அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்/முன்னுரை
இது அறிவியல் ஊழி. அறிவியல் உணர்வும் அறிவும் மக்களிடையே பொங்கிப் பொழிய வேண்டிய கால கட்டம். வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அறிவியல் கண்ணோட்டம் ஆட்சி செய்ய வேண்டிய அவசிய அவசரச் சூழல்.
இந்நிலையில் அறிவியல் அறிவுப் பெருக்கத்திற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது. அத் தேவையின் ஒரு பகுதியை நிறைவு செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளதே "அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்’ எனும் இந்நூல்.
அறிவியல் தமிழ் படைப்பு ஆர்வலர்களுக்கு உறுதுணையாயமையும் பொருட்டு இக் கலைச்சொல் களஞ்சியம் உருவாக் கப்பட்டிருப்பினும் வேறு சில முக்கிய நோக்கங்களையும் உட்கொண்டே வெளி வருகிறது.
சாதாரண 'கலைச்சொல்' அகராதி'களினின்றும் இஃது சற்று வேறுபட்டது. ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்க் கலைச்சொற்களைக் கொடுப்பதைவிட அச் சொல்லின் செயற்பாட்டு வினை சற்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சொற்பொருள் விளக்கம் பெற இயல்கின்றது. இதனால் இதனினும் சுருங்கிய வடிவிலான சொற்செட்டும் பொருட் செறிவுமுடைய நயமிக்கக் கலைச்சொற்களை ஆர்வமுடையவர்கள் நாளை உருவாக்க வழியேற்படலாம்.
ஒவ்வொரு கலைச்சொல்லின் வாயிலாக அறிவியல் தகவல்களைத் துணுக்குச் செய்திகளாக வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்பது எனது நோக்கமாகும். ஏனெனில், இன்றைய சூழ்நிலையில் விரிவான அறிவியல், தொழில்நுட்பச் செய்திகளைக் கட்டுரைகள் வாயிலாகப் படித்தறியும் பொறுமையும் நேரமும் மிகக் குறைவாகவே உள்ளது. அவற்றை ஒரு சில வழிகளில் செய்தித் துணுக்குகளாகத் தரும்போது ஒரு சில விநாடிகளில் படித்தறிய மனம் அவாவுவது இயல்பு. அவ் வகையில் VI
அறிவியல் செய்திகளை வாசகர்களுக்கு வழங்கவே இந்நூல் கலைக் களஞ்சிய வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் தமிழில் வெளிவரும் முதல் கலைச்சொற் களஞ்சியம் இதுவேயாகும் என்பதில் ஐயமில்லை.
அறிவியல் தமிழ் வளர்ச்சியில் நாட்டமுள்ள தமிழ் ஆர்வலர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும் இந்நூல் அறிவு விருந்தாக அமைந்து பெருந்துணை புரியும் என நம்புகிறேன்.
இந்நூலை உருவாக்குவதில் எனக்குப் பெருந்துணையாயமைந்தவர் நண்பர் திரு இரா. நடராசன் அவர்கள். அறிவியல் தமிழ் வளர்ச்சியில் என்னொத்த ஆர்வமும் உழைப்பு நாட்டமுமுள்ள அவர்களின் உதவியையும் ஒத்துழைப்பையும் இச் சமயத்தில் நன்றிப் பெருக்குடன் நினைவு கூர்கிறேன்.
எனது மற்ற அறிவியல் நூல்களை ஏற்று ஆதரவளித்து வரும் தமிழுலகம் இந்நூலையும் ஏற்று என் முயற்சிக்குப் பேராதரவு அளிக்கும் என நம்புகிறேன்.
20-9-1993 மணவை முஸ்தபாஎன் பெற்றோர்களின்
இனிய நினைவுக்கு