அயோத்தியா காண்ட ஆழ்கடல்/கற்பனை நயங்கள்
கழகக் காலத்திற்குப் பிற்பட்ட இலக்கியங்களில் கற்பனை மிகுதியாயிருக்கும். கம்பராமாயணம் போன்ற வரலாற்றுத் தொடர்புடைய இலக்கியங்களில் கற்பனை கட்டாயம் இருக்கும். கற்பனை இன்றெனில் அவை இலக்கியங்களாக மதிக்கப் பெறாமல் வரலாற்று நூலாகவே மதிக்கப் பெறும். வரலாற்று நூலாசிரியன் சிறிதும் கற்பனை இல்லாமலும் தன் கருத்தை வலிந்து புகுத்தாமலும் வரலாற்றை அமைக்க வேண்டும்; இல்லையேல்- அதாவது, கற்பனையும் சொந்தக் கருத்தும் புகுமேல் அவை இலக்கியங்களாகக் கருதப்படும். எனவே, வரலாற்றுத் தொடர்புடைய இலக்கியமாகிய கம்ப ராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தில் உள்ள முத்தான சில கற்பனை நயங்களைக் காண்பாம்:
தென்றலின் திருவிளையாடல்!
பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. தென்றல் காற்று மலர்களின் இதழ்களை விரித்து உண்டாக்கிய நறுமணத்துடன் பெண்கள்மேல் வீசுகிறது. அவர்களின் உடை காற்றால் கலைகிறது. தென்றல் உண்டாக்கிய இன்பப் பசிக்கு உணவு கிடைக்காமல் பெண்கள் உள்ளம் வெம்புகின்றனர். மணமாகாத கன்னியர் இராமனை அடைந்தது போல் கண்ட கனாவுக்கு இடையூறாகத் தென்றல் வீசி அவர்களை எழுப்பி விட்டது:
இனமலர்க் குலம் வாய்விரித்து இளவாச மாருதம் வீசமுன்
புனை துகில்கலை சோரநெஞ்சு புழுங்கினார் சில பூவைமார்;
மன அனுக்கம் விடத் தனித்தனி வள்ளலைப் புணர் கள்ள இன்
கனவினுக்கு இடையூறு அடுக்க மயங்கினார் சில கன்னிமார்
தென்றலின் திருவிளையாடலால் உடல் குளிர்ந்தும், உள்ளம் புழுங்கியிருக்கிறதாம். கன்னியர்கள் கனவு கலைந்தமைக்காக மயங்கினராம்.
அரா நுழைவு
காம உணர்வைத் தூண்டும் மன்மதனின் அம்பாலும் திங்களாலும் காற்றாலும் உயிர் சோர்ந்துள்ள மங்கையரின் செவிகளில், காலையில் பண்ணோடு பாடப்படும் பாடலின் இசை நுழைந்தது செவிகளில் பாம்பு நுழைந்ததைப் போல் துன்புறுத்தியதாம். பண்ணும் காம இன்பத்தைத் தூண்டுவதுண்டு.
மொய் அராகம் நிரம்ப ஆசை முருங்கு தீயின் முழங்கமேல்
வை அராவிய மாரன் வாளியும் வான் நிலா நெடு வாடையும்
மெய் அராவிட ஆவி சோர வெதும்பு மாதர்தம் மென் செவி
பை அரா நுழைகின்ற போன்றன பண் கனிந்து எழு பாடலே
அராகம் = அரபி. வை அராவிய = கூர்தீட்டிய, இன்பப் பொருள்கள் காம உணர்வைத் தூண்டும் என்ற அடிப் படையில் பண் கனிந்த பாடல் துன்புறுத்தியதாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.
தடங்கண் நல்லார்
குவளை மலரின் அழகையும் கருநிறத்தையும்-வேலின் சொல்லும் கொடுமையையும் குழைத்துக் கூட்டி, அதன் நடுவில் மை என்று சொல்லப்படுகின்ற நஞ்சைத் தீட்டி, இவற்றை அப்படியே திங்களின் நடுவே வைத்தாற் போன்ற தோற்றம் உடைய மங்கையர், துவளும் இடையுடன் மயில் குழாம்போல் வந்து குழுமினர்-இராமனது முடிசூட்டைக் கொண்டாட -
குவளையின் எழிலும் வேலின் கொடுமையும் குழைத்துக் கூட்டி
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினைத் தெரியத் தீட்டி
தவள ஒண் மதியுள் வைத்த தன்மைசால் தடங்கண் நல்லார்
துவளும் நுண் இடையார் ஆடும் தோகையம் குழாத்தின் தொக்கார்
(74)
திங்களின் சுற்றுப்புறம் வெண்மையாயும் நடுப்பகுதி களங்கம் என்னும் கருநிறத்ததாயும் இருப்பது போலவே, பெண்களின் கண்களின் சுற்றுப்புறம் வெண்மையும் நடுப் பகுதி (பாப்பா என்பது) கறுப்பாயும் இருப்பதைக் காணலாம். அந்தக் கருநிற நடுப்பகுதியிலே நஞ்சு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது, பெண்களின் பார்வை ஆண்களை நஞ்சுபோல் துன்புறுத்துகிறது என்பது உள் கருத்து.
கானம் புக்கான்
தயரதனின் அழைப்பின் பேரில் இராமன் தன் மாளிகையிலிருந்து தெருவில் தேர்மேல் செல்கின்றான். அந்தக் காட்சியை மகளிர் காண்கின்றனர். பெண்களின் தோள்கட்கு மூங்கிலும் கண்கட்கு வேலும் ஒப்புமை. காட்டில் மூங்கில் இருக்கும்- போர் மறவர்கள் போட்டுவிட்டுப் போன வேலும் இருக்கும். எனவே, இராமன் கைகேயியால் உண்மையான காட்டுக்குப் போகுமுன்பே, இந்த மூங்கிலும் வேல்களும் நிறைந்த காட்டினிடையே சென்றதாகக் கம்பர் கற்பனை செய்து உள்ளார்.
துண்ணெனும் சொல்லாள் சொல்லச் சுடர்முடி துறந்து தூய
மண்ணெ னும் திருவைநீங்கி வழிக்கொளா முன்னம் வள்ளல்
பண்ணெனும் சொல்லினார்தம் தோள் எனும் பணைத்த வேயும்
கண்ணெனும் காலவேலும் மிடைநெடுங் கானம் புக்கான்
வேல் என்பது வேல் படை; வேல் என்பது வேல மரத்தையும் குறிக்கும். காட்டில் வேல மரங்களும் இருக்கும்; அந்தக் கருத்தையும் உள்ளடக்கினாற்போல் வேல் என்னும் சொல் இரட்டுற மொழிதலாக அமைக்கப் பட்டுள்ளது.
கண் கலுழி ஆறு
பெண்கள் மார்பில் குங்குமச் சாந்தும் சந்தனச் சான்றும் பூசியுள்ளனர்; முத்து மாலையும் அணிந் துள்ளனர். முலைகள் மேடாக உள்ளன. இடுப்பில் மேகலை அணிந்துள்ளனர். இராமன் காடு ஏகப் போகிறான் என்பதை அறிந்ததும் கண்கலங்கி அழுதனர். கண்ணீர் மார்பிலுள்ள முலைகள், சாந்துகள் ஆகியவற்றின் வழியாக வழிந்து மேகலைத் தடத்தை அடைகிறது. இதனைக் கம்பர் உருவகப்படுத்திக் கற்பனை செய்துள்ளார்:
திடருடைக் குங்குமச் சேறும் சாந்தமும்
இடையிடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன;
மிடை முலைக் குவடு ஒரீஇ மேகலைத் தடங் கடலிடைப் புகுந்த கண் கலுழி ஆறரோ
கண்ணீராகிய ஆறு, குங்குமச் சேற்றையும் சந்தனக் குழம்பையும் திட்டு- திட்டாக ஆக்கியும், சில பகுதிகளை வண்டல்போல் ஒதுக்கியும் முத்துகளை அடித்துக் கொண்டும் முலைகளாகிய மலைப் பகுதியினின்றும் கீழிறங்கி மேகலைத் தடமாகிய கடலை அடைந்ததாம். ஆறுகளில் வெள்ளம் வரும்போது இவ்வாறு நிகழ்வ துண்டு. அவ்வாறே இந்தக் கற்பனை அமைந்துள்ளது. கலுழி என்பது நீரின் மிகுதியைக் குறிக்கிறது.
இழுக்கலில் வழுக்கல்
இராமனுக்குக் காடு என்பதை அறிந்தும் அதைப் பொறுத்துக் கொண்டிருக்கின்ற நம் கல் நெஞ்சத்தை மழுப்படையால் பிளப்போம் என்று கூறிக் கொண்டு சிலர் ஓடினர்; ஆனால், அவர்கள், ஊற்றுப்போல் கண்களிலிருந்து பெருகும் கண்ணீரால் சேறாகிய வழுக்கல் தரையில் வழுக்கி விழுந்து துன்புற்றனராம்.
முழுக் கலின் வலிய நம் முரி நெஞ்சினை மழுக்களின் பிளத்தும் என்றோடுவார் வழி
ஒழுக்கிய கண்ணின் நீர்க் கலுழி ஊற்றிடை இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து இடர் உற்றார் சிலர்
மழு என்பது ஒரு படை (ஆயுதம்). பெரிய கல்லைவிட வலிய- கொடிய மனமாம். இப்பாடல் மக்களின் உணர்வைப் புலப்படுத்துகிறது.
செல்வன் சென்றான்
மன்னன் மறைந்தது போலவே செங்கதிர்ச் செல் வனும் (ஞாயிறு) மறைந்தான். மன்னனும் இருள் போன்ற பகைவரை ஒடச் செய்தவன்- கதிரவனும் இருளை ஒடச் செய்தவன். மன்னன் எட்டுத் திசைகளிலும் உள்ளாரை வென்றவன்- கதிரவனும் எல்லாப் பக்கங் களிலும் உள்ள இருளை வெல்பவன். மன்னன் தனது ஒற்றை ஆணை உருளையால் (ஆக்ஞா சக்கரத்தால்) உலகை ஆண்டவன்- கதிரவன் ஒற்றை உருளை பூண்ட தேரில் இருந்து உலகை ஆள்பவன். மன்னனுக்கும் புகழ் உண்டு- கதிரவனுக்கும் புகழ் உண்டு. மன்னனும் எல்லாருக்கும் அருள் புரிந்தவன்- கதிரவனும் எல்லாரையும் காப்பவன். இத்தகைய மன்னன் வீழ்ந்ததுபோலவே கதிரவனும் மேலைப் பக்கல் சென்று வீழ்ந்தான்.
விரிஇருள் பகையை ஓட்டித் திசைகளை வென்று மேல் நின்று
ஒருதனித் திகிரி உந்தி உயர்புகழ் நிறுவி நாளும் இருநிலத்து எவர்க்கும் உள்ளத் திருந்து அருள்புரிந்து வீந்த
செருவலி வீரன் என்னச் செங்கதிர்ச் செல்வன் சென்றான்
இது ஞாயிறு மறையும் மாலைக் காட்சி பற்றிய பாடல். மன்னனுக்கும் கதிரவனுக்கும் பொருந்துமாறு கம்பர் கற்பனை புரிந்துள்ளார். மன்னன் தனித் திசிரி உந்துதல், உலகில் உள்ள வேறு மன்னர்கள் இவனுக்குக் கீழ்ப்பட்டவர்களே - இவன் ஒருவனே எல்லாரையும் வென்று ஒற்றை ஆழி உருட்டுகிறான்- வேறு எவரும் உருட்டவில்லை. கதிரவன் புகழ் நிறுவுகிறான் என்றால், கதிரவனை எல்லாரும் புகழ்ந்து வழிபடுகின்றனர் என்பது கருத்து. நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் முதல் இரண்டடிகளில் தெரிவித்துள்ள,
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு
என்னும் பகுதி ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. இளங்கோ அடிகளும் சிலப்பதிகாரத்தை “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' எனப் போற்றித் தொடங்கி யுள்ளாரல்லவா? கதிரவன் எல்லாரையும் காப்பவன் என்பது, ஞாயிறு இல்லாவிடின் மழை இல்லை-விளைச்சல் இல்லை- உயிர்கட்குத் தேவையான வெப்பம் இல்லை- உலக வாழ்வே நடைபெறாது- என்பதைக் குறிப்பதாகும்.
குறு நகை
இராமன் சீதையுடன் காட்டில் சென்றுகொண்டிருந்த போது, வழியில் உள்ள பல காட்சிகளைக் காட்டியும் விளக்கியும் சென்றான்: ஏந்திய இள முலையாளே-எழுத வொண்ணா அழகியே! இதோ, காந்தளின் அரும்பினைப் பாம்பு என்று எண்ணி மயில் கவ்வியதைப் பார்த்து, முல்லை மலர்கள் புன்முறுவல் பூப்பதைக் –
ஏந்திள முலையாளே எழுத அரு எழிலாளே காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை
பாந்தள் இது என உன்னிக் கவ்வியபடி பாரா
தேந் தளவுகள் செய்யும் சிறு குறுநகை காணாய்
காந்தள் = ஒரு மலர்; மஞ்ஞை = மயில்; பாந்தளி = பாம்பு; கவ்வியபடி= கவ்விய தோற்றம்; பா ரா = பார்த்து- இது செய்யா' என்னும் வாய்பாட்டு வினை யெச்சம்; தளவுகள்= முல்லைகள். காந்தளின் அரும்பு பாம்புபோல் தோற்றமளிக்கும். அதைப் பாம்பு என்று ஒரு மயில் தவறாக எண்ணிக் கவ்வுகிறது. பாம்பின் பகை மயில் அல்லவா? இதைக் கண்டு முல்லைகள் புன்னகை புரிகின்றனவாம்- அதாவது, மயிலின் தவறான- ஏமாற்றமான செயலைக் கண்டு முல்லைகள் புன்னகை பூத்தல் என்பது ஒரு கற்பனை. சிரிக்கும் பல்லுக்கு முல்லையை ஒப்புமையாகக் கூறுதல் இலக்கிய மரபு. முல்லைகளின் தோற்றம் இயற்கையாகச் சிரிப்பது போல் உள்ளது. இதை, மயிலின் ஏமாற்றத்தைக் கண்டு தான் சிரிக்கின்றன என்று கம்பர் கற்பனை செய்துள்ளார்.
இந்தப் பகுதியில், பல பாடல்களில், இராமர் சீதை. யின் மார்பகங்களைப் புனைந்து இத்தகைய மார்பகங்களை உடையவளே- என விளிப்பதாகக் கம்பர் கூறியுள்ளமை படிப்பதற்கு என்னவோபோல்தான் உள்ளது. இது ஒர் இலக்கிய மரபு என்று கூறுவதோடு அமையாமல், மேலும் இதுபற்றி ஒன்று கூறவேண்டும். சிற்பங்களிலும் ஒவியங்களிலும் பெண்களின் மார்பகங்கள் பெரியனவாக அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், சொல் சிற்பமாகிய- சொல் ஒவியமாகிய காவியத்திலும் இலக்கியத்திலும் புலவர்கள் புனைந்துரைத்துள்ளனர். சிற்பியையும் ஒவியனையும் தூற்றாதவர்கள், சொல் ஒவியமாகிய இலக்கியங்களில் புனையப்பட்டுள்ளமையை மட்டும் இழிவாக நினைப்பதேன்? மற்றும், நமக்கெல்லாம் பால் தந்து வளர்த்த அன்னைமார்களின் மார்பகங்களைப் பற்றித் தீய எண்ணம்- தீய உணர்ச்சி கொள்வது அந்தக் காலத்தில் பெரும்பாலும் இல்லை என்பதும் ஈண்டு எண்ணத் தக்கது. இந்த அடிப்படையில் தான், இராமன், ஏந்து இள முலையாளே' என்று சீதையை விளித்ததாகக் கொள்ளவேண்டும்
மேகமும் நாகமும்
மலைச்சாரல் பகுதியில், நிரம்ப நீரைக் கொண் டிருக்கிற- சூல் கொண்ட கரிய மேகமும் வரிசையாய் உறங்கிக் கொண்டிருக்கும் கரிய யானைகளும் வேற்றுமை அறிய முடியாதபடி இருக்கும் காட்சியைக் காண்பாய் என இராமன் சீதைக்குக் காண்பிக்கிறான்.
நீள மாலைய துயில்வன, நீர் உண்ட கமஞ் சூல் காள மேகமும் நாகமும் தெரிகில காணாய்
காள மேகம்= கரிய மேகம், நாகம்= மலை.
மழை உதிர்ப்பது
காதலோடு மந்தியும் (பெண் குரங்கும்) கடுவனும் (ஆண் குரங்கும்) விளையாடிக் கொண்டுள்ளன. மந்தி அருவி நீரைக் கடுவன்மேல் வீசுகிறதாம். கடுவன் மலை மீது ஏறி மேகத்தைப் பிழிந்து மந்திமேல் நீர் சொரியச் செய்கிறதாம்.
ஒருவில் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே!
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி
அருவி நீர்கொடு வீசத் தான் அப்புறத்து ஏறிக்
கருவி மா மழை உதிர்ப்ப தோர் கடுவனைக் காணாய்
கடுவனும் கொடிச்சியும்
மலைவாழ் மக்கள் தினைப் புனக் காவலுக்காக ஒரு கடுவன் (குரங்கு) பறையை எடுத்து அடிக்கிறதாம். கொடிச்சி (மலைவாழ் மகள்) ஒருத்தி, மலை உச்சியில் உள்ள திங்களின் நடுவே இருக்கும் கறையாகிய களங்கத்தைத் துடைக்கிறாளாம்:
அறைகழல் சிலைக் குன்றவர் அகன் புனம் காவல்
பறை எடுத்து ஒரு கடுவன் கின்று அடிப்பது பாராய்
பிறையை எட்டினள் பிடித்து இதற்கு இது பிழை என்னா
கறை துடைக்குறு பேதைஓர் கொடிச்சியைக் காணாய்
குரங்கு பறை அடித்தும் இருக்கலாம். ஆனால், கொடிச்சி திங்களின் கறையைத் துடைப்பது என்பது முற்றிலும் கற்பனையே. பேதை கொடிச்சி' என்று பாடியுள்ளார் கம்பர். பேதை என்னும் சொல்லுக்குப் பெண் என்ற பொருளும் அறிவிலி என்ற பொருளும் உண்டு என்பது ஈண்டு எண்ணத் தக்கது.
குண்டிகைச் சொரிவன
மிகவும் மூப்படைந்து தளர்ந்த தவத்தோர்க்காக, யானைகள் தம் தும்பிக்கையில் நீர் உறிஞ்சிக் கொணர்ந்து குண்டிகையில் சொரிகின்றனவாம்.
அளவில் மூப்பினர் அருந்தவர்க்கு அருவி நீர் கொணர்ந்து
களப மால் கரி குண்டிகைச் சொரிவன காணாய்
இது ஒரளவு உண்மையாகவும் இருக்கலாம்- அல்லது கற்பனையாகவும் இருக்கலாம். நெறி காட்டுவ
அகவை முதிர்ந்த தவசிகள் கண்ணொளி மங்கி நடப்பதற்கு உரிய வழி தெரியாமல் தவிக்கின்றனர். அப்போது குரங்குகள், தம் நீண்ட வால்களை நீட்டி அவற்றைப் பிடித்துக் கொண்டு தம் பின்னாலேயே வருமாறு வழி காட்டுகின்றனவாம்:
இடுகு கண்ணினர் இடர்உறு மூப்பினர் ஏக,
நெடுகு கூனல் வால் நீட்டின உருகுறு நெஞ்சக் கடுவன் மாதவர்க்கு அருநெறி காட்டுவ காணாய்
இதுவும் ஓரளவு உண்மையாய் இருக்கலாம். ஆனால், இது பெரும்பாலும் கற்பனையாகத்தான் இருக்கலாம்.
கங்கை உரித்தன்று
பரதன் இராமனை அழைக்கப் பெரும் படையுடன் வந்தான். யானைகளின் மதநீர் கங்கையில் பாய்ந்ததால் வண்டுகள் மொய்த்தல் அல்லது, வேறு யாரும் பருகவும் குளிக்கவும் உரியதாகவில்லை. இதனால், மிக்க- பெரிய யானைப்படை உடன் சென்றது என்பது போதரும்:
எண்ணரும் சுரும்புதம் இனத்துக்கு அல்லது கண்ணகன் பெரும்புனல் கங்கை எங்கணும் அண்ணல் வெங்கரி மதத்து அருவி பாய்தலால் உண்ணவும் குடையவும் உரித்தன் றாயதே
வேலையே மடுத்தது
கங்கை எப்போதும் சென்றடையும் கடலை இப்போது சென்றடையவில்லையாம். பரதனுடன் வந்த படைகளாகிய கடலே (கடல் போலும் படையே) கங்கையை வழியிலே குடித்துத் தீர்த்து விட்டதாம்:
பாலை ஏய் நிறத்தொடு பண்டு தான்படர்
ஒலை ஏய் நெடுங்கடல் ஓடிற் றில்லையால்;
மாலை ஏய் நெடுமுடி மன்னன் சேனையாம் வேலையே மடுத்தது அக்கங்கை வெள்ளமே
பாலை நிலத்தில் பரதனுடன் வந்த பெரிய படை சென்றதால் மிகுதியாகத் துரசி பறந்தது. அந்தத் தூசியால் ஞாயிற்றின் வெப்பம் ஆறியது. யானைகள் பொழிந்த மத நீரால் பாலைவன மணல் சேறாகியது; சேறு வழுக்குவதால் தரையில் நடக்க முடியவில்லை.
எழுந்தது துகள் அதின் எரியும் வெய்யவன் அழுந்தினன் அவிப்ப அரும் வெம்மை ஆறினான் பொழிந்தன கரிமதம் பொடி வெங்கானகம் இழிந்தன வழிநடந்து ஏற ஒண்ணாமையே
பாலை நிலத்து மணலில் எவ்வளவு நீர் சொரியினும் உள்ளே இழுத்துக் கொள்ளும். அத்தகைய பாலை மணல் வழுக்கும் அளவுக்கு யானைகள் மத நீர் சொரிந்தன என்ற கற்பனை, யானைகளின் மிகுதியை உணர்த்துகிறது.
கம்பனது கற்பனைச் சுவை அளப்பரியது. கம்பனது கற்பனைக் கடலில் மூழ்கி முழுதும் ஆழம் கண்டு முத்தெடுத்து வருவது அரிய செயலாகும்.