அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/374-383

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

45. மாடுகளால் மனிதர்களுக்குப் பிரயோசனம் உண்டாவதுபோல மனிதர்களால் மனிதர்களுக்குப் பிரயோசனம் உண்டோ

மாடுகளால் மனிதர்களடையும் பயன், ஓர் பசுமாடு வீட்டிலிருக்குமாயின் அதன் சாணத்தாற் பல செடிவகைகளுக்கு எருவாகிறதுடன் எரு வராட்டியுந் தட்டி அடுப்பிற்கு உபயோகப் படுத்துகின்றார்கள். அதன் பாலைக் கறந்து குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரையில் புசித்து சுகமடைகின்றார்கள். மற்றும் அதனால் உண்டாம் தயிர், மோர், நெய் முதலியவற்றால் இன்னுமனந்த சுகமடைந்தேவருகின்றார்கள். மக்கள் அப்பாவுக்குச் செய்யும் பிரதிபயனோ வைக்கோலை முன்னிற் போடுவதேயாம்.

எருதுகளோ ஏர் உழுவதற்கும், கவலை இறைப்பதற்கும், வண்டி இழுப்பதற்கும், மற்றும் மனுக்களுக்கு அனந்த உதவியாயிருப்பதுடன் பசுவும் எருதும் மரித்த போதினும் அதன் தோலின் உபயோகத்தை நாவிட்டு சொல்லுவதற்கில்லை. அத்தோலினால் மனிதர்களுக்கு உண்டாகும் பயன்களை எழுதவேண்டுமாயின் ஓர் புத்தகமாகிப்போம்.

மாடுகளால் மனிதர்கள் பலவகையான சுகச்சீரும் அடைந்து வருகின்றார்கள் என்பதை அநுபவத்திலுங் காட்சியிலுங் காணலாம். இதுபோல் மனிதர்களில் மனிதர்களுக்குப் பிரயோசனமுண்டோ என்பதை ஆராய்வோம். உலகத்திலுள்ள சகல தேசங்களிலும் மனிதர்களுக்கு மனிதர்கள் பிரயோசன முள்ளவர்களாகவே இருந்து சகலமக்களும் சுகவாழ்க்கையும் சுகசீவனமும் பெற்றே வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் தென்னியாவில் மட்டிலுமோ மனிதர்களை மனிதர்களாகப் பாவிக்காது ஒருவன் பிழைக்க நூறுமனிதரைக் கெடுப்பதும், ஒருவன் சீவனஞ்செய்ய நூறுபெயர் சீவனத்தைக் கெடுப்பதும், ஒருகுடி பிழைக்க நூறு குடிகளை பாழ்படுத்தி வருவோருமாகிய பஞ்சமா பாதகங்களே பெருகிக்கொண்டு வருகின்றபடியால் மனிதர்களால் மனிதர்களுக்கு சீர்கேடுகளும் வித்தியா மோசங்களும் விவசாய நாசங்களும் உண்டாகி தேசமும் தேசமக்களும் சீரழிவதற்கே ஏதுவாகிவிட்டது.

தேசத்தை சீர்திருத்தியும், தேசமக்களை நல்வழியிலாண்டும் சகல சுகச்சீரளித்துங் காத்துவரும் கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியின் துரை மக்களையே வெடிகுண்டு எறிந்தும் துப்பாக்கிகளால் சுட்டும் வஞ்சினங்களால் வதைத்துங் கொல்லும்படியான நன்றிகெட்ட படும்பாவிகள் வாசஞ்செய்யுந் தேசத்திலுள்ள மனிதர்களுக்கு மனிதர்கள் பிரயோசனப்படுவார்களோ. இத்தகையக் கடுஞ்சினமுற்று கருணையென்பது அற்றுள்ள ஓர் கூட்டத்தோரை மனித வகுப்போர் என்றும் அழைக்கப்போமோ, யதார்த்தத்தில் மனிதர்களாக இருப்பார்களாயின் தங்களையொத்த மனிதர்களுக்கே உபகாரிகளாக விளங்குவதுடன் மனுபிறவிக்குத் தாழ்ந்த சீவராசிகளுக்கும் உதவியாயிருப்பார்கள்.

அங்ஙனம் மனுவுருவாகத் தோன்றினும் அவர்களுக்குள்ள மிலேச்ச குணமாம் பெறாமெயும் பற்கடிப்பும் வஞ்சினமும் அவர்களை விட்டகலாதுள்ளபடியால் மனிதர்களுக்கு உபகாரிகளாக விளங்காமல் அபகாரிகளாகவேயிருந்து, தம்மெ ஒத்த சகல மனிதர்களையுஞ் சீரழித்து தங்கள் சுகத்தை மட்டிலுமே கருதி முன்னேறுகின்றார்கள். இத்தகைய வஞ்சினக் கூட்டத்தோர்களையே ஓர் மனுக்கூட்டத்தோரென்றும், மிலேச்சப் போதகர்களையே மெய்ப்போதகர்களென்றும், சீவகாருண்யம் அற்றவர்களையே குருக்களென்றும், எண்ணித்திரியுமளவும் இத்தேசஞ் சீர்பெறப் போகிறதேயில்லை. ஏதும் பிரயோசனமற்ற மனிதன் உலகில் தோன்றியென்ன, தோற்றாமற் போயிலென்ன, அவ்வகை மனிதவுருவாகத் தோன்றியும் மனிதர்களுக்கு உபகாரியாக விளங்காமல் மனிதனையே சீரழித்தும் மனிதனையே குடிகெடுக்கும் அபகாரியாக விளங்குவானாயின் அத்தகையோன் முகத்தில் விழிப்பதினும் அகன்று நிற்பது அழகன்றோ. அத்தகையோன் கண்ணிற்கும் புலப்படாமலிப்பதே ஆனந்தமன்றோ. இதை அநுசரித்தே மாட்டின் பிரயோசனத்தை முன்பே விளக்கியுள்ளோம். ஓர் மிருகசீவனாகிய மாட்டினால் மனிதனுக்கு அனந்தமாயப் பிரயோசனமிருந்தும் மனிதனாகத் தோன்றியுள்ளவனால் மனிதனுக்குப் பிரயோசனமாகாமல் அவனுக்குக் கேட்டை விளைவிப்பவனாகவே விளங்குவானாயின் அவன் மனிதனல்ல, மனிதனல்ல, மனிதனல்லவென முக்காலுங் கூறுதற்கு ஏதுவாகிவிடும். அவன் எத்தகைய சீரும்சிறப்பும் பெற்றுவாழினும் தீய வினையால் கேடும் பாடும் நேர்ந்து கூடுங் குடும்பமும் அழிந்தே தீரும். ஆதலின் மாடுகளது பிரயோசனத்தையேனுங் கண்டு மனிதர்களென்போர் மனிதர்களுக்குப் பிரயோசனமுள்ளவர்களாக விளங்குவார்கள் என்று நம்புகிறோம்.

- 6:46; ஏப்ரல் 23, 1913 -