அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/076-383

விக்கிமூலம் இலிருந்து

72. சுரேந்திரநாத் பானர்ஜியார் கூறிய இந்தியா அமைதியில்லா காரணங்களும் அதன் மறுப்பும்

நமது கனந்தங்கிய பாபு சுரேந்திரநாத் பானர்ஜியாரவர்கள் இந்தியாவில் நேரிட்டுவரும் அமைதியுறா செயல்களுக்குக் காரணம் ஆறுவகையாகத் தெரிவித்திருக்கின்றார்.

அவிவேகிகளால் செய்யப்பட்டு வரும் அமைதியுறாச் செயல்களுக்கு அறிவுள்ளவர்களைக் காரணங் காட்டுவது ஆதாரமின்மெயேயாம்.

அதாவது இந்திய வாசிகளில் இராஜகீய சட்டதிட்டங்களும் பிரிட்டிஷ் ஆட்சியின் தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதமற்ற நிலையும், பெரியசாதி சின்னசாதியென்னும் பேதமற்ற அன்பையுங்கண்டு களிப்பவர்கள் நூற்றுக்கு ஒருவர் உளரோ, இலரோ என்பது சந்தேகமேயாம்.

எவ்வகையி லென்பீரேல், இந்தியருக்குள் ஆங்கில பாஷையைத் தெளிவற வாசித்து அவர்களது குணாகுணங்களை நன்குணரக்கூடியவர்கள் நூற்றிற்கு ஒருவரைத் தெரிந்தெடுப்பது கஷ்டமாம்.

ஆதலின் குடிகளின் அபிப்பிராயங்களை கவர்ன்மெண்டார் அடியோடு அவமதிப்பதினால் அமைதியில்லாமற் போயதென்று கூறுவது ஆதாரமற்ற வாக்கென்று கூறினோம்.

ஈதன்றி பிரிட்டிஷ் ஆட்சியின் ஒரு டிஸ்டிரிக்ட்டில் ஒரு ஐரோப்பிய கலைக்ட்டரிருப்பாராயின் மற்றயப் பியூன் முதற்கொண்டு ஆபீசு உத்தியோகஸ்தர்கள் யாவரும் இந்தியக் குடிகளாயிருக்க எக்குடிகளை கவர்ன்மெண்டார் அவமதித்து வருகிறார்களென்பது விளங்கவில்லை.

அவற்றினும் இந்தியரில் ஒருவனை கொலை குற்றத்திற்குத் தூக்க வேண்டுமாயினும் நான்கு இந்தியக் குடிகளின் அபிப்பிராயங்களைக் கேட்டே

தூக்கிவிடுகின்றார்கள். காக்கவேண்டுமாயினும் நான்கு இந்தியர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டே கார்த்துவருகின்றார்கள்.

ஆதலின் நமது பானர்ஜியாரவர்கள் கூறியுள்ள முதலாவதபிப்பிராயம் ஆதாரமற்றதேயாகும். இரண்டாவது அபிப்பிராயத்தில் கவர்ன்மெண்டார் சில சாதியோர்களைமட்டிலும் பட்சபாதமாக நடத்துவது அமைதியுறாச் செயலுக்குக் காரணமென்று கூறுகின்றார்.

அங்ஙனம் சிலசாதியோரைமட்டிலும் கவர்ன்மெண்டார் பட்சபாதத்துடன் நடத்துவதாயின் இந்தியக் குடிகளில் அவர்கள் யாராயிருப்பர். கவர்ன்மெண்டாரால் பட்சபாதகமாக நடத்தப்படுவதால் அமைதியில்லாததற்கு காரணமுண்டாகிறதென்று கூறுவாராயின் அக்காரணஸ்தர் யாவரும் இவருக்குத் தெரிந்தே இருக்கும்போலும்.

அவ்வகைத் தெரியாதிருக்குமாயின் முதற் கூறியுள்ள வாக்கியத்தில் பொதுவாக ஜனங்களின் அபிப்பிராயத்தைக் கவர்ன்மெண்டார் அடியோடு அவமதித்துள்ளார்கள் என்று கூறியவர் இரண்டாவது வாக்கியத்தில் சிலசாதியாரை பட்சபாதகமாக நடத்துங்காரணமென்று கூறுவதில் அச்சாதியாரிவருக்குத் தெரிந்தவர்களாயிருக்கவேண்டுமென்று உத்தேசிக்க நேரிடுகின்றது.

அத்தகைய சில சாதியோரால் பலசாதியோருக்குத் துன்பமுண்டாவதைக் கண்ட நமது பானர்ஜியார் அச்சாதியாருக்கு மதி கூறி சீர்திருத்தாத காரணமென்னை? சிலசாதியோர்களை கவர்ன்மெண்டார் பட்ச பாதகமாக நடத்துகிறார்கள் என்பதில் அச்சாதியோருக்கு சுகத்தைக் கொடுத்து ரட்சிக்கின்றார்களா அன்றேல் அசுகத்தை கொடுத்து சிட்சிக்கின்றார்களா, விளங்கவில்லை.

சுகத்தைக் கொடுத்து இரட்சித்தார்களென்பரேல் இரட்சிக்கப் பெற்றவர்களைக் காணோம். அசுகத்தைக் கொடுத்து சிட்சித்தார்கள் என்பரேல் சிட்சிக்கப்பெற்றவர்களையுங் காணோம். ஆதலின் நமது பானர்ஜியார் கூறியுள்ள இரண்டாவது வாக்கும் ஆதாரமற்றதேயாம்.

மூன்றாவது, காலஞ் சென்ற மகாராணியாரவர்கள் இந்தியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை பூர்த்தி செய்யாமல் இராஜாங்க நிருவாகத்தினின்று நீக்கி வைப்பதே அமைதியில்லாததற்கு காரணம் என்கிறார்.

கவர்ன்மெண்டார் இராணியார் வாக்கை பூர்த்தி செய்வதற்காகவே இந்தியர்களை தங்களைப்போல் ஜர்ஜிகள் நியமனங்களிலும், தங்களைப்போல் கலைக்ட்டர்கள் நியமனங்களிலும், தங்களைப்போல் அட்வோகேட்ஜனரல் நியமனங்களிலும், தங்களைப்போல் அட்மினிஸ்டிரேட்டர் நியமனங்களிலும் நியமித்தே முன்னுக்குக் கொண்டு வந்தார்கள்.

இதற்குள்ளாக இந்துக்களாகிய யாங்கள் சகல ராஜகீய காரியாதிகளையுந் தெரிந்துக்கொண்டோம், பிரிட்டிஷார் ஐரோப்பா கண்டம் போய் சேர்ந்துவிடுங்கள், எங்களுக்கு சுயராட்சியங் கொடுத்துவிடுங்கோளென்று குயின் விக்டோரியா மகாராணியாரவர்கள் தனது (பிராக்ளமேஷனில்) கூறாத வாக்கியத்தைக் கேட்க ஆரம்பித்துக் கொண்டபடியால் இராணியாரவர்கள் கொடுத்துள்ள வாக்கியச் செயல்களும் குறைந்து கொண்டே வருகிறது போலும்.

இராணியாரவர்கள் கொடுத்துள்ள வாக்கியங்களை இந்தியர்களுக்கு கவர்ன்மெண்டார் நிறைவேற்றிவருங்கால் இராணியார் கொடாத வாக்கியமாகும் சுதேசியத்திற்கு ஆரம்பித்துக்கொண்டபடியால் சொற்ப ராஜயே உத்தியோகங்களை அளித்து வருங்கால் சுயராட்சியம் வேண்டுமென்று வெளிதோன்றியவர்களுக்கு முற்றும் ராஜகீய சுதந்திரங்களை அளித்து விடுவதனால் கேட்காமலே சுயராட்சியஞ் செய்துக்கொள்ளுவார்களென்று உணர்ந்தோ இந்துதேசராட்சிய பரிபாலர்கள் கொடுத்துவந்த சுதந்திரங்களை குறைத்துவர ஆரம்பித்துக் கொண்டார்கள் போலும். ஆதலின் நமது பானர்ஜியாரவர்கள் இராஜகாரியா சுதந்திரத்தில் உள்ள குறைகள் யாவரால் உண்டாயதென்று உணராது கூறிய மூன்றாவது வாக்கியமும் ஆதாரமற்றதேயாம்.

நான்காவது இந்தியர்களை ஐரோப்பியர்கள் இழிவாக நடத்துவதால் இந்தியா அமைதியில்லா நிலையிலிருக்கின்றதென்று கூறுகின்றார். அதுவும் பிசகேயாம்.

ஐரோப்பியர்கள் இந்தியர்களை இழிவாக நடத்துவதானால் ஆலோசினை சங்கங்களில் இந்தியர்களை தங்களுடன் உட்கார வைத்து கலஞ்செய்வார்களா, ஜட்ஜி உத்தியோகங்களை அளித்துக் கனஞ்செய்வார்களா, கலைக்ட்டர் உத்தியோகங்களை அளித்துக் கனஞ்செய்வார்களா.

இந்தியர்களுக்கு ஆனரேபில் பட்டமளித்துவருவது இகழ்ச்சியா, புகழ்ச்சியா. இஸ்டார் ஆப் இன்டியா பட்டமளித்துவருவது இகழ்ச்சியா, புகழ்ச்சியா. திவான் பாதூர் பட்டமளித்துவருவது இகழ்ச்சியா, புகழ்ச்சியா. இராயபாதுர் பட்டமளித்து வருவது இகழ்ச்சியா, புகழ்ச்சியா, இத்தியாதி புகழ்ச்சிகள் யாவும் இந்தியருக்களித்து வருவதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் கண்டுவரும் நமது பானர்ஜியாரவர்கள் கவர்ன்மெண்டார் இந்தியர்களை இழிவுபடுத்தி வருகின்றார்களென்பது சாட்சியமற்ற சொற்களேயாம். ஆதலின் நமது பானர்ஜியார் அமைதியில்லாததற்குக் கூறியுள்ள நான்காவது காரணமும் ஆதாரமற்றதேயாம்.

ஐந்தாவது, ஆங்கிலோ இந்திய பத்திரிகைகளில் சில இந்தியரது நியாயமானவிருப்பங்களையும், மனோரதங்களையும் நிந்தித்து அவர்களுக்கு மனவருத்தம் உண்டாகும்படி எழுத, அப்பத்திரிகைகள் எழுதுவதை கவர்ன்மெண்டார் மதித்து ராஜாங்கம் நடத்துவதே அமைதியில்லாததற்குக் காரணமென்று கூறுகின்றார். இஃது முற்றும் பிசகேயாம்.

எவ்வகையாலென்பரேல், அமைதியுறாச் செயல்களாகும் சுதேசியக் கூச்சல்களும், புறதேச சரக்குகளைத் தடுக்கும் (பாய்காட்) கூச்சல்களும், வெடிகுண்டுக் கூச்சல்களும் உண்டாயப்பின்பு ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள் அவ்வகையாகப் பேசவர ஆரம்பித்ததா, இத்தகைய கூச்சல்கள் எழுவதற்கு முன்பே பத்திரிக்கைகளில் வரைந்துள்ளதாவென்பதை விசாரித்திருப்பாரேல் அமைதியுறாதிருப்பதற்குகாரணம் ஆங்கிலோ பத்திரிகைகள் என்று கூற மாட்டார். இந்தியர்களுக்குள் அமைதியுறாச் செயல்கள் தோன்றிய பின்னரே ஆங்கிலோ இந்தியப்பத்திரிகைகள் இந்தியர்களைக் கண்டித்துப் பேசியுள்ளவை அநுபவக்காட்சியாதலின் நமது பானர்ஜியார் இந்தியர்கள் அமைதியறாசெயலுக்குக் கூறியுள்ள ஐந்தாவது காரணமும் ஆதாரமற்றதேயாம்.

ஆறாவது வங்காளப் பிரிவினையே அமைதியுறாச் செயலுக்கு காரணம் என்கிறார். அதுவும் பிசகேயாம்.

காரணம் வங்காளப்பிரிவினையால் தூத்துக்குடியிலுள்ள இந்தியர்களுக்கு நேரிட்ட குறை என்னை, சென்னையிலுள்ள இந்தியர்களுக்கு நேரிட்டுள்ள குறை என்னை, மற்றுமுள்ள தேசத்தோருக்கு உண்டாய குறை சென்னை, அமைதியுறாசெயல்நேரிட்டதென்று நமது பானர்ஜியார் கூறியுள்ள ஆறாவது காரணமும் ஆதாரமற்றுள்ளபடியால் அவைகளை ஏற்பதில் பயனில்லையென்பது துணிபு.

- 3:10; ஆகஸ்டு 18, 1909 -

கனந்தங்கிய சுரேந்திரநாத் அவர்கள் கூறியுள்ள இந்தியாவின் அமைதியற்ற காரணங்களும், அதன் மறுமறுப்புங் காரணமுங் கூறுவாம்.

1-வது இந்தியக் குடிகளை கவர்ன்மென்டார் அடியோடு அவமதித்ததே அமைதியற்ற நிலைக்குக் காரணமென்கின்றார்.

இந்தியாவில் வாசஞ்செய்யும் அறுபது லட்சத்திற்கு மேற்பட்ட மநுக்களை மாடு, ஆடு, குதிரை, கழுதை, நாய் முதலிய மிருகஜெந்துக்களினுந் தாழ்ச்சியாக அவமதித்து வருவதுடன் மிக்க இழிவுகூறி நாணமடையச் செய்தும் வருகின்றார்களே இதை நமது பானர்ஜியார் அறிவார்போலும்,

2-வது. சில சாதியோரை கவர்ன்மென்டார் பட்சபாதமாக நடத்துவதே அமைதியற்ற நிலைக்குக் காரணமென்கின்றார்.

ஓர் ஐரோப்பியர் கலைக்ட்டராக வருவாராயின் மற்றும் வேண்டிய எட்கிளார்க், அஜுர் செருசதார், தாசில்தார், உத்தியோகங்களுக்காக ஐரோப்பியர்களையே தருவித்து வைத்துக்கொள்ளுகின்றார்களா, இல்லையே.

இவ் இந்துதேசத்திலுள்ளவர்களில் பிராமணரென்று சொல்லிக்கொள்ளுவோர்களில் ஒருவர் செருசதாராயினும் தாசில்தாராயினும் சேர்க்கப்படுவாராயின் நாலைந்து வருஷத்துக்குள் அந்த ஆபீசு முழுவதும் பிராமணரென்று சொல்லிக்கொள்ளுகிறவர்களே நிறைந்து விடுகின்றார்கள்.

இத்தகைய செயலுள் ஐரோப்பியர்கள் பாரபட்சமுடையவர்களா இந்தியர்களே பாரபட்சமுடையவர்களா என்பதை பானர்ஜியார் அறியார் போலும்.

3-வது. இராணியார் இந்துக்களுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதிகளை பூர்த்தி செய்யாது இராஜாங்க நிருவாகத்தில் ஒதுக்கிவைத்தலே அமைதியற்ற செயலுக்குக் காரணமென்கின்றார்.

இந்தியர்களுக்குக்கொடுத்துள்ள சுதந்திரங்களைக் கேட்போர்கள் தற்காலம் பெற்றிருக்கும் சுதந்திரங்களில் சகல சாதியோர்களும் அநுபவிக்கும் படியான வழிகளைத் திறந்திருக்கின்றார்களா, அடைத்திருக்கின்றார்களா என்பதை நமது பானர்ஜியார் அறியார்போலும்.

4-வது. ஐரோப்பியர்கள் இந்தியர்களை இழிவாக நடத்துவதே அமைதியற்ற செயலுக்குக் காரணமென்கின்றார்.

இந்துதேசத்திலுள்ள மநுக்களில் ஆறுபேருக்கு ஒருவராகத் தோன்றி தேகத்தை வருத்திசம்பாதிக்கக்கூடியவர்களும், சாதிபேதமில்லா விவேகிகளும் ஆனோர்களை பறையர்களென்றும் தீயர்களென்றும் சண்டாளர்களென்றும் இழிவு கூறிவருவதுமன்றி மற்றவர்கள் பிரிட்டிஷ் துரைத்தனத்தில் அடைந்து வருடம் சுதந்திரங்களை இவர்களை அடையவிடாமலும் இழிவுகூறி தாழ்த்தி வருவதை நமது பானர்ஜியார் அறியார்போலும்.

5-வது. ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள் இந்தியர்களின் நியாயமான விருப்பங்களை நிந்தித்துப் பேசிவர அப்பத்திரிக்கைகளை மதித்து கவர்மென்டார் நடத்துவதே அமைதியற்ற செயலுக்குக் காரணமென்கிறார்.

இந்து தேசத்தின் பூர்வக்குடிகளும் சகல சாதியாருக்குள்ளும் பெருந்தொகையினரான பூர்வபௌத்தர்களை பறையர்களென்றும், தாழ்ந்த சாதிகளென்றும் வகுத்து பொய்சரித்திரங்களை ஏற்படுத்தி புத்தகங்களில் அச்சிட்டுக்கொண்டு கூத்துமேடைகளில் அவமானப்படுத்தி வருவதும் ஆகிய பொறாமெய்ச் செயல்களை நமது பானர்ஜியார் அறியார்போலும்.

6-வது. வங்காளத்தை இரண்டு பிரிவினையாகப் பிரித்துவிட்டதே அமைதியில்லாச் செயலுக்குக் காரணமென்கின்றார்.

இந்துதேசத்தில் சாதியுள்ளவர்கள் யாவரும் ஒரு பிரிவு சாதியில்லாதவர்கள் யாவரும் ஒரு பிரிவென்று இரண்டாகப் பிரித்து சாதியள்ளவர்கள் மட்டிலும் தங்கள் கலாசாலைகளிலும், கைத்தொழிற் சாலைகளிலும் வந்து கற்றுக்கொள்ளலாமென்றும், சாதியில்லாதவர்கள் வரலாகாதென்றும், ஐயர்கள் வாசஞ்செய்யும் இடங்களை ஐயர்கள் வீதியென்றுகூறாமலும், நாயுடுகள் வாசஞ்செய்யும் வீதிகளை நாயுடு வீதிகளென்று கூறாமலும், முதலிகள் வாசங்செய்யும் வீதிகளை முதலிகள் வீதிகளென்று கூறாமலும், பூர்வ ஏழைக்குடிகள் வாசஞ்செய்யும் இடங்களுக்கு மட்டிலும் மயிலாப்பூரான் பறைச்சேரி வீதி, இராமசாமி முதலி பறைச்சேரி வீதியென்று போர்டுகளில் எழுதியே பிரித்து இழிவுகூறி வருகின்றார்கள்.

ஓர் தேசத்தை இரண்டாகப் பிரித்ததற்கே தோஷங்கூறிய பானர்ஜியாரவர்கள் மநுக்கூட்டத்தோர்களையே இருவகையாகப் பிரித்து இழிவு கூறிவருவதை அறியார் போலும்.

அந்தோ நமது கனந்தங்கிய பானர்ஜியர் இந்தியாவிலுள்ள இத்தியாதி ஒற்றுமெய்க்கேடுகளையும் உணராது அமைதியற்ற நிலைக்குக் கூறிய அறுவகைக் காரணங்களும் வீணேயாம்.

பானர்ஜியார் கூறியுள்ளது வீணாயின், இந்தியா அமைதியற்றச் செயலுக்கு நீவிர் ஏதேனும் காரணங் கூறப்போமோவென்பாராயின் கூறுவோமென்போம்.

அவைகள் யாதென்பீரேல், பிரிட்டிஷ் துரைத்தனம் இந்தியாவைக் கைப்பற்றி அரசாண்டகாலத்தில் கல்வியின் விருத்தியை மிக்கக்கவனியாது அவரவர்கள் அந்தஸ்துகளையும், யோக்கியதைகளையும், விவேகப் பெருந்தண்மெயுங் கண்டு உத்தியோகங்கொடுத்துக்கொண்டு வந்ததினால் நீதிவழுவாது குடிகளும், அரசும் அன்புபொருந்தி அமைதியுற்று வாழ்ந்துவந்தார்கள்.

அத்தகைய செயல்கள் நீங்கி பி.ஏ., எம்.ஏ., முதலிய கெளரதாட்டம் பெற்றவர்களுக்குத்தான் அந்தஸ்தான உத்தியோகங்கள் கொடுக்கப்படுமென்று ஓர் நிபந்தனை ஏற்பட்டடதின் பேரில் அந்நிபந்தனையை மலையிலக்காகக் கொண்டவர்கள் இரவும் பகலும் உருபோட்டு பி.ஏ., எம்.ஏ., முதலியப் பட்டங்களைப் பெற்று வேலையற்ற வாசித்தக் கூட்டங்கள் பெருகிவிட்டது.

அவ்வகையாகப் பெருகி உள்ளவர்களில் சில கூட்டத்தோருக்கு வேறு வேலைகள் தெரியாத விஷயத்தினாலும், கவர்ன்மென்டு வேலைகள் கிடைக்காத விஷயத்தினாலும் கல்வியற்றக் குடிகளைத் தூண்டிவிட்டு கடக்க நின்று பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழரைப்போலிருப்பவர்களே அமைதியற்ற செயலுக்கு முதற்காரணர்களாவர்.

இந்தியா அமைதியில்லாச் செயலுக்கு இரண்டாவது காரணம் யாதென்பீரேல்:-

பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நிலைத்த காலத்தில் பெருத்த ராஜகீய உத்தியோகங்கள் யாவும் மிலிட்டேரி துரைமக்களே ஆண்டுவந்தார்கள்.

தற்காலம் அத்தகைய மிலிட்டேரி துரை மக்கள் பெயர்களுமற்று இராணுவவீரர்களையும் குறைத்து இராணுவவீரர்கள் வீடுகடோரும் பறக்குங் கொடிகளும் மறைந்து விட்டபடியால் பிரிட்டிஷ் துரைத்தனத்தை அரசர்களென்னும் சம்மார கர்த்தர்களாக எண்ணாது “அண்டைவீட்டுக்கார அப்பாசாமி” தானென் றெண்ணிக்கொள்ளும் பழமொழிபோல் அமைதியற்ற செயல்களை ஆனந்தமாகச் செய்துவருகின்றார்கள்.

நமது கருணைக்கடலாம் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் பெரிய (பாஸ்) எம்.ஏ, சின்ன (பாஸ்) பி.ஏ, என்னுஞ் சட்டதிட்டங்களைக் கட்டோடொழித்து அவரவர்கள் அந்தஸ்திற்கும், விவேகத்திற்கும் தக்கவாறு அந்தந்த டிபார்ட்மென்ட் பரிட்சைகளை வைத்து உத்தியோகங்களைக் கொடுப்பதுமன்றி அந்தந்த டிஸ்டிரிக்ட்களில் இராணுவங்களையும் நிலைக்கச் செய்வார்களாயின் இந்துதேசக்குடிகள் யாவரும் அன்றே அமைதியடைவதுடன் சகலகுடிகளும் சுகமுற்று வாழ்வார்கள்.

- 3:11: ஆகஸ்டு 25, 1909 -