அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/331-383
2. வடமொழியிலுள்ள நான்குவகைத் தொழிற்பெயர்களும்
அதன் சிறப்பும்
1-வது, சூத்திரர் அல்லது சூத்திர ரென்னப்படும் ஒவ்வோர் மனிதனும் தங்கள் கைகால்களை ஓர் இயந்திரம்போல் கொண்டு தொழிற்புரிவதினாலும் கலப்பை, பரம்புகோல், ஏற்றம் முதலிய சூஸ்திரக் கருவிகளைச் செய்து பூமியின் பலன்களை விருத்தி செய்வதினாலும் மண் முதலிய பாண்டங்களை சிருட்டி செய்தலினாலும் வெண்கலம், வெள்ளி, பொன் முதலிய உலோகங்களால் சூடல்செய்வதினாலும் தோல்கருவி துளைக்கருவி, நரம்புக் கருவிகளால் வாஜ்ஜிய காருகவினைகள் உண்டு செய்வதினாலும் இவர்கள் உலகலங்காரர், உடல் சிறப்பீவோர், சூத்திரர் சிற்றறி சூஸ்த்திரரென்னும் சிறப்புப் பெயர் பெற்றார்கள்.
2-வது, வைசியர் இவர்களில் கோவைசியரென்றும், பூவைசியரென்றும், தனவைசியரென்றும் மூவகை வைசியர் உண்டு. இதில் கோவைசியரென்போர் தங்களிடமுள்ள பால், தயிர், நெய், கோரோசினம், தோல், நரம்பு முதலியவைகளைக் கொண்டுபோய் பூவைசியர்களிடம் கொடுத்து அரிசி, கோதுமை, கேழ்வரகு, ஐங்காய முதலிய தானியங்களை வாங்கிக்கொள்ளுகிறதும், பூவைசியர் தங்களிடமுள்ள தானியவர்க்கங்கள் ஐங்காய வர்க்கங்கள் எண்ணெய் வர்க்கங்கள் முதலியவைகளை தனவைசியரிடங் கொண்டுபோய்க் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளுகிறதும், தனவைசியர் தங்கள் பணங்களைக் கொடுத்து வாங்கிய பொருட்களை தக்கலாபத்திற்கு விற்று செட்டை நிலைநிறுத்தி ஒன்றை கொடுத்து மற்றொன்றை வாங்குவோருக்கு வைசியர் என்னும் சிறப்புப் பெயர் அளித்தார்கள். 3-வது, க்ஷத்திரியன் என்பது புஜபல பராக்கிரம சஷாத்திரியன் என்னப்படும். அதாவது தனது புஜ பல வலிமெயாலும் மன்னு திடத்தினாலும் துட்ட மிருகங்களுக்கு அஞ்சாது வேட்டையாடி துண்டித்தலும், எதிரிகளின் ரத, கஜ, துரக, பதாதீகள் ஏராளமாக நிற்கினும் மன்னு திடங்குறையாமலும் பின்முதுகு காட்டாமலும் முன்மார்பு கொடுத்து போர்புரியும் க்ஷாத்திரியன், க்ஷத்திரியன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றான்.
4-வது, பிராமணம் அல்லது பிராமணன் என்னும் விவேக மிகுத்த வர்களின் பெயர்கள் அன்பின் பெருக்கத்தினாலும் சாந்தரூபத்தினாலும் ஈகையின் குணத்தினாலும் உண்டான பெயர்களாம். அதாவது பாலிமொழியில் சமணாளென்றும் சமஸ்கிருத மொழியில் சிரமணாளென்று வழங்கப் பெற்ற ஞானசாதனர்கள் உபநயனம் என்னும் உதவி விழியாகும் ஞானக்கண் ஆசிரியனால் அளிக்கப்பெற்று இடைவிடா உள் விழிநோக்கத்தால் தன்மன நின்று சின்மாத்திரமடைந்த சாந்தஸ்வரூபிகளை பாலி மொழியில் அறஹத்துக்கள் என்றும், சமஸ்கிருத மொழியில் பிராமணர்களென்றும் அழைக்கப்பெற்றார்கள். அதுவுமன்றி தாயுமானவர், ‘வேதமொழி யாதொன்றைப் பற்றுனதுதான் வந்து முற்றுமெனலால் ஜகமீதிருந்தாலும் மரமுண்டென்பது சதாநிஷ்டர் நினைவதில்லை’ என்றார். வேதமொழிகளாகிய, பாபஞ் செய்யாதிருங்கள், நன்மெய்க் கடைபிடியுங்கள், உங்களிருதயத்தை சுத்தி செய்யுங்கள் என்னும் மும்மொழியில் யாதொன்றை யேனுமிடைவிடாது பற்றியதுவே முற்றி முத்திக்கு ஆளாவனேல் மரணஜெயம் பெற்று தென்மொழியில் காலகாலன் என்றும் வடமொழியில் பிராமணா எமகாதகாவென்றும், இயமனை ஜெயித்தவன் என்றும் மாளாசிறப்புப் பெயர் பெற்றான்.
- 1:3; சூலை 3, 1907 -