உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/278-383

விக்கிமூலம் இலிருந்து

274. சுதேசிகளென்போர் யார்! சுயராட்சியம் என்பது என்னை !!

சுதேசிகள் என்பது தேசத்திற்கு சுதந்திரமுள்ளவர்கள், தேசப் பூர்வக் குடிகள், தேசத்திலேயே பிறந்து வளர்ந்து அதன் பலனை அநுபவித்துவந்தவர்கள், இவர்களையே சுதேசிகள் என்றும், சுயதேசவாசர்கள் என்றுங் கூறப்படும். மற்ற காலத்திற்குக்காலம் இவ்விடம் வந்து குடியேறியவர்கள் பரதேசிகளே. அதாவது அவர்கள் அன்னியதேசவாசிகளேயாவர்.

குடியேறி நெடுங்காலமாகிவிட்டபடியால் அவர்களையும் சுதேசிகள் என்று அழைக்கலாமென்றாலோ அவர்களுக்குப் பின் காலத்திற்குக்காலம் இவ்விடம் வந்து குடியேறி நூறுவருடத்திற்கு மேலாகக் காலங்கழிப்பவர்களையும் சுதேசிகள் என்றே கூறத்தகும். அங்ஙனம் அவர்களை நீக்கி ஆயிர வருடங்களுக்கு மேற்பட்டகாலமாக இருப்பவர்களாகிய எங்களை மட்டிலும் சுதேசிகளென்று எண்ண வேண்டும் மற்றவர்களை சுதேசிகளென்று அழைக்கலாகாது என்று கூறுவதற்கு ஆதாரமில்லை. ஆதலின் இத்தேசப் பூர்வக்குடிகளும் இத்தேசத்தை சீர்பெறச்செய்து, அதன் பலனை அநுபவித்து வந்தவர்களும் யாரோ அவர்களையே பூர்வக்குடிகளென்றும், சுயதேசவாசிகளென்றும் சுதேசிகளென்றும் கூறத்தகும்.

அவர்கள் யாரென்னில் தமிழ்பாஷையிற் பிறந்து தமிழ்பாஷையில் வளர்ந்து தமிழ்பாஷைக்கு உரியோர்களாக விளங்கும் பூர்வத் திராவிடக் குடிகளேயாகும். மற்றுமிருந்த ஆந்தர, கன்னட, மராஷ்டகரும் பூர்வக்குடிகளேயாயினும் திராவிடர்களைப்போல் தேசவிருத்தியை நாடியவர்களும், பல தேசங்களுக்குஞ் சென்று பொருளை சம்பாதித்து சுயதேசத்தை சீர்பெறச்செய்தவர்களும், பூர்வ சரித்திரங்களையும், ஞானநீதிகளையும் பல்லோருக்கு உணர்த்தி சுயபாஷையில் எழுதிவைத்துள்ளவர்களும், சாதிபேதமென்னுங் கொடியச்செயலைப் பூர்வத்தில் இல்லாமல் எவ்வகையாக வாழ்ந்து வந்தனரோ நாளதுவரையில் வாழ்ந்தும் வருகின்றனரோ அவர்களே யதார்த்த சுதேசிகளும் பூர்வக் குடிகளுமாவர்.

திராவிடராம் தமிழ்பாஷைக்குரியவர்களுக்குள் சாதிபேதமென்னும் நூதனக்கட்டுப்பாட்டில் அமைந்திருப்போர்களைப் பூர்வக்குடிகளென்றாயினும் சுதேசிகளென்றாயினும் அழைப்பதற்கோ ஏது கிடையாது. எவ்வகையில் என்பரேல் அன்னிய தேசத்திலிருந்து இத்தேசத்தில் வந்து குடியேறிய நூதனசாதிகளையும், நூதன மதங்களையும் உண்டு செய்துக்கொண்டு சீவிப்போர்களுடன் உடைந்தையாகச் சேர்ந்துக்கொண்டு தேசத்தைப் பாழ்படுத்த ஆரம்பித்துவிட்டபடியினாலேயாம்.

இத்தேசத் திராவிடர்கள் அன்னிய தேசத்தோர் சாதி கட்டுக்குள் அடங்கினபடியால் ஒற்றுமெய்க் கேடும் அவர்கள் மதத்தைச் சார்ந்துவிட்டபடியால் அவர்களால் ஏற்படுத்தியுள்ள சாமிகள் கொடுப்பாரென்னும் சோம்பலால் முயற்சி என்பதற்று வித்தியா விருத்தியையும் விவசாய விருத்தி, வியாபார விருத்திகள் யாவையும் பாழ்படுத்தி தேசத்தையுஞ் சீர்கெடுத்து விட்டார்கள். இன்னும் சீர்கெடுத்தே வருகின்றார்கள். தேசத்தையும் தேசமக்களையும் எப்போது சீர்கெடுக்க ஆரம்பித்துக்கொண்டார்களோ அச்செயல் கொண்டு அவர்களையுஞ் சுதேசிகள் என்று கூறுவதற்கு ஆதாரமில்லை.

இத்தேசத்தின் பூர்வசாதிபேதமற்ற நிலையைக்கருதி மக்களை மக்களாக பாவித்து வித்தியாவிருத்தியையும், விவசாயவிருத்தியையும், வியாபார விருத்தியையுஞ் சிந்தையிலூன்றி சோம்பலின்றி உழைத்து தேசத்தை சீர்பெறச்செய்ய முயல்பவர்கள் யாரோ அவர்களையே சுதேசிகளென்றும், சுயதேசத்தார்களென்றும், பூர்வக்குடிகளென்றுங் கூறத்தகும்.

மற்றய சாதிபேதச் செயலால் ஒற்றுமெயைக் கொடுப்போரும், சமயபேதச் செயலால் சோம்பலைப் பெருக்கி தேசத்தைக் கெடுப்போரும், சுதேசிகளாகமாட்டார்கள். அவர்கள் தங்கள் சுயநலத்தையே கருதும் அன்னிய தேசத்தோர்களே ஆவர், அவர்களுக்கு சுதேசிகளென்னும் பெயர் பொருந்தவே பொருந்தாவாம்.

சுயராட்சியம் என்பது யாதெனில் சுயதேசத்தோரும் பூர்வக்குடிகளுமாய மக்கள் தங்கள் தேசத்தை ஆளுவதற்குப் பெயர். அத்தகையப் பெயர் தற்கால இந்துக்கள் என்போருக்குப் பொருந்தவே பொருந்தாது. காரணம் இந்திய தேயத்திலுள்ள சிந்துநதி ஓரமாக வந்து குடியேறி இந்துக்கள் என்றழைக்கப்பெற்றோர் இந்திய தேசத்தின் நூதனக்குடிகளாதலின் அவர்களுக்கு சுதேசிகளென்னும் பெயரே கிடையாது. அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தோருக்கும் சுயராட்சியத்தோர் என்னும் பெயரும் பொருந்தாது. அவர்களுக்கு சுயராட்சியத்தோர் ஆச்சுதே என்னும் ஆளுகையும் அளிக்கத்தகாது. இத்தேசத்தின் ஆளுகையைப் பெறுவதற்கும் அவர்களுக்கு சுதந்திரம் கிடையா.

கருணைதங்கிய பிரிட்டிஷ் துரைத்தனத்தார் தங்களாளுகையைச் சுதேசிகளின் மீது கிருபை பாவித்து சுயராட்சியத்தை யளிப்பதாயினும் இத்தேசப் பூர்வக் குடிகள் யார், யதார்த்த சுதேசிகள் யாரென கண்டுதெளிந்து அவர்களை சீர்திருத்தி அவர்கள் பால் அளிப்பதே கிருபையாகும். அங்ஙனமிராது நேற்று குடியேறிவந்தவர்களையும் முன்னானாள் குடியேறி வந்தவர்களையும் சுதேசிகளென்று கருதி அவர்கள் வசம் சுயராட்சிய ஆளுகையை ஒப்படைத்து விடுவார்களாயின் யாதார்த்த சுதேசிகள் யாவரும் பாழடைந்து போவதுடன் சுதேசமுங்கெட்டு சீரழிந்து போமென்பது சத்தியம்.

யதார்த்தமாய சுதேசக்குடிகளே, இவற்றை சற்று ஆழ்ந்து கவனித்தல் வேண்டும். வாசித்தவர்களுக்குள் ஐந்தாறு பேர் முனைந்து சுயராட்சியம் வேண்டும், சுயராட்சியம் வேண்டுமென சமயோசிதக் கூச்சலிட்டு வருகின்றார்கள். இந்தியதேச ஏழை மக்களின் இடுக்கண்களையும் அவர்கள் பட்டுவருங் கஷ்ட நஷ்டங்களையும் கண்ணினால் கண்டறியா இங்கிலாந்திலுள்ள சில துரைமக்களும் அவர்களுக்கு உபபலமாகப் பேசியும் வருகின்றார்கள். இத்தகையப் பேச்சுகளையுங் கூச்சல்களையுங் கேட்டறிவதற்குமுன் சுதேசிகள் என்பவருள் கவர்மென்றாரால் ஓர் கிராம அதிகாரங் கொடுத்து விடுவார்களாயின் அந்த சொற்ப அதிகாரத்தால் அக்கிராமக் குடிகளுக்கு சுகச்சீருண்டா அன்றேல் சுகக்கேடுண்டா. ஓர் கதேசிகள் என்னும் அதிகாரிகளிடங் குடிகள் சென்று ஏதோ உள்ள குறைகளை முறையிடுவாராயின் அவற்றை அன்புடன் கேட்டு நீதியளிக்கின்றார்களா அன்றேல் சீறிச்சினந்து விரட்டுகின்றார்களா. இத்தகைய சொற்ப அதிகாரங்களைக் கொடுத்து பிரிட்டிஷ் துரைத்தனத்தார் மேல்பார்வையிருக்கும் போதே தங்கள் சுயப்பிரயோசனத்தைக் கருதி குடிகளை சீரழிப்பவர்கள் சுயராட்சிய ஆளுகையைப் பெற்றுக்கொள்ளுவார்களாயின் தேசத்தையும் தேசமக்களையும் என்ன சீர்கெடுப்பார்களென்பது சொல்லாமலே விளங்கும்.

ஆதலின் நீதியும் நெறியுங் கருணையுமிகுத்த இப்பிரிட்டிஷ் ஆளுகையில் உள்ளக் குடிகளில் தோட்டி முதல் தொண்டான் வரையில் ஏதோ கிஞ்சித்து கல்விகற்றும் கைத்தொழில் கற்றும் சகலமக்களும் சொற்ப சுகச்சீரேனும் பெற்று மனிதர்களென தேசத்துலாவுகின்றார்கள். இத்தகைய சீர்திருத்த காலத்தில் பிரிட்டிஷ் துரைத்தனமென்பது மாறுபட்டு சுதேசிய துரைத்தனர் தோன்றுமாயின் சகல மக்களின் சுகச்சீர்களுங் கெட்டு பாழடைய வேண்டிவரும். ஒருவன் எழுந்து கோவிந்தா, கோவிந்தாவென்றவுடன் அவ்விடமுள்ள நூறுபேரும் அதன் விவரமறியாது கோவிந்தா, கோவிந்தா வென்று பெருங்கூச்சலிடுவதுபோல இரண்டுபேர் சேர்ந்துக்கொண்டு சுயராட்சியம் சுயராட்சியம் என்றவுடன் உள்ளவர்கள் யாவரும் அதனுட்பொருளையும் அதன்செயலையுங் கருதாது தாங்களும் சுயராட்சியம், சுயராட்சியம் என்னவும் சுதேசிகள், சுதேசிகளென்று ஆர்பரிக்கவுமுள்ளச் செயல்களை அகற்றி தற்காலம் நம்மெ ஆண்டுவரும் பிரிட்டிஷ் துரைத்தனமே நீடிக்க வேண்டுமென்றும் அவர்களது வாழ்க்கையே சுகம்பெற வேண்டுமென்றும் அவர்கள் சுகவாழ்க்கைப் பெறுவார்களாயின் நாம் இன்னும் சுகவாழ்க்கையை அடையலாமென்றும் ஆர்ப்பரித்து இராஜ விசுவாசத்தில் நிலைப்பதே அழகாகும்.

- 6:21: அக்டோபர் 30, 1912 -