அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/182-383
178. கிருஷ்ண சாமி ஐயரும் டிப்பிரஸ் கிளாசும்
சென்றவாரம் கனந்தங்கிய ஆமெக் துரையவர்களின் அக்கிராசனத்தின்கீழ் ஜஸ்டிஸ் கிருஷ்ணசாமி ஐயரவர்கள் பிரசங்கித்தபோது டிப்பிரஸ் கிளாசென்போர் அவர்களது கன்மத்தினால் அவ்வகையாகப் பிறந்துள்ளார்களென வற்புறுத்திக் கூறியிருக்கின்றார்கள்.
அவர் கூறியவாறு கன்மத்தினால் தாழ்ந்த வகுப்பில் பிறந்திருப்பது யதார்த்தமாயின் இவரென்ன கன்மத்தினால் அவர்களை உயர்த்திவிடப் போகின்றார். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்பது அவனவன் கன்மத்தாலென்னில் இவர்கள் செய்யும் கன்மத்தால் அவர்கள் உயர்ந்தசாதி ஆவர்களோ. இவர்கள் செய்யும் கன்மத்தால் அவர்கள் உயர்த்தப்படுவதாயின் அவர்கள் செய்த கன்மத்தால் தாழ்ந்த வகுப்பாகப் பிறந்துள்ளார்களென்னும் மொழி ஆபாசமாகவே முடியும். உயர்ந்த சாதியென வகுத்துக்கொண்டுள்ளவர்களின் கொடூர கன்மத்தினால் தாழ்ந்த சாதியெனச் சிலரைத் தாழ்த்தி விட்டார்களென்பதே அவரது சீர்திருத்த மொழியால் தெற்றென விளங்குகின்றது.
அதற்குப் பகரமாய் புங்கனூர் லோக்கல்பண்டு டிஸ்பென்சரியில் பஞ்சமக் கிறீஸ்தவர்களை உத்தியோகத்தில் வைக்கப்படாதென சுதேச கமிஷனர்கள் யாவரும் ஏகவாக்காகக் கூறியுள்ளதே போதுஞ்சான்றாகும். தாங்களே தாழ்த்தி நாசமடையச்செய்வதை அநுபவத்திற் காணலாம். தாங்களே அவர்களை உயர்த்தி தங்களைப்போல் சீர்திருத்துவதென்பது கனவிலும் நம்பக் கூடியதன்று.
இத்தகைய சீர்திருத்தக் கூச்சலும் கூட்டமும் அவர்களது சுயப்பிரயோசனத்தைக்கருதி செய்வதேயன்றி ஏழைகளை ஈடேற்றவேண்டுமென்பதன்று, சாதிகளுமிருத்தல் வேண்டும், ஜமாத்துகளுமிருத்தல்வேண்டும், டிப்பிரஸ்கிளாசையும் உயர்த்த வேண்டுமென்பது ஆகாயத்திற் கோட்டை கட்டவேண்டி அஸ்திபாரமிடுகின்றோம் என்பதற்கு ஒக்கும். அங்ஙனம் ஏழைகளை சீர்திருத்துவது யதார்த்தமாயின் யாதொரு பேதமுமின்றி அவர்கள் வாசஞ்செய்யுங் கிராமங்களின் மத்தியில் வீற்று வித்தையையும், புத்தியையும் அளித்தல் வேண்டும். அவ்வகையன்றி ஏழைகளுக்கென்று பணத்தைச் சேர்த்து தூரனின்று கற்பிக்கின்றோமென்பது உயர்ந்தசாதி என்போருள் வாசித்து வெறுமனே திரிவோருக்கு வேலைவேண்டிய சுயப்பிரயோசனக் கருத்தென்றே கூறுவதாகும்.
- 4:28; டிசம்பர் 21, 1910 -