அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/109-383
105. பி.ஏ. எம்.ஏ. முதலிய பட்டம் பெற்றவர்களுக்குத்தான் கவுன்சலர் மெம்பர் ஸ்தானம் அளிக்க வேண்டுமோ
பி.ஏ.எம்.ஏ. என்னுங் கல்வியானது ஓர்குணிப்பில் அடங்கியது. அவரவர்களின் சுயபாஷாகல்வி விருத்தியானது விவகார விருத்தியை எவ்வகையானும் அறியச்செய்யுமேயன்றி விழலாகாது. ஈதன்றி சுய பாஷையுடன் ஆங்கிலபாஷையும் நன்கு எழுதப்படிக்கக் கற்றுக் கொள்ளுவார்களாயின் உலகவிவகாரங்களை இன்னும் விளங்க சீர்திருத்துவார்கள். இஃது அநுபவப் பிரத்தியட்சமாகும்.
எவ்வகையிலென்பீரேல், பி.ஏ. எம்.ஏ. முதலிய கெளரதாபட்டங்களும் இன்ன பரிட்சையில் தேர்ந்தவர்களுக்கே இன்ன உத்தியோகங்கொடுக்கபடுமென்றும் நிபந்தனைகள் இல்லாதகாலத்தில் சொற்பக் கல்வியைக் கொண்டு நடாத்தி வந்த நியாயாதி நிலைகளும், விவகார நிலைகளும் சீர்திருத்த நிலைகளும் எவ்வளவோ சுகமாகி நிறைவேறிவந்ததை பூர்வநிலை கட்டுகளால் அறிந்துக்கொள்ளலாம்.
இவற்றுள் ஆஸ்பிட்டல் அசிஸ்டென்டுகளை முதலாவது எடுத்துக் கொள்ளுவோம். பிரிட்டிஷ் துரைத்தனம் நிலைத்து தரும் வைத்தியசாலைகளை வகுத்து ஆஸ்பிட்டல் அசிஸ்டென்டுகளை நியமித்த போது அவர்கள் யாவரும் பி.ஏ. எம்.ஏ. பட்டமின்றி எழுதவும் படிக்கவுங் கூடியவர்களாய் இருந்தபோதிலும் தேகலட்சணங்களையும் வியாதிகளின் பாகுபாடுகளையும், மருந்துகளின் குணாகுணங்களையும் நன்காராய்ந்து வியாதியஸ்தர்களை வைத்தியசாலைகளில் அன்புடனாதரித்து சுகப்படுத்தி வேண்டிய கீர்த்திகளும் நற்சாட்சி பத்திரங்களும், உபகாரச் சம்பளமும் பெற்று சுகித்திருக்கின்றார்கள்.
ஆனால் அவர்கள் செய்துவந்த வைத்திய சிகிட்சையோ காடுகளிலும், மலைகளிலும் சுற்றி மியூட்டினிகளிலும், யுத்தகளங்களிலும் நின்று செய்து அனந்தங் கீர்த்திப் பெற்றிருக்கின்றார்கள். இத்தகையக் கீர்த்திப் பெற்றவர்கள் யாதொரு கல்வியின் பட்டப்பெயரில்லாமல் இராஜவிசுவாசத்தினாலும், வியாதியஸ்தர் மீது அன்புபாராட்டி அதி பக்தியுடன் செய்துவந்த சிகிட்சையினாலுமே பெற்றார்கள்.
பி.ஏ, எம்.ஏ. முதலிய கெளரதாபட்டம் பெறாத நியாயாதிபதிகளும், சாட்சிகளின் வார்த்தைகளையே முக்கியமாக நம்பிக் கொள்ளாமல் தாங்கள் கேழ்க்குங் கேழ்விகளினால் மெய் பொய்யறிந்து சகலரும் மெச்சத்தக்க தீர்ப்புகளளித்திருக்கின்றார்கள்.
அதாவது, 50-வருடங்களுக்கு முன்பு நடந்த ஓர் சிவில் வியாஜ்ஜியத்தில் ஒரு வஞ்சகன் மற்றோர் கைம்பெண்ணிடம் பணமிருப்பதறிந்து யாருமற்ற ஓர் மரத்தடியிற் கொண்டுபோய் நிறுத்தி தனக்கு பத்து ரூபாய் கடன் கொடுக்கும்படிக் கேட்டுப் பெற்றுக்கொண்டு சிலகால் சென்றபின் நான் வாங்கவில்லையென்று மறுதலித்து விட்டான். கைம்பெண்ணானவள் துக்கித்து அதிகாரிகளிடம் பிரையாது கொடுத்துவிட்டாள். வாதியும், பிரதிவாதியும் கோர்ட்டில் நின்றபோது நியாயாதிபதி கைம்பெண்ணைநோக்கி பிரதிவாதிக்கு நீர்பணங்கொடுக்கும் போது யாராவது பார்த்ததுண்டாவென்றார், யாரும் பார்க்கவில்லையென்றாள். மற்றும் அப்பணத்தை எங்கு நின்று கொடுத்தாய் என்றார், ஓர் மரத்தடியில் நின்று கொடுத்தேனென்றாள். அம்மரமேனும் பார்த்திருக்குமே என்றார், ஆம் பார்த்திருக்குமென்றாள். ஆனால் அம்மரத்தின் இலையோடுகூடிய ஓர் சிறு கிளையை ஒடித்துவாவென்று உத்திரவளித்தார்.
உடனே கைம்பெண்ணானவள் கோர்ட்டை விட்டிரங்கி 100-கெஜ தூரம் போகும்வரையில் நீதிபதி வேறு கியாபகங்காட்டி பிரதிவாதியை நோக்கி உன்மீது பிரையாது கொடுத்துள்ள வாதியானவள் அம்மரத்தடியில் சென்றிருப்பாளா வென்றார், அதைக்கேட்ட பிரதிவாதி அம்மரம் வெகு தூரத்திலிருக்கின்றது இன்னும் போய் சேரமாட்டாளென்றான். இவனது வார்த்தையைக் கொண்டே கைம்பெண் பணத்தை வாங்கிக்கொண்டு மோசஞ் செய்யும் பொய்யனென்றறிந்து வாதியாகியக் கைம்பெண்ணை வரவழைத்து அவள் பக்கம் தீர்ப்பளித்திருக்கின்றார்.
இன்னும் இவைபோன்ற வியாஜ்ஜியங்களில் நியாயாதிபதிகளும், நியாயவாதிகளும் மெய் பொய்யறிந்து நடத்தியுள்ள தீர்ப்புகளை நிலைவாய்ந்த கட்டுகளிற் காணலாம்.
சாட்சிகளின் வார்த்தைகளைப் பெரும்பாலும் நம்பாமலே தங்கள் யுக்தியால் மெய் பொய் கண்டுபிடித்து நீதியளித்து கீர்த்திபெற்றார்கள்.
அவர்கள் சாட்சிகளை பெரும்பாலும் நம்பாமல் மெய்யறியும் வரையில் தேறவிசாரித்து தீர்ப்பளித்து வந்த காரணம் யாதெனில், மெய்யைச் சொல்லுவோனும், வானமறியபூமியறிய சுவாமியறிய நான் சொல்லுவதெல்லாம் நிஜமென்றான், பொய்யைச் சொல்லுவோனும் வானமறிய பூமியறிய சுவாமியறிய நான் சொல்லுவதெல்லாம் நிஜமென்கின்றான். இவ்விருதிரத்தாருள் எவன் பொய்யைச் சொல்லுகின்றான், எவன் மெய்யைச் சொல்லுகிறானென்று நியாயாதிபதி நம்பக்கூடும். ஆதலின் இருவரையும் தேறவிசாரித்து மெய்கண்டு நீதியளித்திருக்கின்றார்கள்.
பிஏ.எம்.ஏ. முதலிய கெளரதாபட்டங்களைப் பெறாமலே தாங்கள் கற்றுள்ள சொற்பக் கல்வியைக் கொண்டே விவேகவிருத்தி பெற்று மேலாய கீர்த்தியடைந்த பேர் அனந்தமிருக்கின்றார்கள்.
ஈதன்றி இரயில்வே கண்டுபிடித்தவரும், டிராம்வே கண்டுபிடித்தவரும், பொட்டகிராப் கண்டுபிடித்தவரும், லெத்தகிராப் கண்டுபிடித்தவரும், டெலிபோன் கண்டுபிடித்தவரும், கிராமபோன் கண்டுபிடித்தவரும் என்ன பட்டங்களைப் பெற்றிருந்தார்கள். தாங்கள் சாதாரணமாகக் கற்றக் கல்வியால் விவேக விருத்திப் பெற்று வித்தியாவிருத்தியால் தாங்கள் குபேரசம்பத்தாக வாழ்வதுடன் தங்கள் வித்தையைப் பின்பற்றினோரையுஞ் சுகம்பெறச் செய்திருக்கின்றார்கள்,
அவர்களைப்போல் பி.ஏ.எம்.ஏ முதலிய கெளரதா பட்டம் பெற்றவர்கள் சகலோபகாரிகளாக விளங்காது தாங்களும் தங்கள் குடும்பத்தோரும் பிழைக்கின்றார்களன்றி ஏனையோர் யாவரேனும் சுகம் பெறுகின்றார்களா, இல்லையே. இத்தகையப் பட்டம் பெற்றவர்களைக் கொண்டு கௌன்சல் மெம்பாரில் சேர்ப்பதினால் யாருக்கு என்ன சுகம் உண்டுசெய்வார்கள். தங்களுக்கு கொடுத்த பாடத்தை உருவுபோட்டு பெற்றுக்கொண்ட பி.ஏ, எம்.ஏ., கெளரதாபட்டங்களுடன் ஆனரேபில் பட்டத்தையுஞ் சேர்த்துக்கொண்டு தங்கள் சுகத்தைப் பார்ப்பார்களன்றி ஏனையோர் சுகத்தை கனவிலும் நினையாரென்பது திண்ணம். சாதியாசாரம் பெற்றவர்கள் கெளரதாபட்டம் பெறுவார்களாயின் யாருக்கு பலன் செய்வர் தங்களுக்கும், தங்கள் சாதியோர்களுக்கு மேயாம்.
இத்தியாதி செயல்களையும் நன்காராய்ந்து இராட்சியபாரஞ் செய்துவருங் கருணைதங்கிய ராஜாங்கத்தோர் பி.ஏ, எம்.ஏ. முதலிய கெளரதாபட்டம் பெற்றவர்களென்றும், பெறாதவர்களென்றும் பாரபட்சம் பாராது அவரவர்கள் யோக்கியதைக்கும், அந்தஸ்திற்கும், ஒழுக்கத்திற்கும் தக்கவாறு அந்தந்த வகுப்பினருள் கண்டெடுத்து ஆலோசனை சங்கத்திற்சேர்த்து அவரவர்கள் வகுப்பில் நேர்ந்துவருங் குறைகளை விசாரித்து ஏழைகளை ஆதரிப்பார்களென்று நம்புகிறோம்.
- 3:31: சனவரி 12, 1910 -