உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்தியா காண்ட ஆழ்கடல்/புகு வாயில்

விக்கிமூலம் இலிருந்து
புகு வாயில்


ம்ப ராமாயணத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு பிரிவுகள் உள்ளன. இந்தக் காண்டப் பெயர்கள் வால்மீகி தம் இராமாயண நூலில் வைத்த பெயர்களே. இந்த ஆறனுள் இங்கே எடுத்துக் கொண்டது அயோத்தியா காண்டம் மட்டுமாகும்.

பால காண்டம் பருவத்தால் பெற்ற பெயர்; அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம் ஆகியவை செயல் நிகழ்ந்த இடத்தால் பெற்ற பெயர்களாகும். சுந்தர காண்டம் செயல் நிகழ்த்தியவர் பெயரால் பெற்ற பெயராகும். யுத்த காண்டம் செயலால் பெற்ற பெயராகும். அயோத்தியா காண்டத்தில், அயோத்தியிலும் அதன் அண்மைக் காட்டிலும் நடந்த நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன—

உட்பிரிவு

வால்மீகி தம் காண்டங்களின் உட்பிரிவுகட்குச் சருக்கம் என்னும் பெயர் ஈந்துள்ளார்; கம்பர் தம் காண்டங்களின் உட்பிரிவுகட்குப் படலம் என்னும் பெயர் தந்துள்ளார். கம்பரின் அயோத்தியா காண்டத்தின் உட்பிரிவுகளாகிய பதினான்கு படலங்களின் பெயர்கள் வருமாறு:

1. மந்திரப் படலம்
2. மந்தரை சூழ்ச்சிப் படலம்
3. கைகேயி சூழ்வினைப் படலம்
4. நகர் நீங்கு படலம்
5. சுமந்திரன் மீட்சிப் படலம்
6. தயரதன் மோட்சப் படலம்
7. கங்கைப் படலம்
8. குகப் படலம்
9. வனம்புகு படலம்
10. சித்திர கூடப் படலம்
11. பள்ளி படைப் படலம்
12. ஆறு செல் படலம்
13. கங்கை காண் படலம்
14. திருவடி சூட்டு படலம்.

இனி, இப்படலங்களில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளின் சுருக்க அறிமுகம் வருமாறு:—

1. மந்திரப் படலம்: தயரதன், ஆசான் வசிட்டர், அமைச்சர்கள் ஆகியோருடன், இராமனுக்குப் பட்டம் கட்டுவது பற்றிச் சூழ்ந்த மந்திராலோசனை பற்றியது.

2. மந்தரை சூழ்ச்சிப் படலம்: இராமனுக்கு முடி சூட்டாதபடி, மந்தரை என்னும் பெயருடைய கூனி, கைகேயியிடம் சென்று சூழ்ச்சியுரைகூறிக் கைகேயி மனம் மாறும்படிச் செய்தது பற்றியது.

3. கைகேயி தயரதனிடம் இரண்டு வரங்கள் பெற்று, இராமனைக் காட்டிற்குச் செலுத்தும்படியும், பரதனுக்குப் பட்டம் கட்டும்படியும் சூழ்ச்சியினால் தன் எண்ணத்தை முடித்துக் கொண்டது பற்றியது கைகேயி சூழ்வினைப் படலம்.

4. நகர் நீங்கு படலம்: கைகேயி பெற்ற வரங்களின் படி, இராமன் அயோத்தி நகரைவிட்டு நீங்கிக் காடு ஏகியது பற்றியது.

5. சுமந்திரன் மீட்சிப் படலம்: தயரதன் கட்டளைப் படி, சுமந்திரன் காடேகிய இராமனைக் கண்டு நாட்டிற்குத் திரும்புமாறு வேண்டிக் கொண்டும் அவன் திரும்பாமையால் இவன் பயனின்றித் திரும்பி வந்ததைப் பற்றியது.

6. தயரதன் மோட்சப் படலம்: இராமன் நாடு திரும்பவில்லை என்பதை அறிந்ததும் தயரதன் உயிர் நீத்து வீடு பேறு அடைந்ததைப் பற்றியது.

7. கங்கைப் படலம்: இராமன் மனைவியுடனும் இலக்குவனுடனும் கங்கைக் கரையை அடைதல், முனிவர் கள் இவர்களை வரவேற்றுப் போற்றி விருந்தளித்தல்—ஆகியவை பற்றியது.

 8. குகப் படலம்: கங்கைக் கரையில் குகன் வந்து இராமனையும் மற்றவரையும் கங்கையைக் கடக்கச் செய்து தன்னுடனேயே இருக்குமாறு வேண்டிக் கொள்ளுதல், இராமன் குகனிடம் உறவு பாராட்டி ஆறுதல் கூறி மேற் செல்லுதல் ஆகியவை பற்றியது.

9. மூவரும் காட்டிற்குள் சென்று முனிவர்களின் விருந்தோம்பலை வழியெல்லாம் பெற்று சித்திர கூடம் நோக்கிச் செல்லுதல் பற்றியது வனம் புகு படலம்.

10. சித்திர கூடப் படலம்: காட்டில் சித்திர கூடம் என்னும் இடத்தில் குடில் அமைத்துக் கொண்டு மூவரும் தங்கியிருத்தலைப் பற்றியது.

11. பள்ளி படைப் படலம்: பரதன் கேகய நாட்டி லிருந்து அயோத்திக்கு வந்து நடந்தன யாவும் அறிதல்தந்தையின் இறப்புக்கும் தமையனின் பிரிவுக்கும் வருந்துதல்- தாயைக் கண்டித்தல்- தயரதன் உடலை ஈமப் படுக்கையில் (பள்ளியில்) வைத்து எரியூட்டுதல்பத்து நாட்கள் ஈமக் கடன்கள் (இறுதிச் சடங்குகள்) நடத்துதல்- ஆகியவை பற்றியது. இறந்தவரின் நினைவு கூடத்திற்குப் பள்ளி என்னும் பெயர் உண்டு.

12. ஆறு செல் படலம்: பரதன் தான் முடிசூடிக் கொள்வதற்கு உடன்படாமல், இராமனை அழைத்து வரக் காடு நோக்கி உறவினருடனும் படைகளுடனும் வழி கடத்தல் பற்றியது.

13. கங்கை காண் படலம்: பரதன் தன்னுடன் வந்தவர்களோடு கங்கைக் கரையை அடைதல்- குகனது  தொடர்பு- கங்கையைக் கடத்தல்- ஆகிய வை பற்றியது. - 14. திருவடி சூட்டு படலம்: பரதன் இராமனை நெருங்குதல்- இலக்குவன் சினத்தல்- முடிசூடிக் கொள்ளுமாறு இராமனைப் பரதன் அழைத்தல் இராமன் உடன்படாமை- பரதன் இராமனின் திருவடியை (பாதுகையை- மிதியடியை) வேண்டிப் பெற்றுத் தன் முடிமேல் சூடிக் கொண்டு அயோத்திக்கு மீளுதல்- ஆகியவை பற்றியது.

வேறுபாடுகள்

கம்பராமாயணத்தில் சில படலங்கட்கு வேறு பெயர்கள் தரல், ஒரு பதிப்பாளர் ஒரு படலத்தின் இறுதியில் அமைத்திருக்கும் பாடல்களுள் சிலவற்றை வேறு பதிப்பாளர் அடுத்த படலத்தின் தொடக்கத்தில் அமைத்தல், ஒரு பதிப்பாளர் ஒரு படலத்தின் தொடக்கத்தில் அமைத்திருக்கும் பாடல்களுள் சிலவற்றை வேறு பதிப்பாளர் முன் படலத்தின் இறுதியில் அமைத்தல், பாடல்களிலே சில தொடர்களும் சில சொற்களும் பதிப்புக்குப் பதிப்பு வேறுபட்டிருத்தல், பாடல்களின் எண்ணிக்கையில் ஏற்றத் தாழ்வு உள்ளமை, சில பதிப்புகளில் இல்லாத பாடல்கள் வேறு பதிப்புகளுள் உள்ளமை முதலிய பல வேறுபாடுகள் கம்ப ராமாயணப் பதிப்பு களில் உள்ளன. அயோத்தியா காண்டமும் இதற்கு விதி விலக்கு அன்று.

கம்ப ராமாயணம் பதினாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் உடைமையால், இடத்திற்கு இடம்- ஆளுக்கு ஆள் சுவடிகளைப் பெயர்த்து எழுதும் போது இவ்வா றெல்லாம் வேறுபடுவதற்கு வாய்ப்பு உண்டு. இடைச் செருகலாகச் சில பாடல்கள் சிலரால் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் ஒரு கருத்து கூறப்படுகிறது. இருநூறுக்கும் மேற்பட்ட சுவடிகள் இருத்தலின், சுவடிக்குச் சுவடி குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவையெல்லாம், கம்ப ராமாயணம் ஒரு காலத்தில் நாடு முழுவதும் பரவலாகப் பயிலப்பட்டது என்னும் உண்மையை அறிவிக்கின்றன.

கம்பரும் வால்மீகியும்

வால்மீகி ராமாயணத்தின் வழி நூலே கம்ப ராமாயணம். எனினும், கம்பர் வால்மீகியினும் சிற்சில வேறுபாடுகள் கொண்டுள்ளார். அடிப்படையான பெரிய வேறுபாடு, வால்மீகி இராமனையும் சீதையையும் மக்களாகக் கொண்டிருக்க, கம்பரோ இருவரையும் திருமால்- திருமகள் ஆகியோரின் தெய்வப் பிறவிகளாகக் கொண்டு அதற்கு ஏற்பக் கதையை அமைத்துக்கொண்டு சென்றுள்ளமையாகும். இன்னொரு வேறுபாடு காண்பாம்: இராவணன் சீதையை உடலைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போனதாக வால்மீகி அறிவித்திருக்க, கம்பரோ, சீதை இருந்த குடிலை அடியோடு அகழ்ந்து சீதையைத் தீண்டாமல் குடிலோடு தூக்கிக் கொண்டு சென்றதாகக் கூறியுள்ளார்.

கதையின் இடையிடையே இருவர்க்கும் சிறுசிறு மாறுபாடுகள் பற்பல உண்டு. அவர் சொன்னதை இவர் விட்டிருப்பார்- அவர் சொல்லாததை இவர் சொல்லி இருப்பார். புனைவுகளில் இருவரிடையே ஏற்றத்  தாழவுகள் இருக்கும். இனி, அயோத்தியா காண்டத்தில் உள்ள வேறுபாடுகளுள் ஒரு சிலவற்றைக் காண்பாம்:

தயரதன் இராமனுக்கு இளவரசுப் பட்டம் சூட்ட எண்ணியதாகவே வான்மீகி கூறியிருக்க, கம்பரோ, முழு முடி சூட்ட விரும்பியதாக் கூறியுள்ளார்.

இராமனுக்கு முடி சூட்டைப் பற்றி அறிவிக்கும் வேளையில், தயரதனே இராமனுக்கு வேண்டிய அறநெறியைக் கூறியதாக வான்மீகி கூறியுள்ளார். வசிட்டர் அறநெறி கூறியதாகக் கம்பர் உரைத்துள்ளார்.

முடி சூட்டுவது தொடர்பாக, இராமனும் சீதையும் திருமாலின் கோயிலுக்குச் சென்றதாகக் கூறியிருப்பது வான்மீகம். இராமன் மட்டும் சென்றதாக அறிவித்திருப்பது கம்பனுடையது.

இராமன் இளம் பருவத்தில் கூனியின் முதுகில் வில்லிலிருந்து அம்பாக மண் உருண்டைகளை அடித்தான் என்பதாகக் கம்பர் பாடல் அறிவிக்கிறது. வால்மீகி இதை அறவே விட்டுவிட்டார்.

சுமந்திரன் தயரதனிடத்திலும் கைகேயினிடத்திலும் போய் வந்ததைப் பற்றிய செய்திகள், ஒருவர்க்கு ஒருவர் உரையாடிய கருத்துக்கள் முதலிய இரு நூல்களிலும் வேறு படுகின்றன.

இராமன் சீதையை நோக்கி, எனக்கு முடி சூட்டப் போகின்றனர்- நீ அரசி ஆகப் போகிறாய் என்று கூறிய தாக வால்மீகி எழுதியுள்ளார். கம்பர் இவ்வாறு கூறவில்லை.

இராமன்- கைகேயி ஆகியோரிடையே நடந்த உரையாடல்களிலும் வேறுபாடு உண்டு.

கோசலையிடம் இராமன், இலக்குவன் ஆகிய இருவரும் சென்றதாகவும், இராமன் காடு செல்லப் போவதைக் கோசலை முன்பே தெரிந்து அது பற்றி உரையாடியதாகவும் வான்மீகி அறிவித்துள்ளார். இராமன் மட்டும் சென்றதாகவும் இராமன் அறிவித்த பின்புதான் அவன் காடேகப் போவது கோசலைக்குத் தெரிந்ததாகவும் கம்பர் தெரிவித்துள்ளார்.

தயரதனுக்கு மூன்று பட்டத்தரசியர் இருப்பதோடு மேலும் மனைவியர் முந்நூற்றைம்பதின்மர் இருந்தனர் என வால்மீகி கூறியிருக்க, கம்பரோ, மனைவியர் அறுபதினாயிரவர் இருந்ததாகத் தாராளக் கணக்கு தந்துள்ளார்.

வனம் சென்றபோது சீதை மரஉரி தரித்ததாக வான்மீகி சொல்லவில்லை; சீதையும் மரஉரி தரித்ததாகக் கம்பர் சொல்லியுள்ளார்.

இவ்வாறு இன்னும் பல வேறுபாடுகள் கூறிக் கொண்டு போகலாம். ஒரு கதையைப் பலர் எழுதும் போது இவ்வாறு சில அல்லது பல வேறுபாடுகள் எழுவது இயற்கை.

ஆழ்கடல் முத்துகள்

அயோத்தியா காண்ட ஆழ்கடலுள் எண்ணிறந்த ஆணி முத்துகள் உள்ளன. இனி, அவற்றுள் சிலவற்றைக் கம்பர் தந்துள்ளாங்கு அறிந்து அணிந்து மகிழலாம்.