அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/196-383
192. இந்திய தேசத்திற்குப் பொது பாஷையா யிருக்கவேண்டியவை ஆங்கிலபாஷையாம்
மற்றுமுள்ள பாஷைகள்யாவிலும்சாதிபேத போராட்டங்களை வரைந்துள்ளக் கட்டுக்கதைகளே மிக்கப்பெருகி நீதிநெறிவாக்கியங்களுங் கெட்டு நிலைகுலைந்திருக்கின்றபடியால் இந்தியாவில் வழங்கிவரும் தற்காலபாஷைகள் யாவையும் பொதுபாஷயாக ஏற்றுக்கொள்ளுவது வீணேயாம். பாஷை முக்கியமா அன்றேல் அப்பாஷைப்பேசும் குடிகளின் ஒழுக்கச்செயல்கள் முக்கியமாவென ஆராய்ந்து அவற்றை உறுதிசெய்தல் வேண்டும் அங்ஙனமின்றி இந்திய தேசத்தில் சிலர் இந்தி பாஷையை கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் சிலர் சமஸ்க்கிருத, பாஷையைக்கற்றுக் கொள்ளவேண்டுமென்றும் காரணமின்றி பேசுவது கனக்குறைவேயாம்.
ஆங்கில பாஷையானது உலகெங்குங் கொண்டாடக் கூடியதும், சகலதேசத்தோராலும் நன்குமதிக்கக்கூடியதும் சகலமக்களும் எளிதில் வாசித்துக்கொள்ளக் கூடியதுமாயிருப்பதன்றி அப்பாஷைக்குரியோர் எத்தேசஞ் செல்லினும், சாதிபேதம், சமய பேதமென்னும் பொறாமெய்ச் செயல்களற்று மனிதர்களை மனிதர்களாக பாவிக்கும் விவேகமுள்ளவர்களும், வித்தையும் புத்தியும் நிறைந்தவர்களுமாயுள்ளபடியால் அவர்களது பாஷையைக்கற்று இந்தியதேச முழுவதுமிவ்வாங்கிலபாஷையைப் பரவச்செய்வோமாயின், அவர்களது வித்தையும் புத்தியும் எங்கும் பரவுவதுமன்றி, என்சாதிபெரிது உன்சாதிசிறிதென்னும் சாதிகர்வங்களுமற்று எம்மதம் பெரிது உன்மதஞ் சிறிதென்னு மதகர்வங்களுமற்று, மனிதர்களை மனிதர்களாக பாவிக்கும் பேரானந்தவிவேகமும் பெற்று சுகச்சீர்பெறுவார்கள்.
இத்தகையச்செயலையும் அச்செயலுக்குரிய பாஷையையும் விடுத்து சாதிபோராட்டமும் சமயபோராட்டமும் நிறைந்துள்ள பாஷையை சகலருங் கற்றுக்கொள்ளுவார்களாயின் சாதியில்லாதோரெல்லாம் சாதியினையுண்டு செய்துக்கொண்டும், சமயமில்லாதோரெல்லாம் சமயங்களையுண்டு செய்துக் கொண்டும் வீணான பிரிவினைகள் மேலுமேலும் உண்டாகி ஒற்றுமெய்க் கெட்டு, உள்ளதும் பாழ்பட வேண்டியதேயாம்.
ஈதன்றி இந்திய தேசத்தில் நூதனப்பெயராகவழங்கும் இந்தி பாஷையைக் கற்றவர்களேனும், அதனிற் பெரும்பழக்கமுள்ளவர்களேனும், இத்தேசத்தோருக்கு என்ன வித்தையை விருத்திசெய்திருக்கின்றார்கள், என்னசுகங்களை அளித்திருக்கின்றார்கள். யாதுசுகமுங்கிடையாதாம் அவரவர்கள் பேசிவரும் சுயபாஷைகளைவிடுத்து இந்தியென்னும் பாஷையைக் கற்றுக் கொள்ளுவதாயின் அவரவர்களின் சாதியாசாரங்களும் விட்டுப்போமோ அவரவர்களது வம்மிஷவரிசையின் வஞ்சினங்களகன்றுப்போமோ. தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதம் விட்டுப்போமோ, ஒருக்காலும் விடாவாம்.
ஆங்கிலபாஷையைக் கற்பதால் சாதிபேதமொழிந்துபோம், சமயபேதமொழிந்துபோம், வஞ்சினங்களகன்றுபோம் பட்சபாதமற்றுப்போம், சகலரும் அன்பு பொருந்தியிருப்பார்கள். வித்தையும் புத்தியும் பெருகும். வீண் விவகாரங்களும் வீண்செயல்களும் அறும். உலகத்திலுள்ள எம்மனுக்களைக் காணினும் ஆங்கிலபாஷையைப் பேசி ஆனந்தமாக நேசிக்கலாம். இந்தியென்னும் பாஷையைக்கற்று காசிக்குப் போக்குவருத்து காலத்தில் பேசிக் கொள்ளுவதினும் உலகெங்கிலுமுள்ள சகல மக்களிடத்தும் ஆங்கிலபாஷையாற் பேசி ஆனந்தசீர் பெறுவதே அழகாதலின் இந்திய தேசமக்கள் ஒவ்வொருவரும் ஆங்கில பாஷையைக் கற்று ஆங்கிலவரசாட்சியில் விசுவாசமுற்று வாழும்படி வேண்டுகிறோம்.
- 4:37; பிப்ரவரி 22, 1911 -