உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/143-383

விக்கிமூலம் இலிருந்து

139. பிரோடெஸ்டென்ட்பாதிரிகள் மீது குறைகூறுவது பெரும்பாவமேயாம்

தேசசீர்திருத்தங்களுக்கென்று வெளிதோன்றியுள்ள சில பத்திரிகைகள் தேசசீர்திருத்தம் யாதென்பதை நோக்காது மிஷநெரி பாதிரிகள் கலாசாலைகளை வகுத்து அனந்தம்பேர்களை கிறிஸ்தவர்களாக்கி விட்டதுமன்றி போதாக்குறைக்கு கைத்தொழிற்சாலைகளையும் அமைத்து உள்ளவர்களையும் கிறிஸ்தவர்களாக்கிவிடுகிறார்களென்று மிக்க மனத்தாங்கலாய் எழுதியிருக்கின்றார்கள். அவ்வகையாகக் கிறிஸ்தவர்களாகுகின்றவர்கள் பஞ்சமர்களே என்றும் பரிந்தும் எழுதியிருக்கின்றார்கள். யதார்த்தத்தில் அன்னோர் பத்திரிக்கைகள் சீர்திருத்தத்திற்காய்த் தோன்றியிருக்குமாயின் இத்தகைப் பொறாமெய் குணத்தை வெளியிட மாட்டார்கள். தங்கள் சுயப்பிரயோசனத்திற்காய் பத்திரிகைகளை வெளியிட்டுள்ளவர்களாதலின் பஞ்சமரென்போர் கல்வியும் கைத்தொழிலும் கற்று சீர்பெறுவது அன்னோர் கண்களுக்கும் மனதிற்குஞ் சகியாது பொறாமெய்க் கடிதங்களை வெளியிட்டிருக்கின்றார்கள்.

மிஷநெரி துரைமக்கள் வந்து தோன்றி கலாசாலைகளை வகுத்து சீர்திருத்தியதினால் சகலசாதியோருங் கல்விகற்று சீருஞ்சிறப்பும் பெற்று தேசங் கலையுற்று வருவது பிரத்தியட்ச அநுபவமாகும். அதற்காதாரவாக கைத்தொழிற் சாலைகளையும் வகுத்துக் கார்ப்பரேல் மேலுமேலும் குடிகள் சோம்பலற்று சுறுசுறுப்புற்று கைத்தொழில் கற்று கனவான்களாகி இன்னும் தேசம் சிறப்பு பெறும் என்பது சொல்லாமல் அமையும். பத்திராதிபர்களுக்குக் கைத்தொழிற்சாலைகளமைப்பது கனமென்று தெரிந்திருந்தபோதினும் பஞ்சமர்கள் என்போர் சுகம்பெறுவது சகிக்காமலே இத்தகையக் கடிதங்களை வரைந்துவருகின்றார்கள். ஏழைக் குடிகள்மீது இம்மஃபய் வஞ்சினமும் பொறாமெடியும் வைத்துள்ளவர்கள் ஏழைக்குடிகளை ஈடேற்றுதற்குக் கூட்டங்கள் கூ.டி.வருகிறார்களென்றும் ஆரியசமாஜத்தில் சேர்த்துக்கொள்ளுகிறார்கள் என்றும் கூறுவது காரியக் கூற்றென்றே கூறலாகும்.

அதற்குப் பகரமாய் சாதிகளை நாட்டுவதற்கும் ஒட்டுவதற்கும் இந்து மதத்தோரென்னும் கூட்டத்தோரே காரணர் அன்றி தற்காலத் தோன்றியுள்ள ஆரியசமாஜத்தோர் காரணராகார்கள். கனந்தங்கிய மிஷநெரி துரைமக்கள் செய்துவரும் சுகசீர்களைக் கண்டு பொறுக்காதவர்கள் ஆரியசமாஜத்தோர் செயலை யங்கிகரிப்பரோ. இவ்விருவர் ஒற்றுமெக்கேட்டை உணராத ஏழைக்குடிகள் இரண்டாட்டுக்குட்டி போல் உள்ள மதத்தையும்விட்டு நாக்கைச் சுட்டு காயத்திரி படித்து நடுத்தெருவில் நிற்பதினும் தங்களுக்குத் தங்களை சீர்திருத்தி தாங்களே முன்னேறும் வழியை தேடுவது சிறப்பைத்தரும்.

இந்திய மக்களுக்கு மிஷநெரி துரைமக்கள் செய்துவைத்துள்ள கல்விக்கும் நாகரீகத்திற்கும் சிறப்பிற்கும் இந்தியர்கள் செய்த கைம்மாறென்னை. அவர்கள் செய்துவந்த நன்றிக்கு அவர்களை தூஷிப்பதும் புறங்கூறுவதுமாகியச் செயல்களே நன்றியறிதலாகும்.

ஒருவர் செய்துள்ள தீங்கை மறப்பது நன்று, செய்நன்றியை மறப்பது நன்றாமோ. அத்தகைய நன்றிமறப்போர் ஏழைகளை ஈடேற்றுவார்களென்பது இனிய மொழியாமோ, சீர்திருத்துகிறவர்களையும் கெடுத்து தாங்களும் சீர்திருத்தாது விடுவதே கண்ட பலனாகும். ஆதலின் ஆடு கசாயிக்காரனை நம்பி அடியோ டழிவதுபோ லழியாமலும் தாழ்ந்த சாதியோரை உயர்த்துகிறோமென்னும் கூட்டத்தை நாடாமலும் தங்களைப்போல் பிறரை நேசிக்கும் அன்புபொருந்தி தங்களை மனிதர்களென்றெண்ணி மனிதர்களை சீர்திருத்துங்கூட்டத்தோரை நாடுங்கள், நாடுங்கள்.

- 3:52; சூன் 8, 1910 -