அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/255-383
251. கொடுங்கோல் என்பதென்னை? செங்கோல் என்பதென்னை?
கொடுங்கோலென்பது தன்னவ ரன்னியரென்னும் பட்சபாத முடைத்தாயதும், தன் சுகத்தைப் பார்த்துக்கொண்டு ஏனையோரைக் கருதாததும், குற்றஞ் செய்தவனிவன் செய்யாதவனிவனெனக் கண்டறியாது தெண்டிப்பதும், குடிகள் எக்கேடு கெடினும் அவற்றை நோக்காது தங்களுக்கோர் கேடும் அணுகாமல் பார்த்துக்கொள்வதும், மனிதவகுப்போரை மனிதவகுப்போராக பாவிக்காது சீர்கெடுப்பதும், தங்கள் குடிகளுக்கு நீர் வசதி, தீப வசதி, வீதி வசதி, முதலிய சுகங்கள் அளிக்காது தங்கள் சுகத்தைமட்டிலும் பார்த்துக் கொள்ளுவதும், தாங்கள் மட்டிலும் வண்டி குதிரைகளிலேறி சுகமநுபவிக்கலாம், தங்கள் குடிகள் வண்டி குதிரைகளிலேறி முன்னில் வருவார்களாயின் முறுமுறுப்பதும், குடிகளுக்குக் கிஞ்சித்து செல்வம் பெருகி மெத்தை மேடைகளில் சுகிக்க ஆரம்பிப்பார்களாயின் அவர்கள் வீட்டண்டை தங்கள் யானைகளிலொன்றையேனும், ஒட்டகங்களிலொன்றையேனும் கொண்டு போய் விடுத்து அவைகளுக்கு ஆகாரமளிக்கவேண்டுமென்று உத்திரவளிப்பதும், குடிகள் கிஞ்சித்து சுகமும் நாகரீகமும் அடைந்திருப்பார்களாயின் அவர்கள் அளிக்கவேண்டிய நியாயமாய வரிகளுக்குமேல் அந்நியாயமாய வரிகளை விதித்து வதைப்பதும் சொற்பக் குற்றங்களுக்குப் பெருந்தண்டனையும், பெருங்குற்றங்களுக்கு சிறு தண்டனையுமாய விதிகளைவிதிப்பதும், தேறவிசாரியாமலே தங்கள் மனம்போன ஆளுகைப்புரிவதும் ஆகியக் கொறூரச்செயலையுடைய ஆட்சியைக் கொடுங்கோலென்று கூறப்படும்.
செங்கோலென்பது தன்னைப்போல் பிறரை நேசிப்பதும், தன்னவ ரன்னியரென்னும் பட்சபாதமற்றதும், தான் சுகிப்பது போல் தங்கள் குடிகளும் சுகிக்கவேண்டுமென்று கருதுவதும், தாங்கள் வண்டி குதிரைகளிலேறி உலாவுதல்போல் தங்கள் குடிகளும் வண்டி குதிரைகளிலேறி உலாவுவதைக்கண்டு ஆனந்திப்பதும், குடிகளுக்குண்டாகுந் துன்பங்களை தங்களுக் குற்ற துன்பம்போற் கருதி அவைகளை நிவர்த்திப்பதும், தங்களுக்கு நீர்வசதி, வீதி வசதி, தீப வசதி செய்துக்கொள்ளுவது போல் தங்கள் குடிகளுக்கும், நீர்வசதி தீப வசதி, வீதி வசதி முதலியவைகளைச் செய்து சுகாதாரமளித்துவருவதும், விவசாயிகளாயினும், கைத்தொழிலாளர்களாயினும், விருத்திப் பெற்று சுகச்சீரிலிருப்பார்களாயின் கண்டுகளிப்பதும், அவர்கள் விவசாயங் கெட்டு, கைத்தொழிலுமற்று வெறுமனே நிற்பார்களாயின், வேணப் பணவுதவியும், பூமியின் உதவியும், கருவிகளின் உதவியும் விதையுதவியுஞ்செய்து ஆதரிப்பதும் அவரவர்கள் வருமானத்திற்குத் தக்க வரிகளை விதித்து அவ்வரி தொகைகளைக்கொண்டே குடிகளுக்கு வேண சுகமளித்துவருவதும், நீதிவிசாரிணைப்புரிவதில் தன்னவ ரன்னியரென்னும் பட்சபாதம் பாராது அவரவர்களுக்குரிய மத்தியஸ்தர்களை வைத்தே விசாரித்து நீதியளித்துவருவதும், குடிகளுக்குண்டாய வியாதிகளை நீக்குதற்கும், மற்றும் ஆபத்துகளுக்கும் முன்னின்று ஆதரிப்பதும், குடி.கள் சுகச்சீர்பெற்று வாழ்ந்தால் கோனும் சுகச்சீர் பெறுமென்று கருதுவதும், தாங்களெத்தகைய சுகங்களையநுபவிக்க வேண்டுமென்று கருதுகிறார்களோ அத்தகைய சுகங்கள் யாவையுந் தங்கட் குடிகளும் அநுபவிக்க வேண்டுமென்று கருதுவதுமாகிய அன்பும் ஆறுதலுமுற்ற ஆட்சியையே செங்கோலென்று கூறப்படும்.
உலகிலுள்ள பற்பல அரசர்களின் ஆளுகைகளினுள் இத்தகைய செங்கோலை செலுத்தும் நீதிமன்னர் யாவரெனில், தற்காலம் நம்மெயும், நமது தேசத்தையும் ஆண்டுவரும் பிரிட்டிஷ் அரசாட்சியோரேயாம். அவ்வரசாட்சியே என்றென்றும் இத்தேசத்தில் நிலைத்து சருவமக்களையும் சீர்திருத்தி சுகச்சீர் பெறச் செய்விப்பார்களென்று நம்புகிறோம்.
- 5:45: ஏப்ரல் 17, 1912 -