அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/342-383

விக்கிமூலம் இலிருந்து

13. மேருமந்திரபுராணம்

வினா : அதாவது - பெரியபுராணம், கந்தபுராணங்களைக் கண்டுமிருக்கின்றோம், கதைகளைக் கேட்டும் இருக்கின்றோம். ஆனால் மேருமந்திர புராணம் என்பதைக் கண்டதுமில்லை. கதைகளைக் கேட்டதுமில்லை ஆதலின் பத்திராதிபர் அன்புகூர்ந்து அப்புராணம் ஓலையிலெழுதப்பட்டிருக்கின்றதா, அச்சிட்டிருக்கின்றார்களா, அது எங்கு கிடைக்கும் கண்டெழுதக் கோருகிறோம்.

இரண்டாவது, ஓர் கூட்டத்தோரை பெளத்த மார்க்கத்தோரென்று மனப்பூர்வமாகத் தெரிந்தும் அக்கூட்டத்தோரைப் பறையர்கள் என்று கூறியிருக்கின்றார்களா, அவ்வகையான ஆதாரங்கள் ஏதேனுமிருந்தாலும் அதையும் தெரிவிக்கும்படி மிகக் கேட்டுக் கொள்ளுகிறோம்,

பி. சேஷகிரிராவ், சேலம்.

விடை: மேருமந்திர புராணம் புதுக்கோட்டை சமஸ்தான வித்துவான் பனையஞ்சேரி முருகேச கவிராயரவர்கள் சகோதிரராகிய அரங்கசாமி கவிராயரவர்களால் திருத்தப்பட்டு நூலாக்கியோன் பெயரின்றி ம-அ-அ-ஸ்ரீ சக்கிரவர்த்தி நாயனாரவர்களால் புஷ்பரதச் செட்டியாரவர்கள் அச்சுக்கூடத்தில் பிரசுரப்படுத்தி இருக்கின்றார்கள் வேண்டுவோர் பெற்றுக் கொள்ளலாம்.

சமஸ்கிருதத்தில் எழுதியுள்ள வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம் பதினைந்தாவது அத்தியாயம் பதினைந்தாவது வாக்கியத்தில் கூறியுள்ளவை யாதெனில்:-

அனுமாரானவர் இலங்காதீவத்திற்கு சென்று சீதாபிராட்டியை எங்கும் தேடிக் காணாமல் ஆரண்ணியத்திலுள்ள ஓர் கோபுரத்தின்மீது உட்கார்ந்து இது பௌத்தர்களின் சிறப்புப்பெற்ற மடமென்று கூறியதாக வரைந்திருக்கின்றது.

அனுமாரின் வாக்கியத்தைக் கொண்டே அஃது பௌத்தர்களின் நாடென்று திட்டமாக வாசித்துணர்ந்த அருணாசல கவிராயரவர்கள் தானியற்றியுள்ள ராமநாடகம் சுந்தரகாண்டச் செய்யுளில்,

சீதை புலம்பல்

நிறை தவச்சுக்கு குறை யிவளென்று நினைத்து கைவிடுவாரோ
பறையர் வூரிலே சிறையிலிருந்த வென்னை பரிந்துகை தொடுவாரோ

என்னுஞ் செய்யுளாதாரத்தால் பௌத்தர்களைப் பறையர்கள் என்று கூறியுள்ளாரென அறியலாம்.

- 2:51: சூன் 2, 1909 -