உள்ளடக்கத்துக்குச் செல்

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி/அண்ணா ஒரு தமிழ் பூ மாலை!

விக்கிமூலம் இலிருந்து


8. அண்ணா ஒரு தமிழ்ப் பூ மாலை!




எங்கள் அண்ணனே தத்துவத்தின் தேக்கமே! எதிர்காலத்தின் ஆக்கமே!

கிழக்காசிய நாடுகளைச் சுற்றி விட்டு வந்த உதய சூரியனே!

கடல் கடந்த நாடுகள் தங்களைப் புகழ்ந்து, கோலாகல வரவேற்பைத் தந்தன!

எதிரிகளும் ஊமையாகும்படி கலாச்சாரத் தூதுவராய் சென்று: கீர்த்திக் கொடி நாட்டிவிட்டு வந்தீர்!

தலைநகரம்; உமக்கு வீர வரலாற்று விழாவெடுத்துத் தாங்கொணா மகிழ்ச்சியுற்றது!

அது கண்டு; நாங்கள் தேனில் விழுந்த எறும்பு களானோம்!

உம் தோற்றம் கண்ட இடமெல்லாம்; மக்கள் பூந்தோட்ட மாயினர்!

உம் நோக்கம் படர்ந்த இடமெல்லாம்; வீரத்தின் விளையாடலாகத் திகழ்ந்தது!

அண்ணனே! நீர் தறுகண்மையின் தோற்றுவாய்!

இனியனே! பனியனைய மலர்க்கண்ணா!

பாவையர் கூட்டம் உம் பளிங்கு முகம் கண்டு, தமிழின்

தலைமகனே வருக வருகவென்று பள்ளுபாடிற்றே!

அன்னைக் குலம் ஆரத்தி எடுத்து அகமகிழ்ந்தனவே!

அன்பு மாலைகள் ஆயிரக் கணக்கில் விழுந்தன; உமது அழகூட்டும் அணாருக்கு.

சிறுவர்கள் இனிப்பு வழங்கினர்;

வெடித்த எரிமலையோ - பிளந்த பூகம்ப எதிரொலியோ என்று; மக்கள், 'அண்ணா வாழ்க'; என்ற வீரமுழக்கமிட்டனர்!

அந்த ஒலி முழக்கங்களைக் கேட்ட அரசியல் எதிரிகள் - மூக்கின் மீது விரல் வைத்தனர்!

புருவத்தை மேலேற்றினர்; புல்லரித்த மக்கள்!

உம்மை வரவேற்க - இன்முகங்காண; அமுத சொற்களைக் கேட்க, எமக்குள் எத்துணைப் போட்டி அண்ணா!

பரி பூட்டிய தேரிலே; தமிழ் மன்னவனே உம்மைப் பார்த்துப் பரவசமடைந்தோம்!

உதயசூரியன், வானவீதியிலே உல்லாச பவனி வருவதைப் போல, காட்சியளித்தீர்!

'அடடா...வோ! அண்ணாவின் தலைமுறையிலே வாழ எடுத்த பிறவியே பிறவி என்று, எம்மை யாமே, ஏற்றிப் போற்றிக் கொண்டோமே!

மண்ணிலே வேலி போடலாம்; விண்ணிலே போட முடியுமா?

உடலைக் கட்டலாம்; உயிரைக் கட்ட முடியுமா?

விழா என்ற பெயரிலே விண்ணிலே வேலியமைத்தவர்களைத் தமிழகம் கண்டது:

உயிர், இவர்களிடம் உத்திரவு பெற்றுப் போவதைப் போல, அதையும் கட்டுகின்றோம் என்றார்கள்:

நாங்கள் அத்தகையச் செயல்களை நாடவில்லை!

ஏழை மக்கள், இதயம் குளிர பாராட்டுவதைக் கண்டோம்!

மாடி வீடுகளிலே நின்ற மக்கள், மாலைகளை வீசியதை மனமாரக் கண்டோம்!

குடில் மன்னர்கள், குதூகலத்தால் பூப்பாவாடை விரித்ததைப் பூரித்துப் பார்த்தோம்!

தொண்டர்கள், தங்கள் தேரோடும் வீதிகளிலே எல்லாம் மண்ணாகிக் கிடந்தார்கள்! ஏன்?

உயிர் எமக்கு பெரிதல்ல; அண்ணன் அன்புதான் பெரிதென்று:

அதனைப் பெற உயிரையும் விலையாகத் தருவோம் என்ற ஆர்வமேலிட்டால் காட்சியளித்தனர்.

எமது இதயவீணையை மீட்டி ஏழிசைப் பாடி வந்தோம் - ஊர்வலத்திலே!

நரம்புகள் எழுப்பிய நாதமாக, நடை பாட்டு இசைத்து வந்தோம்!

இதற்கெலாம் காரணம் என்ன? எங்கள் இலட்சியமே அறிஞர் அண்ணாதான்!

எங்கள் வாழ்வும் வளமும், அறிஞர் அண்ணாவே என்ற எண்னம் தான்!

இதைவிட யாம் பெறும்பேறு; இப்பிறவியில் இல்லை என்பதை உணர்ந்த காரணத்தால்தான் அண்ணா!

கடிக்க நனி சொட்டும் கரும்பு!
மோப்ப மணக்கின்ற மலர்!
கேட்கப் பரவி வரும் இசை!
நோக்கம் எழிலீயும் காட்சி!
உணர சுகந்தரும் தென்னல்!
எண்ண எண்ண இனிமை தரும் அறிவு!

இத்தனையும் வென்ற ஒரு பெருந்தலைவர் நீர்தானே, அண்ணா!

மாணிக்க விளக்கின் மரகதத் தீபமாக இருந்தது - எங்கள் வரவேற்பைத் தாங்கள் ஏற்றபோது:

மாசறு உமது முகத்திற்கு, இதற்குமேல் உவமை கூறமுடியவில்லையே அண்ணா!

ஆட்சிக் கோணலை நிமிர்த்திட: முழக்கமிட்டீர் கடற்கரையிலே!

காசறு கொள்கைக்கு காவலராய் நின்றீர்!

மேதகு மேன்மையால் மிளிர்கின்ற தங்களது அறிவுரைக்கு, கோடி வணக்கங்கள் செய்தோம்!

புதிருக்குப் புதிராகின்ற புலவோய்!

எதிருக்கும் எதிராய் உம்மை எதிர்க்கின்ற சக்தி ஏது?

நாட்டிலே நீங்கள் ஒரு பிரச்சனையாகி நின்றீர்!

ஆட்சி பிரச்சனைக்கு நீங்கள் ஒர் ஊழி!

வரலாற்றில் நீங்கள் ஒரு பென்னேடு!!

இலக்கியத்தில் நீங்கள் ஒரு காவியம்!

'நேற்று', நீங்கள் இல்லாததால் கலங்குகிறது!

'நாளை' உங்களுக்காக ஏங்கி நிற்கிறது!

அறிஞரே! மெரீனா கடற்கரையிலே நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டோம்!

உடல் புல்லரித்தது! உவகைக் கலமேறினோம்: வங்கக் கடலிலே உலவி வலம் வந்தோம்:

தமிழாய்த் திகழ்ந்து, திருக்குறளாய் சிரித்தீர்கள்!

பூகோளமாய் விளங்கி, முல்லை நிலமாய் நகைத்தீர்கள்:

கணிதமாயிருந்து, வகுப்பன வகுத்து, கழிப்பன கழித்தீர்கள்!

கூட்டுவதைக் கூட்டிப் பெருக்குவதைப் பெருக்கினீர்கள்!

சரித்திரமாய் இருந்து; சமாதானத்தை நிலை நாட்டி, பொற் காலத்தை உருவாக்கியவருக்குப் பெயர் அறிஞர் அண்ணா!

விஞ்ஞானமாய் விளங்கி, புதியன கண்டுபிடித்து ஈந்து, எமைப் புதியதோர் குடிமக்களாகிய வித்தகர் அண்ணா!

மனோதத்துவமாய் திகழ்ந்து, எமது மனக்குறைகளை மன்னிக்கும் மாமேதையின் நாமம் அண்ணா!

தத்துவமாய் எமை உருவாக்கி, மோன நிலையிலே ஆழ்த்தும் அறிஞர்க்கறிஞரது பெயர் அண்ணா!

அண்ணலே! தென்னகத்து மன்னவனே! தங்கள் பெருமையை உலக நாடுகள் உணர்ந்துவிட்டன:

அதனால், நாங்கள் தங்களுடன் ஐக்கியமாகிவிட்டோம்.

தமிழ் மாலை சூட்டித் தங்களைக் கண்டோம் பூரித்தோம்! பெருமையுற்றோம்.

'அறுபத்தேழு' பற்றி நீங்கள் ஆற்றிய கருத்துகளை அகத்திலே இருத்திக் கொண்டோம்!

'கருமமே கண்ணாகி, கொள்கைப் பகையை அரியணையிலேயிருந்து இறக்குவதே எமது பணியென்று ஆற்றினோம்! அதைத் தங்கள் காலடிக்குக் காணிக்கையாக்கிக் களித்தோம்!

இந்த சபதத்தை எம் இமை மூடினும் மறவோம்! மறவோம்!