உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/157-383

விக்கிமூலம் இலிருந்து

153. தாழ்ந்தவகுப்பார் தாழ்ந்த வகுப்பாரென்று மனுகுலத்தோருள் சிலரைத் தாழ்த்திவருகின்றவர்கள் யார் உயர்ந்தவகுப்பார் உயர்ந்த வகுப்பாரென்று மனுகுலத்தோருள் சிலரை உயர்த்திவருகின்றவர்கள் யார்

இத்தேசவாசிகளேயாகும். அதாவது சத்தியதன்மமாம் புத்தர் போதனைகளை மாறுபடுத்தி தங்கள் வயிறு பிழைப்பதற்கானப் பொய் மதங்களையும், பொய்ச்சாதிகளையும் ஏற்படுத்தித் தங்கள் பொய் மதங்களுக்கும், பொய்ச்சாதிகளுக்கும் எதிரிகளாகவும் பராயர்களாகவுமிருந்து இவர்களை அடித்துத் துரத்தி இவர்களது பொய்ச்சாதிகளையும், பொய்ம்மதங்களையும் ஏனையோருக்கு விளக்கி பறைந்தோர்களைப் பறையர்களென்றும், தீயர்களென்றும், சண்டாளரென்றும் தாழ்த்திப் பலவகையாலும் நசித்துப் பாழ்படுத்திவிட்டார்கள். இத்தகைய வஞ்சகச்செயலால் தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்ந்தவகுப்பாரென்றும் தங்களுக்குத் தாங்களே உயர்த்திக்கொண்டவர்கள் உயர்ந்த வகுப்பாரென்றும் வழங்கிவருகின்றார்கள்.

இவ்வகையாகத் தாழ்ந்துள்ளவர்களை தாழ்த்தியவர்களே உயர்த்தி சீர்பெறச் செய்யவேண்டுமே அன்றி இராஜாங்கத்தோர் பொருளுதவி பெற்று சீர்படுத்தவேண்டுமென்பது வீண்புரளியேயாகும். அதாவது, ஆடுகள் நனைகிறதென்று புலிகள் யாவும் புரண்டழுவதுபோல தாழ்ந்த வகுப்போரைத் தாங்களே உயர்த்திவிடுவதுபோல இராஜாங்கத்தோருக்கு இதங்காட்டுவது யதார்த்த இதம் ஆகாதென்பது திண்ணம். யதார்த்த இதக்கமுள்ளவர்களாயின் தாழ்ந்த வகுப்பார் தாழ்ந்த வகுப்பாரென்னும் ஓர் பெயரைச் சொல்லிக்கொண்டே தங்களைப்போல் உயர்த்த முயல்வரோ ஒருகாலும் உயர்த்தார்கள். ஏழைகளை சீர்திருத்தப்போகின்றோம், ஏழைகளை சீர்திருத்தப்போகின்றோமென்பாராயின் அஃது யதார்த்தமொழியாகும். அங்ஙனமின்றி தாழ்ந்தவகுப்பாரென்னும் ஓர்சாதியென சுட்டிக்காட்டி அவர்களை சீர்திருத்தப்போகின்றோமென்று இராஜாங்கத்தோர் உதவியை நாடுவதாயின் அவர்கள் எவ்வகையாய் உதவிசெய்ய முயல்வர். இத்தேசத்தோர் சாதிநாற்றமாகும் சாக்கடைச்சேற்றில் காலிட்டுக்கொண்டு அதைக் கழுவுவதற்கு பிரவுன் உன்கர் சோப்பிட்டுக் கழுவினாலும் அன்னாற்றம் போகாது, கிளிசரின் சோப்பிட்டுக் கழுவினாலும் அன்னாற்றம் போகாதென்றுணர்ந்து உங்கள் சாதியாசாரங்களிலும் சமயாசாரங்களிலும் பிரவேசிக்கமாட்டோமென்று உறுதி மொழிக் கூறிவிட்டார்கள், அங்ஙனமிருக்க தாழ்ந்த வகுப்பாரென்று தாழ்த்தியவர்களே அவர்களை உயர்த்தி சீர்திருத்தும் வழிகளைத் தேடாது, தாழ்ந்தவர்களை சீர்திருத்தப் போகின்றோமென்று இராஜாங்கத்தாருக்கு எடுத்துக்காட்டுவதும் அவர்களுக்கோர் சுகவழித் தேடாமல் தங்களுக்குமட்டிலும் ககவழித் தேடிக்கொண்டு நாஷனல் காங்கிரஸ் கூட்டத்தாரென்னும் பெயரை வகித்துக்கொண்டிருப்பதுபோல, பஞ்சமர்கள் பொது வானக் குளங் குட்டைகளில் நீர் மொண்டருந்தப்போகாது பஞ்சமர்கள் துட்டுகொடுத்து காப்பிவாங்கி சாப்பிடுவதாயிருப்பினும் பிராமணர்கள் காப்பி ஓட்டல்களில் சாப்பிடப்படாதென்னும் பயிரங்கச்செயலை நடாத்திக் கொண்டே தாழ்ந்த வகுப்போரை உயர்த்தப்போகின்றோமென்பது என்னக்கூற்றோ விளங்கவில்லை.

அதனுடன் இவர்களது கட்டுக்கதைகளால் ஏற்படுத்தியுள்ளப் பொய்ச்சாமிகளைத் தொழுஉம் ஏற்பாடுகளையும் செய்து வருகின்றார்களாம். அந்தோ, வடை, தோசை, சுண்டல், சருக்கரைப்பொங்கல் செய்து சாமிக்குப் படைக்கச்செய்யும் ஆட்கள் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகின்றபடியால் இவர்களைக்கொண்டேனும் வடை, தோசை, பாயாசம் இவைகளைச்செய்து பூர்த்தியாக சாப்பிட்டுக்கொண்டு சாம்பலையும் துளசியையும் வாரி இவர்கள் கையில் கொடுக்கக் கார்த்திருக்கின்றார்கள் போலும், இவ்வழிகளால் இவர்கட்சென்று தாழ்ந்த வகுப்பினின்று உயர்வர்களோ. இதுதானோ தாழ்ந்தவர்களை உயர்த்தும் வழி இதுதானோ ஏழைகளை சீர்திருத்தும் ஒழுங்கு இல்லை, உள்ளதையும் கெடுத்துக் கொள்ளைக்கொள்ளும் வழியேயாம்.

- 4:13; செப்டம்பர் 7, 1910 -