உள்ளடக்கத்துக்குச் செல்

அருள்விளக்க மாலை (21-40)

விக்கிமூலம் இலிருந்து

திருவருட்பிரகாச வள்ளலார்

[தொகு]

திருவாய் மலர்ந்தருளிய

[தொகு]

அருள்விளக்க மாலை (21-40)

[தொகு]

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)


பாடல்: 21 (நானென்றும்)

[தொகு]
நானென்றும் தானென்றும் நாடாத நிலையில் ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே
ஊனென்றும் உயிரென்றும் குறியாமே முழுதும் ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே
தேனென்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும் தேகமுமுள் ளுயிருணர்வுந் தித்திக்குஞ் சுவையே
வானென்றும் ஒளியென்றும் வகுப்பரிதாம் பொதுவில் வயங்குநடத் தரசேயென் மாலையுமேற் றருளே! (21)

பாடல்: 22 (எட்டிரண்டும்)

[தொகு]
எட்டிரண்டும் என்னென்றால் மயங்கியவென் றனக்கே, எட்டாதநிலை யெல்லாம் எட்டுவித்த குருவே
கட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே, சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே
மட்டிதுவென் றறிவதற்கு மாட்டாதே மறைகள் மவுனமுறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே, தாழ்மொழியென் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே! (22)

பாடல்: 23 (சாதிகுலஞ்சமய)

[தொகு]
சாதிகுலஞ் சமய1மெலாந் தவிர்த்தெனைமேல் ஏற்றித் தனித்ததிரு வமுதளித்த தனித்தலைமைப் பொருளே
ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம் ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்துநிறை ஒளியே
ஓதியுணர்ந் தவரெல்லாம் எனைக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் யுறவே
சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும் தூயநடத் தரசேஎன் சொல்லுமணிந் தருளே! (23)
1. "சாதி பிறப்புப் பற்றியது; குலம் தொழில் பற்றியது; சமயம் கொள்கை பற்றியது." - உரையாசிரியர் மா.வயித்தியலிங்கன்,2013.

பாடல்: 24 (அடிக்கடியென்)

[தொகு]
அடிக்கடியென் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி அருளுருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே
படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல், பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே
பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப் பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே
அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே ஆட்புரி அரசேயென் அலங்கலணிந் தருளே. (24)

பாடல்: 25 (அறையாத)

[தொகு]
அறையாத பெருங்காற் றடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத்
துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத் தூண்டாதே விளங்குகின்ற சோதிமணி விளக்கே
மறையாதே குறையாதே களங்கலும் இல்லாதே மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
இறையாயெவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும் இலங்குநடத் தரசேயென் இசையும் அணிந்தருளே! (25)

பாடல்: 26 (பார்த்தாலும்)

[தொகு]
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கநின்று கேட்டாலும் பரிந்துள்ளுணர்ந் தாலும்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டியணைத் தாலும் இத்தனைக்கும் தித்திக்கு மினி்த்தசுவைக் கரும்பே
வேர்த்தாவி மயங்காது கனி்ந்தநறுங் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்குமருள் அமுதே
தீர்த்தாஎன் றன்பரெலாம் தொழப்பொதுவில் நடிக்கும் தெய்வநடத் தரசேயென் சிறுமொழியேற் றருளே! (26)

பாடல்: 27 (பற்றுதலும்)

[தொகு]
பற்றுதலும் விடுதலுமுள் ளடங்குதலும் மீட்டும் படுதலொடு சுடுதலும்புண் படுத்தலுமில் லாதே
உற்றொளிகொண் டோங்கியெங்கும் தன்மயமாய் ஞான உருவாகி யுயிர்க்குயிரா யோங்குகின்ற நெருப்பே
சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே சுடுதலுமில் லாதென்றும் துலங்குகின்ற சுடரே
முற்றுமுணர்ந் தவருளத்தே திருச்சிற்றம் பலத்தே முயங்கும் நடத்தரசேயென் மொழியுமணிந் தருளே! (27)

பாடல்: 28 (ஐம்பூதபரங்)

[தொகு]
ஐம்பூத பரங்கள்முதல் நான்குமவற் றுள்ளே அடுத்திடுநந் நான்குமவை அகம்புறமேல் நடுக்கீழ்
கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க் காணுமவற் றப்புறமும் கலந்ததனிக் கனலே
செம்பூத உலகங்கள் பூதா்ண்ட வகைகள் செழித்திடநற் கதிர்பரப்பித் திகழ்கின்ற சுடரே
வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில் விளங்குநடத் தரசேயென் விளம்புமணிந் தருளே! (28)

பாடல்: 29 (வாதுறுமிந்திய)

[தொகு]
வாதுறுமிந் தியகரண பரங்கள்முதல் நான்கு்ம் வகுத்திடுநந் நான்குமகம் புறமேல்கீழ் நடுப்பால்
ஓதுறுமற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
சூதுறுமிந் தியகரண லோகாண்ட மனைத்தும் சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே
போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில் புரியும்நடத் தரசேயென் புகலுமணிந் தருளே! (29)

பாடல்: 30 (பகுதிபர)

[தொகு]
பகுதிபர முதல்நான்கு மவற்றுறுநந் நான்கும் பரவியெலாம் தன்மயமாம் படிநிறைந்து விளங்கித்
தகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே தனியொளிச்செங் கோல்நடத்தித் தழைக்கின்ற ஒளியே
மிகுதிபெறு பகுதியுல கம்பகுதி அண்டம் விளங்கவருட் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
தொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும் துரியநடத் தரசேயென் சொல்லுமணிந் தருளே! (30)

பாடல்: 31 (மாமாயை)

[தொகு]
மாமாயைப் பரமாதி நான்குமவற் றுள்ளே வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி
ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே
தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம் தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்தபெருஞ் சுடரே
தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும் தெய்வநடத் தரசேயென் சிறுமொழியேற் றருளே! (31)

பாடல்: 32 (சுத்தபரமுதல்)

[தொகு]
சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும் தூயஒளி வடிவாகத் துலங்குமொளி யளித்தே
நித்தபரம் பரநடுவாய் முதலாயந் தமதாய் நீடியவோர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே
வித்தமுறும் சுத்தபர லோகாண்ட மனைத்தும் விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில் தனித்தநடனத் தரசேயென் சாற்றுமணிந் தருளே! (32)

பாடல்: 33 (சாற்றுகின்ற)

[தொகு]
சாற்றுகின்ற கலையைந்தில் பரமாதி நான்கும் தக்கவவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே
ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும் உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே
தோற்றுகின்ற கலையுலகங் கலையண்ட முழுதும் துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே
போற்றுகின்ற மெய்யடியர் களிப்பநடித் தருளும் பொதுவில்நடத் தரசேயென் புகலுமணிந் தருளே! (33)

பாடல்: 34 (நாட்டியவோங்)

[தொகு]
நாட்டியவோங் காரமைந்தில் பரமுதல் ஓர்நான்கும் நந்நான்கு மாறிடத்தும் நயந்துநிறைந் தருளி
ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க இனிதுநின்று விளங்குகின்ற இன்பமய ஒளியே
கூட்டியவோங் காரவுல கோங்கார வண்டம் குடிவிளங்கக் கதிர்பரப்பிக் குலவுபெருஞ் சுடரே
பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும் பரமநடத் தரசேயென் பாட்டுமணிந் தருளே! (34)

பாடல்: 35 (மன்னுகின்ற)

[தொகு]
மன்னுகின்ற அபரசத்திப் பரமாதி யவற்றுள் வகுத்தநிலை யாதியெலாம் வயங்கவயி னெல்லாம்
பன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள் பரவிவிளங் கிடவிளங்கிப் பதிந்தருளும் ஒளியே
துன்னபர சத்தியுல கபரசத்தி யண்டம் சுகம்பெறவே கதிர்பரப்பித் துலங்குகின்ற சுடரே
உன்னுமன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே யோங்கும்நடத் தரசேயென் னுரையுமணிந் தருளே! (35)

பாடல்: 36 (விளங்குபர)

[தொகு]
விளங்குபர சத்திகளின் பரமாதி யவற்றுள் விரிந்தநிலை யாதியெலாம் விளங்கியொளி வழங்கிக்
களங்கமிலாப் பரவெளியில் அந்தமுதல் நடுத்தான் காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பே ரொளியே
உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும் ஒளிவிளங்குச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே
வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே மகிழ்ந்தெனது சொல்லெனுமோர் மாலையணிந் தருளே! (36)

பாடல்: 37 (தெரிந்தமகா)

[தொகு]
தெரிந்தமகா சுத்தபர முதலுமவற் றுள்ளே சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே
பரிந்தவொரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே
விரிந்தமகா சுத்தபர லோகாண்ட முழுதும் மெய்யறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே
புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே புன்மொழியென் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே! (37)

பாடல்: 38 (வாய்ந்தபர)

[தொகு]
வாய்ந்தபர நாதம் ஐந்தில் பரமுதலும் அவற்றுள் மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே
ஆய்ந்தபர சிவவெளியில் வெளியுருவாய் எல்லாம் ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பே ரொளியே
தோய்ந்தபர நாதவுல கண்டமெலாம் விளங்கச் சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே
வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே விளம்புறுமென் சொன்மாலை விளங்கவணிந் தருளே! (38)

பாடல்: 39 (கல்லார்க்கும்)

[தொகு]
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நட மிடுகின்ற சிவமே என்னரசே யான்புகலும் இசையுமணிந் தருளே! (39)

பாடல்: 40 (காட்சியுறக்)

[தொகு]
காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணமுளதாய்க் கையுமெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த் தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவை யீகுவதாய் மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
ஆட்சியுற அருளொளியால் திருச்சிற்றம் பலத்தே ஆடல்புரி அரசேயென் அலங்கலணிந் தருளே!






பார்க்க
அருட்பிரகாச வள்ளலார் பாடல்கள்
அருள்விளக்க மாலை(01-20)
அருள்விளக்க மாலை (41-60)
அருள்விளக்க மாலை (61-80)
அருள்விளக்க மாலை (81-100)
"https://ta.wikisource.org/w/index.php?title=அருள்விளக்க_மாலை_(21-40)&oldid=27013" இலிருந்து மீள்விக்கப்பட்டது