அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/073-383

விக்கிமூலம் இலிருந்து

69. நமது கருணைதங்கிய இராஜாங்கத்தோரின் விசேஷ சுகாதாரம்

உலகெங்கும் பிரபலமிகுத்த பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் தங்கள் ஆளுகைக்குட்பட்ட குடிகள் யாவருக்கும் குப்பைகளாலுண்டாகும் கெடுதிகளைப் போக்கும் சுகாதாரங்களையும், கால்வாய்களாலுண்டாகுங் கெடுதிகளைப்போக்கும் சுகாதாரங்களையும் தொத்துவியாதிகளாலுண்டாகுங் கெடுதிகளைப்போக்கும் சுகாதாரங்களையும் கள்ளர்களாலுண்டாகுங் கெடுதிகளைப்போக்கும் சுகாதாரங்களையும் அளித்து கோழியானது தனது குஞ்சுகளை செட்டையில் பாதுகாத்துவருகிறதுபோல் ரட்சித்து வருகின்றார்கள்.

இத்தகைய பாதுகாப்பில் தங்கள் பார்வைக்கு அகப்படாததும், கேள்வியிற் படாததுமாகிய சிற்சில சுகக்கேடுகளுமுண்டு.

கிராமங்களில் வாசஞ்செய்யும் சில பெரியசாதிகளென்போர் தங்கள் கிராமத்திலுள்ள ஆடுகளை, மாடுகளை, கழுதைகளை, நாய்களைத் தீண்டிக்கொள்ளுவார்கள். ஆனால் சில மனிதசீவர்களை அம்மிருகசீலர்களிலுந் தாழ்ந்தவர்களென வகுத்து தீண்டாமலும் அவர்களைத்தலையெடுக்கவிடாமற் செய்துவருகின்றார்கள்.

இவற்றுள் கிராமவாசிகளில் பெரியசாதியென்பவன் ஒருவன் இறந்து போனால் என்ன வியாதியால் இறந்தான், ஏதுவியாதியால் இறந்தானென்னும் விசாரிணை உண்டு.

மிருகாதிகளிலும் தாழ்ந்தவர்களாக எண்ணப்பட்டிருக்கும் மனித கூட்டத்தோருள் ஒருவன் இறந்துபோவானாயின் அவன் என்ன வியாதியால் இறந்தான், ஏது வியாதியால் இறந்தானென்னும் விசாரிணையே கிடையாது.

காரணம், எவ்விதத்திலேனும் அக்கூட்டத்தோர் தலைகாட்டாது நசிந்துவிடவேண்டுமென்னுங் கருத்தேயாகும்.

இத்தகைய கொடுங்கருத்துடன் சாதிபேதம் வைத்துள்ள கனவான்களின் மத்தியில் ஓர் மாடேனும், ஆடேனும் செத்துப்போய்விடுமாயின் அதுபாம்பு முதலிய விஷ செந்துக்களால் மடிந்திருப்பினும் அவற்றைக் கருதாது அவ்விடம் மிக்க ஏழைகளாயுள்ள பேதை ஜனங்களைத் தருவித்து செத்த செந்துக்களை எடுத்துக்கொண்டுபோய் மாமிஷங்களை எடுத்துக்கொண்டு தோலைக் கொண்டுவந்து கொடுக்கும்படி உத்திரவு செய்துவிடுகின்றார்கள்.

அவ்வேழைமக்களோ தங்கள் பசியின் கொடுமெயால் அம்மாமிஷத்தை சமைத்துத்தின்று விஷவாயுவாலும், விஷபேதியாலும் நைந்து நாளுக்குநாள் க்ஷீணமடைந்துப்போகின்றார்கள்.

இவ்வேழைகுடிகளுக்கு நேரிட்டுவரும் கெடுதிகளை நீக்கி சுகாதாரமளிக்கக் கோருகிறோம்.

அதாவது ஒவ்வோர் முநிசபில் எல்லைகளுக்குள்ளும், கிராமங்களுக்குள்ளும் மரித்த மிருகசீவன்களை புதைக்குமிடமெனக் குறித்து அந்தந்த முநிசபில் எல்லைக்குள்ளும், முநிசபில் எல்லைகளுக்கு அப்புறப்பட்ட கிராமங்களுக்குள்ளும் மடியத்தக்க ஆடுகளையும், மாடுகளையும், குதிரைகளையுங் குறிக்கும் இடங்களில் கண்டிப்பாக புதைக்கும்படி உத்திரவு செய்தல் வேண்டும்.

அவ்வகையாயப் புதைக்கப்பெற்ற மிருகஜெந்துக்களின் எருவானது விருட்சங்களுக்கும், பயிருகளுக்கும் மிக்க உபயோகமாகும்.

மடிந்த மாடுகளையேனும், ஆடுகளையேனும், குதிரைகளையேனும் குறித்த இடங்களில் புதைக்காமல் மறைத்து உபயோகிப்பார்களாயின் அவற்றிற்கு உடையவர்களை கண்டிக்குஞ் சட்டங்களை வகுத்தல்வேண்டும்.

குடிகளுக்காய் கருணைதங்கிய ராஜாங்கத்தால் செய்திருக்கும் சுகாதாரங்களில் ஏழைகளை கண்ணோக்கி ரட்சிக்கும் சுகாதாரமே மிக்க மேலானதாகும்.

இத்தேசத்தில் பயிரிடும் விருத்தியை முன்னிட்டு உழைத்துவரும் சங்கத்தார் மிருகங்களின் எருவிருத்தியைக் கருதுவார்களாயின் தானியங்கள் விருத்தியடைவதுடன் ஏழைக்குடிகளும் வியாதியின்றி சுகமாக வாழ்வார்கள்.

- 3:9; ஆகஸ்டு 11, 1909 -