அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/347-383

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

18. இந்துக்களென்போர் மதத்திற்கு சாதியாதரவா
அன்றேல் சாதிக்கு மதம் ஆதரவா

தொன்னைக்கு நெய்யாதரவா நெய்க்கு தொன்னையாதரவாவென்று ஆராயுங்கால் நெய்க்கு தொன்னையே ஆதரவாகத் தோற்றுவதுபோல் இந்துக்களென்போர் தங்கள் சீவனத்திற்கு ஆதரவாக மதங்களையும், மதங்களுக்கு ஆதரவாக சாதிகளையும் வகுத்து வைத்திருக்கின்றார்கள்.

எங்ஙனமென்பீரேல், சைவன் அல்லது வைணவன் ஒருவன் விபச்சாரத்தாலேனும், கொலையாலேனும், குடியாலேனும், களவாலேனும், குற்றஞ்சாட்டி அதிகாரிகளால் தண்டனை அடைந்து சிறைச்சாலையேகிக் காராக்கிரகம் பெற்று சகலசாதியோரிடம் சம்மந்தித்திருந்து வீடுசேருவானாயின் அவனது உற்றோர் பெற்றோர் உரவின் முறையோர் யாவரும் அழைத்துவந்து சமயக்கோவிலும் சென்று தேங்காயுடைத்து ஐயருக்கு தட்சணை அளித்துவிடுவார்கள்.

அவன் எத்தகைய பாதகஞ் செய்திருப்பினும் கோவிலுக்கு வந்து குருதட்சணைக் கொடுத்துவிடுவானாயின் அவன் சாதியுங் கெடுவதில்லை, மதமுங் கெடுவதில்லை என்று சேர்த்துக்கொள்ளுவார்கள்.

வைணவமதம் சைவமதத்தைச் சேர்ந்த மற்றொருவன் B.A., M.A., முதலிய கெளரதா பட்டம் பெற்று அந்தஸ்துள்ள உத்தியோகமும் அமர்ந்து சகலராலும் நன்குமதிக்கப்பெற்றவனாயிருந்து முன்பு தான் தொழுதுவந்த விஷ்ணுவென்னுஞ் சுவாமியை மறந்து கிறிஸ்துவென்னுஞ் சுவாமியைத் தொழுவதற்குப் போய்விடுவானாயின் அவன் சாதிகெட்டுவிட்டானென்று புறம்பே நீக்கி சாவு வாழ்வு முதலியவைகளிற் சேர்க்காமலும், உண்பினைக்கூட்டத்திற்கு அழைக்காமலும், அவனை மரித்தோர்களில் ஒருவனாக எண்ணி நீக்கி விடுகிறார்கள்.

முன்பொருவன் பஞ்சபாதகங்களுக்கு உள்ளாகி சிறைச்சாலை, சேர்ந்து சகலசாதியோருடன் உழைத்து வீடுவந்து கோவிற்சேர்ந்து குருதட்சணைக் கொடுத்தவுடன் சாதிகெடாது சகலருடன் சேர்ந்துவிட்டான்.

இரண்டாவது கூறியுள்ளோன் நன்குவாசித்து கெளரதாபட்டம் பெற்று அரசர்களாலும், குடிகளாலும் நன்குமதிக்கப்பட்டு சிறந்த உத்தியோகத்திலிருந்து விஷ்ணுவைத் தொழாது கிறிஸ்துவைத் தொழ ஆரம்பித்தவுடன் சகல சாதியோருடனும் நீக்கப்பட்டான்.

இவ்விருதிரத்தோரின் செயலால் சாதிக்காக மதந் தோன்றியுளதா அன்றேல் மதத்திற்காக சாதி தோன்றியுளதா என்பதை எளிதில் அறிந்துக் கொள்ளலாம்.

அதாவது புத்தரென்னும் ஒருவர் தோன்றியிருந்தார். அவரைச் சார்ந்தவர்கள் பௌத்தர்களென்று அழைக்கப் பெற்றார்கள். கிறிஸ்து என்னும் ஒருவர் தோன்றியிருந்தார். அவரைச் சார்ந்தவர்கள் கிறிஸ்தவர்களென்று அழைக்கப்பெற்றார்கள்.

மகமதுவென்னும் ஒருவர் தோன்றியிருந்தார் அவரைச்சார்ந்தவர்கள் மகமதியரென்று அழைக்கப்பெற்றார்கள்.

அவர்கள் மூவரும் பிறந்து வளர்ந்த தேசங்களையும், சரித்திரங்களையும் காணலாம்.

முன் மூன்றுக்கும் மாறாக சிலர் இந்துமதத்தோரென்பார்கள். இந்து என்பவர் எங்கு பிறந்தவர் எத்தேசவாசி சரித்திரமுண்டா கிடையாது. சிலர் ஆரியமதமென்பார்கள். ஆரியரென்பவர் யார், எங்கு பிறந்தவர் எத்தேசவாசி, சரித்திரமுண்டா கிடையாது. இவ்வகை ஆதாரமற்ற இரண்டு மதங்களுக்குப் பின்பு சிலர் சைவமதத்தோர் என்பார்கள். சைவரென்பவர் யார், எங்கு பிறந்தவர் எத்தேசவாசி சரித்திரமுண்டா கிடையாது. சிலர் வைணவ மதத்தோரென்பார்கள், வைணவரென்பவர் யார், எங்கு பிறந்தவர், எத்தேசவாசி, சரித்திரமுண்டா கிடையாது. இத்தகைய சரித்திரமற்றதும், ஆதாரமற்றதுமாகிய மதங்களை ஏற்கப்போமோ என்றால் எங்கள் மதம் அனாதியாயுள்ளதென்பார்கள்.

அனாதியாயின் இந்துவென்றும், ஆரியனென்றும், சைவனென்றும், வைணவனென்றும் ஆதியாய்ப் பெயர்கள் தோற்றியக் காரணம் யாதெனில், அப்பெயர்களும் அனாதியென்பார்கள், ஆதியாய் ஓர் மனிதனின்றி அப்பெயர்கள் தோன்றுவதற்கு ஏதுவில்லையெனில் அதுவும் அனாதியினின்றே தோன்றிற்றென்பர். இல்லாததினின்று உள்ளபொருள் தோன்றுமோ, காணாததினின்று காட்சி விளங்குமோ, மலடியென்று கூறி அவளுக்கு மைந்தனுண்டென்னலாமோ அவைபோல் அனாதியென்று கூறி அதிலோர்மதந் தோன்றிற்றென்னில் அம்மதம் சகலருக்கும் சம்மதமா தம்மதமாவென்னில் சகலருக்கும் சம்மதமே என்பார்கள்.

சகலருக்கும் சம்மதமாயின் ஓர் மகமதியர் தங்களை அடுத்து உங்கள் வைணவ கடவுளே மேலானவர் சைவக்கடவுளே மேலானவர் அவரையாசித்து தொழுதற்கு தங்களை அடுத்துவந்திருக்கின்றேன் என்னையுந் தங்கட் கோவில்களினுள் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பாராயின் உங்கள் அனாதியாய மதத்தில் சேர்த்துக்கொள்ளுவீர்களோவென்றால் மதத்தை வாசித்தறிந்துக் கொள்ளும்படி செய்வோம். கோவிலுள் சேர்க்கமாட்டோமென்பார்கள். உங்கள் அனாதிமதம் கோவிலுக்குள்ளிருக்கின்றதா வெளியிலிருக்கின்றதா எனில் விழிப்பார்கள். உங்கள் அனாதி மதம் உன் சுவாமிப் பெரிது என்சுவாமி பெரிதென்னும் சண்டையிடுமோவென்னில் அதற்கும் விழிப்பார்கள்.

இத்தியாதி மொழிக்குமொழி பேதங்களாக தங்கள் தங்கள் சீவனத்திற்கு மதங்களையும், அதற்காதரவாக சாதிகளையுந் தற்காலம் ஏற்படுத்திக் கொண்டவர்களாதலின் தங்கள் மதங்களை நிலைக்கச் செய்து சீவிப்பதற்கே சாதிகளை ஆதரவாக நிலைக்கவைத்திருக்கின்றார்கள். சாதிகளெப்போது ஒழியுமோ மதங்களும் அன்றே அனாதியாக ஒழிந்துபோம் என்பது திண்ணம். மதங்களுக்கு வரம்பு சாதிகளேயாம். அச்சாதிகளே கற்பனையாயின் சாதியுள்ளோர் மதங்கள் எத்தகையத்தென்பதை எளிதில் அறிந்து கொள்ளுவீர்களாக. அவர்கள் கூறுவது போல் இந்து மதம் ஆதியற்ற அநாதிமதமாதலின் நாளுக்கு நாள் அநாதியாக வழிந்து ஆட்களும் குறைந்தே வருகின்றார்கள்.

- 3:20; அக்டோபர் 27, 1909 -