிகரான நீதிபோதங்கள் வேஷ பிராமணர்கள் வேதத்தினும் கிடையாது, ஸ்மிருதியிலும் கிடையாது. ஆதலின் திரிக்குறளியற்றியுள்ள நீதிசாஸ்திர நிபுணர்களைப் பறையரென்றும், தாழ்ந்தசாதிகளென்றும் கூறுவது காரணம் என்னை என்று கேட்க ஆரம்பித்துக் கொண்டார்கள்.
அக்கேழ்விக்கு ஆதாரமற்ற உத்திரவு கொடுக்கும் ஓர் கட்டுக்கதையை ஏற்படுத்திவிட்டார்கள்.
அதாவது, பகவன் என்னும் பிராமணனுக்கும், ஆதி என்னும் பறைச்சிக்கும், ஏழு பிள்ளைகள் பிறந்ததென்றும், அவைகள் பிறந்தபோதே ஒவ்வோர் வெண்பாக்களைப் பாடி விட்டதென்றும், பொருந்தா பொய்க்கதையை எழுதிவைத்துக் கொண்டு பிராமண வித்துக்கு நாயனார் பிறந்தபடியால் குறள்பாடக்கூடிய விவேகம் உண்டாயதென்று கூறுவதுடன் 1892 வருடம் நடந்தேறிய மகாஜனசபையில் சிவராம் சாஸ்திரியும் தனது நாவினால் இவ்வகையாகக் கூறினார்.
- 2:33; சனவரி 27, 1909 -
அதாவது, பிராமண வித்திற்கு வள்ளுவர் பிறந்தபடியால் சிறந்த திருக்குறளைப்
பாடினாரென்று கூறினார். உடனே நாமெழுந்து அவ் வார்த்தையை அங்கீகரித்துக் கொள்ளுவதற்கு யாம் கேழ்க்கவேண்டிய கேழ்விகள் சிலதுண்டு. அவற்றை வினவலாமோ என்றோம்.
ஆட்சேபமின்றி கேழ்க்கலாமென்றார். தற்காலம் பறையர்கள் என்று அழைக்கப்படுவோர் மிஷநெரிமார்கள் கருணையால் பி.ஏ, எம்.ஏ, முதலிய கெளரதா பட்டங்களை பெறுகின்றார்களே அவர்கள் யார் வித்துக்குப் பிறந்திருப்பார்கள். ஜேயிலென்னுஞ் சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருக்கும் ஐயர்மார்கள் யாவரும் யாருடைய வித்துக்களுக்குப் பிறந்திருப்பார்கள் என்று யோசிக்கின்றீரென்றோம். ஒன்றும் பேசாமல் உட்கார்ந்து கொண்டார்.
ஆனரேபில் பி. அரங்கைய நாயுடுகாரவர்களும், எம். வீரராகவாச்சாரியாரவர்களும் எம்மை கையமர்த்தி வேறுசங்கதிகளைப் பேச ஆரம்பித்துக் கொண்டார்கள்.
இவ்வகையாகத் தங்களை பிராமணர்கள் என்று உயர்த்தி சகல சுகமுமடைந்து கொள்ளுவதற்கும் மேன்மக்களாம் திராவிட பௌத்தர்களைப் பறையர்கள் என்றும், தாழ்ந்தசாதிகள் என்றும் கூறிப் பலக் கட்டுக்கதைகளை ஏற்படுத்திக் கொண்டதுடன் தங்கள் சுகசீவனத்திற்காக ஏற்படுத்திக் கொண்ட மனு தருமசாஸ்திரம் என்னும் கற்பனா நூலில் இப்பறையன் தாழ்ந்தவன் என்றும் குறிப்பிட்டு வைத்திருக்கின்றார்கள். ஆயினும் பதின்மூன்று பறையர்கள் பெயர்கள் அவற்றுள் கிடையா.
மநுதருமசாஸ்திரத்திலுள்ள வார்த்தையைக் கொண்டே அந்த சாஸ்திரத்திற்குரிய சிலர்களை அடுத்து இம்மநு நூல் சமஸ்கிருதத்தினின்று, தமிழில் மொழி பெயர்த்துள்ளதாகக் கூறியிருக்கின்றீர்களே, இப்பறையன் என்னும் மொழிக்கு சமஸ்கிருதத்தில் எம்மொழிக் கூறப்பட்டிருக்கின்றது, அவற்றை சரிவர விளக்கவேண்டும் என்று பலபேரை வினவியும் சமஸ்கிருத மொழி எம்மொழியினின்று இப்பறையன் என்னும் மொழிப் பெயர்த்த விவரத்தைக் கூறியவர்கள் ஒருவரையும் காணேன்.
இத்தகைய மநுதருமசாஸ்திரத்தை நம்பி நடத்தற்கு ஆரம்பித்து விட்டபடியால் ரூபாயிற்கு நான்குபடி அரிசி விற்கவும், தான்யங்கள் யாவும் குறையவும், குடிகள் யாவரும் பசி பட்டினியால் மடியவும் நேர்ந்துவிட்டது.
காரணம், மனுதர்மசாத்திரம். அந்தணர் ஆபத்தருமம் 84-ம் வசனம்.
“சிலர் பயிரிடுந்தொழிலை நல்லத் தொழிலென்று நினைக்கின்றார்கள். அந்த பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது”
என வரைந்திருக்கும் இம்மநுதர்மமசாஸ்திரத்திற்குரியவர்கள் பயிரிடுந்தொழில் நிந்திக்கப் பட்ட தொழிலென்று நீக்கிக்கொண்டே வந்துவிட்டபடியால் பூமிவிருத்திகள் குறைந்து பாழுக்கு வந்துவிட்டது.
இத்தகைய மநுசாஸ்திரத்தை நம்பாமல் பூமியை சீர்திருத்தி பயிரிடுந்தொழிலையே மேலாகக் கருதிச் செய்துவந்த பௌத்தர்களைப் பறையர் பறையர் என்று தாழ்த்திப் பலவகையிடுக்கண்களைச் செய்து பலதேசங்களுக்குஞ் சிதறியோடும்படிச் செய்துவிட்டார்கள்.
மற்றும் உள்ளவர்களையும் எலும்புந் தோலுமாகக் காயவைத்து அவர்களுக்கு உள்ள ஆடுமாடுகளையும், பூமிகளையும் அங்கங்கு விட்டு வோட்டும்படியான வழிகளையும் தேடிக்கொண்டும் வருகின்றார்கள்.
இவர்களை சுத்தசலத்தண்டைநாடவிடாமலும், அம்மட்டர்களை சவரஞ் செய்யவிடாமலும், வண்ணார்களை வஸ்திரம் எடுக்கவிடாமலும் செய்தவிவரம்.
திராவிட பௌத்தர்களை சுத்தஜலத்தில் குளிக்கவிடாமலும், சவரஞ் செய்யவிடாமலும், வஸ்திரங்களை வெளுக்கவிடாமலும் அசுத்த நிலையில் வைத்துக் கொண்டிருந்தால் தாங்களவர்களைத் தாழ்ந்த சாதியோரென்றும், பறையரென்றும் தாழ்த்திக் கொண்டு வருவதற்கு ஆதாரமாக இருப்பதுடன் பறையர் என்றும் தாழ்ந்த சாதியோர் என்றும் கூறுகின்றீர்களே அதன் காரணம் என்ன என்று சில விவேகிகள் கேழ்ப்பார்களாயின் அவர்கள் அசுத்தமுள்ளவர்கள், தேக முதலிய சுத்தமில்லாதவர்கள், நீச்சர்களென்று கூறி
அவர்களை அருகில் நெருங்கவிடாமலும், சங்கதிகளை விசாரிக்கவிடாமல் தூரத்தில் விலக்கிவைப்பதற்கே செய்துவந்தார்கள். இன்னுஞ் சில கிராமங்களில் செய்தும் வருகின்றார்கள்.
- 2:34: பிப்ரவரி 3, 1909 -
பௌத்தர்களுக்கு விரோதிகளாகத் தோன்றிய வேஷப்பிராமணர்களாகும் பராயசாதியோர்களும் அவர்களையே சுவாமி சுவாமியென்று தொழுது கொண்டுவருகிறவர்களும், பௌத்தர்களைப் பறையரென்றும், தாழ்ந்த சாதிகளென்றுங் கூறிப் பலவகை இடுக்கங்களைச் செய்துவருவதுடன் அவர்களைச் சார்ந்த கல்வியற்ற புருஷர்கள் நாவிலும், இஸ்திரீகளினாவிலும் இப்பறையனென்னும் பெயரை இழிவாகவும், பொறாமெயாகவும் வழங்கிவருபவற்றை விளங்க எழுத வேண்டுமாயின் விரியுமென்றஞ்சி விடுத்திருக்கின்றோம்.
இப்பறையனென்னும் பெயரை இழிவாக உபயோகப்படுத்திவரும் புருஷர்களின் செய்கைகளையும், இஸ்திரீகளின் செய்கைகளையும், அவர்கள் குணாகுணங்களையும், அந்தஸ்துகளையும், சீலங்களையும், அவர்களிருக்கும் நிலைகளையும் விவேகிகள் உய்த்துநோக்குவார்களாயின் பொறாமெயினாலும், பற்கடிப்பினாலும், மேன்மக்களை வேண்டுமென்றே இழிவுகூறி வருகிறார்கள் என்பது வெள்ளென விளங்கும்.
இவர்களைக் கோவில்களுக்குள் சேர்க்காமல் துரத்தும் விவரம்
இத்தேசத்துள் கோவில்கள் என்று வழங்கும் புராதனக் கட்டிடங்கள் யாவும் பூர்வ பௌத்தர்கள் வாசஞ்செய்துவந்த மடங்களேயாகும்.
அரசனே தனது நற்கரும ஒழுக்கத்தின் மிகுதியால் ஆதிதேவனென்றும், புத்தரென்றும், இந்திரரென்றும், உலகெங்கும் கொண்டாடியவற்றுள் இத்தென்னிந்திய திராவிடர்கள் யாவரும் அரசர்கள் வாழும் இல்லத்தைக் கோவில் என்று வழங்கிவந்ததுபோல் அரசராகிய புத்தரை தெய்வம் என்றும், மன்னர்சாமி என்றும் கொண்டாடிவந்த மடங்கள் யாவற்றையும் கோவிலென்றே வழங்கிவந்தார்கள், நாளதுவரையில் வழங்கியும் வருகின்றார்கள்.
இவற்றுள் பெரும்பாலும் சிறப்புற்று விளங்கிய பெளத்தமார்க்கக் கோவில்களாகும் கன்ச்சிபுரம், திரிசிரபுரம், சிதம்பரம், மாவலிபுரம், அலர்மேலுமங்கைபுரம் ஆகிய மடங்கள் பாவற்றையும் நூதன பராயசாதியோர்களும், பராய மதஸ்தோர்களும் பற்றிக்கொண்டு அவைகளுக்குள் வைத்திருந்த புத்தரைப்போன்ற சின்முத்திறாங்கச் சிலை, சம்மாமுத்திராச்சிலை, பைரவமுத்திறாச் சிலை முதலியவற்றை மாற்றிவிட்டும், சிலதை எடுத்து விட்டதுபோக புத்தரது யோகசயன சிலைகள் யாவும் மெத்த பெரிதாக செய்துவைத்திருந்தபடியால் அவைகளை எடுப்பதற்கும், மாற்றுவதற்கும் ஏதுவில்லாமல் நூதனமதஸ்தர்களாகும் சைவர்கள் கைப்பற்றிக்கொண்ட மடங்களிலுள்ள புத்தரது யோகசயன நிலைகளினெற்றியில் சைவர்கள் சின்னமாகும் நாமத்தைச் சாற்றி கோவிந்தராஜர் பள்ளிகொண்டிருக்கின்றாரென்றும், வைணவர்கள் பற்றிக்கொண்ட மடங்களிலுள்ள புத்தரது யோகசயன சிலையை அரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கின்றாரென்றும் தங்கள் தங்கள் நூதன மதக்கோட்பாடுகளுக்குத் தக்கதுபோல் கூட்டியும் குறைத்தும் அதற்குத் தக்கப் பொய்ப் புராணக் கட்டுக்கதைகளையும் ஏற்படுத்தி வைத்துக்கொண்டும், எங்கள் மதமே மதம், எங்கள் சாமியே சாமியென்று உயர்த்தி மதக்கடைகளைப் பரப்பி வேஷபிராமணர்கள் யாவரும் அதனால் சீவிக்க ஆரம்பித்துக் கொண்டார்கள்.
இத்தகைய மதக்கடைகளுக்கு தட்சணை, தாம்பூலங் கொண்டு வருகிறவர்கள் எந்தசாதிகளாயிருந்தாலும் கொண்டுவரலாம். இப்பறையர்கள் என்றழைக்கும் படியானக் கூட்டத்தோர்கள் மட்டிலும் உள்ளுக்கு வரப்படாதென்றும், தெரியாமல் வந்துவிடுவார்களானால் அடித்துத் துன்பப்படுத்துவதுடன் தீட்டு
கழிக்கவேண்டும் என்று துட்டுபரித்து பயமுறுத்தி உள்ளுக்கு நுழையவிடாத ஏற்பாடுகளைச் செய்துவந்ததுமன்றி நாளதுவரையில் செய்தும் வருகின்றார்கள்.
இவ்வகையாக இவர்களை மட்டிலுஞ் சேராமல் துரத்திவருங் காரணம் யாதென்பீரேல் - சகல சாதியோர்களைப்போல் இவர்களுங் கோவிலுக்குள் வருத்துப்போக்காய் இருப்பார்களானால் தங்களுக்குள்ள முத்தன், முநியன், கறுப்பன், செல்லனென்னும் புத்தருக்குரிய பெயர்களின் ஆதரவினாலும், ஞானயோக நிருவாணசிலையின் குறிப்பினாலும் இக்கோவில்கள் தங்களுடைய புராதன கட்டிடங்கள் என்று கைப்பற்றிக்கொள்ளுவார்கள்.
- 2:35; பிப்ரவரி 10, 1909 -
அவ்வகையாகக் கைப்பற்றி கொள்ளுவார்களானால் சரித்திரவாதாரங்களின்படி அவர்களுக்கே ஒப்படைத்துவிட நேரிடும். ஆதலின் கண்களுக்குப் புலப்படாமல் இருக்க வேண்டும் என்றே அவர்களை உள்ளுக்குப் பிரவேசிக்கவிடாத எத்தனங்கள் எல்லாம் செய்துக் கொண்டே வருகின்றார்கள்.
இக்கோவில்களைப் பற்றிய இன்னும் சில விவரங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் மைலாப்பூரிலுள்ள சாக்கையர் வம்மிஷ வரிசையைச் சார்ந்த குழந்தைவேலு பரதேசியவர்கள் மடமாகிய கபோலீசராலயமும், திருப்போரூரில் வழங்கும் போரூரார் மடமும், திருவளூர் மடமும் பௌத்தர் வியாரங்களேயாம்.
அதனாதாரங்களை அறியவேண்டுமானால் அதற்குள் இஸ்தாபித்துள்ள நிஷ்டசாதன சிலைகளும் யோகசயன சிலைகளும் போதும் சாட்சி. அஃதன்றி அஸ்திபாரக் கற்களிலுள்ள சிலா சாசனங்களாலும் விளங்கும்.
ஈதன்றி திராவிட பௌத்தர்களாம் மேன்மக்களை பறையர்கள் பறையர்கள் என்று தாங்கள் பலவகை இம்சைகளைச் செய்து ஆலயங்கள் அருகில் நெருங்கவிடாது துரத்திக் கொண்டேயிருந்தபோதிலும் பூர்வ பழக்கம் மாறாமல் மாசி பௌர்ணமியில் மயிலாப்பூர் குழந்தைவேலு பரதேசி மடத்திற்கும், கிருத்திகைதோரும் போரூரார் மடத்திற்கும், அமாவாசிதோரும் திருவள்ளூர் மடத்திற்கும் மட்டிலும் தூறநின்றேனும் தெரிசித்துவருவார்கள்.
மற்றும் இச் சென்னையில் நூதனமாகக் கட்டியிருக்கும் கந்தசாமிக் கோவில், கச்சாலீஸ்வரன் கோவில், ஏகாம்பர வீஸ்வரன்கோவில், பெருமாள் கோவில்களுக்குப் போகவேமாட்டார்கள்.
திராவிட பௌத்தர்களாம் மேன்மக்களுக்கு சாம்பான் குலத்தாரென்னும் பெயர் வாய்த்த விவரம்.
மதுராபுரி என்றும், மதுரை என்றும், வட மதுரை - தென்மதுரை என்றும் வழங்கிவரும் தேசமெங்கும் புத்தசங்கங்களே நிறைந்திருந்தது. அவைகள் யாவற்றையும் வேஷபிராமணர்கள் கைப்பற்றிக் கொள்ளுவதற்காய், தங்கள் போதனைகளுக்கு உட்பட்ட சிற்றரசர்களாலும், பெருங்குடிகளாலும் பௌத்தர்களை வசிகளிலும், கற்காணங்களிலும், வதைத்துக் கொன்று மடங்கள் யாவற்றையும் இடித்து தங்கள் குடிவாழ்க்கைக்கு நிருமித்துக் கொண்டதுபோக திரவியம் அதிகவருத்தத்துள்ள மடங்களை விஷ்ணு கோவிலென்றும், சிவன் கோவிலென்றும் நூதன மதக்கடைகளைப் பரப்பி அதினால் சீவிக்கும்படி ஆரம்பித்த காலத்தில் கிராமவாசிகளாகத் தங்கியிருந்த பௌத்தர்கள் யாவரையும் பறையரென்று அழைக்க ஆரம்பித்தார்கள். அவற்றை உணர்ந்த விவேகிகள் யாவரும் அங்கு ஒன்றுகூடி தாங்கள் பறையர்கள் என்று ஒப்புக்கொள்ளாமல் தாங்கள் யாவரும் சாம்பவமூர்த்தியாகிய புத்தபிரான் தன்மவம்மிஷ வரிசையோராதலின் சாம்பன் குலத்தாரென்றும், சாம்பான்கள் என்றும் அழைக்க வேண்டும் என்னும் ஓர் கட்டில் நின்று பறையரென்னும் பெயரை ஒப்புக்கொள்ளாமல் சாதித்துவிட்டார்கள்.
பாலிபாஷையில் சம்மா சம்புவென்னும் வார்த்தையின் பொருள் குன்றாத மனபாக்கியம் பெற்றவ ரென்னப்படும்.
புத்தர் தியானம்
"தமோதஸ்ஸ பகவதோ ஹறஅத்தோ சம்மா சம்புத்தஸ்ஸ"
ஞானவெட்டி
வீம்புகள் பேசுகிறீர் வினைவழி / வேடிக்கையாயின்பம் விளம்புகிறீர்
மேம்புங் கரும்பாமோ மகத்துக்களின் / விற்பனத்தைக் கண்டறியா வீணர்களே
சம்பவ மூர்த்தியர்க்கே பட்ட மது / ஸ்தாபித்த சாம்பார்கள் யாங்காணும்
தீம்புகளுறபேசி தெளிந்தவர்தன் / சீர்பாதங் கண்டவர்போல் தீட்டுகிறீர், (தந்தன )
அவ்வகைய சாம்பான்குலத்தாரென்று சாதித்துவந்தபோதிலும் வேஷப் பிராமணர்களின் பொய்மதக் கட்டுக்குள் அடங்காதவர்களாகும் பௌத்தர்கள் யாவரையும் பறையர்கள் என்றும், தாழ்ந்தசாதிகள் என்றும் கூறி பலவகை இடுக்கங்களைச் செய்து பதிகுலைய வைப்பது அவர்கள் பழக்கமாதலின் சாம்பான் குலத்தாரென்று தங்களை அவர்கள் கூறிவந்த போதினும் தாழ்ந்தசாதியோர்கள் என்றே தலையெடுக்கவிடாமல் செய்து வந்ததுமன்றி நாளதுவரையிலும் செய்துவருகின்றார்கள்.
பௌத்தர்களாயிருப்பினும் அல்லது வேஷப்பிராமணர்கள் பொய்மதங்களை விட்டுநீங்கி அன்னியர் மதத்தில் பிரவேசித்தவர் களாயிருப்பினும் அவர்கள் யாவரையும் பறையர்கள் என்று தாழ்த்திவரும் விவரம்.
பூர்வத்தில் இலங்காதேசமென்றும், தற்காலம் கொளம்பு, கண்டி என்றும் வழங்கும்படியான தேசத்தில் வாழும் குடிகள் யாவரும் பெரும்பாலும் பௌத்தர்கள் என்பது சகலருக்கும் தெரிந்தவிஷயமாகும். சமஸ்கிருதத்தில் வரைந்துள்ள சந்திரகாண்டத்தில் அநுமார் இலங்கை சேர்ந்து அவ்விடமுள்ள மாளிகையில் உட்கார்ந்து அதனை புத்தர் வியாரமென்றும் கூறியதாக விளங்குகின்றது.
அவ்வகை பெளத்தநாடென்று தெரிந்தே தற்காலம் இராமநாடகம் பாடிய அருணாசலக் கவிராயரென்பவர் தானியற்றியுள்ள சுந்தரகாண்டத்தில் இலங்காதீவத்தை பறையர் ஊரென்று இழிவுபடுத்தியே பாடிவைத்திருக்கின்றார்.
இராம நாடகம் - சுந்தரகாண்டம்
"நிறைதவசுக்குக் ரூறைவளென்று நினைத்துகைவிடுவாரோ
பறையர் வூரிலே சிறையிருந்த வென்னை பரிந்துகைதொடுவாரோ.
ஈதன்றி வேஷபிராமண மதக்கடை வியாபாரஞ் செய்வோர்களாயிருந்த விஷ்ணுமதம் சிவமதம் இவைகளை விட்டுநீங்கி கிறீஸ்துமதத்தைச் சார்ந்த ஒருவர் முதலியாராயிருப்பினும், செட்டியாராயிருப்பினும் பறையனாகி விட்டான் அவனை வீட்டிற்குள் சேர்க்கப்படாது அவன் வீட்டிற்கு சாதியோர்கள் போகப்படாதென்று கட்டுப்பாடுசெய்து இழிவுகூறிவருவது தற்கால அனுபவத்திலும் காணலாம்.
- 2:36; பிப்ரவரி 17, 1909 -
நூதன மதங்களைக்கொண்டு தாங்கள் சுகமாக சீவிப்பதற்கும் நூதன சாதி வேஷத்தால் தங்களை உயர்த்திக் கொண்டு மற்றவர்களை அடக்கி ஆளும் வழியேயாம்,
அதாவது தங்கள் நூதன மதங்களுக்கும், நூதனசாதிகளுக்கும் எதிரிகளாயிருந்த பௌத்தர்களைப் பறையர்கள் என்றும், தாழ்ந்த சாதிகள் என்றும் கூறிவந்தவற்றிற்குப் பகரமாய்த் தற்காலமுள்ள முதலி, நாயுடு, செட்டியென்பவருக்குள் ஒருவர் வேஷபிராமண மதத்தைவிட்டுவிலகி கிறீஸ்துமதத்தில் சேர்ந்தவுடன் பறையனாகிவிட்டான் என்று சாதிக்கட்டு ஏற்படுவதினால் சீவனமதத்தையும், அதிகாரசாதியையும், நிலைப்படுத்துவதற்கே மற்ற மதத்தோரை இழிவுகூறி தாழ்ந்த சாதிகளென வகுத்துவருவது வெள்ளென விளங்கும்.
அதனினும் வேஷபிராமண மதத்தைச் சார்ந்த ஒருவன் பஞ்சபாதகங்களாகும் பொய்யாலேனும், களவாலேனும், குடியாலேனும், விபச்சாரத்தாலேனும், கொலையாலேனும் குற்றவாளியாகி சிறைச்சாலை சேர்ந்து சாதிக்கும், மதத்திற்கும் பலவகை மாறுதலடைந்திருப்பினும் சிறைநீங்கி வீட்டிற்கு`
வந்தவுடன் தங்கள் மதக் கோவிலுக்குட் சென்று தேங்காய், பழத்துடன் தட்சணை அளித்துவிட்டு வீட்டிற்கு வருவானாயின் சாதியும் கெடவில்லை, சமயமும் கெடவில்லை என்று வீட்டில் சேர்த்துக் கொண்டு சகல குடும்பத்தோரும் பேதமின்றி வாழ்வார்கள்.
சிவனைத் தொழுவதை நீங்கி கிறீஸ்துவைத் தொழலானான், விஷ்ணுவைத் தொழுவதை நீங்கி கிறீஸ்துவைத் தொழலானான் என்றவுடன் பறையனாகி விட்டான் என்று இழிவுகூறும் குரோதத்தால் சாதிகளுக்கு ஆதாரமாக சமயங்களையும், சமயங்களுக்கு ஆதாரமாக சாதிகளையும் வகுத்துக் கொண்டு மற்றவர்களைத் தாழ்த்தியும் குறைகூறியும் வருகின்றார்கள்.
திராவிடபௌத்தர்களுக்கு வலங்கையரென்னும் பெயர் வாய்த்த விவரம்
1814-வது வருடத்தில் விஸ்வபிரம வம்மிஷத்தாரெனும் கம்மாளருக்கும், பிராமணரென வழங்கும் விப்பிராளுக்கும் விவாக சம்மந்தவிஷயமாய் வியாஜியங்கள் நேரிட்டு மாஜிஸ்டிரேட்டு கோர்ட்டிலும், சித்தூர்ஜில்லா அதவுலத் கோர்ட்டிலும், கம்மாளர்களே ஜெயமடைந்துவிட்டபடியால் இப்பிராளென்னும் பிராமணர்களென்னப்பட்டவர்கள் சகலசாதியோரையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டதுபோக கம்மாளர்களுடன் சண்டை சச்சரவுசெய்து தங்களைக் காப்பதற்கு தங்களால் பறையரென்று தாழ்த்தி வந்த சாதியோரை சினேகப்படுத்திக் கொண்டு அவர்களைக் கிஞ்சித்து உயர்த்திவைத்தார்கள்.
அதாவது நாற்பது வருடங்களுக்குமுன்பு பஞ்சாயத்துக் கூடுவோர் தேசாயச்செட்டி பஞ்சாயத்தென்று வகுத்துவைத்திருந்தவற்றுள், சுங்கச்சாவடியண்டையிருந்து கங்கம் அல்லது ஆயம் வாங்குவோர்களுக்கு தேச ஆயச் செட்டியென்று கூறப்படும் அவர்களிடம் பஞ்சாயத்து செய்யப்போகிறவர்கள் மீனாட்சியம்மன் முத்திரையையும், மணியையும் மத்தியில் வைத்து அதன் வலங்கைபுரமாக பிராமணர்கள், வேளாளர்கள், பறையர்கள் வீற்றிருக்கலாமென்றும், அதன் இடங்கைபுரமாக கோமுட்டியர், சக்கிலியர், கம்மாளர்கள் வீற்றிருக்கலாம் என்றும் ஓர் நூதன ஏற்பாட்டைச் செய்து காரைக்கால், புதுச்சேரி முதலிய தேசங்களிலுள்ள பெளத்தக் குடிகளை கம்மாளர் அடிதடிக்கு பயந்து வலங்கைசாதியார் வலங்கை சாதியாரென சிறப்பில் வைத்திருந்தார்கள்.
என்ன உயர்த்தி வைத்திருந்தபோதிலும் அவர்களுக்கு கம்மாளர்களால் ஆபத்து நேரிடுங்காலத்தில் வலங்கையர்களும்,
வலங்கை சாதியென்போர் முன்னுக்கு வர ஏற்படுங்கால் பழயப் பறையர்கள் என்றே தாழ்த்தப்படுவார்கள். இஃது நாளதுவரையில் நிறைவேறிவரும் அநுபவங்களாகும்.
இன்னும் இக்குலத்தோருக்கு உற்சாகம் உண்டாக்கித் தாங்கள் கோவில்களுக்கு வலுதேடிக் கொள்ளுவதற்கும், கம்மாளர்களைத் தாழ்த்தி வைப்பதற்கும், சிவன்கோவிலில் பறையனென்னும் ஓர் அடியான் இருக்கின்றான் என்றும், விஷ்ணு கோவிலில் பறையனென்னும் ஓர் அடியானிருக்கின்றான் என்றும் பொய்க்கதைகளால் இவர்களை உற்சாகப்படுத்தி வைத்துக் கொண்டு தற்காலந் தங்களுக்கு எதிரிகளாகத் தோன்றிய கம்மாளர்களுக்குள் ஓரடியாரையுஞ் சேர்க்காமல் தொழுதுவருகிறார்கள்.
திராவிட பௌத்தர்களுக்கு வலங்கையரென்னும் பெயர் விப்பிராளென்னும் பிராமணர்கள் கம்மாளர்கள் அடிதடிக்கு பயந்து மீனாட்சி முத்திரையின் வலபுரம் நிறுத்தி பறையனென்னும் பெயரை தாட்சண்ணியத்தினால் அகற்றி, முத்திரைக்கு வலங்கையிலிருந்தபடியால் வலங்கைசாதியோர்கள் என வகுத்து நாளதுவரையில் புதுச்சேரிக், காரைக்கால் முதலிய இடங்களில் வழங்கிவருகின்றார்கள்.
- 2:37; பிப்ரவரி 24, 1909 -
திராவிட பௌத்தர்களாகும் மேன்மக்களுக்குப் பஞ்சமரென்னும் பெயர் வாய்த்த விவரம்
நாற்பது வருடங்களுக்குமுன் டம்பாச்சாரி விலாசம் ஆடியவர்களுக்குள் சிலர் தங்கள் விளம்பரப் பத்திரிகைகளில் அவர்களுடையக் கூத்துமேடைக்குள் பஞ்சமர்கள் வரப்பட்டாதென்று பிரசுரஞ் செய்திருந்தார்கள்.
அவற்றைக் கண்ணுற்ற சாதிபேதமற்ற திராவிடர்கள் தங்கள் பத்திரிகைகளில் பஞ்சமர்கள் என்றால் யார், பஞ்சபாண்டவர் வம்மிஷத்தாரா, பஞ்சநதியோரங்களில் வாழ்ந்தவர்களா, பஞ்சுபோல் பரக்கப்பட்டவர்களா, பஞ்சைகளென்னும் ஏழைகளா, பஞ்சபூதியங்கள் சரிவர வமைந்தவர்களா என்று உசாவினார்கள். சாதிபேதமுள்ள ஒருவரும் அதற்குத் தக்க மறுமொழி கூறவில்லை.
அதன்பின் 1891 வருஷம் காங்கிரஸ் கமிட்டியாருக்கு சாதிபேதமற்ற திராவிடர் யாவரும் ஒன்றுகூடி, தங்களைப் பூர்வீக திராவிடர்கள் என விளக்கி ஓர் விண்ணப்பம் அநுப்பினார்கள். அவர்கள் அதற்கு யாதொரு பதிலும் கூறவில்லை.
1892 வருஷம் கூடிய மகாஜனசபைக்கு பூர்வீக திராவிடர்களால் ஓர் பிரதிநிதியை அநுப்பி கலாசாலை விஷயமாகவும், பூமிகளின் விஷயமாகவும் (ரெக்கமெண்ட்) கேட்டபோதும் பறையர், சாம்பான், வலங்கையரென்னும் பெயர்களைக் குறிக்காமல் பூர்வீக திராவிடர்கள் என்றே குறிப்பித்திருந்தார்கள்.
அக்காலத்தில் பள்ளிக்கூடங்களில் வாசிக்கும் சிறுவர்கள் யாவரும் பறையன் என்னும் பெயரை ஒப்புக் கொள்ளாமலும் இருந்தார்கள்.
இந்த எழியகுலத்து சிறுவர்களுக்குக் கருணைதங்கிய ராஜாங்கத்தார் (பிரைமெரி) வகுப்பு வரையில் இலவசக் கல்விகற்பிக்கும்படி ஆரம்பித்தபோது இந்த பிள்ளைகளுக்கென்று பெயர் வைத்தவர்கள் சாதிபேதமற்ற எழிய பிள்ளைகளின் இலவச கலாசாலை என வகுத்திருப்பார்களானால் பொதுவாகவும், இராஜாங்கத்தோர் செய்தது பேரூபகாரமாகவும் விளங்கும். அங்ஙனமின்றி இக்கூட்டத்தோருக்கு எதிரிகளாகவும், சத்துருக்களாகவும் விளங்குவோரின் சிலர் அபிப்பிராயங்களைக் கேட்டுக் கொண்டு பஞ்சமர்கள் கலாசாலை என்று வகுத்துவிட்டார்கள். ஆயிரத்தி ஐந்நூறு வருடகாலமாக இந்த திராவிட பௌத்தர்களை தலையெடுக்கவிடாமல் தாழ்த்தி பலவகை இடுக்கங்களைச் செய்துவந்த சத்துருக்களாகிய வேஷபிராமணர்களுக்கு பருப்பில் நெய்யைவிட்டதுபோலும், பாலில் பழம் விழுந்ததுபோலும் மென்மேலும் ஆனந்தம் பிறந்து தங்கள் வஞ்சங்கள் யாவையும் சரிவர நிறைவேற்றிவிடுவதற்காய் தோட்டிகள் பிள்ளைகளுக்குக் கல்விசாலை வகுத்து அதையும் பஞ்சமர் பாடசாலை எனக் குறித்துவிட்டார்கள்.
இவ்வகைக் கருத்து யாதெனில் - இன்னுஞ் சிலகாலங்களுக்குப்பின் தோட்டிகள் பறையர்கள் யாவரும் ஒருவகுப்பாரென்றுங் கூறி இன்னுந் தலையெடுக்கவிடாமல் நாசஞ்செய்வதற்கேயாம்.
பார்ப்பாரென்பவர்களுக்கும், பறையரென்பவர்களுக்கும் விரோதமுண்டென்பதை பார்ப்பார்கள் வார்த்தையினாலேயே சில துரைமக்கள் அறிந்தும் சிற்சில விசாரிணைகளும் நடந்திருக்கின்றது.
- 2:38; மார்ச் 3, 1909 -
பார்ப்பார்களென்போர்களுக்கும் பறையர்கள் என்போருக்கும் பூர்வவிரோத முண்டென்பதை சில துரைமக்கள் உணர்ந்த விவரம்
1853 வருஷம் சாணாரக்குப்பத்தைச் சார்ந்த அதாவுலத் கோர்ட்டில் இஞ்சினியர் உத்தியோகத்திற்காக வாசித்திருந்த டபல்யூ. ஆரிங்கடன் என்னும் துரையும் மற்றுமோர் துரையும் முநிஷிகளிடம் தமிழ் வாசித்துக் கொண்டார்கள். அவ்விரண்டு முநிஷிகளும் பார்ப்பார்களாயிருந்து இருதுரை மக்களுக்கும் தமிழ்க்கற்பித்து வருங்கால், ஐயா தங்களிடம் ஊழியஞ் செய்பவர்கள் பறையர்கள் தாழ்ந்த ஜாதியார், நீச்சர்கள் இவர்களை நாங்கள் உள்ளுக்கு சேர்ப்பதில்லை, தீண்டுகிறதுமில்லை உங்களுடைய காலத்தில் ஊருக்குள் வந்து
சேர்ந்துவிட்டார்கள் என்று பாடங்கற்பிக்கும் போதே இந்த சங்கதிகளை எடுத்துக் கூறினார்களாம்.
அதை உணர்ந்த துரைமக்களிருவரும் ஒன்றுகூடி பேசுங்கால் இரண்டு பாப்பார்களும் தமிழ் பாடம் சொல்லிக் கொடுக்கும்போதே நம்முடைய வேலைக்காரர்களைத் தாழ்த்தியும் இழிவு கூறியும் பேசுகின்றார்களே அதன் காரணம் விளங்கவில்ல .
ஆதலின் டீச்சர்கள் வருங்கால் நமது வேலைக்காரர்களை நேரில் தருவித்து சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கார்த்திருந்து டீச்சர்கள் வந்தவுடன் ஆரிங்டன் துரையவர்கள் தனது பட்ளர் கந்தசுவாமி என்பவரையும், மற்றொரு துரை தனது பட்ளர் கிருஷ்ணப்பன் என்பவரையும் தருவித்து இதோ எங்களுக்குத் தமிழ் பாடம் கற்பித்து வரும் பார்ப்பார்கள் உங்களைத் தாழ்த்தி சாதிகளென்றும் பறையர்கள் என்றும் நீச்சர்கள் என்றும் கூறுகின்றார்களே அது வாஸ்தவந்தானோ என்றார்கள்.
கந்தசுவாமி என்பவர் தனது துரையை நோக்கி ஐயா எங்கள் குலத்தோருக்கும் இவர்கள் குலத்தோருக்கும் ஏதோ பூர்வவிரோதம் இருக்கின்றது. அதினால் எங்களை இவர்கள் இழிவுகூறி துறத்துவது வழக்கம். எங்கள் குலத்தோர் வாசஞ்செய்யும் வீதிக்குள் இவர்கள் வந்து விடுவார்களானால் இவர்களை இழிவு கூறி உங்கள் பாதம் பட்டவிடம் பாழாகிவிடுமே என்று சொல்லிக் கொண்டு இவர்களைத்துறத்தி வந்தவழியிலுஞ் சென்ற வழியிலுஞ் சாணத்தைக் கரைத்து தெளித்து இவர்கள் ஓடியவழியில் சாணச்சட்டியை உடைத்து வருகின்றார்கள். இத்தகையச் செயல் பெரும்பாலும் எங்கள் கிராமங்களுக்குள் வழங்கிவந்தபோதிலும் பூர்வவிரோதமும் அதன் காரணங்களும் எங்களுக்கு சரிவர விளங்கவில்லை.
ஆயினும் எங்கள் குலத்தோர் பெரும்பாலும் பயிரிடுந் தொழிலையே செய்கின்றவர்கள். இவர்கள் குலத்தாரோ பெரும்பாலும் பிச்சையிரந்துண்பவர்கள்.
இவ்விருதிறத்தார் செய்யுந் தொழில்களுக்குள் எவர்கள் செய்யும் தொழில் நீச்சத் தொழிலென்று துரைமக்களாகியத் தாங்களே தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று கூறினாராம்.
அவற்றை வினவிய ஆரிங்டன் துரையவர்கள் இருபாப்பார்களையும் நோக்கி இப்போது நீங்கள் என்ன சொல்லப் போகின்றீர்கள் என்றாராம். பாப்பார்களிருவரும் அவ்வார்த்தையை செவிகளிலேற்காது உங்கள் பாடங்களை வாசித்துக் கொள்ளுங்கள் என்று மறுத்துவிட்டார்களாம்.
துரைமக்களுக்கு அஃதுவிரோத வாக்குகள் என்று விளங்கினபோதிலும், பாப்பார்கள் என்போர் தங்கள் ஜீவனங்களுக்காக நூதனமதங்களையும் நூதனசாதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு பூர்வபுத்தமார்க்கத்தை அழித்தும் புத்தமார்க்கத்தை விடாமல் கைப்பற்றி வந்தவர்களைத் தங்களுக்குப் பராயரென்றும் பறையரென்றுந் தாழ்ந்த ஜாதிகள் என்றும் வகுத்து துன்பப்படுத்தி வருகின்றார்கள் என்று விளக்குவாரில்லாமல் போய்விட்டார்கள்.
- 2:39: மார்ச் 10, 1909 -
மிஷநெரிமார்களின் கருணையும் அஃது நீடிக்கா விவரமும்
இத்தேசம் எங்கும் பெளத்த மார்க்கம் நிறைந்திருந்த வரலாறுகளையும் நூதன மதங்களும் நூதன சாதிகளும் தோன்றிய விவரங்களையும் தங்கள் சாதிகளையும் மதங்களையும் பரவச் செய்தற்கு பெளத்தமார்க்கத்தை இடைவிடாது பற்றி நின்ற சீலர்களாகும் மேன்மக்களை பறையர்கள், தாழ்ந்த சாதியோர்கள் என்று கூறிவரும் விவரங்களையும் அநுபவ ஆதாரங்களுடன் திரட்டி பிரிட்டிஷ் துரைத்தன மேலோர்களுக்கு விளக்கியிருப்பார்களானால் கேவல நீச்ச செய்கையுள்ளோர் நாவிலும் பறையரென்றும் தாழ்ந்த சாதி என்றும் வழங்கும்படியான வார்த்தைகள் தடைபடுவதுமன்றி இராஜாங்க அந்தஸ்துள்ள
உத்தியோகஸ்த்தர்களுடன் களங்கமின்றி தாங்களும் அந்தஸ்தான உத்தியோகங்களில் நிறைந்திருப்பார்கள். அங்ஙனம் கருணைதங்கிய பிரிட்டிஷ் துரைத்தனத்தோருக்கு தங்கள் சரித்திரங்களை விளக்கி தங்களுக்கு நூதன சாதியோர்களால் நேரிட்டு வரும் இடுக்கங்களையும் தாழ்ச்சிகளையும் முன்னுக்கு ஏறவிடாத குறைகளையும் நீக்கிக் கொள்ளாமல்.
நாங்கள் பூர்வம் இராஜாங்க அந்தஸ்தில் வாழ்ந்து பதிநெட்டு விருதுகளாகிய வெள்ளையங்கி வெள்ளை நடுக்கட்டு, கலிவாகு, குலவாகு, இட்சுவாகு, வீரவாகு, வம்மிஷவரிசா வாகுவல்லயம், வெண்பிறை முடி என்னும் வெள்ளைப்பாகை வெள்ளைக்குதிரை வெண்சாமரை வெள்ளைக்கொடி வெள்ளைக்குடை முதலிய பெளத்தவரச சின்னங்களை மட்டிலுந்தங்கள் விவாக காலங்களில் ஆடம்பரஞ் செய்துக் கொண்டுவந்தார்கள். நாளது வரையில் அவ்விருதுகளைக் கொண்டே தங்கள் விவாக காலங்களில் ஊர்வலம் வருகின்றார்கள்.
சாதிபேதமற்ற திராவிடர்கள் தங்கள் சுப அசுப காரியாதிகளில் மட்டிலும் பௌத்ததன்மத்தையும் செயலையும் அநுஷ்டித்து வந்தபோதிலும் இவர்களுக்கு எதிரிகளாகிய வேஷபிராமணர்கள் இவர்களை முன்னுக்கு ஏறவிடாத செய்கைகளிலேயே ஜாக்கிரதையாயிருந்துக் கொண்டு அன்னிய தேசத்திலிருந்து நூதனமாகக் குடியேறி இவ்விடம் வரும் யாவருக்கும் தங்களை உயர்ந்த சாதிபிராமணர்கள் என சொல்லிக் கொண்டு, தங்கள் வேஷபிராமணத்திற்கு எதிரிகளாக இருந்த திராவிட பௌத்தர்களை சகலசாதியோருக்குந் தாழ்ந்த சாதியோர் என்றும் பறையர் என்றும் இழிவு கூறி தலையெடுக்கவிடாமல் செய்துவந்ததும் அன்றி மற்றும் செய்துவந்த விருத்திகேடுகள் யாதெனில்
கருணைதங்கிய மிஷநெரிமார்கள் இவ்விடம் வந்து தோன்றி எங்குங்கலாசாலைகளை வகுத்தபோது அக்கலாசாலைகளுள் இவ்வெழிய நிலையுற்ற சிறுவர்கள் வாசிக்கப்போவார்களானால் தாழ்ந்த சாதி பறையர்களுடையப் பிள்ளைகள் எங்கள் உயர்ந்த சாதிப்பிள்ளைகளுடன் உழ்க்கார்ந்து வாசிக்கப்படாது அப்படி அவர்களையும் கலாசாலைகளில் சேர்ப்பீர்களானால் எங்கள் சாதிப்பிள்ளைகளை உங்கள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப மாட்டோம் என்று சாதிபேதமுள்ள சகலரும் தங்கள் பிள்ளைகளை அனுப்பாமல் நிறுத்தியிருந்தார்கள்.
அவ்வகை நிறுத்திவிட்டபோதிலும் கருணைதங்கிய மிஷநெரிமார்கள் அவர்களுக்கு யாது மறுமொழி கூறிவந்தார்களெனில் நீங்கள் தாழ்ந்த சாதி பறையர்கள் என்று கூறும் சிறுவர்களில் ஒருவன் இக்கலாசாலைக்கு வருவானாயின் அவனுக்காக கலாசாலையை திறந்து சகல கலைகளையும் கற்பித்து வருவோம். சாதிபேதமுள்ள நூறுபிள்ளைகளை நீங்கள் நிறுத்திவிட்டபோதிலும் எங்கள் கலாசாலைகளுக்கு உங்கள் சிறுவர்கள் வரவை எதிர்பார்க்கமாட்டோம் என்று கூறிவந்தார்கள்.
அதினால் சாதிபேதமுள்ளோருக்கு வேறுவழியில்லாமல் தாழ்ந்த சாதிபறையர்கள் என்போருடன் உயர்ந்த சாதிகள் என்போரும் கலந்து வாசித்து வந்தார்கள்.
காரணம், இந்த சாதிபேதக் கொள்கைகளோ பொய்க்கட்டுப்பாடு. அப்பொய்க் கட்டுப்பாடு தோன்றியதோ பௌத்தர்கள் யாவரையும் தாழ்ந்த சாதிகள் என்று தலையெடுக்க விடாமல் நசித்து வருவதற்கேயாம். பௌத்தர்களை நசிக்க வேண்டிய முயற்சிகள் எங்கெங்கு கைகூடி வருகின்றதோ அங்கங்கு தங்கள் சாதிகளை உயர்த்திக் கொள்ளுவதும்.
பௌத்தர்களை நசிக்க வேண்டிய முயற்சிகள் எங்கெங்கு கெடுகின்றதோ அங்கங்கு தங்கள் நூதன சாதிபேதங்களை ஒடுக்கி பூர்வசாதிபேதமற்ற நிலையில் வந்து விடுவதும் அவர்கள் சமயதந்திரங்களேயாம்.
- 2:40; மார்ச் 17, 1809 -
இவ்வகையாய் சாதிபேதமற்ற திராவிட சிறுவர்கள் சாதிபேதமுள்ளோருடன் கலந்து வாசித்து வருங்கால் கனந்தங்கிய மிஷநெரிமார்களின் கருணை
மிகுதியாலும் சாதிபேதமற்ற திராவிட சிறுவர்களின் வம்மிஷ வரிசையோர் முன்பே அந்தஸ்துள்ள நிலையிலும் விவேகமிகுதியிலுமிருந்து வேஷபிராமணர்களின் இடுக்கங்களால் நசுங்குண்டு எழிய நிலையிலிருந்த போதிலும் பூர்வவித்தியா வம்மிஷ விருத்தி பலத்தால் மெட்டிக்குலேஷன், எப்.ஏ., பி.ஏ, எம்.ஏ. முதலிய கெளரதாபட்டங்களை சகல பெரிய சாதிகள் என்போருடன் சமரசமாகவும் கல்வியின் அதிவிருத்தியடைந்தும் வந்தார்கள்.
அத்தகைய விருத்தியை உணர்ந்த பிரிட்டிஷ் துரைத்தனத்தாரும் இவ்வெழிய குலத்தோர்மீது அன்பை வளர்த்தி இராஜாங்கவுத்தியோகங்களில் சகல சாதியோருடன் கலந்து சீவிக்கும் படியான செருசதார் அஜீர் செருசதார், ஆனரரிசர்ஜன் ஆனரரிமாஜிஸ்டிரேட், இஸ்கூல் இன்ஸ்பெக்டர் முதலிய உத்தியோகம் கொடுத்து வந்ததுமன்றி பிரிட்டிஷ் ஆட்சியோர் ஆக்கியாபனைப்படி தங்கடங்கள் உத்தியோகங்களை சரிவர நடாத்தி வந்தபடியால் இஸ்டார் ஆப் இண்டியாவென்றும், இராய பாதூரென்றும் கெளரதாபட்டங்களையும் பெற்றுவந்தார்கள்.
சாதிபேதமற்ற திராவிடர்கள் நாளுக்கு நாள் கல்வியிலும் அந்தஸ்திலும் உத்தியோகங்களிலும் முன்னேறி வருவதைக் கண்டு பொருக்கா சாதிபேதமுள்ளோர்கள்,
ஆ,ஆ, இவர்கள் மிஷநெரிமார்கள் கருணையால் அம்மார்க்கத்தில் பிரவேசித்தும் அவர்கள் கலாசாலையில் வாசித்தும் விருத்தியடைந்து விடுகின்றார்கள் இவர்களை அம்மார்க்கத்தில் பிரவேசித்தே அடக்கி விடவேண்டும் என்னும் வஞ்சகங்கொண்டு லூத்தர்மிஷநெரி சங்கத்தில் சேர்ந்து பரிசுத்தமாகிய கிறீஸ்து மார்க்கத்திலும் அசுத்தமாகிய சாதிபேதத்தை உண்டுசெய்ய ஆரம்பித்துக் கொண்டார்கள்.
பூர்வத்தில் இவ்விடம் வந்து தோன்றிய மிஷநெரிபாதிரிகளாகும் துரைமக்கள் யாவருக்கும் இந்தியாவிலுள்ள சாதிபேத வகுப்புகள் யாவும் பொய்யென்றும் காலத்திற்குக் காலம் மாறுஞ்செய்கையை உடையவர்கள் என்றும் தங்கள் விவேகமிகுதியால் தெரிந்துக் கொண்டவர்களாதலின், பெரியசாதியோர் என்பவர்களை சட்டைசெய்யாமல் தாழ்ந்த சாதி என்போர்கள் மீது தயைகூர்ந்து அவர்களைக் கல்விவிருத்தியிலும், செல்வவிருத்தியிலும் உத்தியோகவிருத்தியிலும் முன்னேற்றி பெரியசாதிகள் என்போர் அந்தஸ்திற்கும் மேலாகக்கொண்டு வந்தார்கள் அதனால் கிறீஸ்துமார்க்கப் பரவுதலும் கிறிஸ்துவின் சிறப்பும் இந்துதேசம் எங்கும் கொண்டாடப்பட்டது.
அவர்களுக்குப் பின்பு இவ்விடம் வந்து தோன்றிய மிஷநெரி பாதிரிகளாகும் துரைமக்கள் பெரிய சாதிகளென்றவுடன், பெரிய பெரிய சாதிகளென்று எண்ணிக்கொண்டு, பெரியசாதியோன் என்பவன் ஒருவனைக் கிறீஸ்தவனாக்கிவிட்டால் பெரிய பெரிய பாதிரிகளாகிவிடுவதுமன்றி அரிய பெரிய சம்பளமும் பெறலாம் என்னும் ஆசையினால் பெரிய சாதிகளைக் கிறீஸ்தவர்களாக்கும் முயற்சியில் நின்றுவிட்டார்கள்.
அப்பெரிய சாதிகள் என்போரும் கிறீஸ்து மார்க்கத்துள் பிரவேசித்து பறையர்கள் என்று வழங்கும் பூர்வ பவுத்தர்களை கிறீஸ்து மார்க்கத்திலுந் தலையெடுக்க விடாமல் செய்யவேண்டும் என்னும் முயற்சியிலிருந்தவர்களாதலின் பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல் வேதபாதிரிகளின் ஆசைக்கும் நூதன சாதிக் கிறிஸ்தவர்களின் பொறாமைக்கும் வழியுண்டாக்கிவிட்டது.
ஆசை மிகுத்த பாதிரிகளாலும் பொறாமெய் மிகுத்த சாதிபேத முள்ளோர்களாலும் சாதிபேதமற்ற திராவிடர்கள் முன்னேறுதற்கு வழியின்றி சாதிபேதமுள்ளோர்களால் முன்பு எவ்வகையால் நசுங்குண்டு சீர்குலைந்திருந்தார்களோ அதே நிலைக்கே வந்துவிட்டார்கள்.
இவர்களுடைய முன்னேறுதல் எப்போது தவிர்க்கப்பட்டதோ அப்போதே கிறிஸ்துமார்க்கத்தின் பரவுதலும் கிறிஸ்தவ மார்க்கத்தின் சிறப்பும் மறைந்துக் கொண்டே வந்துவிட்டது.
சிறப்பாகவும் மும்முரமாகவும் பரவிவந்த கிறீஸ்துமார்க்கம் நாளுக்குநாள் பரவுதல் குன்றி வருங்காரணம் யாதென்று மிஷநெரி சங்கத்தோரும் கவனித்தாரில்லை. தன்னலரன்னிய ரென்னும் சாதிபேதமற்றவர்களும் சகலசாதியோரும் தங்களைப்போல் வாழ்கவேண்டும் என்னும் கருணைமிகுத்தோர்களுமாகிய பிரிட்டிஷ் துரைத்தனத்தின் உத்தியோகஸ்தர்களாக ஆதியில் இவ்விடம் குடியேறிய துரைமக்கள் யாவரும் சாதிபேதமற்ற திராவிடர்களின்மீது கருணைவைத்து சாதிபேதமுள்ளோர் வார்த்தைகளை சட்டை செய்யாமல் தாழ்ந்தசாதி என்போருக்கே, கல்வியின் விருத்தியும் செல்வ விருத்தியும் செய்து ஈடேற்றி வந்தார்கள்.
மற்றும் பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்களாக வந்து தோன்றிய துரைமக்களும் அதேயன்பு பாராட்டி ஏழைமக்களை ஈடேற்றஞ் செய்திருப்பார்களாயின் தற்காலம் சாதிபேதமுள்ளோர்கள் எல்லாம் ஒன்று கூட்டிக்கொண்டு சுயராட்சியம் கேட்க ஆரம்பித்தார்களே அவ்வகையானக் கூட்டங்களை கூடியும் இருக்கமாட்டார்கள். அந்த சப்தமும் பிறந்திருக்கமாட்டாது.
பின்பு வந்துதோன்றிய துரைமக்கள் யாவரும் பெரியசாதிகள் என்போர் வார்த்தைகளையே பெரிதென்றெண்ணிக் கொண்டும் தாழ்ந்த சாதி என்றழைக்கப்பட்டார்களை தாழ்ந்தவர்கள் என்றே எண்ணிக் கொண்டும் தலையெடுக்கவிடாமலும் ஏழைகளை ஈடேற்றாமலும் விட்டுவிட்டார்கள்.
தற்கால துரைமக்கள் யாவரும் ஏழைமக்களின் ஈடேற்றத்தைக் கவனியாமல் பெரியசாதி என்போர்களையே பெருமைப்படுத்தி வந்தபடியால் செய்நன்றிக்கு மாறுதலாக சுயராட்சிய சுதந்திரம் வேண்டும் என்று வெளிவந்து துரைமக்களை துறத்த ஆரம்பித்துக் கொண்டார்கள்.
- 2:41; மார்ச் 24, 1909 -
தற்காலம் பறையர்கள் என்று அழைக்கப்படுவோர்கள் யாவரும் பூர்வபௌத்தர்கள் என்பதின் விவரம்
இந்த சாதிபேதம் வைத்துக் கொண்டிருப்பவர்களின் தயாள குணத்தையும் புண்ணியச்செயலையும் ஆங்கில வித்வான்கள் நன்றே தெரிந்திருக்கின்றார்கள்.
அதாவது உலகத்தில் கடவுளென்றும் சுவாமி என்றும் வழங்கும்படியான மெய்ப்பொருள் சகலருக்கும் பொதுவாயதென்று ஓர் வேடனும் புகலுவான், வில்லியனும் புகலுவான். ஆனால் இச்சாதி பேதமுள்ளவர்களுக்கு மட்டிலும் அஃது பொதுவாயதன்றென்று கூறி சாதி சாமிகளை வகுத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த சுவாமிகளில் சிவனென்னுஞ் சுவாமியைக் கும்பிடும் கூட்டத்தோரிடமாயினும், விஷ்ணுவென்னும் சுவாமியைக் கும்பிடும் கூட்டத்தோரிடமாயினும், ஓர் மகமதியன் அல்லது ஓர் யூரோப்பியன் சென்று உங்கள் சிவன் என்னும் சுவாமியை அல்லது விஷ்ணுவென்னும் சுவாமியைத் தொழுது முத்திபெற ஆவல் கொண்டேன் என்னையும் உங்கள் கூட்டத்திற் சேர்த்து உங்கள் கோவிலுக்குள் பூசிக்கயிடந்தர வேண்டும் என்றால் சேர்ப்பார்களோ இடங்கொடுப்பார்களோ, ஒருக்காலும் கிடையாவாம்.
இத்தகையப் பொதுவாய சுவாமிகளைத் தொழும் விஷயத்தில் இடம் கொடாதவர்களும் சேர்க்காதவர்களுமாகிய புண்ணிய புருஷர்கள் அரசாங்க விஷயத்தில் மற்றவர்களை சேர்ப்பர்களோ, உத்தியோக விஷயங்களில் மற்றவர்களை சேர்ப்பர்களோ, உண்பனை விஷயங்களில் மற்றவர்களை சேர்ப்பர்களோ, உடுப்பினை விஷயங்களில் மற்றவர்களை சேர்ப்பர்களோ ஒருக்காலும் சேர்க்கப்போகிறதில்லை.
இவ்வகை சாதித் தலைவர்களின் குணங்களை படம் செயல்களையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் கண்டுவருங் கருணைதங்கிய பிரிட்டிஷ் துரைத்தனத்தார் அவர்கள் வார்த்தைகளையே பெரிதென்று நம்பிக்கொண்டு அவர்களுக்கே அந்தஸ்தான உத்தியோகங்களைக் கொடுத்து வருவதினால் சாதிபேதமற்ற திராவிடர்களும் யூரேஷியர்களும், மகமதியர்களும் சுதேசிக் கிறிஸ்தவர்களும் சுகமடைவதற்கேதுவில்லாமல் போகின்றது.
சாதிபேதமற்ற திராவிடர்களோ பெரும்பாலும் ஆஸ்பிட்டல் அசிஸ்டென்டுகளாயிருந்த காலத்தில் வியாதியஸ்தர்களை பாதுகாத்தும் அன்புடன் சிகிட்சை செய்தும் வந்ததுபோல் தற்கால சாதிபேதமுள்ள ஆஸ்பிட்டல் அசிஸ்டென்டுகள் அன்பு பாராட்டுகின்றார்களா என்பதை கருணைதங்கிய ராஜாங்கத்தார் கவனித்தார்களில்லை.
இவ்வகையாகவே ஒவ்வோர் உத்தியோகங்களிலும் பிரவேசிக்காமல் தடுக்க விடாமுயற்சிகளினின்று கபடற்ற நெஞ்சமும் சாதிபேதமற்றக் கூட்டமுமாகிய பௌத்தர்களையே பாழ்படுத்தி வருகின்றார்கள்.
வேஷபிராமணர்களால் பறையரென்று தாழ்த்தப்பட்ட கூட்டத்தோர்கள் யாவரும் பூர்வபௌத்தர்கள் என்பதை நாளதுவரையிலவர்கள் வழங்கிவரும் பெயர்களினால் அறிந்துக் கொள்ளலாம்,
எவ்வகையிலென்னில், ஜோசேப், பீட்டர், ஜான், என்னும் பெயர்களைக்குறித்து இவர்கள் எம்மதத்தைச் சார்ந்தவர்களாயிருக்க வேண்டும் என்பாராயின் அப்பெயர்களைக் கொண்டே கிறீஸ்து மார்க்கத்தோரென்பார்கள்.
அதுபோல் அல்லிகான், அசேன்கான், தாவுத்கான் என்பார்களாயின், அப்பெயர்களைக் கொண்டே முகமது மார்க்கத்தானென்பார்கள்,
இராமானுஜன், மணவாளமுநி, பார்த்தசாரதி என்பார்களாயின் அப்பெயர்களைக்கொண்டே தற்காலவைணவ மார்க்கத்தோரென்பார்கள்.
வடிவேலன், வஜ்ஜிர்வேலன், சூரவேலன் என்பார்களாயின் அப்பெயர்களைக் கொண்டே தற்கால சிவசமயத்தோரென்பார்கள்,
அவர்கள் பெயர்களைக் கொண்டே மார்க்கங்களை அறிந்து கொள்ளுவதும் மார்க்கங்களிலிருந்தே பெயர்கள் தோன்றுவதுபோல், பூர்வமுதல் நாளதுவரையில் இக்குலத்தோருக்கு, முத்தன், முனியன், கருப்பன், செல்லன், என்னும் பெயர்கள் வழங்கும் ஆதாரங்களே முதலானதாகும்.
பின்கலை நிகண்டு - தெய்வப்பெயர்தொகுதி
முத்தன், மாமுநி, கருத்தன், முக்குடைச் செல்வன் முன்னோன்
இத்தேசதிராவிட பௌத்தர்கள் யாவரும் புத்தபிரானை, கடவுளென்றே சிந்தித்துவந்ததுமன்றி தற்காலம் வேஷபிராமணர்களால் நசுக்குண்டு நிலை குலைந்திருந்தபோதிலும் அக்கடவுள் கடவுளென்னு மொழியையே மனனித்தும் வருகின்றார்,
புத்தபிரானுக்கே கடவுளென்னும் பெயர் வழங்கி வந்தவற்றை அடியில் குறித்துள்ள நூலாதாரங்களால் அறிந்துக் கொள்ளலாம்.
சூளாமணி
ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை / போதியக் கிழவனை பூமிசையொதிங்கினை
போதியங்கிழவனை பூமிசையொதிங்கிய / சேதியென் செல்வநின்றிருவடி வணங்கினம்.
ஈதன்றி திருவள்ளுவ நாயனாரியற்றியுள்ளத் திரிக்குறள் பாயிரத்தின் பத்துப்பாடலிலும் புத்தபிரானையே சிந்தித்து அவற்றிற்குக் கடவுள் வாழ்த்து என்று கூறியுள்ளதையும் கண்டுக் கொள்ளலாம், இஃது இரண்டாவது ஆதாரமாகும்.
- 2:42; மார்ச் 31, 1909 -
இக்குலத்தோருக்குரிய தன்மகன்மங்கள் யாவையும் நாளதுவரையில் நிறைவேற்றி வருவோர் வள்ளுவர், சாக்கையர், நிமித்தகரென்னும் கன்மகுருக்களேயாம்.
அத்தகைய கன்மகுருக்களே பூர்வ பெளத்த மார்க்க அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளருக்குங் கன்மகுருக்களாய் இருந்தவைகளை அடியில் குறித்துள்ள பூர்வகாவியத்தினால் அறிந்துக் கொள்ளலாம்.
சீவகசிந்தாமணி
பூத்த கொங்குபோற் பொன்சுமந்துளா / ராச்சியார் நலத்தா செறூணனான்
கோத்தநித்திலக் கோதைமார்பினான் / வாய்த்தவன்னிரை வள்ளுவன் சொனான்.
முன்கலை திவாகரம்
வள்ளுவர் சாக்கையரெனும் பெயர் மன்னர்க் / குன்படு கருமத் தலைவர்க் கொக்கும்.
- இஃது மூன்றாவது ஆதாரமாகும்.
இக்குலத்தோர் பூர்வமுதல் நாளதுவரையில் நிறைவேற்றிவரும் விவாககாலங்களில் பௌத்தமார்க்கச் சின்னங்களாகும்,
வெள்ளையங்கி, வெள்ளைநடுக்கட்டு, வெண்பிறைமுடி என்னும் வெள்ளைப்பாகை, வெள்ளைக்குதிரை, வெள்ளைக்குடை, வெள்ளைக்கொடி, வெண்சாமரை, சக்கிரவர்த்திகளின் ஆயுதமாகும் வாகுவல்லயம், கொடை, செடி முதலியப் பதினெட்டு விருதுகளுடன் ஊர்வலம் வந்து விவாக காரியங்களை நிறைவேற்றிவருகின்றார்கள்.
வீரசோழியம்
மேலிய வெண்குடைச் செம்பியன் / வீரராஜேந்திரன்றன்
நாவியால் செந்தமிட் சொல்லின் / மொழிமுத னன்னுதலே.
சிலப்பதிகாரம்
திங்கண்மாலை வெண்குடையோன் / சென்னி செங்கோல துவோச்சி
சூளாமணி
எல்லாவிருது மீனும் பொழிலின / தெல்லாநிதியு மியன்றவிடத்தின்
தெல்லாவமரர் கணமுமிராப்பக / வெல்லாபுலமு நுகர்தற்கினிதே.
வேஷப்பிராமணர்களாலும் மற்றுஞ் சாதிபேதமுள்ளோர்களாலும் இக்குலத்தோர் நசுங்குண்டு பலவகைத் துன்பங்களை அனுபவித்து எழிய நிலையிலிருந்தபோதிலும் பூர்வ புத்தமார்க்க அரச சின்னங்களை விடாது தங்கள் விவாககாலங்களில் சத்துருக்கள் காணும்படியே பதிநெட்டு விருதுகளையும் அனுபவித்து வந்தார்கள். நாளதுவரையிலும் அநுபவித்து வருகின்றார்கள்.
- இஃது நான்காவது ஆதாரமாகும்.
இத்தேசமெங்கும் பெளத்தமார்க்கம் நிறைந்திருந்தகாலத்தில் செல்வரென்றும், செல்வராயரென்றும், செல்வராசரென்றும், தியாகராயரென்றும், தியாகராசரென்றும் வழங்கும்படியான புத்தபிரான் சிலையை யானையின் மீதேற்றி அரசனாயினும் இக்குலத்தோர் கிராமத்தலைவனாயினும் கூடவே யானையின் மீது உட்கார்ந்து போதி விழாக்காலங்களில் ஊர்வலம் வருவது வழக்கமாயிருந்தது.
சூளாமணி
நகரமாங்கெழுந்தன னரலுஞ் சங்கொடு
முகரவாய் மணிமுர சதிருமூரிநீர்
மகரமால் கருங்கடன் மருளுந் தானையான்
சிகரமால் சாலைமேற் செல்வன் தோன்றினான்.
இதை அனுசரித்தே நாளதுவரையில் திருவாளுரைச்சார்ந்த செல்வராயர் ஆலய உற்சவகாலத்தில் இக்குலத்துப் பெரியதனக்காரன் ஒருவனை சுவாமியுடன் யானைமீதேற்றி வளர்வலம் கொண்டுவருகின்றார்கள். அவ்வாலயத்தில் இவர்கள் மூன்றுநாள் உள்பிரவேசித்து வணங்கும்படியான அதிகாரம் நாளதுவரையிலும் உண்டு. இவ்வநுபவத்தாலும் இக்குலத்தோர் புத்த மார்க்கத்தோர் என்பதை ரூபிக்கும்
- ஐந்தாவது ஆதாரமாகும்.
பூர்வ பெளத்தமார்க்க அரசர்களாகும் அசோகன், சந்திரகுப்தன், நந்தன், சீவகன், மணிவண்ணன், பாண்டியன் முதலிய அரசர்கள் முதல் மருதனார், பெருந்தேவனார், சாத்தனார், திருத்தக்கர் ஈறாகவுள்ளக் குடிகள் யாவரும் தங்கடங்கட் பெயர்களினீற்றில் ஐயர், ராவ், முதலி, நாயுடு, செட்டி, எனும் தொடர்மொழிகள் யாதொன்றும் சேர்த்துவந்தது கிடையாது.
அம்மார்க்கப் பெயர்களை அனுசரித்தே நாளது வரையிலும் இக்குலத்தோர் இராமன், இலட்சுமணன், கோவிந்தன், கோபாலனெனும் பெயர்களை வைத்துக் கொண்டபோதினும் அவைகளினீற்றில் ஐயர், ராவ், முதலி, நாயுடு, செட்டி என்னும் தொடர்மொழிகளை சேர்ப்பது கிடையாது பூர்வ புத்தமார்க்க மக்கட் பெயர்களையும் தற்காலம் இவர்கள் வழங்கிவரும்
பெயர்களையும் கொண்டே இக்குலத்தோர் பூர்வ புத்தமார்க்கத்தோரென்னும் ஆறாவது ஆதாரமாகும்.
- 2:43; ஏப்ரல் 7, 1909 -
ஜப்பான், சைனா, தீபேத், மங்கோலியா, சையாம், பர்ம்மா , இலங்காதீவக முதலிய தேசங்களிலுள்ள பௌத்தர்கள் யாவரும் உலகத்திலுள்ள மநுகுலத்தோர் ஜனத்தொகையில் அரையரிக்கால் பாகம் பௌத்தர்களே நிறைந்திருக்கின்றார்கள்.
இத்தகைய பெருந்தொகையார் எத்தேச யாத்திரைகள் செய்தபோதினும் அத்தேசவாசிகளிடம் சாதிபேதமின்றியும், சமய பேதமின்றியும், உணவு பேதமின்றியும் உலாவிவருவார்கள்.
நாளதுவரையிலும் அத்தகைய பேதங்களின்றியே உலாவியும் வருகின்றார்கள். பூர்வம் புத்ததன்மத்தை அனுசரித்து தற்காலம், பறையர்கள் என்று அழைக்கப் பெற்றவர்களும் மேற்கூறியுள்ள பெளத்தர்களைப்போன்றே சாதிபேதம், உணவுபேதமின்றி சகல தேசயாத்திரைகளும் களங்கமின்றி சுற்றிவரும் சாதிபேதமற்ற செயலைக் கொண்டு இவர்களை பௌத்த மார்க்கத்தோரென்னும்
- ஏழாவது ஆதாரமாகும்.
சாதிபேத, உணவுபேதமற்றச் செயல்களுடன் தீபேத், பர்ம்மா முதலிய பௌத்தர்களுக்குள்ள அன்பின் ஆதரிப்புகள் யாதெனில், அவர்களைக் காணவேண்டி தங்கள் பந்துக்களாயினும், நேயர்களாயினும், அன்னியர்களாயினும் வீட்டிற்கு வந்துவிடுவார்களாயின், அவர்களுக்கு வேண்டிய புசிப்பு, தாகசாந்தி, தாம்பூலம் முதலியவைகளை அளித்து திருப்த்தி செய்துவிட்டு அவர்களுடன் வார்த்தையாடுவது வழக்கமாயிருக்கின்றது.
அதுபோலவே தற்காலம் பறையர்கள் என்று அழைக்கப்பெற்ற பூர்வ பௌத்தர்களும் வேஷப் பிராமணர்களால் பலவகை இடுக்கமுற்று நசிந்திருந்தபோதினும் புத்ததன்ம அன்பின் குணம் மாறாது தங்கள் பந்துக்களேனும், நேயர்களேனும், அன்னியர்களேனும் வீட்டிற்கு வந்துவிடுவார்களாயின் தங்களால் கூடிய உணவு, தாகசாந்தி முதலியவைகளை அளித்து ஆதரித்துவரும் தன்மப்பிரிய குணச் செயலாலும் இக்குலத்தோர் பூர்வ புத்தமார்க்கத்தோரென்னும்
- எட்டாவது ஆதாரமாகும்.
பர்ம்மா, தீபேத், சிலோன் முதலிய தேசங்களில் வாசஞ்செய்யும் பௌத்தர்கள் யாவரும் அவுடத விஷயங்களிலும், வியாதி விஷயங்களிலும், கணிதாதியாம் சோதிட விஷயங்களிலும் ஆராய்ச்சியுடையவர்களாய் தேசக் குடிகளுக்கு உபகாரிகளாக விளங்குகின்றார்கள்.
அதுபோலவே பறையர்கள் என்று அழைக்கப்பெற்ற பூர்வபௌத்தர்கள் வைத்திய விஷயங்களிலும், சோதிட விஷயங்களிலும், வித்துவ விஷயங்களிலும் அநுபவமுடையவர்களாய் பூர்வத்தில் நடத்திவந்தது போலவே தற்காலமுந் தக்க விவேகமுடன் நடத்திவரும் கணித அனுபவத்தைக் கொண்டும் வைத்திய அநுபவத்தைக் கொண்டும் வித்துவ அநுபவத்தைக் கொண்டும் இவர்கள் பூர்வ பௌத்தர்களே என்பதின்
- ஒன்பதாவது ஆதாரமாகும்.
புத்ததன்மத்தைத் தழுவிய சமணமுனிவர்களால் வரைந்து வைத்திருந்த கணித நூற்கள், வைத்திய நூற்கள், நீதி நூற்கள், ஞான நூற்கள் யாவையும் பெரும்பாலும் இக்குலத்தோர் கையிருப்பில் வைத்திருந்து தற்காலம் அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்திருக்கும் விவேக சுதந்தரத்தாலும் இவர்கள் பூர்வ பௌத்தர்களே என்னும் பத்தாவது ஆதாரமாகும்.
இத்தேசத்துள் நூதனமாகக் குடியேறியுள்ள வேஷ பிராமணர்களால் பறையர்களென்றும், பஞ்சமரென்றும், வலங்கையரென்றும் அழைக்கப்பெற்ற கூட்டத்தோர் பூர்வ பௌத்தர்கள் என்பதை
முதலாவது இவர்கள் வழங்கிவரும் பெயர்களினாலும்,
இரண்டாவது இவர்கள் சிந்தித்துவரும் தெய்வப்பெயராலும்,
மூன்றாவது இவர்கள் தன்ம கன்மங்களை நிறைவேற்றிவரும் கன்மகுருக்களாலும்,
நான்காவது இவர்கள் விவாக காலங்களில் அநுபவித்துவரும் சின்னங்களாம் விருதுகளினாலும்,
ஐந்தாவது திருவாரூரில் இவர்கள் யானையின் மீது ஊர்வலம் வரும் அதிகாரத்தினாலும், செல்வராயர் ஆலயத்தில் உள்பிரவேசித்து பூசிக்கும் சுதந்தரத்தினாலும்,
ஆறாவது பூர்வ பௌத்தர் தங்கட் பெயர்களினீற்றில் யாதொரு தொடர்மொழியுஞ் சேர்க்காது வாழ்ந்துவந்ததுபோல் இவர்களுந் தங்கட் பெயர்களினீற்றில் யாதொரு தொடர்மொழியும் சேர்க்கா பெயர்களினாலும்,
ஏழாவது இவர்களுக்குள்ள சாதிபேத, உணவுபேதங்களற்ற செயல்களாலும்,
எட்டாவது தங்களை அடுப்போரை ஆதரிக்கும் அன்பின் பெருக்கத்தாலும்,
ஒன்பதாவது கணிதமோதுதலிலும், வைத்திய அநுபவத்தினாலும்,
பத்தாவது சமணமுநிவர்கள் இயற்றியிருந்த கணித நூற்களையும், வைத்திய நூற்களையும், நீதி நூற்களையும், ஞான நூற்களையும் தங்கடங்கள் கையிருப்பில் வைத்திருந்து தற்காலம் அச்சுக்கு வெளிக்குக் கொண்டுவந்த சாஸ்திர சுதந்தரத்தினாலும் நிரூபித்திருக்கின்றோம்.
- 2:44: ஏப்ர ல் 14, 1809 -
வேஷப்பிராமணர்களால் இக்குலத்தோர் நிலைகுலைந்து பலவகைத் துன்பங்களை அநுபவித்து பௌத்தசாஸ்திரிகள் நிலைகுலைந்தும், சாஸ்திரங்கள் சிதலுண்டும் நசிந்துபோனவைபோக கையிருப்பில் மிகுந்திருந்த சாஸ்திரங்களாகும் குமாரசாமியம், மணிகண்டகேரளம், சோதிடலங்காரம், வருஷாதி நூல், மற்றுமுள்ள கணித நூற்களை வள்ளுவ மார்க்கலிங்க பண்டாரமவர்களாலும், மணிகண்ட கேரள முதலியவைகளை குழந்தை வேலுபரதேசியவர்களாலும், நாயனார் திரிக்குறள், நாலடி நானூறு, அறநெறித்தீபம் இவைகளை ஜர்ஜ் ஆரங்டியன் துரை பட்லர் கந்தப்பன் அவர்கள் கையிருப்பில் வைத்திருந்து தமிழ்ச்சங்கத்து அதிபர் கனம் எலீஸ்துரையவர்களிடங்கொடுத்து மானேஜர் முத்துசாமிப் பிள்ளையவர்களால் அச்சிட்டு பரவச்செய்திருக்கின்றார்.
சித்தர்களின் பாடல்களை மயிலை குழந்தைவேலு பண்டாரமவர்கள் அச்சிட்டு வெளிக்குக் கொண்டு வந்திருக்கிறார்.
வைத்திய காவியம், சிவவாக்கியம், இரத்தின கரண்டகம் இவைகளை புதுப்பேட்டை திருவேங்கிடசுவாமி பண்டிதரவர்களாலச்சிட்டு வெளிக்குக் கொண்டு வந்திருக்கின்றார்.
போகர் எழுநூறு, அகஸ்தியர் இருநூறு, சிமிட்டு ரத்தனச்சுருக்கம், பாலவாகடம் முதலிய வைத்திய நூற்களை வீ. அயோத்திதாச கவிராஜ பண்டிதரவர்களால் அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்திருக்கின்றார்.
இதுவுமின்றி பூர்வமுதல் நாளது வரையில் கையேட்டுப்பிரிதிகளாய் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையில் கற்பித்துவரும் அரிச்சுவடி, வரிக்குவாய்பாடம், பெயர்ச்சுவடி, ஆத்திச்சுவடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, மூதுறை, திவாகரம், நிகண்டு, எண்சுவடி, நெல்லிலக்கம், பொன்னிலக்கம், மற்றுமுள்ள சிறந்த தமிழ் தாற்களை பூர்வ விவேகமிகுத்த குடும்பத்தோர் நாளதுவரையில் தங்கடங்கட் கையிருப்பில் வைத்திருக்கின்றார்கள்.
இச்சென்னை ராஜதானியில் ஆதியாகத் தமிழ்ப் பத்திரிகை ஒன்றை வெளியிட்டவர்களும் இக்குலத்தோர்களேயாகும்.
அதாவது - புதுப்பேட்டை திருவேங்கிடசுவாமி பண்டிதர் “சூரியோதய” ப்பத்திரிகை என்னும் ஒன்றை வெளியிட்டிருந்தார். இரண்டாவது சுவாமி அரங்கையதாஸவர்களால் “சுகிர்தவசனி” என்னும் பத்திரிகை வெளியிட்டிருந்தார். மற்றும் இக்குலத்தோருள் அனந்த பத்திரிகைகளும்,
புத்தகங்களும் வெளியிட்டிருக்கின்றார்கள். நாளதுவரையிலும் வெளியிட்டும் வருகின்றார்கள்.
இத்தியாதி பூர்வபௌத்த வம்மிஷ வரிசையோர் பெயர்களினாதாரங்களையும், செயல்களினாதாரங்களையும், சாஸ்திர ஆதாரங்களையும், சாஸ்திரிகளின் ஆதாரங்களையும் தற்காலம் யாம் ரூபிப்பதற்கும், வெளியிடுவதற்கும் எமக்காதாரம் யாதென்பீரேல், கனந்தங்கிய பிரிட்டிஷ் ராஜரீகமேயாகும்.
எவ்வகையிலென்பீரேல் - வேஷபிராமணர்கள் தங்கள் வயிற்று சீவனத்திற்காக ஏற்படுத்திக்கொண்ட நூதனங்களையும், சாதிகளையும், பரவச் செய்வதற்காய் சத்திய தன்மங்களாம் பௌத்தசாஸ்திரங்களை அழித்து பெளத்தர்களையும் தாழ்ந்த சாதி பறையர்களென்று அழித்து வசியிலும், கற்காணங்களிலும், கழுவிலும் வதைத்துக் கொன்றுவந்த அநுபவக்காட்சிகளை கர்னல் ஆல்காட் துரையவர்கள் எழுதியுள்ள (பூவர்பறையா) என்னும் புத்தகத்தில் பரக்கக் காணலாம்.
அத்தகையக் கொரூரத் துன்பங்களை வேஷப்பிராமணர்கள் இது வரையில் செய்துக்கொண்டும், பறையர்களென்னும் பூர்வபௌத்தர்கள் அவற்றை இதுவரையில் அநுபவித்தும் வந்திருப்பார்களாயின் இவர்கள் தேகங்கிடந்த இடங்களில் எலும்புங் காணாமற்போயிருக்குமென்பது சத்தியமாம்.
இத்தகைய கொரூர்காலத்தில் பூர்வபுண்ணிய வசத்தால் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்து தோன்றி சத்துருக்களின் கொரூரம் ஒடுங்கி இக்குலத்தோர் கிஞ்சித்து சீர்பெறவும் தங்கடங்கட் கையிருப்பின் சாஸ்திரங்கள் வெளிவரவும் அவைகள் யாவையும் முப்பது வருட காலமாக தேறவிசாரித்து நாங்கள் பூர்வ பெளத்தர்களே என்று வெளியேறவுஞ் செய்தது பிரிட்டிஷ் துரைத்தனத்தின் நீதிநெறி அமைந்த செங்கோலே ஆதலின் எமக்காதாரம் பிரிட்டிஷ் ஆட்சியேயென்று துணிந்துங் கூறியுள்ளோம்.
- 2:45; ஏப்ரல் 21, 1909 -
வேஷப்பிராமணர்கள் இந்தியாவில் தோன்றிய காலவரை
நாளது வரையில் தமிழ் பாஷைக்கு மூலாதாரமாக விளங்குங் கருவிகளாகிய ஆத்திச்சுவடி, கொன்றைவேந்தன், மூதுரை, குறள், நீதிவெண்பா, விவேகசிந்தாமணி மற்றுமுள்ள கலை நூற்கள் யாவும் பறையர்களென்று தாழ்த்தப்பட்டுள்ள பூர்வபௌத்தர்களே இயற்றியுள்ளாரென்பது அநுபவக் காட்சியேயாம்.
இத்தகையவித்தையிலும், புத்தியிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் கீர்த்தி மிகுத்திருந்த பௌத்தர்களை பறையர்கள், பறையர்களென்றும், தாழ்ந்த சாதியோர், தாழ்ந்த சாதியோரென்றும் சீர்கெடுத்த காலத்தையும்,
மிலேச்சர்களாகிய ஆரியர்கள் பிராமணர், பிராமணரென்று வேஷமிட்டுக் கொண்டு உயர்ந்த சாதியோர் உயர்ந்த சாதியோரென்று சீர்பெற்ற காலத்தையும் ஆராய்வோமாக.
மகட பாஷையில் அறஹத்தென்றும். சகட பாஷையில் பிராமணரென்றும், திராவிட பாஷையில் அந்தணரென்றும் அழைக்கப் பெற்றபெயர் ஆதியில் புத்த பிரானொருவருக்கே உரியதாயிருந்தது. அது கண்டு சீவக சிந்தாமணியில் “ஆதிகாலத்து அந்தணன் காதன் மாகனொத்தா”னென்றும் காக்கை பாடியத்தில் “ஆதிகாலத்தந்தணனறவோ னென்றும்” புத்த சங்கவடியார்கள் அந்தண நிலையடைந்து அறஹத்துக்களான காலத்தில் புத்தபிரானை சீவகசிந்தாமணியில் அந்தணர்கள் தாதையென்றும் வரைந்திருக்கிறார்கள்.
பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என்னும் மூன்றையும் ஒழித்து இந்திரர்களாய் சருவவுயிர்களை உந்தன் உயிர்போல் ஆதரிக்கும் தன்மகுணமாம் சாந்தம் நிறைந்தவர்கள் எத்தேச, எப்பாஷை எச்சாதி எச்சமயத்தோர்களாயிருப்பினும் பௌத்த தன்மகாலத்தில் அந்தணர்களென்றும், பிராமணர்களென்றும் அழைத்து வந்தார்கள்.
சீவகசிந்தாமணி
ஆசையார்வ மோடையபின்றியே / யோசைபோ யுலகுண்ணதோற்றபி
னேகபெண்ணாழித் நிந்திரர்களாய் / தூயஞானமாய்த் துறக்கமெய்தினார்.
திரிக்குறள்
அந்தணரென்போரறவோர் மற்றெவ்வுயிக்குஞ்
செந்தண்மெய்ப் பூண்டொழுகலால்.
புத்தவியாரங்களில் இத்தகைய சுத்த இதயமுண்டாய் சாந்தமாந்தண்மெய் நிறைந்தவர்களையே அரசர்கள் முதல்வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளர்களும் வணங்கி அவர்களுக்கு வேணவுதவி புரிந்து வருவது இயல்பாயிருந்தது.
அந்தணர்களுக்குள்ள வித்தகைய சிறப்பையும், சுகத்தையும், மணிவண்ணனென்றும், சீவகனென்றும் வழங்கிவந்த பௌத்தவரசர்களின் காலத்தில் இந்தியாவிற் குடியேறியிருந்த மிலேச்சர்களாம் ஆரியர்களிருந்து சகடபாஷையிற் சிலத்தைக் கற்று தங்கள் பெண் சாதி பிள்ளைகளுடன் சுகத்திலிருந்துக்கொண்டே அந்தணர்களென்றும் வேஷமிட்டுக் கொண்டு கல்வியற்ற சிற்றரசர்களையும், பெருங்குடிகளையும் தங்கள் வயமாக்கி பயந்து பிச்சை இரந்தும் பயத்துடன் உயிர்வதை செய்து மாமிஷங்களைச் சுட்டுத்தின்றவர்கள் தங்கள் வாய் மொழியேற்ற கூட்டத்தார் மிகுத்தவுடன் அதிகாரப்பிச்சையிரந்து தின்னவும், அதிகாரயாகமென்னும் ஆடுமாடுகளைச் சுட்டுத்தின்னவும் ஆரம்பித்துக்கொண்டார்கள்.
கொலையும் புலையுமில்லாதிருந்த நாட்டில் உயிருடன் ஆடுமாடுகளை நெருப்பிலிட்டு உயிர்வதை செய்து தின்னும் படும்பாவிகளைக் கண்டபௌத்தர்கள் மனஞ்சகியாறாய் வேஷப்பிராமணர்களை அடித்துத் துறத்தியும் அவர்கள் போதனைக்கு இசையாமலுமிருந்தார்கள்.
விவேகமிகுந்த பௌத்தர்கள் வேஷபிராமணர்கள் போதனைக்குட்படாமல் அன்னியப்பட்டிருந்தபடியால் அவர்களை பராயர்களென்றும் அந்தரங்கக் கூற்றை சகலருக்கும் பறைந்துக்கொண்டு வந்தபடியால், பௌத்தர்களை பறையர்களென்றும், பராயர்களென்றுங் கூறிக்கொண்டே வந்து தங்கள் கட்சியோர் பிலத்தவுடன் பறையர்களென்றும், தாழ்ந்த சாதிகளென்றுங் கூறி அப்பெயரைப் பரவச் செய்யவும், பலப்படுத்தவும் ஆரம்பித்துக்கொண்டார்கள்.
இம்மிலேச்சர்களாம் ஆரியர்கள் தோன்றி வேஷ பிராமணர்களான காலமும் விவேகமிகுத்த பௌத்தர்கள் பறையர்களென்று தாழ்த்தப்பட்ட காலமும், மணிவண்ணன் அரசாட்சிக்கும், சீவகன் ஆட்சிக்கும் உட்பட்ட காலமாதலின் ஆயிர வருடங்களுக்கு உட்பட்டதென்றே வரையறுத்துக் கூறத்தகும்.
ஈதன்றி கிறீஸ்து பிறப்பதற்கு முன்பு 543-வருடம் மகத நாட்டைச் சார்ந்த இராஜ கிரகமென்னும் பட்டணத்தில் அஜாத சத்துருவென்னும் அரசனால் ஞான விசாரணை சங்கங் கூட்டப்பட்டது.
இரண்டாவது கி.மு 413-வருடம் வைசாலி என்னும் நகரத்தில் பெளத்தர்கள் யாவருஞ் சேர்ந்து விசாரிணை சங்கங் கூட்டப்பட்டது.
மூன்றாவது கி.மு. 255-வருடம் பாடலிபுரத்தில் அசோக அரசனால் விசாரிணை சங்கங் கூடப்பட்டது.
நான்காவது கீறீஸ்துவுக்கு பின்பு 78- வருடம் ஜலந்தராவில் கானிஷ்காவென்னும் அரசனால் விசாரியை சங்கங் கூட்டப்பட்டது.
இந்த கானிஷ்காவென்னும் அரசனின் காலமோ 800-வருடமென்று வரையறுத்திருக்கின்றது. இத்தியாதி விசாரிணை சங்கங்களில் இந்த வேஷ பிராமண சங்கத்தோரிருந்தார்களென்றாயினும், வேஷ பிராமணர்கள் வேதங்களை வாசிக்கப்பட்டதென்றாயினும், வேஷ பிராமணர்கள் வேதங்களை சாதிக்கப்பட்ட தென்றாயினும், சரித்திரக்காரர்களால் விளங்கியது கிடையாது.
அங்ஙனமிருக்கின் புத்தபிரான் காலத்திலேயே பிராமணர்கள் வந்து பகவனுடன் தரிசித்து பௌத்தர்களாகி விட்டார்களென வரைந்திருப்பது பொய்யாமோ என்பாருமுண்டு.
அஃது முழுப்பொய்யென்றே துணிந்து கூறுவோம். எங்ஙனமென்னில் (கமான்டிரன்சீப்) என்று ஆங்கிலேய பாஷையில் வழங்குவது படைத்தலைவனுக்குரிய பெயரேயாகும்.
அத்தகையப் பெயரை பிச்சையிரந்துண்ணும் ஓர்தடிச் சோம்பேறி வைத்துக்கொண்டு நான் படைத்தலைவன் நான் படைத் தலைவனென்று கூறுவானாயின் அவனை விவேகிகள் படைத் தலைவனென ஏற்பரோ ஒருக்காலும் ஏற்க மாட்டார்கள்.
அதுபோல் பிராமணர், அந்தணரென்னும், பெயர் சகலபற்றுக் களையுமறுத்து சாந்தம் நிறைந்த மகா ஞானிகளுக்குரியவைகளாகும் அதனுட்பொருளை உணராது குடிகெடுப்பு, வஞ்சினம், பொருளாசை மிகுத்தக் குடும்பியொருவன் தன்னை பிராமணனென்றும், அந்தணரென்றும், கூறுவானாயின் அப்பெயரை விவேகிகள் ஏற்பரோ, ஒருகாலும் ஏற்கமாட்டார்கள்.
புத்த பிரானிருக்குங்கால் வேஷ பிராமணர்களிருந்தார்கள் என்னும் பொய் சரித்திரங்கள் தோன்றிய காரணம் யாதென்பீரேல்,
புத்தபிரான் பிறந்து வளர்ந்து பரிநிருவாண முற்றதேசம் இந்த தேசமேயாதலின் சீன யாத்திரைக்காரரும், ஜெர்மன் யாத்திரைக்காரரும் பர்மா யாத்திரைக்காரரும், இவ்விடம் வந்து புத்தரது திவ்விய சரித்திரத்தையும் அவரது தர்மங்களையும், கேட்டு எழுதிக்கொண்டு போவது வழக்கமாயிருந்தது.
அக்காலத்தில் மிலேச்சர்களாம் ஆரியர்கள் பிராமண வேஷமிட்டுக் கொண்டிருந்தவர்களாதலின் தங்கள் பிராமண வேஷம் புத்தர் காலத்திலேயே இருந்ததுபோலும் அவரிடம் தருக்கம் புரிந்து பௌத்தர்களாகிவிட்டது போலும் சில கட்டுக்கதைகளை வரைந்து கொடுக்க அவைகளை மெய் சரித்திரமென்று நம்பிக்கொண்டுபோய் தாங்கள் வெளியிட்டுள்ள புத்ததன்மங்களிற் சேர்த்துவிட்டார்கள்.
பகவன் வேஷ பிராமணர்களுடன் வாதிட்டாரென்று வரைந்திருந்த போதினும் வேஷ பிராமணர்களின் வேதவாக்கியங்களைக் கொண்டேனும், இன்னின்ன வினாக்களுக்கு இன்னின்ன விடைகள் அறிந்தார்களென்றும் ஓர் மொழியுங் கிடையாது. வெறுமனே பிராமணர்கள் புத்தரிடம் வாதிட்டார்கள். புத்தரவர்கள் போதித்த தன்மத்தைக் கேட்டு பிராமணர்கள் பௌத்தர்களானார்களென்பதே கதாசுருக்கம்.
இத்தகையக் கட்டுக்கதைகளால் வேஷபிராமணர்களும், வேஷ பிராமணர்களின் வேதங்களும், புத்தபிரானுக்கு முன்பேயிருந்ததென்று சமயோசிதமாறுபாடுகளை உண்டு செய்து சத்திய தன்மங்களைப் பாழ்படுத்தி அசத்திய தன்மத்தை மெய்ப்பிப்பதற்குக் கடைகாலிட்டுருக்கின்றார்கள்.
இதற்குப் பகரமாய் கபிலர் காலத்தில் வேஷபிராமணர்களிருந்துள்ளார்களென்னுங் கட்டுக்கதை அகவலும் ஒன்றை வரைந்து வைத்திருக்கின்றார்கள்.
- 2:46; ஏப்ரல் 28. 1909 -
கபிலரகவலையும், அதன் உட்கருத்தையும் இவ்விடம் விளக்கவேண்டிய காரணம் யாதென்பீரேல் :-
இக்கபிலரகவலிலுள்ளக் கதைகள் யாவும் பொய்க்கதைகளென்று தெள்ளறவிளங்குமாயின் புத்தபிரான்காலத்திலும் வேஷ பிராமணர்களிருந்துள்ளார்களென்னும் பொய்க் கதைகளின் விவரம் வெள்ளிடை மலை போல் விளங்கும்.
கபிலர் அகவலேற்படுத்த நேரிட்ட காரணமோவெனில், தன்னை அன்னிய சாதியானென்று பிராமணர்கள் கூறி உபநயனங்கொடாது தடை செய்ததேயாகும்.
இத்தகைய உபநயனத்தை ஞானாசிரியர்கள் மாணாக்கர்களுக்கு அளிக்குங்கால் அவனது ஞான விசாரணையின் அதி தீவிரத்தையும்,
பரிபக்குவத்தையுங் கேட்பார்களன்றி நீவிர் சின்ன சாதியினனா பெரிய சாதியினனாவென்று அஞ்ஞான வினாக்கள் வினவமாட்டார்கள்.
யாதுகாரணமென்பீரேல், பாலியாம் மகடபாஷையில் உபநயன மென்றும், சகடபாஷையில் கியானநேத்திரமென்றும், திராவிட பாஷையில் ஞானக்கண் உள்விழியென்றுங் கூறப்படும்.
இவற்றையே ஞான ஆசிரியர் மாணாக்கனுக்களித்து அநுபவங்கேட்பது சுவாபமாகும்.
கியானதீபம்
ஊனக்கண் அன்றென் றுளக்கண் அளித்தபின் ஞானவதுபவு முரையென்றுரைத்தது.
கைவல்யம்
அசத்திலெம்மட்டுண்டம்மட்டும் பராமுகமாகினாய்
நிசத்திலுள்விழிபார்வையிப்படி நிறத்தர பழக்கத்தால்
வசத்திலுன் மனனின்று சின்மாத்திர வடிவமாகிடின் மைந்தா
கசத்ததேகத்திலிருக்கினு மானந்தக் கடல்வடி வாவாயே.
இத்தகைய உபநயனத்தை முப்பதாவது வயதிலளிப்பது ஞான குருக்களியல்பாம் கபிலருக்கு ஏழுவயதில் ஞானவிழி திரக்க வாரம்பித்தார்கள் என்பது முதற் பொய்யாகும்.
கபிலரோ புத்ததன்மத்தைச் சார்ந்தவர். அவரிடம் ஒருவன் உலகத்தை உண்டு செய்தானென்னில் உண்டுசெய்தவன் யார், அவற்றைக் கண்டவன் யார், கண்டதை வரைந்துள்ளவன் யார் என்று வினவுவதுடன் உள்ளதினின்று உலகந்தோன்றிற்றா இல்லாததின்று உலகந் தோன்றிற்றா என்றும் வினாவுவார்.
இத்தகைய விவேகமிகுத்தோர் தான்பாடும் அகவலின் உலகத்தை நான்முகன் படைத்தானென்று கூறியுள்ளாரென்பது இரண்டாவது பொய்.
சூளாமணி
யாவனாற் படைக்கப்பட்ட துலகெலாம் யாவன் பார்த்த
தேவனால் படைக்கப்பட்ட நியாவன தகலஞ்சேர்ந்து
பூவினாற் பொறியொன்றானாள் புண்ணிய வுலகங்காண
யேபினான் யாவனம்மெய் யாவனதுலகமெல்லாம்
நான்முகனென்றும் பெயர் புத்தருக்குரிய ஆயிரநாமங்களிலொன்று.
கமலசூத்திரம்
சகஸ்திர நாம பகவன்
மணிமேகலை
ஆயிர நாமத்தாழியன் திருவடி
நன்னூல்
பூமலியசோகின் புனைநிழ லமர்ந்த / நன்முகற்றொழுது நன்கியம்புவ னெழுத்தே
தனது செயல்களையும், தன் ஒழுக்க நிலைகளையும் நன்காராய்ந்து பார்ப்போன் எத்தேச எப்பாஷைக்காரனாயினும் அவனையே பார்ப்போன் பார்ப்பானென்று கூறப்படும்.
புத்த சங்கத்திற் சேர்ந்து நீதிநெறி ஒழுக்கத்தில் நிற்கப்பார்க்கும் புருஷர்களுக்கு பார்ப்பாரென்றும், இஸ்திரீகளுக்கு பார்ப்பினிகளென்றுங் கூறப்படும்.
இவற்றையே பாலிபாஷையில் பிக்கு பிக்குணியென்றுங் கூறப்படும்.
ஒட்டியர் மிலேச்ச ரூணர் சிங்களர்
இட்டிடை சோனகர் யவனர் சீனத்தார்
பற்பல நாட்டினும் பார்ப்பா ரிலையால்
என்று தான் கூறியுள்ள நாடுகளில் பார்ப்பார்களில்லையென்று கூறியுள்ளது மூன்றாவது பொய், பௌத்தர்களால் ஆரியர்களையே மிலேச்சர்களென்று கூறியுள்ளதை மறுப்பதற்காய் தங்களைவிட வேறு மிலேச்சர்களிருப்பது போல் வரைந்தும் வைத்துக்கொண்டார்கள்.
தற்காலம் அந்தணரென்றும், பிராமணரென்றும் வேஷமிட்டுருப்போர் தங்கள் தங்கள் சுய சாதிகளுக்கும், சுயமதஸ்தர்களுக்கும் அன்னமளித்துக் கொள்ளுவது வழக்கமேயன்றி மற்றயயேழை எளியோர்களுக்குக் கொடுப்பதுங் கிடையாது. தாங்கள் புசிக்குமுந்தி அவர்களில்லங்களில் ஏனையோர் செல்லவும் போகாது.
இத்தியாதிசுசாதி யபிமானிகள் ஓர் காட்டில் விழுந்து கிடக்கும் பிள்ளையை இன்னசாதி, யினியசாதியென்றறியாது எடுத்து வளர்த்ததும் காரணமின்றி கபிலரென்னும் பெயர்கொடுத்தும் நான்காவது பொய்.
தென்திசைப்புலையன் வடதிசைக்கேகி
பழுதறவோதி பார்ப்பானாவான்
வடதிசைப்பார்ப்பான் தென்திசைக்கேகி
நடையதுகோணி புலையனாவான்
இத்தகையாகப் பிறப்பில் சாதியில்லையென்று கூறியவர் பாணர்வீட்டில் ஓளவை வளர்ந்தாள், பறையர் வீட்டில் ஓளவை வளர்ந்தாள், பறையர் வீட்டில் வள்ளுவர் வளர்ந்தார், அந்தணர் வீட்டில் கபிலர் வளர்ந்தாரென்றும் சாதிகளை நிலைநிற்கக் கூறியது ஐந்தாவது பொய்.
காரணம் - தொழிலால் சாதிகள் ஏற்பட்டுள்ளதென்பதை வற்புருத்திக் கூறியிருப்பாராயின், அவனவன் தொழிலுக்குஞ் செய்கைக்குத் தக்கவாறு அந்தணர் வீட்டிலேயே பறையன், பாணனிருக்கமாட்டானா, பறையன் வீட்டிலேயே பாணன் பார்ப்பானிருக்கமாட்டானா. இவைகள் யாவையும் நோக்காமல்,
பறையர் வீட்டில் வள்ளுவர் வளர்ந்தாரென்றும், அந்தணர் வீட்டில் கபிலர் வளர்ந்தாரென்றும் பிறப்பினிடத்திலேயே சாதியுண்டென்பதை நிலைநிறுத்தி கபிலர் காலத்திலேயே இவ்வேஷ பிராமணர்களிருந்தார்களென்றும் சாதிகளிருந்ததென்றுங் கதா வஸ்திபாரமிட்டுக் கொண்டார்கள்.
இக்கபிலரகவ லென்னுங் கட்டுக்கதையானது பிறப்பிலேயே சாதிகளுமுண்டு. பூர்வத்திலேயே இவ்வேஷபிராமணர்களும் உண்டென்று சமயோசிதமாக தங்களை சிறப்பித்துக் கொள்ளுவதற்கேயாம்.
பூர்வ பௌத்த தர்மத்தைச் சார்ந்த கபிலரே இவ்வகவலை இயற்றியுள்ளாரென்னும் பொய்யை அடியிற் குறித்துள்ள செய்யுட்களால் அறிந்துக் கொள்ளலாம்.
பூர்வ பௌத்த தர்ம்ம கர்ம்மகுருக்களாக விளங்கிய வள்ளுவர்களையே வேஷ பிராமணர்கள் முதற் பறையராக வகுத்துள்ளதை ராட்ளர் டிக்ஷநெரியில் பதிந்துள்ளதும் அன்றி வள்ளுவர்களையே பறையர்களென்று கூறி பலவகையிடுக்கங்களினாற் பாழ்படுத்தி வருகின்றார்களென்றும்,
எங்கள் பரம்பரை மகத்துவம் இப்போது உங்களுக்கு விளங்காது இன்னுஞ் சில நாளையில் அஃது விளங்குமென்றும் திருவள்ளுவு சாம்பனார் தானியற்றியுள்ள ஞானவெட்டியில் கூறியிருக்கின்றார்.
ஞானவெட்டி
விட்டகுறை வருமளவும் உபதேசங்காண்
மெய்யுடலுந்தளர்ந்து புவிமேலு நோக்கி
தட்டழிந்து விழும்போது வோதிவைத்த
சாத்திரத்தை க்ஷணப்போது மறியப்போமோ
எட்டிரண்டுமறியாதார் குருக்களாமோ
யென்னையினி பறையனென்று தள்ளப்போமோமட்டமரும்
பூங்குழல்வா லாம்பிகைப்பெண்
வங்கிஷத்திலுதித்த சாம்பவனும் தானே.
ஆதியில்லை அந்தமில்லை ரூபமுல்லை-காலம்
அண்டரண்ட பேரண்டமும் பிண்டமுமில்லை
சாதியில்லை நாதியில்லை ஆண் பெண்ணிலாக்- காலந்
நாணுவாய் நாதவிந்து வூணுதலாக்
ஒதியதோர் வேதமில்லை மறையோரில்லை-சாதி
வொன்றுமில்லை யன்றுமின்று மொன்றதாச்சு - இந்த
சேதிவரலாரறிய சிவநாட்செல்லும் - செகம்
ஜெநநமெடுத்த நிலை ஏதுவதுகாண்.
இவ்வகையாய் வள்ளுவர்களையே பறையர்களென்று பாழ்படுத்தியது பரக்க விளங்குங்கால் பறையர் வீட்டில் வள்ளுவர் வளர்ந்தாரென்று கபிலர் அகவல்
பாடியுள்ளாரென்பது கற்பனாகதை என்றே கூறத்தகும்.
இத்தகையப் பொய்க்கதா பிறட்டுகளைக்கொண்டே புத்தர்காலத்திலும் வேஷபிராமணர்கள் இருந்துள்ளார்கள் என்னுங் கட்டுக்கதை புறட்டுகளை திட்டமாக அறிந்துக் கொள்ளுவதுடன் அந்தணனென்னும் நிலை வாய்த்தவனுக்கு பிள்ளை வளர்க்கவேண்டுமென்னும் பாச பந்தமுண்டோவென்பதை கபிலரே அறியாமற் பாடிவிட்டாரோ, கற்பனா கதையாம் விவேகக் குறைவோ அவற்றைக் கற்றவர்களே அறிந்துக் கொள்ள வேண்டியதாகும்.
- 2:47: மே 5, 1909 -
புத்தபிரான் காலத்திற்கு முன்பே வேஷபிராமணர்களும் வேஷபிராமணர்கள் வேதங்களும் வேஷபிராமணர் வேதாந்தங்களும் ஒற்றுமெய்க் கேட்டிற்கு ஆதாரமாகும் சாதி பேதங்களும் இருந்ததென்று கூறித்தங்களைச் சிறப்பித்துக் கொள்ளுவதற்கு இத்தியாதி கட்டுக்கதைகளை ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
வேஷபிராமணர்கள் இத்தேசக் குடிகளல்ல வென்பதையும் இத்தேசக் குடிகளுக்கு இவர்கள் யதார்த்த குருக்களல்ல என்பதையும் அடியிற்குறித்துள்ள செயலால் அறிந்து கொள்ளலாம்.
அதாவது பெளத்தர்களுக்குள்ளும் மகமதியருக்குள்ளும், கிறிஸ்தவர்களுக்குள்ளும் உள்ள அவரவர்களைச் சார்ந்த குருக்களுக்கு ஏதேனும் சுகா சுகங்கள் நேரிடுமாயின் அந்தந்த கூட்ட மார்க்கத்தார் சென்று அவரவர் குருக்களுக்கு வேண்டிய உதவிபுரிந்து சுகவாக செயல்களுக்கும் கூடவே கலந்திருந்து சகல காரியாதிகளையும் நடத்திவிட்டு அவரவர்கள் இல்லம் சேர்வது வழக்கமாகும்.
இவ்வேஷ பிராமணர்களாம் பொய்க்குருக்களின் சுபா அசுபங்களுக்கு அவர்கள் மதத்தைச் சேர்ந்த கூட்டத்தார் தங்கள் குருக்களுக்குண்டாகும் சுப அசுப காரியங்களாச்சுதேயென்றுஞ் செல்லவும் மாட்டார்கள்.
தங்களைச் சேர்ந்த மாணாக்கர்களாச்சுதே அவர்களெல்லோரும் நமது சுப அசுபகாரியங்களிலிருக்க வேண்டும் என்று அவர்களும் அழைக்க மாட்டார்கள்.
யதார்த்தபிராமணர்களுக்குரிய அறுவகைத் தொழிலில் ஏற்றல், ஈதல் என்னும் இருவகைத் தொழிலாம். தங்கள் மார்க்கத்தைச் சார்ந்த சகல குடிகளிடத்தும் தானமேற்றலும், உள்ளமிகுதி வஸ்துக்களை இல்லாத சகல ஏழைகளுக்கும் பேதமில்லாமல் தன்மம் யீதலும் ஆகியத் தொழிலினுள் வேஷபிராமணர்கள் தொழிலோவெனில், தங்கடங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களிடத்திலும் ஏனையோரிடத்திலும் தானமேற்றுக் கொள்ளுவார்கள்.
தாங்கள் ஈயும் தன்மத்தை சகலருக்கும் பொதுவாகக் கொடாது தங்கள் சுயசாதிகளுக்கு மட்டிலும் கொடுத்துக் கொள்ளுவார்கள்.
இத்தேசக்குடிகளுக்கும், இவர்கள் தன்மத்திற்கும், மாறுபட்டவர்களாதலின் இத்தேசத்தோருடன் சகலகாரியாதிகளிலும் பொருந்தாமலும், இவர்கள்மீது அன்பு பாராட்டாமலும் தங்கள் சுயசாதிகளின் விருத்தியையே நாடியிருப்பதை இவர்கள் இத்தேசத்தில் குடியேறி குடிகெடுத்த நாள் முதல் நாளதுவரையிலுமுள்ள அநுபவத்தாலும் கண்டுக் கொள்ளலாம்.
இத்தியாதி காரியங்களில் கலவாமலும் சுபா சுபகாரியங்களில் மற்றவர்களை சேரவிடாமலும் இருப்பது, புத்தபிரான் காலத்தில் வேஷபிராமணர்கள் இருந்தார்கள் என்றும் கபிலர் காலத்திலும் வேஷபிராமணர்கள் இருந்தார்கள் என்றும், கட்டுக்கதைகளை ஏற்படுத்திவிட்டிருப்பது போல் சமயோசிதமாக இத்தேசத்தோருடன் கலவாது விலகிநின்றே நாங்கள் பிரம்மா முகத்தினின்று பிறந்த பெரியசாதிகளென்றும், பிராமணர்கள் என்றும் கூறிக்கொண்டே தங்கள் யாசகசீவனத்தை நிறைவேற்றி வந்தார்கள்.
கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜரீகம் வந்து தோன்றி சகல மதங்களையும், சகல சாதிகளையும் சகல சிலாசாசனங்களை விசாரிணை செய்ய ஆரம்பித்ததின் பேரில் தங்கநிறமான முட்டையிலிருந்து பிறந்த கதைகளையும், பிரம்மா
முகத்தினின்று பிறந்த கதைகளையும் ஓர் போக்கில் விட்டுவிட்டு ஆரியவர்த்தத்தினின்று இவ்விடம் சிலர் குடியேறியதாயும், ஐரோப்பா கண்டத்தில் சிலர் குடியேறியதாயும் கற்பனா கோலூன்றி வருகின்றார்கள்.
இத்தகைய சமயோசித கதைகளை உற்பத்தி செய்யும் காரணங்கள் யாதென்பீரேல், இத்தேசப் பூர்வக்குடிகள் யாவரும் விவேக மிகுதியால் ஒன்றுசேர்ந்துக் கொண்டு நாங்கள் எந்தசாதியோருக்குந் தாழ்ந்தவர்களுமன்று, உயர்ந்தவர்களுமன்றென்று கூறி தாங்கள் முன்னேறும் வழிகளைத் தேடுவார்களாயின் தாங்கள் இத்தேசத்து பிரம்மாவைச் சேர்ந்தவர்களில்லை. ஐரோப்பியரைச் சேர்ந்தவர்கள் என்று விலகிக்கொள்ளவும், ஐரோப்பியர் விழித்துக் கொண்டு நாங்களாரியரல்லவென்று இவர்களை விரட்டுவார்களாயின், இந்துக்களுடன் சேர்ந்துகொண்டு பிரம்ம வம்மிஷத்தோரென்று மாறுபடுத்திக் கொள்ளுவதற்கேயாம்.
இவர்கள் இத்தேசத்தில் குடியேறி இத்தேசத்தோரால் மிலேச்சர் ஆரியரென்று பெயர்பெற்று யாசக சீவனத்தால் வயிறுவளர்த்து சமயோசிதமாய் பிராமணவேஷம் எடுத்துக் கொண்டகாலம் ஆயிரம் வருடங்களுக்கு உட்பட்டதேயாகும்.
வேஷபிராமணர்கள் வேதம், சிற்சில வேஷபிராமணர்களாலெழுதி, சிற்சில ஐரோப்பிய துரைமக்களிடம் கொடுத்து அவர்களால் கிடைத்த வரையில் சேர்த்து புத்தகருபப்படுத்தி வேதமென்று வெளிவந்தகாலம் நூறுவருஷத்திற்கு உட்பட்டதேயாகும்.
வேஷபிராமணர்கள் வேதாந்தம், சங்கராச்சாரியாரால் உண்டு செய்ததென்று வெளிவந்தகாலம் தொண்ணூறு வருஷத்திற்கு உட்பட்டதேயாகும்.
அதாவது, இச்சங்கரவிஜயமானது பஞ்சாங்க குண்டையனுக்கும், மார்க்கசகாய ஆச்சாரிக்கும் சித்தூர் ஜில்லா அதவுலத் கோர்ட்டில் வழக்கு நடப்பதற்கு முன்பு தோன்றியிருக்குமாயின் சிவனென்னும் கடவுளே சங்கராச்சாரியாக பிராமணர் குலத்தில் அவதரித்துள்ளபடியால் மார்க்கசகாய வாச்சாரிகுலத்தினும் பஞ்சாங்க குண்டையன் குலமே விசேஷித்ததென்று கோர்ட்டில் நிரூபித்து ஜெயம் பெற்றிருப்பார்கள். அக்காலத்திலில்லாமல் பிற்காலத்தில் தோன்றியபடியால் வேஷபிராமணர் வேதாந்தம் தொண்ணூறு வருடத்திற்கு உட்பட தோன்றியதென்றே துணிந்து கூறியுள்ளோம்.
ஆயிரவருடங்களுக்குட்பட இத்தேசத்தில் குடியேறியுள்ள ஆரியர்களென்னும் மிலேச்சர்கள் இத்தேசப் பூர்வபௌத்தர்களுக்கு மித்திரபேதச் சத்துருக்களாகத் தோன்றி புத்ததன்மங்களைப் பலவகையாலும் பாழ்படுத்தி தேசச் சிறப்பையும் சீர்கெடுத்து மேன்மக்களாம் பௌத்தர்களையும் பறையர்கள் என்று தாழ்த்தி பல வகையாலும் நிலைகுலையச் செய்ததுமன்றி தன்னவரன்னியரென்னும் பட்சபாதமின்றி நீதிசெலுத்தும் பிரிட்டீஷ் ஆட்சியிலும் பூர்வ பௌத்தர்களை முன்னேறாவண்ணம் வேண்டிய தடைகளை செய்து கொண்டும் வருகின்றார்கள்.
ஆதலின் இச்சரித்திரத்தைக் கண்ணுறும் சத்திய தன்மப் பிரியர்களும் நீதிவழுவாக்கனவான்களும் இவ்வெழிய நிலையிலுள்ள பூர்வ பௌத்தர்கள் மீது இதக்கம் வைத்து இவர்களுக்குற்றுள்ள இடுக்கங்களை நீக்கி ஆதரிக்கும்படி வேண்டுகிறேன்.
- 2:48, மே 12, 1909 -