உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/223-383

விக்கிமூலம் இலிருந்து

219. இராஜ துரோகிகளை அடக்கும் வழி

நமது கருணை தங்கிய ராஜாங்கத்தோர் சாதிபேதமற்றவர்களும் சமயபேதமற்றவர்களுமாதலால் சகலசாதியோர்களுந் தங்களைப்போலவே ஈவும் இதக்கமும் சுபகுணமும் உள்ளவர்களாயிருப்பார்களென்றெண்ணி சகலருக்கும் சமரசமான உத்தியோகங்களைக் கொடுத்துக்கொண்டு வருகின்றார்கள்.

அத்தகைய உத்தியோகங்களைப் பெற்றுவரும் வஞ்சகமும் குடிகெடுப்பு மிகுத்த ராஜதுரோகிகள் கரும்பை நடுவில் வெட்டிப் புசிப்பதுடன் வேரோடும் பிடுங்கித் தின்பது நலமென்று யோசிக்கும் பேராசையைப்போல் பிரிட்டிஷ் ஆட்சியில் நாம் ஒருவன் மட்டிலும் சுகசீவனம் பெற்றிருப்பதுடன் நமதுசாதியோரெல்லவரும் ராஜாங்கத்தையே கைப்பற்றிக்கொண்டால் மேலான சுகமடையலாமென்னும் ஆசையால் பிரிட்டிஷ் ஆட்சியோர் செய்துவரும் சகல நன்றிகளையும் மறந்து அவர்களுக்கு எதிரிடையானத் தீங்குகளையே செய்து வருகின்றார்கள்.

“பல்லிகளையும் பட்சிகளையும் பாதுகாக்கவேண்டியது. பாம்பையுந் தேளையும் தலைநசுங்கக் கொல்லவேண்டிய” தென்னும் பழமொழிக்கிணங்க இராஜ விசுவாசமுடையவர்களுக்குத் தங்களுக்குரிய ராஜவுத்தியோகங்களைக் கொடுத்தும் இராஜதுரோகமுடைய வன்னெஞ்சமுடையவர்களை ஏறவிடாமல் நசித்து வரவேண்டியதே அழகாகும்.

அவர்களுக்கு ஆதரவாக பிரான்சி ராட்சியத்திற்கு அருகேயுள்ள பிரிட்டிஷக்குரிய சில பூமிகளை பிரான்சியருக்குக் களித்துவிட்டு அவர்களுக்குரிய பாண்டிச்சேரி என்னும் சிறிய நாட்டையும் அதனைச் சார்ந்த பூமிகளையும் சென்னை ராஜதானியில் சேர்த்துக்கொள்ளவேண்டியது. மற்றும் அதற்கு உபபலமாக முப்பது வருடங்களுக்கு முன்பு சென்னை கமாண்டரின்சீப் வீட்டின் முகப்பிலும், ஜெனரல்கள் வீட்டின் முகப்பிலும் பிரிட்டிஷ்கொடிகள் பரப்பியிருந்ததுடன் யூரோப்பியன் ரிஜிமெண்டுகளும் பட்டாளங்களும் நிறைந்திருந்ததுபோல் இராஜதானி பீடத்தில் அமர்த்திவிட்டு திரிச்சி, மதுரை, கோயமுத்தூர், நீலகிரி, கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அரசாட்சியோர் சூழ்ந்தயிடங்களில் யூரோப்பியன் ரிஜிமெண்டின் ஒவ்வோர் கம்பனிகளை வைத்துப் பாதுகாப்பதுடன் இப்போது இராஜதுரோகம் செய்துவரும் சாதியோர்களுக்குள் எச்சாதியோர் பெருந்தொகையினராகக் காணப்படுகின்றார்களோ அச்சாதி உத்தியோகஸ்தர்களிடத்திலே நூற்றுக்கு இவ்வளவென்னும் இராஜதுரோக வரியென விதித்து வசூல் செய்து இரிஜிமெண்டின் சிலவைச் செய்துவருவதாயின் தங்களில் தாங்களே அடங்கி பேராசையை ஒழித்து பழய தொழிலில் நிற்பார்கள்.

அங்ஙனமின்றி கருணைதங்கிய ராஜாங்கத்தோர் சாம, தான, பேதமென்னும் உபாயத்தில் மட்டும் நின்று தண்டத்தைக் கையாடாவிடின் இராஜாங்கத்தோரென்னும் அச்சமொழிந்து மச்சினங்கொண்டாடுவார்கள். “கொட்டினால் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சு” என்னும் பழமொழிபோல பிரிட்டிஷ் அரசாட்சியை மேற்சாதி கீழ்ச்சாதியென்னும் இழுக்கிலுந் தாட்சண்ணியத்திலும் விட்டிருக்கும் வகையில் ஆட்சியைப் பிள்ளைப்பூச்சியென்றே எண்ணி நடப்பார்கள்.

அதன் விவரம் யாதெனில், கீழ்சாதியோன் திருடினாலும்சரி மேற்சாதியோன் திருடினாலுஞ்சரி, கீழ்ச்சாதியோன் கொலைபுரிந்தாலும் சரி மேற்சாதியோன் கொலைபுரிந்தாலும் சரி, சட்டப்படிக்கு சமரச தண்டனை விதித்துவருகின்றார்கள். இவ்வகை விதிக்கப்பெற்றோர் சிறைச்சாலைக்குப் போனவுடன் கீழ்ச்சாதிக்கு சாப்பாடு மேற்சாதிக்கு சாப்பாடு வேறிட மென்பதாயினும் சாப்பாடு செய்பவன் பெரிய சாதியோனாய் இருக்கவேண்டும் என்பதாயின் அவனடைந்துள்ள தண்டனைபால் சாதிகர்வமடங்காது வெளிவந்துந் தன்னுடைய துஷ்டச்செயலில் முன்னேறுகின்றான்.

அத்தகையச் செயல்களை நோக்கிவருங் கருணைதங்கிய ராஜாங்கத்தார் துஷ்டர்களாம் இராஜதுரோகிகளும் கொலைப்பாதகர்களும் குடிகேடர்களும் களவாடிகளும் சட்டப்படி தெண்டனை அடைந்து சிறைச்சாலைக்கு வருவார்களாயின் அவர்கள் செய்துவந்த செயல்கள் யாவும் கீழ்ச்சாதி செயல்களெனக் குணித்து சிறைப் பட்டவர்களிற் மேற்சாதி கிடையாதெனும் ஓர் பொதுச்சட்டத்தை விதித்துவிடுவார்களாயின் இராஜாங்கத்தை அடுத்ததாலும் பெரும் உத்தியோகங்கள் உண்டு, சிறைச்சாலைக்குப் போனாலும் சாதிசுகமுண்டென்னும் மமதை அடங்கி இராஜவிசுவாசத்தில் நிலைப்பார்கள்.

அதாவது, பிரிட்டிஷ் ஆட்சியாயிருந்தும் நாம் வைத்துக்கொண்டுள்ள சாதியாட்சிகள் மட்டுங் கலையாது நின்றுள்ளபடியால் இராஜரீகமும் செல்வாக்கும் நம்முடையதே என்னுஞ் செருக்கடைந்திருப்பதுடன் இராஜாங்கத்தையே அபகரிக்கத்தக்க முயற்சியிலும் இருப்பதாக விளங்குகின்றது.

ஆதலின் “கொள்ளியை இழுத்துவிட்டால் கொதிப்பது அடங்கிப்போம்” என்னும் பழமொழிக்கிணங்க வித்தியா கர்வம், தனகர்வம், சாதிகர்வம் மூன்றினையும் அறுக்கும் வழி தோன்றுமாயின் இராஜதுரோகிகள் தங்களில் தாங்களே யடங்கி அபயமாவார்கள்.

ஈதன்றி ஒவ்வோர் கவர்ன்மெண்டு ஆபீசில் ஒவ்வொரு சாதியோருக்குள்ளும் நாலு பேருக்கு மேற்படாதிருத்தல் வேண்டும். அப்படி அதிகமாக இருப்பவர்களை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி கணக்குபடி நிரவவேண்டியது. சகலசாதியோரும் சமரசமாக ராஜாங்க உத்தியோக சாலையிலிருக்கும்படிச் செய்யவேண்டியது. ஒவ்வொரு ஆபீசுகளிலும் சாதியாசாரமுள்ள பியூன்களை வைத்துக் கொண்டு தங்கள் அலுவல்களையும் பார்த்துக் கொள்ளுகின்றார்கள். அவ்வகையோர்களைப் பியூன்களில் வையாது சாதியாசாரமில்லாதவர்களைப் பியூன்களில் வைப்பதாயின் இராஜாங்கவிஷய சகல சங்கதிகளுக்கும் சுகந்தரும், இராஜாங்க ஆபிசின் தலைமெ உத்தியோகஸ்தர்களும் பியூன்களும் சாதிபேதமில்லாதவர்களாயிருந்து மற்ற உத்தியோகஸ்தர்களில் சகலசாதியோருங் கலந்திருப்பார்களாயின் இராஜ துரோகிகளின் செருக்கும் அவர்களது வஞ்சகமும் அடங்கி தாங்களே ஒடுங்கிப்போவார்கள். இதுவே இராஜ துரோகிகளை அடக்குவதற்கு வழியாயிருக்கின்றபடியால் நீதியும் நெறியும் அமைந்த ராஜாங்கத்தார் இத்தகைய ஏற்பாடுகளைக் கட்டாயமாகச்செய்து முடிப்பார்களென்று நம்புகிறோம்.

- 5:4; சூலை 5, 1911 -