அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/176-383

விக்கிமூலம் இலிருந்து

172. இந்திய தேச சென்செஸ் கமிஷனராகும் கனந்தங்கிய மிஸ்டர் கேய்ட் துரையவர்கள்

இம்முறை குடிமதிப்பெடுக்குங்கால் இந்துயென்பவர் யார், இந்து அல்லாதவர்களென்பவர் யார் என்பதைக் கண்டறிவதற்குக் குடிகளை ஆறுவகைக் கேழ்விக்கேழ்க்கவேண்டிய எத்தனஞ் செய்திருக்கின்றார்.

அதாவது இந்துவென்று ஓர் மனிதன் சொல்லுவானாயின் அவன் இந்துக்களின் முக்கிய தேவதைகளைத் தொழுகின்றதுண்டா. தொழுகின்றேனென்பானாயின் அவர்கள் கோவிலுக்குள் பிரவேசிக்கும் சுதந்திரமுண்டா; உங்கள் சுபா அசுபகாலங்களில் இந்துக்குரித்தாய பிராமணர்கள் வருவதுண்டா; அல்லது வேறு சிலர் வருவதுண்டா; சுத்தசாதிகளென்போர் உங்களிடம் ஜலபானஞ் செய்வதுண்டா; சுத்தசாதிகளென்போர் உங்களை நெருங்கித் தீண்டிக்கொள்ளுவதுண்டா என்னுங் கேழ்விகளேயாம்.

இவைகள் இத்தேசத்தோரைக் கேட்கும் முக்கியக் கேழ்விகளும், மேலாய கருத்துகளுமேயாம். காரணம் இத்தேசத்தோருட் சிலர் தங்களை உயர்த்திக்கொண்டு ஆறுகோடிமக்களைத் தாழ்த்தி அப்புறப்படுத்தி அலக்கழித்து வருவதுடன், அவர்களைத் தலையெடுக்கவிடாமல் நசித்துவருகின்றபடியால் இந்துக்களிலிருந்து இவர்களை அப்புறப்படுத்தி அவர்களுக்குள்ள சுதந்திரமும், அவர்களுக்குள்ள சுகமும் இவர்களுக்கும் அளித்து தங்களுடைய ஆட்சியில் சீர்படுத்த வேண்டுமென்பதேயாம். இவ்வகைப் பிரிக்காமல் இந்துக்களுடன் சேர்த்துவைப்பதினால் இந்துக்கள் யாவரும் தங்கள் சமயம் நேர்ந்தபோது இவர்கள் தங்களைச் சேர்ந்தவர் அவர்களுக்கு வேண்டிய குறைகளை நாங்கள் அளித்து ரட்சிப்பவர்களென்று கூறித்திரிகிறதும் தங்கள் காரியம் முடிந்துவிட்டால் தலையெடுக்கவிடாமல் தாழ்த்தி நசித்துவருவதே இந்துக்களென்போர் இயல்பாதலின் அவர்கள் இதக்கமற்றச் செயலைக்கண்ட இங்கிலீஷ் துரைத்தனத்தார் சாதிபேதமற்ற ஏழைக்குடிகளை இந்துக்களைவிட்டு அப்புறப்படுத்தி ரட்சிக்கத்தக்க நன்னோக்கங் கொண்டுவிட்டார்கள்.

ஏழைகளின் ஈடேற்றத்தையும் கருணை தங்கிய ராஜாங்கத்தோர் நன்னோக்கத்தையுங் கண்டுகொண்ட இந்துக்கள் அவர்களது தன்னோக்கத்தைக் கெடுப்பதற்காக இந்துக்களென்றால் சகலரும் இந்துக்களென்றும் இந்து என்பவர்களை தடுப்பதில்லையென்றும் இந்து என்போரை யாங்கள் பிரிவினையில்லாமல் பாவித்திருக்க, இராஜாங்கத்தோர் பிரித்துவிடுகின்றார்களென்று வீண் பகட்டுப் பகட்டுகின்றார்கள். பொறாமெய் மிகுத்தோர்களால் பறையர்களென்று அழைக்கப்பட்டக் கூட்டத்தார் கோர்ட்டுகளிலேனும், டெத் அண்டு பர்த் ரிஜிஸ்டிரேஷன் ஆபீசுகளிலேனும், உத்தியோக சாலைகளிலேனும், பிளேக் ஆபீசுகளிலேனும் சென்று தங்களை இந்துக்களென்று சொல்லுவார்களாயின் அவர்களை மறுத்தும் பயமுறுத்தியும் நீங்களிந்துக்களென்றால் உங்கள் சாதி என்னவென்றுகேட்பதும் எங்களுக்கு சாதி இல்லையென்று கூறுவார்களாயின் ஏழைகளை இன்னும் பயமுறுத்தி உன் பாட்டன் சாதி என்ன, பூட்டன் சாதி என்னவென்று கேட்டு இவர்களால் பொறாமெகொண்டு பறையரென்றழைக்கும் பெயரையே வற்புறுத்திச் சொல்லவைத்து வாதிக்கும்படியானவர்களும், கோவிலுக்குள் இன்னின்ன சாதியார் வரப்படாதென்று எழுதிவைத் திருப்பவர்களும், பாப்பானுக்கு வேறு தெய்வம் பறையனுக்கு வேறுதெய்வமென்று பாடித்திரிகின்றவர்களும், பறையனே பிணத்திற்கு ஒப்பானவன், பிணத்தைக் கண்டாலும் தொட்டாலும் இஸ்னானஞ் செய்வதுபோல பறையனைக் கண்டாலும் தொட்டாலும் இஸ்னானஞ் செய்யவேண்டுமென்றும் மநுசாஸ்திரம் எழுதிவைத்துக் கொண்டிருப்பவர் களுமாகிய இந்துக்களென்பவர்கள் பறையர்களையும் இந்துக்களாகவே பாவித்துவந்தோம், இந்துக்களாகவே சமரசப் படுத்த முயன்று வருகின்றோம். இத்தருணத்தில் சென்ஸஸ் கமிஷனர் எங்களை வேறாகப் பிரித்துவிடப் பார்க்கின்றார்களென்று வீணே பிதற்றி பத்திரிகைகளில் வரைந்து வருகின்றார்கள்.

இவ்வகையாக சாதிபேதமற்ற எழியவகுப்போரை இந்துக்களுடன் சமரசப்படுத்துவது எதார்த்தமாயின் கனந்தங்கிய ஸ்ரீநிவாச ராகவையங்கார் கொடுத்துள்ள நாற்பதுவருஷ ரிப்போர்ட்டு புத்தகத்தில் பறையர்களென்போர் இந்துக்கள் என்போருடன் சமரசமாக இருக்குமளவும் முன்னுக்கு வரமாட்டார்கள். ஒன்று துலுக்கராகப் போய்விடவேண்டியது அல்லது கிறீஸ்தவர்களாக மாறிவிடவேண்டியதென்றும் எழுதுவரோ. இந்துக்களென்போர் பறையர்களென்று அழைக்கப்படுவோர்களை பலவகையாலுந் துன்பப்படுத்திவருஞ் செயல்களையும் துன்பப்படுகின்றவற்றையுங் கண்டதினாலன்றோ இந்துக்களிலேயே ஒருவர் வரையவும் அது ரிப்போர்ட்டு புத்தகத்தில் நாளதுவரையில் பதிந்திருக்கவுமாயிற்று. நந்தன் பறையனாயினும் அவனை இந்துக்கள் தெய்வமாகத் தொழுது வருகின்றார்களென்று எழுதிவருகின்றார்கள். இந்துக்கள் சுவாமி நந்தனை நெருப்பிலிட்டுச்சுட்டு தன்னிடம் சேர்த்துக்கொண்டபடியால் இந்துக்கள் அவனை தெய்வமாகச் சேர்த்துக் கொண்டார்கள். மற்றும் நெருப்பிலிட்டுச்சுடப்படாத ஆறுகோடி மக்களை இந்துக்கள் பெரியசாமி அருகில் சேர்ப்பரோ. சுவாமியே அருகில் சேர்க்கப்படாதவர்களும் சுவாமியின் கோவிலுக்குள் நுழையப்படாதவர்களுமாகிய ஏழை மக்களை இந்துக்களென்போர் தொழுவார்களோ, அருகிலுஞ் சேர்ப்பர்களோ, இல்லை. இவைகளெல்லாம் சமயயுக்த்தக் கெடுமொழிகளே யாகும். காலமெல்லாங் கெடுத்துக் கடைத்தேறவிடாமற் செய்துவந்தவர்கள் தற்காலமும் இராஜாங்கத்தோர் நல்லெண்ணத்தையும் அவர்களது நன்னோக்கத்தையுங் கெடுத்து ஏழைகளைப் பழயநிலையில் விடுத்துக் கெடுக்கப் பார்க்கின்றார்கள்.

இத்தகைய காலத்தில் சாதிபேதமற்ற திராவிடர்கள் அவர்களது சாதிமதத்தேவதைகளைப் பின்பற்றுவதும் அவர்கள் பொறாமெய்க் கொண்டு வைத்துள்ள சாதிப் பெயரைத் தரித்துக்கொள்ளுவதுமாகிய இந்துக்களது சேர்க்கையை விட்டகன்று, ஒன்று, மகமதியர்களாயினும் மற்றொன்று புரோட்டிஸ்டான்ட் கிறீஸ்தவர்களாயினும், இன்னொன்று பூர்வத்தில் பௌத்தர்களாக இருந்து சத்துருக்களின் வஞ்சகத்தால் பறையர்களென்று அழைக்கப்பெற்று நிலைகுலைந்துள்ளபடியால் கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியில் உள்ள ஏழைகள் யாவரும் பௌத்தர்களாகவாயினும் மாறிவிடுவதே சிறப்பைத்தரும். ஏழைமக்கள் யாவரும் இத்தகைய மாறுதலடையாது தேறுதலடையும் வழியின்மெயால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவும், காலம் வரும்போதே சீலம் பெறவும் ஆயுத்தமுறுவது விவேகிகளின் கடனாதலின் இக்குடிமதிப்புக் காலத்தையே குலசிறப்பின் காலமெனக்கருதிசீலம் பெற்று இராஜாங்கத்தோர் நன்னோக்கத்திற்கு இசைந்து நன்மார்க்கமும், நற்சீரும் அடையவேண்டுகிறோம்.

- 4:25; நவம்பர் 30, 1910 -