அயோத்தியா காண்ட ஆழ்கடல்/சில சுவையான முத்துகள்

விக்கிமூலம் இலிருந்து
13. சில சுவையான முத்துகள்

துகாறும், குறிப்பிட்ட தனித் தனித் தலைப்புகள் தொடர்பான பாடல்களைப் பார்த்தோம். இந்தப் பகுதி யில், இதுவரையும் பார்க்காத பொதுவான சுவை முத்துகள் சிலவற்றைக் காண்பாம்:

நகர் நீங்கு படலம்

தமியன் சென்றான்

வெண் சாமரையோடும் வெண்குற்றக் குடையோடும் இன்ன பிற அரசச் சிறப்புகளோடும் இராமன் முடிசூடிய கோலத்துடன் வருவான்- கண்டு மகிழலாம் என எண்ணமிட்டுக் கொண்டிருந்த கோசலை, முடியிழந்த இராமன் காடு செல்லும் பயணத்தை அறிவிக்க வந்த கோலத்தைக் கண்டு திகைத்து விட்டாள்:

குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்ற வெண் குடையும் இன்றி
இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக
மழைக் குன்றம் அனையான் மெளலி கவித்தனன் வரும் என்று என்று
தழைக்கின்ற உள்ளத் தன்னாள் முன்ஒரு தமியன் சென்றான்
(1)

கவரியும் குடையும் இன்றி இயங்கும் இராமனை முன்னால் விதி இழுத்துக் கொண்டு செல்கின்றதாம். அறம், செய்வதறியாமல் அவன் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்ததாம். முடியுடன் வருவான் என்று உள்ளம் தழைத்தாளாம் கோசலை- ஆனால், அவள்முன், கவரியோ- குடையோ- முடியோ- ஒன்றும் இன்றித் தனியனாகச் சென்றானாம். தமியன் = தனியன். கவரி மாறி மாறி மேலேற்றியும் கீழ் இறக்கியும் வீசப்படுவதைக் குறிக்கக் 'குழைக்கின்ற' என்ற சொல்லைக் கம்பர் ஆண்டிருப்பது சுவையாயுள்ளது. மழைக் குன்றம்' என்பது, இராமனின் கருமை பூத்த தோற்றத்தையும் வள்ளன்மையையும் அறிவிக்கின்றது.

அரசே அரசே ?

மயங்கிக் கிடக்கும் மன்னனைக் கண்டு கோசலை புலம்புகிறாள்: பிரியாத இராமனைப் பிரிவது எவ்வாறு? பெரியோய்! இது தகுதியா- முறையா? அடியேங்களின் எளிய நிலையை நினைத்துப் பார்க்காதது ஏன்? வறியவர் கட்குச் செல்வமாயிருந்தாயே! தமியேங்கட்கு வலிமையா யிருந்தாயே! இச் செயலை நீ உன் அறிவு கொண்டுதான் செய்தாயா? அல்லது இது யாருடைய சூழ்ச்சிச் செயலா யிருக்குமா? அரசே- அரசே! என்று புலம்பினாள்:

பிறியார் பிரிவு ஏது என்னும், பெரியோய் தகவோ என்னும்,
நெறியோ, அடியேம் நிலை நீ நினையா நினைவு ஏதுஎன்னும்,
வறியோர் தனமே என்னும், தமியேன் வலியே என்னும்,
அறிவோ வினையோ என்னும், அரசே அரசே என்னும்

(30)

இந்தப் பாடல் மிகவும் இரக்கத்தைக் கொப்புளிக் கிறது.

தழுவிக் கொள வா

தயரதன் மகனைப் பிரிந்து உயிர் துறக்க நேரிடுவதற்கு உரிய காரணமாக, முன்னர்த் தான் பெற்ற ஒரு கெடுமொழியை (சாபத்தை) விவரிக்கிறான்:

நான் யானை வேட்டைக்காகக் காடு சென்றிருந்த போது, ஒரு தடாகத்தின் கரையில் யானை நீர் அருந்தும் ஒலி கேட்டது. உடனே ஒலி வந்த பக்கம் யான் அம்பு எய்தேன். அப்போது ஒர் இளைஞனின் அலறல் கேட்டது. போய்ப் பார்த்தேன். யானை என்று எண்ணி, நேரில் பார்க்காமலேயே அவன்மேல் அம்பு எய்து விட்ட தவறு எனக்குப் புரிந்தது. நீ யாரப்பா என்று அவனைக் கேட்டேன். அவன் கூறினான்: கண்களையிழந்து அகவை முதிர்ந்துள்ள என் பெற்றோர்களை ஆங்கு ஒருபால் இருக்கச் செய்து அவர்களின் தாகத்தைத் தீர்க்கத் தண்ணிர் கொண்டு செல்ல வந்தேன். இங்கே நீ என்மேல் அம்பு எய்து விட்டாய். இதோ நான் இறக்கப் போகிறேன். என் பெற்றோர்கட்கு நீர் கொண்டு சென்று கொடுத்து என் முடிவையும் கூறுக என்று சொல்லி அவன் இறந்து விட்டான்.

பின்னர் யான் தண்ணிரோடு அவனது உடலையும் எடுத்துக் கொண்டு அவன் பெற்றோர் இருக்கும் இடத்தைத் தேடியடைந்தேன். யான் சென்ற ஒலியைக் கேட்டு, அவர்கள் தம் மகன்தான் வந்து விட்டான் என்றெண்ணிப் பின்வருமாறு அன்பான நயமொழி கூறினர்:

'தம்பி இன்னும் வரவில்லையே! தண்ணிர் கொண்டு வரச் சென்றானே! நிற்க மாட்டானே! விரைவில் வந்து விடுவானே-ஓ-ஓ- இதோ தம்பி வரும் ஒலி கேட்கிறது. இதோ அருகே வந்தே விட்டான். எங்கள் கண்ணான செல்வமே! நீர் கொணர உனக்கு இவ்வளவு நேரமா ஆயிற்று! தொலைவு மிகுதியோ கண்ணே! நீ வரக் காலம் நீட்டித்ததால், எங்கள் செல்வனாகிய நினக்கு என்ன நேர்ந்ததோ என்று பதைபதைத்துக் கொண்டிருந்தோம். நல்ல வேளையாய் வந்து விட்டாய். எங்கள் ஆருயிரே ! எங்களைத் தழுவிக் கொள்ள வா கண்ணா!' என்று அவர்கள் மகன் வந்த மகிழ்ச்சியைச் சுவைத்துக் கொண்டிருந்தனர். அப்போது யான் அவர்களிடம் நடந்தன. அனைத்தும் கூறிப் பொறுத்தருள வேண்டினேன். உங்கள் மகனுக்குப் பதிலாக யான் என்ன செய்ய வேண்டுமெனினும் செய்வேன்- என்னைப் பொறுத்தருள்க என்று கெஞ்சினேன். அவர்கள் எனக்கு அப்போது இறப்பு நேரும்படிக் கெடுமொழி (சாபம்) இடாமல், நீ இறுதியில் எங்களைப் போலவே மகனைப் பிரிந்து இறப்பாய் என்று கெடுமொழி இட்டனர். அந்தக் கெடுமொழி இப்போது பலிக்கத் தொடங்கியுள்ளது- என்று விவரித் தான். அந்தப் பெரியவர்கள், மகன் வந்து விட்டான் என அறிந்து கூறியதாக உள்ள பாடல் இவண் வருமாறு:

மைந்தன் வரவே நோக்கும் வளர் மாதவர்.பால் மகனோடு
அந்தண் புனல்கொண்டு அணுக, ஐயா இப்போ தளவாய்
வந்திங்கு அணுகாய் என்னோ வந்தது என்றே நொந்தோம்
சந்தம் கமழும் தோளாய் தழுவிக் கொள வா எனவே

(79)

என்பது பாடல். அடுத்து, செய்தியறிந்த அந்தப் பெரியவர்களின் நிலையைக் காணலாம். அவர்கள் அயர்ந்தனர். மகன்மீது விழுந்து புரண்டனர்- எங்கட்கு இப்பொழுது தான் உண்மையிலேயே விழிகள் போயின என்றனர். துன்பக் கடலுள் ஆழ்ந்தார்கள்- ஐயா ஐயா என்று அழைத்து அலறினார்கள்- எங்கள் நெஞ்சைப் பிளந்தனையே என்றனர். பொன்னுலகில் (மேலுலகில்) நீ மட்டும் சென்று வாழ்வதா? இனி நாங்கள் இங்கே இருக்க மாட்டோம்- இதோ நாங்களும் வந்து விட்டோம்- வந்து விட்டோம்- என்று புலம்பினர்:

வீழ்ந்தார் அயர்ந்தார் புரண்டார் விழிபோயிற்று இன்று என்றார்,
ஆழ்ந்தார் துன்பக் கடலுள், ஐயா ஐயா என்றார், போழ்ந்தாய் நெஞ்சை என்றார், பொன்னாடதனில் போய்நீ
வாழ்ந்தே இருப்பத் தரியேம், வந்தேம் வந்தேம் இனியே

(83)
குகப் பலடம்

என் கிளை

இராமனுடன் தானும் தொடர்ந்து காட்டில் வரப் போவதாகக் கூறிய குகனுக்கு இராமன் கூறுகிறான்: தம்பி குகனே! அயோத்தியில் உள்ள நம் சுற்றத் தாரைக் காக்க உன் தம்பி பரதன் அங்கே உள்ளான். நீ என்னுடன் வந்துவிடின், இங்கே உள்ள உன் சுற்றத்தாரைக் காக்க யார் உளர்? நீயே சொல்வாயாக. உனது சுற்றம் எனது சுற்றம் அன்றோ? அவர்கட்கு எந்தத் துன்பமும் வரக்கூடாதே. எனவே, என் சுற்றத்தாராகிய- இங்கு உள்ளவர்களை நீ இங்கே இருந்து காப்பாயாக! இது எனது அன்புக் கட்டளையாகும்:

அங்கு உளகிளை காவற்கு அமைதியின் உளன் உம்பி;
இங்குஉள கிளைகாவற்கு யார்உளர் இசையாய்நீ; உன் கிளை எனதுஅன்றோ? உறுதுயர் உறல் ஆமோ?
என்கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான்

(45)

இங்கே, இராமன் குகனை மிகவும் நெருக்கமான வனாகக் கொண்டாடியுள்ளான். பரதனை உம்பி’ (உன் தம்பி) என்றும், குகனுடைய சுற்றத்தை என் (இராமனின்) கிளை' என்றும் குகனிடம் இராமன் கூறியுள்ள அன்புரை நெஞ்சைத் தொடுகிறது.

கங்கை காண் படலம்

குகனது மற உரை

பரதன் இராமனை அழைப்பகற்காகப் படைகளுடன் கங்கையை நெருங்குகிறான். இதைக் கண்ட குகன், இராமனைக் கொல்வதற்காகப் பரதன் வருகிறான் என்று தவறாக எண்ணித் தன் படைஞரை நோக்கிப் பரதனை விடமாட்டேன் என மற உரை பகர்கிறான். இந்த மற உரை பத்துப் பாடல்களில் அமைந்துள்ளது. இந்தப் பத்துப் பாடல்களையும் இ சையின்றி வாளா படித்தாலுமே அந்த மற உணர்வு பீரிட்டுக் கொண்டு தோன்றும், அவற்றுள் இரண்டினை மட்டும் காண்பாம்:

என் ஆருயிர் நாயகனாகிய இராமன் ஆளாதபடி வஞ்சனையால் அரசு பெற்ற பெரிய அரசர் வந்து விட்டாரோ! நெருப்பு கக்கும் நம் அம்புகள் அவர்மேல் தைக்காவோ! இவர் இங்கிருந்து தப்பி இராமனை நோக்கிச் சென்றுவிடின் என்னை நாய்க் குகன்' என்று எல்லாரும் ஏசாரோ!

பரதனின் படையை வென்று, அறவோராகிய இராமரே ஆளும்படி வேடுவர் படை மீட்டுத் தந்தது என்னும் புகழை அடைய வேண்டாவா? நாடு கொடுத்த இராமற்கு, இவர்கள், காட்டில் இருக்கவும் இடம் தராமல் படையெடுத்து வருவதைப் பாரீர்:

அஞ்சன வண்ணன் என்ஆருயிர் நாயகன் ஆளாமே வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரோ செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ உஞ்சு இவர் போய்விடின் நாய்க்குகன் என்று எனை ஒதாரோ?

(14)

ஆடு கொடிப்படை சாடி அறத்தவரே ஆள
வேடு கொடுத்தது பார் எனும் இப்புகழ் மேவீரோ நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர்நாம் ஆளும் காடு கொடுக்கில ராகி எடுத்தது காணிரோ?

(22)

கம்பர், இராமனையே அவன்- இவன் என்பது போல ஆண்பால் ஒருமையில் கூறியிருக்க, இங்கே குகன் கூறுவதாக, 'மன்னரும் வந்தாரோ' எனப் பரதனைச் சிறப்புப் பன்மையால் குறிப்பிட்டிருப்பது மிகவும் சுவையானது. அதாவது- ஒ- ரொம்ப பெரியவர் இவர்- இவர் வந்து விட்டாரோ எனத் தம்மினும் தாழ்ந்தவரை ஒருவர் விடைப்பது போல, 'மன்னரும் வந்தாரோ' எனக் குகன் பரதனை விடைப்பதாக உள்ளது இந்தத் தொடர். மேவீரோ- காணிரோ என்பன மற உரைக் குறிப்பாகும். பாடல்களைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்துக் கருத்து நயத்துடன் ஒலி நயத்தையும் சுவைக்க வேண்டும்.

விம்முற்றான்

பரதனது தவக் கோலத்தைக் கண்டு தன் பழைய எண்ணத்தை மாற்றிக் கொண்டு குகன் எண்ணுகின்றான்! மரவுரி உடுத்திருக்கிறான்- உடம்பு முழுதும் அழுக்கு, படிந்துள்ளது- கலையிழந்த திங்களைப் போல் முகத்தில் நகைப்பொலிவு இல்லை- கல்லும் கனியும்படித் துன்பத்தால் கனிந்து கசங்கியுள்ளான்- என்றெல்லாம் குகன் எண்ணியபோது, அவனை அறியாமலேயே வில் அவன் கையிலிருந்து கீழே விழுந்து விட்டது. மிகவும் விம்மி விம்மிச் சோர்ந்தான்.

மேலும் குகன் கூறுகின்றான். பரதன் இராமனைப் போன்றுள்ளான்; அவன் பக்கத்தில் உள்ளவன் (சத்துருக்கனன்) இராமனுடன் சென்ற தம்பி இலக்குவனை ஒத்துள்ளான்; பரதன் தவக் கோலம் தாங்கியுள்ளான்; அவனது துன்பத்திற்கு அளவில்லை போலும் இராமன் சென்ற திசையை நோக்கித் தொழுகிறான். ஆகா! இராமன் பின் பிறந்தவர்கள் தவறு செய்வார்களா? (மாட்டார்களே)- என்று கூறுகிறான்:

வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை
நற்கலை இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை,
கற்கனியக் கணிகின்ற துயரானைக் கண்ணுற்றான்
விற்கையி னின்று இடை வீழ விம்முற்று நின்றொழிந்தான்

(29)

(கற்கனிய = கல் கனிய; விற்கை = வில்கை)

நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்; தவ வேடம் தலை நின்றான்;
துன்பம் ஒரு முடிவில்லை திசை நோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான்

(30)

இரக்கம் உண்டாக்கும் ஒலி இப்பாடல்களில் அமைந்துள்ளது.

ஆயிரம் இராமர் !

குகன் பரதனை வணங்கிப் புகழ்கிறான்: தாய் கைகேயியின் உரைப்படி தந்தை தந்த அரசைத் தீயதாகக் கருதித் துறந்து, உயர் எண்ணம் கொண்டு, இராமனை அழைத்துப் போக வந்துள்ளாய் என்பதை நினைக்கும் போது, புகழ் மிக்கவனே! ஒர் இராமர் அல்லர்- பத்து இராமர் அல்லர்- நூறு இராமர் அல்லர்- ஆயிரம் இராமர் கூட உனது பண்புக்கு ஒப்பாகார்- அம்மாடி! என்று கூறி இராமனைப் புகழ் மலையின் உச்சியில் நிறுத்தியுள்ளான்:

தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
தீவினை என்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப் போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா!

(35)

அழகிது அடிமை

இராமனுக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் இலக்குவன் உடனிருந்து செய்து கொண்டிருக்கின்றான் என்பதைக் கேட்டறிந்த பரதன் நொந்து கூறுகிறான்: இராமனுக்கு உள்ள- ஒத்த தன்மையுடைய தம்பியருள், யான் என்றும் இராமனுக்குத் துன்பம் வரும்படி யான நிலைமையை உண்டாக்கி விட்டேன். தம்பி இலக்குவனோ, என்னால் இராமனுக்கு ஏற்படும் துன்பங்களை எல்லாம் நீக்க உள்ளான்; அவனது அன்பிற்கு எல்லையே இல்லை. இந் நிலையில், இராமனுக்கு யான் செய்யக் கூடிய அடிமை (தொண்டு) மிகவும் அழகாயிருக்கிறது- என்று நொந்து கூறுகிறான்:

என்பத்தைக் கேட்ட மைந்தன், இராமனுக்கு இளையர் என்று
முன்பு ஒத்த தோற்றத்தோமில் யான் என்றும் முடிவு இலாத
துன்பத்துக்கு ஏது ஆனான்; அவன் அது துடைக்க நின்றான்;
அன்பத்துக்கு எல்லை உண்டோ! அழகிது என் அடிமை! என்றான்

(43)

எதுகைக்காக 'என்பதை' என்பது 'என்பத்தை' என்றும், 'அன்பதுக்கு' என்பது 'அன்பத்துக்கு' என்றும் 'த் மிக்கு வந்தது. ஒருவர் ஒழுங்கற்ற முறையில் இயங்கிய போது, அவரை மற்றொருவர் பார்த்து 'நீ செய்வது ரொம்ப அழகாயிருக்குதப்பா' என்று கூறி இடுப்பை ஒடிப்பது போல், பரதன் 'என் அடிமை அழகாயிருக்கிறது’ என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறான். இந்தப் பாடலில் இராமனுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைப் பரதன் வாயிலாக 'முடிவு இலாத துன்பம்’ எனக் கம்பர் பாடியுள்ளார். இது பொருள் பொதிந்த தொடராகும். இராமனுக்கு இதுவரையும் வந்த துன்பங்களைவிட இனிமேல் வரப்போகும் துன்பங்கள் பலவாகும். சீதையை இழந்தது, இலங்கை சென்று போர் புரிந்து சீதையை மீட்டது- முதலியன பெரிய துன்பங்கள் அல்லவா? இம்மட்டோடு இராமனின் துன்பங்கட்கு முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை. அயோத்திக்குச் சென்று முடிசூடிக் கொண்ட பின்பும் சீதையைக் காட்டிற்கு அனுப்பி விட்டானல்லவா? பரதனுக்குப் பட்டம் என்றதனால் இராமன் காட்டிற்கு வந்தான்- காட்டில் இருந்ததால் இராவணன் சீதையை எடுத்துச் சென்றான் - இராவணனது இலங்கையில் இருந்ததால், அயோத்தியில் சீதைக்குக் களங்கம் கற்பிக்கப்பட்டது-அதனால் இராமன் சீதையைக் காட்டிற்கு அனுப்பி விட்டான்- ஆகிய இவற்றையெல்லாம் உள்ளடக்கி 'முடிவு இலாத துன்பம்' எனக் கம்பர் கூறியிருக்கும் புலமை சுவைக்கத் தக்க தன்றோ? பரதன் பண்பும் சுவைக்கத் தக்கது.

குகனுக்கு அறிமுகம்

சுற்றத்தார் தேவரோடு தொழுகின்ற கோசலையைக் குறிப்பிட்டு இவர் யார் என்று குகன் வினவ, பரதன் அறிமுகம் செய்கிறான். இவர் தயரதனின் முதல் தேவிமுதல் மகனாகிய இராமனைப் பெற்றதால் அடைய இருந்த பெரிய அரசச் செல்வத்தை, யான் பிறந்ததால் இழந்துவிட்ட பெரிய அம்மையார்- என்றான்.

சுற்றத்தார் தேவரொடும் தொழகின்ற
கோசலையைத் தொழுது நோக்கிக்
கொற்றத்தார்க் குரிசில் இவர் ஆர்என்று
குகன் வினவக் கோக்கள் வைகும்

முற்றத்தான் முதல் தேவி, மூன்றுலகும்
ஈன்றானை முன் ஈன்றானை
பெற்றத்தால் பெறுஞ் செல்வம் யான்
பிறத்தலால் துறந்த பெரியாள் என்றான்

(64)

கோக்கள் - அரசர்கள். முற்றம்= வாயில். கோக்கள் வைகும் முற்றத்தான் = அரசர் பலர் காண்பதற்காக வாயிலில் வரிசையில் நிற்கும் பெருமைக்கு உரிய தயரதன். (இப்பொழுது மட்டும் என்ன வாழ்கிறது?- மணிக் கணக்கில் வரிசையில் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது). மூன்றுலகும் ஈந்தானை முன் ஈன்றானை = மூன்றுலகையும் ஈன்ற திருமால் முதல் மகனாக ஆன இராமன்.

குரிசில்

குகன் கோசலையின் கால்களில் அழுது கொண்டு விழ, அவனைக் குறிப்பிட்டு இவன் யார் என்று அவள் வினவப் பரதன் குகனை அறிமுகப்படுத்துகிறான்: இவன் இராமனின் துணைவன்- எனக்கும் (பரதனுக்கும்) இலக்குவனுக்கும் இளைய தம்பி சந்துருக்கனனுக்கும் மூத்தவன் (தமையன்)- குகன் என்னும் பெயர் உடைய குரிசில்- என்று பரதன் தெரிவித்தான்:

என்றலுமே அடியின்மிசை நெடிது வீழ்ந்து
அழுவானை இவன் யார் என்று
கன்று பிரி காராவின் துயர் உடைய
கொடி வினவக் கழல் கால் மைந்தன்
இன் துணைவன் இராகவனுக்கு; இலக்குவர்க்கும்
இளையவற்கும் எனக்கும் முத்தான்;
குன்றனைய திருநெடுந்தோள் குகன் என்பான்
இங்கின்ற குரிசில் என்றான்

(65)

கன்றைப் பிரிந்த காராவைப் போல் இராமனைப் பிரிந்த கோசலை துவள்கிறாள். பரதன், இராமன் தவிர்த்த மற்ற மூவர்க்கும் குகன் மூத்த தமையன் என்று குலவேற்றுமை பாராட்டாது கூறியிருப்பது உள்ளத்தைத் தொடுகிறது. குரிசில் = சிறந்த ஆண் மகன்.

ஐவிரும் ஒருவீர்

குகனைப் புரிந்து கொண்ட கோசலை, என் பிள்ளைகளே! வருந்தாதீர். இராமன் நாடு விட்டுக் காடு சென்றதும் ஒரு வகையில் நன்மை ஆயிற்று. அதாவதுஇராமன் பிரிந்ததால் குகன் எனக்கு மைந்தனாகவும் உங்கட்கெல்லாம் அண்ணனாகவும் கிடைத்தது பெரிய நன்மையன்றோ? எனவே, நீங்கள் ஐவரும் ஒருவராய்-உடல் ஐந்தெனினும் உயிர் ஒன்றாய் ஒன்றி இந்நாட்டைக் காப்பீராக- என்று கோசலை வாழ்த்தினாள்:

நைவீர் அலீர் மைந்தீர் இனித் துயரால்;
நாடு இறந்து காடு நோக்கி
மெய்வீரர் பெயர்ந்ததுவும் நலமாயிற்று
ஆம் அன்றே! விலங்கல் திண்தோள்
கைவீரக் களிறனைய காளை இவன் தன்னோடும் கலந்து நீவிர்
ஐவீரும் ஒருவீர் ஆய் அகல் இடத்தை நெடுங்
காலம் அளித்திர் என்றாள்

(66)

மெய் வீரர் - இராமர். கோசலைக்கு பிள்ளைகள் ஐவர் கிடைத்தனராம்- உடன் பிறந்தார் ஐவர் ஆயினராம். இனித் துயரால் நைவீர் அலீர் என்றதனால், குகன் துயர் தீர்க்கும் துணிவுடையவன் என்பது பெறப் படும். இராமன் அரசை விட்டுக் காடு சென்றதும் நன்மையே என்றால், அரசாட்சிக்குப் பதில் குகன் கிடைத்திருக்கிறான்- அவ்வளவு உயர்ந்தவன் குகன் என்று கொள்ளல் வேண்டும். 'கலந்து நீவிர் அகல் இடத்தை நெடுங்காலம் அளித்தீர்' என்னும் பாடல் பகுதியில் அரிய பெரிய கருத்துகள் இரண்டு உள்ளன. ஒன்று: நீங்கள் நெடுங்காலம்- அதாவது இறுதிவரை- பிரியாது கலந்து ஒன்றியிருக்க வேண்டும் என்பது; மற்றொன்று: நீங்கள் நெடுங்காலம் வாழ வேண்டும் என வாழ்த்தியது. இப்பாடலில், முதல் தொடங்கி இறுதிவரை, கம்பர், நைவீர், அலீர், மைந்தீர், நீவிர், ஐவீர், ஒருவீர் என, முன்னிலைப் பன்மைப் பொருண்மையைக் கட்டிக் காத்திருப்பது நயமாயுள்ளது.

பிரியாதானைப் பெற்றவள்

குகன் சுமித்திரையைச் சுட்டிக் காட்டி யார் என்று வினவப் பரதன் கூறுகிறான்: நேர்மையைக் காத்த மன்னனின் இளைய தேவி- இராமனுக்குப் பின் பிறந்த தம்பியும் உண்டு என்று சொல்லும்படி என்றுமே இராமனைப் பிரியாதிருக்கிற இலக்குவனைப் பெற்ற பெரியவள்- என்று அறிமுகம் செய்தான்:

அறம் தானே என்கின்ற அயல் நின்றான்
தனைநோக்கி, ஐய, அன்பின்
நிறைந்தாளை உரை என்ன, நெறி திறம்பாத்
தன் மெய்யை நிற்ப தாக்கி
இறந்தான் தன் இளந்தேவி; யாவர்க்கும் தொழுகுலமாம் இராமன் பின்பு
பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான்தனைப்
பயந்த பெரியாள் என்றான்

(67)

சுமித்திரை அன்பு நிறைந்த நெஞ்சத்துடன், அறம் என்பது 'தான்தான்' என்று சொல்லும்படி நின்றிருந் தாளாம். இங்கே, சுமித்திரையை 'அறம்தானே' என அறத்தின் உருவாகக் கூறியிருப்பதில் உள்ள பொருத்தம் என்ன? அவள் பெற்ற இலக்குவன் இராமனுடன் காடு ஏகுமுன் அவளிடம் விடைபெறச் சென்றான். அவள், * அடே பைத்தியக்காரா : எவனாவது எங்கே இருந்தால்- எங்கே போனால் உனக்கு என்ன? இராமனுடன் காட்டிற்குச் சென்று நீ ஏன் அல்லல்பட வேண்டும்? நீ உன் நலத்தைக் கவனி என்றெல்லாம் கூறினாளா? இல்லை- இல்லவேயில்லை. இலக்குமணா! நீ இராம னுடன் காடேகி அவனுக்குத் துணையாய் வேண்டுவன வற்றையெல்லாம் செய்து கொடு- தம்பி என்ற முறையில் நீ பழகலாகாது- தொண்டன் என்ற முறையிலேயே பழக வேண்டும்- இராமன் ஒரு துன்பமும் இன்றி நாடு திரும்பினால் நீயும் அவனுடன் வா! இல்லையேல் அவன், முடிவதற்கு முன் நீ முடிந்துவிடு'- என்றல்லவா சுமித்திரை சொன்னாள். உலகில் எத்தனைத் தாய்மார்கள் இவ்வாறு சொல்வர். சுமித்திரை சொன்னாளே! அதனால்தான் அவள், 'அறம் தானே' என அறத்தின் வடிவமாகப் புகழப்பட்டுள்ளாள்.

தயரதன் மெய்யை (சத்தியத்தை) நிலை நிறுத்தித் தான் இறுந்து விட்டானாம். இங்கே, பெருந்தலைச் சாத்தனார் பாடியுள்ள,

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் கிறீஇத் தாம் மாய்ந்தனரே

(165- 1, 2)


என்னும் புறநானூற்றுப் பாடலும், கார் நாற்பதில் உள்ள,

மண்ணியல் ஞாலத்து மன்னு புகழ் வேண்டிப்
பெண்ணியல் நல்லாய் பிரிந்தார்

(8)

என்னும் பாடல் பகுதியும், தஞ்சை வாணன் கோவையில் உள்ள, மன்னா உலகத்து மன்னிய சீர்த் தஞ்சை வாணன் (21)

என்னும் பாடல் பகுதியும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன. அடுத்து, இராமன் பின்பு பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் என்னும் தொடர் பொருள் பொதிந்தது. இராமனுக்குத் தம்பி இல்லை என்று யாரும் சொல்லி விடாதபடி எப்போதும் அவனை விட்டுப் பிரியாதவனாம் இலக்குவன்.

மனத்தால் அளந்தவள்

கணவனைச் சுடுகாட்டிற்கு அனுப்பி, பிள்ளையைத் துன்பத்தில் தோய விட்டு, மூத்தவனைக் காட்டிற்கு ஏகச் செய்து, திருமால் 'வாமனாவதாரம்' எடுத்து மூன்று அடியாக அளந்த உலகம் முழுவதையும் தன் மனத்தாலேயே அளந்து பெற்ற கைகேயியைக் குறிப்பிட்டு, யார் இவர் என்று குகன் கேட்கப் பரதன் கூறுகிறான்:

சுடு மயானத்திடை தன் துணை ஏகத்
    தோன்றல் துயர்க் கடலில் ஏகக்
கடுமையார் கானகத்துக் கருணை ஆர்கலி
    ஏகக் கழல்கால் மாயன்
நெடுமையால் அன்றளந்த உலகெலாம்
    தன்மனத்தே நினைந்து செய்யும்
கொடுமையால் அளந்தாளை ஆர்இவர்
    என்றுரை என்னக் குரிசில் கூறும்

(68)

திருமால் நீ மாவலி மன்னனிடம் மூன்றடி மண் கேட்டு நெடிய உருவெடுத்து உலகம் முழுவதையும் மூன்று அடியாக அளந்தாராம். ஆனால், கைகேயியோ, உலகத்தைத் தன் மனத்தாலேயே அளந்து விட்டாளாம். அதாவது- மனம் ஒரு நொடி நேரத்திற்குள் உலகம் முழுவதையும் சுற்றி விடும் அல்லவா? ஆ என்ன கொடுமை!

என்னை ஈன்றாள்

பரதன் குகனுக்குக் கைகேயியை அறிமுகப்படுத்து கிறான்: இவள் துன்பம் யாவும் தோன்றச் செய்பவள்; பழியை வளர்க்கும் செவிலித் தாய். இவள் குடலில் நெடுங்காலம் கிடந்தேன். அதனால் எனது உயிர்ச் சுமை குறைந்தது- உயிர் இல்லாத உடம்பு போன்றதாகவே என் உடல் எனக்குத் தோன்றுகிறது. இராமன் அரசு இழந்ததால் உலகம் முழுதும் துயர் உற்றிருக்கவும், இவள் ஒருத்தி மட்டுமே, துன்பத்தின் சுவடு கூடத் தெரியாத முகத்தளாய் உள்ளாள். இவள் யாரென அறிந்திலையேல், இவள்தான் என்னைப் பெற்ற கைகேயி என்று அறிந்து கொள்- என்றான்:

படர் எலாம் படைத்தாளைப் பழி வளர்க்கும்
    செவிலியைத் தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங் காலம் கிடந்தேற்கும்
    உயிர்ப் பாரம் குறைந்து தேய,
உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும்,
    உலகத்தே ஒருத்தி அன்றே,
இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல்
    இந்நின்றாள் என்னை ஈன்றாள்

(69)

படர் = துன்பம். குடர் - குடல். உடர் = உடல். குடர், உடர் என்பன, சொல்லின் கடைசியில் 'ல்' போல் நிற்பதால் கடைப்போலி' எனப்படும். 'முந்தித் தவங் கிடந்து முந்நூறு நாள் சுமந்து' என்றார் பட்டினத்தார். முந்நூறு நாளுக்குள்ளேயே குழந்தை பிறந்துவிடும் பெரும்பாலும். பரதனும், எல்லாரும் தாயின் குடலில் கிடந்த கால அளவுதான் கிடந்திருப்பான்; ஆனால் அது பாவிக்குடல் ஆனதால், நெடுங் காலம் கிடந்ததாகக் கூறியுள்ளான். அவனுக்கு முந்நூறு நாள், முந்நூறு திங்களாகவோ- முந்நூறு ஆண்டுகளாகவோ தோன்றுகிறது போலும். தாயின் குடலில் கிடக்கும்போதும் பின்னர் வெளிவரும் போதும் குழந்தைக்குத் துன்பம் இருந்திருப்பினும் பின்னால் அது தெரியாதல்லவா? இதனால்தான், மாணிக்கவாசகர், 'யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்- இறப்பதனுக்கு என் கடவேன்' எனப் பிறப்பு தொடர்பாக அஞ்சவில்லை- இறக்கும்போது என்னபாடு படுவேனோ- என நோய் நொடியுடன் கிடந்து இறப்பதற்கு அஞ்சியுள்ளார். பரதனை நோக்கினால், தாயின் குடலில் கிடந்து தேய்ந்ததாக அதாவது பிறந்ததற்கும் வருந்துவதாகக் கூறியுள்ளான். கைகேயியைப் பற்றி (மூன்றரை அடிகளில்) கூறியும், அவள் இன்னாள் என்று உனக்குத் தெரியவில்லையென்றால், குகனே! யானே கூறுகின்றேன்- அவள்தான் என்னைப் பெற்றவள் என்று தெரிவிக்கிறான்.

திருவடி சூட்டு படலம்

தந்தை தயரதன் இறந்து விட்டான் என்பதைக் கேட்டதும் இராமன் புலம்புகிறான்:

நந்தா விளக்கனைய நாயகனே நானிலத்தோர்
தந்தாய் தனி அறத்தின் தாயே தயாநிதியே
எந்தாய் இகல் வேந்தர் ஏறே இறந்தனையே
அந்தோ இனி வாய்மைக்கு ஆர் உளரோ மற்று என்றான்

(60).

இந்தப் பாடலுக்கு விளக்கம் வேண்டா. படித்துப் படிதது அழுகைச் சுவையை (அவலச் சுவையை) நுகரலாம்.

உயிர்க்கு இரங்கலா?

தயரதன் இறந்தமையை அறிந்து புலம்பிய இராம அதகு வசிட்டன் ஆறுதல் கூறுகின்றான்: ஐம்பொறிகள், ஐம்புலன்கள் ஆகியவற்றிற்கு முதற்பொருளாயுள்ள மண் முதலிய ஐந்து பூதங்களுமே ஒரு காலத்தில் அழிந்து விடும். அங்ஙனம் இருக்க, தயரதன் உயிர் போனதற்காக நீ வருந்துதல் ஏன்?- என்று வினவுகின்றான்:

கண்முதல் காட்சிய கரைஇல் நீளத்த
உண்முதல் பொருட்கெலாம் ஊற்றம் ஆவன மண்முதல் பூதங்கள் மாயும் என்றபோது
எண்முதல் உயிர்க்குநீ இரங்கல் வேண்டுமோ?

(74)

இந்தப் பாடலில் அரிய பெரிய கருத்துகள் அடங்கி யுள்ளன. மாப்பேருலகத்தில் (universe- பிரபஞ்சத்தில்) உள்ளவை விண், காற்று, தீ, நீர், மண் என்னும் ஐந்து மூலப் பொருள்களே. இந்த ஐந்தின் விரிவே மாப் பேருலகம். உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் இந்த ஐந்தின் திரிபுகளே. உயிர்களின் உடம்பு, இந்த ஐந்து பூதங்களின் (மூலப் பொருள்களின்) திரிபாக்கமே. வட மொழியில் 'பஞ்ச பூத பரிணாம சரீரம்' என்பர். இதனைத் தமிழில் ஐம்பூதங்கள் திரிபாக்கம்' என்று கூறலாம். பரிணாமம் =திரிந்து மற்றொன்றாக ஆவது.

நம் உடம்பில் மெய், வாய், கண், முக்கு, செவி என்னும் அறிவுப் பொறிகள் ஐந்து உள்ளன. இவற்றை வட மொழியில் 'ஞானேந்திரியம்' என்பர். மற்றும் வாக்கு (பேசும் உறுப்பு) கை, கால், சிறுநீர் கழிக்கும் உறுப்பு, மலம் கழிக்கும் உறுப்பு என்னும் ஐந்து செயல் பொறிகள் உள்ளன. இவற்றை வடமொழியில் 'கண்மேந்திரியங்கள்' என்பர். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் (மணம்) என்னும் ஐந்தும் ஐம்புலன்கள் எனப்படும். விண் என்னும் பூதத்தின் வாயிலாகச் செவி என்னும் பொறி, ஓசை என்னும் புலனை அறிகிறது- வாக்கு (ஒலி உறுப்பு) பேசுகிறது. 'வானொலி' என்னும் பெயர் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. காற்று என்னும் பூதத்தின் உதவியால் மெய் (உடம்பு முழுவதும்) என்னும் அறிவுப் பொறி, (தொடு உணர்வு) ஊறு என்னும் புலனை அறிகிறது- கால் என்னும் செயல் பொறி நடமாடுகிறது. காற்று அடிக்கும் திசையில் நடப்பது எளிதல்லவா? தீ என்னும் பூதத்தின் உதவியால், கண் என்னும் அறிவுப் பொறி ஒளி என்னும் புலனை அறிகிறது- கை என்னும் செயல் பொறி பல செயல்களைச் செய்கிறது. அவருக்குச் சூடு பிடித்து விட்டது- அதனால்தான் இவ்வளவு வேலை செய்கிறார் என்னும் உலக வழக்கு ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. நீர் என்னும் பூதத்தின் உதவியால், வாய் (நாக்கு) என்னும் அறிவுப் பொறி சுவை என்னும் புலனை அறிகிறது- மலம் கழிக்கும் உறுப்பு என்னும் செயல் பொறி மலம் கழிக்கிறது. வாயில் ஊறும் நீருடன் சென்றாலேயே உணவு சுவைக்கும்- எளிதில் செரிக்கும். மலச்சிக்கல் இருந்தால் நிறைய நீர் குடிப்பது நல்லது. மண் என்னும் பூதத்தின் உதவியால், மூக்கு என்னும் செயல் பொறி நாற்றம் (மணம்) என்னும் புலனை அறிகிறது- ஆகாயப் பூவுக்கு மணம் இல்லை' என்பது கருதத்தக்கது- பால் உறுப்பு என்னும் செயல் பொறி விந்து விடுகின்றது- உடம்பில் நகம், மயிர் முளைப்பது மண் தன்மையினாலேயாம்.

எனவே, ஐம்பூதங்களால் ஆன உடம்பு, அந்த ஐம்பூதங்களின் உதவியாலேயே இயங்குகின்றது என்பது புலனாகும். எல்லாமாக உள்ள இந்த ஐந்து மூலப் பொருள்களும் உலகின் ஊழிக் காலத்தில் அழிந்து விடுமாம்.

எனவே, அகவை முதிர்ந்த தயரதனுடைய உயிர் பிரிந்து விட்டதற்காக நீ வருந்தலாமா?- என்று கூறி வசிட்டன் இராமனைத் தேற்றுகிறான்.

பரதனும் பாதுகையும்

இராமனிடமிருந்து பாதுகையைப் பெற்றுத் தலையில் சுமந்து கொண்டு சென்ற பரதன் நேரே அயோத்திக்குச் செல்லவில்லை. இரவு முழுவதும் தூங்காமல், அயோத்திக்குப் புறத்தே உள்ள நந்தியம் பதியை அடைந்தான். அங்கே பாதுகையையே ஆட்சித் தலைவனாக எண்ணி வைத்து இயங்கினான். இரவு பகல் தூக்கம் இல்லை. பொறி- புலன் உணர்வுகளையெல்லாம் அடக்கிக் காலத்தை ஒட்டினான்.

பாதுகம் தலைக் கொடு பரதன் பைம்புனல்
மோது கங்கையின் கரை கடந்து முந்தினான் போதுகும் கடிபொழில் அயோத்தி புக்கிலன்
ஒது கங்குலின் நெடிது உறக்கம் நீங்கினான்

(139)

நந்தியம் பதியிடை நாதன் பாதுகம்
செந்தனிக் கோல்முறை செலுத்தச் சிந்தையான் இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான் அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்

(140)

இராமனது செலவு

இங்கிருந்தால் அன்பினால் மக்கள் நலிவார்கள் என்று எண்ணி, இராமன் தன் தம்பி இலக்குவனுடனும் சீதையுடனும் மேலும் தென்திசை நோக்கிச் செல்லலானான்:

குன்றினில் இருந்தனன் என்னும் கொள்கையால் நின்றவர் நலிவரால் நேயத்தால் எனா
தன்துணைத் தம்பியும் தானும் தையலும் தென்திசை நெறியினைச் சேறல் மேயினான்

(141)

இந்தப் பாடலோடு கம்பராமாயணம்-அயோத்தியா காண்டம் முற்றுப் பெறுகிறது. அயோத்தியா காண்டம் என்னும் ஆழ்கடலில் உள்ள முத்துகள் கம்பன் தந்தவை. கம்பனுக்கு நன்றி. கம்பன் புகழ் வாழ்க. கன்னித் தமிழ் வாழ்க. வணக்கம்.