அய்யன் திருவள்ளுவர்/நினைவுகள்

விக்கிமூலம் இலிருந்து



நினைவுகள் சில...






மிழ் என்றால், புறநானூறு தமிழ் என்றால், அகநானூறு! தமிழ் என்றால், திருத் தொண்டர் மாக் கதை! தமிழ் என்றால், தொன்மொழி!

தமிழ் என்ற சொல்லுக்கு வீரம் என்று ஒரு பொருள்! அதுதான் புறநானூறு!

தமிழ் என்ற வார்த்தைக்கு காதல் என்று ஒரு பொருள்! - அதுதான் அகநானூறு!

தமிழ் என்ற பதத்திற்குப் பக்தி என்று ஒரு பொருள்! - அதுதான் திருத் தொண்டர் மாக் கதை எனப்படும் பெரிய புராணம்.

தமிழ் என்ற சொல்லுக்கு, அழுது கொண்டே பிறக்கின்ற குழந்தை - உலக நாகரிகத் தொட்டிலிலே ஊஞ்சலாடி, 'பிள்ளைத் தமிழ்'ப் பண்பாடுகள் பாடி, சிரித்துக் கொண்டே அது சாகின்ற வரை, பண்டைய சிந்து வெளி - லெமூரிய நாகரிக இனம் பேசுகின்ற - ஒரு தொன் மொழி என்றும் பொருளாகும். எனவே, தமிழ் என்ற சொல்-வீரம்-காதல் - பக்தி - இனிமை -நீர்மை, நனி நாகரிக மொழி என்ற பல்பொருள் வழங்கும், ஓர் அற்புதச் சொல்லாகும்!

வீரத்தால், வியனுலகில் எதனையும் விளைவிக்கலாம்! ஆனால், அது இயற்கை ஆற்றல்களை எப்பொழுதும் வீழ்த்திட இயலாது.

காதலால், எங்கும் - எதனையும் கை கொள்ளலாம்! ஆனால், எல்லா இடங்களிலும் அது வெற்றி பெறாது.

அறிவும் - அன்பும்-உணர்வும்-இணைந்து, அவை பக்தியாக, அனுபவம் பெற்ற ஆற்றலாக வழிபடும் போது, மனநிறைவு என்ற ஆன்ம விடுதலை கிடைக்கின்றது.

வீரமும் காதலும், அதனதன் அனுபவங்களை ஓர் எல்லைக்குள்ளேயே வளர்த்து, பிறகு உரு மாற்றங்களைப் பெறுகின்றன.

ஆனால், பக்தி என்ற அனுபவம் மட்டும், ஆன்ம விடுதலை கிடைக்கும் வரை, இறப்புக்குப் பின் பிறப்பறுக்கும் வரை, என்புருக. ஊனுருக.

வழிபாட்டு ஒழுக்கங்களை ஒம்பி, இறைஞான முக்தியில் இரண்டறக் கலக்கும்வரை, எல்லையின்றி வளர்ந்து கொண்டே போகும் சக்தி படைத்தது.

ஆன்மாவை - இறை என்று பார்க்கும் நிலையும், ஆன்மாவே - இறை என்று நம்பும் நிலையும் - அதனால் வளரும். அந்த இரு நிலைகளின் விடை என்ன தெரியுமா? இறையருள் முடிவிலாதது, பேரின்பம் பயப்பது - என்ற விளக்கமே ஆகும்.

முதலிடை கடைச் சங்கங்கள் முகிழ்த்த அவ்வக் காலங்களின் பாவாணர்களும், புலமை தவழ்ந்த சான்றாண்மையாளர்களும், கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் சைவ நாயன்மார்களும் - வைணவ ஆழ்வார்களும் - அதனதன் தொடர்பான இக்காலம் வரையுள்ள ஆன்மிக வளர்ச்சிகளால் பக்தி இயக்கங்கள் பெருகி வளர்ந்து, தமிழ் மொழியைப் பசுந்தமிழாக, கன்னித் தமிழாக வளர்த்து வந்தன.

பக்தி இயக்கங்கள் என்றால் என்ன? ஆன்ம விடுதலைக்கும், மொழி விடுதலைக்கும், நாட்டு விடுதலைக்கும் போராடிப் பெறும் பயிற்சிப் பாசறைகளே - மன உறுதிகளை பக்தி இயக்கங்களாகும்.

அதனால்தான், நமது மொழியைத் தாய்மொழி என்றும், நாட்டைத் தாய் நாடு என்றும் தாய்மை மாண்போடும் பண்போடும் போற்றி அழைக்கின்றோம்! - ஏன்?

தாயிடம் தான், ஊற்றுக் கண் போல் அன்பு சுரக்கும், பாச வேட்கைக்குரிய உண்ணீர் ஊறும்.

தாயிடம் தான், இன்பம் பெருகும்! ஈரம் அலைமோதும். தியாகம், அன்றலர்ந்த பூப் போல பொலிவுறும். அவள் மாண்பால் அவனி அக மகிழும்!

தமிழ் மக்களை, மொழியால், ஈன்றளித்த அவளது மான வாழ்வுக்கு ஆபத்துக்கள் நேர்ந்தால், நாம் கனி தரும் வாழை மரங்களாக மாறி நம்மை நாமே - அழித்துக் கொள்வோம்!

ஒளி தரும் மெழுகுவர்த்தியாகி, ஆட்சி வன்மை என்ற எதிர்ப்பு இருளை விரட்டியடித்து, மொழி ஒளி என்ற உரிமைகளை நிலை நாட்டுவோம்.

புகழ் என்ற சாம்பலைப் பூமிக்கு மேலே உதிர்த்து விட்ட ஊதுவத்திகளாக - நாட்டின் மொழிக்காக மணம் பரப்பி மறைவோம்.

இத்தகைய அருந்தமிழ், உலகின் ஆதி ஒரு மொழியாக இருந்த நிலை மாறி, தமிழ் - சமஸ்கிருதம் என்ற இரு மொழிகளுள் ஒன்றாகி, தற்போது பத்தொன்பது மொழிகளுள் ஒன்றாக ஒன்றி, மொழி ஆதிக்க ஆட்சிக்குள் ஆட்பட்டு அல்லல்படுகின்றது.

சமஸ்கிருதக் கலப்பின் ஆதிக்கத்தால் மணிப்பிரவாளம் என்ற மதமேறிய தமிழ் மொழி, இஸ்லாமியர் படையெடுப்புகளால் உருதுமொழிக் கலப்பின நோய்கட்கு இரையாகிப் பொலிவிழந்துள்ளது.

மராட்டியர், நாயக்கர் ஆட்சிகளின் மொழிப் பலாத்காரங்களுக்குப் பணியாமல், தமிழ் - தனது சீரிளமைச் சுய மரியாதைகளை இழக்காமல் - இன்னலுறுகின்றது.

ஆங்கிலேயரின் மூன்னூறு ஆண்டு கால வர்த்தக ஆட்சியின் குமாஸ்தா கல்வி திணிக்கப்பட்ட போதும்கூட, ஆங்கில மோகத்துக்கு அலட்சிய அன்பிடமளித்து அவதிப்பட்டு வருகின்றது.

இறுதியாக, 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு வட நாட்டினரின் ஆதிக்க இந்தி மொழியை, நாடாளுமன்றத் தர்பாரிலே மும்மொழித்திட்டம் என்ற சட்ட வடிவமாக்கி, இந்தியம் என்ற பெயரிலே மக்கள் மீது வடவர்கள் திணித்தார்கள்.

1937-ஆம் ஆண்டில், முதன் முதலாக இந்தி மொழியை ஆட்சி மொழி என்ற ஆதிக்க முள் முடி சூட்டி, மூதறிஞர் இராஜாஜி அவர்களால் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது.

'தமிழ்த் தாயின் தாள் மீது - கால் வைப்போர் தலைமீது என் கால் வைப்பேன்' என்ற நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார், தந்தை பெரியார், தளபதி அண்ணா உட்பட்ட பல்லாயிரவர், ஆதிக்க இந்தியை அன்று எதிர்த்தார்கள்! இதுதான் முதல் கட்ட இந்தி எதிர்ப்புப் போர்!

தாளமுத்து - நடராசன் போன்ற மொழிப் போர் தமிழத் தன்மானிகள், தங்களது தாய் மொழிக்காக வீர மரணமடைந்து அறப் போர் தியாக வரலாறு தீட்டினார்கள்!

இரண்டாம் கட்ட இந்தி எதிர்ப்பு போர், மீண்டும் 1965-ஆம் ஆண்டில் உருவாயிற்று.

தமிழக மாணவர் தளபதிகளான ம. நடராசன் எம். ஏ., நாவளவன், இரவிச்சந்திரன், பெ. சீனிவாசன், இன்று அரசு பணிகளில் பணியாற்றி வரும் மற்றும் பல மாணவ மணிகள் அனைவரும் எல்.கணேசன் தலைமையை ஏற்று, இந்தியைத் திணிக்கும் இரு ஆட்சிகளையும் எதிர்த்து, வியூகம் வகுத்துப் போராடினர்!

சென்னை மாநகர், இந்தி எதிர்ப்புப் போர் செங்களமானது! தஞ்சை மாநகர், வெங்களமானது.

செந்நீரைச் சிந்தும் செருமுனைந் சிங்கங்களானார்கள் - இந்தியை எதிர்த்துப் போரிட்ட தமிழக மாணவர்கள்!

செம்மாந்த தமிழர் தம் மறம், வீர வரலாற்றுச் சம்பவங்களைப் படைத்தது!

இந்த, இந்தி எதிர்ப்புப் போர்ப் பரணி, பத்து உயிர்களை நெருப்பாலும் - நஞ்சாலும் பலி கொண்டது!

பன்னூறு மக்களைத் துப்பாக்கித் துந்துபியால் துவம்சம் செய்து, நடை பாவாடை விரித்து, ஆட்சி அலங்கோலங்களால் அராஜகச் சதிராட்டமாடியது அன்றைய ஆட்சி!

அறிஞர் அண்ணா அவர்கள், 1957 - ஆம் ஆண்டு சென்னை கோட்டையிலே முதலமைச்சராகக் கொலுவீற்ற பிறகுதான், வடவர் மொழியாதிக்க உணர்வுகளான மும்மொழித் திட்டத்திற்கு அவரால் கல்லறை கட்ட முடிந்தது!

தமிழ் - ஆங்கிலம் என்ற இரு மொழித் திட்டத்தைச் சட்ட வடிவமாக்கி, இந்தி எதிர்ப்புப் போருக்கு அறிஞர் அண்ணா அவர்கள் இறுதி முற்றுப் புள்ளியை வைத்தார்!

கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள், கிழக்குத் திசை நோக்கிக் கடவுளை வழிபடுவார்கள். காரணம், சுகபோகங்கள் பெருகி மகிழ்வோடு வாழ வேண்டும் என்பதற்காக!

மேற்கு நோக்கிச் சிலர் வழிபடுவர், காரணம் - பொருளும் - சொர்ணமும் உலகம் போற்றுமளவிற்குப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக !

துறவிகள், இறைவனைத் தெற்கு நோக்கி வணங்குவார்கள்! காரணம், உலகம் உவந்து வியக்கும் ஞானம் பெறுவதற்காக!

வடக்கு நோக்கி வழிபடுபவர்களும் உண்டு ! காரணம், புத்தம் சித்த கத்திப் பெற்றுச் சித்தர் - நிலையை அடைவதற்காக!

அதனைப் போல தமிழர்களான நாம், அண்ணா சதுக்கமுள்ள திசை நோக்கி வணங்கல் வேண்டும். ஏன்? தமிழன்னைக்கு எந்த மொழித் திணிப்பாதிக்கத்தாலும் தீமைகள் வராதிருப்பதற்காக ! வந்தால், தொண்டு புரியும் மனம் பெறுவதற்காக !

'மலையினும் எது பெரியது' என்று சோழ மாமன்னன் சேக்கிழார் பெருமானைக் கேட்டபோது, 'நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்' என்றார்!

'கடலில் பெரியது எது' என்ற போது, 'பயன் தூக்கார் செய்த உதவி' என்றார்!

'உலகில் பெரியது எது?' என்று பாவேந்தனைக் கோவேந்தன் விளித்தபோது, 'காலத்தினால் செய்த உதவி' என்றார் சேக்கிழார் பெருமான்.

இடைக்கால ஒளவை பிராட்டியைப் பார்த்து, 'எது பெரியது?' என்றபோது, 'இறைவன் தொண்டருள் ஒடுக்கம்' தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்றார்!

அதனைப் போல, 'தமிழ் மொழிக்காகப் போராடியவர்கள், அதற்காக உயிர் நீத்த தொண்டர்கள் பெருமை சொல்லவும் பெரிதே' என்ற நோக்கில், தமிழுக்காக அரும்பாடுபட்ட தமிழ்த் தொண்டர்களின் மொழிபக்தியை முறையாகத் தொகுத்து, எதிர்கால அரசியல், இலக்கிய, மொழி, சமுதாய உலகுக்குத் தமிழ்த் தொண்டர் மாக்கதை போன்றதோர் வீர வரலாறு தேவை.

அந்த வீர வரலாறு போரில், நெருப்போடு நெருப்பாக போட்டியிட்டு, எந்த ஓரினத்து மகனும், தனது தாய் மொழிக்காகத் தீயாடிக் கருகியதாகத் தமிழ் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் வீர வரலாறில்லை!

வேண்டுமானால், ஐரிஷ் நாட்டின் சின்பின் இயக்கத் தலைவர் டிவேலரா இத்தாலி விடுதலை வீரன் கரிபால்டி போன்றவர்கள் மொழி உரிமைக்காகப் பேசியிருக்கலாம் - போராடியிருக்கலாம். அவ்வளவுதான்!

அனால், அவர்கள் அறிஞர் அண்ணாவைப் போன்றதோர், கடுமையான ஒரு - மொழி வரலாறு படைக்கப்பட்டவர்கள் அல்லர்!

பாம்பன் சுவாமிகள், தமிழ்க் கடவுளான குறிஞ்சி நில அழகு முருகனை, 6666 பாடல்களால் பாடி, தெய்வீக வீர வரலாறு படைத்துள்ளார்! அவற்றுள் ஒரு காண்டம் செக்கர்வேள் செம்மாப்பு! - செக்கர்வேள் இறுமாப்பு, என்பது! செக்கர்வேள் என்றால், தமிழ்க் குமரன் முருகன், செம்மாப்பு என்றால் முழுமுதல் சிறப்புகளைக் கூறும் நூல் என்று பொருள்!

செக்கர்வேள் இறுமாப்பு என்றால், அந்தத் தமிழ் தெய்வத்தைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் பாட மனமில்லாத கடவுள் பக்தியினால் பழுத்த இறுமாப்பின் உயர்வு!

தமிழ் அன்னையின் எதிர்ப்புப் பகைகளை, அதன் வியத்தகு வியூகங்களை, பரணி பாடிடும் அனைத்துச் சிறப்புக்களோடும், விருப்பு வெறுப்பின்றித் சம்பவச் சிந்தனைகளைத் தொகுத்து, செம்மாந்தும், இறுமாந்தும் தமக்கே உரிய நேரிய நெஞ்சத்தோடும், எவருக்கும் அஞ்சா வீரத்தோடும் - தமிழ் மொழிப் பக்தியோடும் வீர வரலாறு எழுதப்பட வேண்டும்! இது சில தமிழ் நெஞ்சங்களின் மன நினைவுகளில் ஒன்று.

அந்தச் சுமைகளைத் தாங்கிவாழும் - வளரும் தலைமுறைகள் - தமிழ்ப் பரம்பரைகள்!

திரை இசைப் பாடல்கள்
ஓர் ஆய்வு

திராவிடர் இயக்கக் கவிதா மண்டலத்து நவமணிகளில் ஒன்றாக முத்துப் போன்று மிளிர்ந்து கொண்டிருப்பவர் கவிஞர் முத்துலிங்கம்.

அவரது பெயரின் பகுதியாக விளங்கும் முத்து எங்கெங்கே பிறக்கின்றதோ, அதற்கேற்பத் தகுதியும் தரமும் உண்டு.

இப்பி, உடும்பு, கடல்மீன், கதலி, கழுகு, கமலம், கரும்பு, சங்கு, செந்நெல், திங்கள், நத்து, நாகம், மூங்கில், மேகம், யானை, மருப்பு, போன்ற இடங்கள் எல்லாம் முத்துமணி பிறக்கிற இடங்களாகும்.

அவரது திருப்பெயரின் விகுதியான 'லிங்கம்' என்ற சொல், அவனி வாழ் மக்கள் தியானித்து வழிபடுதற்குரிய தெய்வீகக் குறியாகும்.

மேதினி வாழ் மக்கள் மேம்பட முத்தொத்த இலட்சிய முத்தி பெற பிறவிக் கடலில் மூழ்கி உய்வுற, வாழ்க்கையிலே மக்கள் அவரவர் ஓர் அடையாளத்தைப் பதித்து மறைவது உலகியல் மரபு அதுதான் பிறப்புக்குரிய சான்று!

கவிஞர் முத்துலிங்கம், தனது திரையுலக எழுத்துத் துறையில் பதித்துள்ள அறிவின் சான்றே அவரது திரையிசைப் பாடல்களாகும்.

கவி மாமன்னன் ஒட்டக்கூத்தர் பெருமான், முதல் குலோத்துங்கன், அவன் மகன் இரண்டாம் குலோத்துங்கன், அவன் மகன் இரண்டாம் ராசராச சோழன் அவையிலும் ஆஸ்தானக் கவிஞராக - மேதமைப் பெற்றவர் ஆவார்!

சோழர் பேரரசில், தாத்தா, தந்தை, பேரன் என்ற மூவர் அவைகளிலும், 'விக்கிரமன் சோழன் உலா' பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி, ராசராசன் உலா, போன்ற அறிவு தாலாட்டும் அற்புத நூல்களை இயற்றிய பெருமான் ஒட்டக்கூத்தனார்!

கவிஞர் முத்துலிங்கம், திராவிட இயக்க ஆட்சியிலே, பொன்மனச்செமமல் எம்.ஜி.ஆரின் தமிழக அரசிலே, மூன்றாவதான முறையிலே, அரசவைக் கவிஞராக அமர்ந்து, புகலோச்சியவர் ஆவார்.

கவிஞர் முத்துலிங்கம், மக்கள் திலகம் மீது பிள்ளைத் தமிழ் பாடியவர். திரை இசைப் பாடல்கள் என்ற நூலையும் யாத்தவர்.

சிந்தனையாளர் இளங்கோ, தான் தீட்டிய சிலப்பதிகாரம் என்ற தமிழர் பண்பாட்டு நூலிலே, நவமணிகளுள் இரண்டான முத்தையும் - மாணிக்கத்தையும் பாத்திரங்களாக மாற்றி, பாண்டிய மாமன்னன் நெடுஞ்செழியன் அவையிலே மோதவிட்டார்.

பொற்கொல்லனின் வஞ்சகமாக உலா வந்த முத்து, மன்னி கோப்பெருந்தேவி காற்சிலம்புப் பரல்களாகத் திகழ்ந்து கோவலன் தலையை வீழ்த்தியது.

கண்ணகி தேவியின் மாணிக்கப் பரல்களான சிலம்பிலே கொந்தளித்த கோபம், சாயாத பாண்டியன் செங்கோலைச் சாய்த்தது.

மன்னன் மாண்டான். நீதியின் கோலை நிமிர்த்தினான். மதுரை எரிந்தது. மன்னி, கோப்பெருந்தேவியும் மாண்டாள். சிலம்பிலே இரண்டு மணிகள் சிரித்த சிரிப்பு இக்காட்சிகள்.

கிரேக்க நாட்டு மன்னன் ஒருவன், சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட பொற் கிரீடத்தை தான் சூடிக் கொள்ள விரும்பினான்.

அதற்காக அரண்மனைப் பொற்கொல்லனிடம் எடை போட்டு பொற்கட்டிகளைக் கொடுத்தான் மன்னன்.

எள் மூக்களவுகூடக் குறையாமல், மன்னன் அளித்த பொன்னின் எடையளவோடு, கிரீடத்தைச் செய்து கொடுத்தான் - கிரேக்க அரண்மனைப் பொற்கொல்லன்.

அறிவியல் உலகுக்கு அறைகூவல் விடுத்தான், உண்மை எடையை அறிந்து அவனிக்குக் கூறுமாறு மன்னன் ஆக்ஞையிட்டான்.

அற்புத சிற்ப வடிவங்களைச் செதுக்கி அழகாகச் செய்யப்பட்ட அக்கிரீடம் எப்படி எள்ளளவும் சிதறாமல் குறையாமல் கொடுத்த எடையளவு பொன்னோடு அப்படியே இருக்கும்? - சிந்தித்தான் கிரேக்க வேந்தன்.

சிந்தனையாளன் ஆர்க்கிமிடீஸ் என்ற அறிவியல் விஞ்ஞானியான கணித மேதையிடம் கிரீடத்தைக் கொடுத்து எடையளவின் உண்மையைக் கண்டு கூறிடக் கேட்டுக் கொண்டான்.

அந்தக் கணித வித்தகன், தான் நீராடும் தொட்டியின் நிறைய நீரை நிரப்பி, கிரீடத்தை மூழ்க வைத்து, வழிந்து வெளியே வந்த தண்ணீரை எடை போட்டு, அதன் உண்மை எடையை ஆர்க்கிமிடீஸ் என்ற அறிவியல் வித்தகன் கண்டு பிடித்துக் கூறினான்.

வழிந்த அந்தத் தண்ணீரின் எடைதான் டூ பை ஆர் ஸ்கொயர்டு என்ற மதிப்புச் சூத்திரத்தை மன்னனிடம் விளக்கினான்.

அந்தக் கணிதத் தத்துவம் இன்றும் கணித உலகில் உலாவரும் சூத்திரமாக உள்ளது. இன்றைய மாணவர்களும் அதைக் கற்று கணிதம் போட்டு வருகிறார்கள்.

இளங்கோவடிகள், ஆர்க்கிமிடீஸ் சிந்தனையாளர்களைப் போல, திரை உலகச் சிந்தனையாளர் கவிஞர் முத்துலிங்கம். 224 திரை இசைப் பாடல்களும், கற்றார் போற்றும் கலித்தொகையின் 133வது பாடலாக தமிழர்தம் நவமணிக் கொத்துக்களாக, மெய்ப்பாட்டின் ஒன்பது பண்புகளை விளக்கி உரைக்கும் அறிவுரிைச் சொத்துக்களாக இன்றும் உலா வருகின்றன என்றால் மிகையாகா.

கற்றார் போற்றும் அந்த 9 பண்புகள் யாவை?

அவற்றில் அரும் தத்துவங்கள் என்னென்ன? இதோ அவை-

'போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை' என்ற பொருளுக்கேற்ப 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' என்ற படப் பாடலில் ஒரு பண்பாக அதைப் புனைந்துள்ளார் கவிஞர்.

'பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்' என்ற பண்புடைமைக்கு எடுத்துக் காட்டாக உள்ளது 'ஊருக்கு உழைப்பவன்' என்ற படத்தின் ஒரு பாடல்.

'காமம்' என்றால் விருப்பம். அதை ஆட்சி செய்பவள் காமாட்சி!

கமலத்தில் வீற்றிருந்து உள்ளத்தை ஆள்பவள் கமலாட்சி!

விரிந்த வியனுலகை ஆள்பவள் விசாலாட்சி!

தண்ணீரில் தூங்காத மீன்போல தரணியை ஆள்பவள் மீனாட்சி!

அதனைப் போல, என் வீட்டு ராஜாங்கம் உன் கையிலே - தெய்வங்கள் பேசாதோ உன் சொல்லிலே முத்தாரமே' என்று ஆற்றுதல் என்பது அலந்தார்க்கு உதவுதல்' என்ற தத்துவத்தை 'ஆயிரம் கண்ணுடையாள்' படத்திலே பாடித் தாலாட்டியுள்ளார் கவிஞர்.

'காம சாஸ்திரம்' என்ற படத்திலே 'அன்பு' என்பது தன் கிளை செறா அமை என்ற உயர்ந்த பாசத்திலே, திருக்குறள், பாரதி, காமராஜர், அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் போன்றவர் பண்புகளை எடுத்துக் காட்டாகக் காட்டி, மக்களைப் பின்பற்ற வைத்துள்ளார் கவிஞர்.

'மீனவ நண்பன்' என்ற படப் பாடலிலே, 'அறிவு என்பது பேதையர் சொல் நோன்றல்' என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியுள்ளார் கவிஞர்.

'செறிவு என்பது கூறியது மாறா அமை’ என்ற வாழ்க்கை நலத்தின் செறிவான கருத்துக்களைக் 'காதல்கிளிகள்'. என்ற படப் பாடலிலே கவிஞர் செப்புகின்றார்.

தமிழக அரசின்தங்கப்பதக்கம் பெற்ற 'கிழக்கே போகும் ரயில்' என்ற படத்தின் ஒரு பாடல், நீரோடை போலவே சிரித்தாடி ஓடி, சிந்துபாடி நம்மைக் களியூட்டுகிறது.

'நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை' என்ற மாண்புக்கு முரசு கொட்டி, காஞ்சி பட்டு, கஸ்தூரி பொட்டு, திருமகள், தென்குமரி, திருக்குற்றாலம், பூம்புகார், கண்ணகி, போன்றவற்றின் உட்பொருள் உணர்வுகளை 'வயசுப் பொண்ணு' என்ற படத்தில் விளங்க வைத்துள்ளார் கவிஞர்.

இந்தப்பாடல் 1978 - 79 ஆம் ஆண்டின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான தமிழக அரசின் விருதைக் கவிஞருக்குப் பெற்றுத் தந்துள்ளது.

'கண்ணோடாது உயிர் வெளவல் என்பதே முறை' என்ற பண்பைத் தூங்காத கண்ணின்று ஒன்று படத்தின் பாடலிலே பளிச்சிடுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, 'பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்' என்று அகழ்வாரைத் தாங்கும் நிலமாக, தாய்க்குலமே வருக' என்ற படத்தின் பாடலாக ஒலித்துள்ளது.

தமிழ்ச் சமுதாயத்தின் தலையாய இந்த ஒன்பது பண்புகளும், வான மண்டலக் கதிரவனைப் போல தலைமை தாங்கி, பிற கோள்கள் தன்னைச் சுற்றியே சுழன்று வருமாறு வகுத்துக்கொண்ட நீள்வட்டக் கோள்கள் பாதைக்கேற்ப வலம் வந்து, பருவ மாற்றத்தை உருவாக்கிடும் தட்ப வெட்பமான உயிர்ச்சக்தியைப் படங்களுக்கு வழங்கியுள்ளன.

காகுத்தன் மனைவியைக் கவர்ந்து சென்ற ராவணனை எதிர்த்து, சடாயு என்ற கழுகு போரிட்டபோது, தளர்ந்து போன இலங்கை வேந்தன், 'உன் உயிர் எங்கே உள்ளது?’ என்று பறவை வேந்தனைக் கேட்டான்.

உண்மையை மறைக்கும் உள்ளமற்ற கழுகு சடாயு, எனது உயிர் இறக்கைகளில் உள்ளது" என்று உரைக்க, அதற்கு மறு கேள்வியாக, 'உன் உயிர் எங்கே உள்ளது?’ என்று இலங்காதிபனை பட்சியினத் தலைவன் வினவ, "கால் கட்டை விரலில் இருக்கிறது" என்றான் ராவணேஸ்வரன்.

உடனே சடாயு, கால் கட்டை விரலைத் தனது அலகால் குத்திக் கொல்லக் குனிந்தபோது, இலங்கேஸ்வரன் தனது வாளால் சடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்தினான். கழுகும் துடிதுடித்து வீழ்ந்தது தரையில்!

சில படத்தின் பாடல்கள் சடாயுவைப் போல உண்மையாக எழுதப்பட்டதாகவே உள்ளன.

ஆனால், படச் சம்பவங்கள் சில, ராவணனாக மாறிப் பாடல்களின் உணர்வுகளைத் தலைதுாக்க முடியாமல் சாய்த்து விட்டிருக்கின்றன.

இந்த அரக்கப் போர், கவிஞருக்குரிய கருத்து வீழ்ச்சி அல்ல, படத்தின் வசூலுக்குரிய தாழ்ச்சியே. கவிஞர் முத்துலிங்கம் பாடல், சில இடங்களில் இருளை விரட்டிடும் நிலவாக ஒளியுமிழ்கின்றன.

வேறு சில படப் பாடல்கள், சொற்போர் நடத்துவோர் வாதங்களாகவும், மற்றும் சில பாடல்கள், அருவி போல சலசலக்கும் பேச்சுக்களின் விவாதங்களாகவும் விளங்குகின்றன.

பாவேந்தரின்,"கொலை வாளினை எடடா" என்ற பாடலைப் போல, கொடியோரின் சமூகக் கொடுமைகளை வேரருக்கும் கோடாரி வீச்சுக்களாக சில பாடல்கள் உள்ளன.

திராவிடரியக்கக் கவிஞர்களது உணர்வுகளை ஆங்காங்கே கோலாகலமாகக் கொடிகட்டிப் பறக்கவிட்டுள்ள காட்சிகளையும் கவிஞர் முத்துலிங்கம் ஆற்றியுள்ளார்.

திரையுலக ரசிகர்கள் மட்டும் அல்லர், இலக்கிய சிந்தனையுள்ள தேனீக்களும் இந்த இசைமலர் தேன்துளிகளை உண்டு மகிழ வேண்டிய ஒரு பனுவல் பூந்தோட்டமே கவிஞருடைய திரைஇசைப் பாடல்கள் என்ற இந்நூல்!

சந்தன பேழையுள்
மூன்று வரிகள்

மாமன்னன் ஹூமாயூன், மொகாலயப் பேரரசிலே அறிவு வேட்டைக்காக அலை பாய்ந்த தஞ்சை சரபோஜி மன்னன்.

சரஸ்வதி மஹாலைப் போன்ற ஒரு நூலகத்தை ஆக்ராவிலே நிறுவியவன்.

ஒருநாள் ஓர் அராபிய மன்னரது வரலாற்றைப் படித்துக் கொண்டிருந்தான்.

அவன் வாசித்தது என்ன? படியுங்கள்.

"உலகில் உள்ள நாடுகளில் ஆங்காங்கு நடை பெற்ற, சம்பவங்களைக் காலவாரியாகத் தொகுக்குமாறு அராபிய மன்னன் ஒருவன் ஓர் உத்தரவிட்டானாம்.

ஒவ்வொரு நாடுகளிலேயும் நடமாடிய மக்கள், எப்படி வாழ்ந்தார்கள்? இப்போது அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?

எதெதற்காக அவர்கள் போர் செய்தார்கள்? ஏன் போரிட்டார்கள்? முடிவுகள் என்னென்ன?

அந்தந்த நாடுகளின் கலை, பண்பாடு, நாகரிகங்கள் காலப்போக்கிற்கு ஏற்ப எவ்வாறு வளர்ச்சியுற்றன?

இவற்றையெல்லாம் உடனடியாகத் திரட்டித்தர வேண்டும். ஐந்தாண்டுகள் அதற்குக் காலக் கெடு. தவறினால், மரண தண்டனை என்று தனது அமைச்சர்களுக்கும் - அரசவை அறிஞர்களுக்கும் ஆணையிட்டானாம் அந்த அராபி அரசன்.

எழுத்துலக வரலாற்றிலேயே, இன்று வரை, இத்தகையதொரு பரபரப்பூட்டும் எந்த சம்பவமும் - எங்கும் நடை பெற்றதாகத் தெரியவில்லையே!

அரசு அலுவலர்கள் எல்லாம் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டபடியே மனம் கலங்கி நின்றார்கள்.

வேந்தன் கட்டளையை எவ்வாறு நிறைவேற்றுவது என்று பல இரவுகளும், பகல்களும் மனம் நொந்து அலைமோதி, ஒவ்வொருவரிடமும் அவரவர் யோசனைகளைக் கேட்டுக் கொண்டார்கள்.

திசைக்கு ஒரு குழுவாக அறிஞர்கள் திரண்டு சென்றார்கள். நாடுகள்தோறும் நடமாடினார்கள். விடைகளைத் தேடி வித்தகர்களை நாடினார்கள். பலன்தான் இல்லை - பாவம்!

ஒருநாள் கரிகளும், பரிகளும், கோவேறு கழுதைகளும் - ஒட்டகங்களும் சுமை சுமையாய் புத்தகங்களையும், ஓலைச் சுவடிகளையும் நாணல் இதழ்களிலே எழுதப்பட்ட ஏடுகளையும் பை பையாகச் சுமந்தவாறு அராபி மன்னன் முன்பு நின்றன.

நீண்டநெடுந் தூரம் வரிசைகளாக நிற்கும் அந்த விலங்கினச் சுமைகளைக் கண்டு, மன்னன் வியப்படைந்தான்.

புருவங்களை மேலேற்றியபடியே, கண்களைக் கசக்கிக் கொண்டு மறுமுறையும் அவன் அந்த வரிசையை நோக்கினான்.

இவ்வளவு புத்தகங்களையும் படித்திட, எனக்கு ஆயுளுண்டா? இவற்றைச் சுருக்கமாக எழுதிட, மேலும் எவ்வளவு காலம் ஆகும்? கனல் பட்ட கந்தகமாய் காவலன் வெடித்தான்.

'நாளை! நாளை! நாளையே முடிக்கின்றோம்' என்று, அந்த அவை அதிர்ச்சியோடு இறைஞ்சி ஒலித்தது.

மறுநாள் கூடியது மன்றம்! மன்னவனும் மற்றோரும், மனக்கோட்டங்களோடும், மருட்சியோடும் அமர்ந்திருந்தார்கள்.

அமைதியம், அடக்கமுமான அறிவோடு, ஒரு சிறு சந்தனப் பெட்டியை இரு கைகளிலும், ஏந்தியவாறே, பயபக்தியுடன் அவையுள் நுழைந்தான் ஓர் ஞானி.

"கொற்றவா! எல்லாக் காலங்களிலும், எல்லா நாடுகளிலும் நடைபெற்ற அரிய சம்பவங்களடங்கிய சரித்திரம், இதோ இந்த சந்தனப் பெட்டியின் உள்ளே உள்ளது” என்றான் அந்த ஞானி.

பார்த்தான் பாராள்வோன். திறந்தான் பேழையை!

இளம் மான் தோலின் மேல், மென்மயிராலான மெத்தையிலே, மூன்று வரிகள் எழுதப்பட்ட சிறு காகிதத் துண்டு ஒன்று பளபளத்தது.

மன்னனால் விபரம் கேட்கப்பட்டபோது, "அவர்கள் பிறந்தார்கள், வாழ்ந்தார்கள்! இறந்தார்கள்!" என்று எழுதப்பட்ட மூன்று வரிகள்தான் அந்தப் பேழையில் இருந்தன.

வெட்கத்தால் வேந்தன் வியர்த்துப் போனான். ஊமையாய் அந்த ஞானியின் இரு கைகளையும் பற்றி, மாறி மாறி முத்த மாரி பொழிந்தான்.

அந்த அரசவையே அகம் சிலிர்த்து, மெய் மறந்து கையொலி எழுப்பியது!

அரிய இந்த அற்புத அறிவுச் சம்பவத்தைப் படித்த கருணையே உருவான உமாயுன், களி கொண்டான். தன்னையே மறந்த உணர்வால், அறிவால், நூலகத்தை விட்டு இறங்கி வரும்போது, படிக்கட்டுகளிலே அவன் கால்கள் இடறி விட்டன.

தடுமாறித் தடுக்கி விழுந்தான். மாமன்னன் உமாயூன் "அல்லா” என்றபடியே, பாவம்!

ஹெராக்ளிட்டஸ்

பிதோகரஸ்

சிந்தனைகள்

ரிசக்தி என்றால் என்ன? எத்தனை வகை? எப்படி அது உருவாகின்றது? உலகுக்கு அது ஏன் தேவை?

எரிசக்தியன் தன்மை என்ன? நன்மை என்ன? வன்மை என்ன? அதன் பிரிவாக்க சக்திகள் என்னென்ன?

"எரி என்ற ஏராளன்", சக்தி என்ற நிலத்தை விவசாயம் புரிகின்ற போது, அதன் சந்ததிகளாக - பிற சக்திகள் சிற்சில பயிரினங்களாகப் பிறப்பெடுக்கின்றன.

'தாய் - எரி - சக்தி - தந்தை இருபாலரும் இணைகின்ற சந்ததிகள்தான், பல சக்திகளாக, பரம்பரைகளாக, தலைமுலைகளாக நடமாடுகின்றன ! - உலகியலில்!

பரன் + பரை, தானே - பரம்பரை? அதாவது, தலைவனும் தலைவியும் சேர்ந்து, ஏன், ஆண்-பெண் என்ற இரு சக்திகளும் ஐக்கியமாகி, பிறப்பதுதானே பரம்பரை?

ஒரு துளி கண்ணீரைச் சோதிக்கின்ற விஞ்ஞானி, அதில் எவ்வளவு நீர், எவ்வளவு உப்பு அழுக்கு எவ்வளவு? என்ற கணக்கைக் கொடுப்பான்?

கண்ணீர் வருவது எப்படி? என்ற வினாவிற்கு விரிவுரை கூறுவான் உடற்கூறு மேதை!

நல்லதா கெட்டதா கண்ணீர் வருவது? என்ற ஆய்வுரையை ஆற்றுவான் மருத்துவ வித்தகன்!

எப்போதெல்லாம் ஒருவனுக்குக் கண்ணீர் வரும்? என்றே சிந்திப்பான் மனோ தத்துவ ஞானி!

கண்ணீர் வருவதற்குக் காரணம் என்ன? என்ற எண்ணி விடை காண்பான் தத்துவஞானி!

கண்களால் காண முடியாதவற்றை, அறிவியல் நம்பாது கண்களால் காணமுடியாதவற்றைப் பற்றிய ஆய்வும் தேடுதலும்தான், அறிவியலுக்கான அலாவுதின் அற்புத விளக்காகும்.

அதனைப் போல 'எரிசக்தி'க்கான ஆய்வும் தேடுதலும், அறிவியல் வித்துக்களாக விதைக்கப்பட்டிருக்கின்றன.

அவனியின் நாகரிக வளர்ச்சியில், நீருக்கும் - காற்றுக்கும் அமைந்துள்ள சக்திகளைவிட நெருப்புக்குத்தான் மிக அதிக சக்தியாகும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்கள், வரலாறுகள், எல்லாம், தீயின் தேவைகளை - எரியின் நெறிகளை - பெருமைகளை - அருமைகளை - சிறுமைகளை - வழிபாடுகளை அழகாக வரையறுத்துள்ளன.

எரி, அழிக்கும் சக்தியுடையதல்ல - ஆக்கம் தருகின்ற சக்தி! இது உலகம் ஏற்றுக் கொண்ட உண்மை - அறிவியல்!

“எதுவும் ஒன்றல்ல எல்லாம் இரண்டே!" என்றான், கிரேக்க அறிஞன் பிதாகொரஸ்!

“எதுவும் இரண்டல்ல, எல்லாம் ஒன்றுதான்” என்ற, வாதப் போரிட்டான் - அதே கிரேக்கத்தில் பிறந்திட்ட ஹெராக்ளிட்டஸ் என்ற மேதை !

"காலம் நிலையான ஒன்றல்ல, மாறுதலுக்கு உட்பட்டது மட்டுமல்ல - மாறுதலேதான்" என்று, அறியாமைக்கு ஆணியறைந்தான் அவன்.

"மாறுதல் என்பது, இயற்கையின் நியதி, மாறுபடாத ஒன்றும் உலகில் இல்லை. எதுவும் மாறவில்லை என்று கூற முடியாது” என்றான்.

எனவே, மேதினியின் மேன்மையான தோற்றம் ஒவ்வொன் றும் மாறுதல்தான் என்பது, அசைக்க முடியாத அறிவு!

"அவ்வாறு , மாறுதலுக்குரிய காரணம் என்ன? அதுதான் எரிசக்தி! அவனிக்கு நேரிடையான பொருள் எரிசக்திதான்!

"Ever Living fire is world meaning"- என்று வரையறுத்து வாதிட்டான்!

அதற்கு என்னென்ன காரணங்களைக் காட்டினான் தெரியுமா? ஹெராக்ளிடஸ்? எந்த உடலிலும், உணவு செரிமானமாவது எப்படி? எரிசக்தியால்தான் என்றான்.

குன்றேறி நின்றார் முதல், குணக்கேடன் வரையுள்ளவனுக்குக் கோபம் வந்தால், கண்கள் கோவையாவது ஏன்? எரிசக்திதான்.

பூமியிலிருந்து குறிப்பிட்ட அளவிற்கு மேலேயும் - கீழேயும் சென்றால், வெப்பம் வேக வைக்கிறதே ஏன்? எரிசக்திதான்!

குடம்பையில் உயிர் வாழும்வரை சூடு இருக்கிறது. புள் பறப்பது போல அது பறந்துவிட்டால், உடல் குளிர்ந்து விடுகிறதே அது ஏன்? எரிசக்தி இல்லை என்பதால் அல்லவா!

பகல் இரவாகின்றது, இரவு பகலாகின்றதே, ஏன்? எரிசக்தி இழப்பால் ஏற்படும் குளுமை! தட்பத்தைத் தவிர்த்த வெம்மையால்தானே?

வினாக்களை இவ்வாறு தொகுத்து விடை கண்டவன் ஹெராக்ளிடஸ் என்ற அற்புத அறிஞன்!

அதனால் கிடைத்த விடைகள்தான், எரிசக்தியின் பெயரால் பிறப்பெடுத்துள்ள பிற சக்திகள் எல்லாம் என்பதை அறியலாம்.

இன்றைய அறிவியல் உலகம், அறிந்து, - புரிந்து உணர வேண்டிய ஆழ்கடல் முத்து - எரிசக்தி!