அருள்நெறி முழக்கம்/பின்னிணைப்புகள்
குன்றக்குடி அடிகளாரின் சொற்பொழிவுகளைத் தொகுத்து வெளியிட்டுள்ள இந்நூலைப் படித்தேன். இது வெறும் எழுத்தோவியமன்று. அடிகளாரின் இதயத் துடிப்பின் எதிரொலி எனலாம். அவருடைய தமிழ்ப்புலமையும், வாதத்திறமையும் இந்நூலில் வெளிப்படுகின்றன. சமயமும், தெய்வ நம்பிக்கையும் தோன்றிய முதல் நிலம், “தமிழ்நிலம்" என்பது எனது நம்பிக்கை.
சமயமும், கடவுள் உணர்வும் பிற்காலத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். தற்காலத்திலும் சமயத்துறைகளில் குற்றங்குறைகள் இருக்கலாம். ஆயினும் அத்தகு குறைகளையே பெரிதாக எண்ணி கடவுள் உண்மையை மறுப்பது, ஒழுக்கத்தை மறுப்பதாகும்.
குன்றக்குடி அடிகளார் நடமாடும் சமயக் கல்லூரியாக விளங்குகின்றார். கடவுள் “இல்லை" என்று சொல்லத் துணிவது சுலபம். மக்கள் அரைகுறை விழிப்புப் பெற்றுள்ள இந்நாளில் கடவுள் “உண்டு” என்ற கொள்கையை நிலைநாட்டுவது கடினம். இந்தக் கடினமான வேலையை அடிகளார் மேற்கொண்டுள்ளார். கடினத்தை எளிதாக்கும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது. நாத்தீகத்தை எதிர்த்து வாதாடும் இடங்களில் அடிகளாரின் வாயில், வழுக்கியும் வன்சொல் இடம் பெறவில்லை.
குன்றக்குடி அடிகளார் என்னைப் பெரிதும் கவர்ந்து விட்டார். அவருடைய எளிய தொண்டும், இனிய பேச்சுமே என்னைக் கவர்ந்ததற்குக் காரணங்களாகும். போலி வைதீகத்தை அவர் வெறுக்கிறார். அதுபோலவே, புரட்டு நாத்தீகத்தையும் அவர் எதிர்க்கிறார். இரண்டுக்கும் அப்பாற்பட்டுள்ள உண்மை ஆத்தீகத்தையே அவர் பரப்பி வருகிறார். அடிகளாரின் தொண்டுக்கு எனது மனமார்ந்த பாராட்டு.
இந்நூலை, ஒவ்வொரு தமிழரும் - ஏன்? - ஆத்திகர் நாத்திகர் ஆகிய இரு தரப்பாருமே வாங்கிப் படிக்க வேண்டும். இது எனது வேண்டுகோள்.
- தமிழகத்தில் அடிகளார் என்னும் தலைப்பில், மதுரை ஶ்ரீநவநீதகிருஷ்ணன் பஜனைக்கூடக் குழுவினர்வாயிலாக இவ்வுரைகள் நூல்வடிவானபோது எழுதிய அணிந்துரை. (01.11.1953)