அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/356-383
27. மநுமக்களில் தீண்டாதவர்களென்றால் யார்.
பூர்வ நீதி சாஸ்திரங்கள் யாரைத் தீண்டக்கூடாதென்றுக் கூறுகிற தென்னில், வஞ்சகர்களைத் தீண்டப்படாது, உறவாடி குடிகெடுப் போரைத் தீண்டப்படாது, கொலைஞர்களைத் தீண்டப்படாது, அவர்களது தெரிசனமுங் காணப்படாதென வரைந்துள்ளார்கள்.
பெருந்திரட்டு
தன்னெஞ்சந் தனக்குச் சான்றதுவாகத் / தத்துவனன் குணராதே
வன்னெஞ்சனாகிக் கூடமே புரிவோன் / வஞ்சகக் கூற்றினுங் கொடி யோன்
பன்னுங் காலலன்றன் றெரிசனம் பரிசம் / பழுது நீரைய வேதுவுமாம்
புன்னெஞ்சாலவனும் போய்நர கெய்தி / பூமியுள்ளளவு மேறானால்.
இவற்றை அநுசரித்து வைத்திய சாஸ்திரிகள் யாரைத் தீண்டப் படபாதென்று கூறுகின்றார்களென்னில், குஷ்டரோகிகளையும், விஷபேதி கண்டவர்களையும், விஷமாறி கண்டவர்களையும் நெருங்கவும்படாது தீண்டவும்படாது என வரைந்து வைத்திருக்கின்றார்கள்.
இத்தகைய செயலே மநுகுல ஒழுக்கத்திற்கும் செயலுக்கும் விவேக மிகுத்தோர் கருத்திற்கும் பொருந்தியதாகும். அங்ஙனமின்றி இத்தேசத்துப் பூர்வக் குடிகளும், விவேகமிகுத்தவர்களும் எக்காலும் தேகத்தை வருத்தி சம்பாதித்துப் புசிக்கக்கூடிய ரோஷமுடையவர்களுமாகிய அறுபது லட்சங் குடிகளை தீண்டாதவர்களென்பது விவேகக்குறைவும் பொறாமெய் மிகுதியுமேயாம். காரணம் ஓர் குஷ்டரோகி தன்னை உயர்ந்த சாதியோனென சொல்லிக்கொண்டு சுகதேகியைக் கண்டவுடன் அவனைத் தீண்டாதவனென்று விலகுவானாயின் சுகதேகியை குஷ்டரோகி தீண்டலாகாதென்று விலகினானா அன்றேல், சுகதேசி குஷ்டரோகியை.
தீண்டலாகாதென்று விலகினானா என்பதை சீர்தூக்கி ஆலோசிக்குங்கால் குஷ்டரோகி பெரிசாதியென்று சொல்லிக்கொள்ளுவோனாயிருப்பினும் அவனை ஓர்சுகதேகி அணுகவுமாட்டான் தீண்டவுமாட்டானென்பது திண்ணம். இதற்குப் பகரமாய் பார்ப்பார்களென்போர் வீட்டில் சகலரும் புசிக்கலாமென்று ஏற்படுத்தி வைத்துக்கொண்டிருந்த போதிலும் அவ்வீட்டுப் பார்ப்பான் குஷ்டரோகியாயிருப்பானாயின் அவனை தெரிந்தோர் அவ்வீட்டிற்குப் போகவுமாட்டார்கள், அவனிடம் பலகாரங்களை வாங்கி புசிக்கவுமாட்டார்கள். இஃது சாதியால் விலகியச் செயலா, குஷ்டத்தால் விலகியச்செயலா. அவன்வீட்டுள் செல்லாதற்கும், புசிக்காததற்கும், தீண்டாததற்கும் குஷ்டமே காரணமாயிருக்கின்றதன்றி பெரியசாதியெனப் பெயர் வைத்திருப்பினும் பிரயோசனமில்லையென்பதே பிரத்தியட்சமாகும்.
ஓர் மனிதன் தன்னைபிராமணனென்று உயர்த்திக்கொண்டு சாதித்தலைவனாயிருப்பினும் அவனிடம் குடி, விபச்சாரம், களவு முதலிய துற்செயல்கள் நிறைந்திருக்குமாயின் அவனை பிராமணனென்று எண்ணி சகலர் வீட்டிலும் சேர்ப்பார்களோ, சகலரும் அவனை நெருங்குவார்களோ, ஒருக்காலும் சேர்க்கவுமாட்டார்கள், நெருங்கவுமாட்டார்கள். இவற்றிற்கு சாதி காரணமா, செயல் காரணமாவென நோக்குங்கால் தீண்டுவோர் தீண்டப்படாதோர் என்பதற்கு அவனவன் செயலும் ரோகமுமே காரணமன்றி சாதி காரணமல்ல என்பது பரக்க விளங்கும். ஆதலின் சாதியென்னும் பொய்ம்மொழியால் ஒருவனைத் தீண்டலாகாதென்பது பொய், பொய்யேயாம். அவனவன் துற்செயல்களினாலும் அவனவனுக்குத் தோன்றியுள்ளக் கொடிய ரோகங்களினாலும் தீண்டலாகாதென்பது மெய், மெய், மெய்யேயாம்,
இங்ஙனமிருக்க சிலக் கூட்டத்தோர் தங்கள் பொறாமெய் மிகுதியால் ஆறுகோடிக்கு மேற்பட்ட மநுமக்களை தீண்டாதவர்களென்று கூறித் திரிகின்றார்களே அதன் காரணம் யாதென்பீரேல் கூறுதும்,
இந்திரதேயமெங்கணும் புத்த தன்மம் நிறைந்திருந்தகாலத்தில் சில அன்னியநாட்டார் இத்தேசத்தில் குடியேறி புத்தசங்க அறஹத்துக்களாம் அந்தணர்களைப்போல் வேஷமிட்டுக்கொண்டு சொற்ப சகட பாஷையாம் சமஸ்கிருதமுங் கற்று தங்களை பிராமணர் பிராமணரென சொல்லிக் கொண்டு காமியமுற்ற சிற்றரசரையும், கல்வியற்றப் பெருங்குடிகளையும் வஞ்சித்தும் பொருள் பறித்தும் தின்றுவருவதை நாளுக்குநாள் கண்டுணர்ந்த பௌத்ததன்ம விவேகிகள் வேஷப்பிராமணர்களை அடித்துத் துரத்தவும் சாணத்தைக் கரைத்து அவர்கள்மீது வார்த்துத் துரத்துவதுமாயிருந்தார்கள்.
இத்தகைய சாணச்சட்டிக்கும் அடிக்கும் பயந்து ஓடிக்கொண்டே பிச்சையிரந்து தின்று வளர்ந்தவர்களுக்கு பெருங்குடிகள் வசப்பட்டு அதிகாரப் பிச்சைக்கு ஆளாகிவிட்டவுடன் பௌத்தர்களைக் காணுமிடத்து சாணச்சட்டிக்கும் அடிக்கும் பயந்து ஓடுங்கால் வேஷபிராமணருக்குரியவர்கள் கண்டு ஏனையா ஓடுகின்றீர்களென்று கேட்பார்களாயின் அடியின் பயத்தையும், சாணச்சட்டியின் பயத்தையும் வெளிக்குப் பகராது அவர்கள் நீச்சர்கள் அவர்களைத் தீண்டப்படாதென்று சொல்லிக்கொண்டே ஓடிவிடுவது வழக்கமாயிருந்தது. அவ்வடி பயத்தால் கூறிவந்த வழக்க மொழியையே வலுபெறச்செய்து வேஷப்பிராமணர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் பராயர்களாகவும் எதிரிகளாகவும் இருந்தோர்களை தீண்டாதவர்களென்றும், சண்டாளர்களென்றும், தீயர்களென்றும், பறையர்களென்றும் பலவகையாலும் இழிவுகூறிப் பாழ்படச்செய்துவிட்டார்கள். சாணச்சட்டியின் அடியையும், அதன் செயலையும் நாளதுவரையிற் குக்கிராமங்களிற் காணலாம். மநுக்களைத் தீண்டாதவற்றிற்கு சகல சாதியோருக்குரிய தீச்செயலும், ரோகமுமே காரணமன்றி தற்காலம் ஏழைகளாயுள்ள ஆறுகோடி மக்கள் ஒருக்காலும் தீண்டாதவர்களாக மாட்டார்கள்.
- 4:15; செப்டம்பர் 21, 1910 -