அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/354-383
25. கோவிலில்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்
இது பூர்வ விவேகக் குடிகளின் சம்மதம். அதாவது அரசன் வாழ்க்கையில்லா தேசத்தில் வாசஞ்செய்யும் குடிகளுக்கு எவ்வகையானுங் கேடுண்டாம் ஆதலின் அரசன் மனையில்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்று கூறியிருக்கின்றார்கள்.
அரசன் மனை இருக்குமாயின் தனது நீதிவழுவா செங்கோலினால் குடிகளுக்கு அன்னிய அரசர்களால் உண்டாகும் இடுக்கங்களை நீக்கி ஆதரிப்பதற்கும் துஷ்டமிருகங்களால் உண்டாகுங் கேடுகளை அகற்றிக் காப்பதற்கும், கள்ளர்களால் உண்டாம் பயங்களைப் போக்கிப் பாதுகாப்பதற்கும் பேருதவியாகும். ஓர் தேயத்திற்குப் பாதுகாப்பிட்டுக் காக்கும் அரயன் மனை அவ்விடம் இல்லாமற் போமாயின் வேற்றரசர்களின் இடுக்கமும் மிருகாதிகளின் துன்பமும் கள்ளர்களின் உபத்திரவமும் குடிகள் ஒருவருக்கொருவர் உண்டாங் கலகங்களும் பெருகி விசாரிணையற்று தேசக் குடிகளின் வித்தியாவிருத்தியும் விவசாயவிருத்தியுங்கெட்டுப் பாழடைந்து போவது அநுபவமாகும்.
ஆதலின் அரசனும் அரசன் மனையுமாகும் கோவில் இல்லாவூரில் குடியிருக்கவேண்டாமென்று கூறியிருக்கின்றார்கள். இத்தகைய அரசருள் தன்சாதியோர் புறசாதியோரென்னும் பேதமின்றியும் ஏழைகள் கனவான்களென்னும் தாட்சண்ணியமின்றியும், தன்மதம் பிறர்மதமென்னும் பற்றன்றியும், நீதிநெறி வழுவாது பாதுகாத்து சுகசீரளிக்கும் செவ்வியக்கோலாம் செங்கோல் நடாத்தும் அரசனையே அடுத்து வாழ்வதழகாகும். அங்ஙமின்றி தன்சாதி பெரிது புறசாதிசிறிதென்னும் பேதா பேத சாதிகர்வமும் தானே கனவான் மற்றவர்கள் ஏழையென்னும் மதோன்மத்த தனகர்வமும், தன்மதம் பெரிது ஏனையோர் மதம் சிறிதென்னும் மதோன்மத்த மதகர்வமுடையவனாய் கொடிய கோலென்னும் கொடுங்கோலரசுபுரிவோனை அண்டிவாழ்தலினும் கொடிய மிருகங்கள் வாசங்செய்யுங் காடுகளில் வாழ்தலே மிக்க மேலாயதாகும்.
தற்காலம் இவ்விந்தியதேசத்தில் சாதி பேதமில்லாது வாழ்ந்தவர்கள் சாதி ஒன்றை நூதனமாக ஏற்படுத்திக்கொண்டவுடன் சாதி கர்வத்தையும் மதபேதமில்லாமல் வாழ்ந்து வந்தவர்கள் நூதனமாகிய மதங்களை ஏற்படுத்திக்கொண்டவுடன் மதகர்வத்தையும், வித்தையறியாத வீணர்களாய்த் திரிந்து நூதனமாக சொற்ப வித்தைகளைக்கற்றுக்கொண்டவுடன் வித்தியா கர்வத்தையும், என்றும் பணம் படைத்தறியாது நூதனமாக சொற்ப பணம் படைப்போரெல்லாம் தனகர்வத்தை யுங்கொண்டு ஒற்றுமெயற்று பாழடைந்து போகின்றார்கள். இத்தகைய பேதமுற்றக் கூட்டத்தோரை ஆண்டு ரட்சிக்க வேண்டிய அரசர்கள் தன்சாதி புறசாதியென்னும் பேதம்பாரா சாதிகர்வமற்றவர்களும் தன்மதம் புறமதமென்னும் பேதம்பாரா மதகர்வமற்றவர்களும் தன்வித்தை மேலானது பிறர்வித்தைத் தாழ்வானதென்னும் பேதம் பாரா வித்தியாகர்வ மற்றவர்களும் தாங்கள் கனவான்கள் மற்றவர்கள் ஏழையென்னும் தனகர்வ மற்றவர்களும் ஆகியோர்களே இத்தேசத்திற்கு அரசர்களாக நிலைக்க வேண்டுமென்பதே சாதிபேதமற்ற இத்தேசப் பூர்வக்குடிகளின் சம்மதமாகும். அவர்கள் எண்ணப்படி பூர்வபுண்ணிய வசத்தால் தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதமின்றி செங்கோலோச்சும் ஆங்கில அரசாட்சியே தோன்றி நிற்கின்றது. அவர்களாட்சியே நீடிநிலைத்து சகலசாதியோரையும் சகல மதத்தோரையும் சகல பாஷையோரையும் தங்களோர் குடைக்கீழ் கார்த்து ரட்சிக்கவேண்டி நிற்கின்றார்கள்.
- 4:8; ஆகஸ்டு 3, 1910 -