அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/092-383
88. சாதிபேதமுள்ள இந்தியர்களுக்கு ஆங்கிலேயர்களைப்போல் பெருத்த உத்தியோகம் வேண்டுமாம். சாதிபேதமற்ற இந்தியர்களுக்கு யாதும் வேண்டாம் போலும்
ஆங்கிலேயர்களுக்கு மட்டிலும் உயர்ந்த உத்தியோகங்களைக் கொடுத்து வருகின்றார்கள், இந்தியர்களுக்குக் கொடுப்பதில்லை என்று நியாயங் கூறுகிறவர்கள் தங்களுடன் இந்து தேசத்தில் வாழும் மற்ற ஏழைக்குடிகளும் அத்தகைய சுகமடைய வேண்டுமென்னும் சீர்திருத்தம் ஏதேனும் செய்திருக்கின்றார்களா.
இல்லை. அதாவது, ஒருவனுக்கும் சொந்தமில்லாத பொதுவாகிய குளங்களிலும் கிணறுகளிலும், பெரியசாதி என்னும் பெயர்வகித்துக்
கொண்டுள்ளார்களில் ஒருவன் குஷ்டரோகியாயினும், வைசூரி கண்டவனாயினும் போய்த் தடையின்றி குளிக்கலாம். சொரிபிடித்த நாய் அதிலிரங்கி நீரருந்தலாம். அவர்களது சொரிபிடித்தமாடு சொரிபிடித்தக் குதிரைகளைக் கழுவலாம். அவர்களால் தாழ்ந்த சாதியோர்களென்று வகுக்கப்பட்ட ஆதி திராவிடர்கள் மட்.டி. லும் அந்நீரில் இரங்கப்படாது. தாகவிடாயால் தவித்தபோதிலும் அந்நீரை அருந்தப்படாது.
இத்தகைய சீவகாருண்ய மற்றவர்கள் ஆங்கிலேயர்கள் அநுபவிக்கும் பெரும் உத்தியோகங்களை வேண்டுமென்பது நீதியாமோ. பொதுவாகியக் குளங்களில் நீரருந்தவிடாத புண்ணிய புருஷர்களுக்கு பெரும் உத்தியோகம் வேண்டுமென்று கேழ்ப்பதற்கு என்ன சுதந்திரமிருக்கின்றது.
இந்துதேசத்தின் பூர்வக் குடிகளாகிய ஆதிதிராவிடர்களுக்கு பொதுவாகிய குளங்களில் நீரருந்தும் சுவாதீனமில்லாதபோது மத்தியிற் குடியேறி உள்ளவர்களுக்கு ஆங்கிலேயர்களைப் போல் பெரும் உத்தியோகங்கள் வேண்டுமென்று கேட்பதற்கும், அவ்வகைக் கொடாததால் மனத்தாங்கல் உண்டாகுமென்று கூறுவதற்கும் என்ன நியாயம் இருக்கின்றது.
இத்தேசத்துள்ள சகல குடிகளுக்கும் சமரச சுகமும், சமரச ஆட்சியம் நடத்தி விட்டு தங்கள் சுகத்தைக் கருதுவார்களாயின் அதனைத் தடையின்றி அநுபவிப்பார்கள். அங்ஙனமின்றி தங்கள் மித்திரபேதத்தால் தாழ்ந்த சாதிகளென்று வகுக்கப்பட்ட ஆறுகோடி ஏழைமக்களும் அடியோடு நாசமாகவேண்டும். ஆங்கிலேயர்களைப் போல் தாங்கள் மட்டும் சுகமடைய வேண்டுமென்றால் பொதுவுள்ளமிடங்கொடுக்குமோ ஒருகாலுங் கொடாவாம்.
இத்தகைய ராஜாங்க சீர்திருத்த உத்தியோகத்துள் பெருத்த உத்தியோகத்தை ஓர் ஆங்கிலேயர் அநுபவிப்பாராயின் அவருடைய ஆதரவால் இத்தேசக் குடிகளில் பிள்ளை பெண்சாதிகளுடன் ஆயிரம் பேர் பிழைப்பார்கள். அவ்உத்தியோகத்தை இந்தியர் ஒருவருக்குக் கொடுத்தாலோ பத்துபேர் பிழைப்பது அரிதாகும். இவற்றுள் ஆயிரம்பேர் பிழைப்பது சுகமும் சீருமாகுமா. பத்துபேர் பிழைப்பது சுகமும் சீருமாகுமா. பெருந்தொகைபார் சீருஞ் சிறப்புமடைவதே தேசசீர்திருத்தத்திற்கு ஆதாரமாதலின் அந்தஸ்தான பெருத்த உத்தியோகங்களை ஆங்கிலேயர்களுக்கு அளிப்பதே அழகாகும்.
அதை தவிர்த்து மற்றவர்களுக்குப் பெருத்த உத்தியோகங்களைக் கொடுப்பது அவர்கள் குடும்பத்தோர்மட்டிலும் சுகத்தை அநுபவித்துக் கொண்டு வியாபாரிகளும் குடும்பிகளும் நசிந்து போவார்கள். நமது தேசமும், தேசத்தோரும் சீர்பெறவேண்டுமென்போர் ஆங்கிலேயர்கள் சிறப்பையும் அவர்கள் சுகத்தையும் விரும்பபல்வேண்டும்.
- 3:21; நவம்பர் 3, 1909 -