அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/208-383

விக்கிமூலம் இலிருந்து

204. ஆங்கிலோ புரோட்டெஸ்டான்ட் கிறீஸ்தவர்களின் மிஷனும் இந்திய டிப்பிரஸ் கிளாஸ் மிஷனும்

ஆங்கிலோ புரோட்டெஸ்டான்ட் கிறீஸ்தவர்கள் மிஷனைக் கண்டு தாங்களும் சில மிஷன்கள் ஏற்படுத்துவதாக இந்துக்களென்போரெழுவி டிப்பிரஸ் கிளாசென்னும் மிஷன்களை ஏற்படுத்துவதாகத் தோன்றுகின்றது. இத்தகையத் தோற்றம் மயிலைக்கண்ட வான்கோழி நடமிடுவது போலும், புலியைக்கண்டு பூனைச் சூடிக்கொள்ளுவதுபோலுமேயன்றி வேறிராவாம்.

ஆங்கிலேயர்களோ தன்னைப்போல் பிறரை நேசிக்கும் பிரபல மிகுத்தவர்களாகும். அவர்கள் நடாத்தும் மிஷனில் தாங்கள் புசிக்கும் அன்னத்தை ஏழைகளுக்கூட்டியும், ஏழைகள் புசிக்கும் அன்னத்தை தாங்களுண்டுங் களித்து தங்களால் சீர்படுத்தப்பட்ட ஏழைச் சிறுவர்கள் தங்களைப்போல் ஆடையாபரண மணையவும், தங்களைப்போல் வண்டி குதிரைகளைப் போட்டுலாவவும், தங்களைப்போல் சுகசீவிகளாக வாழ்கவுங் கண்குளிரப் பார்த்து ஆனந்திப்பார்கள். இத்தகைய யதார்த்த சீர்திருத்தமும் அன்பின் பெருக்கமும் தன்னைப்போல் பிறரை நேசிக்கும் குணமும் அமைந்துள்ளவர்களால் எடுக்கும் மிஷன்கள் யாவும் தேசமெங்கும் பரவி ஏழைமக்களை சீர்திருத்தஞ் செய்துவருகின்றது.

இத்தகையப் பெருந்தண்மெய் நிறைந்த ஆங்கிலேயரது மிஷன்களைக்கண்டு பெரியசாதி சின்னசாதியென்னும் பொய்க் கட்டுக்கதைகளை ஏற்படுத்திக்கொண்டு சின்னசாதி என்பவர்களை நாயினுங் கழுதையினுங் கடையாக நீக்கி அவர்களை எவ்வகையானும் முன்னேறவிடாமற் கெடுத்து சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாமல் வதைத்தும் தங்களைச்சார்ந்த அம்பட்டர்களை சவரஞ்செய்யவிடாமல் தடுத்தும், வண்ணார்களை வஸ்திரங்களை எடுக்கவிடாமற் சொல்லிக்கொடுத்தும் ஏழைகளை மிருகங்களினும் அசுத்தமாக உலாவச்செய்துவிட்டு தற்கால பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையால் டிப்பிரஸ் கிளாசை றைப்பிரஸ் கிளாசாகிய நாங்கள் சீர்திருத்தப்போகின்றோம் அதற்கென்று டிப்பிரஸ் மிஷனென்னும் ஓர் மிஷனும் ஏற்படுத்தியுள்ளோமென்னும் பறையறைவதாயின், இவர்கள் யதார்த்தமாக ஏழைகள்மீது அன்புள்ளவர்களென்றும், தங்கள் பொருட்களை கருணையுடன் ஏழைகளுக்கு செலவு செய்யக்கூடியவர்களென்றும் சாதிபேதமென்னும் பொறாமெய்க் குணங்களையே அற்றவர்களென்றும் இத்தேசத்துள் யாராவது நம்புவார்களோ ஒருக்காலும் நம்பவேமாட்டார்கள்.

அதன் காரணமோவென்னில் உலகத்திலுள்ள சகல மக்களும் பிரேதங்களைக் கண்டவுடன் அதற்கு மரியாதையுடன் வழிவிட்டு நிற்பது இயல்பாகும். இத்தேசத்தோரோ சாதிபேதத்தை விடாமல் பிரேதங்களுக்கும் வழிகொடாமல் தடுத்து மீறிப் பிணமெடுத்துச் சென்றவர்களை அபராதமுங் கட்டச்செய்து ஏழைகளை வதைத்துவருவதை நாகப்பட்டினத்தைச்சார்ந்த காடம்பாடி சுடலையிற் காணலாம்.

திண்டிவனம் தாலுக்காவைச் சார்ந்தகிராமங்களிலுள்ள காலிபூமிகளை ஏழைமக்கள் கேட்டபோது மாடுகளுக்கும், ஆடுகளுக்கும், கொடுத்தாலும் கொடுப்போம் ஏழைமனிதர்களுக்குக் கொடுக்கமாட்டோ மென்பதை ஏழைமக்களின் அபீல்களால் தெரிந்துக்கொள்ளலாம். இவ்வகையாக ஏழை மக்களைப் பலவகையாலுந் தாழ்த்தி சீர்கெடச்செய்து வருகின்றவர்கள் டிப்பிரஸ் கிளாசைச் சீர்பெறச்செய்யப் போகின்றோமென்பது ஆடுகள் நனையுதென்று புலிகள் கட்டி யழுவதென்னுங் கதையையொக்கும்.

அம்மட்டர்களை சவரஞ்செய்ய விடாமலும், வண்ணார்களை வஸ்திரமெடுக்கவிடாமலும், சுத்தசலத்தை மொண்டு குடிக்கவிடாமலும் தாழ்த்திப் பலவகையாலும் நசித்துவந்த வஞ்சினர்கள் முன்பு நீதியும் நெறியுமமைந்த பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையால் பற்பல சாஸ்திரங்களையும். அநுபவங்களையும் ஆய்ந்து பூர்வ பெளத்த தன்மத்தை நசித்துத் தங்கள் பொய்ச்சாதி வேஷங்களையும், பொய்ப்போதகங்களை படம் பலுக்கிக் கொள்ளுவதற்கே பூர்வபெளத்ததன்ம வைராக்கிகள் யாவரையும் பறையரென்றுத் தாழ்த்திப் பாழ்படுத்தி வருகின்றார்கள் என்றறிந்து மறுபடியும் தங்களுக்குள் பெளத்த சங்கங்களை நாட்டி மற்றொருவனுடைய சாதிக் கட்டுக்குள் நாங்களடங்கினவர்களல்லவென்று தங்கள் செயல்களை நடத்தி வருவதுமன்றி இந்துக்கள் செயல்கள் வேறு பௌத்தர்கள் செயல்கள் வேறாதலின் இந்துக்களுடன் எங்களை சேர்க்காது இந்திய பெளத்தர்களென வேறாகப் பிரிக்கும்படி இராஜாங்கத்தோருக்கு விண்ணப்பம் அனுப்பி வேறாகவும் பிரித்துக்கொண்டார்கள்.

இதனைக் கண்ணுற்றுவந்த சாதிபேதமுள்ளோர் மனஞ் சகியாது இனி நம்முடைய. டிப்பிரஸ் கிளாஸ் மிஷனில் இந்திய பௌத்தர்களை சேர்த்து பழைய சாதிகளை சொல்லிவருவதற்கு முடியாது, சிலப்பொய் போதகர்களைக் கொண்டே டிப்பிரஸ்கிளாஸ் மிஷனென்னும் ஓர்க் கூட்டத்தை ஏற்படுத்திவிட்டால் பௌத்தர்களிலும் சாதிவகுப்பு ஏற்படுத்திவிடலாமென்னுங் கெட்ட யெண்ணங்கொண்டு பெளத்ததன்மங்களின் சாராம்ஸம் முற்றும் அறியாதவர்களை அடுத்து பெளத்தருக்குள் டிப்பிரஸ் கிளாஸ் மிஷனை ஆரம்பிக்கப்பார்க்கின்றார்கள்.

அவ்வகை ஆரம்பிப்போர் யாதார்த்த போதகர்களாயிருப்பார்களாயின் பெரியசாதி சின்னசாதியென்று பாராமலும், கனவான் ஏழையென்று கவனியாமலும் வலியன் மெலியனெனப் பாராமலும், கற்றோன் கல்லாதவனெனக் கவனியாமலும், தங்களது சத்தியதன்மத்தை சகலருக்கும் பொதுவாகப் போதிப்பார்கள். அங்ஙனமிராதப் பொய்ப் போதகர்களாதலின் தங்களுக்குள் விடாது பற்றிநிற்கும் சாதி கர்வத்தினாலும், தன் கர்வத்தினாலும் ஏழை மக்களை டிப்பிரஸ் கிளாஸ் டிப்பிரஸ் கிளாசெனத் தாழ்த்தி தங்கள் அசத்தியதன்மங்களைப் போதிக்க ஆரம்பிப்பார்கள். அத்தகைய அசத்தியர்களின் போதமானது தேய்பிறைபோல நாளுக்கு நாள் தேய்ந்து நாசமடையுமேயன்றி சத்தியதன்மத்தைப்போல் நாளுக்குநாள் மெல்லென வளர்ந்து பூரணமடையமாட்டாது. சத்தியதன்மப் பிரியர்களுக்கு ஈதோர் எச்சரிப்பாகும். ஜாக்கிரதா. ஜாக்கிரதா.

- 4:47: மே 3, 1911 -