அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/365-383

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

36. இந்தியதேய ஸ்திரீகளின் கேட்டிற்குக் காரணஸ்தர் யார் இந்திய தேசப் புருஷர்களேயாவர்

எவ்வகையில் என்னில், அறுப்புகாலத்தில் எலிக்கும் இரண்டு பெண்சாதிகள் என்பது போல் இந்திய தேசத்தவர் ஒருவர் ஆபீசு உத்தியோகத்தில் அமர்ந்து விடுவாராயின் அவர் வீட்டில் ஓர் மனைவியும், வெளியில் ஓர் மனைவியும் இருத்தல் வேண்டும். அம்மனைவிகள் இருவருமோ வீட்டைவிட்டு வெளிவரப்படாது. ஐயா ஆபீசிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் கூத்தியார் வீட்டிலிருப்பான் என்பதே குறிப்பு. இத்தகையப் புருஷானந்தத்தால் இஸ்திரீகள் இருவரும் தங்களை அலங்கரித்திருப்பதே வேலையன்றி வேறு வேலை கிடையாது. இம்மாதரது மகிழ்னன் மடிந்துவிட்டாலோ வேறோர் மகிழ்னனைத் தேடித்திரிய வேண்டியதே அவர்களது வேலையன்றி வேறு வேலையால் சீவிக்க அவர்களுக்கு வித்தையுங் கிடையாது புத்தியும் கிடையாது என்பதே. ஆதலின் இத்தகைய வித்தையின் கேட்டிற்கும், புத்தியின் கேட்டிற்கும் வியாதியால் மெலியுந் தேககேட்டிற்கும் அவரவர்கள் புருஷர்களே காரணஸ்தர்கள் என்பது சொல்லாமல் விளங்குமன்றோ.

அவ்வகை விளங்கினும் புருஷருக்குள்ள சுயநலம் பெண்களுக்கு அளிக்கலாது என்னும் பொறாமெய் சாஸ்திரங்களும் அந்தபுறத்துக் கதைகளுமே அதற்குச் சான்றாகும். பெண்களை அடிமைத்தனத்தாளாக்கி அவர்களை சீர்பெற விடாமற் செய்து வருகின்றவர்கள் புருஷர்களேயாதலின் மற்றுமுள்ள சீர்கேடுகளுக்கு இவர்களே காரணஸ்தர்கள் என்பதுமாகும். இப்புருஷர்கள் - ஜப்பானிய தேசப் பெண்களின் வித்தை புத்தியையும், பர்மியதேசப் பெண்களின் வித்தை புத்தியையும் சற்று நோக்குவார்களாயின் இந்திய தேச ஸ்திரீகளின் சீர்கேட்டிற்கும், தேச சீர்கேட்டிற்குத் தாங்களே மூலகாரணங்கள் என்பது தானே விளங்கிப்போம்.

அத்தேசப் பெண்களின் உழைப்பும், அவர்கள் அணைந்துலாவும் பட்டாடைகளின் செழிப்புந் தங்கள் தங்கள் புருடர்கள் இறப்பிலும் மாறாது சுகநிலை பெற்றிருப்பதற்குக் காரணம் அவரவர் புருஷர்கள் அவர்களுக்கு அளித்துள்ள சுயாதீனமும் வித்தை புத்தியுமேயாம்.

ஓர் மனிதன் தனது எதிரியை எப்போதும் நம்பாமல் காரியாதிகளை நடத்திவருவானாயின் அவர்களை எதிரி நம்பானென்பது பிரத்தியட்ச அநுபவமாதலின் இஸ்திரீகளைச் சீர்கெடச்செய்யுஞ் செயல்களே புருஷர்களைச் சீர்கெடச் செய்துவிடுகின்றது. மற்றும் இத்தேசத்தோருள் பெரும்பாலார் பெண்களுக்குப் படிப்பு கற்பிக்கலாகாதென்றே தடுத்துவருகின்றார்கள். சிலர் அத்தகையக் கல்வி கற்றும் பழைய சோம்பலுடன் கலந்து அக்கல்வியையும் பாழாக்கித் தாங்களும் பாழடைந்து போகின்றார்கள். கற்றப் பெண்கள் யாவரும் வித்தையையும் வியாபாரத்தையும் ஏந்தி வெளிவருவார்களாயின் பழிச் சொற்களும் இழிச்சொற்களுமற்று சகலராலும் நன்கு மதிக்கப்படுவதுடன் தங்கள் மரணபரியந்தம் சுகசீவ வாழ்க்கையைப் பெறுவார்கள். கல்விகற்றும் வித்தியாமுயற்சியற்றிருப்பதால் விபச்சாரமே பெருந்தொழிலாகவும் அதனால் கொலைக்கேதுவான கொடூர நிகழ்ச்சிகள் எழவும் குடும்பிகள் கூடியழவும் நேரிடுகின்றது. அதில் சில பொருளுள்ள கைம்பெண்கள் தோன்றுவார்களாயின் அவர்களது பொருள் பறிக்க அரைமூட கால்மூட முக்கால்மூட முழுமூடச் சோம்பேறிகள் தோன்றி அவர்கள் பொருள்களைப் பறித்து பெருமுதலாளிகள் ஆகிவிடுவதுடன் முற்றும் அப்பெண்களைப் பாழாக்கி நடுத்தெருவில் அலையவும், நான்குபேர் நங்கவும் விட்டுவிடுகின்றார்கள். இத்தகைய கருணையற்றவர்களும், வித்தையற்றவர்களுமாயப் பெருஞ் சோம்பேறிகள் மத்தியில் பெண்கள் படும் பெருங்கஷ்டங்கள் ஒவ்வொன்றையும் வரைவோமாயின் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கமற்றப் புருஷர்கள் யாவருக்கும் கோப தாபங் குறுக்கிடுமென்று அஞ்சி விடுக்கினும் “பெண்களுக்குப் பேயு மிதங்கு” மென்னும் பழமொழிக்கிணங்கி பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதுடன் கைத்தொழிலையும், வியாபாரத்தையுங் கற்பிப்பதே மிக்க மேலாம்.

- 6:4; சூலை 3, 1912 -