உள்ளடக்கத்துக்குச் செல்

அய்யன் திருவள்ளுவர்/தமிழ் அஞ்சலி

விக்கிமூலம் இலிருந்து

அய்யன் திருவள்ளுவரில்
தமிழஞ்சலி

முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன்

உளம் நினை மணம் தரு மலர் (மனோரஞ்சித மலர்) என்ற ஒன்று உண்டு. அதை எடுத்துக் கொண்டு, நாம் எந்த மலரின் மனத்தை விரும்புகிறோமோ அம் மணத்தை அது கொடுக்குமாம். மல்லிகையை நினைத்தால் மல்லிகை மணம், உரோசாவை நினைத்தால் உரோசா மணம், என எல்லா நறுமண மலர்களின் மனத்தையும் அது நல்குமாம். பல்வேறு நறுமண மலர்களின் கலவை மணமாக, மிகச் சிறந்த மணமாக அது விளங்குகிறது என்பதை, இவ்வாறு பெருமைபடக் குறிப்பிடுவர்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு மனோரஞ்சித மலர். ஆற்றல்மிகு பேச்சாளர், அழகு தமிழ்க் கட்டுரையாளர், சிந்தை பள்ளும் சிறுகதை எழுத்தாளர், புகழ்மிக்க புதின ஆசிரியர், நயமிகு நாடக ஆசிரியர், அறிவு நலஞ்சான்ற அரசியலாளர், பார் போற்றும் பண்பாளர்- என, யார் எந்நிலையில் நோக்கினாலும் அவ்வந்நிலையில் மிக உயர்ந்தவராகக் காட்சியளிப்பவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

புலவர் என்.வி. கலைமணி அவர்கள், அண்ணாவைக் காலமாக, ஞாயிறாக, நிலவாக, வானவில்லாக, அருவியாக, தென்றலாக என இயற்கைப் பொருள்களாகக் கண்டு, அவ்வியற்கைப் பொருள்களின் தன்மைகளை அண்ணா பெற்றிருக்கும் பாங்கினைக் கூறுகின்ற புகழ் மொழிகளே 'தமிழஞ்சலி என்னும் இந்நூலாக உருவாகியுள்ளது.

எழுதுவோர் பல வகையினர். ஒரே பொருளை நோக்குவோர் தம் கருத்துக்கு ஏற்ப வெவ்வேறு வகையிலே அதனை எழுதுவர் என்பதை அண்ணா, ஒர் அருமையான எடுத்துக் காட்டுத் தந்து விளக்குகிறார்."குதிரை என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை எழுதச்சொன்னால், ஒருவர், 'பியூசிபாலசு' காலம் முதற்கொண்டே குதிரைகள் சிறப்படைந்தன" என்று எழுதுவார்.அவர், அலெக்சாந்தர் என்னும் கிரேக்க வீரன் ஏறி வந்த குதிரையின் பெயரைத் தெரிந்து கொண்டவர். - மேனாட்டு வரலாற்று நிகழ்ச்சிகளில் அறிவு படைத்தவராக இருப்பார். நீலவேணியை நினைவுக்குக் கொண்டுவருவார் இராசா தேசிங்கு கதை தெரிந்த எழுத்தாளர். மாணிக்க வாசகரின் மந்திரி பதவி போகவும், இடர் மிகவும், இறைவன் அருள் வந்து சேரவும் குதிரைகளே காரணம்!. மணிவாசகத்தை நாம் பெற குதிரைகளன்றோ காரணம். குதிரையே உன்னைக் கும்பிடுகிறேன் என்று முடிப்பார் ஓர் எழுத்தாளர்.

“தாலி அறுக்கும் பிசாசே! தந்தைக்கும் தனயனுக்கும் பகை மூட்டும் சனியனே! சூது சூழ்ச்சியிலே மக்களைச் சிக்க வைக்கும் கருவியே! உன்னால் கெட்டன. குடும்பங்கள். குதிரையே கோரத்தின் சொரூபமே! மாயத்தின் கருவியே! பாதகத்தின் பங்காளியே! உன் குலம் அழிக! கூண்டோடு அழிக! பூண்டின்றி அழிக! என்று எழுதுவார் ஒருவர் - கிண்டி குதிரைப் பந்தயத்தில் நேர்ந்த கொதிப்பினால் - கோபத்தினால் ! -இப்படிச் சுட்டிக் காட்டுகிறார் அண்ணா.

ஒரு பொருளைப் பற்றி வெவ்வேறு மனநிலையிலிருப்பவர்கள் எழுதினால், எண்ண ஒட்டங்கள் இவ்வாறு மாறுபட்டு வருவது இயல்பு.

புலவர் கலைமணி அவர்களோ, அண்ணாவைப் பற்றி ஒரே மன ஓட்டத்தில் - அண்ணாவின் உள்ளத்தையே பெற்று இந்நூலைப் படைத்திருப்பதால், இந்நூலே அண்ணா. அண்ணாவே இந்நூல் என அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

இதைக் கலைமணியே குறிப்பிட்டிருக்கக் காண்கிறோம். "அண்ணாவை உடன்பிறந்த பாசத்தால் உந்தப்பட்டோர் - அண்ணன் என்றனர். கல்விப் பசி கொண்ட ஏழைகள்- அறிஞர் என்று கழறினர். கவிஞர்கள் அவரைக் கவிதைக்கு மூலம் என்றனர். அத்தகைய அண்ணனை நான் என்ன என்று அழைப்பது? எனக் கேட்டு, எனக்கு எல்லாமுமாக இருப்பது நீயேதான் அண்ணா” என நெகிழ்ந்து கூறுகிறார்.

நூலுள், அண்ணா பற்றிப் பல தலைப்புகள்! தந்துள்ள தலைப்புகளுக்கு ஏற்ப மிகப் பொருத்தமான அண்ணாவின் குணங்களை, ஆசிரியர் மிக அருமையாக இணைத்துக் காட்டுகிறார்.

நண்பர் கலைமணி,"எனது இணைப்பைச் சரியாகச் சொல்லுகிறேனா என்று என்னை நானே எண்ணிப் பார்க்கிறேன் - அஞ்சுகிறேன்” என்கிறார்!

அன்பர் கலைமணிக்கு இந்த அச்சம் வேண்டியதே இல்லை. இதைவிட யாரும் பொருத்தமாகச் செய்ய முடியாது என்ற அளவில் இணைப்பு போற்றத்தக்கதாக - ஏற்கத்தக்கதாக அமைந்திருக்கிறது.

"அண்ணா ஒரு காலம்” என எழுத முற்படும் கலைமணி, "அண்ணாவினுடைய குரல் மனித சமுதாயத்தற்காகக் கதறி அழுத குரல், காலத்தால் அது விழுங்கப்படுவதில்லை. ஆகவே, என்றும் காலமாக நிலைப்பார்” என அருமையாகப் பொருத்தி விளக்கிச் சொல்லுகிறார்.

அண்ணாவை நீர் வீழ்ச்சியாகக் கூறும்போது, "இது அறிவு மலையிலிருந்து விழுகின்ற நீர்வீழ்ச்சி! அதனுடைய இரைச்சல் எல்லா தேசத்தையும் செவிமடுக்கச் செய்தது” என அருமையாக இணைக்கிறார்.

நீர் வீழ்ச்சி என்று வெறுமனே சொல்வதோடு விட்டு விடாமல், நீர் வீழ்ச்சியின் ஒவ்வொரு செயலையும் அண்ணாவின் செயலோடு ஒப்பிட்டுக் காட்டி ஒன்று படுத்துகிறார்.

நீர்வீழ்ச்சி மேலே இருந்து கீழே விழும்போது, அடியில் சொரசொரப்பாக உள்ள பாறையை வழுவழுப்பாக்கி விடுகிறது. அதுபோல்தான் அண்ணாவும், "அரசியலில் முரடர்களை மிருதுவாக்கி, வழவழப்பாக்கிப் பக்குவப்படுத்தினார்' என அருவியின் பண்பை அண்ணாமேல் ஏற்றிச் சொல்கிறார்.

வானவில்லைக் கலைமணி காண்கிறார்.அதன் ஏழுவணங்ணங்கள் அவரைக் கவருகின்றன.அந்த ஏழு வண்ணங்களோடு அண்ணாவை ஒப்பிட்டு அவரைக் காலம் எழுதிய ஒரு வானவில்லாகக் கண்டு மகிழ்கிறார்.

வானவில்லில் ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு மலரை அல்லது தாவரத்தைச் சுட்டி, அவற்றின் இயல்புகளையெல்லாம் ஒரு தாவரவியல் அறிஞர் சொல்வதுபோலச் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கதாக இருக்கிறது.

'மாதவி' ஒரு கொடி (குருக்கத்திக் கொடி) அதைச் சொல்ல முற்பட்டதும், அதைப் பயிரிடவேண்டிய முறை, அதன் பூ இலை அமைப்பு, இலக்கியத்தில் அது பெற்றுள்ள இடம், ஆகிய அனைத்தையும் கூறிவிடுகிறார்.

“மாதவிக் கொடியை கன்னட மொழியிலும் மாதவி என்றே அழைப்பர். ஒரிய மொழியில் அதனை 'மாதபி' என்றும், மாதபிளதோ என்றும் கூறுவர்

தாவர நூலறிஞர்கள்.அதனை ஆங்கிலத்தில், மாட பிளோட்டா என்று அழைக்கின்றனர்' என அரிய பல செய்திகளை இடையிடையே சொல்லி நம்மை வியக்க வைக்கிறார் நண்பர் கலைமணி.

வேங்கைப்பூ என்றதும்-"மறத்திற்கு இலக்கணமான புவியின் பெயரை ஒரு மரத்திற்குச் சூட்டி, மரத்தின் மாண்பை மேதினிக்குப் பரப்பிய நாடு தமிழ்நாடுதானே தம்பி” என்கிறார். மரம், மறம் ஆகிய இரு சொற்களும் இத்தொடரில் ஒரு தனி அழகையே பெறுகிறது எனலாம்.

"அண்ணாவின் தலைமையிலே துவங்கிய இயக்கம், வீரம் விளைந்த தமிழ் நிலத்தில் தோன்றியது என்பதை மட்டும் மறந்து விடாதே தம்பி! அவரது கட்சி ஒன்றுதானே வேங்கையைப் போல் வீரம் பொருந்திய பாசறையாக விளங்கியது. அந்தக் கட்சியின் வீரத்திருஉருவமாக - தன்னேரிலாத வழிகாட்டியாக - அண்ணா காட்சியளித்தா” என அண்ணாவை வேங்கைப் பூவாகவும், கட்சியைவேங்கை மரமாகவும் கலைமணி சொல்லும் அழகே அழகு!

'அண்ணா ஒரு கடல்' - கட்டுரைத் தலைப்பு கடலைப் பற்றிய அரிய பல செய்திகள் இதில் அலை மோதுகின்றன. கடலடியில் கடற்செடிகள். அவை மீன்களுக்கு உணவாகின்றன. அச்செடியின் தண்டைப் பிளந்து பார்த்தால் உள்ளே வெதவெதப்பு எப்படி வந்தது?

அச்செடியின் உடல் பூராவும் இருக்கின்ற 'செல்' என்ற உயிர்ப்பு சக்தி, சூரிய ஒளியால் சூடான நீரில் இருக்கின்ற வெதவெதப்பை உறிஞ்சிக் கொள்ளுகிறது.

இவ்வளவு விபரங்களைத் தருகின்ற கலைமணி, இறுதியில் அறிஞர் அண்ணா அவர்கள் நீரால் சூழப்பட்ட கடற்செடியைப் போல, பாதகம் விளைவிக்கின்றவர்களுக்கு மத்தியில் இருக்கின்றார். இந்நாட்டிலுள்ள பல கோடி ஏழை மக்களின் துன்பச் சூட்டை நன்குணர்ந்த அறிஞர் அண்ணா அவர்கள், அந்தத் துன்பத்தை மட்டும் தான் உறிஞ்சி வைத்துக் கொண்டிருக் கிறார்.

"கடல் செடி, நீரின் சூட்டை உறிஞ்சுவதற்கும், தன்னையே, மீனுக்குத் தீனியாக மாற்றிக் கொள்வதற்கும் உருவானதைப் போல, அறிஞர் அண்ணா அவர்கள் தன்னைப் பொது மக்களுக்கு அர்ப்பணித்தும், அவர்களது துன்ப வேட்காட்டைத் தான் உறிஞ்சுக் கொண்டும் வாழ்கிறார்” என, தான் முன்னர்ச் சொன்ன பொருளோடு அண்ணாவைத் தொடர்பு படுத்திக் காட்டும் நேர்த்தியே நேர்த்தி!

அண்ணாவைத் தென்றலாக்கும் அருமையைக் காணுங்கள். "தென்றலே! தமிழ்த் தரணியின் அணுவிலெல்லாம் நீ தவழ்ந்து, அறநெறிகளை ஏற்று, மாலை நேரமானதும் தமிழக வீதிகளை நோக்கி ஓடி வருகிறாயே - ஏன்?

மயக்கும் மாலைப் பொழுதான அந்தி நேரத்திலே, தமிழக வீதிகளிலே நடைபெறும் பொதுக் கூட்டங்கள் தோறும் நீ உலா வருகிறாயே! கூட்டத்தில் குழுமியுள்ள மக்களது உள்ளங்களையெல்லாம் நீ சிலிர்க்க வைக்கிறாய்! கவருகிறாய் கொள்ளை கொள்ளுகிறாய்! இதற்குக் காரணம் என்ன? உன்மீதுள்ள எல்லையற்ற பற்று. நீ வாடையா என்ன? - வெறுப்பதற்கு, தென்றல் அல்லவா? அண்ணாவின் அழகு தமிழ்ப் பேச்சை, மேடையிலே வீசுகின்ற மென்பூங்காற்றான தென்றலாக்கிக் காட்டியிருப்பது, தென்றலினும் குளிர்ச்சியை நமக்குத் தருகிறது.

அண்ணாவின் "கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு” என்பதிலே தன்னை முற்றிலுமாகப் பறிகொடுத்து நிற்பவர் புலவர் கலைமணி. இதோ அவரே கூறுவதைக் கேளுங்களேன்!

"அண்ணா நீ வாய் திறந்தாய், கொட்டின முத்துக்கள் சிதறின வைரங்கள்! எல்லாம் மரகதக் குப்பைகள். வந்தவன் ஒவ்வொருவனும், அந்த விலைமதிக்க முடியாத மணிகளை மனக் கூடையிலே வாரிக் கொண்டு, போயினன். எஞ்சியிருப்பது ஒரே ஒரு முத்து. அந்த முத்தை நாடி நான் நெருங்க ஆரம்பித்தேன். அது என்னருகிலேயே இருந்தது. அந்த முத்திலே ‘கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு' என்ற சொல்லோவியங்கள் எழுதப்பட்டிருந்தன" என்பது கலைமணியின் உள்ளத்தின் ஆழத்தே இருந்து வெளிப்படும் உயிர்ப்பான எண்ணம்!

ஆட்சிமுறை எப்படி அமைய வேண்டும் என்பதை இயற்கை கொண்டு புலவர் கலைமணி விளக்கியிருப்பது எண்ணியெண்ணி உள்ளத்தில் இருத்திக் கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

இன்றைய மக்களாட்சியில் பெரும்பான்மை பலம் கொண்ட கட்சி நாட்டை ஆள்கிறது. சிறுபான்மைக் கட்சிகள் எதிர்க்கட்சிகளாக உள்ள்ன்,இயற்கைக் குடியரசில் சிறு பான்மைக் கட்சி ஆட்சி செய்கிறது. பெரும்பான்மைக் கட்சி ஆட்சி செய்வோரைக் கண்காணித்து வருகிறது. ஆம்! உலகில் நிலப்பரப்பு குறைவு. கடற் பரப்போ மிகுதி எதிர்க் கட்சியைப் போலுள்ள பூமிதான் மக்களை ஆட்சி புரிகிறது. சிறு பான்மைக்குச் சிறப்பான தகுதியை வழங்கியதோடு பெரும் பான்மை நின்று விடவில்லை: "பூமியே! நீ கொடுங்கோலை ஏந்தினால், புரண்டு வரும் கடலலைகளால் உன்னைப் புதை குழிக்கு அனுப்புவேன். எச்சரிக்கை” என ஓயாமல் குரல் கொடுத்து வருகிறது. இயற்கையின் இந்தக் குடியாட்சி முறை நாட்டில் நடைமுறைக்கு வரக் கூடாதா? என நெஞ்சம் ஏங்குகிறது. புலவர் கலைமணி அவர்களுடைய உரைநடையே கவிதை நடையாகச் சிறந்துள்ளது. எடுத்துச் சொல்லும் முறையிலே ஒரு புதிய போக்கு நெஞ்சில் நிற்கத்தக்கவாறு தக்க எடுத்துக்காட்டுக்கள்-இவை நூல் முழுவதும் பளிச்சிடுகின்றன. சான்றுக்குச் சில -

"மழைத் தோலால் நெய்யப்பட்ட பனித் திரையைக் கதிர வனுடைய கூரிட்டிகள் ஊடுறுவின.அதன் விளைவு?வானவில் வண்ணங் காட்டி மேற்கில் சிரித்தது."-இது ஓவிய நடை.

"பாம்பாட்டி தன் கூடையில் போட்ட பாம்பை, கூடையின் மூடியைத் திறக்கும் போதெல்லாம், அந்த அரவம் தலையை நீட்டுவதைப் போல, எனதுள்ளம் திறக்கப்படும் போதெல்லாம், என்னுடைய ஆசைகள் தலை நீட்டுகின்றன." இஃது எடுத்துக் காட்டு நடை.

"கதிரவனே! அடிவானத்தில் நீ தொட்டில் இட்டுக் கொண்டிருக்கிறாய்!

வானத்தின் சிம்மாசனத்தில் நீ மதியத்தில் அமருகின்றாய்! அந்தி நேரத்தில் கண் சிவந்த வீரனைப் போலக் காட்சி தருகிறாய். உனக்கிருக்கும் சண்பால் இரவில், நிலவிற்கு வழிவிட்டுப் போய் மறைகிறாய்!” - கற்பனை நடைக்கு இஃது ஒரு காட்டு.

"தொடுவான் இல்லையென்றால், உலகத்தில் வாழும் கோழிக் குஞ்சுகளான மக்களுக்கு வானம் போன்ற கூடை கிடைக்காது.” உருவக நடை இது.

எங்கள் இலட்சியமே அறிஞர் அண்ணாதான். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் அறிஞர் அண்ணாவே என்ற எண்ணம்தான்.

அண்ணா,
கடிக்க நனி சொட்டும் கரும்பு!
மோப்ப மணக்கின்ற மலர்!
கேட்கப் பரவி வரும் இசை!
நோக்க எழிலீயும் காட்சி!
உணரச் சுகம் தரும் தென்றல்!

என ஐம்புலன்களையும் ஆட்கொள்பவர் அண்ணாவே என்றும் புகழ் மாலையைச் சூட்டி நண்பர் என்.வி.கலைமணி போற்றிப் பரவுகின்ற தமிழ் அஞ்சலியே இந்நூல்.

அவருடைய அஞ்சலி என்ன? அவரே சொல்கிறார்"கொம்புத் தேனும் செழும் பாகும் குலவும் பசும் பாலும் கூட்டி உண்டார் போல் இனிக்கும் குணம் கொண்டவனே!

 உன்னில் என்னைச் சேர்ப்பாய்!

எனது தமிழஞ்சலியை நின் மலரடியில் வைக்கின்றேன்! புலவர் கலைமணியின் அஞ்சலி பொருள் நிறைந்ததாய் இருக்கிறது.

தமிழ் மணப்பதாய்ப் பொலிகிறது, அண்ணாவின் புன்னகையாய் மிளிர்கிறது.

புலவர் கலைமணியின் எழுத்துப்பணி ஒங்குக! சிறக்க! என உள நிறைவோடு வாழ்த்துகிறேன்.


அன்புடன்,
க. செல்லப்பா
சென்னை
1.3.1999