உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/276-383

விக்கிமூலம் இலிருந்து

272. தென்னிந்தியா எப்போது சிறப்பைப்பெறும் தென்னிந்தியர் எப்போது சீர்பெறுவார்கள்

தென்னிந்தியாவைப் பற்றியும் தென்னிந்தியரைப்பற்றியும் மட்டிலுங் கூறி வடயிந்தியாவையும் வட இந்தியரையும்பற்றி விட்டதென்னோ என்பாருமுண்டு. அவ்வகைக் கூறுவோருக்கு பம்பாயினது சிறப்பையும், வங்காளத்தினது சிறப்பையும் பம்பாய் மக்கள் சீரையுங் கண்டு தெளிவார்களாயின் தென்னிந்தியம் என்ன சீர்கேட்டிலிருக்கின்றது தென்னிந்திய மக்கள் என்ன சீர்கேடுற்று வருகின்றார்களென்பது நன்கு விளங்கும்.

வட இந்தியாவை ஆளுவோரும் பிரிட்டிஷ் துரைத்தனத்தாரே, தென்னிந்தியாவை யாளுவோரும் பிரிட்டிஷ் துரைத்தனத்தாரே, அவர்கள் ஆளுகையின் கருணையால் கற்பித்துவரும் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கங்களைப் பின்பற்றிய வட இந்தியர் தங்கள் தேசங்களைச் சிறப்படையச் செய்யும் விவசாயங்களையும், வியாபாரங்களையும், கைத்தொழிற் சாலைகளையும் அமைத்து உழைப்பாளிகளுக்கு மேலும் மேலும் உதவிபுரிந்து விருத்திச்செய்யும் நோக்கத்தையே பெரிதாகக் கொண்டுள்ளபடியால் அத்தேசக்குடிகள் யாவரும் சீரையும் சிறப்பையும் சுகநிலையும் அடைந்து வருகின்றார்கள்.

தென்னிந்தியரோவென்னில் பிரிட்டிஷ் துரைத்தனத்தோரால் கற்பித்துவரும் விவசாயவிருத்திக் கல்விகளையும், வித்தியா விருத்திக் கல்விகளையும், உலோகவிருத்திக் கல்விகளையும், இரசாயனவிருத்திக் கல்விகளையும், மின்சார விருத்திக் கல்விகளையும் ஊன்றிக் கல்லாமலும் கற்றவற்றை மக்களுக்குத் தெளிவுர போதித்து விருத்தி செய்யாமலும் பத்திரிகைகளில் வரையாமலும் எங்கள் சாதி அனாதியாங்கடவுளிடமிருந்து தோன்றியதென்றும் அதைமட்டிலும் விடாமல் கெட்டியாகப் பிடிக்கவேண்டுமென்றும், எங்கள் வேதம் அனாதியாங் கடவுளால் போதிக்கப்பட்டதென்றும் அதிலுள்ளவற்றை நம்பினவர்களே தங்கள் கூட்டத்தோர்களென்றும், இராமருக்கும் சீதைக்குங் கலியாணமென்றும், துரோபதைக்குத் துயிலுரியலென்றும், எங்கள் சாமி திருவிளையாட்டென்றும், பிரசங்கிகள் பரக்கப் பிரசங்கிக்கவும், அதனைக் கேட்போர் ஆனந்தம் பெற்றுப்போவதும் பத்திரிகைகளை நடத்துவோரும் இத்தகையக் கதைகளையே தங்கள் தங்கள் பத்திரிகைகளில் பெருக்க நிறப்பவும், அதனை வாசிப்போர் அதுவே கல்விவிருத்தி வித்தியாவிருத்தியென்றெண்ணித் துணிபவருக்கு, துரைத்தனத்தார் கருணை கொண்டளித்து வரும் கல்வியின் விருத்தி எங்ஙனம் சிறப்பைப்பெறும். துரைத்தனத்தோர் முயற்சியும் எங்ஙனங் கைக்கூடும். மற்றுமுள்ளோர் நன்றாய் குளித்து முழுகிவிட்டு குறுக்கு பூச்சு நெடுக்குப்பூச்சு, சாத்துகளை நெற்றியிலும் உடலிலும் பூசிக்கொண்டு முப்புரி நூலை முதுகிலிட்டு சொம்பு பாத்திரங் கையிலேந்தி நாங்கள் பிராமணாள் எங்களுக்கே சகலமுங்கொடுத்துக் காக்க வேண்டுமென்று வேதம் முறையிடுகின்றது. எங்களுக்குக் கொடுக்கும் தானத்தால் உங்களுக்குள்ள தனதானியம் மேலும் மேலும் பெருக வாழ்வீர்களென்று சோம்பேறிவித்தையைப் பெருக்கிக் கொண்டார்கள். அவர்களது போதகத்தை மெய்யென்று நம்பி நடப்பவர்களும் அவர்களது சாதி ஆசாரத்தையும் மதவாசாரத்தையும் பின்பற்றியவர்களும் தங்கள் தங்கள் உழைப்பையும் கைத்தொழில்களையும் நழுவவிட்டு தங்கள் குருக்களைப்போல் உருத்திராட்சங் கட்டிக்கொள்ளும் வித்தைகளையும், துளசிமணி அணிந்துக்கொள்ளும் வித்தைகளையும், மந்திரஞ்சொல்லி உருபோடும் வித்தைகளையும், பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டே பிராணாயாமம் செய்யும் வித்தைகளையும், குறுக்குப்பூச்சு நெடுக்குப்பூச்சு கனக்கப்பூசும் வித்தைகளையும், சாதிச்சண்டை வித்தைகளையும், சமயச்சண்டை வித்தைகளையும், தாடி வளர்க்கும் வித்தைகளையும், மொட்டையடிக்கும் வித்தைகளையும் மேலும் மேலும் தங்கள் குருக்களைப்போல் இவர்களும் ஒவ்வோர் சாமிப் பெயர்களையும், சாமிக் கதைகளையுஞ் சொல்லிக்கொண்டு சொம்பு கைகளில் ஏந்தி பிச்சையேற்கும் சோம்பேறி வித்தைகளையே பெருக்கிவருகின்றார்கள். அதனால் துரைத்தனத்தோர் கருணைகொண்டு கற்பித்துவரும் அரியவித்தைகள் எங்கு விருத்தி பெரும்.

இராமாயணத்தைப் படிப்பதும் சுகம், கேட்பதும் சுகமென்பதாயின் அநுபவத்திற்குப் பொருந்துமோ, ஒருக்காலும் பொருந்தாவாம். எங்ஙனம் என்பரேல், இராமரது மனைவியை இராவணன் எடுத்துப் போனதால் அந்த யுத்த கதை நேர்ந்த தென்பது கருத்து. அதனுள் ஒருவன் தாரத்தை எடுத்துப் போனதால் அவ்வூரையும் அவ்வூரிலுள்ள மக்களையும் நாசப்படுத்திவிட்டால் அவனையும் அவனை அடுத்தோர்களையுந் துன்பப்படுத்த முயன்று தானுங் கேடு அடைவானா, கேடு அடையமாட்டானாவென்பதை சீர்தூக்கி ஆலோசிப்பானாயின் அக்கதையைப் படிக்கும் சுகமும் கேட்கும் சுகமும் அன்றே விளங்கும்.

பாரதக்கதையைப் படிப்பதினாலுஞ் சுகமுண்டு, கேட்பதினாலும் சுகமுண்டென்பாராயின் அதுவும் அநுபவத்திற்குப் பொருந்தாது, எங்ஙனமென்னில் அக்கதா சுருக்கம் அண்ணன் தம்பிகள் பாகவழக்கு. அதையே மேலும் மேலுங் கலகத்திற்கு வளர்த்து தங்கள் சகோதரர்களையுங் குருக்களையும் பந்துக்களையும் கொன்றதும் போதாது, மற்றய தேச அரசர்களையும் படைகளையும் நாசப்படுத்திவிட்டார்களென்பதே. அத்தகையக் கதையையே நாளெல்லாங் கேட்பவன் தனது சகோதரருக்குச் சேரவேண்டிய பாகத்தை அன்புடன் கொடுப்பானா அல்லது விரட்டியடிப்பானா. அதனால் இவனுடைய சொத்தையும் சகோதரர் சொத்தையும் மற்றோர் கொள்ளுவரா, இவர்கள் சுகம் பெறுவார்களாவென்று பாரதக் கதாசுருக்கத்தை உற்றுணர்வதாயின் மக்களுக்கு சுகந்தருமா சுகந்தராதா என்பது அன்றே விளங்கும்.

புராணங்களைப் படிப்பதாலுங் கேட்பதாலும் சுகமுண்டென்பாராயின் அதுவும் அனுபவத்திற்குப் பொருந்தாது. எங்ஙனமென்னில் எங்கள் சாமி அன்னியன் தாரத்தை இச்சித்து அவளால் குழந்தையாக சபிக்கப்பெற்றார் என்றபோது சாமியே அன்னியன் தாரத்தை இச்சித்துள்ளார் என்னுங் கதையைக் கேட்பவன் அவ்விச்சிப்பில் நிலைப்பானா அதனால் உண்டாய் கேட்டில் நிலைப்பானா.

இத்தகைய சாமிகளையும் சாமிக்கதைகளையுங் கேட்பதினாலும் படிப்பதினாலும் சோம்பேறி வித்தைகளை நாளுக்குநாள் பெருக்கி வருவதினால் தென்னிந்தியா சிறப்பைப் பெறுமா, தென்னிந்திய மக்கள் சீர்பெறுவார்களா, ஒருக்காலும் சீர்பெறப்போகிறதில்லை. எவ்வகையால் சீரும் சிறப்பு அடையலாமென்னில் “இராஜாங்க மெவ்வழியோ குடிகளுமவ்வழியே” என்னும் பழமொழிக்கிணங்க நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் செய்துவரும் அன்பின் செயலையும், நீதிநெறி வொழுக்கங்களையும், அவர்களது வித்தை புத்தி, யீகை சன்மார்க்கத்தையும் பின்பற்றுவோமாயின் தென்னிந்தியாவும் சிறப்பைப் பெறும் தென்னிந்திய மக்களும் சீர்பெறுவார்க ளென்பது சத்தியம் சத்தியமேயாம்.

- 6;78; அக்டோபர் 9, 1912 -