உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/199-383

விக்கிமூலம் இலிருந்து

195. இந்தியதென் ஆப்பிரிக்கன்லீக் என கோலுங் குடுவையுங் கொடுக்கப் பார்க்கிறார்கள்போலும்

அந்தோ, இச்சென்னை ராஜதானியில் சாதியாசாரமுள்ளவர்கள் ஓர்க் கூட்டங்கூடி சாதியாசாரமில்லாத ஏழைகள் நெட்டாலுக்குப் போக்குவருத்தாயிருப்பதை போகவிடாமல தடுக்கவேண்டிய முயற்சி செய்விக்கப் போகின்றார்களாம்.

சாதியாசாரமில்லா ஏழைக்குடிகள் சென்று பிழைக்கும் வழிகளைத் தடுக்கவும், அவர்கள் போகுமிடங்களைக் கெடுக்கவும், அவைகளுக்கென்று கூட்டமிட்டுப் பேசவும் என்ன அதிகாரமிருக்கின்றது. அந்த சாதிபேதமில்லா ஏழைக்குடிகள் இருக்க இடமற்று, குடிக்கக் கூழற்று, படுக்கப் பாயற்று, பசியும் பட்டினியாய் கோலுங் குடுவையும் எலும்புந் தோலுமாய் வண்ணாரின்றியும், அம்மட்டரின்றியும், குடிக்க சுத்தசலமின்றியும், அல்லலடையுங்கால் இப்போது நெட்டாலுக்குப்போய் சீவிப்போர்களை தடுக்க முயலும் சாதியாசாரமுள்ளவர்கள் அவ்வேழைகளுக்கு இடங் கொடுத்தாதரித்திருப்பார்களா, ஆடையளித்து குளிர்தீர்த்திருப்பார்களா, ஏதுமில்லையே. சீவகாருண்யமற்றவஞ்சினமுடையவர்களாய் ஏழைமக்கள் தங்குதற் கிடங்கொடாமலும், சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாமலும், வண்ணாரை வஸ்திரமெடுக்கவிடாமலும் கோலுங் குடுவையுடன் குடியோடச் செய்தவர்கள் தற்கால மவர்கள் போக்குவருத்தைத் தடுப்பது காரணம்யாதெனில், அவர்கள் முன்னேறுஞ் சுகச்சீரைக் கெடுத்து சீரழிப்பதற்கென்றே கூறல்வேண்டும்.

எவ்வகையாலென்னில் சாதியாசாரமுள்ளவர்களால் தாழ்த்தி நசுங்குண்டவர்களாகிய சாதியாசாரமில்லாதவர்கள் வஞ்சநெஞ்சர்களின் இடுக்கங்களை சயிக்கமுடியாது கோலுங் குடுவையும் விட்டெறிந்துவிட்டு சிங்கப்பூர், நெட்டால் முதலிய தேசங்களுக்குச் சென்று தேகத்தை வருத்தி கஷ்டப்பட்டு அங்குள்ள எஜமானர்களுக்குத் திருப்த்திசெய்து வேணபொருள் சம்பாதித்துக்கொண்டு இவ்விடம் வந்து பட்டினவாசங்களில் சிலர் சொந்தவீடுகள் கட்டிக்கொண்டு சுகசீவனத் திலிருக்கின்றார்கள். சிலர் நாடுகளில் சொந்தத்தில் பூமிகளை வாங்கிக்கொண்டு உழுது பயிர்செய்து சுகவாழ்க்கைப் பெற்றிருக்கின்றார்கள். இவர்களின் சுகத்தைக்கண்டு மனஞ் சகியாத சாதியாசாரமுள்ளவர்கள், அவர்கள் சுகத்தைக் கெடுக்கவேண்டுமென்னுங் கெட்டயெண்ணமுடையவர்களாய் ஏழைகளுக்காகப் பரிந்து பேசுவதுபோல் முயன்று பதங்குலைக்கப்பார்க்கின்றார்கள்.

நெட்டாலுக்குச் சென்றுள்ள சிலர் அவ்விடத்திய ராஜாங்க சட்டதிட்டங்களுக் கடங்காது வீண்வாதுசெய்து கெடுவதின் செயலுக்கு ஏழைகளை நெட்டாலுக்குப் போகவிடாது தடுப்பது யாது பயன். அவ்விடமுள்ளவர்களின் செயலையும் துக்கவாழ்க்கையையும் சாக்குப் போக்குச் சொல்லி ஏழைக்குடிகளின் போக்கையிழுத்துக் கெடுத்து பாழ்படுத்தப் பார்க்கின்றார்கள்.

ஆதலின் நெட்டாலுக்குப் போய்வந்துள்ள ஏழைக்குடிகள் யாவரும் இது விஷயத்தில் மெளனஞ் சாதிக்கமட்டார்கள். காரணமோவென்னில், தங்களைப்போல் மற்ற ஏழைகளும் நெட்டாலுக்குச்சென்று கஷ்டப்பட்டு பொருள் சம்பாதித்து இவ்விடம் வந்து சுகம் பெறவேண்டுமென்னும் எண்ணமுடையவர்களாயிருக்கின்றபடியால் சாதியாசாரமுள்ளவர்கள் செய்யுந் தடைகளுக்கு எதிரிடையாய கூட்டமிட்டு தங்கள் குறைகளையும், நெட்டாலுக்குப்போய் பெற்றுள்ள சுகங்களையும் கருணைதங்கிய கவர்ன்மெண்டாருக்கு விளக்கி தங்கள் தடைகளை விலக்கிக்கொள்ள முயலுவார்கள். அக்காலத்தில் சாதியாசார முள்ளவர்கள் மனத்தாங்கலடைவதிற் பயனில்லை. அவரவர்கள் சுகத்தையும் அவரவர்கள் முன்னேற்றத்தையும் அவரவர்களே பார்த்துக்கொள்ள வேண்டியவர்களாவார்கள்.

- 4:39; மார்ச் 8, 1911 -