அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/206-383
202. ஜெயிலென்னும் சிறைச்சாலையும் கைதிகளின் பெருக்கமும்
இவ்விந்திய தேசத்தில் கைதிகளின் பெருக்கத்திற்குக் காரணம் யாதெனில், யாதாமொரு தொழிலுமற்ற சோம்பலும், வீணர்களின் விருத்திகளேயாம். அதாவது பூமிகளை உழுது பயிர்செய்யுந் தொழில் விட்டு கைத்தொழில் செய்யுங் கஷ்டமுமற்று வண்டிகளிழுத்தேனும் சம்பாதிக்கும் வருத்தங்களையும் விட்டு தந்தனப்பாட்டு பாடிக்கொண்டும், விந்தனவீணை யடித்துக்கொண்டும் வீணர்களாத் திரிவோர்களுக்கு அரிசிதுட்டு கிடைக்காவிடில் அண்டை வீட்டான் சொத்தைத்திருடி அதனால் சீவிக்க முயல்வதும், எந்த கைம்பெண் சொத்துடையவளாயிருக்கின்றாள், எந்த கனவான் பிள்ளை இளிச்சவாயனாயிருக்கின்றானென்று அவர்களை வஞ்சித்தும், மித்திரபேதங்கள் செய்தும் சீவிக்க முயல்வதும், ஜட்கா வண்டி பேட்டைகளெங்கிருக்கின்றது, சூதாடிகளின் கூட்டங்களெங்கிருக்கின்றதெனத் தேடி அவ்விடஞ்சென்று உழ்க்கார்ந்து இச்சகம் பேசியும், ஏமாளிகளை ஏய்த்தும் சீவிக்க முயல்வதும், தெண்டசோறு போடுவதற்கு ஆளிருந்து விட்டால் எதேஷ்டமாகத் தின்று கொழுத்து அவனை யடிக்கலாமா, இவனை அடிக்கலாமா என்னும் அகங்காரத்தினால் கால்நீட்டி. சண்டையிழுத்துக் கலகத்தைப் பெருக்கிக் கள்ளுக்கடைகளையே கருத்தாக நாடி சீவிப்பதுமாகிய சோம்பேறிகளின் கூட்டம் அதிகரித்து ஜெயில்களின் கைதிகளின் கூட்டம் பெருகிவருகின்றது. இத்தகைய சோம்பேறிகள் அந்தக்கிராமத்தில் இன்னின்ன விடங்களில் வசித்திருக்கின்றார்களெனக் கண்டறிந்து அவர்களுக்குத் தக்கத் தொழில்களைக்கொடுத்து நீதிநெறியில் நடக்கும் வழிகளைக் காட்டுவதாயின் சோம்பேறிகள் குறைந்து ஜெயில் கைதிகளின் பெருக்கங்களுமற்றுப்போம். அங்ஙனம் ஊரிலுள்ளவர்களின் தொழிலையும் அவர்களது சோம்பலையுங் கண்டுணராது ஜெயிலிலுள்ளக் கைதிகளுக்குத் தொழில் கற்பித்து சீர்படுத்துவதுடன் அவர்கள் ஜெயிலைவிட்டு நீங்கி வீடு செல்லும்போது கொஞ்சம் பணவுதவிசெய்தால் மறுபடியுந் திருடி, ஜெயிலுக்கு வரமாட்டார்களென்று சிலர் அபிப்பிராயப்படுவதுமுண்டு. அத்தகைய உத்தேசம் சிலருக்கு சுகத்தை விளைவிக்கினும் “தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் விடாது" என்னும் பழமொழிக்கிணங்க வீடுகளில் திருடுவதும் ஜெயிலுக்குப் போவதுமாகியத் தொழிலைப் பெரும்பாலும் விடமாட்டார்கள்.
ஆதலின் ஜெயில் கைதிகளின் சுகங்களையும், அசுகங்களையும் ஆராய்ந்து சீர்திருத்துவதற்கு முன்பு அந்தந்த கிராமங்களில் எந்தெந்தத் தொழிலற்ற சோம்பேறிகளிருக்கின்றார்களென்று கண்டறிந்து அந்தந்தக் கிராமவாசிகளைக் கொண்டே பண்ணைத் தொழிலுக்கும், கைத்தொழிற்சாலைக்கும் அனுப்பி அவர்களின் சோம்பலும், சூதும் அகலச்செய்து ஜாக்கிரதையிலும் சுறுசுறுப்பிலுங் கொண்டுவரச்செய்வார்களாயின் ஜெயில் கைதிகள் குறைந்து வித்தியாவிருத்திகள் பெருகுவதற்கு ஆட்சேபமில்லை.
இத்தகைய விஷயங்களில் அந்தந்த கிராமத்தோர்களைக் கொண்டே உள்ள சோம்பேறிகளை இராஜாங்கத்தார் கண்டுபிடித்து கைத்தொழிற் சாலையில் சேர்க்கவேண்டியது அவர்களது பொறுப்பாகும். கைத்தொழிற் சாலையில் சேர்ந்தவர்களை கிராமக்கூட்டத்து கனவான்களின் பொருளுதவியால் கைத்தொழில்களை விருத்தி செய்யவேண்டியது வித்தியார்த்திகளின் பொறுப்பாகும்.
ஈதன்றி நீதியின் சுகங்களையும், நெறியின் சுகங்களையும், ஒழுக்கச் சுகங்களையும், இராஜவிசுவாச சுகங்களையும் அவர்களுக்கு விளக்க வேண்டுமேயன்றி மற்றும் மதசம்மந்தவிஷயங்கள் யாதையும் அவர்களுக்குப் போதிக்கலாகாது.
காரணமோவென்னில் அவரவர்களின் மதசம்மத தெய்வங்களே திருடியும் தின்றும் அடிபட்டுள்ளபடியால் தாங்கள் அன்னியனுடையப் பொருளைத் திருடுவதினாலும் தின்பதினாலும் என்ன சங்கையென இருமாந்து செய்வார்கள். தங்கள் தேவதைகளே பொய்யைச்சொல்லி வஞ்சித்திருப்பதினால் தாங்கள் பொய்யைச்சொல்லுவதினால் யாது கேடுண்டாமென்பார்கள். தங்கள் தேவதைகளே விபசாரத்திற்குட்பட்டுள்ளபடியால் தாங்கள் செய்யும் விபசாரத்தால் யாதுகேடுண்டாமென்று அகங்கரிப்பர். தங்கள் தேவதைகளே கொழுத்த மாமிஷத்தைக் கூடிப் புசிக்கும் பிரீதியிலும் அன்னியர் பொருளை அபகரிக்கப் போதிக்கும் பிரீதியிலும் முள்ளபடியால் தாங்கள் புசிப்பதிலும், தாங்களபகரிப்பதிலும் யாது கேடுண்டாமென்று ஆர்ப்பரிப்பர், சிறைச்சாலைகளிலேனும் மதசம்மத விஷயங்களை மறந்தும் போதிக்காமலிருக்கக் கூறியுள்ளோம்.
சோம்பேறிகள் பெருகுவதற்கும் சிறைச்சாலைகள் நிறம்புவதற்கும் மதசம்மதக்கட்டுக்கதை சதா நம்பிக்கை சோம்பலே காரணமாயிருத்தலால் மற்றுஞ் சிறைச் சாலைகளி லவற்றைப் போதிப்பது முற்றும் சோம்பலடையச் செய்துவிடும். ஆதலின் ஒவ்வோர் கிராமவாசிகளும் தங்கள் தங்கள் கிராமங்களில் யாதொரு தொழிலுமின்றி வீணர்களாய்த் திரிவோருக்கு கைத்தொழிற்சாலைகளமைத்து கற்பிப்பதுடன் நீதியின்வழிகளையும் நெறியின் வழிகளையும் ஒழுக்கவழிகளையுந் தெள்ளறப் போதித்து கருணைதங்கிய ராஜவிசுவாசத்திலும் நிலைக்கச் செய்விப்பார்களென்று நம்புகிறோம்.
- 4:46; ஏப்ரல் 25, 1911 -