அயோத்தியா காண்ட ஆழ்கடல்/சிறப்புறு செய்தி முத்துகள்
கம்பர் தமது இராமாயண நூலில் சிறப்பான முத்தான செய்திகள் பல தெரிவித்துள்ளார். அவற்றுள், அயோத்தியா காண்டத்தில் உள்ள சிறப்புறு செய்திகள் சில காணலாம்:
கலையின் குப்பை
அமைச்சர்கள் வழிவழியாக அமைச்சர் மரபைச் சேர்ந்தவர்கள்; கலையின் குப்பையும் கேள்விச் செல்வமும் உடையவர்கள்- எனக் கம்பர் புகழ்ந்துள்ளார். பாடல் பகுதி:
குல முதல் தொன்மையும் கலையின் குப்பையும்
பல முதல் கேள்வியும் பயனும் எய்தினார் (5)
அமைச்சர்கள் கல்வி- கலை மிக்கவர்கள் என்பதைக் 'கலையின் குப்பை எய்தினர்' என்னும் தொடரால் சுட்டிக் காட்டியுள்ளார். ஈண்டு குப்பை என்றால் என்ன?
குப்பையின் வரலாறு
கண்ட இடங்களில் கண்டபடிக் குவிக்கப்படும் கழிவுப் பொருள்களின் தொகுதி, தொடக்கத்தில் குப்பை எனப் அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 55
பட்டது. அந்தக் குப்பைக் குவியலில் முளைக்கும் செடி கொடிகள் செழிப்பாயிருந்தன. எனவே, குப்பையைத் திரட்டி வயலில் கொட்டி வளங்கண்டனர். பிறகு குப்பை ஒரு சிறந்த பொருளாகத் திரட்டப்பட்டது. நிலம் இல்லாதார் வீட்டுக் குப்பை விலைக்கு வாங்கப் பட்டது. இவ்வாறாகக் குப்பை தாழ் நிலையிலிருந்து உயர்நிலை பெற்றது. கழிவுப் பொருள்களின் குவியலுக்கு ஏற்பட்ட குப்பை என்னும் பெயர் மற்ற பொருள்களின் குவியலுக்கும் வழங்கப்படலாயிற்று.
நாளடைவில், நெல், வரகு, ஆம்பல், உப்பு, பாக்கு, அகில், சந்தனம், இரத்தினம், பன்மணிகள் பலவகைச் செல்வப் பொருள்கள் முதலியவற்றின் குவியலுக்கும் குப்பை என்னும் பெயர் உயர்நிலையில் வழங்கப்பட்டது. இதற்கு உரிய அகச் சான்றுகள் சில வருமாறு:
குப்பை நெல்லின் முத்தூறு தந்த (புறநானூறு, 24-22)
சில்விளை வரகின் புல்லென் குப்பை
ஆம்பல்-குப்பை கல்லாடம்
உவர்விளை உப்பின் குன்றுபோல் குப்பை (நற்றிணை, 138-1)
பளிக்காய்க் குப்பையும் பலம்பெய் பேழையும் (பெருங்கதை-2-2-72-பளிக்காய் = பாக்கு)
யானைவெண் கோடும் அகிலின் குப்பையும் (சிலப்பதிகாரம், 25-37)
சந்தின் குப்பையும் தாழநீர் முத்தும் (சிலப்பதிகாரம்,26-168-சந்து = சந்தனம்)
மரக்களி யன்ன திருத்தகு பொன்னும்
இரத்தினக் குப்பையும் இலங்கொளிப் பவழமும்
(பெருங்கதை,2-14-68,69)
கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை (சிலப்பதிகாரம்,6-121)
விரைமரம் மென்துகில் விழுநிதிக் குப்பை (மணிமேகலை,16-122, 123)
முதலிய அகச் சான்றுகளால் குப்பையின் உயர்வு புலப்படும். இந்த அடிப்படையுடன் கம்பரிடம் வருவோம். பல வகையான கலைகளைக் குறிக்கக் கலையின் குப்பை' என்று குறிப்பிட்டுள்ளார் கம்பர். குப்பையின் வரலாறு இது.
மருத்துவன் இயல்பு
அமைச்சர்கள் அரசனுக்கு நல்லவை எவை, தீயவை எவை-என ஆய்ந்து அதற்கேற்பச் செயல்படுவார்களாம். இங்கே, பிணியாளிக்கு நல்லது எது- தீயது எது எனக் கண்டுபிடித்து அதற்கேற்ப மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் அமைச்சர்கட்கு ஒப்புமையாக்கப்பட்டுள்ளமை, சுவையாயுள்ளது.
நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு
எல்லையில் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்
என்பது பாடல் பகுதி. ஈண்டு,
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்
என்னும் திருக்குறட்பா ஒப்பு நோக்கத் தக்கது.
கண்ணும் உள்ளமும்
தயரதன் இராமனை அழைத்து வருமாறு சுமந்திரனை அனுப்பினான். சுமந்திரன் இராமன் அரண்மனைக்குச் சென்று, தன் கண்ணும் உள்ளமும் தேன் உண்ட வண்டு போல் களிப்புறும்படி இராமனைக் கண்டான். பாடல் பகுதி: அயோத்தியா காண்ட ஆழ் கடல் 57
அண்ணல் ஆண்டிருந்தான் அழகு அரு நறவெனத் தன்
கண்ணும் உள்ளமும் வண்டெனக் களிப்புறக் கண்டான்
கண் களிப்புறக் கண்டதாகக் கூறுதல் மரபு. இங்கே, கண்ணோடு உள்ளமும் களிப்புறக் கண்டதாகக் கம்பர் கூறியுள்ளார். இதில் உள்ள சிறப்பாவது:
கண் கண்டாலும் உள்ளம் வேறொன்றை நினைத்துக் கொண்டிருக்குமாயின் களிப்பு தோன்றாது. நாம் ஒரு வரைப் பார்க்கச் செல்கிறோம்; வழியில் அவரே வரினும், மனம் வேறு எதையாவது எண்ணிக்கொண்டிருந்தால் நாம் அவரைக் கவனிக்க முடியாது. அவராகப் பார்த்துப் பேச்சு கொடுப்பின், ஒ! நான் உங்களைப் பார்க்கத்தான் செல்கிறேன்; நன்றாகக் கவனிக்கவில்லை' என்று அசடு' வழிகிறோம்.
எனவே, உள்ளமும் ஒன்றினால்தான் கண் கண்டு களிப்புற முடியும். பொருள்களைப் பார்ப்பது கண்கள் அல்ல. மனம் என்பது மூளையின் இயக்கமே. மூளையே கண் என்னும் பலகணி (சன்னல்) வழியாகப் பொருள்களைப் பார்க்கிறது. கண்கள் வாயிலே யாகும். இங்கே, "பொறிவாயில் ஐந்தவித்தான்' என்னும் குறள் (6) பாவில், கண் உட்பட்ட ஐம்பொறிகளும் வாயில்' எனக் கூறப்பட்டிருப்பது ஒப்பு நோக்கத் தக்கது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளுமே, மனமாகிய மூளையின் வாயில்களேயாகும். இந்த ஐந்து பொறிகளையும் அறிவுக் கோட்டையின் ஐந்து வாயில்கள்' (Five Gates of Knowledge) உளவியலார் கூறுவதும் ஈண்டு எண்ணத் தக்கது.
கன்றுடைப் பசு
இராமனுக்கு முடிசூட்டு என்பதை யறிந்ததும், தாய். கோசலை மகிழ்ந்து தவசியர்க்கு கன்றுடன் கூடிய பசுவின் கடலைக் கொடுத்தாளாம். பாடல் பகுதி: 58 - சுந்தர சண்முகனார்
நன்றி ழைத்து அவண் நல்ல தவர்க்கு எலாம் கன்றுடைப் பசுவின் கடல் நல்கினாள்
பசுவின் கடல் என்பது, அளவற்ற பசுக்களைத் தந்தாள் என்பதைக் குறிக்கிறது. (தவசியர்க்குக் குருமா- பிரியாணி செய்துண்ணக் கோழியும் ஆடுமா தருவாள்?) தவசியர், பால் மட்டும் அருந்துபவர் ஆதலின் பசு தந்தாள். கன்று இல்லாத- மரத்துப் போன பசுவைக் கொடுத்தால் பால் கிடைக்காது ஆதலின், கன்றுடைப் பசு நல்கியதாகக் கம்பர் கூறியிருப்பது சிறப்பாயுள்ளது.
உயிரும் உடலும்
வசிட்டன் இராமனுக்கு உயர்ந்த கருத்துகளைக் கூறுகிறான்: உலகம் மன்னனின் உயிராகும். உலகமாகிய உயிரைத் தன்னுள் கொண்டு தாங்கும் உடல் மன்னனாவான். எனவே, நல்லாட்சி ஏற்று உயிர்களைக் காப்பதனினும் உயர்ந்த வேள்வி இல்லை- என்று வசிட்டன் கூறுகிறான். பாடல்:
வையம் மன்உயிர் ஆக, அம்மன் உயிர்
உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு
ஐயம் இன்றி அறம் கடவாது அருள்
மெய்யில் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ?
இப்பாடலில், மன்னனை உடலாகவும் உலகத்தை உயிராகவும் கம்பர் கூறியுள்ளார். ஆனால், வேறு புலவர்கள் சிலர் இதை மாற்றிச் சொல்லியுள்ளனர். அதாவது, உலகம் உடம்பு என்றும் அதற்கு உயிர் மன்னன் என்றும் கூறியுள்ளனர். அவற்றுள் சில காண்போம்:மோசி கீரனார் புறநானூற்றுப் பாடல் ஒன்றில்,
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே
என்று கூறியுள்ளார்- கொங்குவேளிர் என்னும் புலவர் பெருங்கதை என்னும் தம் நூலில், மன்னுயிர் ஞாலக்கு இன்னுயிர் ஒக்கும் இறை (உஞ்சைக் காண்டம், 11-17, 18) என்று மொழிந்துள்ளார். திருத்தக்க தேவர் தமது சீவக சிந்தாமணி என்னும் நூலில்,
மல்லலங் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய்
நல்லுயிர் ஞாலம் தன்னுள் நாமவேல் நம்பி என்றான்
என்று உரைத்துள்ளார். தோலா மொழித் தேவர் என்பவர் தமது சூளாமணி நூலில்,
உலகிற்கு ஓருயிர்ப்
பெற்றியான் பயாபதி என்னும் பேருடை
வெற்றிவேல் மணிமுடி வேந்தர் வேந்தனே
எனத் தெரிவித்துள்ளார். பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடல் புராணம்- பழியஞ்சின படலத்தில்,
உலகினுக்கு உயிரா யிருந்தனன் இறைகுலோத்துங்கன்
என்று அறிவித்துள்ளார். கம்பர் கூறியிருப்பதற்கு மாறாக மற்றவர் கூற்றுகள் உள்ளன. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு யாது?
கம்பராமாயணத்திலுள்ள சூழ்நிலை வேறு. மற்ற நூல்களில், மன்னர்களாக இருப்பவர்களைப் பற்றிக் கூறியுள்ளனர். இங்கோ, இராமன் இன்னும் மன்னனாக ஆகவில்லை. தந்தை தயரதன் மன்னனாக இருக்கின்றான். இருக்கும் மன்னன் இறந்த பின்னே மைந்தன் மன்னனாக வரமுடியும். எனவே, தந்தை இருக்கும்போது இராமனை முடிசூட்டிக் கொள்ளும்படி வசிட்டர் வற்புறுத்துகிறார். அதற்காக, உடம்பு உயிரைத் தாங்கிக் காத்தல்போல், மன்னன் உலகைக் காக்க வேண்டும். அகவை முதிர்ந்து தளர்ந்து போன தயரதனால், இனி உடம்பாக இருந்து உலகாகிய உயிரைக் காக்க முடியாது- எனவே நீ 60 ) சுந்தர சண்முகனார்
முடிசூட்டிக் கொள் என்னும் கருத்தில் கூறுகிறான். இதை ஒருவகை வேள்வி என்கிறான். வேள்வித் தீயில் ஆடு மாடுகளின் உடல்கள் போடப்பட்டுத் தேவர்கட்கு அவி உணவாகிறது. மன்னனும் தன் உடம்பை வருத்தி உழைத்து உலகைக் காக்க வேண்டும். இந்தக் கருத்துகள் எல்லாம் கம்பர் பாடலில் அடங்கியுள்ளன. இங்கே திருமூலரின் திருமந்திர நூலில் உள்ள
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே
என்னும் பாடல்கள் ஈண்டு எண்ணத்தக்கன. உடம்பு அழியின் உயிர் அழிந்து விடும்; இறைவன் உள்ளே இருப்பதற்கு உடம்பு கோயிலாக உள்ளது; அதனால் யான் உடலைக் காக்கிறேன்; அதனால் உயிர் வாழ முடிகிறது என்பது பாடல்களின் கருத்து. இறைவனுக்கு உடம்பு கோயிலாக இருப்பது போல், உலகினுக்கு மன்னன் இருப்பிடம் ஆகிறான். மன்னனாகிய உடம்பு அழிந்தால், உலகமாகிய உயிர் வாழ முடியாது. எனவே, தயரதனால் தாங்க முடியாத சுமையை நீ (இராமன்) தாங்காவிடின் உலகாகிய உயிர் அழியும்- என்ற குறிப்புடன் வசிட்டன் இராமனிடம் கூறியதாகக் கொள்ள வேண்டும்.
சூழ்நிலையை ஒட்டி மன்னன் உடம்பு போன்றவன் என்று கூறப்பட்டுள்ளதே தவிர, அரசன் உயிர் என்ற கருத்து கம்பருக்கும் உடன்பாடே. நகர் நீங்கு படலத்தில், இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர்என நின்ற இராமன் (213) என்று கம்பர் கூறியிருப்பது காண்க. அயோத்தியா காண்ட ஆழ் கடல் 61
துாம கேது
தூம கேது என்பது ஒருவகை வால் விண்மீன் (வால் நட்சத்திரம்- Comet) தூமம்=புகை, கேது - கொடி. எனவே, இதனைத் தமிழ் நூல்கள் புகைக் கொடி’ என்றும் கூறும் சிலப்பதிகாரத்திலிருந்து ஒர் அகச் சான்று காண்போம்:
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்...
புகை என்பது வெப்பத் தோற்றம். கொடி என்பது வால். விண் வீழ் கொள்ளியாகிய இந்தத் தூமகேது தோன்றினால் மண்ணுலகம் (பூமி) கெடுதியை எதிர் நோக்க வேண்டியிருக்குமாம்.
பூமிக்குத் தொல்லை தரும் தூமகேதுவைப் போன்ற பெண்டிர், சிலர் மேல் கொள்ளும் காமம் இல்லையெனில் கெடுதியில்லை எனக் கூறுகிறது கம்பர் பாடல்:
தூம கேது புவிக் கெனத் தோன்றிய
வாம மேகலை மங்கையரால் வரும்
காமம் இல்லை யெனில் கடுங் கேடெனும்
காமம் இல்லை நரகமும் இல்லையே
(29) என்பது பாடல். ஒருவர் மற்றொருவரை மட்டம்தட்டிப் பேசும் பொருளில், போடா துாம காது’ என்று சொன்னதை யான் இளமையில் கேட்டிருக்கிறேன். அப்போது இதன் பொருள் தெரியவில்லை. பிறகே, துரம கேது என்பதே 'துரம காது' எனக் கொச்சையாக மருவி வழங்கப்படுகிறது என்னும் உண்மை விளங்கிற்று.
மயில் முறைக் குலம்
இராமனுக்கு முடிசூட்டலாகாது- பரதனுக்கே பட்டம் தரவேண்டும் எனக் கூறிய கூனிமேல் கைகேயி சினம் கொண்டு கூறுகிறாள்: ஞாயிறு குலத்தில் வந்தவர்கள் உயிர் போவதெனினும் உரை மாறமாட்டார்கள். 62 சுந்தர சண்முகனார்
எனவே, தயரதன் இராமனுக்குப் பட்டம் என்று கூறிய பின் அதை மாற்ற முடியாது. இவர்களது குலத்து உரிமை மயில் முறைக் குலத்ததாகும். மனுவின் காலத்திலிருந்து மாறவில்லை. நீ உன் இழி மதியால் இவ்வாறு கூறலாமா? என்று கடிந்துரைக்கிறாள்:
வெயில் முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர் உயிர் முதல் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர்
மயில் முறைக் குலத்து உரிமையை, மனுமுதல் மரபை
செயிர் உறப் புலைச் சிந்தையால் என்சொனாய் தீயோய்
ஞாயிறு குலத்து வந்த மன்னன் சிபி புறாவிற்காக உடலை அரிந்து கொடுத்தமை முதலான செய்திகளை, இங்கே ஞாயிறு குலத்தவரின் சீரிய பண்புடைமையாகக் கொள்ளலாம். மயில் முட்டைகள் இட்டுப் பல குஞ்சுகள் பொரிக்கினும் முதலில் பொரித்த குஞ்சுக்கே தோகை வளரும். எனவே, இவர்களிலும், மயில் முறை போலவே, முதலில் பிறந்தவனுக்கே பட்டம் அளிப்பது முறை என்றாள் கைகேயி மற்றும் இந்தக் கருத்து கச்சியப்ப முனிவரின் தணிகைப் புராணத்திலும் சொல்லப் பட்டுள்ளது (களவு-244):
பலாவம் பொழிலின் ஒருதாய் உயிர்த்த பலமயிற்கும் கலாவம் புனைந்த களிமயில் மூத்தது
என்பது பாடல் பகுதி. கலாவம் = தோகை.
கங்கை-கன்னி
புதிதாய் முடிசூடிக் கொள்பவர்களும், அறுபதாம் அகவைத் திருமணம் (மணி விழா) செய்து கொள்பவரும் இன்ன பிறரும், பல இடங்களிலிருந்து நீர் கொண்டு வந்து முழுக்காடுவது மரபு. இங்கே இராமனுக்கு முடிசூட்டின அயோத்தியா காண்ட ஆழ் கடல் 63.
போது நீராட்ட, வடக்கே இமயத்திலிருந்து வரும் கங்கை நீர் முதல் தெற்கே உள்ள கன்னியாகுமரிக் கடல் நீர் வரை உள்ள பல மங்கல நீர்களும் கொணரப்பட்டனவாம். இங்கே கம்பர் தெற்குக் கோடி முதல் வடக்குக் கோடி வரை உள்ள பகுதிகளை இணைத்து இந்திய ஒருமைப்பாட்டைச் சுட்டிக் காட்டுவதுபோல் தோன்றுகிறதல்லவா? மேலும் நாலு வாரியின் நீரும் கொண்டு வந்தனராம். மற்றும், முடி சூட்டற்கு வேண்டிய முன் ஆயத்தங்கள் அனைத் தையும் வசிட்டர் செய்தாராம்.
கங்கையே முதல ஆகக் கன்னி ஈறு ஆய தீர்த்த
மங்கலப் புனலும் நாலு வாரியின் நீரும் பூரித்து அங்கியின் வினையிற்கு ஏற்ற யாவையும் அமைத்து வீரச்
சிங்க ஆசனமும் வைத்துச் செய்வன பிறவும் செய்தான்
என்பது பாடல். நாலு வாரி என்பதற்கு, நான்கு திக்குகளிலும் உள்ள கடல் எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. இது குழப்பமாயுள்ளது. நம் நாட்டின் (இந்தியா-தமிழ் நாடு) மூன்று திக்குகளில் கடல் உள்ளது. அவை வங்கக் கடல், அரபிக் கடல், இந்துமா கடல், என்பன. வடக்கே கடல் இல்லை. வடக்கே சீனாவும், இரஷ்யாவும் உள்ளன. இரஷ்யாவுக்கும் வடக்கே உள்ள ஆர்டிக் கடலை நாலாவது கடல் என்று கூறுவதா? ஒரு காலத்தில் இந்தியாவின் வட பகுதி கடலாயிருந்தது; பின்னர்த் தெற்கேயிருந்த குமரிக்கண்டம் (லெமூரியாக் கண்டம்) ஆழ்ந்து கடலில் மூழ்கிவிட்டதாகவும், வடக்கேயிருந்த கடல் பகுதி உயர்ந்து இமயமலை முதலிய பகுதிகள் மேலே எழுந்து விட்டதாகவும் ஒர் ஆய்வுக் கருத்து சொல்லப்பட்டுள்ளது. இது பொருத்தமெனில், இந்தியாவின் நான்கு பக்கமும் கடல் இருந்ததாகக் கொள்ளலாம்.
பூமிக்கு நானிலம் (நால் + நிலம்) என்னும் பெயர் உண்டு. கடல்களின் நடுவே உள்ள நான்கு பக்க நிலப் பகுதியைக் குறிக்கும் இந்தப் பெயர் தெளிவாயுள்ளது. 64 சுந்தர சண்முகனார்
கடலுக்கு 'முந்நீர்' என்ற பெயர் தமிழில் உள்ளது. ஆற்று நீர், வேற்று நீர் (மழை), ஊற்றுநீர் (அடி ஊற்று) என்னும் மூவகை நீரையுடையது எனவும், படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூவகைத் தொழில் புரிவது எனவும் சிலரால் பெயர்க் காரணம் கூறப்படுகின்றது. இதனினும், கிழக்கு (வங்கக் கடல்), மேற்கு (அரபிக் கடல்) தெற்கு (இந்துமா கடல்) ஆகிய மூன்று திக்குகளிலும் உள்ள நீர்ப் பகுதியாதலின் முந்நீர்' என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது என்பதே பொருத்தமான தாகும். எனவே, முந்நீர் என்னும் பெயர் தெளிவானது. ஒருவேளை, இந்த மூன்று பக்கக் கடலுடன், தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் நடுவே உள்ள கடல் பகுதியையும் சேர்த்து நான்கு கடல் என்பது கூறப் பட்டிருக்குமோ! ஆய்வுக்கு உரியது இது.
தனி அன்று, பொது
முடிசூட்டிக் கொள்ள வரச் சொன்ன தயரதனின் மாளிகைக்கு இராமன் தேரில் சென்றதைக் கண்ட மக்கள், பல பேசிக் கொண்டனர். அவற்றுள் ஒன்று. இனி உலகில் தீவினைகளும் துயரங்களும் அற்றுப்போகும். இனி இவ்வுலகம் தனித் தனியாய்ப் பலரால் அரசாளப் படாமல், பொதுவாய் இராமன் ஒருவனால் அரசாளப் படும் என்றனர். பாடல் பகுதி:
பாவமும் அருந்துயரும் வேர் பறியும் என்பார்; பூவலயம் இன்று தனி அன்று; பொது என்பார்
இந்தப் பாடலுக்கு எதிர் மாறானது போன்ற ஒரு கருத்தைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் நக்கீரர் கூறியிருக்கிறார். அதாவது, உலகம் பல அரசர்கள் ஆளக்கூடியதாய்ப் பலருக்கும் பொதுவானதாய் இல்லாமல், தனி ஒருவர்க்கே உரியதாய்த் தனி ஒர் அரசராய்த் தாமே ஆளக் கூடிய பேரரசர்க்கும் சரி-எளிய வேடன் ஒருவனுக்கும் சரி- அனைவருக்குமே அயோத்தியா காண்ட ஆழ் கடல் 65
உண்பது நாழி- உடுப்பவை இரண்டே- என்று கூறுகிறார்.
தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை கிழற்றிய ஒருமை யோர்க்கும்...... உண்பது நாழி உடுப்பவை இரண்டே
என்பது பாடல் பகுதி. நக்கீரர் பொதுமை இன்றி என்கிறார்; கம்பர் பொது' என்கிறார். கம்பர் தனி அன்று' என்கிறார்; நக்கீரர் ஒருமையோர்' என்கிறார்.
உலகம் பலருக்கும் உரியதன்றி ஒருவர்க்கே உரியதாம் கருத்தை நக்கீரரும் ஒத்துக் கொள்ளவில்லை. அப்படி ஒருவர் இருப்பினும் அவருக்கும் உண்பது நாழி உடுப்பன இரண்டே என்கிறார். நக்கீரர் கருத்துக்குக் கம்பர் கருத்து மாறானது போல் மேலோடு பார்க்கும் போது தோ ன்றுகிறதே தவிர, உண்மையில் வேறுபாடன்று. 'தனி அன்று பொது' எனக் கம்பர் கூறியதன் கருத்து, இராமன் அனைவருக்கும் உரிமை தந்து அனைவரையும் அனணத்துக் கொண்டு பொதுவான நடு நிலைமையுடன் அரசாள்வான்- என்பதாகும்.
மூட்டாத தீ
இந்த உலகம் அழியும் கடைசிக் காலத்து, கடலுக்கு உள்ளே உள்ள 'வடவை முகத்தீ' என்னும் நெருப்பு, யாரும் மூட்டாமலேயே தானே எழுந்து உலகத்தை எரித்து அழிக்குமாம். அது யாரும் மூட்டாத தீயாகும். இராமனுக்குக் காடு என்பதை அறிந்ததும், இலக்குமணன் மூட்டாத தீயைப் போல் கொதித்து எழுந்தானாம். வடவை முக நெருப்புக்கு மூட்டாத தீ எனப் பெயர் தந்திருப்பது சிறப்பாயுள்ளது. பாடல்: அ. ஆ.-5 66 - சுந்தர சண்முகனார்
கேட்டான் இளையோன்;............
மூட்டாத காலக் கடைத்தீ என முண்டெழுந்தான்
தென் சொல்லும் வட சொல்லும்
இராமன் தென் சொல்லாகிய தமிழைக் கற்றுத் தேர்ந்து கடந்து துறை போகியவன்- வட சொல்லாகிய சமஸ்கிருதக் கலையின் இறுதி எல்லைவரை சென்று கற்றறிந்தவன் என்னும் பொருளில் கம்பர் கூறியுள்ளார்: தென் சொல் கடந்தான்; வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான் (136) என்பது பாடல் பகுதி. இச் செய்தி மிகவும் வியப்பளிக்கிறது. இதிலிருந்து பல செய்திகள் புறப்படுகின்றன. நல்ல கருப்பனாகிய இராமனை வெண் மஞ்சள் நிறமுடைய ஆரியனாகக் கூறவியலாது. அவன் தமிழனாகத்தான் இருக்கவேண்டும். ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக வட இந்தியாவிற்குள் நுழைந்து, ஆங்கிருந்த தமிழர்களை வென்று தெற்கே துரத்தி விட்டனர். இராமனும் மற்றவரும் தமிழே பேசியிருப்பர். தமிழுடன் சமசுகிருதமும் இக்காலத்தாற்போல் கற்றுக் கொண்டிருப்பர்- முதலிய கருத்துகள் புற்றீசல்கள் போல் புறப்படுகின்றன.
இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்த பண்டித ஜவகர்லால் நேரு அவர்களே, திராவிடர்கள் வடக்கே யிருந்து தெற்கே சென்றனர் என்று எழுதியிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. மேலும், அகழ்ந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ள 'அரப்பா- மொகஞ்சதரா- சிந்து. வெளி நாகரிகம் பழைய திராவிட நாகரிகமாகும் என்னும் ஆராய்ச்சியும் ஈண்டு எண்ணத் தக்கது. மற்றும், கம்ப ராமாயணம்- ஆரணிய காண்டத்தில் தெரிவிக்கப் பட்டுள்ள ஒரு கருத்தும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.
காட்டில் இராமனை அகத்தியர் வரவேற்கிறார் . அகத்தியரும் இராமரும் அளவளாவி உரையாடிக் அயோத்தியா காண்ட ஆழ் கடல் 67
கொண்டனர். இவர்கள் எம்மொழியில் உரையாடி யிருக்கலாம் என்பது வினாக் குறி. அகத்தியரைக் கம்பர் பின் வருமாறு அறிமுகப்படுத்தியுள்ளார்:- சூலப் படையினையும் நெற்றிக் கண்ணையும் உடைய சிவன், நான்கு வேதங்களினும் உயர்ந்து உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் சிறந்துள்ள தமிழை அகத்தியர்க்குத் தந்தார். அந்தத் தமிழை அகத்தியர் உலகில் பரப்பினார். (வட மொழியைப் பாணினிக்கும் தென் தமிழை அகத்தியர்க்கும் சிவன் தந்ததாகக் கூறுதல் மரபு)
வடமொழி போல் வழக்கற்றுப் போகாமல், என்றைக்கும் நின்று நிலவுகின்ற தென் தமிழைப் பேசி எழுதி வளர்த்துப் புகழ் கொண்ட அகத்தியனை இராமன் வணங்கினான். அகத்தியன் அவனைத் தழுவிக் கொண்டு 'நன்று வரவு' (நல்வரவாகுக) என வாழ்த்தி வரவேற்றான். பாடல்கள்:- (ஆரணிய காண்டம்அகத்தியப் படலம்)
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும் வழக்கினும் மதிக் கவியினும் மரபின் நாடி
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான்
நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான் அன்றவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால் 'நன்று வரவு' என்று பல நல்லுரை பகர்ந்தான் என்றும் உளதென் தமிழ் இயம்பி இசை கொண்டான்
இந்தப் பாடல்களின்படி நோக்கின், அகத்தியரும் இராமரும் தமிழில் பேசிக்கொண்டிருப்பர் என நுனித்துணர (யூகிக்க) இடம் உண்டு. அதனால்தான் இராமன் தென் சொல் கடந்தான்' எனச் சிறப்பிக்கப் பட்டுள்ளான்.
இங்கே எழக் கூடிய இன்னொரு சிக்கலை அவிழ்ப்பது கடினமே. அதாவது, இராமன் தமிழ் மரபினன் 68 - சுந்தர சண்முகனார்
என்றால், பெயர்களெல்லாம் தமிழ்ப் பெயராக அல்லவா இருக்க வேண்டும்? வடமொழிப் பெயர்களாக உள்ளனவே!- என்ற வினா எழலாம். வடமொழியில் வடமொழியாளர்கள் எழுதிய ஒரு நெடுங்கதை வடமொழிப் பெயர்களைக் கொண்டுதான் இருக்கும் என்பதைத் தவிர வேறு என்ன கூற முடியும்? இந்தக் கருத்து முற்ற முடிந்ததன்று. இன்னும் ஆய்தற்கு உரியது.
கல்வி மாட்சி
மாட்டு வண்டி, குதிரை வண்டி, மிதிவண்டி, சிற்றுந்து- பேருந்து- சரக்குந்து, புகை வண்டி, கப்பல், வான ஊர்தி முதலியவற்றை ஒட்டுவதற்கு, அது அதற்கு உரிய முறையில் சிறிய அளவிலோ- பெரிய அளவிலோ முன்கூட்டிக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். முற்பயிற்சி இல்லாமல் எதையும் திறம்பட ஒட்ட முடியாது. தேர் ஒட்டுவதற்கும் நல்ல பயிற்சி வேண்டும். போரில் வெற்றி பெறத் தேரோட்டி மிகவும் வல்லவனாய் இருத்தல் வேண்டும். பார்த்தன் என்னும் அர்ச்சுனனுக்குக் கண்ணன் திறமையாகத் தேரோட்டியதால்தான் அர்ச்சுனன் வெற்றி பெற மு டிந்தது. பார்த்தனுக்குச் சாரதியாக (தேரேரட்டியாக) கண்ணன் இருந்ததால் பார்த்தசாரதி' என்னும் சிறப்புப் பெயர் பெற்றான். எனவே, தேர் ஒட்டுவதற்கு எனத் தனிப் பயிற்சி பெற வேண்டும். இந்தப் பயிற்சியும் ஒரு கல்வியாகும். சுமந்திரன் இந்தக் கல்வியைச் சிறப்பாகப் பெற்றவனாம்.
நகர் மக்களுடன் இராமனை அழைக்கப் போன சுமந்திரன், இராமன் வரமறுத்ததால், தேரை அயோத்தி நோக்கி ஒட்டினான். அப்போது கானகத்தில் நகர மக்கள் அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 69
உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கட்குத் தெரியாமல் தேரை ஓட்டினானாம். அதாவது, அவர்கள் விழித்துப் பார்க்கின், தேர் ஒடிய பாதையைப் பார்த்து, இராமன் நகருக்குத் திரும்பி விட்டான் என்று மக்கள் நம்பும்படித் தேரைத் திறமையுடன் ஒட்டினானாம். இராமன் மேற் கொண்டு காடு நோக்கிச் சென்று விட்டதால், இராமனையும் தேரையும் காணாத மக்கள், இராமன் நகர் திரும்பி விட்டான் என நம்பினர். இதற்குக் காரணம், சுமந்திரன் சுற்றிருந்த தேர் ஒட்டும் கல்வி மாட்சியே யாகும். பாடல்:
கூட்டினன் தேர்ப்பொறி கூட்டிக் கோள்முறை பூட்டினன் புரவி, அப்புரவி போம்நெறி
காட்டினன்; காட்டித் தன் கல்வி மாட்சியால் ஓட்டினன் ஒருவரும் உணர்வுறாமலே
இப்பாடலில் உள்ள கல்வி மாட்சியால்' என்பது எண்ணத் தக்கது.
அரவும் அன்றிலும்
அகவை முதிர்ந்த பாம்பின் உடலில் மாணிக்கம் உண்டாகும் என்றும், ஆண் அன்றில் பறவையும் பெண் அன்றிலும் எப்போதும் இணைபிரியா என்றும் சொல்லுவர். கணவன் தயரதனை இழந்த கோசலை, மணி பிரிந்த பாம்பு போலவும், துணை பிரிந்த அன்றில் பேடை போலவும் துயருற்றுப் புலம்பினாளாம். பாடல் பகுதி:- -
மருந்து இழந்தவரின் விம்மி மணி பிரி அரவின் மாழ்கி
அருந்துணை இழந்த அன்றில் பெடை என அரற்ற லுற்றாள்
கருப்பு எந்திரம்
அந்தக் காலத்திலேயே கரும்பு பிழிந்து காய்ச்சும் ஏந்திரம் (பொறி) இருந்துள்ளது. காட்டில் சென்ற போது சீதை கருப்பு (கரும்பு) ஏந்திரம் முதலியன கண்டு சென்றாளாம். பாடல் பகுதி:
கருப்பு ஏந்திரம் முதலாயின கண்டாள், இடர் காணாள்
பொருப்பு ஏந்திய தோளானொடு விளையாடினள்,
மலையணைய தோள் உடைய இராமனோடு பல காட்சிகளையும் விளையாட்டாகக் கண்டுகொண்டு சீதை சென்றாளாம்.
சொல் மலர்
இராமனை வரவேற்ற தவசியர், கண்ணீரால் நீராட்டினராம்; இன்சொல்லாகிய மலரைச் சூட்டினராம்; அன்பு என்னும் அமிழ்தத்தை ஊட்டினராம்; வழி நடந்து வந்த வருத்தத்தைப் போக்கினராம். பாடல்:
பொழியும் கண்ணின் புதுப்புனல் ஆட்டினர் மொழியும் இன்சொலின் மொய்ம்மலர் சூட்டினர் அழிவில் அன்பெனும் ஆர் அமுது ஊட்டினர்
வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர்
சொல்லை மலராகச் சொல்வது இலக்கிய மரபு. பூக்களின் தொகுப்பைப் பூமாலை எனல் போல், சொற்களால் ஆன பாக்களின் தொகுப்பைப் பாமாலை' என்பர். பிறவி வேண்டா- வீடு வேண்டும் என்று கேட்பவர் கேட்பார்களாக! இறைவனே! யான் உன்மேல் 'தமிழ்ச் சொல் மலர்' புனையும் பிறவியையே வேண்டுவன்- என்று சிவப்பிரகாச அடிகளார் சோண சைல மாலை என்னும் நூலில் தெரிவித்துள்ளார் அயோத்தியா காண்ட ஆழ் கடல் 71
விரை விடை இவரும் நினைப் பிறவாமை வேண்டுநர் வேண்டுக மதுரம்
பெருகுறு தமிழ்ச்சொல் மலர் நினக்கு அணியும் பிறவியே வேண்டுவன் தமியேன்
என்பது பாடல் பகுதி. நாயன்மார்கள்- ஆழ்வார்கள் முதலியோரின் பாடல்களிலும் சொல் மலர்- சொல்மாலை என்னும் உருவகத்தைக் காணலாம். கம்பரும் சொல் மலரை விட்டார் இல்லை. மேலும் இந்தப் பாடலில், பாட்டின் நான்கு அடிகளி லும் முதல் சீர்களில் எதுகை இருப்பதுபோல், ஈற்றுச் சீர்களிலும், ஆட்டினர்- சூட்டினர்- ஊட்டினர் வாட்டினர் என எதுகை அமைத்திருப்பது சுவையா யுள்ளது. ஆங்கிலப் பாடல்களில் இறுதிச் சீர்களில்தான் எதுகை (Rhyme) இருக்கும் என்பது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.
''பிறவா வெய்யோன்
இராமன் கங்கைக் கரையில் இரவு உறங்கிக் காலை யில் விழித்தபோது ஞாயிறு தோன்றினான். மக்கள் இறப்பதுபோல், ஞாயிறு முதல் நாள் மாலை இறந்தா னாம் (மறைந்தானாம்); மக்கள் மீண்டும் பிறப்பதுபோல் ஞாயிறு மறுநாள் காலை பிறந்தானாம் (தோன்றினானாம்). ஆனால், உண்மையில் இவன் பிறவாதவனாம். பாடல்:
இறக்குமாறு இது என்பான்போல் முன்னை நாள் இறந்தான்; பின்நான்
பிறக்குமாறு இது என்பான்போல் பிறந்தனன் பிறவா
வெய்யோன் (24)
வெய்யோன்= ஞாயிறு. மக்கள் இறப்பதும் பிறப்பதும் உண்டே தவிர, ஞாயிறு பிறப்பதும் இறப்பதும் இல்லை. யாதலின் பிறவா வெய்யோன் என்றார் கம்பர்.
ஞாயிறு தோன்றுவதோ மறைவதோ இல்லை. பூவுலகு (பூமி) தன்னைத் தானே சுற்றிக் கொண்டு ஞாயிற்றையும் சுற்றுவதால், ஞாயிறு தோன்றுவது போலவும் மறைவது போலவும் இருக்கிறது என்பது இந்தக் காலத்தில் அறிந்த உண்மை. கம்பருக்கு இது தெரியுமோ தெரியாதோ- பிறவா வெய்யோன் என அவர் கூறியிருப்பது இந்தக் காலத்திற்குப் பொருத்தமாயுள்ளது.
தேவர் ஊன்
குகன் தன் இடத்திலேயே நிலையாய்த் தங்கியிருக்கும் படி இராமனை வேண்டிக் கூறுகிறான்: இங்கே தேனும் தினையும் உண்ண உள்ளன. தேவரும் உட்கொள்வதற்கு உரிய ஊன் உள்ளது. துணைக்கு நாய் போல் ஊழியம் செய்யும் எங்கள் உயிர்கள் உள்ளன- என்று கூறினான். பாடல் பகுதி:
தேன் உள; தினை உண்டால்; தேவரும் நுகர்தற்காம்
ஊன் உள; துணை நாயேம் உயிர் உள..
'நாயேம் உயிர் உள' என்பதில் உயிரையும் கொடுப்போம் உன்னும் கருத்து உள்ளது. ஆடு மாடு களை வெட்டி வேள்வித் தீயில் இட்ட இறைச்சியைத் தேவர்கள் தின்பார்கள் என்னும் செய்தி இதில் இலை மறை காயாய் உள்ளது.
முக்கூடல்
காட்டில் ஓரிடத்தில் இராமனை வரவேற்ற, பரத்துவாச முனிவர், அங்கேயே தம்முடன் இருந்துவிடும் அயோத்தியா காண்ட ஆழ் கடல் 78
படி வேண்டுகின்றார்: 'இராமா! இந்த இடம், கங்கை, யமுனை, சரசுவதி ஆகிய மூன்று ஆறுகளும் கூடும் நல்லபுண்ணிய இடமாகும். அதனால் தான் நான் இவ்விடத்தை விட்டுப் பிரியாமல் இங்கேயே உள்ளேன். நீயும் இங்கேயே இருந்துவிடு' என்கிறார்.
கங்கை யாளொடு கரியவள் நாமகள் கலந்த
சங்கம் ஆதலின் பிரியலன்...
மூன்று ஆறுகள் கூடும் இடத்தைத் திரிசங்கமம் என வட மொழியிலும் முக்கூடல் எனத் தமிழிலும் கூறுவது மரபு. இந்த இடத்திற்குத் தெய்வத் தன்மை கற்பிப்பதும் உண்டு. இங்கே யமுனை கரியவள்" எனவும், சரசுவதி 'கலைமகள்' எனவும் தமிழ்ப் பெயரால் கம்பரால் குறிப் பிடப்பட்டிருப்பது சுவையாயுள்ளது.
கொன்றை வேய்ங் குழல்
இராமன் முதலிய மூவரும் காட்டில் ஆயர்கள் குழல் ஊதும் முல்லை நிலத்தையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தையும் கடந்து சென்று காளிந்தி ஆற்றைக் கண்டனராம்: அந்த ஆற்றங்கரையில் சிறிய மான் கன்றுகள் நீர் அருந்துமாம். ஞாயிறு அப்போது தலைக்குமேல் உச்சியை அடைந்திருந்தானாம்.
கொன்றை வேய்ங் குழல் கோவலர் முல்லையங் குறிஞ்சி
சென்று, செங்கதிர்ச் செல்வனும் நடுஉற, சிறுமான்
கன்று நீர்நுகர் காளிந்தி எனும்நதி கண்டார்
என்பது பாடல் பகுதி. இதில் உள்ள கொன்றை வேய்ங் குழல்’ என்னும் பகுதி குறிப்பிடத் தக்கது. குழலுக்குப் "புல்லாம் குழல்' என்ற பெயர் உண்டு. புல் = புறவயிரம் உடைய மூங்கில். மூங்கிலில் துளைபோட்டுச் செய்த குழல் என்னும் பொருளில் இப்பெயர் வழங்கப்படுகிறது. முதலில், மூங்கில் கழியில் வண்டு துளைத்த துளைகள் வழியாகக் காற்று புகுந்தபோது இயற்கையாக எழுந்த 74 சுந்தர சண்முகனார்
இன்னிசையைச் சுவைத்த மக்கள், பின்னர், செயற்கையாகத் துளைகள் இட்டு ஊதத் தொடங்கினர். வேய் என்றால் மூங்கில், மூங்கிலால் செய்த குழல் வேய்ங் குழல் எனப்பட்டது- என்பதாகப் பலரும் அறிந்த செய்தி இது. இந்தப் பாடலிலோ கொன்றை வேய்ங்குழல்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் யாது? இங்கே வேய் என்பது மூங்கிலைக் குறிக்கவில்லை. வேய் என்பதற்கு, உள் துளை உடைய பொருள்' என்னும் பொருளும் உண்டு. கொன்றை மரத்துக் காய் அல்லது பழம், உள் குழை உடையதாய் நீண்டிருக்கும். அதில் நடுநடுவே துளையிட்டுக் குழலாகப் பயன்படுத்தி இசைப் பதும் உண்டு. இதைத்தான், ஈண்டு கொன்றை வேய்ங் குழல்' என்பது குறிக்கின்றது.
அருந்ததி
காட்டில் சென்று கொண்டிருந்த பொழுது, இராமன் சீதைக்குப் பலவேறு காட்சிகளைக் காண்பித்துக் கொண்டே செல்கிறான். சீதையை விளித்து விளித்துப் பல சொல்கிறான். அருந்ததிக்கு நன்னெறியாகிய கற்பு இன்னது என்று அறிவித்தவளே! என்று ஒரு நேரம் விளித்தான்:
சீலம் இன்ன தென்று அருந்ததிக்கு அருளிய திருவே! (16)
என்பது பாடல் பகுதி. கற்புடைய மகளிர் முல்லை வளர்ப்பதும் முல்லை மலர் சூடிக் கொள்வதும் மரபு. அதனால், கற்பு என்னும் சொல்லுக்கு முல்லை என்னும் பொருளும், முல்லை என்னும் சொல்லுக்குக் கற்பு என்னும் பொருளும் சொல்லும் அளவிற்கு இந்த அமைப்பு அயோத்தியா காண்ட ஆழ் கடல் 15
உள்ளது. ('கற்பு முல்லை' என்னும் தலைப்பில் ஒரு நூலில் ஒரு பகுதி எழுதியுள்ளேன்) சங்க இலக்கியங் களில் 'முல்லையங் கற்பு’ என்னும் தொடரைக் காணலாம். இந்த அடிப்படையுடன் அருந்ததியிடம் வருவோம்:
சிவப்பிரகாசர் தம் பிரபுலிங்க லீலை என்னும் நூலின் கைலாச கதியில், முல்லையந்தொடை அருந்ததி' (27) என்று குறிப்பிட்டுள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. அத்தகைய அருந்ததிக்கே கூட, சீதை சீலம் கற்றுக் கொடுக்கக் கூடியவள் என்று இராமன் வாயிலாகக் கம்பர் கூறி நம்மை இன்புறுத்தியுள்ளார்.
உடலுக்கு உயிர்
உலகில் உள்ள பெண்மை, (பெண்தன்மை) என்னும் உடலுக்குச் சீதை உயிர் போன்றிருக்கிறாளாம். ஒருவில் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே! (14)
என்பது பாடல் பகுதி. அதாவது, சீதை உயிராய் இருந்து உலகப் பெண்மையைக் காக்கிறாளாம். இது இராமனது விளி.
அசுணமா
அசுணத்தை வேட்டையாடுபவர்கள், முதலில் இன்னிசை எழுப்புவார்களாம். அந்த இசை இன்பத்தில் மிகவும் ஈடுபாடுடைய அசுணம் மெய்ம் மறந்து இருக்குமாம். அப்போது வெடிபோன்ற கடினமான பறை ஒசை எழுப்பினால், அதைப் பொறாமல் அசுணம் இறந்து போகுமாம். அசுணம் பறவை என்று சிலரும் விலங்கு என்று சிலரும் கூறுகின்றனர். இந்தக் குழப்பத் திற்குக் கம்பர் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்:
குறிஞ்சி நில மகளிர் ஊஞ்சல் ஆடிக்கொண்டே இனிய குறிஞ்சிப் பண் பாடுகிறார்களாம். அதைக் 76 - சுந்தர சண்முகனார்
கேட்ட அசுண மாக்கள் இன்புடன் கண் வளர் கின்றனவாம்.
குனிந்த ஊசலில் கொடிச்சியர் எடுத்த இன் குறிஞ்சி கனிந்த பாடல் கேட்டு அசுணமா வளர்வன காணாய்
என்பது பாடல் பகுதி. இங்கே அசுணத்தை மா (விலங்கு) எனக் கம்பர் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் யாழ்
புல்லாங் குழலை விட, யாழை விட, இனிமையாகச் சொல் பேசும் கிளியே என இராமன் சீதையை விளிக்கின்றான்:
குழுவு நுண் தொளை வேயினும் குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே
என்பது பாடல் பகுதி. தமிழ் யாழ் என்பதில் பல கருத்துகள் அடங்கியுள்ளனவாகக் கொள்ள இடம் உண்டு. தமிழ் என்ற சொல்லுக்கு 'இனிமை' என்னும் பொருள் உண்டு என்பதற்குப் பல இலக்கியச் சான்றுகள் உண்டு. ஒன்றே ஒன்று பார்ப்போமே! தமிழ் தழிஇய சாயலார் அதாவது இனிய நடையையுடைய பெண்டிர்- என்னும் பொருளில் திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணி என்னும் நூலில் அமைத்துள்ளார். எனவே, இனிய யாழ் என்பது ஒரு கருத்து. வீணை வட நாட்டது; யாழ் தமிழ் நாட்டது என்னும் ஒரு கருத்தும் குறிப்பாகக் கொள்ளப்படலாம். நகர் நீங்கு படலத்தில், இராமனைக் கம்பர், தென்சொல் கடந்தான் வடசொற் கலைக்கு எல்லை தேர்ந்தான் (136)
எனக் குறிப்பிட்டிருப்பது கொண்டு, இராமன் தமிழ் அறிந்தவனாய் இருக்க வேண்டும் என உய்த்துணர இடம் உண்டு. அதனால்தான், இராமன் வாயால் 'தமிழ் யாழ்' எனக் கம்பர் சொல்லவைத்துள்ளார் போலும். அயோத்தியா காண்ட ஆழ் கடல் 77
மற்றும், தமிழ்' என்று மட்டும் கூறாமல், தமிழ் குளிர்ச்சியானது என்னும் பொருளில் தண் தமிழ் எனக் கூறியிருப்பது நமக்குக் குளிர்ச்சியாகவும் இனிமையாகவும் உள்ளது. மேலும், இந்தத் தொடர் ஆட்சியினால், கம்பரது தாய் மொழிப் பற்றும் புலனாகிறது.
வேய் முத்து
முத்து பிறக்கும் இடங்களுள் மூங்கிலும் ஒன்று என்பர். பாறையில் விழுந்து கிடக்கும் முத்துகள் செக்கர் வானில் மின்னும் உடுக்கள் போன்று இருப்பதை இராமன் சீதைக்குக் காண்பிக்கின்றான்:
தொடர்ந்த பாறையில் வேயினம் சொரி கதிர் முத்தம்
இடங்தொறும் கிடந்திமைப்பன எக்கிளம் செக்கர் படர்ந்த வானிடை தாரகை நிகர்ப்பன பாராய்!
என்பது பாடல் பகுதி.
கற்றவர் அடக்கம்
யானையையும் விழுங்கக் கூடிய பெரிய மலைப் பாம்புகள், கற்றறிந்தவர் போல் அடங்கி, முனிவர்கள் உயரமான பகுதிகளில் ஏறப் படிகளாய்க் கிடக்கின்றனவாம்.
இடிகொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்துடன் விழுங்கும்
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என அடங்கிச் சடைகொள் சென்னியர் தாழ்விலர் தாம் மிதித் தேறப்
படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பன பாராய்!
என்பது பாடல். ஈண்டு, கற்றறிந்தவர்கள் அடக்கமாய் ஒழுகுவதுபோல், மலைப் பாம்புகள் முனிவர்கட்கு அடங்கி ஒழுகுகின்றன- என்று கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது. இங்கே, சீவக சிந்தாமணியில் உள்ள பாடல் ஒன்று ஒப்பு நோக்கத் தக்கது. 78 - சுந்தர சண்முகனார்
நெல் பயிர், தொடக்கத்தில், பச்சைப் பாம்பின் தோற்றம் போல் கருக் கொண்டு, இழிந்த செல்வர் போல் தலைநிமிர்ந்து நின்று, கருமுற்றிக் காய்ந்தபின், தேர்ந்த கல்வியாளர் போல் தலைதாழ்த்திக் கிடக்கிறதாம். (சொல்=நெல்)
சொல்அரும் பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந் தீன்று மேலளார்
செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே
என்பது பாடல். 'அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்' என்பது வெற்றி வேற்கை (14)
முகத் தாமரை
ஞாயிறு மறைந்ததும், தடாகங்களில் தாமரைகள் குவிந்தன; வெள்ளாம்பல்கள் மலர்ந்தன. இதைக் கம்பர் நயப்படுத்திக் கூறுகிறார். தாமரை மலர்கள் பெண்கட்குத் தமது தோற்றத்தை அளித்துவிட்டு மறைந்தனவாம். வானம் போன்ற வாவியில் உடுக்களைப் போல் வெள்ளை ஆம்பல்கள் மலர்ந்தனவாம்:
ஆனனம் மகளிருக்கு அளித்த தாமரைப்
பூ கணி முகிழ்த்தன, புலரி போனபின்
மீன் என விளங்கிய வெள்ளி ஆம்பல் வீ
வான் எனும் மணித் தடம் மலர்ந்த எங்குமே
என்பது பாடல். தாமரை மலர்கள் போல் பெண்களின் முகங்கள் உள்ளன என்னும் பழைய கருத்தையே புதுமைப் படுத்திக் காட்டியுள்ளார் கம்பர். இரவில் மலரும் வெள்ளை ஆம்பல், வெண்மையாய் இருப்பதற்குக் காரணம், வண்டுகளை ஈர்த்துப் பிற மகரந்தச் சேர்க்கை பெறுவதற்கேயாம். இருளில் வெள்ளைதானே கண்ணுக்குப் பளிச்செனத் தெரியும்? அயோத்தியா காண்ட ஆழ் கடல் 79.
இது 'இயற்கையின் தேர்வு' (Nautral Selection) எனப் படும்.
கிளியும் அன்னமும்
பரதன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்தான். அயோத்தி பொலிவற்றுக் கிடக்கிறது. கிளிகள் ஓதவில்லை யாம்; காதலியர் காதலர்க்குத் தூது அனுப்பிய அன்னங்கள் போய் ஒன்றும் சொல்லவில்லையாம்.
ஒது கின்றில கிள்ளையும் ஓதிமம்
தூது சென்றன சொல்லல...
என்பது பாடல் பகுதி. சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை' என்பர். கிளி பிறர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்குமாம்; அந்தப் பேச்சை அப்படியே திருப்பிக் கூறுமாம். செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி நூலின் கடை திறப்பு என்னும் பகுதியில் இது தொடர்பான சுவையான பாடல் ஒன்றுள்ளது.
வீட்டில் இரவில் தலைவனும் தலைவியும் கலவி மயக்கத்திலே கொஞ்சிய பேச்சை, மறுநாள் பகலில், வேறு வீட்டுப் பெண்கள் வந்திருந்தபோது, அவர்கள் கேட்கும் படி அப்படியே கிளி சொல்லியதாம். நாணம் கொண்ட தலைவி கிளியின் வாயைப் பொத்தினாளாம்:
கேயக் கலவி மயக்கத்தே நிகழ்ந்த மொழியைக் கிளி உரைப்ப
வாயைப் புதைக்கும் மடநல்லீர் மணிப்பொற் கபாடம் திறமினோ
என்பது கலிங்கத்துப் பரணி பாடல். சிவப்பிரகாச அடிகளார் அருளிய பிரபுலிங்க லீலை என்னும் நூலிலும் கிளியின் பேச்சு குறிப்பிடப்பட்டுள்ளது. உமாதேவியின் கைகளில் நீல மலரும் கிளியும் உள்ளனவாம். சிவன் தேவிக்குக் கூறிய மறைமுடியின் (வேத முடிபின்): 80 - சுந்தர சண்முகனார்
பொருளைக் கேட்டிருந்த கிளி மறக்காமல் கூறுகின்றதாம். பாடல்.
மறந்திடா மணி வண்டுபடு மலர்
சிறந்த நீல மலரொடு சீர்பெற
மறந் திடாது மறைமுடி யின்பொருள்
அறைந்து பைங்கிளி முன்கை அமர்ந்திட
(கைலாச கதி-23)
என்பது பாடல். இங்கே நைடதத்தில் மணம் புரிபடலத்தில் உள்ள
கள்ளுலாம் நறிய கூந்தல் கலவியின் உரைத்த யாவும்
கிள்ளைகள் மிழற்று மாறு கேட்டிள நிலவு காலும் முள்ளெயிறு இயங்கச் செல்வி முகிழ்நகை கோட்டினாளே
என்னும் பகுதியும் ஒப்பு நோக்கத் தக்கது. இதன் கருத்தாவது: தேன் உள்ள மலர் சூடிய கூந்தலையுடைய தமயந்தி, புணர்ச்சியின்போது கணவனும் தானுமாய்ப் பேசிக்கொண்ட இன்ப உரைகளையெல்லாம் கிளிகள் சொல்லக் கேட்டு புன்முறுவல் பூத்தாள்- என்பது.
இத்தகைய பழக்கமுடைய கிளிகள் பரதன் வந்த போது அயோத்தியில் ஒன்றும் பேசவில்லையாம். தூதாக அனுப்பிய அன்னமும் போய்ச் செய்தி சொல்லவில்லையாம்.
வர்த்தமானன் பதிப்பகப் பதிப்பில் இப்பாடலின் ஒரு பகுதி வேறாயுள்ளது:
ஒது கின்றில கிள்ளையும்; ஓதியர் தூது சென்றில வந்தில தோழர்பால்...
என்பது இப்பதிப்பின் பாடல். இங்கே, ஒதியர்' என் பதற்குக் கூந்தலழகு உடைய பெண்கள் எனவும், தூது சென்றில’ என்பதற்குத் தூது போகவேயில்லை எனவும், 'வந்தில’ என்பதற்குத் தூது போனவை திரும்பி வரவில்லை எனவும், 'தோழர் பால்' என்பதற்குக் அயோத்தியா காண்ட ஆழ் கடல் 81
காதலரிடம்- தலைவரிடம் எனவும் பொருள் கொள்ளல் வேண்டும்.
நெய்யோடு உண்ணல்
இராமனைக் காட்டுக்கு அனுப்பிய தன் தாய் கைகேயியைப் பரதன் கடிந்து பேசுகிறான்:- இராமனும் இலக்குமணனும் காட்டில் புல் உணவு- இலை உணவு கொள்ள, யான் இங்கே, அமிழ்தம் என்று சொல்லும்படியான சாலி நெல் சோற்றை நெய்யோடு உண்டு கொண்டிருப்பேனேயாயின், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா? என்கிறான்:
உய்யா கின்றேன் இன்னமும்; என்முன் உடன் வந்தோன்
கை ஆர் கல்லைப் புல் அடகு உண்ண, கலம் ஏந்தி வெய்யோன்நான் இன் சாலியின் வெண் சோறு அமுது என்ன
நெய்யோடு உண்ண நின்றது நின்றார் நினையாரோ
என்பது பாடல். என் முன் = அண்ணன் இராமன். உடன் வந்தோன் = இலக்குமணன். கை ஆர் கல்லை=கையே இலையாக (கல்லை = இலை), கலம் ஏந்தி=நான் சிறந்த உண்கலம் கொண்டு. சாலியின் வெண் சோறு=சாலி அரிசியால் ஆக்கிய வெண்ணிறச் சோறு. 'அப்படியே சோறு வெள்ளை வெளேர் என்று தும்பை மலர் போல் இருந்தது' என்று உலகியலில் கூறப்படுவதுண்டு. இங்கே, நெல் விளையும் தமிழ் நாட்டுக் கம்பன், மிகுதியாகக் கோதுமை விளையும் அயோத்தி நாட்டில் தன் நாட்டுச் சாலிவெண் சோற்றைப் புகுத்தியுள்ளமை நெய்யோடு கூடிய சாலி வெண் சோற்றைப் போல் பாடலைப் படிப்பதற்குச் சுவையாயுள்ளது.
நெய்யோடு உண்ணும் உணவு சிறந்தது என்பதை ஒளவையின் 'நெய்யில்லா உண்டி பாழ்' என்னும் நல்வழி நூல் (24) பாடல் பகுதியும் அறிவிக்கிறது. இது அந்தக் காலத்து உணவு வளத்தைக் குறிக்கிறது, ஒளவையைப் அ. ஆ.-6 82 சுந்தர சண்முகனார்
போலவே தெலுங்கு மா கவிஞராகிய வேமன்னரும், தமது வேமன்ன பத்தியம் என்னும் நூலில்,
நெய்யி லேனி கூடு நித்திய கனுவதி
பிரியமு லேனி கூடு பிண்டபு கூடையா
என்று கூறியுள்ளார். நெய்யில்லாத உணவு சிறப்பற்றதாம். அன்பு இல்லாமல் கடமைக்கு இடும் உணவு, செத்த பிணத்திற்குப் படைக்கும் உணவு போன்றதாம். லேணிக இல்லாத. கூடு=கூழு. (தமிழ்)-கூளு (கன்னடம்) -உணவு.
நான்கு யுகங்கள்
முடிசூட்டிக் கொள்ளுமாறு தன்னை வற்புறுத்திய அரசவையோரை நோக்கிப் பரதன் கூறுகின்றான்: என் அன்னை கைகேயி செய்தது சரிதான்- நான் முடிசூடிக் கொள்ளவேண்டும்- என்று கூறுவீர்களே யாயின், இந்த யுகம், நடுவில் உள்ள இன்னும் இரண்டு யுகங்களையும் தாண்டி வந்திட்ட கலியுகமாய் இருக்கும் போலும்! பாடல்:
அடைவரும் கொடுமை என் அன்னை செய்கையை நடைவரும் தன்மைநீர் நன்று இது என்றிரேல், இடைவரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது கடைவரும் தீநெறிக் கலியின் ஆட்சியோ? (15)
இடையில் உள்ள இரண்டு யுகங்களைத் தாண்டிக் கடைசியாக வரும் கலியுகமோ இது- எனில், இப்போது உள்ள யுகம் முதல் யுகம் என்பது பெறப்படும். அதுதான் கிரேத யுகம், நாலாவது யுகம், கலியுகம். நடுவில் உள்ள இரண்டு, என்பன திரேத யுகம், துவாபர யுகம் என்பன வாம். இந்த நான்கனுள் கடைசியான கலியுகம் பொல்லா யுகமாம். அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 83
செவித்தேன்
பரதன் காட்டிற்குச் சென்று இராமனை அழைத்து வரப் போகிறான்; இராமன் முடிசூடிக் கொள்வான் என்று கூறிப் பறையறைந்ததும், அச் சொற்களைக் காதால் கேட்டா எல்லா உயிர்களும் மகிழ்ந்தனவாம். இராமன் வந்து முடிசூடிக் கொள்வான் என்ற சொல் செவி வழியாகச் சென்று இனிக்கச் செய்யும் தெய்வத் தேனோ- என்று பாராட்டப்படுகிறது:
அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய் உள
புவித்தலை உயிரெலாம் இராமன் பொன்முடி கவிக்கும் என்றுரைக்கவே களித்ததால் அது
செவிப் புலம் நுகர்வதோர் தெய்வத் தேன்கொலாம்
என்பது பாடல். வாயால் உண்ணும் தேனின் சுவையையும் மூளைதான் நுகர்கிறது; செவியால் கேட்கும் தேன் போன்ற சொல்லின் இனிமையையும் மூளைதான் நுகர்கிறது. எனவே, மகிழ்ச்சியூட்டும் சொற்களைச் செவிப் புலத்தேன்' என்று கூறியிருப்பது சாலப் பொருந்தும்.
மெல்லியல்
இராமனை அழைத்து வரப் பரதனுடன் படைஞர் களும் பொது மக்களும், திக்குகள் சிறியவாயுள்ளன நாம் போவதற்குப் போதுமான அகலம் உள்ளவையா யில்லை என்று சொல்லிக் கொண்டு சொல்லொணாத பெருங் கூட்டமாய்ச் சென்றனராம். இவ்வளவு பெரிய சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கும் மண்ணை (பூமியை) ஒரு பெண் என்று சொல்லியுள்ளனர். பெண்களை மெல்லியர்' எனல் மரபு. அங்ங்னமெனில், இவ்வளவு பெரிய சுமையைத் தாங்கும் பூமியையும் ஒரு மெல்லியல் (மென்மைத் தன்மையுடைய பெண்) என்று கூறியவர் வல்லவர் அல்லர்- மெலிந்த தன்மை உடையவரே என்று எண்ணத் தோன்றுகிறதாம். 84 - சுந்தர சண்முகனார்
செல்லிய செலவினால் சிறிய திக்கு எனச் சொல்லிய சேனையைச் சுமந்ததே எனில்
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை ஓர் மெல்லியல் என்றவர் மெலியரே கொலாம்
தமிழ்த் தலைவன்
தமிழ்த் தலைவனாகிய அகத்தியன், இந்திரனுக்கு அஞ்சிக் கடலில் ஒளிந்து கொண்ட விருத்திராசுரனை வெளிக் கொணர்வதற்காகக் கடல் நீர் முழுவதையும் குடித்தது போல், பரதனுடன் சென்றவர்கள் வழியில் உள்ள ஆற்று நீர் முழுவதையும் பருகினார்களாம். சிவனது திருமணத்தின்போது கூட்ட மிகுதியால், வண்டி குடை சாய்வது போல் வடபுலம் தாழத் தென்புலம் உயர்ந்து விட, நிலைமையைச் சரி செய்யத் தென்புலம் சென்று சமமாக இரு பகுதிகளையும் நிலை நிறுத்திய அகத்தியன் போல், படைஞர்களும் முதலிலிருந்து இறுதி வரையும் ஒரே கூட்டமாகச் சென்றதால், நிலம் சம நிலையில் இருந்ததாம். அகத்தியன் வழியில் குறுக்கிட்ட விந்திய மலையை அடக்கிக் தாழ்த்தியதுபோல், கூட்டமும் வழியி லுள்ள மலைகளைச் சுமை மிகுதியால் கீழே அழுந்தச் செய்தனவாம். பாடல்:
அலை நெடும் புனல் அறக் குடித்தலால், புவி நிலைபெற நிலைநெறி நிறுத்தலால், நெடு மலையினை மண் உற அழுத்தலால், தமிழ்த் தலைவனை நிகர்த்தது அத்தயங்கு தானையே
என்பது பாடல். இதில் அகத்தியனைத் 'தமிழ்த் தலைவன்' எனக் கம்பர் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னம் ஓரிடத்தில், 'என்றும் உளதென் தமிழ் இயம்பி இசை கொண்டான்' என்று கூறியிருக்கும் பகுதி ஈண்டு ஒப்பு நோக்கி மகிழ்தற்கு உரியது. அயோத்தியா காண்ட ஆழ் கடல் 85
அறுபதாயிரம்
பரதனுடன் சென்ற படை அறுபதாயிரம் அக்குரோணி அளவு கொண்டதாம். அக்குரோணி = படையின் ஒரு பேரளவு. அறுபதாயிரம் என்பதைக் கம்பர், மூன்று பத்து (30) ஆயிரத்து (30x2 = 60) இரட்டி என்று பெருக்கல் கணக்கில் கூறியுள்ளார். கூட்டலின் சுருக்க எண்ணே பெருக்கல் ஆகும். பத்தை (10) ஒன்றின் கீழ் ஒன்றாக மும்முறை போட்டுக் கூட்டினால் முப்பது கிடைக்கும்; ஆயிரத்தை (1000) ஒன்றின் கீழ் ஒன்றாக முப்பது முறை போட்டுக் கூட்டினால் முப்பதாயிரம் கிடைக்கும்; முப்பது ஆயிரத்தை (30, 000) ஒன்றின் கீழ் ஒன்றாக இரண்டுமுறை போட்டுக் கூட்டினால் அறுபது ஆயிரம் (60, 000) கிடைக்கும். எனவே, கூட்டலின் சுருக்கக் குறியீடே பெருக்கல் ஆகும். பாடல்:
ஆன்றவர் உணர்த்திய அக்கு ரோணிகள்
மூன்று பத்து ஆயிரத்து இரட்டி முற்றுமே
காவிரி நாடு
கம்பர் கோசல நாட்டைக் குறிக்கும் போது, தமது தாய் நாடாகிய காவிரி நாட்டை மறந்தார் இல்லை. காவிரி நாடு போன்றதாம் கோசல நாடு. காவிரி நாடு அன்ன கழனி நாடு' என்பது பாடல் பகுதி (1).
உயிர் மருந்தா ?
பரதன் படையுடன் வருவதைப் பார்த்த குகன், இராமனைக் கொல்லத்தான் வருகிறான் எனத் தவறாக எண்ணிப் பரதனைப் பழித்து மற உரை பகர்கிறான். என் துணைவனாகிய இராமன் தவம் மேற்கொள்ள, இந்தப் பரதன் நாடாள விடுவேனா? உயிர் என்ன சாவா மருந்தா (தேவ அமிழ்தமா)? பரதனோடு போரிட்டு என் உயிரைக் கொடுத்துப் புகழ் பெறுவேன்-என்கிறான். 86 ) சுந்தர சண்முகனார்
அருந்தவம் என் துணை ஆள, இவன் புவி ஆள்வானோ
மருந்தெனின் அன்று உயிர்; வண்புகழ் கொண்டு பின் மாயேனோ?
என்பது பாடல் பகுதி. உலக வழக்கில், 'உயிர் வெல்லக் கட்டியா என்ன?’ என்று கூறும் வழக்காறு ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. மருந்து = தேவாமிழ்தம்!
தந்தை தாயர்
தான் திரும்ப முடியாது எனப் பரதனிடம் கூறும் இராமன், கேள்வி- ஞானம்- சீலம்- மேன்மை- தேவர் எல்லாம் குரவரே! அந்தக் குரவர்கள் தந்தை தாயரே! எனவே, அவர்தம் கட்டளையை யான் மீறமுடியாது எனக் கூறுகிறான்:
பரவு கேள்வியும் பழுதுஇல் ஞானமும்
விரவு சீலமும் வினையின் மேன்மையும் உரவிலோய், தொழற்கு உரிய தேவரும்
குரவரே எனப் பெரிது கோடியால்
அந்த நற்பெருங் குரவர் ஆர்எனச் சிந்தை தேர்வுறத் தெரிய நோக்கினால் தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால் எந்தை கூற வேறு எவரும் இல்லையால் (107)
இவண், "தந்தை தாய்ப் பேண்', 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்', 'தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை', 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்னும் முன்னோர் மொழிகள் ஒப்பு நோக்கத் தக்கன.
இவ்வாறு அயோத்தியா காண்டத்தில் சிறப்புறு செய்திகள் பல கூறிக் கம்பர் நம்மை மகிழ்வித்துள்ளார். கல்வியில் பெரியவராயிற்றே கம்பர்!