அருள்நெறி முழக்கம்/வாழ்வின் கடமை

விக்கிமூலம் இலிருந்து

வாழ்வின் கடமை


“உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்"

என்று வள்ளுவப் பெருந்தகை சொல்வதற்கேற்ப, இற்றைநாள் இங்குக் குழுமியிருக்கின்ற இந்தப் பெருவிழாவினை எடுக்கின்ற ஆயிர வைசிய சமூகத்தினர் உள்ளத்தில் கண்ணன் இருந்து வருகின்றான். “உள்ளத்திலே ஒளியுண்டானால் வாக்கினிலே ஒளியுண்டாம்” என்ற பாரதியின் அருள் வாக்கிற்கேற்ப நீங்கள் வாழ்வது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி.

கண்ணன் கீதையைச் செய்த ஒரு செல்வன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கண்ணனின் கீதையைப் பற்றித் தெரிந்து கொள்ளாதவர்கள் இவ்வுலகினில் இருக்க முடியாது. கண்ணன் கீதையின் மூலம் உலகிற்குப் பல நீதிகளை உணர்த்தினான். “கண்ணன் காட்டிய வழி செல்வாயாக’ என்று இன்று ஒர் பழமொழி வழங்குகின்றது. அந்தப் பழமொழி கண்ணனின் பெருமையையும் தரத்தையும் நமக்கு நன்கு விளக்குகின்றது.

கண்ணன் மக்கள் உள்ளத்தில் அழியா இடம் பெறுதல் வேண்டும் என்று எண்ணிய மகாகவி பாரதி “கண்ணன் என் தோழன்” என்று ஆரம்பித்து கண்ணனைப் பல்வேறு பெயர்களில் பாடி, முடிவில் “கண்ணன் என் ஆசான், கண்ணன் என் குலதெய்வம்” என்று முடிக்கின்றான். மனித மனம் பல்வேறுபட்ட கோணங்களில் ஒடும் பண்பு வாய்ந்தது.

அவரவரது உள்ளத்திற்கேற்ப ஆண்டவனைக் காண்பதுதான் வழிபடுவதுதான் நன்மை தரும்; வன்மையுமாம். அந்த உயரிய கொள்கையை அறிந்த பாரதி மக்கட் சமுதாயத்தின் நலங்கருதி கண்ணனைப் பலவிதமாகத் தனது கற்பனை உலகில் கண்டு மகிழ்ந்து பாடி இருக்கின்றான். பாரதி பாடிய கண்ணன் பாட்டு தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவர் உள்ளத்திலும் இடம்பெறவேண்டும் கண்ணன் பஜனை எங்கும் முழங்க வேண்டும். கண்ணனின் கீதை எங்கும் வெற்றி முரசொலிக்க வேண்டும்.

தமிழகம் தெய்வமணம் கமழும் தெய்வத் திருநாடு; பெரும்புலவர்கள் வாழ்ந்திருந்த பொன்னாடு. தமிழ்மக்கள் பழைய இலக்கியங்கட்கு எடுத்துக்காட்டாக, கடவுள் நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக, என்றும் குன்றாப் புகழுடன் விளங்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் படைத்த தரும சிந்தனையாளர்களால் - பழம் பெரும் மன்னர்களால் எழுப்பப்பட்ட பழம்பெரும் கோயில்கள் என்றென்றும் நின்று நிலவக் காண்கின்றோம்.

அன்பும், அருள்நெறியும் நாட்டினில் நல்லன காணத் துணை புரியும். அவை இரண்டும் மக்களிடம் நிலைபெற வேண்டும். அன்பும் அருள்நெறியும் நாட்டில் நல்லதொரு இடத்தைப் பெற்று நல்லன காண வேண்டும் என்ற குறிக்கோளில் உழைக்கத்தான் திருமடங்கள் உண்டாயின.

கிராம மக்களின் போக்கிற்கும் - வாழ்விற்கும் - பண்பாட்டிற்கும், குறிப்பாகச் சொல்லப்போனால் அவர்களின் அறிவுத் திறனுக்கும், அன்பினையும் அருள்நெறியினையும் பரப்பத்தான் பஜனைமடங்கள் எழுப்பப் பெற்றன என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. வழிபாட்டுத் துறையில் மக்களை அதிக ஈடுபாடு உடையவர்களாகச் செய்து அவர்களிடம் வழிபாடும் பக்தியும் வளரப் பாடுபட ஏற்பட்டவைதாம் திருமடங்கள் என்பதை எந்தச் சமயப்பற்றுடைய மனிதனும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. அவைதாம் திருமடங்களின் கடமை என்பதை அதன் தலைவர்களும் உணர்ந்து நடத்தல் வேண்டும். நாட்டு மக்களை என்றும் பக்தியிலும்- அன்பிலும் அறத்திலும் பற்றுடையவர்களாகச் செய்வதுதான் திருமடங்களின் கடமையாகும். அவை கடமை தவறினால் மக்கட்சமுதாயமும் கடமை தவறித் தவறான பாதையில் சென்று விடும் என்பதை நாம் இன்று உலகியல் வாழ்வில் கண்கூடாகக் காண்கின்றோம்.

மக்களின் அன்றாட வாழ்வைக் கவனித்து வரவேண்டி பொறுப்பு சமயத் தொண்டர்களுக்கு உண்டு. மக்களோடு மக்களாகப் பழகி அருள்நெறியைப் புகுத்தவேண்டிய சமய நிலையங்கள் தங்கள் கடமையை உணர்ந்து சரிவரத் தொண்டாற்ற வேண்டும். ஆண்டவனின் திருநாமங்களைப் பாடி மகிழ்வதற்காகவும் பேசி மகிழ்வதற்காகவும்தான் பஜனை மடங்கள் நாட்டில் எழுந்தன. அந்த உயரிய கருத்துக்களுக்கு இன்று நாட்டில் எதிர்ப்புக்கள் எழுந்து கொண்டேயிருக்கின்றன. அதனை இங்குக் குழுமியிருக்கின்ற அத்தனை மக்களும் நன்கு தெரிந்து கொண்டிருக்கலாம். அவர்களின் எதிர்ப்பு நம்மையும் நமது கடவுட்கொள்கையையும் எதுவும் செய்துவிட முடியாது. நாம் நமது காரியத்திலேயே கண்ணோட்டம் செலுத்தினால், தானாக விரைவில் நம்முடைய லட்சியங்கள் வெற்றிபெறும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நமக்குப் புறம்பான காரியத்தின் நலத்திலோ தீதிலோ நமது கருத்தினைச் செலவிடாது இருத்தல் வேண்டும்.

தமிழ்நாட்டு ஆத்திகத்தை எத்தனை எதிர்ப்புகளும் - எரித்தல்களும் உடைத்தல்களும் மாற்றிவிட முடியாது. மாற்றி விடலாம் என்று கருதிச் செயலாற்ற முனைதல் பயன்தராது என்பதைத் துணிவுடன் - அதே நேரத்தில் அன்புடைத் தோழர்களுக்கு மனம்கனிந்த நன்றியுடன் எடுத்துக் கூறுகின்றோம்.

அறிவுடைய ஒருவன் எக்காலத்தும் பயன்தரக்கூடிய காரியத்தில்தான் முனைவான். சில தோழர்களின் அறிவின் போக்கு விசித்திரமாகவும் வினோதமாகவும் இருக்கின்றது. எவ்வளவுதான் நாத்திகனாக இருந்தபோதிலும் அவனுடைய முதுமைக் காலத்தில் அல்லது அவனைத் துன்பம் சூழ்ந்த காலத்தில் அவன் ஆண்டவனை நினைத்துத்தான் தீருவான். இதனை, நம் முன்னோர்கள் வாழ்வில் நன்கு காணலாம். தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் தமிழன் எவ்வளவுதான் நாத்திகனாக இருந்தாலும் முடிவில் “சிவசிவா” என்ற சொல்லிற்கு வந்துதான் தீர்வான்

ஆங்கில நாட்டின் நாத்திகன் ஒருவன் துன்பம் தாங்காமல் முடிவில் ஓ கடவுளே! என்று கத்தினான். கடவுள் உண்டா இல்லையா என்று அங்கு நம்பிக்கைக்கும் தன்மானத்திற்கும் போராட்டம் எழுந்தது. பிறர் தன்னைப் பரிகாசம் செய்யக்கூடாது என்பதற்காக நாளடைவில் அவன் தன்னுடைய பிரார்த்தனைக்குத் திருத்தம் செய்யத் தொடங்கினான். ஏ கடவுளே! நீ என்னைக் காப்பாற்று என்று கூறினான். அதிலும் அவன் வெளியுலகிற்கு அஞ்சினான். முடிவில் அந்த ஆங்கிலேயன் "ஓ கடவுளே நீ இருப்பது உண்மையானால் என்னைக் காப்பாற்றும்" என்று கூறி வழிபடத் தொடங்கினான்.

மறுப்பதின்மூலம் - வெறுப்பதின்மூலம் - உடைப்பு, எரித்தலின்மூலம் சிலர் ஆண்டவனை நினைந்து அவனது நாமத்தைக் கூறி வருகின்றார்கள். இவ்வாறாகத்தான் இன்றைய உலகில் கடவுள் தன்மைக்கும் தன்மானத்திற்கும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் தன்மான உணர்ச்சிதான் இன்று பலரைக் கடவுள் நம்பிக்கைக்குக் கொண்டுவர முடியாத நிலையில் வைத்திருக்கிறது.

“என்னடா இது! இருபத்தைந்து வருட காலமாக பத்திரிகையில் கடவுள் இல்லை என்று எழுதியும் மேடையில் பேசியும் வந்தோமே! இன்று கடவுள் நெறியில் சென்றால் - அருள்நெறியைப் பின்பற்றினால் பிறர் நம்மை மதிக்க மாட்டார்களே” என்று இன்று பல தன்மான இயக்கத் தோழர்கள் கருதுகின்றனர். சீர்திருத்தம் பேசிச் சிந்தனையைப் பறிகொடுத்து கருத்தை இழந்து நிற்கும் தோழர்கள் கருதுகின்றனர். அவர்கள் எண்ணிய எண்ணத்தைச் செயலில் கொண்டுவரத்தான் நாளடைவில் அவர்கள் பல மாறுபட்ட செயல்களைக் கையாளத் தொடங்கினார்கள்.

தன்மானம்தான் நம்மையெல்லாம் ஒன்றுபட்டு இயங்காமல் செய்கிறது. தன்மானம்தான் கடவுள் நெறி என்ற ஒன்று நன்றாகத் தெரிந்தும் அவர்களை ஒத்துக்கொள்ள முடியாமல் செய்கிறது. எனவே, இந்தத் தன்மானம் நீடிக்கக்கூடியதன்று. நாளடைவில் காலமும் கருத்தும் ஒன்றுபட்டு இயங்குகின்ற காலத்து கடவுள் நெறியை அவர்கள் புரிந்து கொண்டு விடுவார்கள். புரிந்து கொண்டுள்ள மக்கள்தொகை அதிகமாகின்ற காரணத்தால் நாட்டினின்றும் இந்த மாறுபட்ட கருத்துக்கள் தானாக அகன்று விடும். இந்தத் தன்மானத்தின் குணம் என்றாவது தணிந்துதான் ஆகும். தன்மானம் தலைகுனிந்து கடவுள் நெறியின் முன் மண்டியிருக்கின்ற காலத்தில் அருள்நெறி மக்களிடம் நல்லதொரு இடத்தைப் பெற்றுத்தான் தீரும் என்பதில் சந்தேகமில்லை. மனித சமுதாயத்தின் ஆசைகள் தேவைகள் பூர்த்தியாகின்ற வரை தன்மானமும் இருக்கத்தான் செய்யும். இது. உலகப் பெருமக்கள் கண்ட முடிவு.

கண்ணனுக்கு ஆபத்து என்று சிலர் கருதுகின்றனர். தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் இந்தப் பயம் மக்களுக்கு இருத்தல் வேண்டியதில்லை. தமிழ் மண்ணில் கடவுள் நம்பிக்கை ஊறிக்கிடக்கிறது. தமிழ்நாட்டுக் கற்களிலும் கூடக் கடவுள் நம்பிக்கை பொதிந்து விளங்குகிறது.

இந்த மதுரை மாநகரத்து மண்ணும் நீரும் நெருப்பும் தேவாரம் திருவாசகம் போன்ற நூல்களின் சுவையை நன்கு அறிந்து இருக்கின்றன. கல்லும் மண்ணும் அதன் சுவையை அறிந்திருந்தும் மனிதர்கள் மட்டும் அதன் சுவையை அறிய மறுக்கின்றனர். கருங்கற்களுக்கு இருக்கின்ற பண்பாடு கூட ஆறறிவு படைத்த மனித சமுதாயத்திற்கு இல்லையே என்றுதான் வருந்தவேண்டி இருக்கின்றது.

கோவில்களின் மண்டபங்களினுள் இருந்து ஒருமுறை பிரார்த்தனை செய்தால் அந்தப் பிரார்த்தனையின் பக்திப் பாடல்களைச் சிறிதளவும் ஒசை குறையாமல் அங்கு இருக்கின்ற கருங்கற்கள் திரும்ப ஒலிக்கின்றன. ஒருமுறை அல்ல பன்முறை எடுத்துக் கூறினாலும் அதனை உணர்ந்து கொள்ளும் சக்தி மனித சமுதாயத்திற்கு இல்லாது போய்விட்டதே என்றுதான் எண்ண வேண்டியிருக்கின்றது. சிலர் உணர்ந்திருந்தும் ஏதோ சில பிடிவாத குணத்தினால் அதன்வழி நடக்க மறுக்கின்றனர். தமிழ்நாட்டு மக்களின் உள்ளப்போக்கும் அறிவுத்திறனும் இத்தகு நிலைமைக்கு மாறிவிட்டதே என்றுதான் வருந்த வேண்டியிருக்கின்றது.

இன்று சிலர் கண்ணனுக்கு ஆபத்து வந்துவிட்டது என்று கருதுகின்றனர். தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் கடவுள் நெறிக்கும் பக்திப்பாடல்களுக்கும் - ஏன் நன்மையான காரியங்கள் அனைத்திற்கும் ஆபத்து வருவதும் போவதும் இயற்கைதான்.

மக்கட்சமுதாயம் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முன்காலத்துச் சரிதைகளைப் படித்துப் பார்த்தால் இவர்கள் சொற்கள் அனைத்தும் போலிச் சொற்கள் என்று நன்றாகத் தெரியும். கம்சனைவிட இவர்கள் எல்லாம் பெரிய எதிர்ப்பாளர்கள் என்று கருதமுடியாது. கம்சன் செய்த கொடுமைகளை விடவா இவர்கள் இழிவான செயல்கள் செய்துவிட்டார்கள்? என்னைப் பொருத்தவரையில் கம்சனைவிட இந்தத் தன்மான இயக்கத்தினர்கள் நல்லவர்கள் என்றுதான் கூறவேண்டும்.

அன்பிற்கும் அறத்திற்கும் இலக்காக வாழ்ந்து உலகிற்கு உணர்த்தி வாழ்ந்தது - வாழ்வது தமிழினம்தான்் என்பதை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. அத்தகு பெருமைதரும் குலத்தில் பிறந்த நாம் உலகில் உண்டான அனைத்துயிர்களிடத்தும் அன்பாக இருந்தால் கண்ணன் கழல் இணைகள் என்றும் நம்மைக் காக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கண்ணன் நல்லவர்களைத்தான் காப்பான். அல்லவர்களை நிச்சயமாக வெறுத்து ஒதுக்கித் தண்டிப்பான் - இன்னலுக்கு உள்ளாக்குவான். தவறு செய்கின்ற மக்களைத் தாங்களே தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்திவிடச் செய்வதுதான் கண்ணனின் வேலை என்று நமக்கு வரலாறு காட்டுகின்றது. கம்சனுக்கும் இரணியனுக்கும் அவன் கொடுத்த தண்டனைகள் மூலம் நாம் இதனை நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது. இதனால் கண்ணன் கொலைகாரன் என்று மக்கள் சிலர் கருதுகின்றனர். புரிந்துகொள்ளாப் பகுத்தறிவுக் கூட்டத்தினர், இல்லாத வேண்டாத சில கேள்விகளை எழுப்பிக் காலத்தை வீணாக்குகின்றனர்.

அன்புடைத் தோழர்கள் கேள்விகேட்கும் முன்னர் வாழ்க்கை வரலாறுகளை நன்கு படித்துணர்ந்து பார்த்தால் நலம்பயக்கும் என்று கருதுகின்றேன்.

கண்ணன் கொலைகாரன் என்று அவர்கள் கருதியதோடன்றி நாளடைவில் மேடைகளில் பேசவும் எழுத்துக்களில் எழுதவும் முற்பட்டு விட்டனர்.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று கூறுகின்ற இந்நாளிலே - ஜனநாயக அரசிலே - கொள்ளைக்கும் களவிற்கும் இடம் கொடுக்க முடியுமா? அது உரிமையாகுமா? ஜனநாயகச் சட்டப்படி அது சரியாகுமா? இன்றைய நாட்டின் நிலைமையை வைத்துக் கண்ணனின் சரிதையைப் படித்துணர்ந்து பார்த்தால் கண்ணன் நம்மை எல்லாம் வாழ்விக்கும் கடவுள் என்று நன்கு விளங்கும்.

நாட்டில் தீமைகள் மலிந்து இருப்பதைக் கண்ட கண்ணன் தீமைகளை அகற்றத்தான் அவ்வாறு செய்தான் என்பது உண்மைக் கண்கொண்டு பார்க்கின்ற தோழர்களுக்கு நன்கு தெரியும், தீயன தானாக வளரும் என்பது உலகில் நாம் காண்கின்ற உண்மை; எனினும் தீமைகளைக் களைந்தெறியாவிட்டால் நாளடைவில் நாட்டில் தீமைகள்தான் தலைவிரித்தாடும். இந்த உயரிய கொள்கையை உணர்த்தத்தான் கண்ணன் சரிதை நம்மிடம் இருக்கின்றது. கம்சனுக்கும் இரணியனுக்கும் கிடைத்த தண்டனை நமக்கெல்லாம் கிடைக்கும் முன்னர் நாமெல்லாம் நல்லவர்களாக வாழ வேண்டும். நம்மால் இயன்ற நன்மைகளை நாட்டிற்குச் செய்ய வேண்டும். நன்மை செய்ய முடியாவிட்டால் தீமையாவது செய்யாதிருப்பது நல்லது. இல்லையேல் மனித சமுதாயம் கண்ணனின் தண்டனையின்றும் தப்பமுடியாது.

தமிழ்நாட்டு வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் தமிழனம் உயர்ந்த கொள்கைகளைத்தான் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்திருக்கின்றது என்பது நன்கு தெரிய வருகின்றது. தமிழ்நாட்டில் எந்தக் கொள்கையும் மக்களின் வாழ்வோடு கலந்து ஒன்றி இருந்தால்தான் மக்கள் சமுதாயத்தில் இவைகளுக்கு மதிப்பும் தகுதியும் கொடுக்கப்படும். இப்படிப்பட்ட கொள்கைகள்தான் நாட்டிற்கும் இந்நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கும் நலம்பல பயக்கும். இந்த உயரிய கருத்துக்களைப் பண்டைய மக்களின் வாழ்க்கை வரலாறு நன்கு உணர்த்துகின்றது. மக்களின் வாழ்வோடு வாழ்வாக ஒன்றிக் கலந்து நின்று நலம்பல பயக்கின்ற கொள்கைகள்தான் இன்றைய நாட்டிற்குத் தேவை. வாழ்வோடு - கலக்கப்படாத எந்தக் கொள்கையும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள். ஆகையால்தான் விண்ணவர்களும் காணமுடியாத அந்த உயரிய பரம்பொருளை மண்ணகத்தே காட்டினார்கள். ஏன் அப்படிச் செய்தார்கள் என்றால் வாழ்விலே தொடர்ந்து நின்று துன்பத்தை அறிந்தும் அனுபவித்திருந்தும் இன்பம் கொடுக்கக்கூடிய பொருளாக இருந்ததால்தான் அவர்கள் அவ்வாறு செய்தார்கள். இதுதான் தமிழகத்தின் கடவுள் தத்துவம். எனவே, தமிழகத்து மக்கள் கடவுளோடு கடவுளாகவும், தமிழகத்துக் கடவுள் மக்களோடு மக்களாகவும் ஒன்றிக் கலந்திருப்பது நன்கு தெரிகின்றது.

உடலில் நோய் ஏற்பட்டால் அதனை நீக்க வேண்டும் அல்லவா? மக்கட்சமுதாயம் ஓர் உடல்போல. அந்த உடலில் நோய் ஏற்பட்டு விட்டால் அதற்குத் தகுந்த மருத்துவம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்த உடலில் பல்வேறுபட்ட வியாதிகள் பெருகிக் கொண்டே போய் முடிவில் உடலே அழிந்து இருந்த இடங்கூடத் தெரியாமல் போய்விடும்.

கண்ணன் பிறந்ததன் மூலமாகத்தான் துரியோதனன் அழிந்தான். அது நோய் நீக்கத்திற்குக் கொடுத்த மருந்து போலத்தான். அந்த மருந்தினை வேண்டாம் என்றால் - வெறுத்து ஒதுக்கினால் - சாப்பிட மாட்டேன் என்று சொன்னால் - இதனைச் சாப்பிட்டால் நோய் நீங்கும் என்று தெரிந்தும் அதனை உண்ணேன் என்று பிடிவாதம் செய்தால் அவர்களை என்ன என்று சொல்வது! நோய் நீக்கம் வேண்டியதில்லை. நோய் இருந்து கொண்டே இருக்கட்டும். அந்த நோய் வளர்ந்து கொண்டே போய் இந்த முழு உடலையும் அழிக்கட்டும் என்று தான் கூறுகின்றார்கள் என்று எண்ண வேண்டியிருக்கின்றது.

கண்ணனுடைய கீதை அவன் காட்டுகின்ற வழி மக்கட் சமுதாயம் உய்வதற்குரிய சிறந்த தானம் என்பதை அனுபவம், ஆராய்ச்சி, உண்மைக் கண்கொண்டு பார்த்து உணர்கின்ற திறனுடைய மக்கள் தான் புரிந்து கொள்வார்கள். இதனைத்தான், சென்னை முதன் மந்திரி இராஜாஜி அவர்கள் “வழிகாட்டி" என்ற தலைப்பில் அழகுபட எழுதியிருக்கின்றார். “பலனில் பற்றின்றிச் செய்க" என்று கூறியதிலிருந்து மக்கட்சமுதாயம் சேவையைப் பெரிதாகக் கருதிப் பணியாற்ற முன்வருதல் வேண்டும். சேவையில் இறங்கிப் பணியாற்றுகின்ற காலத்து அந்தப் பணிக்காக எதையும் எதிர்பார்த்துச் செய்தல் கூடாது. இந்த ஒப்பற்ற சூழ்நிலை சமுதாயத்தில் உண்டாக வேண்டும். ஆக்க வேலைகளில் சேவை அதிகம் காண வேண்டும். நாம் செய்ய முனைகின்ற பணிகள் - சேவைகள் அனைத்தும் உயர்ந்தனவாக இருத்தல் வேண்டும். அந்தப் பணி செய்கின்ற காலத்து நாம் எவருடைய உதவியையும் எக்காரணத்தைக் கொண்டும் எதிர்பார்த்திருத்தல் கூடாது. பிறர் ஒருவனின் உதவியை நாடினால் அந்தக்காரியம் செம்மையாக நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஒருசிலர், தங்களுடைய எண்ணங்கள் கைகூட வேண்டும் என்பதற்காக ஆலயங்களுக்குச் செல்கின்றார்கள். அவர்கள் கருதிச் சென்ற காரியம் நிறைவேறாவிட்டால் ஆலயத்திற்குச் செல்வதை நிறுத்திவிடுகின்றார்கள். இது தவறுடைய செயலாகும். இம்மாதிரியான எண்ணம் மக்களிடம் பரவக்கூடாது என்பதற்காகத்தான் சைவ சமயக்குரவர்கள் சிவபூசையினால் ஏதாவது நன்மை வருமேயானால் உண்டாகுமேயானால் - அதைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளாமல், "ஆண்டவனே! நீயே அதனை ஏற்றுக் கொள்வாயாக" என்று கூறியிருக்கிறார்கள். இவைகளை எல்லாம் நாம் மறந்து நம்முடைய தேவைகளையெல்லாம் நிறைவு செய்ய வேண்டும் என்று ஆண்டவனை வழிபடுகின்ற மக்கட் கூட்டத்தில் குறிப்பிட்டவர்கள்தான் மனம் நெக்கு நெக்குருகிப் பாடி வழிபடுகின்றனர். உள்ளம் தோய்ந்த பிரார்த்தனையுடன் வழிபடுபவர்கள் ஒருசிலர்தான். மக்கட்சமுதாயம் ஆண்டவனை வாழ்விக்கும் முழுமுதற் பொருள் என்று கருதாமல் தேவையைப் பூர்த்தி செய்பவன் என்று கருதுவது கூடாது. இன்றைய மக்கட் சமுதாயத்தின் போக்கை வழிபாட்டை நன்கு ஓர் மேல்நாட்டு அறிஞன் எடுத்துக் கூறுகின்றான். “இன்றைய வழிபாடு எல்லாம் - பிரார்த்தனை அனைத்தும் தேவையின் நலமான முடிவைக் கருதித்தான். உண்மைான உள்ளம் தோய்ந்த பிரார்த்தனையை இன்று நாம் காண முடியவில்லை. உள்ளம் தோய்ந்த பிரார்த்தனை இந்த நாட்டை விட்டு ஓடிவிட்டதோ என்று ஐயப்பட வேண்டி இருக்கின்றது” என்று அழகுபட எடுத்துக் கூறுகின்றான்.

நாம் ஆண்டவன் முன்னர் நமது தேவையைப் பூர்த்தி செய்க என்று வழிபடுவது நமது வழிபாட்டிற்கே இழிவைத் தருகின்றது. அவ்வாறு வழிபடுவது சுயநலமாகிவிடும். நாம் நமது சுயநலம் கருதிப் பிரார்த்தனை செய்வது கூடாது. ஆண்டவன் முன்னர் வழிபடுங்காலத்துக் கனவிலும் சுயநலம் தலைகாட்டக் கூடாது. எக்காலத்தும் நாம் ஆண்டவனாக வாழ்த்துதல் வேண்டும். அவனுடைய உண்மைப் பித்தனாக உள்ளம் தோய்ந்த பிரார்த்தனை செய்தல் வேண்டும். அவனை வாழ்த்துவது நாம் வாழத்தான் என்பதை இன்றைய மக்கட் சமுதாயம் மறந்து விட்டது. ஆண்டவனை யாரும் வாழ்விப்பது இல்லை. ஆண்டவனை வாழ்விப்பதாக எண்ணித் தனக்கே வாழ வழி வகுத்துக் கொள்கின்றான். அவனை வாழ்த்தினால்தான் நாம் வாழ முடியும். மனிதகுலம் ஆண்டவனை வாழ்த்துவதும் வழிபடுவதும் - வணங்குவதும் நாம் வாழத்தான். நம்முடைய வாழ்வின் வளம் குறித்துத்தான் என்பதை மறந்து ஆண்டவன் முன்னர்ச் சுயநலப் பாட்டுப்பாட முற்பட்டு விட்டோம். இதனை மாற்றி அமைத்து ஆலயங்களில் எங்குநோக்கினும் பல்வேறுபட்ட இன்னிசை முழங்கச் செய்ய வேண்டும். உண்மை அன்பர்களைக் காணுதல் வேண்டும். மக்கட் சமுதாயம் திருந்திவாழ முற்படல் வேண்டும்.

ஆலயங்களில் உள்ள நகைகளை விற்றுவிடுங்கள். திருஉருவங்களுக்கு நகைகள் எதற்கு? மக்கள் பஞ்சத்தால் பசியால் வாடுகின்ற இக்காலத்தில அவற்றால் நாட்டிற்கு எத்தனையோ நன்மைகள் செய்ய முடியுமே. அனேக மக்கள் வாழ்வதற்கு வழிகான முடியுமே. அவை அங்கு இருப்பதைவிட மக்கள் வாழ்விற்குப் பயன்தருவதுதான் நல்லது. ஆகையால் அவற்றை விற்றுவிடுங்கள். விற்றுவிட்டால் மக்கள் நலமுடன் வாழ முடியும் என்று சிலர் கூறுகின்றார்கள். புதுமையின் பெயரால் புரட்சிப் போர்வையைப் போர்த்திக்கொண்டு நாம் என்ன செய்கின்றோம் என்ன சொல்கின்றோம் என்றும் சிந்தித்துப் பாராமல் செய்ய முற்பட்டுவிட்ட காரணத்தால் அவர்கள் கருத்துப்படி ஆலயங்களில் உள்ள நகைகளை விற்றுவிட்டால், குறிப்பிட்ட காலத்திற்குத் தானே அவை பயன்படும். இந்தக் கருத்தையும் அவர்களே தானே கூறுகின்றார்கள்- ஏட்டிலும் எழுதுகின்றார்கள். அவர்கள் எழுதுகின்றபடி கூறுகின்றபடி ஆலயங்களில் இருக்கின்ற நகைகளை விற்றுவிட்டால் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் என்ன செய்வது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆலயங்களின் பெயரால் பஜனை மடங்களின் பெயரால் நிதி திரட்டுங்கள். இவைகள்தான் தமிழ்நாட்டின் பொதுஉடமைச் சொத்து ஏனைய அனைத்தும் தனிமனிதனின் வாழ்வு கருதித்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆலயங்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் பொதுமக்களின் வாழ்விற்குத்தான் பயன்படும் என்பதை எல்லோரும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

கண்ணனை வாழ்வின் லட்சியமாகக் கொண்டு கீதை வழியைப் பின்பற்றி வாழ்க்கையை நடத்தினால் நம்முடைய அன்றாட வாழ்வில் நம்மை வந்து சேருகின்ற துன்பங்கள் அனைத்தும் விரைவில் விலகிவிடும். துன்பம் சூழ்ந்து நின்ற இடத்தில் எல்லாம் இன்பம் பெருக்கெடுத்தோடும். “உன் வாழ்வில் துன்பமெனும் திரை அகன்று அங்கு இன்பமெனும் ஒளி உண்டாக வேண்டுமானால் நீ எக்காலத்தும் ஆண்டவனை மறவாதே. மறந்ததினால்தான் நீ இவ்வுலகில் துன்பத்திற்கு ஆளானாய்” என்று ஒரு பெரியார் எழுதியிருப்பது நம் உள்ளத்தில் அழியாத இடத்தைப் பெறுதல் வேண்டும். இவ்வுலகில் கண்ணன் நாமத்தை நாம் உள்ளத்தூய்மையோடு தினந்தோறும் பிரார்த்தனை செய்து வந்தால் கண்ணன் பாரதி பாடியபடி பல்வேறு உருவங்களில் தோன்றி நமக்கு உதவிபுரிவான் என்பதில் சந்தேகமில்லை.

இந்நகர் ஆரிய வைசிய சமூகத்தினர் சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற பண்பை மேற்கொண்டு பெரியதோர் திட்டமான கல்வித் திட்டத்தை நல்லதொரு முறையில் நடத்துவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. குறைந்த திட்டத்தில் மகமை வசூலிலிருந்து இக்காரியம் செய்து வருவது நாட்டிற்கே ஒரு பெரிய தொண்டாகும். பண்டைத் தமிழகத்தில் சிறுகச் சிறுகக் கொடுக்கின்ற பண்பைத் தலையான தொண்டாகக் கருதிக்கொடுத்தார்கள். அதனைத் தொண்டர் குழாமும் வசூலித்து நல்ல முறையில் செலவிட்டது. அதனால் மக்களும் நாடும் பயன் அடைந்தார்கள்(?). புறத்து நாகரீகம் என்ற ஒன்றிற்குக் கட்டுப்பட்டு வாழ்கின்ற இன்றைய மக்கட்சமுதாயம் சிறுகச் சிறுகக் கொடுக்கின்ற பண்பாட்டை மறந்து விட்டது. மக்கட் சமுதாயம் மறக்கத் தலைப்பட்ட காரணத்தால், அதனை வாங்கிப் பணி செய்கின்ற தொண்டர் குழாமும் மறந்துவிட்டது. அதனால்தான் மக்கட் சமுதாயம் நாளடைவில் கீழான நிலையை அடைந்தது என்பதை யாரும் மறுக்கவோ - மறக்கவோ முடியாது. இவ்வளவு அறுதி உறுதியிட்டுக் கூறக் காரணம் உண்டு. இன்றைய நாட்டின் நிலைமையை நாம் அனைவரும் கண்கூடாகக் காண்கின்றோம். கண்கூடாகக் கண்டும் விதண்டாவாதத்தால் மறுக்க யாரும் முற்பட மாட்டார்கள் என்றுதான் அவ்வளவு உறுதியிட்டுக் கூறினோம். மக்கட் சமுதாயம் கொடுக்கின்ற பண்பையும் தொண்டர்கள் வசூலித்து நல்ல முறையில் செலவிடும் பண்பாட்டையும் மறந்திருத்தால் - இருகூட்டத்தாரும் கடமை தவறாதிருந்தால் இன்று நாட்டில் சராசரியாகக் காண்கின்ற பிச்சைக்காரர்கள் கூட்டத்தைக் காணவே முடியாது. அந்த உயரிய திட்டத்தை மக்கட் சமுதாயாம் கடைப்பிடித்து வாழ முற்பட்டால்தான் வருங்காலச் சமுதாயம் நல்லதொரு முறையில் வாழ முடியும்.

வீட்டிற்கு ஒருபடி அரிசியும் ஒரு ரூபாயுங்கொடுத்தால் மதுரை நகரில் பிச்சைக்காரச் சகோதரர்களேயில்லாமற் செய்து விடலாம். “ஏழையென்றும் அடிமையென்றும் எவருமில்லை சாதியில்” என்ற எடுப்பான சமுதாயத்தையுருவாக்க வேண்டும். உங்கள் வீட்டிற் சிந்துகின்ற அரிசியைக் கொடுங்கள்; சினிமாக் காட்சிக்குச் செலவிடும் பணத்தில் சிறிது செலவிடுங்கள். அருளுள்ளமுடைய பெருமக்கள் இத்திட்டத்தை நிறைவேற்றிப் பிச்சைக்காரர் பிரச்சினையைப் போக்க முன்வருவார்கள் என்று நம்புகிறேன்.

மனிதனாகப் பிறந்தும் நல்லறிவு படைத்தும் இறைவன் உண்டா இல்லையா என்ற ஐயப்பாடு ஏன்? ஆலயங்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் மக்கட் சமுதாயத்தின் நலங்கருதித்தான். ஆலயங்களில் செலவிடும் பொருள்கள் அனைத்தும் வீண் என்று சிலர் கருதுகின்றனர் கூறுகின்றனர் - எழுதுகின்றனர். நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால்தான் அதன் உண்மைப் பொருள் விளங்கும். ஆலயங்களின் பெயரால் செலவிடப்படும் பொருள்கள் அனைத்தும் மக்களின் நலனுக்காகத்தான் செலவிடப்படுகின்றன. தவறான எண்ணத்தில் - குறுக்கு எண்ணத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டு நோக்காமல் உண்மைக்கண்கொண்டு நோக்கினால்தான் அவைகளை வீண் என்று கருதாமல் நீலம் என்று என்று எண்ணத் தோன்றும், மாற்று எண்ணம் கொண்டவர்கள் கூறுகின்றபடி அங்கு ஒன்றும் வீணாகச் செலவிடப்படவில்லை என்பதைக் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றோம். ஆலயங்களைப் பற்றியும் அங்கு நடக்கும் விஷயங்களைப் பற்றியும் நல்லறிவு படைத்த பெருமக்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.

சிவபெருமானும் - திருமாலும் போட்டியில்லாத - மக்கள் விரும்பாத பொருள்களைத்தான் தமக்கெனத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இதிலிருந்து நாமறியும் நீதிகள் பலவாம். மக்கட் சமுதாயத்தில் ஒருவர் விரும்புகின்ற ஒன்றினை மற்றவர் விரும்பக் கூடாது. விரும்பினால் நாட்டில் போட்டியும் பொறாமையும்தான் வளரும். ஆதலால் நாட்டினில் நாம் எவரும் விரும்பாத போட்டி, பொறாமை வளரத் துணைசெய்யாத ஒன்றினைத்தான் ஏற்றுக்கொள்ள விரும்புதல் வேண்டும். இதன்மூலம் மக்கட் சமுதாயம் உள்ளத்தைப் பண்படுத்திக் கொள்ளல் வேண்டும். இப்படிப்பட்ட தத்துவங்களைப் புரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ள மனம் இல்லாமல் அவைகளைப் பற்றிக் குறைகூறுதனால் யாருக்கு என்ன பயன்?

கண்ணனை நினைக்கும் பொழுது சேவையை நினைத்துக் கொள்ளுங்கள். தீயனவற்றை ஒதுக்கி நல்லனவற்றை வளர்க்கும் அவன் தன்மையை உணருங்கள். எளியார்ககும் எளியன் அவன். தொண்டர்க்கும் தொண்டன் அவன். மக்கட் சமுதாயம் கண்ணனை வழிபடுவது போற்றத்தக்கது; வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் கண்ணன் காட்டிய வழியைப் பின்பற்றி நடக்கவேண்டும். பின்பற்றி நடக்காமல் வேற்று வழிகளில் சென்றால் அவன் நாமத்தைச் சொல்லி அவன் திருஉருவத்தை வழிபடுவதில் பயன் இல்லை. நீங்கள் எல்லோரும் தொண்டுள்ளம் படைத்தவர்களாக பொது நலப்பணியை மேற்கொண்ட தொண்டர்களாக வாழ வேண்டும். எளியார்க்குச் சேவை செய்வதுதான் கண்ணனுக்குச் செய்யும் தொண்டு. அந்த உயரிய வழியில் மனத்தைப் பழக்கி அதன் வழியில் உறுதியாகச் செலுத்த வேண்டும். எல்லோரும் பாண்டவர்களைப் போலப் பக்தியை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு சமயப் பற்றுடையவனும் தான் சமயப்பற்றுடையவனாக இருத்தல் மட்டும் போதாது. தன்னைச் சுற்றி வாழ்கின்ற மக்களையும் சமயப் பற்றுடையவர்களாக - பிரார்த்தனையைப் பின்பற்றுகிறவர்களாக - பக்தியுள்ளவர்களாகச் செய்ய வேண்டும். இதுதான் வாழ்வின் கடமை என்று ஒவ்வொரு தமிழனும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். பக்தியுடையவர்களுக்குத் தான் இனித்தமுடைய பொற்பாதம் கிடைக்கும். அவர்களின் வாழ்வுதான் நன்கு அமையும்; இன்பம் பெருகும். சமயப்பற்று இல்லாதவனுக்கு இனி இந்த நாட்டில் வாழ உரிமை கிடையாது என்ற சூழ்நிலையை உண்டாக்க வேண்டும்.

எல்லோரும் பிரார்த்தனையின் துணைகொண்டு அன்பும் அறமும் உடையவர்களாக வாழ்வோமாக. மக்கட் குலம் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க! உங்கள் அனைவரின் தொண்டுள்ளமும் பரிபூரண சேவையும் நாட்டுக்கு நலம்பல தருவதாகுக.


மதுரை நவநீதக் கண்ணன் பஜனைக் கூட

8 ஆம் ஆண்டு விழாவில்

தவத்திரு அடிகளார் நிகழ்த்திய தலைமையுரை