அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/335-383
6. ஜெனானா லேடிகளும் இந்துப் பெண்களும் கல்வியில்லாமங்கை கணவனுக்குச்சங்கை ஏன் விவேகக்குறைவினாலேயாம்
ஓர்கால் கல்வியில்லா புருடனுக்கும் கல்வியில்லா மனைவிக்குங் குடும்பபாவனை அநுடாவத்தில் நிகழ்ந்துவந்தது. தற்காலப்புருடர்களோ சொற்பக் கல்வியிற் பயின்றிருக்கின்றபடியால் மனைவியும் சொற்பக் கல்வியிற் பயின்றிருப்பாளாயின், வாழ்க்கைத்துணை நலமென்று கருதி விவேகிகள் தங்கள் பெண் மக்களை கல்விகற்க விடுகின்றார்கள்.
இவ்வகை சிறந்த எண்ணமுறும் பெரியோர்கள் ஆயிரம் பெயர்கூடி ஆளொன்றுக்கு 10 பத்து ரூபாய் நன்கொடை அளித்து பத்தாயிரம் ரூபாய் சேர்ந்தவுடன் அதன் விருத்தியைக்கொண்டு தையல் வேலையிலும், கல்வியிலும் பழகியுள்ள இந்துப்பெண்களுக்கு பத்து பதினைந்து ரூபாய் சம்பளங்கள், நியமித்து வீடுகடோருஞ் சென்று பெண்களுக்கு விவேகவிருத்தி செய்விப்பார்களாயின் கவலையுங் கலகமுமில்லாமற் சுகமடையலாம்.
உதாரத்துவ குணமில்லாதவர்களும் உண்மெயில் ஊக்கமில்லாதவர்களும் உலோபமே குடிகொண்டவர்களுமாகிய நாம் நமது பெண் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க எண்ணம் கொண்டவுடன் ஓர் ஜனானா லேடி வருவாளாயின், தொரைசாணியம்மா வந்தாங்கோ, தொரைசாணியம்மா வந்தாங்கோ என்னுங் குதூகலத்தால் கொண்டாடுவதுடன் மூன்றாவது, நான்காவது வீட்டுக்காரிகளைக் கண்டவுடன், எங்கள் வீட்டுக்கு தொரைசாணியம்மா வந்தாங்கள் என்று டம்பித்து தான் கெடுவதுமன்றி அடுத்த வீட்டுக்காரியையும் முடிபோட்டு விடுவார்கள். (சில வரிகள் தெளிவில்லை) இத்தகைய முடி விவேக முடியா என்பதை கவனிப்பதில்லை.
டம்பத்திற்கு தொரைசாணியம்மாளைத் தருவித்து அம்பலத்திலாடுவது அநுபவத்திற்கண்டும் ஆராயலின்மை ஆச்சரியமேயாம்.
ஒவ்வோர் கிறிஸ்தவப் பாதிரிகளும் ஜெனானாக்களை வீடுகடோரும் அனுப்பி கல்வி கற்பிக்கச்செய்வது தங்கள் மத போதனைகளையூட்டி கிறிஸ்தவர்களாக்கவேண்டுமென்பது முன்னோக்கம் கல்வி கற்பிப்பது பின்னோக்கம்.
பாதிரிகளின் வருஷாந்த விசாரணையில் ஜெனானா லேடிகளைத் தருவித்து எத்தனைப் பெண்களை கிறிஸ்தவ மார்க்கத்திற் சேர்த்தீர்களென்னும் விசாரணையேயன்றி எவ்வளவுக் கல்வி அதிகரிக்கச் செய்தீர்களென்னும் விசாரணைக் கிடையாது.
அவர்கள் தங்கள் பணங்களை விரயப்படுத்தி செய்துவருஞ் செயல்கள் அத்தியந்த நன்மெயைப் பயக்கக்கூடியதாய் இருப்பினும் பலாத்காரச் செய்கை பழிப்புக்கிடமேயாம்.
அவர்களைப் பழிக்கும் நாம் தற்காலம் புரசை வாக்கத்தில் நடந்துள்ள பலாத்காரத்தைப்போல் இதற்கு முந்தியும் இச்சென்னையில் பலாத்காரமாக எத்தனையோ பெயர்களைக் கிறிஸ்தவர்களாக்கி விட்டார்கள். அவைகளை நன்குணர்ந்தும் அதற்குத்தக்க ஏதுக்களைத் தேடாமல் எறுமெய்மேல் மழைபொழிவதுபோல் ஏங்கிநிற்பது இழிவுக்கிடமேயாம்,
தாழ்ந்தசாதியோரை கிறிஸ்தவர்களாக்கிவிட்டால் நமது தேவனாகிய கிறீஸ்து தாழ்ந்த சாதியாகிவிடுவார். உயர்ந்தசாதியோரைக் கிறிஸ்தவர்களாக்கி விட்டால் நமது தேவனாகிய கிறிஸ்து உயர்ந்த சாதியாகிவிடுவாரென்னும் எண்ணத்தினால் உபாயக் கிறிஸ்தவர்களாக்க முயன்றவர்களுக்கு அபாயம் நேரிட்டது அழிவுக் கிடமேயாம்.
அவர்கள் செய்கை அவர்கள் அழிவுக்குக் காரணமாயிருந்தபோதிலும் நமது ஏழை எளியோர்களை அதிகாரிகள் முன்னிலையில் காட்டிக் கொடுத்து அவர்களை துன்பத்திற்கு ஆளாக்குவதுடன் அதிகாரிகளுக்கும் குடிகளுக்கும் மனத்தாங்கலை உண்டு செய்துவிடுவது அபாயத்துக் இடமேயாம்.
ஆதலின் அன்பர்கள் ஒவ்வொருவரும் சுருசுருப்பினின்று இந்து பாலிகா போதனா ஸ்திரீகளைக் கண்டெடுங்கள். அவர்களைப் போஷிக்குந் திரவியங்களை ஈய்ந்தருளுங்கள். ஆதரிக்குங் கூட்டத்தை அமர்த்திவையுங்கள், அமர்த்திவையுங்கள் இதுவே சுதேச முதற் சீர்திருத்த மென்னப்படும்.
- 1:8; ஆகஸ்டு 7, 1907 -