அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/131-383
127. சுயராஜ்ஜியம் சுயராஜ்ஜியம் என்னும் பத்திரிகா கூச்சல்களும் சுயராஜ்ஜியப்பேச்சுகளும்
நமது இந்திய சோதிரர்களில் இரண்டொருவர் மனோபிராந்திகொண்டு சுயராட்சியம் வேண்டுமென்று கூச்சலிடவும் அவர்களது அந்தரங்கக்கருத்து இன்னதென்று அறியாத சிலக்கூட்டத்தோர் அவர்களைப் பின்பற்றி சுயராட்சியமென்னும் கூச்சலிடுவதையும் யோசிக்குங்கால் (கோவிந்தம்) போடுவோர் கூச்சலுக்குசமதையாய் இருக்கின்றது.
எவ்வகையிலென்பீரேல் நமது தேசத்தோரிற் சிலர் பிரேதமெடுத்து செல்லுகையிலும், சிவாலயங்களுக்குப் போம்போதும் யாவரேனும் ஒருவர் கோவிந்தமென்னுங் கூச்சலிடுவாராயின் கூடச் செல்லுவோர் யாவரும் கோவிந்தமென்று கூச்சலிடுவது வழக்கமாகும். அவர்களுள் கோவிந்தமென்று முதற்கூச்சலிட்டவருக்கும் அதன் காரணம் தெரியாது, அவரைப் பின்பற்றி சொன்னவர்களுக்கும் அதன் காரணம் தெரியாது. இக்கோவிந்தமென்னும் வார்த்தையின் கூச்சலால் ஓர் சுகமுங் கிடையாது, துக்கமுங்கிடையாதென்பது திண்ணம்.
சுயராஜ்ஜியமென்னும் வார்த்தையின் கூச்சலால் யாதொரு சுகமுங் காணாது போவதுடன் கலகமும் துக்கமும் பெருகிக்கொண்டே வருகின்றதென்பது அநுபவக் காட்சியேயாம். அதாவது சுயராஜ்ஜியமென்னும் பத்திரிகைகளை ஏற்படுத்தியிருந்தோர் பட்டபாடுகளையும் சுயராஜ்ஜிய கூச்சலிட்டுத்திரிந்தோர் துக்கக்கேடுகளையும் பத்திரிகைகளின்வாயலாகக் கண்டதுடன் பிரத்தியட்ச அநுபவத்திலுங் கண்டுள்ளோம். இதனது அநுபவத்தை நாளுக்குநாள் கண்டுவருவோர் அதனை கவனியாது வீணே சுயராஜ்ஜியம், சுதேசிய மென்னும் கூச்சலிடுவோர்பாற் கூடி. “தானும் வெந்து ஊரையும் வேகடித்தக் குரங்கு கதைக்கொக்க” தாங்களும் கெட்டு தேசத்தோருக்கும் கேட்டை உண்டாக்கிவைப்பது அழகல்ல. விவேகிகளின் அழகு யாதென்னில், தாங்கள் கெட்டாலும் தங்கள் தேசத்தோர்க்கு சுகத்தை தேடி வைத்தல் வேண்டும். அங்ஙனம் தேசத்தோர்க்கு சுகத்தை தேடிவைக்காவிடினும் தேசத்தோர்களால் நல்லவனென்று சொல்லும்படியாகவேனும் ஒழுகல் வேண்டும்.
இத்தகைய இரண்டுகுணமுமின்றி தீட்டிய மரத்திற் கூர் பார்ப்பதுபோல் சுயராஜ்ஜியம் வேண்டும் சுயராஜ்ஜியம் வேண்டுமென இராஜாங்கத்தோரை எதிர்த்து தாங்களும் கெட்டழிவதுடன் தேசக்குடிகளையும் இராஜாங்கத்தோருக்கு விரோதிகளாக்கிவருகின்றார்கள்.
அதாவது சுயப்பிரயோசனத்தை நாடி உழைப்பவர்களிற் சிலர் தங்கள் சுயப்பிரயோசனச் செயல்கள் நீதிநிறைந்த ராஜாங்கத்தோரால் மாறுபடுகின்றதென்றறிந்து இராஜாங்கத்தோருக்கும் குடிகளுக்கும் விரோதத்தை உண்டாக்கத்தக்க மித்திரபேதங்களைச் செய்துவருகின்றார்கள். அவர்களது சுயப்பிரயோசன மித்திர பேதங்களை அறியாதக் குடிகள் யாவரும் துக்கத்தை அநுபவிக்க வேண்டியதேயாகும்.
“ஆய்ந்தோய்ந்து பாராதவன் தான்சாகக்கடவ” னென்னும் பழமொழிக்கிணங்க முன்பின் ஆலோசியாது ஓர் கூட்டத்துடன் சேர்ந்துகொண்டு கூச்சலிடுவது கேட்டிற்கே மூலமாம்.
அன்பர்களே சற்றாலோசித்துப் பாருங்கள். பெஷாவாரென்னும் தேசமானது இந்தியாவின் ஓர் சிறிய மூலையும் சிறிய தேசமும் சொற்பக் குடிகளும் அமர்ந்த நாடேயாகும். அத்தகைய சொற்பநாட்டில் மகமதிய சகோதரர்களுக்கும் இந்துசகோதரர்களுக்கும் மதசம்பந்த கலகமுண்டாகி பொருட்சேதங்களும் உயிர்ச் சேதங்களும் உண்டாயபோது சுயராஜ்ஜியம் கேட்டுத்திரியும் சுத்தவீரர்கள் ஒருவரும் சென்று அவர்களுக்கு உதவிபுரிந்தார்களில்லை. அத்தேச இந்துக்களோ கஷ்டம் சகிக்கமுடியாது பிரிட்டிஷ் ராணுவங்களானது உடனே சென்று மகமதிய சகோதரர் மனத்தாங்கலையும், இந்து சகோதரர்கள் மனத்தாங்கலையும் அகற்றி ஒருவருக்கொருவர் முன்போல் ஒற்றுமெயிலும் ஐக்கியத்திலும் வாழும் வாழ்க்கைகளை நிலைப்படுத்திவருகின்றார்கள்.
சுயராஜ்ஜியக் கூச்சலிடும் கூட்டத்தோர்களே, பிரிட்டிஷ் ஆட்சியின் வல்லபத்தையும் தன்னவரன்னியரென்னும் பேதமற்ற குணத்தையும் ஆபத்து பந்துவைப்போல் ஆதரிக்கும் ஆதரவையும் ஆழ்ந்த ஆலோசியுங்கள்.
இத்தகைய, சுத்தகுண பிரிட்டிஷ் ஆட்சியை வெறுத்து சுயராஜ்ஜியம் வேண்டுமென்று கேட்பதானால் சுயராஜ்ஜியம் மராட்டியர் பால் ஒப்படைப்பதா, கன்னடர்பால் ஒப்படைப்பதா, திராவிடர்பால் ஒப்படைப்பதா. மராட்டியர்பால் ஒப்படைப்பதால் இந்திய தேசத்தோர் யாவரும் மராட்டியம் கற்று மகிழ்ச்சி அடைவரோ, கன்னடங்கற்று தேர்ச்சியடைவரோ, ஒருக்காலுமடைவதில்லை மராஷ்டகம் ஒரு பாஷையாயின் அதனுட்பிரிவு சாதிகள் இருநூற்றுக்கு மேற்பட்டுப்போம். திராவிடம் ஒருபாஷையாயின் அதனுட்டபிரிவு சாதிகள் முன்நூறுக்கு மேற்பட்டுப்போம் இத்தியாதி ஒற்றுமெய்க் கேடமைந்தவர்கள் சுயராஜ்ஜியமென்னும் வார்த்தையைக் கூறவும் கேழ்க்கவும் நாவுண்டோ இல்லை.
பிரிட்டிஷ் ஆட்சியோ அங்ஙனமன்று. சருவ சாதி, சருவ பாஷை, சருவ சமயத்தோருக்கும் தங்கள் சிறந்த ஆங்கிலபாஷையைக் கற்பித்து வித்தையிலும் புத்தியிலும் தேர்ச்சியடையச்செய்து சகல மக்களையும் சுகநிலைப்பெறவைத்து தங்கள் செங்கோலை செலுத்தி வருகின்றார்கள்.
இத்தகைய நீதியும், நெறியும், வாய்மெயும் அமைந்த செங்கோலை வெறுத்து பொறாமெயும், வஞ்சினமும், குடிகெடுப்பும் அமைந்த குணத்தால் சுயராட்சியம் விரும்புவதாயின் மேற்கூறிய செங்கோல் மறைந்து கொடுங்கோல் தோன்றுமென்பதற்கு ஆட்சேபமிராவாம்.
காரணம், சொற்பதேசமாகிய பெஷாவாரில் நடந்தகலகத்தை அடக்கியாட்கொள்ள சக்தியற்றவர்கள் அனந்தசாதி அனந்தசமய அனந்த பாஷைமக்கள் நிறைந்த இந்துதேசக் குடிகளை அடக்கியாளுவர்களோ. அவ்வகை ஆளும் வல்லபம் இவர்களுக்குண்டோ, இல்லை. ஆதலின் வீணே சுயராஜ்ஜியம் வேண்டும், சுயராஜ்ஜியம் வேண்டுமென்னும் கூச்சலிட்டு வீண் விரோதத்தை சம்பாதித்துக்கொள்ளுவதினும் ஆங்கிலேயர்களுக்குள்ள வித்தை, புத்தி, சீகை, சன்மார்க்கமென்னும் செயல்கள் வேண்டுமென வாதிட்டு அவைகளைப் பெற்றுக்கொள்ளுவோமாயின் நமது தேசம் சிறப்படைவதுடன் நாமும் சுகம் பெற்று வாழ்வோம்.
- 3:43; ஏப்ரல் 6, 1910 -