அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/081-383

விக்கிமூலம் இலிருந்து

77. தற்கால கவுன்சல் சட்ட சங்கை

தற்காலம் வெளிவந்துள்ள இராஜாங்க கவுன்சல் நியமனங்களில் மகமதியர்களென்றும், இந்துக்களென்றும் பிரிக்கப்படாது. அவ்வகைப் பிரிப்பதினால் எங்களுடைய ஒற்றுமெய்க் கெட்டுப்போகுமென்று பயிரங்கப் பத்திரிகைகளில் கூச்சலிடுகின்றார்கள்.

இத்தகையாய்க் கூச்சலிடுவோர் தங்கடங்கள் அனுஷ்டானங்களில் வழங்கிவரும் வாக்கியங்களை நோக்குவதைக் காணோம்.

அதாவது நீவிரென்னசாதியென்று கேழ்க்கும் வார்த்தை இந்துக்களில் ஒருவரையும் விட்டகன்றதில்லை. அத்தகைய வினாவிற்கு தான் இந்து என்று ஒருவன் சொல்லிவிடுவானாயின் உனது குறுக்குப்பூச்சுனாலும், நெடுக்குப் பூச்சுனாலும் தெரிந்துக்கொண்டேன், உட்பிரிவென்ன சாதியெனவென்று கேழ்க்கின்றார்கள்.

இத்தியாதி குறுக்குப்பூச்சு, நெடுக்குப் பூச்சு, வேதாந்தவேஷ முதியோர்களையும் இந்துக்களென்றால் ஒப்புக்கொள்ளாது உன்சாதியென்ன சமாத்தென்னையென்று கேட்கும்படியானக் கூட்டத்தார் தங்கள் மதத்திற்கும், சாதிக்கும் சம்மதப்படாத மகமதியர்களையும் இந்துக்களென்று கூறி வெளிவந்தது விந்தையேயாம்.

சகல சாதியோரையும், மதத்தோரையும் இந்துக்களென்றே பாவிக்க வேண்டுமென்னும் நல்லெண்ணம் இவர்களுக்கு இருக்குமாயின் சகலசாதி, சகல மதம், சகலபாஷைக்குடிகளில் விவேகமிகுத்த ஒவ்வொருவரும் ஆலோசினை சங்கத்தில் உட்கார்ந்து குடிகளுக்கு நேரிட்டுவருங் கஷ்ட நஷ்டங்களை அகற்றி ஆதரிக்கலாமென்று கூறலாகாதோ.

இந்தியாவில் சகலசாதி, சகலமதம், சகலபாஷையோர் இருக்கின்றபடியால் சகலசாதியோர்களிலும் ஒவ்வோர் அங்கங்களை நியமித்து ஆலோசினைச் செய்வதால் சகலரும் சுகமடைவார்களா அன்றேல் இந்தியர்களென்று கூறி ஒரே சாதியோரை ஆலோசினை சங்கத்தில் சேர்ப்பதால் சகலசாதியோரும் சுகமடைவார்களா.

பிச்சைக் கொடுப்பதில் தங்கள் சாதியோரைமட்டிலும் பார்த்துப் பிச்சைக் கொடுப்போர் வசம் இராஜாங்கப்பார்வையையுங் கிஞ்சித்து விட்டுவிடுவார்களாயின் யாருக்கு சுகமளித்து யாரைப் பாழாக்கிவிடுவார்களென்பதற்கு சாட்சியம் வேண்டுமோ.

வேண்டுவதில்லை. ஆதலின், கருணைதங்கிய இராஜாங்கத்தார் தாங்கள் ஏற்படுத்தும் ஆலோசினை சங்கத்தில் சகல சாதியோர்களையும் சேர்த்து அவரவர்கள் குறைகளைத் தேறவிசாரித்து தேச சீர்திருத்தஞ் செய்வதே சிறப்பாகும். அச்சிறப்பே பிரிட்டிஷ் ராட்சியபாரத்தை நிலைக்கச் செய்யும். அந்நிலையே சகல குடிகளுக்கும் இராஜவிசுவாசத்தைப் பரவச்செய்து சுகமளிக்குமென்பதாம்.

- 3:14; செப்டம்பர் 15, 1909 -