உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியல் திருவள்ளுவம்/அறிவியல் திருவள்ளுவம்

விக்கிமூலம் இலிருந்து

அறிவியல் திருவள்ளுவம்

1. அ. அறிவியற் கவிஞர் திருவள்ளுவர்

திருவள்ளுவப் பெருந்தகைக்குக் 'கவிஞர்' என்னும் சொல்லை அடைமொழியாக்கலாம். ஆக்கினால் அச்சொல் பெருமை பெறும். அதனுடன் 'அறிவியல்’ என்பதை அடைமொழியாக்கினால் அடைமொழியாக்குவோன் திருவள்ளுவரின் அறிவியல் திறத்தை அணுகியவன் ஆகிறான்.

திருவள்ளுவர் கவிஞரா ?

திருவள்ளுவரைப் ‘புலவர் திருவள்ளுவர்’, ‘மன்புலவன் திருவள்ளுவன்', ‘முதற் பாவலர்’- எனப் புலவராகவும், பாவலராகவும் ‘மாலை’[1] சூட்டிப் போற்றினர். மணிமேகலை ஆசிரியர் சாத்தனாரும் ‘பொய்யில் புலவன்’[2] என்றார். முந்தையோர் ‘கவிஞர்’ என்று பாடவில்லை.

கம்பருடனும், இளங்கோவுடனும் இணைத்துப் பாடிய நம் காலக் கவிமாமன்னன் பாரதி, ‘யாமறிந்த புலவரிலே’ என்று திருவள்ளுவரைப் புலவராகப் போற்றினார்.

ஆனால், அவரே,

“கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் முதலிய மகா கவிகளுக்கு ஞாபகச் சின்னமும் வருசோற்சவமும் ஏற்பாடு செய்ய வேண்டும்”[3] என்று கட்டுரையில் 'கவி'யாகக் குறித்தார். பாரதிதான் திருவள்ளுவரைக் 'கவிஞர்' என்று குறித்த முதற் கவிஞர். அவ்வையாரையும் "கவியரசி" என்று போற்றினார்.

புலவர் புலமை உடையவர். புலமையால் பாடம் சொல்லும் ஆசிரியராகவும், எழுதும் ஆசிரியராகவும் விளங்குவார். முற்காலத்தில் எழுதும் புலமை "செய்யுள்' எழுதுவதாக இருந்தது. பின்னர் உரைநடையும் கூடிற்று. செய்யுளுக்குப் 'பா, பாட்டு' எனவும் பெயர். பாவைப் பாடுபவர், எழுதுபவர் பாவலர் எனப்படுவார்.

செய்யுளும் பாவும் பாட்டும் இலக்கணக் கட்டுக் கோப்புடன் அமைபவை. சீரான பலவகை ஓசைகள் உடையவை. ஆற்றுநீரில் மிதந்து செல்வது போன்று பாவின் பொருளை எளிமையாகக் கொள்ளலாம். எதிர்த்து நீந்துவது போன்று மூழ்கி வளப்பொருளை எடுப்பது போன்று முயன்றும் பொருள் கொள்ளலாம்.

'செய்யுள், பா, பாட்டு’ எனப்படுபவைதாம் 'கவிதை' எனப்படுவதும். கவிதை இலக்கண அமைப்பு உடையதே. பாரதியாரும் பாவேந்தர் பாரதிதாசனாரும் செய்யுள் இலக்கணம் வழுவாது எழுதினர். அவர்தம் செய்யுள்களும் பாக்களும் பாட்டும் 'பாரதியார்கவிதைகள்', 'பாரதிதாசன் கவிதைகள்’ எனக் கவிதைப்பெயரில் வழங்கப்படுகின்றன.

பொதுவான ஒரு கருத்து, 'செய்யுளைப் பாடுபவன் புலவன்; கவிதை எழுதுபவன் கவிஞன் என்பது. இதற்கு மாற்றாக ஓர் அமைதி சொல்வதுபோன்று திருஞானசம்பந்தர் "உரவார் கலையின் கவிதைப் புலவர்"[4] என்று "கவிதைப் புலவர்" என்னும் தொடரை வழங்கினார்.

ஒரு கருத்திற்குப் பழமைச்சொல்லும் இருக்கும். புதுமையாகச் சொல்லாக்கமும் அமையும். இவ்விரண்டையும் சங்க இலக்கியங்களிற் காணலாம்.

கவிதை - சங்கச்சொல்

'செய்யுள், பா, பாட்டு’ என்னும் பழமைச் சொற்களை தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் காண்கிறோம். சொல்லாக்கமான 'கவிதை' என்னும் சொல்லை முதன்முதலில் பரிபாடல் காட்டுகிறது.வையை ஆற்றைப் பாடிய ஆசிரியர் நல்லந்துவனார் என்பார்,

"புலவர் புல
நாவிற் புனைந்த நன்கவிதை"
[5]

என்று பாடினார். இதிலுள்ள ‘கவிதை' என்னும் சொல் அக்காலப் புதுமைப் படைப்புச் சொல். புலவர் புலமையால் பாடும் செய்யுளுக்குத்தான் 'கவிதை' என்னும் சொல்லை ஆக்குவதாக ஆசிரியர் நல்லந்துவனார் "புலவர், புலம்" எனும் இரண்டு சொற்களையும் முன்னே வைத்துள்ளார்.

இதற்குப் பொருள் விரித்த பரிமேலழகரும்,

"கவிதை-கவியின் தன்மை. அஃது ஈண்டு செய்யுள் மேல் நின்றது” என்றார். இது, 'செய்யுள்' என்னும் சொல்லுக்குரிய மாற்றுச் சொல்லாகக் 'கவிதை' என்பதைக் காட்டியதாகும்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்ச மூலத்தில்,

"செந்தமிழ் தேற்றாதான் கவிசெயல்
நாடின் நகை"[6]

என்பதில் 'கவி' என்னும் சொல் உள்ளது. இதனை எழுதியவர் காரியாசான் என்பவர்.

கவிதை - தமிழ்ச்சொல்

'கவிதை, கவி'- என்னும் சொற்கள் பற்றி ஓர் ஐயம் எழலாம். பரிபாடலிலும், மாமூலத்திலும் பல வட சொற்கள் உள்ளன. அவைபோன்று 'இவையிரண்டும் வடசொற்கள் ஆகாவோ(?) என்று வினவலாம். இந்த ஐயம் தோன்றி, நிலைத்து, உறுதியான முடிவாக வடமொழிதான் என்று இக்காலத்தில் கருதப்படுகிறது.

பாரதிதாசனார் புரட்சிக் கவிஞர் என்று புகழப் பட்டவர். இப்புகழ் மொழியில் உள்ள 'கவிஞர்' என்பதை வடமொழியாகக் கொண்டு அதனை அவருக்கு வழங்க மனமின்றி 'பா வேந்தர்'என்று புகழப்படுகிறார். ஆனால், பாவேந்தராம் புரட்சிக் கவிஞர் அவர்களே 'கவிதை' தமிழ்ச்சொல் என்று எழுதினார். அவர் கருத்தின்படியும் 'கவிதை' என்பது தமிழ்ச் சொல்லே.

எவ்வாறு?

'கவிதை' என்னும் தமிழ்ச் சொல்லிற்குப் பகுதி 'கவி'. இதற்கு மூலச்சொல் 'கவ்’ என்பது 'கவ்’ என்றால் கவ்வுதல், கவர்தல் கவர்ச்சித்தல் எனப் பொருள்படும். இதற்குத் திருவள்ளுவரே சான்று தந்தார் :

"கவ்வையால் கவ்விது காமம்" (1144) என்னும் தொடரில் 'கவ்' இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது. முதலில் உள்ள 'கவ்வை' என்பதற்குத் 'துன்பம்' என்று பொருள். அஃதாவது கவ்வுதலால் ஏற்படும் மனத்துன்பம். இக்குறட்பாவில் கவ்விய, 'அலர்’ என்னும் பழிச்சொல்லும் துன்பத்தைக் குறிக்கும். இரண்டாவதாக உள்ள 'கவ்' என்பது கவர்ச்சியுள்ளது; 'கவர்ச்சியால் இன்பம் தருவது' என்னும் பொருள் காட்டுவது.

இஃது இ என்னும் இறுதி இணைந்து 'கவி' என்னும் சொல்லாயிற்று, செவ் + இ = செவி: குவ்+இ = குவி (குவியல்); புவ்+இ = புவி என்றெல்லாம் ஆனமை போன்று 'கவி' உருப்பெற்றது. ('பெளவம்' என்னும் தமிழ்ச் சொல்லுக்குக் 'கடல்’ என்று பொருள். பெளவம், 'புவ்வம்' என்றாகும். "புவ்வத்-தாமரை”[7] என்று பாடப்பட்டுள்ளது). 'புவ்’ என்னும் கடல் நீரை உடையது புவி.

இச்சான்றுகளால் 'கவி' என்னும் சொல் தமிழ்ச்சொல். 'கவி' என்பது இடையில் 'த்' என்னும் எழுத்துப்பேறு பெற்று ஐ இறுதியாகக் 'கவிதை' என்னும் சொல் ஆக்கம் பெற்றது. கவ்விக் கவரும் தன்மையை உடையது 'கவிதை'; தன் சொற்சுவையால் படிப்போர் உள்ளத்தைக் கவ்விக் கவர்வதை உடையது 'கவிதை'.

'த்+ஐ=தை' என்று முடிவுறும் சொற்களாக ஓதை,'அகுதை, மருதை, சிவதை’ என்னும் சொற்கள் தமிழில் உள்ளமையும் சான்றாகும். மொழி மூல அடித்தளத்தாலும், சொல் இலக்கண அமைப்பாலும், சொல்லாக்கக் கருத்தாலும் 'கவிதை' என்னும் சொல் புத்தாக்கமான தமிழ்ச் சொல்லேயாகும். இது செய்யுளையும் பாவையும் பாட்டையும் குறிக்கும்.

கவிதையும் பாவும்

இக்காலத்தில் கவிதையுடன் பிற சொற்களும் எந்த அளவில் வழக்கில் உள்ளன? புலவர்களில் சிலரே செய்யுள் என்னும் சொல்லை வழங்குகின்றனர். தனித்தமிழ் உணர்வுடையோர் 'கவிதை' என்னும் சொல்லை வடசொல் என்று கருதுகின்றனர், எனவே, பா, பாட்டு இரண்டையும் கொண்டுள்ளனர். பெரும்பாலோர் ‘கவிதை' என்பதையே வழங்குகின்றனர். இன்று ஆட்சி செய்வது கவிதையே.

இக்காலச் சூழலில் 'செய்யுள், பா' என்பன இலக்கணச் செறிவு உடையவை என்றும், முயன்று பொருள் காணப்பட வேண்டியவை என்றும் கருதப்படுவனவாகும். கவிதை "எளிமையானது, சுவையுள்ளது” என்று கொள்ளப்படுகிறது.

செய்யுளையும் கவிதையையும் ஈடுகட்டிப் பார்க்க வேண்டும்.

மயிலின் கால் அடிக்கும் நொச்சி இலைக்கும் மாற்றி மாற்றி உவமைகளை இரண்டு இலக்கியங்களில் காண முடிகிறது.


"மயிலடி இலைய மாக்குரல் நொச்சி"[8]

இது குறுந்தொகை என்னும் சங்க இலக்கியச் செய்யுள்.

"நொச்சிப் பாசிலை அன்ன பைக்தாள் மஞ்சை"[9]

இது திருவிளையாடற் புராணச் செய்யுள்.

'நொச்சி இலைபோல் மயிலின் கால்’ இது நம் காலத்துக் கவிஞர் சுரதா அவர்களின் கவிதை.

முன்னர் செய்யுளாகக் காணப்படுபவற்றுள் உள்ள உவமைக் கருத்தே இங்குக் கவிதை எனப்படுகிறது. இவ் உவமையைப் பாடியதைக் கருதியும் கவிஞர் சுரதா "உவமைக் கவிஞர்' என்று பாராட்டப்பட்டார்.

மற்றொன்று:

குளத்து நீரில் செக்கச் சிவந்த ஆம்பல் பூத்ததை முத்தொள்ளாயிர வெண்பாச் செய்யுள்,


"வெள்ளம் தீப்பட்டது” என்கின்றது. இக்காலப்

புதுக்கவிதை ஒன்று முத்தொள்ளாயிரத் தொடரை வட மொழியில் மொழி பெயர்த்தது போன்று.

"ஜலத்தின் ஜுவாலைகள்” என்கின்றது. இதனைப் புதுக்கவிதை என்பர்.

எனவே, ஒரே வகைக் கருத்து அவ்வக்காலத்தில் வழங்கிய சொல்லாட்சிகளாலும், தொடர் அமைப்பு களாலும் 'செய்யுள்' என்ற பெயரையும் 'கவிதை' என்ற பெயரையும் பெறுகின்றதைக் காண்கிறோம்.

திருவள்ளுவமும் கவிதை நூல்

இவற்றைக் கொண்டு நோக்கினால் 'தம்கால வழக்குச் சொல்லில் எளிமையாக படித்ததும் கருத்தையும் சுவை நயத்தையும் அறிந்து கொள்ளும் கவர்ச்சியுடையது கவிதை என்றாகிறது.

திருவள்ளுவர்தம் திருக்குறள் படைப்பில் செய்யுள் பாங்கும் உள்ளது; கவிதைப் பாங்கும் உள்ளது.

"முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்” (1239)

இக்குறளில், முயக்கு, தண்வளி, போழ, பசப்பு' என்னும் இலக்கியச் சொற்கள் கூர்ந்து பொருள் காணப்பட வேண்டியவை. இவற்றாலும், உள்ளீடான கருத்தாலும் இக்குறள் ஆழ்ந்து கண்டு பொருள் காணும் பாங்குடையதா கிறது. இது செய்யுட் பாங்கு.

இதே கண்ணைப் பற்றிக் குறள் ஒன்று உள்ளது. காதலி தன் காதலனை நோக்கி ஒடும் தன் நெஞ்சைப் பார்த்துப் பேசுகின்றாள்; 'நெஞ்சே! என் கண்ணையும் கொண்டு செல்' என்பவள் அதற்குக் காரணமும் கூறுகிறாள்:

"கண்ணும் கொளச்சேறி நெஞ்சே; அவைஎன்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று"(1244)

இக்குறளில் 'என் கண்கள் அவரைக் காணும் துடிப்பில் என்னைக் கடித்துத் தின்னுகின்றன’ என்கின்றாள்: 'தின்னும்’ என்ற ஒரு சொல்லே சுவையை அள்ளித் தந்து நம்மை மகிழவைக்கிறது. இது கவிதைப் பாங்கு.

எனவே, திருவள்ளுவத்தில் இது போன்று கவிதைப் பாங்குகள் மிக மிக உள்ளன. கவிதையைப் பாடுபவர் கவிஞர்; திருவள்ளுவரும் கவிஞர் ஆகிறார்.

கவிஞர் - சொல்லமைப்பு

'கவிதை' தமிழ்ச்சொல் என்று காணப்பட்டது. 'கவிஞர்' என்னும் சொல் தமிழ்ப்பாங்கில் உருவானதையும் காணவேண்டும்.

இச்சொல் கவி+ஞ் + அர் என்பதன் கூட்டு உருவம். இடையில் உள்ள ‘ஞ்’ எழுத்துப்பேறு எனப்படும். கவி(ய்)அ 'கவியர்' என்று தான் வரவேண்டும். இதில் இடை யில்உள்ள 'ய்' உடம்படுமெய் எனப்படும். இது போன்றே அறி+அர்-அறிவர், இளை+ அர்-இளையர், கிளை+அர்- கிளையர், வினை+அர்-வினையர், வலை+அர்-வலையர் என வரும். இவ்வாறும் இலக்கியங்களில் உள்ளன.

இவற்றுடன்,

அறிஞர், இளைஞர் கிளைஞர், வினைஞர், வலைஞர் எனச் சங்க இலக்கியங்களில் அமைந்துள்ளன. இவற்றுள் ல், ய், என்னும் உடம்படுமெய்களுக்கு மாற்றாக ‘ஞ்’ அமைந்துள்ளது. இவ்வமைப்பால் ‘ஞ்’ அமைந்த சொற்கள் ஒரு தனி இன்னோசையுடன் ஒரு மெருகுப் பாங்கு பெற்றன. 'ஞ்' அந்த மெருகுப் பாங்கைத் தருகிறது.

இவை போன்றே கவியர் என்பது கவிஞர் என்று சுவையுள்ள மெருகுச் சொல்லாகியது. தமிழ்ப் பண்பாட்டு மொழியமைப்பையும் கொண்டது.

எனவே, திருவள்ளுவர் கவிதைப்பாங்கில் குறட் பாக்களைப் படைத்திருப்பதால் நல்ல மெருகுத் தமிழ்ச் சொல்லாம் கவிஞர்' என்பதை அடைமொழியாக்கிக் 'கவிஞர் திருவள்ளுவர் என்று போற்றுவது பொருத்தமே.

திருவள்ளுவர் அறிவியற் கவிஞரா?

‘அறிவியல் கவிஞரே’(?) என்னும் வினாவிற்கு விடை காணப் புகுமுன் ஒரு குறிப்பை எழுத வேண்டும். அக் குறிப்பு ஒரு நூலாசிரியன் தவறாது கொள்ள வேண்டிய நெறி பற்றியதாகும். அந்நெறி மொழி நெறி.

இந்நூலின் தொடக்கம் முதல் இதுவரையும் சான்றுகளின் அழுத்தமாகச் சொல் அமைப்புகள் காட்டப் பட்டுள்ளன. இனியும் அவ்வாறு மேற்கொள்ளப்படும்.

தமிழ்ச் சொல் கட்டுக்கோப்பான அமைப்புடையது. சொல்லின் மூலம் ஆணிவேர் போன்றது. அந்த ஆணி வேரில் முளைத்துக் கிளைக்கும் பொருள் மக்களின் வாழ்வு, மரபு, வரலாறு, நாட்டுநிலை முதலியவற்றிற்கு உதவக் கூடியது. புதிர்களாக வரும் கருத்துப் பூட்டகங்களைத் திறக்கும் திறவுகோல்கள் பண்டைத் தமிழ்ச் சொற்கள்.

நூலாசிரியனோ, பாடம் சொல்லும் ஆசிரியனோ தவறாது கொள்ள வேண்டிய நெறியாக, மேலைநாட்டு அறிஞர் சான் கிரகாம் (John Graham) என்பார் ஓர் ஆழ்ந்த நெறியை அறிவித்தார்.

“நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ் வொரு உள்ளார்ந்த வாழ்க்கை உண்டு. அது அவர்தம் பொருள் பொதிந்த மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. அது வருங்கால மக்களின் அறிவிற்காகப் போற்றப்படுகிறது.

நாட்டு வரலாறு, பழக்க வழக்கம், ஒழுக்க நெறி ஆகியவற்றை மிகப் பழமையான இக் காலத்தில் வழக்கில் இல்லாத சொற்கள் கொண் டுள்ளன. அச் சொற்களினின்று வெளிப்படுத்தாத ஆசிரியன் மிகவும் தவறியவனாவான்”

என்னும் விளக்கம் உரிய வழிகாட்டியாகத் தக்கது.

இவ்வறிஞரின் இக்கருத்து 'ஆங்கிலச் சொல் நூல்' (English Word Book) என்னும் ஆங்கில நூலில் உள்ளது. இவர் குறிப்பிடும் மொழிச் சொல் ஆங்கிலத்தையும் குறிப்பிடலாம். பொதுவாக எந்த மொழியையும் குறிப்பிடலாம். சில நூற்றாண்டுகள் வரலாற்றையே கொண்ட ஆங்கிலச் சொல்லுக்கும் இது பொருந்தும் என்றால், பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட தொன்மை நுண்மொழியாம் தமிழின் சொற்கள் எத்துணை ஆழமும், வரலாற்று அழுத்தமும் கொண்டனவாகும்?

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் மாணிக்கச் சுருக்கமாக,

“எழுத்தின் திறன்;
இச்சொற் பொருளின் அழுத்தம்”
[10]

என்றார். தமிழின் இன்சொல்லும் அதன் பொருள் அழுத்தமும் எத்துணையோ வரலாற்றுப் புதிர்களையும் வாழ்வியல் பூட்டகங்களையும் வெளிப்படுத்துவனவாகும். இதனை அடியொற்றிய இச்சிறு நூலில் எடுத்துக்கொண்ட கருத்திற்கு ஏற்பத் தமிழ் சொற்கள் மூல அமைப்புடனும், பொருளுடனும் உரிய இடங்களில் சான்றுகளாகக் காட்டப்படுகின்றன.

இனி அறிவியற் கவிஞரைக் காண்போம்:

அறிவியல்

‘அறிவு, இயல்’ என்னும் இரு சொற்களில் இயல்: என்பதற்கு முதற்பொருள்கள் இலக்கியம், இலக்கணம் என்பன. முத்தமிழில் ஒன்றாகிய ‘இயல் தமிழ்’ என்பது இலக்கியத்தையும் இலக்கணத்தையும் குறிப்பது. தொல் காப்பியம் மூன்று அதிகாரங்களில் 27 உட்பிரிவுகளைக் கொண்டது. இவற்றுள் 22 உட்பிரிவுகள் பிறப்பு இயல், மரபு இயல் என இயல்' என்று அமைந்தவை. இங் கெல்லாம் ‘இயல்’ என்பது இலக்கணத்தைக் குறிக்கும்; இத்துடன் துறை என்னும் உட்பிரிவையும் குறிக்கும். திருக்குறளிலும் மூன்று பாடல்களில் 13 இயல்கள் உள்ளன. இவையும் இலக்கணம் என்றும், உட்பிரிவாம் துறை: என்றும் பொருள்படும்.

நீர்நிலையாம் குளத்திற்குள் இறங்குவதற்குப் பல துறைகள் இருக்கும். இது போன்று ஒரு தொகுப்புக் கருத்திற்கும் பல உட்பிரிவுகள் அமையும். இவ்வுட் பிரிவே துறை எனப்படும்.

‘அறிவியல்’ என்பது ஒரு துறை. வாழ்வியல் இயக்கத்திற்குத் துணை நிற்பது அறிவியல். இக்காலத்தில் உவகை அளாவி, வானத்தை அளாவி வளர்ந்துள்ளது. அனைத்திலும் மேம்பட்டு நிமிர்ந்து நிற்கிறது.

தமிழில் ‘அரசியல்’[11] ‘அமைச்சியல்’[12] எனும் சொல்லமைப்புக்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. இவற்றிற்கு அரசின் இலக்கணம்', 'அமைச்சின் இலக் கணம்’ எனப் பொருள். திருவள்ளுவர் 'கண்ணோட்டத் துள்ளது உலகியல்’ (572) என்னும் குறளில் உலகியல்' என்னும் சொல்லைப் படைத்துள்ளார். இதற்கு உலக நடைமுறை என்று பொருள். வானியல் ஊனியல்’ என்னும் சொற்களை இடைக்காட்டுச் சித்தர் பாடவில் காண்கின்றோம். இவ்வாறு பல உள்ளன.

"அறிவியல்" என்னும் சொல் பழந்தமிழ் நூல்களில் இல்லை; இந்த நூற்றாண்டில் உருவான சொல் அறிவியல்' ஆங்கிலத்தின் ‘Science என்பதற்கு ஆக்கப்பெற்ற சொல். ‘விஞ்ஞானம்’ என்பது வடசொல்.

தமிழில் 'அறிவியல்' என்னும் சொல் முற்கால நூல்களில் இல்லாமையால் அறிவியற் கருத்துக்கள் தமிழில் இல்லை’ என்று ஆகாது. தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் பல அறிவியற் கருத்துக்களைக் காண முடிகின்றது. திருவள்ளுவத்தில் அறிவியற் கருத்துக்கள் செறிந்துள்ளன.

அறிவியல் - அளவை நூல்

தமிழில் ‘அளவை’ என்பது ஒரு துறை. இஃது

‘அளவையியல்’ எனத் தக்கது. தமிழில் 'அளவை நூல்' என்றொரு நூல் இருந்து மறைந்தது, பதிப்பரசர் உ. வே. சா. அவர்களும் இதனைக் குறித்தார்கள்.

‘அளவை நூல்’ என்பதற்கு ‘அறிவை அளக்கும் நூல்’ என்று பொருள். அறிவால் அறிவை அளப்பதாகும். அறிவால் நூற்கருத்துக்களை அளந்தோர் தம் கருத்தை நிலைநாட்டக் கருத்துப் போரிட்டனர், அஃதாவது பட்டி மண்டபத்தில் சொற்போரிட்டனர். இப்போரில் தம்தம் பெருமையையும் பேச நேரும்; தம்மை வியந்து தருக்கியும் பேசினர். இவ்வாறு தருக்கொடு பேசுவது தருக்கம்’ எனப்பட்டது. சிறுபஞ்ச மூலம் என்னும் நூலிலும்[13] இச் சொல்லைக் காண்கின்றோம், இவ்வாறு அளவை நூல், “தருக்க நூல்” என்றும் வழங்கப்பெற்றது. இந்த அளவையை ஆங்கிலத்தார் Logic என்றனர். வடநூலார் “வாத சாத்திரம்” என்றனர்.

அறிவை அளக்கும் ‘அளவையியல்’ சில படிகளைக் கொண்டது. தமிழறிஞர் காண்டல் அளவை; கருதல் அளவை என இரண்டு படிகளாகக் கண்டனர். வடநூலார் பத்து (வேதவியாசர்) என்றும், எட்டு (கிருதகோடி) என்றும், ஆறு (சைமினி) என்றும் பல வகையாகக் கொண் டனர். கெளதம புத்தர் காண்டல், கருதல்' என்னும் இரண்டையே ஏற்றார். மணிமேகலைக் காப்பிய ஆசிரியர் சாத்தனார் இவற்றை விளக்கினார்.

திருவள்ளுவர்,

“ஆற்றின் அளவு அறிந்து கற்க” (125) என்றார். இதில் 'அளவு' என்பது அளவையியல் நூலைக் குறிக்கும். ஏன் கற்கவேண்டும் (?) என்பதற்குத் திருவள்ளுவர்,

“அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல்” என்று காரணமும் சொன்னார். “அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல்” என்பது முன் கண்ட பட்டிமண்டபக் கருத்துப் போரைக் குறிக்கும்; தருக்கத்தைக் குறிக்கும். இது கருதியே உரையாசிரியர் பரிமேலழகரும் இப்பொருளே கொண்டார்.

‘அளவு’ என்னும் சொல் பொதுவில் எண்ணிக்கை முதலிய பல அளவுகளைக் குறிக்கும். ஆற்றின் அளவு அறிந்து ஈக' (477) என்பதில் இப்பொதுப்பொருள் உள்ளது.

மேலே கண்ட குறள் கற்க' என்றதாலும், அவை அஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு’ என்றதாலும் கற்பதற்கும், மாற்றம் கொடுத்தற்கும் அளவை நூல்' என்பதே பொருந்துவது. பொதுவான அளவுப் பொருள் இங்கு பொருந்தாது. ஏனெனில் கல்வி கரையில’. கல்வி எண்ணிக்கை அளவில் அடங்காதது. ஆனால், எவற்றைக் கற்க வேண்டும் என்னும் அளவிற்கு உரியது. திருவள்ளுவர் 'கசடறக் கற்பவை கற்க’ என்று ஒர் அளவு கூறினார். எனவே, அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல் பொருட்டு அளவை நூலைக் கற்க வேண்டும்’ என்பதே பொருத்த மானது.

அளவை-விளக்கம்

இந்த ‘அளவை’ என்பது காண்டல் அளவை, கருதல் அளவை என்னும் இரண்டு படிகளைக் கொண்டது என்று கண்டோம். இவற்றுள் காண்டல் கண்ணால் காண்டலை யும், கருத்தால் காண்டலையும் குறிக்கும். கருதல்' என்பது கண்டதைக் கொண்டு அதன் தொடர்பில் உள்ளதைக் கருதி அளத்தலாகும். புகை வருவதைக் கண்டுகொண்டு நெருப்பு இருக்கும்’ என்பது போன்று கருதி அறிதல் - ஊகித்தல் ‘கருதல் அளவை’யாகும்.

திருவள்ளுவர், ‘அளவு அறிந்து’ என்றதால்,

‘காண்டல் அளவை;
கருதல் அளவை’

எனும் இரண்டையும் குறித்துள்ளார் என்பதை நாம் கருத்தில் நிறுத்திக்கொண்டு, அறிவியல் கருத்தை அணுக வேண்டும்.

‘அறிவியல்’ என்பது அறிவைக் கொண்டு ஆய்ந்து உண்மையைக் கண்டு ஒரு முடிவிற்கு வருதல் ஆகும்.

இக்கால அறிவியல் வல்லுநர் அறிவியலுக்குப் பின் வரு மாறு விளக்கம் தந்தனர்.

‘உலக நிகழ்ச்சிகள் பல.
அவற்றைக் கூர்ந்து காணல்:
கண்டு ஒருங்கு சேர்த்தல்;
சேர்த்தவற்றை வகைப்படுத்தல்;
வகைப்படுத்தி அவற்றிடையே உள்ள
உள்ளார்ந்த தொடர்புகளை அறிதல்;
அறிந்தவற்றைக் கொண்டு அறியவேண்டிய
உண்மையைக் கருதிப் பார்த்தல்;
கண்டவற்றையும், கருதி அறிந்தவற்றையும்

ஒழுங்கு செய்து முடிவு காணலாம் அறிவுச் செயலே 'அறிவியல்’

இவற்றைச் சுருக்கமாகச் சொன்னால்,

நிகழ்ச்சிகளைக் காணல் - அவற்றைத் தொகுத்தல் - அவற்றுள் தொடர்பு காணல் - கருதல் - உண்மை முடிவு கொள்ளல் என அமையும்.

இவற்றிலுள்ள செயற்பாடுகளைக் கூர்ந்து பார்த்தால் காணல், கருதல் இரண்டுந்தாம் நிலைக்களமான செயற் பாடுகள். மற்றவை இவையிரண்டிற்கும் துணை செய்த பவை. இன்றியமையா நிலைக்களமான காவல். கருதல் இரண்டும் தமிழ் அளவையியலின் இரண்டு படிகள். திருவள்ளுவர் இவற்றின் அடக்கமாக "அளவறிந்து' என்று ‘அளவை நூ’லைக் குறித்தமை இங்கு நினைவு கூரத் தக்கது.

அறிவியற் பாகுபாடுகள்

மேலே விளக்கம் கூறப்பட்ட அறிவியல் இக்கால அறிவியல் வளர்ச்சியில் இரண்டு பாகுபாடுகளாகக் கொள்ளப்படுகிறது.

ஒன்று “பட்டறிவு அறிவியல்” (Exprimental Science)
இரண்டு, “முறை அறிவியல்” (Methodological Science)

 

பட்டறிவு அறிவியல்-.அறிவியல் அறிஞர் தாம் தம்,
பட்டறிவில் காணும் நிகழ்ச்சிகளையும்
அவற்றை வைத்துத் தாம் கருதல் (ஊகம்).
களையும் கொண்டு ஆராயும் அறிவியல்.
முறை அறிவியல் :. பட்டறிவில் கண்ட நிகழ்ச்சிகளை;
கருதல்களைப் பெறுவதற்கு உத
வும் அறிவியல்..

 

இரண்டாவதான 'முறை அறிவியலுள் இன்றியமை யாத துறைகள் கணக்கியல், அளவையியல் கோட்பாட்டியல் (Philosophy) என்பன.

இவை இக்கால அறிவியல் நுணுக்கங்கள், இந்நுணுக்கங் களின் மையமான ‘அளவையியல்’ பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவரால் குறிக்கப்பட்டுள்ளது. இக்காலத் தில் பெருகிவரும் நுணுக்கங்களின்படியும் திருவள்ளுவர் குறிப்பு அடங்கியுள்ளமை ஒத்துப்பார்த்து அறிதற்கு உரியது. ஒத்துப் பார்ப்பதால் உண்டாகும் அறிவு திருவள்ளுவர் அறிவியல் அறிஞர்' என்பதை ஏற்பதாகும்.

இரண்டு பாகுபாடுகளில் முதலாவதாகக் கண்ட ‘பட்டறிவு அறிவியல்' திருவள்ளுவர் குறட்பாக்களில் எவ்வாறு பொதிந்துள்ளது என்பதைக் காணவேண்டும்.


ஆ. திருவள்ளுவரின் பட்டறிவுப் பேச்சு

பட்டறிவு என்றால் என்ன பொருள்? ஒருவர் தம் வாழ்வில் கண்டும் கேட்டும், துய்த்தும் அவற்றில் ஆட்பட்டுக் கொண்ட அறிவையே (படு அறிவு) பட்டறிவு என்கிறோம். 'பாடு பட்டுப் பெற்றேன்’ என்பதிலும் 'பட்டபாடு பெரிது’ என்பதிலும் உள்ள சொற்களில் இப்பொருளைக் காண்கிறோம்.

“பட்டமும் கயிறுபோல் பறக்ககின்ற சீவனைப்
பட்டறிவினாலே பார்த்துகீ படுமுடிச்சு போடடா”
[14]

என்று சிவவாக்கியர் பாட்டில் இச்சொல்லை அதன்பொருட் குறிப்புடன் காண்கிறோம்.

பட்டறிவைப் புரிந்துகொள்ளப் பின்வரும் இரண்டு தொடர்கள் உதவும் :

1. ‘சீரகம் உடலுக்கு நலம் தரும்; நோயைத்
தடுக்கும்; போக்கும்.”

2. நான் அறிந்தவரை சீரகத்தைப் போன்று உடலுக்கு நலந்தந்து, நோயைத் தடுத்துப் போக்குவது வேறு ஒன்றும் இல்லை.

இரண்டு தொடர்களும் சீரகத்தின் நன்மையைக் காட்டு கின்றன. கருத்து ஒன்றுதான்; தொடர்கள் வேறுவேறு உத்திகளில் உள்ளன. முன்னதைவிடப் பின்தொடரில் கருத்தின் அழுத்தம் உள்ளது; உறுதி தெரிகிறது. காரணம், சொல்லுபவர் நான் அறிந்தவரை' என்று தாம் பட்டு அறிந்ததைத் தெரிவிக்கிறார்.


யாம்

திருவள்ளுவப் பெருந்தகை வாழ்வியற் கருத்துக்களை 1330 குறட்பாக்களிலும் வழங்கியுள்ளார். அவர் சொல்லும் முறை சீரகம் பற்றி முதலில் கண்ட பொது முறையிலும் உள்ளது. இரண்டாவதாகக் கண்ட பட்டறிவு முறையிலும் பலப்பல குறட்பாச்கள் உள்ளது. பட்டறிவு பளிச்சென்று புலப்படுமாறு தன்னைச் சொல்லிக்கருத்தை வைத்துள்ளார். இவ்வகைக் குறட்பாக்கள் திருக்குறளில் மூன்றே மூன்று உள்ளன. அவை மூன்றிலும் தம்மைச் சொல்லிப்போம். "யாம்' என்னும் சொல் உள்ளது. அவர் ஒரு தனித்தவராகத் தன்மை இடத்தில்தான் எழுதினார். ஆனால் தன் ஒருவனுக்குரிய நான்’ என்னும் சொல்லையோ, யான் என்னும் சொல்லையோ சொல்லவில்லை. இவை இரண்டும் தான்' என்னும் செருக்கைக் காட்டும் சொற்கள். திருவள்ளுவரும் யான் எனது என்னும் செருக்கு' (346) என்று செருக்குக்கு உரியதாகப் பாடினார். எனவே, இவற்றை விடுத்து ‘யாம்' என்னும் சொல்லால் பேசினார்.

‘யாம்' என்னும் சொல் தன்மையில் பலரைக் குறிக்கும் பன்மைச்சொல். ஒருமைக்காகத் திருவள்ளுவர் பேசினார்.

தம் அறிவுப் பெருமிதத்தையோ, அருள் பெருமிதத். தையோ பேசுபவர் யாம்' என்றே பேசுவர்.

“யாம் அவண் நின்றும் வருதும்”[15]

“இஃது யாம் இரந்த பரிசிலல்”[16]

“யாம் இரப்பவை பொன்னும் பொருளும்
போகமும் அல்ல”[17]

“படையமை மறவரும் உடையம் யாம்”[18]

இவை போன்றவை பெருமிதம் காட்டுபவை. இப்பெருமிதப் பொருளைவிட,

கண்ணகி
“என் காற்சிலம்பு” என்று கூற
மன்னன் பாண்டியன்,
“யாம் உடைச்சிலம்பு”[19] என்றான். இந்த “யாம்” அரசுப் பேருமிதம். இக்காலத்து இதனை ஆங்கிலத்தில் (Royal We) என்பர்.

 திருவள்ளுவர்-யாம்

இவற்றிற்கெல்லாம் அப்பால் தம் பட்டறிவின் உறுதிப் பாட்டையும், சொல்லும் கருத்தின் அழுத்தத்தையும் பொதியவைத்து ‘யாம்' என்று பேசுவது திருவள்ளுவர் பேச்சு.


“பெறுமவற்றுள் யாம்அறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே நல்ல பிற” (61)


“யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற” (300)

“மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்” (1071)

யாம் பட்டு அறிந்தவரை,

மக்கட்பேறு எல்லாப் பேற்றினும் சிறந்தது வாய்மையே பண்புகளில் சிறந்தது
கீழ்மக்கள் உருவத்தில் மாந்தராயினும்
இழிவில் ஒப்பில்லாதவர்”

நேருக்குநேர் திருவள்ளுவர்

இவை இக்குறட்பாக்களின் கருத்துக்கள். இக்கருத்துக் கள் யாம்' என்று திருவள்ளுவர் தம்மைக் குறித்துச் சொல்லப்பட்டவை. இதனால் அவர் நம்முன் நேருக்கு நேர் நின்றுபேசுவதாக அமைந்துள்ளன.

“யாம் அறிந்தவற்றுள்”,

“யாம் மெய்யாக் கண்டவற்றுள்”,

"யாம் கண்டது" என்று அவரே பேசுவதால் அவர் பட்டு அறிந்ததை எழுதியுள்ளார் என்று கொள்ள வேண்டும். எனவே, இவை திருவள்ளுவரின் பட்டறிவுக் கருத்துக்கள்.

('யாம்' என்னும் சொல் திருவள்ளுவரால் இம்மூன்றிடங்களில் மட்டுமன்றி மேலும் 10 இடங்களில் அமைந்துள்ளது. பொதுவாக 2 இடங்கள், (790,844), தலைவன் பேச்சாக 3 (1111, 1123, 1329), தலைவி பேச்சாக 7 (1140, 1150, 1171, 1204, 1245, 1218, 1312) ஆக !3. இடங்களில் காண்கிறோம். இவை பிறர் பேசுவனவாகப் படர்க்கையில் அமைக்கப்பட்டவை).


தனித் தன்மையுள்ள குறட்பாக்கள்

முன்னர்க் காணப்பட்ட மூன்று குறட்பாக்களில் தான் திருவள்ளுவர் தம்மை முன்னிறுத்திப் பட்டறிவுடன் பேசினார். தம் பளிச்சிடும் பட்டறிவுடன் பேசும் இம்மூன்று குறட்பாக்களிலும் அமைந்த பிறசொற்களும், ஒத்துள்ளமை நோக்கத்தக்கது.


சொல்லொற்றுமை
மக்கட்பேறு வாய்மை கயமை
பெறும் அவற்றுள் கண்ட அவற்றுள் அவரன்ன
யாம் யாம் யாம்
அறிவது கண்ட கண்டது
இல்லை இல்லை இல்
அறிவறிந்த எனைத்தொன்றும் ஒப்பார்
அல்லபிற அல்ல பிற
(நல்ல பிற)
அன்ன
திருக்குறளில் பொதுவாகத் தனித்தனித் குறட்பாக் களில் அமைந்த சொற்களைக் கணக்கிட்டால் 8 முதல் 11 வரை அமைந்திருக்கக் காணலாம். இம்மூன்று குறட்பாக்களில் சொல்லாலும், கருத்தாலும், தொடர்பாலும் 7 சொற்கள் ஒத்துள்ளன.

‘யாம் என்று தம்மைக் குறிக்கும் சொல்லுடன் கருத் தொற்றுமையும்,சொல்லொற்றுமையும் கொண்டு உள்ளதை நோக்கினால் திருவள்ளுவர் இம்மூன்றிலும் ஒருமித்த மனம் பற்றியுள்ளார் என்பதை அறியலாம்.

திருவள்ளுவர் தம்மை நம்முன் நிறுத்திப் பேசுவதாலும், அவை பட்டறிவின் வெளிப்பாடாக உள்ளமையாலும், குறளில் அமைந்த சொற்களின் ஒற்றுமையாலும் இம்மூன்று குறட்பாக்களும் முப்பாலாம் திருக்குறளில் தனித்தன்மை கொண்டவையாகின்றன. இவ்வாறு தனித் தன்மையில் திருவள்ளுவர் மனம் உவந்து பேசும் கருத்துக்கள் எவை? அவை உலகியலில் எப்பங்குக்கு உரியவை?

1. மக்கட்பேறு குடும்ப வாழ்வியல்
2. வாய்மை ஒழுக்க வாழ்வியல்
3. கயமை மக்கட் கூட்டமாம்
குமுகாய வாழ்வியல்

உலகியல் வாழ்க்கை இம்மூன்றுள்ளும் அடங்கும் என்பதை விரித்துக் காண வேண்டியதில்லை.

இ. அறிவியல் அறிமுகச் சொல்

இவ்வாறு தனித்தன்மையுடன் வாழ்வியல் குறிப்புக் களைக் கொண்ட இக்குறட்பாக்கள் மூன்றும் மற்றொரு வியப்பையும் உள்ளடக்கியனவாகும்.

அதுதான் இக்காலம் வளர்ந்து விரிந்துள்ள அறிவியலின் குறிப்பும் பொருந்தியுள்ளமையாகும். முன்னே கண்ட பக்கம் 25, 26) அறிவியல் விளக்கத்தையும் இக்குறட்பாக்களின் கருத்தேற்றத்தையும் பொருந்திக்காண வாய்ப்புள்ளது. மூன்று குறட்பாக்களும் சொல்லமைப்பிலும், கருத்தமைப்பிலும் பட்டறிவிலும், ஒத்துள்ளமையால் ஒரு குறளைக் கொண்டே பொருத்திக் காணலாம். அவற்றிலும் ”பெறும் அவற்றுள்” (61) என்னும் குறட் கருத்தைப் பொருத்திக் காணலாம்.

குறட்கருத்து புதுமைக்கால அறிவியல் விளக்கம்
யாம் அறிவது நிகழ்ச்சிகளைக் காண்டல்
பெறும் அவற்றுள் தொகுத்தல், தொடர்பு காணல்
அறிவது, அறிவறிந்த கருதல்
மக்கட்மேறு அல்லபிற ஆய்வின் முடிவு.
புதுமைக்கால அறிவியலைக் கருதிப்பார்த்துத் திருவள்ளுவர் கருத்தளிக்கவில்லைதான். என்றாலும் சாலப் பொருந்தும் அளவு அமைந்திருப்பதைக் காண்கின்றோம். தமிழ் மண்ணில் அறிவியலின் ஊற்றுக்கள் பண்டைக் காலத்தே கண் திறந்தமைக்குப் பல சான்றுகளை இலக்கியங்கள் தருகின்றன. அவற்றிற்கெல்லாம் அடித்தளமான கோட்பாட்டைத் திருவள்ளுவத்தில் காண்கின்றோம். இங்கு காணப்பட்டவை கொண்டு மட்டும் திருவள்ளுவரை 'அறிவியற் கவிஞர்' என்று கூறி நிறைவு பெற்றுவிட வேண்டியதில்லை. மேலும் மேலும் சான்றுகள் திருக் குறளில் கிடைக்கின்றன அறிவியலின் இலக்கணம் கூறுதல் போன்றும், அறிவியலின் சான்று காட்டும் இலக்கியங்களாகவும் பல கிடைக்கின்றன.

முதலில் அறிவியலின் இலக்கணம் கூறுவது போன்ற சான்று காணத்தக்கது.

அறிவியலின் இலக்கணச் சான்று என்பது இங்கு ஒரு சொல்லாகத் திருவள்ளுவரால் ஆக்கப்பெற்றுள்ளது. அறிவியல் என்பதே அறிவின் இலக்கணம், அறிவின் துறை’ என்பனவல்லவா பொருள்? இவ்வொரு சொல் அவர்தம் பட்டறிவால் எழுந்த மூன்று குறட்பாக்களில் முதலில் அமைந்த மக்கட்பேற்றுக் குறளில் உள்ளது.

அறிவறிந்த”

மக்களை ஆணாகவோ, பெண்ணாகவோ பெற்றுவிடும் ஒன்றே பெறுமவற்றுள் பெரும்பேறு ஆகிவிடாது. தலை, கை, கால் முதலிய உறுப்புகளின் நிறைவுடன் குழந்தையைப் பெறுவது மட்டும் இங்குக் குறிக்கப்படவில்லை. எத்தகைய மக்கள் என்றும் சுட்டப்பட்டுள்ளது. எத்தகைய மக்கள்? ஒர் அடைமொழி உள்ளது. "அறிவறிந்த மக்கள்" (61) ஆம் இந்த "அறிவறிந்த" என்னும் அடைமொழிச் சொல் ஆழ்ந்ததும் நுண்ணியதுமான கருத்துடன் அமைக்கப்பட்ட சொல் இச்சொல்லாட்சி திருக்குறளில் மூன்றே குறட்பாக்களில் தான் உள்ளது.

'அறிவறிந்த' என்னும் சொல்லின் பொருள்களாகக் காணப்பட்டவை பின்வருபவை :

"அறியவேண்டுவனவற்றை அறிதல்"இது பரிமேலழகர் கண்ட பொருள். கற்பதில் கற்க வேண்டியவை என்றும் காணவேண்டாதவை என்றும் கொள்ள வகை உண்டு. அதனால்தான் "கற்க கசடற கற்பவை" (391) என்றார். ஆனால், அறிவில் அறியவேண்டுவன, அறியவேண்டாதன என்றில்லை. ஏனென்றால் அறிவு 'தீது ஓரிஇ, நன்றின்பால் உய்ப்பது”. (422) எனவே, அறிவு நன்மையைத்தான் தரும். இவ்வகையில் பரிமேலழகர் பொருள் பொருந்தாது.

"அறிவறிந்த கல்விச் செல்வமான பிள்ளை" என்றார் பரிதியார். கல்வி என்றாலே அறிவறியும் செயலுக்கு உரியதுதான். இது கொண்டு நோக்கினால் ’அறிவறிந்த’ என்றமை ஒரு சிறப்புக் கருத்துக்காக அமைக்கப்பட்டதாகக் கொள்ள வழியில்லை.

இவ்வாறே ’அறிவறிந்த' என்னும் சொல்லமைந்த மற்றைய இரண்டு குறட்பாக்களுக்கும் பொருள் காணப்பட்டது.

ஆனால் காலிங்கர் மற்றொரு பொருளைக் குறித்துள்ளார். ”அறிவினை முழுதும் அறிந்து” என்றார். இவ் விளக்கம்- 'அறிவினை அறிதல்' என்னும் விளக்கம் அறிவியலை அண்டிப் பார்க்கிறது.

அறிவதுதான் அறிவு என்றாலும் ’அறிவையே. அறிவது-அதனையும் முழுமையாக அறிவது’ என்பது சற்று அழுத்தமான கருத்தைக் காட்டுகிறது.

அறிவில் நுண்ணிய அறிவு சிறந்தது. நுண்ணிய அறிவின் செயற்பாடு பெரும் ஆக்கத்தை விளைவிக்கும். அதனால்தான் ”அறிவு உடையார் ஆவது அறிவார்” (427) என்றார். ஆவதாகிய ஆக்கத்தை அதனினும் புத்தாக்கத்தை அறிவு தரின் அது நுண்ணறிவால் விளைந்த விளைச்சல்.

அத்தகைய அறிவின் செயற்பாட்டால் விளையும் ஆக்கத்தைக் கண்டறிவதுதான் அறிவாகும். இவ்விளக்கத்தின் அடக்கமாகத்தான் ’அறிவறிந்து' என்னும் சொல் ஆக்கப்பெற்றது.

எனவே, அறிவு அறிந்த என்பதற்கு 'ஆக்கத்தைத் தரும் அறிவை அறிந்த' என்பது பொருளாகும். இவ்வறிவுச் செயற்பாடுதான் ’அறிவியல்’ எனப்படுகின்றது.

இக்கருத்திற்கு உரமூட்டுகின்றது அடுத்தொரு குறள்:

“செறிவறிந்த சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்“
(123)

என்னும் குறளிலும் 'அறிவறிந்து' என்னும் சொல் அமைந்துள்ளது.

இக்கால அறிவியலின் விளைச்சல் ’செறிவறிந்த சீர்மையைப் பயப்பது’ என்பதை அறிவோம். புதிய கருத்துக்கள் செறிந்த சீர்மைகளே அறிவியலின் கண்டு பிடிப்புகள். இவ் வகையிலும் 'அறிவறிந்த’ என்பது அறிவியலைக் குறிக்கும். இது அக்கால அறிவியலின் அடையாளச் சொல்லாகத் திருவள்ளுவரால் ஆக்கப் பெற்றுள்ளது. ”செறிவறிந்த சீர்மை” பெறுவதற்கும் ஒரு விதிப்பு வைத்துள்ளார் திருவள்ளுவர். அது “அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறுதல்”. இக்காலத்தும் அறிவியல் வல்லுநர் எவரும் தம் கண்டுபிடிப்பால் இறும்பூது எய்துவர். கண்டுபிடித்த முதல் உணர்ச்சியில் துள்ளியும் குதிக்கலாம். ஆனால் அக்கண்டுபிடிப்பை பயன்படுத்துவதன் நல்ல பண்பு நெறியாக அடக்கமே கொள்வர். அறிவியல் வல்லுநர்களின் வாழ்வியலைக் கூர்ந்து நோக்கினால் இந்த அடங்கும் உண்மை புலப்படும்.

எனவே, இரண்டாவதாக ’அறிவறிந்து’ அமைந்த இக்குறளும் இக்கால அறிவியற் பாங்கைக் குறித்துக் காட்டுவதாக உள்ளது.

பொறி என்றால்


மூன்றாவதாக,

"பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி
” (618)

என்னும் குறள் ஒரு வகையில் அறிவியலுக்கு அணியாகின்றது. பொறியின்மை என்பதற்கு 'விதி இல்லாமை' என்றே பரிமேலழகர் முதலிய பலர் உரைகண்டனர். 'நல்ல தலையெழுத்தில்லாமை பழியில்லை' என்னும் பொருள்பட விதியைக் காட்டினர். மணக்குடவர் 'ஆக்கம் இல்லாமை' என்றார். ஆனால், பரிதியார் மட்டும் "மெய், வாய், கண், மூக்குச் செவி குறைந்தது பங்கமல்ல’’ என்றார். பொறி என்பதற்கு 'ஐம்பொறி' என்பதே உரிய பொருளாகும்.

திருவள்ளுவரும், "பொறிவாயில் ஐந்து’’ என்று ஐம்பொறிக்கே 'பொறி' என்னும் சொல்லைப் பெய்தார். மேலும் "கோள்இல் பொறிஇல் குணம்இலவே என்குணத்தான்" என்று ஐம்பொறியைக் குறித்தார். இவ்வைந்து பொறியும் தலையிலேயே அமைந்துள்ள குறிப்பையும் காண்கின்றோம். கண், வாய், செவி, மூக்கு நான்கொரு மெய்யின் ஒரு பகுதியும் தலையில் உள்ளமை அறிவோம்.

இவ்வகை ஐந்து பொறியில்லாமை பழிதான். பார்வையில்லாத கண்ணைக் கொண்டவன் குருடன் என்னும் பழிக்கு ஆளாவான். இதுபோன்றே கேட்கமுடியாத செவிடன், பேசமுடியாத ஊமையன்-நெறியாக மூச்சுவிட முடியாது. மணத்தைமோந்து பார்க்க முடியாத மூக்கரையன், உணர்வை உணரமுடியாது மரத்துப் போனவன் பழிக்கு ஆளாவான்.

ஆனால் "அறிவறிந்த ஆள்வினை இன்மைதான் பழி" ஆள்வினை இருந்தால் கண்பார்வையில்லாத குருடனும் வாழ்வில் சிறக்கலாம். நம்கால எலன் கெய்வர் முதல் இன்று நாட்டில் உலவும் உயர்ந்து திகழும் குருடர் பலர் பழி சொல்லப்படாதவர்கள். இது போன்றே ஆள்வினையால் மற்றையப் பொறிகள் இல்லாமல் உயர்ந்து பழியைப் புறங்கண்டோராக அறிகின்றோம்.

இக்குறள் இக்கருத்துக்களுடன் இக்காலப் பொறி அறிவியல் முன்னேற்றத்தையும் குறிப்பாகக் காட்டுகிறது என்று வெளிப்படுத்தலாம்.

இக்காலம் 'பொறி' என்பது செயற்கையில் உருவாக்கப்பட்டு இயங்கும் எந்திரங்களைக் குறிக்கிறது. நம் உடல் உறுப்புக்குரிய சொல்லாகிய பொறி” என்னும் பெயர் இன்று இயங்கும் எந்திரங்களுக்கு எவ்வாறு ஆனது?

உடலின் ஐந்து பொறிகளும் தாம் இயங்கி மற்ற வற்றை இயங்க வைக்கின்றவை. கண், பார்வையால் தான் இயங்கி மாந்தனை நடமாடி இயங்க வைக்கின்றது. பிற உடற்பொறிகளும் இவ்வாறே. இவைபோன்று இயங்கி இயங்க வைத்ததால் எந்திரங்களும் பொறி என்று குறிக்கப்படுகின்றன.

மேலும் விரித்து நோக்கினால் இக்காலத்தில் காணப்பட்டுள்ள பொறிகள் அனைத்தும் உடலின் பொறிகள் இயங்கும் நுணுக்க த்தை வைத்தே காணப்பட்டவை என்பதை அறியலாம்

கண்ணின் இயக்கத்தைப் பார்த்து நிழற்படப் பொறி காணப்பட்டது: பலவகையாக வளர்ந்தது. காதின் ஒலிவாங்கும் இயக்கத்தை வைத்தே ஒலிவாங்கிகள்: வாயின் பேச்சு இயக்கத்தைக் கொண்டே ஒலிவிடுவான்கள், (Computor) மூளையின் இயக்கத்தை வைத்தே இன்று உலகில் உயர்ந்துவரும் கணிப்பொறிகள் என யாவும் உடற்பொறிகளின் ஈனல்களே.

இப்பொருத்தத்துடன் "பொறியின்மை யார்க்கும் பழி யன்று" என்னும் குறளைநுணுகி நோக்கினாலும் இக்காலப் பொறி வளர்ச்சியுடன் ஒப்பிட்டு நோக்கினாலும் பொறிகள் தாம் நாட்டின்-மாந்தரின் வாழ்வையே இயக்கி வாழ வைக்கின்றன என்பதை உணரலாம்.

இச்சமயத்தில் பொறியில்லாமை எந்தநாட்டிற்கும் பெரும்பழியாகும். மிதிவண்டி முதல் பீச்சிப்பாயும் வெடி ஹர்தி (இராக்கெட்) வரை பெறாத நாடு உலகில் பழி கொள்ளும் நாடாகும். ஆனால், பழியின்மை எதனால் ஆன்டாகும். ஆள்வினை என்னும் முயற்சியால்தான் உண்டாகின்றது. ஆள்வினையிலும் அறிவியல் அறிந்தஅறிவறிந்த ஆள்வினையால்தான் உண்டாகின்றது.

எனவே,

"பொறியின்மை" என்னும் குறள் தன் குறிப்புப் பொருளால் அறிவியலின் உள்ளீட்டைக் கொண்டதாகிறது.

இவ்வுள்ளிட்டுப் பொருளைப் பின்வருமாறு வெளிக்கொணரலாம்.

பொறியின்மை மின் ஊர்தி, வான் ஊர்தி,
கணிப்பொறி முதலிய ஆக்கப் பொறிகள் இல்லாமை
யார்க்கும் உலகில் எந்த நாட்டிற்கும், மாந்தருக்கும் ! !! !!
பழி அன்று குறை ஆகாது
அறிவறிந்து அறிவின் செயற்பாடாம்

அறிவியலை அறிந்து

ஆள்வினை இன்மை முயலாதிருத்தலே
பழி குறையாகும்

பொருள்கொள்வதை வெறும் இலக்கிய பொருத்தமாக இவ்வாறு மட்டும் கருதக்கூடாது. காலச் சூழலின் வெளிப்பாடுகளைக் கணித்துக்கொண்டு நோக்கினால் இப்பொருள் படவும் திருவள்ளுவரின் குறட்பா கோடிட்டுக் காட்டுவதாகக் கொள்ள முடிகிறது.

இவ்வாறு எழுதுவதை இழுத்துப் பிடித்து வலிந்து பொருள் கொள்வதாகவும் கருதக்கூடாது. இக்கால வளர்ச்சிச் சூழலையும், திருவள்ளுவர் கால தொடக்கச் சூழலையும் பொருத்திப் பார்க்க வேண்டும். அந்நிலையில் அக்கால வடிப்பில் இவ்வாறு குறிப்பாகத்தான் அமைக்கப் பட்டது என்று கொள்வதே பொருந்தும்.

எனவே, மூன்று குறட்பாக்களிலும் அறிவறிந்த என்னும் அறிவியல் இலக்கணச் சொல் அமைந்து திருவள்ளுவரின் அறிவியற் பாங்கைக் குறிக்கின்றன.

இவைகளால் மட்டும் திருவள்ளுவர் அறிவியற் கவிஞர், என்று நிறைவாகச் சொல்ல இயலாது. சொன்னால் 'காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டதாகும்.

இக்காலத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவாகப் பெருகியுள்ளன. நாளும் ஒரு புதுமையாக்கம் நிகழ்ந்து வருகிறது. இவற்றின் அடையாளங்கள் பலவற்றைத் திருக்குறளில் காண முடிகின்றது.
ஈ. வான அறிவியல் பொதிவு

அறிவியல் என்பது ஒரு பொதுத்துறை. பொறியியல், உளவியல், உயிரியல், கணக்கியல், உடலியல், உளவியல் எனவெல்லாம் பல துறைகளில் கண்டுபிடிப்புகள் நேர்கின்றன. எப்பெயர் பெரினும் அவ்வொவ்வொன்றும் அறிவின் நுண்ணிய செயற்பாட்டால்தான் விளைகின்றது. எனவே. பொறி அறிவியல், உள அறிவியல், வான அறிவியல் என்றெல்லாம் அறிவியல் துறையாகவே கொள்ளப்படும்.

இவற்றுள் வான அறிவியலைச் சற்று விளக்கமாகக் கண்டு அதன் திருக்குறள் அடையாளத்தைக் காணலாம்.

வானம் என்பது எல்லையற்றுப் பரவியுள்ளது. நிறமற்றது; இடமற்றது. எண்ணற்ற விண்மீன்கள், உடுக்கள், கோள்கள் பரவிச் சிதறி இயங்கும் வெட்டவெளி கொண்டது.

ஞாயிற்றிலிருந்து கோள்கள் சிதறித் தனித்தனிக் கோள்களாக இயங்கி வருகின்றன. அவற்றுள் ஒன்று நாம் வாழும் நிலம் என்னும் பூவுலகம். இதற்கொரு தனிச் சிறப்பு உண்டு. உயிரினங்களைப் பெற்றிருக்கும் ஒரு கோள் இப்பூவுலகம். பிற கோள்கள் சிலவற்றில் உயிரினம் இருக்கலாம் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து வருகின்றனர் வானியலார்.

பூவுலகில் மட்டும் உயிரினம் உள்ளமைக்கு மூலக் காரணம் எது? நெருப்பு, நீர், காற்று. மண் என்பவை காரணங்களே. ஆனால், உயிரினம் மூச்சுவிட்டு உயிர்வாழ இன்றியமையாத துணை மூலமாக இருப்பது காற்றுதான். இக்காற்று ஏது? எங்கிருந்து வந்தது: பூவுலகைச் சுற்றியுள்ள சூழல் இக்காற்றுக்குத் துணைக் காரணம். வளி என்னும் காற்றை வழங்கிய தாய் பூவுலகம் என்னும் நம் ஞாலம். பூவுலகைச் சுற்றிதான் காற்று உலவி இயங்குகிறது ஞாயிறு என்னும் வெப்ப ஆவியிலிருந்து சிதறிய உருண்டையாம் பூவுலகம் காலப்போக்கில் ஆறி, ஆறி இன்றைய நிலைக்கு வந்துள்ளது. ஏறத்தாழ ஒர் இயல்பமைந்த சூழல் அமைந்தபோது இயற்கைத் தோற்றமாக உயிரினம் முளைத்தது. உயிரினம் பிறப்பதற்குப் பிறப்பு அணுக்களே மூலகாரணம். கதிரவன் பூவுலகின் தாய், பூவுலகம் உயிரினங்களின் தாய். இந்தத் தாய் உயிரினங்களை ஈன்றெடுக்கும் கருவாகப் பிறப்பு அணுக்களைக் கொண்டிருந்தது. இது தாய்க் கருப்பையில் உள்ள பெண் கரு முட்டையைப் போன்றதே. கருத்தரிக்க ஆண் கரு வேண்டுமன்றோ, வானத்தில் இயங்கும் பிற கோள்களிலிருந்து சில பிறப்பணுக்கள் பூவுலகில் புகுந்தன. இவற்றின் அறிய இயலாத புணர்ச்சியால் பூவுலகத்தாய் சுருக்கொண்டாள். முதலில் முதற்கணியம் (Protoplasm) தோன்றியது. பின் 'கூழ்மம்' (Collied) உருப்பெற்றது. அது ஊன் வடிவுற்று 'ஊன்மம்' ஆயிற்று. ஊன்மத்திலிருந்து புழு தோன்றிப் படிப்படியாக உடலுருவம் வளர்ந்து வளர்ந்து படிப்படியாக மலர்ந்தது. இந்தப் படிமலர்ச்சி (Evolution பரிணாம வளர்ச்சி)யில் மாந்தன் தோன்றினான். எவ்வகை உயிராயினும் அதற்கு மூலம் ஐம்பெரும் பூதங்கள். அவற்றில் காற்று ஒன்று. அது பல வகையில் இன்றியமையாதது.

வளி மண்டிலம்

இக்காற்று பூவுலகைச் சூழ்ந்துள்ளது. உயிரினம் தோன்றுதற்குரிய காற்று பூவுலகச் சூழலில் தான் உள்ளது. காற்று என்பது ஒரு கலவைப்பொருள். அவற்றுள் உயிர்வளி (Oxygon) உயிரினங்களையும் மாந்தரையும் உயிர்பிக்கிறது. கரியகை என்னும் (Carbon-DI-oxide) தாவர இனங்களை உயிர்ப்பிக்கிறது. எனவே, காற்றின்றி உயிரினம் இல்லை.

இக்காற்று பூவுலகைச் சூழ்ந்து வானத்தில் மேன் மேலே பரவியுள்ளது. இதனைப் பரவியுள்ளது என்று பொதுவாகக் கூறக்கூடாது. அடுக்கடுக்காகப் பரவி யுள்ளது. ஓரளவில் இவ்வடுக்குகளைப் பூவுலகின் அடித் தளத்திலிருந்து இவ்வாறு கொள்கின்றனர், ஒவ்வொரு அடுக்கும் 'வளிமண்டலம்' எனப்படும்.

வளிமண்டிலம் நிலத்தளத்திலிருந்து ஏறத்தாழ
அடிவளிமண்டிலம் (Troposphare) 10 கிலோ மீட்டர்
படுகை வளிமண்டிலம் (Stroposphare) 27 "
இடைவளிமண்டிலம் (Merosphare) 85 "
மின் துகள் வளிமண்டிலம் (Inosphare) 400 "
கவர்ப்பு மண்டிலம் (Magnetosphare) 400 இதற்கு மேல்

இவ்வடுக்குகளில் காற்று தன் அடர்த்தியால் வேறு பழிகின்றது. பூவுலகிலிருந்து மேலே செல்லச் செல்ல வெப்பம் மிகும். வெப்பம் மிக மிகக் காற்றின் அடர்த்தி குறையும், காற்றின் அடர்த்தி குறையக் குறைய உயிரினம் உயிர்த்தல் தொய்ந்து கொண்டே போகும்.

நிலபென்னும் தாய்

பூவுலகின் அடித்தள வளிமண்டிலத்தில் உயிரினங்களின் உயிர்ப்பு (மூச்சை இழுத்து விடல்) இயல்பாக அமையும். அடுத்த மேல் அடுக்கில் வளியின் அடர்த்தி சற்று குறையும். அங்கு உயிரினம் அமைந்தால் முன் இயல்பு சற்று நெகிழ்வு ஆகும். அடுத்த வளிமண்டிலத்தில் நெகிழ்வு நெருக்கமாகும். இவ்வாறே நெருக்கம் இறுக்கமாகி, தள்ளாடி, திணறி, திண்டாட்டத்தில் நிறுத்தும். மேல் வளிமண்டிலத்தில்மேல் உயர்ந்தால் உயிர்ப்பு நின்று போகும். அங்கு வாழ முடியாது.

உயிர்ப்புக்குரிய வளியை 'ஞாலம்' என்னும் தாய் வழங்குகிறாள். வழங்கி உயிரினங்களைத் தோற்றுவித்து உயிர்ப்புக்கும் வளிவழங்கி வாழவைக்கிறாள். இவ்வகையில் 'நிலம் ஒரு தாய்' என்பது பொருத்தமாகும். நிலத்தைத் திருவள்ளுவரும் "நிலமென்னும் நல்லாள்" என்றார்.

தாயின் மடியில் பிறந்த குழந்தை, தாயின் அரவணைப்பில் இயல்பாக அமையும். தாயின் அன்பு ஈனும் அருளும் கைக்குழந்தையைப் பேணிக் காக்கும். மடியைவிட்டு அகன்று சற்று எட்டப்போய்த் தவழ்ந்தாலும் குழந்தை பேணிக் காக்கப்படும். ஆனால், மடி அரவணைப்பு இல்லை. இவ்வாறே குழந்தை சற்றுச் சற்றே அகன்று போகப் போக தாயின் அன்பும் அருளும் இருந்தாலும் நேரடித் தழுவல் குறைகிறது. அகற்ற குழந்தை விளையாடினாலும் தாயின் இடைவெளி சற்று தளர்வையே தரும்.

இது போன்றே வானத்தின் மேல் மேலே வளிமண்டி லங்களில் உயிரினம் உயிர்ப்பில் தொய்வுபடும்.

வளி வழங்கும் ஞாலம்

இவ்வாறான நிலவியல், வானவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் வளியியல் அறிஞர் கெப்ளர் முதல் கலிலியோவரை தொடர்ந்து கண்டறியப் பெற்ற உண்மைகள். இக்கண்டுபிடிப்பின் அடையாளத்தைத் திருவள்ளுவர் காட்டினார். அஃதாவது இந்த ஞாலம் வளியை வழங்குகிறது. வழங்கி உயிரினங்களை வாழவைக்கிறது. இதனை

"வளிவளிங்கு மல்லல்மா ஞாலம்" என்றார் நம் திருவள்ளுவர். இத்தொடர் வான அறிவியலில் வளியின் தோற்றத்தைக் குறிக்கிறது. அதிலும் வளியை இந்த 'ஞாலத்தாய் ஈன்று தருகிறாள்' என்றும் குறிக்கிறது.

ஞாலத்தாய் வளியை வழங்கினாலும் அவளது அருளிப் பாட்டின் நெருக்கம் குறையக் குறைய உயிரினத்திற்கு. அல்லல் உண்டாகி வளரும். இதனையும் இத்தொடரின் தொடர்ச்சி அறிவிக்கிறது. "வளி வழங்குமல்லல், மாஞாலம்" என்று திருவள்ளுவர் ஒரு கருத்திற்குக் கரியாகசான்றாகக் கூறினார்.

"அல்லல் அருள்.ஆள்வார்க்கு இல்லை (இதற்கு)
வளிவழங்கு மல்லல் மாஞாலம் கரி" (சான்று)

என்றார். எதற்குச் சான்றாயிற்றோ அந்த அருளில்லா அல்லல் கருத்தும் வானத்து வளிமண்டில அடுக்குகளால் வளரும் அல்லலுக்கும் பொருந்துகிறது.

ஞாலத்தாயின் அன்புக் கவர்ச்சியை அறிய வேண்டும்.

நிலம் ஈர்ப்பு ஆற்றல் உள்ளது. மேலே சென்ற பொருளைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளும் கவர்ச்சி கொண்டது. இதனை அறிவியல் அறிஞர் ஐசக்கு நியூட்டன் றிவித்தார். நிலத்தின் ஈர்ப்பு ஆற்றல் மேலே வளிமண்டிலங்களில் போகப் போகக் குறையும் என்பதும் கண்டறியப்பெற்றது. இதன்படி ஞாலத்தின் அடித்தளச் சூழலில் ஈர்ப்பாற்றல் உயிரினத்தை இயல்பாக வாழவைக்கிறது. இதனால் உயிரினங்களுக்கு வாழும் வளப்பத்தைத் தருகிறது. இதனால் தானும் வளப்பத்தின் பிறப்பிடமாகவும் ஆகிறது. இதனையும் திருவள்ளுவர்,

"மல்லல் (வளப்பமுடைய) மா ஞாலம்" என்று குறித்தார். இக்குறிப்பும் அறிவியல் பாங்கின் அடையாள மாகும்

ஏறத்தாழ ஆயிரத்தைந்துாறு ஆண்டுகளுக்குப் பின் கண்டறியப்பட்ட வான அறிவியல் உண்மையின் அடையாளம் பளிச்சிடும் குறள் இது.

"அல்லல் அருள்ஆள்வார்க் கில்லை; வளிவழங்கு
மல்லல் மா ஞாலம் கரி" (245)

என்றதாகும். இதனால் திருவள்ளுவரை அறிவியல்’ வள்ளுவர் என மனநிறைவுடன் போற்றலாம்.

தொங்கும் 'ஞாலம்'

இக்குறளில் மற்றொரு அறிவியல் அடையாளம் உள்ளது. அதனை வழங்குவது 'ஞாலம்' என்னும் சொல். சீஞாலம்’ என்பது இப்பூவுலகைக் குறிப்பது. இதற்கு உலகம் முதலிய பல சொற்கள் காரணப் பொருள்களுடன் தமிழில் உள்ளன.

இம்மண்ணுலகம் வானத்தில் ஞாயிற்றைக் சுற்றிச் சுழன்றவாறே உலவுகிறது. 'உல்-உல-உலகம்' என்னும்

சொல்வளர்ச்சி கொண்டு 'உலகம்' என்றால் ஞாயிற்றைச் அற்றி உலவி வருவதால் பெற்ற பெயர்.

இதுபோன்று 'ஞாலம்' என்பதும் ஒரு காரணப் பெயர். 'ஞால்' என்பது 'தொங்கு' என்னும் பொருள் தருவது.

வானக்கோள் அறிவியலில் கோள்கள் யாவும் தனித் தனியே வானத்தில் தொங்கிக்கொண்டு இயங்குகின்றன. தொங்குவது என்றால் ஒரு கயிற்றில் கட்டப்பட்டிருக்க. வேண்டுமன்றோ? அக்கயிற்றின் ஒருமுனை மேலும் மறுமுனை தொங்கும் பொருளிலும் பொருத்திக் கட்டப் படவேண்டும்.

ஆம், ஞாலத்தைத் தொங்கவிட்டிருக்கும் கயிறு ஈர்ப்பு ஆற்றலாகும். ஞாயிற்றின் ஈர்ப்பு ஆற்றல் மேல் முனை. அந்த ஈர்ப்பில் அகப்பட்டாலும் ஞாயிற்றை ஒட்டாமல் ஞாலத்தின் ஈர்ப்பாற்றல் காப்பாற்றிக் கொள்கிறது. இந்த ஈர்ப்பாற்றல் கயிற்றின் கீழ்முனை. இது ஞாயிற்றிலிருந்து பிரிந்த கோள்களுக்கெல்லாம் பொருந்தும்.

உலகம்-ஞாலம் சுழன்று சுற்றுகிறது என்பதும், அது ஞாயிற்றின் ஈர்ப்பால் பிணைக்கப்பெற்று உலகின் ஈர்ப். பால் ஞாயிற்றை அடையாமல் தொங்குகிறது என்பதும் 15ஆம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகள்.

தமிழ்ப்பெருஞ் சான்றோர் தம் அறிவியல் கூர்மையால் ‘உலகம், ஞாலம்’ என்னும் சொற்களைப் படைத்தனர். இவ்விரு சொற்களும் அவற்றின் பொருள் ஆழத்துடன் கூர்ந்து நினைவுகூரத்தக்கவை.

தொங்கும் உருண்டை என்னும் உள்ளிட்டுப் பொருளுடன் 'ஞாலம்' என்னும் சொல்லைத் திருவள்ளுவர் தம் குறட்பாக்களில் பெய்தார். ஆனால் 'ஞாலம்' என்னும். சொல் திருவள்ளுவரால் படைக்கப்பட்ட சொல் அன்று. உலகம் என்பதும் அவ்வாறே. ஆனால், திருவள்ளுவர் மனம் பற்றிய சொற்கள்; மனம்பற்றி இடமறிந்து ஆளப்பெற்ற சொற்கள்.

திருவள்ளுவர் மனம் பதித்த சொற்கள்

சங்க கால இலக்கியங்களில் இச்சொற்கள் பரவலாகக் கையாளப்பட்டுள்ளன. இவற்றுள் 'ஞாலம்' என்னும் சொல் கலித்தொகையில்தான் மிக அதிகமாக 12 இடங்களில் அமைந்துள்ளது. கலித்தொகைப் பாடல்களை எழுதியோர் ஐந்து புலவர்கள். ஐவருள் கபிலர் இச் சொல்லைக் கையாளவில்லை. எனவே, கலியில் உள்ள 12 இடங்களுக்கு நான்கு பேர் பங்காளிகளாகிறார்கள். இப்பங்காளிகள் ஒவ்வொருவரும் தனித்தனியே ஒன்று, இரண்டு, மூன்று இடங்களில்தான் கையாண்டனர்.

திருவள்ளுவர் தம் திருக்குறளில் 10 இடங்களில் இச் சொல்லைக் கையாண்டுள்ளார். தனியொரு புலவராக ‘ஞாலம்’ என்னும் சொல்லை அதிகம் கையாண்டவர் திருவள்ளுவர் ஒருவரே (சங்ககால நூல்களில்). இது கொண்டு இச்சொல்லில் திருவள்ளுவர் அதிக மனம் பற்றியமை புலப்படுகின்றது.

இது போன்றே 'உலகம்' என்னும் அறிவியல் கருத்து பொதிந்த சொல்லும் திருவள்ளுவரால்தான் அதிக இடங்களாக 22 இடங்களில் கையாளப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் 'உலகம்' என்னும் சொல் புறநானூற்றில் தான் அதிகமாக 39 இடங்களில் அமைந்துள்ளது. புற நானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர்கள் பெயர் தெரிந்த அளவில் 154 பேர். 39 இடங்களில் பலர் பங்கு பெறவே இல்லை. எனவே, தனியொரு புலவராக 'உலகம்' என்னும் சொல்லைக் கையாண்டவர் திருவள்ளுவரே யாவார். இச்சொல்லிலும் திருவள்ளுவர் மனம் பற்றியதை உணரலாம்.

அறிவியல் பொருள் பொதிந்த இவ்விரு சொற்களில் திருவள்ளுவர் கருத்துரன்றியமையைக் கணக்கில் கொண்டால் திருவள்ளுவர் அறிவியற் கவிஞர்' என்பதற்கு மேலும் ஒரு துணைச் சான்று ஆகின்றது.

இவ்வாறாக,

"வளிவழங்கு மல்லல் மா ஞாலம்" என்னும் திருவள்ளுவர் கருத்து 15ஆம் நூற்றாண்டுக் கண்டு பிடிப்பான வான அறிவியலுக்கு ஒரு முன்னோடித் தொடராக அமைந்ததாகும்.

‘வானவியல்’ என்னும் சொல் இக்காலப் புத்தாக்கச் சொல்லன்று. முன்னையப் பழந்தமிழ்ச் சொல்லேயாகும். 15ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த இடைக்கட்டுச் சித்தர்

'வானியல் போல் வயங்கும் பிரமமே' என்று இச்சொல்லை அமைத்தார், அவரே,

"ஊனியல் ஆவிக்கு ஒரு கதியில்லை" என்று 'ஊனியல்' என்னும் அறிவுத் துறைச் சொல்லையும் எடுத்து மொழிந் தார். தமிழ்நூல்களுள் இக்கால அறிவியல் ஆக்கச் சொற்கள் பல ஆக்கப்பட்டன என்பதற்கு இஃதும் ஒரு சான்று.

திருக்குறளில் மேலே கண்டமை போன்று இக்கால அறிவியற் கண்டுபிடிப்புகளின் உள்ளீடான அடையாளங்கள் பல உள்ளன.

ஓரளவில் இங்கு மேலும் சில காணலாம்.

2. நாட்டிற்கு ஐந்து
அறிவியல் பதினான்கு

அறிவியல் ஆய்வும், கண்டுபிடிப்புகளும், பயன்களும் நாட்டு நலனை நோக்கமாகக் கொண்டவை. நாடு என்றால் மலை முதலிய அசையாப் பொருள்களும் ஒரறிஉயிர் முதல் ஆறறி உயிர் வரையான உயிர்களும் அடங்கும். எனவே அறிவியல் நலனும் இவைகட்கே உரியது. இவற்றிலும் சிறப்பாக மாந்தருக்கே உரியது.

திருவள்ளுவர் மாந்தரின் செம்மையான வாழ்விற் கென்றே திருக்குறளைப் படைத்தார். அதில் மாந்தருக்குப் பல்வகை நெறிகளையும் வடித்தார். பல்வகைப் பற்றுக்கோடுகளையும் கொடுத்தார். நலமும் வளமும் தரும் அறிவார்ந்த கருத்துக்களையும் வழங்கினார். அவற்றுள் அறிவியல் பாங்கான கருத்துக்கள் என்றும் துணைகளாக நின்று என்றும் நலனளிப்பவை.

எனவே, மாந்தரைக் கொண்ட நாட்டை வைத்து அவர் வழங்கிய கருத்துக்களில் அறிவியல் உயிரோட்டங்களைக் காணல் ஒரு வழியாகும்.

’’பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்

அணியென்ப காட்டிற்கிவ் வைந்து’’ (738)
என்னும் குறள் அவர்தம் அறிவியற் கருத்துக்களைக் காண ஒரு கொளுவாக உள்ளது. ஏரின் உழவு நடப்பதற்கு ஏர் முனையில் 'கொளு' அமைவது போன்று செய்யுளில் கருத்துக்களை சுட்டுவதற்கும் ஒரு நூற்பா உண்டு. அதற்குக் 'கொளு' என்று பெயர்.

"பிணியின்மை" என்னும் குறட்பாவைக் கருத்துக் கொளுவாகக் கொண்டு அதன் வழி திருவள்ளுவரின் கருத்துக்களைக் காண முடிகின்றது. அவர்தம் அறிவியற் கருத்துக்களைக் காண்பதற்கு இக்குறள்தான் வழி என்றில்லை. பிறவழிகளும் உள்ளன. இங்கு இக்குறளை ஒரு பொருத்தமான வாய்ப்பாகக் கொள்ளலாம்.

நாட்டிற்கு அணிகளைக் கூறும் இக்குறளில்,

"நோய் இல்லாமை
செல்வம்
பொருள் விளைச்சல்
உயிர்களின் இன்பம்
உயிர்களின் பாதுகாப்பு"

என ஐந்து இடம் பெற்றுள்ளன. இவை செம்மையாக அமைந்தால் நாடு-அணிபெற்ற அழகில் ஒளிரும். அஃதாவது, வளம் பெற்ற வனப்பில் திகழும். நாட்டு அணிகளாகும் இவ்வைந்திலும் மந்தர்தம் நலங்களே நிறைந்துள்ளன.

ஒரு சங்கிலித் தொடர்

மற்றுமொரு அறிவார்ந்த பொருத்தம் இவ்வைந்தையும் அமைத்த பாங்கில் உள்ளது. ஐந்தைக் குறிக்க வேண்டுமென்று ஒன்று, இரண்டு என எண்ணுவதற்காக மட்டும் இவ்வைந்தின் அமைப்பு இல்லை. ஒன்றை அடுத்த ஒன்று முன்னைய ஒன்றின் தொடர்பாகவே அமைந்துள்ளது. எனவே, ஐந்தும் ஒன்றன் தொடர்புடைய ஒன்றாகச் சங்கிலித் தொடராய் அமைக்கப்பட்டுள்ளன.

நோய் இல்லாமை - பிணியின்மை செல்வத்தின் பயன்பாட்டிற்குத் தடை இல்லாது உதவுவது. எத்துணை செல்வமிருப்பினும் நோய் பிணித்துக் கொண்டிருந்தால் அச்செல்வம் உரிய மகிழ்ச்சியைத் தராது. எனவே, பிணியின்மையை அடுத்துச் செல்வம் வைக்கப்பெற்றது. நாட்டுச் செல்வம் என்பது சிறப்பாக நிலத்து விளைச்சலில்தான் உள்ளமையால் செல்வத்தை அடுத்து விளைவு அமைக்கப் பெற்றது. பல்வகை விளைச்சலால் மக்களின் வாழ்க்கை இன்பம் பெறும். பெறப்பட்ட இன்பம் பறிபோகாமல் நிலைக்கப் பாதுகாப்பு வேண்டும். இவ்வாறாக ஐந்தும் ஒன்றையொன்று தொடரும் சங்கிலித் தொடராக அமைக்கப்பட்டுள்ளன. பிணியின்மை முதலில் மாந்தரின் வளமான வாழ்விற்கு உடல் நலந்தான் அடிப்படை என்பதைக் காட்டுவதாகும்.

இப்பிணியின்மையில் அமைந்துள்ள அறிவியல் திறத்தைக் காணுதல் இக்கால அளவில் ஒரு முதன்மை பெறுவதாகும்.


அ. பிணியின்மை

நோய் - பிணி

அறிவியல் துறைகள் 1. நோய்இயல், 2. உணவியல் 3. மருத்துவ இயல், 4. உடலிய உளவியல் - எனும் நான்கு இயல்கள் - இத்தலைப்பில் குறளிலிருந்து புலனாக்கப்படுகின்றன.

நோய் மாந்தர்க்கு உடலிலும் அமையும். உள்ளத்திலும் அமையும். அது மாந்தர்க்குப் பெருமளவில் உடன்பிறப்பு. ‘கருவிலே திருவுடைமை' என்பது போன்று 'கருவிலே நோயுடைமை'யும் உள்ளது. இக்குழந்தைக்கு கருவிலேயே நோய்க்கூறு அமைந்தது 'என்று இக்கால மருத்துவர் அறிந்து கூறுவர். இன்னும் ஆழமாக நோக்கினால் கருப்பைக்குள் இருக்கும் குழந்தையை ஆய்ந்து அதன் நோயைக் கணிக்கும் காலம் இது. மாந்தன் தோன்றிய காலத்திலேயே அவனுடன் நோயும் தோன்றியதாம். தோற்ற கால மாந்தனின் படிவங்கள் கிடைத்தவற்றில் நோய்க்குறிகள் தென்பட்டமை காணப்பட்டுள்ளது. எகிப்தியப் படிவங்களில் இக்கால் நோயின் குறிகள் காணப்பட்டன. எனவே, நோய் மாந்தனுக்கு உடன்பிறப்பு, அதனால்தான் "உடன் பிறந்தே சொல்லும் வியாதி" என்றனர். நோய் இடம் பிடிக்க உடலில் இடந்தேடி அமைவது அதனால்தான் நோய்க்கு இடம் கொடேல் என்றார் அவ்வையார்.

நோய் உடலை நோக வைப்பது. 'நொ’ என்றால் ’துன்பப்படு' என்று பொருள். இதுதான் 'நோய்’ என்று வடிவெடுத்தது. இடம் பிடித்து உடலில் நின்று துன்பம் தரும். துன்பம் தரும் எத்தாக்கத்தையும் நோய் என்னும் சொல்லால் குறிக்கின்றோம். இந்நோயே உடலை இறுகப் பற்றிப் பிணித்துக் கொண்டு விலகாமல் அடம்பிடிக்குமானால் அது 'பிணி' எனப்படும். பிணித்து நிற்கும் நோய் பிணி. இது கடுமையானது; கொடுமையானது. இஃது இல்லாமை நாட்டுக்கு ஒர் அணி. இப்பிணியிலும் உடலைப் பற்றிப் பிணித்துக் கொண்டு நீங்காமல் தொடர்ந்து துன்பம் தருவன பல உள்ளன. நீரிழிவு, என்புருக்கி, நரம்பிமுப்பு முதலியன நெடுங்காலம் உறவாடித் துன்புறுத்துவன: இவற்றைத் திருவள்ளுவர் "ஓவாப் பிணி' (734) என்றார். பிணிக்கும் நோய் இல்லாது நலத்துடன் வாழ்வதற்கென்றே திருவள்ளுவர் 'மருந்து' என்னும் ஓர் அதிகாரம் வகுத்து 10 குறட்பாக்களை வழங்கினார். இப்பத்துக் குறட்பாக்களிலும் நோயின் அறிவியற்கருத்துக்கள் உள்ளன.

இக்கால மருத்துவ ஆட்சி

இக்காலம் மருத்துவ அறிவியல் மிடுக்கோடு வளர்ந்து வருகிறது; நுணுக்கமான முறைகள் கொள்ளப்படுகின்றன. மருந்துகளில் அனைத்து வகையும் நாளுக்கு நாள் நுண்ணறிவின் ஆட்சிகளால் வளர்ந்து வருகின்றது. நாளுக்கொரு புதுமுறை கண்டறியப்படுகிறது. ஊசியை உடலில் குத்தி மருந்து செலுத்திய முறை மாறிக் குத்தாமலே மருந்தை உள்ளே செலுத்தும் முறை வந்துள்ளது. நெஞ்சகத்தாக்க நோய்க்கு மார்பை அறுத்துச் செய்யும் அறுவை பண்டுவம் (சிகிச்சை) மாறிவிட்டது. கால் நரம்பில் செயற்கை நுண்குழல் நரம்பைச் செலுத்தி, நெஞ்சகக் குழலில் படிந்துள்ள கொழுப்பைக் கரைக்கும் முறை வந்துள்ளது. எண்ணிப்பார்க்க முடியாத அணு துணுக்கங்கள் பிறந்துள்ளன. இவற்றால் மக்கட் கூட்டம் பழங்காலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறது.

முற்கால மாந்தரின் இறப்பு நூறு ஆண்டைத்தாண்டி வந்தது. இக்காலம் அந்நிலையை அடைந்து வருகிறது. முற்கால மாந்தரின் உயிர்வாழ் எல்லை ஒட்டுமொத்த வருத்தலாக எண்பதாண்டாக இருந்தது. இக்கால மருத்துவம் 28இல் இருந்ததை ஏறத்தாழ அறுபதுக்குக் கொண்டு வந்துள்ளது.

எனவே இக்கால மருத்துவ ஆட்சியில் எல்லையிலோ, பயனிலோ, பெருமையிலோ முற்கால மருத்துவ ஆட்சி முழுமையாக ஈடுகொடுக்க முடியாது.

ஆனாலும், இவற்றின் கூறுகள் முற்காலத்தில்

இருந்தன என்பது உண்மை. அவற்றுள் சில திருவள்ளுவத்திலிருந்து இங்கு காணப்படுகின்றன.

அறிவியலில் நோய் இயலும் திருவள்ளுவமும்

புதுமைக்கால அறிவியலில் உடலியலுடன் தொடர்புடையது நோய் இயல்' (Pathology) என்னும் ஒன்று. 'நோய் இயல்' ஒன்றை ஆராய்வதாக நோய் அறிவியல் வல்லுநர் கண்டுள்ளனர்.

1. நோயின் காரணங்களை ஆராய்தல்;
2. அக்காரணங்கள் செய்யும் உடல் அமைப்பு மாறுதல்களை ஆராய்தல்:
3. காரணங்களையும் மாறுதல்களையும் எதிர்க்கும்

முறைகளை ஆராய்தல்.

இவை மூன்றையும் மருந்து அதிகாரக் குறட்பாக்களில் காண்கின்றோம். இவ்வதிகாரத்தில்,

முதற்குறள்,

’வளிமுதலா (வளி, பித்தம், ஐ) எண்ணிய மூன்று
மிகினும் குறையினும் நோய் செய்யும்’

என்று நோயைச் செய்யும் காரணிகளான வளியும், பித்தமும், சளியும் சமநிலையில் இல்லாமல் மிகுந்தாலும் நோய் உண்டாகும்; குறைந்தாலும் நோய் உண்டாகும் என்று (1) நோயின் காரணங்கள் ஆராய்ந்து காணப்பட்டன. இது நோய் இயலின் முதல் ஆய்வை உள்ளீடாகக் கொண்டது.

அடுத்த ஆறு குறட்பாக்கள்,
உண்பது செரித்ததை அறிந்து உண்ணல்;
அளவறிந்து உண்ணல்;

பசியெடுத்தபின் மாறுபாடில்லாத உணவை உண்ணல்;

மாறுபாடில்லாத உணவை உண்ணும் உடல்நலத்தால்
உடலிலுள்ள உயிர்க்கு ஊறுபாடு இல்லை;

மிக அதிகம் தின்றால் உடம்பில் நோய் நிலைக்கும்;

வயிற்றுத் தீயின் அளவறிந்து உண்ணவேண்டும்.

என உணவுகொள்ளும் அளவை வைத்து (2) அதனை ஏற்கும் உடல் நோயில்லா அமைப்பைப் பெறுக என்று விளக்குகின்றன. ஆறு குறட்பாக்களும் இக்கால நோய் இயலின் இரண்டாவது ஆய்வை உள்ளீடாகக் கொண்டவை.

இறுதி மூன்று குறட்பாக்களும்,
நோயை, நோயின் மூலத்தை அறிந்து மருந்து வழங்கல்,
மருத்துவம் கற்றவன் கருதிச் செய்யவேண்டியவை:

மருந்து நலம்பயப்பச் செய்பவை நான்கு-என விளக்குகின்றன. இவை நோய் இயலின் (3) நோயை எதிர்த்து முறியடிக்கும் வழியைச் சொல்கின்றன.

இவ்வாறாக ஒட்டுமொத்தமாகப் பத்துக் குறட்பாக் களும் இக்கால நோய் அறிவியலின் கருத்துக்களை 'நோய் இயல்' அறியப்பட்ட ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குமுன் அறிவிக்கப்பட்டவை.

மருந்தும் மருத்துவமும் உடலில் பல இடங்களிலும் கி. மு. விலிருந்தே உள்ளன. மேலை நாட்டு அறிவியல் பாங்கில் முதன்முதலாக கி. மு. 400 அளவில் கிரேக்க அறிஞர் இப்போசிரேட்டெசு (Hippocrates) என்பார் கண்டறிந்தார். இவர் 'நோயியல் தந்தை' எனப்படுபவர். பல அரிய புதுமைக் கருத்துக்களை இவர் கண்டு கூறியிருப்பினும் நோய் போக்க மருந்தாக மந்திரச் செயலையும் ஏற்றுக் கருத்தறிவித்தார். பகுத்தறிவிற்கு ஒவ்வாத 'மந்திர--மாந்திரிகம்' அக்கால நோயியலின் கூறுகளாகவும் இருந்தன. இப்போதும் உலகிலும்- நம் மண்ணிலும் இந் நடைமுறை உள்ளது. (Medicine Man) என்பதற்கு ( நாகரிகமாந்தரின் மாய மந்திரவாதி' என்று ஆங்கில அகர முதலிகளில் பொருள் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.

திருவள்ளுவரோ இதனைக் கொள்ளாதவர். பத்துக் குறட்பாக்களிலும் பிற இடங்களிலும் மந்திரமுறையைக் கூறவில்லை. இது திருவள்ளுவர் பகுத்தறிவோடு கூடிய அறிவியல் பாங்கினர் என்று காட்டுவதாகும்.

மருந்து என்னும் அதிகாரத்தின் பத்துக் குறட்பாக்கள்
தோய் பிறத்தல் (941)
வருமுன் காத்தல் (942-947)

வந்தபின் தீர்த்தல் (948-950) எனும் முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

நோய் பிறத்தல்

மிகுனும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று"(941)

என்னும் முதற்குதள் நோய் பிறத்தலுக்குக் காரணம் சொல்கிறது. இதில் பரிமேலழகர் முதலியோர் “மிகினும், குறையினும் என்றதற்கு 'உணவு மிகுந்தாலும் குறைந்தாலும் என்று எழுதினர். பரிப்பெருமாலோ "வலி முதலிய மூன்று குறைந்தாலும்... (?) நோய் செய்யும்' என்றார். ஆனால், குறளின் சொற்கிடக்கை வளி முதலிய மூன்று மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் செய்யும் என்ற பொருளையே கொள்ள வைக்கிறது. எனவே, வளி (வாதம்), பித்தம், ஐ (கோழை) என உடலில் அமைந்த மூன்று மிகுந்தாலும் நோய்; குறைந்தாலும் நோய்: சமநிலையில் அமையவேண்டும். அமைந்தால் நோய் இல்லை. எனவே, நோய்க்குக் காரணம் உடலில் வளி முதலிய மூன்றுந்தாம்.

இது நூற்றுக்கு நூறு தமிழ்க் கண்டுபிடிப்பு. மிகத் தொன்மையான கண்டுபிடிப்பு. இக் கண்டுபிடிப்பு தமிழில் பல நூல்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைக் குறிக்கத் தான் திருவள்ளுவர் "நூலோர்" என்று தமிழ் மருத்துவ நூலாரைக் குறித்தார். ஆனால், பரிமேலழகர் வளி முதலா எண்ணிய மூன்று' என்பதற்கு "ஆயுள்வேதம் உடையாரால் வாதம் முதலாக எண்ணப்பட்ட மூன்று" என்று பொருள் எழுதினார். இது ஆயுள்வேத முறையாகப் பின்னர் கொள்ளப்பட்டது. இது தோற்றத்தில் தமிழ் மருத்துவ முறை. எவ்வாறென்றால் 'ஆயுள் வேதம்’ கி. பி ஏழாம் நூற்றாண்டில்தான் உருப்பெற்றது. இது அதர்வண வேதத்தில் உள்ளதாகச் சிலர் கருதினர். அதர்வணத்தில வேறு வகைக்காக எழுந்ததை மருத்துவத்திற்குப் பொருத்தி இவ்வாறு கூறுவர். உண்மையில் வளி முதலா எண்ணிய மூன்றின் விளக்கம் தமிழில் தனிஉரிமைக் கருத்தாகும்.

இம்மூன்றுதாம் உடலில் சமநிலையில் இருந்து உடலை இயங்க வைக்கின்றன. பருவத்தாலும், உணவாலும் உடலில் இம்மூன்றும் தனித்தனியே கூடியும் குறைந்தும் நோயைத் தருகின்றன. இம்மூன்றையும் வைத்தே தமிழ் மருத்துவ முறைகள் பிறந்தன; விரிந்தன. இவை மூன்றி லும் முதலிலுள்ள 'வளி' வல்லமை வாய்ந்தது. மற்றைய இரண்டும் அடுத்தடுத்த வல்லமை உடையவை. இதனை உருவகமாக வளியை அரசனாகவும், பித்தத்தை அமைச்சனாகவும், கோழையைப் படை மறவனாகவும் மருத்துவ நூலார் சொல்லினர்.

தேரையர் என்னும் மருத்துவத் தமிழறிஞர்,
"அரசன் வாதமொடு அமைச்சன் பொருநன்" என்றும்

"தான் (வளி), மனை (பித்தம்), சேய் (கோழை) மன்னன், அமைச்சன், மீளி"[20] என்றும் பாடினார். தேவாரம் பாடிய அப்பரும்,

"ஆனது இக்காளை (கோழை) அமைச்சை (பித்தத்தை) மேவிடின் ஆன் இறை (வளி) உறின்" [21] என்று உருவகித்துப் பாடினார்.

இத்துணை ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டவை வளி முதலிய மூன்றும், இவற்றைக் கொண்டு நோயையும் கண்டறியலாம். மருந்தையும் கொடுத்தறியலாம் . இம்முறை இக்கால மருத்துவ அறிவியலில் இல்லை என்பது கருதத்தக்கது.

இம்முறை கொண்ட தமிழ் மருத்துவம் ஒரு தனித் தன்மை உடையது. திருவள்ளுவரின் இக்குறள் இத்தனித் தன்மையை எடுத்து மொழிகிறது. மொழிவதன் மூலம் அக்கால நோய் அறிவியலை அறிமுகம் செய்கிறது.

இது நோய் தோன்றுவதன் கருநிலை கூறுவது.

வரும்முன் காத்தல்-உனவியல்

நோய் வரும்; அதனை நீக்க மருந்தும் வேண்டும். நோய் வந்தால்தானே மருந்து வேண்டும்? நோய் வரும்முன் காத்துக் கொண்டால் மருந்து எதற்கு?

"மருந்து என வேண்டாவாம்" என்று தொடங்கினார் திருவள்ளுவர். தொடங்கி மருந்து வேண்டாமைக்குக் காரணமும் கூறினார்.

"அருந்தியது
அற்றது போற்றி உணின்" (942)

மருந்து வேண்டா என்றார். இவ்வாறு உண்டால் நோயும் வராது; மருந்தும்-மருந்துகளும் வேண்டியன அல்ல. இது வரும் முன் காக்கும் முதல் கவனம்.

திருவள்ளுவர் தம் நூலில் ஒவ்வொரு சொல்லையும் அதன் உள்ளார்ந்த பொருள், அதனை அமைக்கும் இடத்தின் பொருத்தம் அறிந்தே எழுதுபவர். இக்குறளிலும் இவ்வமைப்பைக் காண்கின்றோம்.

'மருந்து என வேண்டா' என்றதில் 'என' என்றதும் வேண்டா என்றதும் பன்மை வினைகள். இவற்றால் முன்னுள்ள மருந்து என்றதற்கு மருந்துகள் என்று பொருள்.

தமிழ் மருத்துவத்தில் ஒரு நோய்க்கு ஒரு மருந்து. சில நோய்களுக்கும் ஒரே மருந்து என்பது மரபு. இதன்படி இங்கு மருந்து என்றது ஒரு நோய்க்குச் சில மருந்துச் சரக்குகள் கலந்தமை பொருள். இவ்வகையில் பன்மையா கிறது. ஆனால், இக்காலத்தில் ஒரு நோய்க்கு ஒரு மருந்து என்றில்லை. ஒரே நோய்க்குப் பலவகை மாத்திரைகள்: இவற்றுடன் நீரிய மருந்துகள், ஊசி மருந்து கொடுக்கப்படும் நிலையை நோக்கும்போது திருவள்ளுவர் மருந்துகள் என்று எதிர்காலத்தை நோக்கிப் பதிந்துள்ளார் என்று எண்ணத்தோன்றுகின்றது. நோயும், பல மருந்துப் பொருள்களும் பல என்றவர், மருந்து வேண்டாம் என்றதற்குக் காரணம் பல சொல்லவில்லை. ஒன்றுதான் சொன்னார்.

'அருந்தியது அற்றது' என்று இரண்டையும் தனித் தனியே ஒருமையில் சொன்னமை அவர்தம் ஆழ்ந்த கருத்தை அறிவிக்கிறது.

'அற்றது' என்பது வயிறு ஒரு உணவுப் பொருளும் அற்ற வெற்று அறையாக உள்ளதைக் குறிக்கும். எனவே, வரும் முன் காக்கும் முறை அறிமுகமாகிறது. இதில் "போற்றி உணின்', என்பதில் 'போற்றி' என்றால் 'பாதுகாத்து' என்று பொருள். வெற்று வயிற்றினைப் போற்ற மறு உணவு இடவேண்டும். அந்த உணவு பாதுகாப்புக்குரிய உணவாக வேண்டும். எனவே இங்கு. சொன்ன போற்றி உணல் அடுத்தடுத்த குறட்பாக்களில் விளக்கம் பெறுகிறது.

'அற்றது:போற்றி'யைத் தொடர்ந்து 'அற்றல் அறிந்து' உண்டால் உடம்பு நோயின்றி விளங்கும்.

அதனைக் கடைப்பிடித்து,

"மாறு அல்ல துய்க்க;
துவரப்பசித்துத் துய்க்க"(494)

என்றார். இதில் மாறு அல்ல என்றது போற்றுதலின் விளக்கம்.

இதனையே தொடர்ந்து

"மாறுபாடு இல்லாத உண்டி" என்றார். இவ்வுணவை அறிந்து மற்றவற்றை,

        "மறுத்து உண்ணின
        ஊறுபாடு இல்லைஉயிர்க்கு" (945)

என்றார்.

"அற்றது போற்றுதல்". "அற்றது அறிதல்", "மாறு அல்ல துய்த்தல்", "பசித்துக் துய்த்தல்", "மாறுபாடு இல்லாமை", "மறுத்து உண்ணல்"-இவற்றால் நோய் வராமை மட்டும் அன்று; "மருந்து வேண்டா" என்பது மட்டும் அன்று. இவற்றால் உடல் காக்கப்படும் என்பது மட்டும் அன்று.

"ஊறுபாடு இல்லை உயிர்க்கு"-உயிருக்கே இக்கால வடமொழிச் சொல்லின்படி ஆபத்து-ஊறுபாடு இல்லை.

இடையில் மருந்தின் தொடர்பில் இக்கால அறிவியலைக் காணவேண்டும். அறிவியலில் ஒரு துறை 'உடலியல்' இதனுடன் இணைந்த துறை 'உணவியல்'. இவை இரண்டும் மருந்தியலின் தொடர்புடையவை. உணவியல் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு தனிக் கலையாகியுள்ளது, உணவில் 'சீருணவு' (Balanced Diet) இன்றியமையாதது. 'காப்புணவு' (Productive food) நோயின்றி உடலைக் காப்பது . 'ஒழுங்கான உணவு' (NormalDiet). உடலியக்கத்தை சீராக வைத்திருப்பது. இக்கால அறிவியலில் இவை மூன்றும் விரிவாகியுள்ளன. சுருக்கமாக இவற்றைத் திருவள்ளுவரின் உணவுக் கருத்துக்களாகக் கூறியுள்ளவற்றில் அடக்கலாம்.

(அற்றது அறிந்து)
’போற்றி உண்ணும் உணவு' சீருணவு
’மாறுபாடில்லா உணவு’ காப்புணவு
'அளவறிந்து உண்ணல்’ ஒழுங்குணவு

இவ்வாறு இக்கால உணவு அறிவியலை, திருவள்ளுவம் விளக்குவதைக் காண்கிறோம்.

வயிற்றுத் தீ

அருந்தியது அற்றுப்போவதை-அஃதாவது செரித்து ஊட்டமாவதை இக்கால அறிவியல் மிக விளக்கமாக ஆய்ந்துள்ளது. செரிமானம் உடம்பின் வெப்ப நிலையால் அதிலும் வயிற்று வெப்ப நிலையால் முழுமையடைகிறது.


உயிரிகளின் உடம்பின் வெப்பமும் அவை வேலை செய்வதற்கு வேண்டப்படும் வெப்பமும், செரிமான உணவு உயிர்வளி (Oxygen)யுடன் 'உயிரணுக்' (Cells)களில் வினைப்படும் போது வெளியாகின்றன.”

இது செரிமானத்திற்கு வெப்பம் செயற்படுவதை விளங்குகின்றது.

மேலும் விளக்கமாக,

'கரிநீரகி (Carbohydrate), ஊட்டப்பொருள் (Protein). கொழுப்பு ஆகிய மூன்றும் எரிக்கப்பட்டு உடல் ஆற்றலைத் தருகின்றன.'

மேலும் விளக்கமாக,

'இவை மூன்றும் வயிற்றுத்தீயால் எரிக்கப்பட்டு முறையே கிராமுக்கு 4.4.9 உடல்வெப்ப அளவுகளை-கலோரிகளைத் (Calories) தருகின்றன’

என்னும் உணவின் செரிமான விளக்கம் இக்கால உணவு அறிவியலில் காணப்படுபவை.

இதில் செரிமானத்திற்குச் செய்யப்படும் வயிற்று வெப்பம் தருதல் வயிற்றுத் தீ’ எனப்பட்டது. புறநானூற். றில் சேரமான்கணைக்கால் இரும்பொறை "வயிற்றுத் தீத்தணிய"[22] என்று பாடினார்.

"வயிற்றுத் தீயார்க்கு உணவு வழங்கினார்"[23] என்று ஏலாதியில் கணிமேதையார் குறித்தார்.

திருவள்ளுவர்,

        "தீ அளவின்றித் தெரியாள் பெரிதுண்ணின்
        நோய் அளவின்றிப் படும்" (946)

என்றார். வயிற்றுத் தீயின் அளவு தெரிந்து அஃதாவது வயிற்றுத் தீயை அளவாக வைக்கும் அளவான உணவே உண்ணவேண்டும் என்பதை அறிந்து அளவான உணவை (சீருைைவ) உண்ண வேண்டும். அதிகமாக உண்டால் நோய் அளவில்லாமல் உண்டாகும்-என்று செரிமானக் காரணமும் கூறினார். இஃது முன்னர் "அற்றால் அளவறிந்து உண்க' என்றதற்கும் கழிபேரிரையான்கண் நோய்' என்றதற்கும் காரண விளக்கமாகும்.

முன்னே கண்ட இக்கால உணவு அறிவியலின் கண்டு பிடிப்புக்களான கருத்தேற்றங்களின் உள்ளீடாக "தி அளவின்றி” என்றும் குறள் திகழ்கிறது. "உணவே மருந்து' என்பது தமிழ் வழக்கு.

இக்கால மருத்துவர்கள் நீரிழிவு முதலிய நோய்களுக்கு உணவுக் கட்டுப்பாட்டையே வலியுறுத்துவதையும் கருதிப் பார்க்கவேண்டும்.

எவ்வகையிலும் உணவுபற்றித் திருவள்ளுவர் அறிவித் துள்ளவை இக்கால உணவு அறிவியலின் முேைனாடிகள் என்று பதியத்தக்கவை.

வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல்


"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்" (948)

இக்குறளிலுள்ள "நோய் நாடி" என்றது நோயை நாடிபிடித்து ஒர்ந்து பார்த்து "இன்ன நோய்" என்றறிவது. இது இக்கால மருத்துவ அறிவியலில் நோய் காணல் (Diagnosis) எனப்படுகிறது. நோய் முதல் நாடுவது, தமிழ் மருத்துவத்தில் நோய்க்குக் காரணம் "வளி முதலா எண்ணிய மூன்றில் எது" என்று நாடி கொண்டே காணுதல். இது இப்போது சிறுநீர், குருதி, மலம் முதலிய ஆய்வு களாலும் கதிர்ப்படம். கதிர்வீச்சுப்படம் கதிவீச்சுவரி முதலிய படப்பதிவுகளாலும் அறியப்படுகிறது. “அது தணிக்கும் வாய் நாடுவது" முதலில் நோயைக் குறைக்கும் மருந்தைத் தேர்வது. இது இக்காலத்தில் மருந்துகளாக மாத்திரை, மேற்பூச்சு, ஊசி, அறுவை, கதிர்ப்பாய்ச்சல் முதலியவற்றில் ஒன்றையோ பலவற்றையோ ஆராய்ந் தறிந்து செய்வது. இதனைத் திருவள்ளுவர் "தணிக்கும்" என்னும் சொல்லால் குறித்தமை கருதத்தக்கது. ஐரோப்பிய மருத்துவத்தில் நோயை உடனே தடுக்கும் முனைப்பான மருந்துகளே வழங்கப்படும். தமிழ்முறையில் முதலில் நோயைக் குறைக்கும் - தணிக்கும் வழியறிந்து உடல் ஏற்கும் அளவான மருந்தை வழங்கும் முறையே கொள்ளப்படும். இஃதே பின் விளைவுகள் இல்லாமல் பையப் பையத் தணித்து முடிவாக நோய் தீர்ந்துபோகச் செய்யும்.

"வாய்ப்பச் செயல்" என்றது பொருந்திய மருந்து கொடுத்தல். இதிலும் நீரிய மருந்து, குழம்பு, அறுத்துச் சுடுதல், பற்று முதலிய கையாளப்பட்டன.

திருவள்ளுவர் அடுத்து மருந்து கொடுக்கும் முன் நோய் பெற்றவனின் உடல் நிலையளவு, நோயின் தாக்க அளவு, நோயின் கால அளவு, இவற்றைக் கருதிப் பார்த்துச் செய்தலைக் குறித்தார். இதனை "உற்றான் அளவும்: பிணியளவும், காலமும் கற்றான் கருதிச் செயல்" (949) என்னும் குறளில் அமைத்தார்.

புதுமை மருத்துவத்தில் நோயாளியின் உடல்' மருந்தைத் தாங்கும் அல்லது ஏற்கும் நிலை பார்க்கப்படுகிறது. நோயின் கால அளவு உசாவி அறியப்படுகிறது . எடுத்துக்காட்டாகக் கண்பார்வை நோய் என்றால் அதிலும் 'நீர் அழுத்த நோய்' என்றால் நோயாளி நீரிழிவு நோய் உள்ளவரா என்று ஆராய்ந்தறிவர். உள்ளவர் என்றால் எத்துணை காலமாக இருக்கிறது(?) என்பதை உசாவி அறிவர். இந்தக் கால அளவுதான் கணக்கில் கொள்ளப்படும்.

அடுத்து,

"கற்றான் கருதிச் செயல்" என்றெதில் 'கற்றான்' என்னும் சொல் திருவள்ளுவர் காலத்திலும் அதற்கு முன்பும் மருத்துவக் கல்வி இருந்ததையும் குறிக்கிறது. இக் காலத்தில் மருத்துவக் கல்வி கற்றுத் தேர்ந்து பட்டம் பெற்றவரையும் குறிப்பாகக் காட்டி நிற்கிறது.

நிறைவாக மருத்துவத்தைக் கையாளும்போது இடம் பெறும் நான்கை அடுத்துக் குறித்து முடித்தார். அதனை நான்காகக் குறித்தார்; நான்கு கூறாகக் குறித்தார்.

"உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான் என்று
அப்பால் நாற்கூற்றே மருந்து" (950)

திருவள்ளுவ மருத்துவத்தில் இவை நான்கும் நினைவில் நிற்பவை. உற்றவன் - நோய்பெற்ற நோயாளி; தீர்ப்பவன் நோயைத் தீர்க்கும் மருத்துவன்; மருந்து - நோய்க்கு உரிய துரள், நீறு, மாத்திரை, குழம்பு, களிம்பு, மூலிகை முதலியனவும், அறுத்துச் சுடுவதும் அடங்கும். நான்கையும் முறைப்படுத்தி அடுக்கினார்.

திருவள்ளுவத்துள் மருத்துவ நடைமுறை

இக்கால மருத்துவ நடைமுறையுடன் இவற்றைப் போருத்திப் பார்த்தால் ஒன்றி வருகின்றன.

நோயாளி எக்காலத்தும் நோயாளிதான். சில நோய் களின் புதுமைத் தோற்றம் இருக்கலாம். ஆனால் தீர்ப் பானாம் மருத்துவன் மாறியுள்ளான். இம்மருத்துவனைத் திருவள்ளுவர் "தீர்ப்பான்" என்று தனிப்பொருளுடன் குறித்தார். முன்னே "அது தணிக்கும் வாய்" என்று மருத்துவத் தொடக்கத்தில் தணிப்பதாகக் குறித்தார். தணித்தல்-நோயின் கடுமையைக் குறைத்தல். நோயைத் தணித்து நோயாளியை முதலில் தம் மருத்துவத்திற்குப் பாங்குபடுத்தல், பின்னர் தக்க மருந்தைத் கொடுத்துப் படிப்படியாக நோய் அறவே தீர்ந்து போகும் அளவு செய்தல். எனவே, 'தீர்ப்பான்' என்ற சொல்லால் மருத்து வித்தின் பொருள் அழுத்தம் புலனாகிறது. இவ்வாறு 'தீர்ப்பவன்'தான் மருத்துவத்திற்கு உயிரூட்டமளிப்பவன் இதற்கு 'மருத்துவன்' என்னும் சொல் ஈடாகாது. மருத்துவன் என்பதற்கு, மருத்துவம் செய்பவன்', 'மருந்து கொடுப்பவன்' எனத்தான் பொருள். இவன், மருந்தைத் தேர்பவன் தீர்ப்பவன்தான் மருந்தின் உயிரோட்டத்தால் நோயாளியின் உயிரோட்டத்தை இயக்குபவன்-இயங்க வைப்பவன். இவ்வழுத்தமுள்ள 'தீர்ப்பான்' என்னும் சொல் திருவள்ளுவரின் மருத்துவ ஆக்கச் சொல். இந்தச் சொல்லும் திருவள்ளுவரின் மருத்துவ அறிவியலைப் புலனாக்குகிறது.

அடுத்து 'மருந்து' என்றார். இது இயற்கை மூலிகையையும், நிலம்தரும் முப்பு’ என்னும் நீற்றையும்' செயற்கைக் கலவை, புடம் போடுவது, வடித்தெடுப்பது' அரைத்தெடுப்பது முதலியவற்றையும் குறிக்கும், இம் மருந்துதான் நோய் தீர்க்க இன்றியமையாதது. என்றாலும், மற்ற மூன்றும் அமைந்தால்தான் இம்மருந்து உரிய பயனை உரிய காலத்தில் தரும். எனவே, நான்கு கூறுகளில் ஒன்றாக மருந்தைக் குறித்தார்.

நான்காவதாக "உழைச் செல்வான்" குறிக்கப் பட்டான். இவன் நோயாளியின் அணுக்கன். உடனிருந்து உரிய நேரத்தில் உரியவைகளைச் செய்து துணை நிற்பவன். இக்காலத்தில் இதனை மகளிர் பெருமளவில் செய்கின்றனர். இன்னோர் 'செவிலியர்' எனப்படுகின்றனர். தமிழ் அகப் பொருள் இலக்கியங்களில் பெற்றெடுத்த தாய் 'நற்றாய்' எனப்படுவாள். அணுக்கமாக இருந்து போற்றி வளர்க்கும் தாய் 'செவிலித்தாய்' எனப்படுவாள். இச்செவிலித்தாய் போன்றவர் செவிலியர். மேலை மருத்துவத்தில் இச்செவிலியர் முறை முன்னரே இருப்பினும் அதனை முறை யாக்கி நிறைவாக்கிய பெருமை 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நைட்டிங்கேள் என்னும் பெருமகளையே சார்ந்தது. இவ்வம்மையால்தான் மருத்துவத்தில் செவிலித் தொண்டு முறைப்படுத்தப் பெற்றது.

இது திருவள்ளுவரால் கி. மு. முதல் நூற்றாண்டில் முறைப்படுத்திக் கூறப்பட்டுள்ளமை மருத்துவ அறிவியலின் அணுக்கத்தைக் காட்டுகிறது.

மருந்தில் தொடங்கி மருந்தில் நிறைவு

மருந்தை கூறத் துவங்கியவர் இதன் முதற் குறளாக "மிகினும் குறையினும் நோய் செய்யும்" என்று நோய்க்குக் காரணத்தைக் காட்டி அடுத்து, மருந்து பற்றித் தொடங்கினார்.

அதன் தொடக்கம் "மருந்து என வேண்டாவாம்’. என்றதைக் கண்டோம். 'மருந்து' என்னும் சொல்லுடன் தொடங்கினார். நிறைவான பத்தாவது குறளில், "அப்பால் நாற்கூற்றே மருந்து" என்று நிறைவேற்றினார். 'மருந்து' என்று தொடங்கி மருந்து என்று நிறை வேற்றியமை ஒரு சொல்லமைப்பு நயம் மட்டும் அன்று: இவ்வமைப்பில் உள்ள ஆழ்ந்த கருத்து வெளிப்படுத்தக்கது

முதலில் "மருந்து என வேண்டாவாம்" என்று மருந்து வேண்டாம் என்றார். நிறைவில்

"அப்பால் நாற்கூற்றே மருந்து” என்று மருந்து வேண்டுவதைக் குறித்தார். வேண்டா என்றவர் 'வேண்டும்' என்றது முரணா? அரணா? இரண்டில் எது என்று அறிய இக்கால அறிவியல் துறை ஒன்றைக் காண வேண்டும்.

உடலிய உளவியல்

அறிவியல் துறைகளில் 'உளவியல்' (Psychology) ஒன்று. இதன் ஒரு கூறாக 'உடலிய உளவியல்' (Physiological Psychology) உள்ளது. இஃது 'உள்ளத்தின் உணர்விற்கும் உடலின் செயற்பாட்டிற்கும் உறவு உண்டு' என்னும் கருத்தைக் கொண்டதாகும்.

உள்ளத்தில் தோன்றும் மகிழ்ச்சி உடலின் நலத்திற்குக் துணை செய்யும். உள்ளத்தில் தோன்றும் தொய்வோ கலக்கமோ, அதிர்ச்சியோ உடலின் தொய்விற்கும் தாக்கத்திற்கும் துணையாகும். இஃது 'உடலிய' உளவியலின் கோட்பாடு.

மருந்து-வேண்டாம்-வேண்டும்

இக்கோட்பாட்டின் முன்னோடி அறிகுறிதான் "மருந்து என வேண்டா" என்றதும் "நாற்கூற்றே மருந்து" என்றதும் ஆகும்.

"மருந்தென வேண்டா" என்றது உளவியல் அறிந்த பாங்கு மருந்துவேண்டும் என்றது உடலியலும் நோயியலும் செறிந்த செய்முறைக் கருத்து.

பொதுவாக மருத்துவத்தில் நோயாளியின் நிலை அறிவதே முதன்மையானது. நோயாளி நிலை என்பது நோயுள்ள உடல்நிலை மட்டுமன்று; நோயாளியின் மன நிலையுமாகும்.

உடல் நோய் நோயாளிக்குத் தரும் இடையூறு, இடுக்கண் உள்ளத்தைச் சோர்வடையச் செய்யும்; வருத்த வைக்கும்; அச்சத்தை ஏற்படுத்தும்; கலக்கத்தைக் கிள்ளிவிடும். தீர்ப்பான் இம்மனநிலையை உணரவேண்டும்.

முதலில் நோயாளியோ, இயல்பானமாந்தனோ இம் மனத் தாக்கத்தைப் பெறாது அமையும் முறையைக் கையாளவேண்டும் என்பதை எண்ணிய திருவள்ளுவர்.

"மருந்தை எண்ணி அஞ்சாதே! கசக்குமே,
குமட்டுமே என்று கலங்காதே!
மருந்தே வேண்டாம்"

என்று தொடங்கினார். மருந்து வேண்டாம் என்பதைக் கேட்ட நோயாளி முதலில் மன அமைதியைப் பெறுவான். இதனால் நோயாளி மருந்துவத்திற்கு பாங்குபடுத்தப் பட்டவனாவான்.

தொடர்ந்த திருவள்ளுவர் பையப் பைய அவனை நோய் கொள்ளாதிருக்கும் உணர்வில் வைத்து விளக்கி நலத்திற்கு அரண் கோலினார்; நோய் தாக்காதிருக்க வழிகோலினார். வயிற்றுத் தீயெல்லாம் கூறிக் குறிப்பைக் காட்டினார். ‘மிகு உணவு மிகு நோய்' என்று அறிவுறுத்தினார். இவ்வாறெல்லாம் மாந்தனைப் பாங்குக்குக் கொணர்ந்தார். பின்னர்தான் 'தீர்ப்பான்' என்று மன அமைதியை ஊட்டினார். உனக்கு அணுக்கமாக இருந்து துணைநிற்போர் உள்ளனர் என்று ஆறுதல் காட்டினார்; மருந்து கூறினார். அதனையும் மருந்து ஒன்றைக் கூறி விடாமல் நான்கு கூறாகக் கூறி அவற்றில் ஒன்றாகக் கூறினார்.

இவ்வாறு உள்ளத்தைப் பாங்குபடுத்தி உடலின் மருத்திற்கு வருவது இக்கால மருத்துவ அறிவியலாக முன்னர் குறித்த 'உடலிய உளவிய'லை நாம் நினைவு படுத்திக் கொள்ளவைக்கிறது.

இந்த 'உடலிய உளவியல்' தொடர்பில் மேலும் ஒரு திருவள்ளுவரின் மருத்துவ அறிவியலைக் காண இடம் உள்ளது.

அதிர்வு நோய்

நோய், நோய் முற்றிய பிணி, பிணி இடையறாது தொடர்ந்தால் ஒவாப் பிணி என நோய், பிறந்து முதிர்கின்றது. ஒவாப் பிணிக்கு மேலும் பல பிணிகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதிர்ச்சியால் வரும் நோய். அது நெஞ்சகத் தாக்க நோய். நெஞ்சகத்தில் (இதயத்தில்) குருதி பாயும் குழலில் உள்ளே கொழுப்பு படிந்து படிந்து குருதி பாயும் துளையினை சிறிதாக்கிவிடும். மேலும் கொழுப்பு அடைத்தால் குருதி பாய வழியின்றி முட்டும். திடீரென்று ஒர் அதிர்ச்சி நேரும். குருதிக் குழாய் வெடிக் கும். அதிர்ச்சி நோய் உயிரைப் பிடுங்கிக்கொண்டு போகும். இந்நோயைத் திருவள்ளுவர்,

"அதிர வருவது ஓர் நோய்"

என்றார். இந்நோயை நாம் 'மாரடைப்பு’' என்கின்றோம்.

நெஞ்சகத்தாக்க நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கூறும் அடிப்படை அறிவுரை இவை : 'அதிகம் உணர்ச்சி வயப்படக் கூடாது: சினம் கொள்ளக்கூடாது; உள்ளத்தைச் சீண்டும், அதிர்ச்சிக்குள்ளாக்கும் நிகழ்ச்சிகளில் ஈடுபடக் கூடாது' என உள்ளம் அமைதியாக இருக்க வேண்டிய அறிவுரை கூறுவர்.

ஆம், உள்ளத்திற்கும் உடலுக்கும் நீங்கா உறவு உண்டு. இந்த உறவு ஒன்றுடன் ஒன்று அரவணைத்துப் போவதாக இருக்கவேண்டும். வேறுபட்டால் உடலுக்கு நோய் வரும். "உடம்பார் அழியின் உயிரார் அழிவார்”. இவ்வாறு உள்ளம் உடல் தொடர்பில் உண்டாகும் நோய்க்கு 'உளவிய உடலுறுப்புத் தாக்கம்' (Psycho Somatic) என்று பெயர். விளக்கமாகச் சொன்னால் உள்ளத்தில் நேரும் கவலை, உளைச்சலானால் உடலுறுப்பைத் தாக்கி இளைப்பு, வயிற்றுப்புண் முதலிய நோய்களை உண்டாக்கும் என்பதாகும்.

எனவே, உடல் நோய்க்கு உள்ளமும் காரணமாகிறது. அதே தொடர்பில் நோய்த் தணிப்பிற்கும் அந்த உள்ளமே துணையாகும். என்னுடன் பணியாற்றிய ஆசிரியர்களுள் இங்கு இருவரைக் குறிக்க வேண்டும். இருவரும் நோயாளியர். ஒருவருக்கு 'இளைப்பு இறுமல்' (Asthma). நோய். மற்றவருக்கு வயிற்றுப்புண். ஒருநாள் பள்ளிக்கு மாவட்டக் கல்வி அலுவலர் ஆய்விற்கு வந்தார். இளைப்பு நோய்க்காரர் வகுப்பிற்குப் போனார். நலமாக இருந்த ஆசிரியர்க்குத் திடீரென்று 'இளைப்பு' வந்துவிட்டது. பையப் பைய முடுகியது. அவ்வலுவலர் வயிற்றுப்புண் ஆசிரியர் இருந்த அறைக்குப் போனார். முறைப்படி ஆய்வு நிகழ்ந்தது. ஆசிரியர் திறமையாகவே செய்தார். வயிற்றுப் புண் தலைகாட்டவில்லை. ஏன்? இருவரும் நோய்கள் கொண்டோர். ஆனால்,

                முன்னவர் உள்ளத்தால் கோழை;
                பின்னவர் உள்ளத்தில் உரம் கொண்டவர்.

நோயின் எழுச்சிக்கு உள்ளம் காரணம் என்பதற்கு இவ்: விருவரும் கண்கண்ட சான்றாகின்றனர்; 'உளவிய உடல் நோய்' என்னும் மருத்துவ அறிவியல் திருவள்ளுவத்தில். வெளிப்பட்டுள்ளது.

'எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் கோய்' (429)

இக்குறளில் அதிர வருவதோர் நோய்' என்று உடலைப் பற்றிய தோய் உள்ளது. "எதிரதாக் காக்கும் அறிவினார்" என்று அறிவு சான்ற உள்ள உறுதியாம் உளவியலும் உள்ளது.

நெஞ்சகத்தாக்க நோய் பெற்றவர் எதிர்காலத்தில் எந்நேரமும் இந்நோய் தலைதுாக்கும் என்று அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு தலைதுாக்கும்போது எப்படி நடந்து கொள்வது (?) எவ்வாறு காத்துக்கொள்வது (?) என்பவற்றை நினைந்து பார்த்து அறிவால் உணர்ந்திருக்க வேண்டும். நோயைக் கருதிக் கலங்கக் கூடாது; அஞ்சக் கூடாது. நெஞ்சுரம் கொள்ளவேண்டும். நெஞ்சுரம் அடித்தள மருந்தாகும்.

இந்த அடித்தளத்தைக் கொண்டதுடன் நோய்வரின் அதற்கு ஆட்படாமல் அந்நோய் மேலும் முடுகாமல் தன்னைக் காத்துக்கொள்ளும் வழிவகைகளை அறிவில் கொள்ளவேண்டும்.

கொண்டவர் நோய்க் குறிகள் தெரிவதை உணர்வார்.

'முதுகுப் பக்கம் தோள்பட்டை வலிக்கிறது. மூச்சு இறுக்கம் தோன்றுகிறது; நெஞ்சம் முணு முனு’ என்று வலிக்கிறது. தலை வலிக்கிறது. உடல் வியர்க்கிறது. தலையிலும் வியர்வை தோன்றுகிறது’ என்பவற்றை உணர்வார்; அறிவார். உடனே அஞ்சக்கூடாது; அஞ்சாத கலங்காத உள்ளம் உடையவர் எந்நேரமும் இது வரும் என்று எதிர்பார்த்தவர் ஆவார். மாறாக 'அய்யோ வலி வருமே மார்பை அடைக்குமே! இறந்து போவோமே” என்று அஞ்சிக் கலங்கினால் உள்ளம் சோர்வடையும்; அதனால் உடலும் சோர்வடையும்; நோய் முடுகும்.

உள்ள உறுதியும்; அறிவுத் தெளிவும் உடையவர் குறிகள் தெரிவிக்கின்றன என்று உரிய மாத்திரைகளைப் போட்டுக்கொள்வார். குளிர்ந்த நீரைத் தலையில் ஊற்றிக் கொள்வார். வலியை திணைக்காமல் வேறு விருப்பமான கருத்தில் மனம் ஊன்றுவார். விரைந்து மருத்துவரிடம் அழைத்துச் செல்லத் தூண்டுவார். இவற்றால் இவர் "எதிரதாக் காக்கும் அறிவினார்" இவரால் அதிரவரும் மாரடைப்பு கட்டுப்படுத்தப்படும். உள்ளம் தளராததால் நோய் தளர்ந்து தோற்கும்.

'நோயின் வல்லமை நோயாளியின் எதிர்ப்புத் திறமையைப் பொறுத்தது'- என்று இப்போக்கிரேட்டசு அறிவித்தார். இஃது இங்கு நினைவுகூரத் தக்கது.

இவ்வகையில் இக்குறளைக் கொண்டு திருவள்ளுவரை நோக்கினால், இக்கால 'உளவிய உடல்நோய்' பற்றிய அறிவியல் கருத்தை அவர் பதிந்துள்ளமை புலனாகும்.

இத்துடன் இணைந்துள்ள ஒரு கருத்தையும் இக்குறள் காட்டுகிறது. அது 'அதிரவரும் மாரடைப்பு நோயே வராது' என்பதாகும். இஃதும் மாந்தரின் உளவியல் தொடர்பானது.

எந்த உணர்விலும், செயலிலும் நெஞ்சத்தை அமைதியில் நிறுத்தி எண்ணி ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். "எண்ணித் துணிக கருமம்" (467) என்றார். ஆழ்ந்து ஆராய்ந்து எண்ணுவது சூழ்ச்சி எனப்படும்.

"சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்" (671) என்றார் திருவள்ளுவர். எண்ணித் துணிதலும், ஆழ்ந்து முடி வெடுத்துத் துணிதலும் எடுத்த செயலை முடித்து வைக்கும் . எதிர்த்து வருபவற்றையும் முறியடிக்கும். இது "எதிரதாக் காக்கும் அறிவு.”

மாந்தன் தன் வாழ்வில் நோய்க்குரியவன்; நோய் வராமல் தடுத்தலுக்கும் உரியவன்; வந்தால் பாதுகாத்த தற்கும் உரியவன். இவற்றிற்கு எதிர்வருபவற்றை முன்னரே எண்ணிப்பார்த்து "எதிரதாக் காக்கும் அறி"வைப் பெறவேண்டும்.

நெஞ்சக நோய். மிகு கொழுப்பினால் வரும். அதனால் மாறுபாடில்லாத உணவு கொள்ளவேண்டும். மாறு பாடுள்ளதை மறுத்து அளவறிந்து உண்ணவேண்டும். வேண்டாத விரைவும் படபடப்பும் கொண்டு உள்ளத்தை அதிர்ச்சிக்கு ஆளாக்கக் கூடாது. இவையாவும் "எதிரதாக் கொள்ளும் அறி”வின் விளைவுகள். இவ்வறிவு “அதிர வருவதோர் நோய்"க்குத் தடை, வராமலே காக்கும் உளவியல் அறிவு இது.

எனவே,

"எதிர தாக் காக்கும் அறிவினார்க்கு” மாரடைப்பாம் அதிரவருவதோர் நோய் வராது; இக்கருத்தையும் இக்குறள் பொதிய வைத்துள்ளது. இவ்வகையிலும் திருவள்ளுவர் மருத்துவ அறிவியலின் முன்னோடியாகிறார்.

பிணியின்மை விளக்கி விரிவாக எழுதப்பட்டுள்ளது. காரணம், 'மருந்து' என்னும் அதிகாரத்திலுள்ள பத்துக் குறட்பாக்களும் அறிவியல் பாங்கு கொண்டவையாக அமைந்துள்ளன. ஒவ்வொரு சொல்லும் அதற்குச் சான்றாக அமைந்துள்ளது. இதுபோன்று திருவள்ளுவத்தில் பரவலாக அறிவியல் கருத்துக்கள் பொதிந்திருப்பினும் மருந்து போல முழு அதிகாரம் பெறவில்லை மாந்தர் வாழ்வில் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.'

ஆ. செல்வம்

'பிணியின்மை'யை அடுத்துத் திருவள்ளுவரால் குறிக்கப்பட்டது "செல்வம்".

'செல்வம்' என்றால் என்ன? 'செல்வம்' என்று எதனைச் சொல்கின்றோம்? பல பொருள்களையும் 'செல்வம்' என்று கொள்கின்றோம்.

நிலத்திலும் கடலிலும், மலையிலும் முறையே: இயற்கையாகக் கிடைக்கும் பொன், கரி, தனிமம் முதலியவற்றையும், முத்து, பவளம், உப்பு முதலியவற்றையும், மணி, கல், மரம் முதலியவற்றையும் செல்வமாகக் கொள்கின்றோம்.

மாந்தரால் செயற்கையில் உருவாக்கப்படும் வயல் வீடு, பொறிகள், பண்டங்கள் முதலியனவும் செல்வம். உழைப்பில் விளையும் நெல், பருப்பு, எண்ணெய் முதலியனவும் செல்வம். இவை அனைத்தும் கண்ணால் காணப்படும் பொருள்கள். எனவே, செல்வம் என்பதைப் பொருள் என்றும் சொல்லலாம்.

திருவள்ளுவர் "செல்வம் செயற்கு" (375) என்று செல்வம் என்னும் சொல்லாலும் குறித்தார். "தாளாற்றித் தந்த பொருள் எல்லாம்(212) என்று பொருள் என்னும் சொல்லாலும் குறித்தார். செல்வத்தை ஈட்டுவதைப் 'பொருள் செயல்வகை' என்று குறித்தார். இரண்டையும் கொண்டாலும் 'செல்வம்' என்பதை கொண்டு அதற்கு அடைமொழியாகப் 'பொருள்' என்பதை வைத்து "பொருட் செல்வம்" (241) என்றார்.

'செல்வம்' என்பதற்குப் 'பொருள்' என்பதை மட்டும் அடைமொழியாகத் திருவள்ளுவர் கொள்ளவில்லை. "கல்விச் செல்வம்" (400), "செவிச்செல்வம்" (411), "வேண்டாமைச் செல்வம்" (367), "அருட்செல்வம்" (241) என மேலும் நான்கைச் செல்வம் என்றார். இவை நான்கும் கண்ணால் காணப்படும் பொருள்கள் அல்ல; கருத்துப் பொருள்கள். காணப்படும் பருப்பொருள்கள் எல்லாம் செல்வமாகக் கணக்கிடப்படுவது அதனதன் மதிப்பால்தான். பொருளின் மதிப்புதான் 'செல்வம்' எனப்படும்.

ஒருவனுக்கு நெல் தேவைப்படுகிறது. முற்காலத்தில் தேவைப்படும் நெல்லின் மதிப்புடைய பருப்பை மாற்றுப் பொருளாகக் கொடுத்தான். இது 'பண்டமாற்று' எனப் பெற்றது. வாங்கியவன் பருப்பைப் பயன்படுத்திக் கொள்வான் கொடுத்தவன் மாற்றாகப் பெற்ற நெல்லைப் பயன் படுத்திக்கொள்வான். இந்தப் பண்டமாற்றுப் பொருள்கள் உடன் நேரடியாகப் பயன்படும் நெல்லாகவோ, பருப்பாகவோ அன்றிப் பொன்னாகவும் ஆயிற்று. பொன்னை அணிகலனாக்கிப் பயன்படுத்தலாம். அதனை அப்படியே உண்ணமுடியாது. உணவுப்பொருள் வேண்டுமானால் அதே மதிப்புடைய உணவுப் பொருளைப்பெற்று உண்ணலாம். எவ்வாறாயினும் பொருளின் பயன்பாடு அதன் மதிப்பால் தான் பெறப்படுகிறது.

இந்த மதிப்புப் பண்டமாற்று, பொன்னிலிருந்து நாணயத்திற்கும், பணத்தாளிற்கும் மாறியது. இவை இரண்டையும் அவற்றின் மதிப்பளவிற்கு வேறு பொருளாக மாற்றியே பயன்படுத்த முடியும். அவற்றையே நேரடியாகப் பயன்படுத்த முடியாது. இதுதான் செல்வப் பயன்பாட்டின் நடைமுறை.

இவ்வாறிருக்க, பொருளாக நேரடியில் பயன்கொள்ள முடியாத கல்வியும் கேள்வியும் வேண்டாமையும் அருளும் எவ்வாறு செல்வமாகும்? திருவள்ளுவர் இவற்றைச் செல்வம். என்றமை பொருந்துமா?

பொருந்தும்.

இப்பொருத்தத்தில்தான் இன்றையப் பொருள் அறிவியலின் கோட்பாடு பொதிந்துள்ளது.

இன்றைய அறிவியலில் பொருளியல் (Ecnomics) ஒன்று. அன்றாட வாழ்விற்கு இன்றியமையாத ஒன்று. பொருளியலின் இன்றியமையாத முதற்கூறு செல்வம்.

செல்வம் பற்றி இன்றையச் 'செல்வ அறிவியல்' (Wealth Economics) என்ன கூறுகிறது(?) என்பதைக் காண வேண்டும்.

'செல்வம்' என்பது குறிப்பிட்ட நேரத்தில் இருக்கும் பொருளியல் சரக்கின் இருப்பைக் குறிக்கும் என்று. இன்றையச் 'செல்வ அறிவியல்' கணித்துள்ளது.

இதன்படி ஓர் இருப்புச் சரக்கைச் 'செல்வம்' என்று சொல்ல வேண்டுமானால் அதற்குப் பின்வரும் மூன்று இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.

ஒன்று:

மாந்தனின் தேவையை நிறைவேற்ற வேண்டும்.

இரண்டு;

அதன் அளவு முழுத்தேவைக்குக் குறைந்ததாக வேண்டும்.

மூன்று:

ஒருவனிடமிருந்து மற்றவனுக்கு மாறக்கூடியதாக இருக்கவேண்டும்.

இவை இக்காலச் செல்வ அறிவியல் கண்ட இலக்கணங்கள். இம்மூன்றும் கண்ணால் காணப்படும் பொருட் செல்வத்திற்குப் பொருந்தும். வீடு ஒரு பொருட் செல்வம் என்றால் அஃது ஒருவன் தேவைக்குப் பயன்படுகிறது (1), முழுத்தேவைக்கும் ஈடுசெய்ய இயலாததாகும் (2), மற்றவனுக்கு விற்பனையால் மாறும் (3).

இவை மூன்றும் கண்ணிற்குப்படும் உருவப் பொருளுக்கன்றி மற்ற அருவத்திற்கும் பொருந்தும். காணப்படும் உருப்பொருளும் பொருள்தான். கருதப்படும் கருத்துப் பொருளும் பொருள்தான். மேற்குறிக்கப்பட்ட மூன்று இலக்கணங்கள் இக்கருத்துப் பொருளுக்கு எவ்வாறு ஈடாகும்?

ஒருவனின் 'தேவையை நிறைவேற்றுவது செல்வம்' என்று கண்டோம்.

ஒரு நோயாளிக்கு மருத்துவம் தேவை. அந்தத் தேவைக்கு மாற்றாகப் பணம் கொடுப்பான். பணம் கொடுத்துப் பெறுவது நோயைத் தீர்க்கும் தேவையை நிறைவேற்றுகிறது. ஆனால் மருத்துவரின் மருத் துவச் செயல்’ என்பது பருப்பொருள் அன்று; நுண்பொருள். அஃதாவது மருத்துவர் கற்ற கல்விப்பொருள், கேள்விப்பொருள், பட்டறிவுப் பொருள் என்னும் இவற்றால் தேவைப்பட்ட நோய் நீங்குகிறது. இதற்கு மருத்துவரிடமிருந்து அவரின் கல்வியையோ, கேள்வியையோ, ப ட் ட றி ைவ யோ, நோயாளி பெறவில்லை. இவற்றைப் பெற்றால் நோயாளி மருத்துவனாக ஆகிவிட வேண்டும்; ஆவதில்லை. தன் பணத்திற்கு மாற்றுப் பொருளாக - செல்வமாக எதைப் பெறுகிறான்? மருத்துவன் அறிவின், கல்வியின், பட்டறிவின் உதவியை, அஃதாவது பணியைப் பெறுகிறான்.

இவ்வகையில் மருத்துவரின் பணி என்னும் அருவப் பொருள் மாற்றாகப் பெறப்பட்ட செல்வம் ஆகிறது. இந்தச் செல்வ அறிவியலின்படி,

கண்டுபிடிக்கப்பட்ட காப்புரிமை (Patent)
நூலாசிரியரின் மதிப்பூதியவுரிமை (Copy Right)

ஒருபொருளின் நன்மதிப்பு (Goodwill) என்னும் இவையும் இன்றையச் செல்வ அறிவியலின்படி செல்வங்களேயாகும்.

இக்கால இவ்வறிவியலைத் திருவள்ளுவரின் செல்வம் தொடர்பான அடைமொழிக் குறட்சொற்களில் காண முடிகிறது.

கல்விச் செல்வம், கேள்விச் செல்வம், வேண்டாமைச் செல்வம், அருட்செல்வம் ஆகிய செல்வங்களுள் ஒவ்வொன்றும் இக்கால செல்வ அறிவியலின் மூன்று இலக்கணங்களையும் பொதிந்தது.

கல்வி, கேள்வி, வேண்டாமை, அருள் இவைகளைக் கொண்டோரின் செயற்பாட்டின் மூலம் நிறைவேற்றப் படுகிறது (1 : இவற்றைக் கொண்டவரின் முழு அளவில் ஓர் பயன்பாடாகிறது (2); ஒருவரிடமிருந்து செயற்பாட்டுப் பயன் மாறுகிறது (3).

எனவே, கருத்துப் பொருளாம் இவையும் இக்கால அறிவியலின்படி செல்வங்களாகின்றன. திருவள்ளுவரும் செல்வ அறிவியலாளர் ஆகிறார்.

இக்காலச் 'செல்வப் பொருளியல்' நாட்டு அரசாட்சியின் பங்கில் செயலாகும்போது பின்வரும் முறை கொள்ளப்படும்.

பண்டமாற்றுப் பொருளாக நாணயத்தையோ பணத் தாளையோ அரசு வெளியிடும்போது அவற்றின் மதிப்புடைய பொன்னோ, வெள்ளியோ பொருளோ, கடன் ஆவணமோ அரசின் இருப்பில் வைக்கப்படும். அவ்வாறு செய்வதுதான் பணவீக்கத்தை ஏற்படுத்தாது. பண மதிப்பைச் சரியாமல் உரிய மதிப்புள்ளதாக வைத்திருக்கும். (அண்மைக் காலமாக இம்முறை கடைப்பிடிக்கப் பெறாமல் பணவீக்கம் நேர்ந்து பணமதிப்பு குறைந்து வருகிறது).

இவ்வாறு ஒரு நாடு பொருளின் செலாவணிக்கேற்ற இருப்பைப் பெற்றிருக்கவேண்டும். நாட்டின் இலக்கணம் கூறும் திருவள்ளுவர்.

        "பெரும்பொருளால் பெட்டக்கதுஆகி,அருங்கேட்டால்
        ஆற்ற விளைவது நாடு" (732)

என்று விதித்தார். இக்குறளில், ‘நாட்டிற்குப் பெரும்பொருள் வேண்டும்; அது பெட்டக்கதாக ஆக வேண்டும்' என்றவை கூர்ந்து காணத்தக்கவை. பெரும் பொருள் என்றது நாட்டு மக்கட்கும், உயிரினங்கட்கும் வேண்டப்படும் பொருள்களின் நிறைவாகும்.

"பெட்டக்கது" என்னும் சொல் திருவள்ளுவரின் தனி ஆக்கச் சொல். இதற்கு 'விரும்பத்தக்கது' என்று பொது வான பொருள் கண்டனர். இதற்குத் தனியான ஆழ்ந்த சிறப்புப் பொருள் உண்டு.

‘பெட்பு-தக்கது' என்பவற்றின் கூட்டுச்சொல் "பெட்டக்கது" "பெட்பு" என்பதற்குப் "போற்றிப் பாதுகாத்தல்" என்பது ஆழ்ந்த பொருள். இப்பொருளை அழுத்தமான சான்றுடன் உறுதிசெய்யவேண்டும். இப்பொருளின் பொதிவை இலக்கியங்களில் காணமுடிகிறது.

கடிய நெடிவேட்டுவன் என்னும் சிற்றரசன் தன்னை நாடிவந்த புலவர் பெருந்தலைச் சாத்தனாரை மதித்துப் போற்றிப் பரிசு வழங்காமல் காலங்கடத்தினான். இதனை விரும்பாத புலவர்,

        "முற்றிய திருவின் மூவர் ஆயினும்
        பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே"[24]

என்று பாடினார். 'முடிமன்னர் மூவேந்தரானாலும் எம்மை மதித்துப் போற்றிப் பாதுகாவாது ஈவதை யாம் விரும்ப மாட்டோம்' என்றார். இது கொண்டும் 'பெட்பு' என்னும் சொல் 'போற்றிப் பாதுகாக்கும்' கருத்தைக் கொண்டது என்பதை அறியலாம்.

‘பெட்பு - தக்கது' எவ்வாறு "பெட்டக்க” தாயிற்று? 'நட்பு' என்னும் சொல் 'நட்டு' என்று ஆகி 'நட்பு கொண்டு' என்னும் பொருளைத் தரும். திருவள்ளுவரும் 'முகத்தால், நட்புக்கொண்டு' என்பதை "முகம்நட்டு" (830) என்று பதிந்துள்ளார். நாலடியாரும் நட்ட கால்' (நட்பு கொண்ட போது) என்பதை "நட்டக்கால்"[25] என்றமைத்தார். இவை போன்றே பெட்பு’ என்பதும் பெட்டு' என்றாகி, ‘பாதுகாப்பு’ என்னும் பொருளைத் தந்தது.

செல்வத்தைப் பாதுகாப்பாக வைக்க மரத்தால் செய்யப்பட்டதைப் 'பெட்பு' (பெட்டு+இ) என்கிறோம். பெரும் மதிப்புடைய செல்வத்தைப் பேணி வைக்கும் பெரும் உறுதியுள்ள பேழையைப் 'பெட்டகம்’ (பெட்டு-அகம்) என்கிறோம். இங்கெல்லாம் 'பெட்டு' என்னும் சொல் 'போற்றிப் பாதுகாத்தல்' என்னும் பொருளில் உள்ளது.

இவற்றின் முன்னோடிச் சொல்லாகத் திருவள்ளுவர் ஆக்கிய "பெட்டக்கது" என்னும் சொல் பெரும் செல்வத்தைப் போற்றிப் பாதுகாக்கும் கருத்தைக் கொண்டது.

ஒரு நாடு வளத்தில் நிலைத்திருக்க வேண்டுமானால் பெரும் செல்வத்தால் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும். அதற்குப் பெரும் மதிப்புடைய செல்வம் போற்றிப் பாது காக்கப்பட்டு, இருப்பில் அமைய வேண்டும். இது "பெரு பொருளால் டெட்டக்கதாகி" என்பதன் விளக்கமாகும்.

செல்வம் என்பது செலாவணிக்கு உரியது என்றாலும் அதன் மதிப்புடைய பொருள்கள் நாட்டு மக்களுக்குத் தட்டாமல் கிடைக்கவும், அவற்றைப் பெற்றுத்தரும் பண்டமாற்றுப் பொருள்களாகிய நாணயம் முதலியன தம்மதிப்பைக் குறைத்துக் கொள்ளாமலோ கூட்டிக்கொள்ளாமலோ இருக்கவும் மதிப்புடைய செல்வம் நாட்டுக் கருவூல இருப்பாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் இக்கருத்து இக்காலச் செல்வப் பொருளிய'லில் எவ்வாறு மலர்ந்துள்ளது என்பதைக் காண முடிகின்றது.

நாணயத்தையோ பணத்தாளையோ அரசு வெளியிடும் போது அவற்றின் மதிப்புடைய பொன், வெள்ளி முதலிய செல்வப் பொருள்கள் அரசுப் பாதுகாப்புக் கருவூலத்தில் இருப்பாக வேண்டும் என்று விளக்கப்பெற்றது. இச் 'செல்வ அறிவியல்' "பெட்டக்கதாகி” என்னும் சொல் லாக்கத்தில் அமைந்துள்ளது. பொருள் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியது என்பதை "பொருளாட்சி போற்றாதார்க்கில்லை" (252) என்பதாலும் திருவள்ளுவர் வலியுறுத்தியுள்ளதையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம். இதனால், திருவள்ளுவம் 'செல்வப் பொருளிய'லாம். அறிவியலில் விளங்குகின்றது.

பொருளியல் கோட்பாடும் திருவள்ளுவமும்

'பொருளியல்' என்னும் இயல் 18ஆம் நூற்றாண்டில் தான் உருப்பெற்றது. இப்பொருளியலின் தந்தை ‘ஆதம் சுமித்து' என்பார். இவர் காலம் 1723-1790. இவர் வகுத்த பொருளியற் கோட்பாட்டின் அடித்தளக் கோட் பாடுகள் மூன்று அவை :

பொருள்களின் ஆக்கம் (Production)

பண்டமாற்று (Exchange)

பகிர்வு (Distribution)

பின்னர் ஆய்வுகளால் இம்மூன்று பகிர்வுக்கு முன்னர் (Consumption) என்பதும் இணைக்கப்பெற்று நான்காயின.

இவை நான்கும் பொருளியலின் அடித்தளக் கோட் பாடுகள். இவற்றைத் திருவள்ளுவர்,


                "இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த
                வகுத்தலும் வல்ல தரசு" (385)

என்னும் குறளில் காட்டினார்.

பொருள்களை விளைச்சலால் உண்டாக்குதலும், அவற்றைத் தொகுத்தலும், போற்றிப் பாதுகாப்பாகக் காத்தலும், காத்தவற்றைப் பகிர்ந்து வழங்கலும், வழங்கப்பட்டவை. மாந்தர்க்கோ உயிரினங்களுக்கோ நுகர்வு ஆதலும் ஆகிய நான்கையும் திறமையுடன் செய்வதுதான் ஆட்சி செய்தற்குரிய அரசாகும். இதை அக்கால மன்னர் அரசுக்குக் குறிக்கப்பட்டனவாயினும் இக்கால மக்கள் ஆட்சிக்கும் மாற்ற மின்றிப் பொருந்துகின்றன.

இக்காலப் பொருளியல் நான்கை குறட் கருத்துடன் பொருத்திக் காணுமாறு திருக்குறள் அமைந்துள்ளமை குறிக்கத் தக்கது

' '
வள்ளுவம் பொருளியல்
இயற்றல் ஆக்கம்
ஈட்டல் காத்தல் மாற்று
வகுத்தல் பகிர்வு
வகுத்து வழங்கலும் பெறலும் நுகர்வு

மேலும், பொருளியலின் பல்வகைக் கூறுகளையும் திருவள்ளுவர் தம் திருவள்ளுவத்தில் காட்டியிருக்கின்றார். இவற்றை விரிவாகப் பொருளியல் வல்லுநர் முனைவர் பா. நடராசன் அவர்களும், திருவள்ளுவர் விருதுபெற்ற குறளறிஞர் கு. ச. ஆனந்தன் அவர்களும் நுணுக்கமாகவும் விளக்கமாகவும் எழுதியுள்ளனர்.

அவற்றையும் இணைத்துப் பார்த்தால் திருவள்ளுவம் 'செல்வப் பொருளிய'விலும் பொருளி அறிவிய'விலும் விளக்கம் பெறுவதை அறியலாம்.

இக்கால ஆங்கில அகரமுதலிகளில் 'பொருளியல்'(Economics) என்னும் சொல்லுக்குக் காட்டப்பட்டுள்ள பொருள்:

"செல்வத்தின் ஆக்கத்தையும் (இயற்றல்) பங்கீட்டையும் (வகுத்தல்) பற்றிய செயல்முறை நூல்" என்றிருக்கும். இச்செயல்முறை நூலாகத் திருவள்ளுவம் திகழ்கிறது.

இத்தகைய செல்வமாகும் பொருள்கள் பல. அவையாவும் இயற்கையாகவும் செயற்கையாகவும் விளைபவை.

எனவே, செல்வத்தை அடுத்துத் திருவள்ளுவத்தில் விளைவைக் காண்கின்றோம்.

இ. விளைவு

'விளைவு' என்பதற்குப் 'பயன்படுவதற்கு உண்டாதல்' என்று பொருள். விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்’ {177) என்று திருவள்ளுவர் விளைவைப் பயனாகக் குறித்தார். "விளைவின் கண் வீயா விழுமம் தரும்" (284) என்றதிலும் விளைவு கெடாத பயனைக் குறிக்கும். பயன்பட உண்டாகும் பொருள் கண்ணாற் காணப்படும் பருப் பொருளாகவும் இருக்கலாம்; நுண்பொருளாகவும் இருக்க லாம்; கருத்துப் பொருளாகவும் இருக்கலாம்.

'வயல் விளைவு நன்றாக இருந்தது'-இதில் விளைவு பருப்பொருளாகிய நெல்லைக் குறிக்கும்.

'இராமன் விளைவு' (Raman Effect) இதில் விளைவு அறிவியல் வல்லுநர் சி. வி. இராமன் கண்டறிந்த ஒலிச் சிதறலாகிய நுண்பொருளைக் குறிக்கும்.

'கல்வி அறிவாக விளையும்' — இதில் விளைவு கருத்துப் பொருள்.

திருவள்ளுவர் இவற்றையெல்லாம் அடக்கியே "விளையுள்" (545, 731) "விளைவது" (732) எனக் குறித்தார்.

இவ்வாறு விளைச்சல் பலவகைப்படினும் சிறப்பாகப் பருப்பொருள் விளைச்சல் முதன்மையானது. அதனிலும், உழவுப் பயிர் விளைச்சல் மூலமானது. திருவள்ளுவர் இம்மூலமான உழவையே முதற்குறிக்கோளாக வைத்தார்.

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்" (1031) என்றமை இன்று உலகில் மாற்றமின்றி உள்ளது. தொழில் பற்றிய இக்கால அறிவியல், உழவைத்தான் முதல் தொழிலாகக் கொண்டுள்ளது.

உழவு தமிழரின் தனி உரிமைத் தொழில். மிகத் தொன்மைய மக்களினத்தாருள் மிகச்சிலரே இத்தொழில் கொண்டோர். ஆசிரியர் எனப்படுவோர் உழுதொழிலை இழிவாகக் கருதினர்.

                "இழிவான உழுதொழிலைச் செய்யும்
                பார்ப்பானைச் சிரார்த்தம் முதலிய
                சடங்குகளுக்கு அழைக்காதே"

என்று மனுநூல் விதித்தது.

திருவள்ளுவர் உழவு என்றொரு தனி அதிகாரத்தை அமைத்து அதனில் பத்துக் குறட்பாக்களைப் படைத்தார். இப்பத்துக் குறட்பாக்களில் உழவின் இன்றியமையாமை, உழவுமுறை, உழவுப் பயன் ஆகியன தெளிவாக்கப்பட்டுள்ளன.

இக்கால 'உழவியல்' விளக்கங்கள் திருவள்ளுவத்தின் அடிப்படை கொண்டவையாக அறிமுகமாகின்றன. இன்றியமையா இரண்டை இங்குக் காணலாம். திருவள்ளுவர் கால உழவு இருவகை. ஒன்று நீர்ப்பாய்ச்சல் உழவு, மற்றொன்று புழுதி உழவு.

இதனை,

        "ஏரினும் நன்றால் எருவிடுதல், கட்டபின்
        நீரினும் கன்றதன் காப்பு" (1038)

என்னும் குறளில், உழவுத் தொழிலின் செயற்பாட்டிை. அமைந்திருக்கும் வரிசை கொண்டு அறியலாம்.

முதலில் வானத்து மழையால் நிலம் நனைந்ததும், ஏரால் உழுதல்.

அடுத்துப் புழுதியில் எரு இடுதல்;

பின் களை எடுத்தல்;

பின் மழைநீரை நிரப்புதல்;

பின் கதிர்ப்பயிரைக் காத்தல்-என்பன புழுதி உழவாகும்.

திருவள்ளுவர் வாழ்ந்த பகுதி புழுதி உழவைக் கொண்டது.

திருவள்ளுவர் வாழ்ந்த இடம் முகவை, மதுரை மாவட்டச் சுற்றுவட்டத்தைக் கொண்டதாகும் என்று கண்ட என் கட்டுரை "வள்ளுவர் வாழ்விடம்" என்பது. இது 'கிராம ஊழியன்’ (அரசு இதழ்), குறளியம், 'மலைநாடு" (கோலாம்பூர் இதழ்), முதலியவற்றில் வெளி வந்து பாராட்டைப் பெற்றது. பின் புதையலும் பேழையும் என்னும் என் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது.

திருவள்ளுவம் ஏரால் உழும் தொழில்பற்றிக் குறிப்பிடு கின்றது. புழுதி உழவில் உழுது மண்கட்டிகளைப் புரட்டி விடுவர். கட்டிகளை உடைத்துத் துாளாக்குவர் அவ்வாறு 'தூளாக்கப்பட்ட' புழுதியை நன்கு சூரியனின் வெப்பக் கதிரில் காயவைக்க வேண்டும் என்பன திருவள்ளுவரின் உழவியல். அப்புழுதியைக் காயவைப்பதற்கும் ஒர் எடுத்துக் காட்டகக அளவு கூறினார்.

        "தொடிப் புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
        வேண்டாது சாலப் படும்"(1037)

என்னும் குறள் கூர்ந்து காணத்தக்கது.

'தொடி' என்பது ஒர் அளவு. அது அக்காலப்படி ஒரு பலம் நிறைகொண்டது. கஃசு என்னும் அளவு கால் பலம் நிறை கொண்டது.

'உழும்போது கீழ்மேல் மண்ணாகிய ஒரு பலம் அளவு புழுதியைச் சூரியனது வெய்யில் வெப்பத்தால் நான்கில் ஒரு பங்கு என்னும் அளவாகும் வரை காயப்போட வேண்டும். அவ்வாறு காய்ந்தால் ஒரு பிடி எருவும் போடப்படாமல் மிகுதியாக விளையும் என்பது இக்கருத்து. சொல்லப்பட்ட அளவெல்லாம் ஒரு குறிப்புத்தாமே அன்றி நிறுத்துப் பார்த்துச் செய்யவேண்டிய அளவுகள் அல்ல.

இங்கு 'உணக்கின்' என்பதுதான் அறிவியல் உள்ளி டான கருத்துடைய சொல்.

'உனக்குதல்' என்றால் சூரியன் வெப்பக்கதிர்கள் புழுதியின் உள்ளுள்ளே புகுந்து வெப்பமூட்டுதலைக் குறிக்கும். இதனால் புழுதி எருப் போடவேண்டாத அளவு எருவின் உரத்தைப்பெறும் என்பதாகும்.

இக்கருத்து இக்கால வேளாண்மை அறிவியலில் வெளிப்பட்டுள்ளது. இதற்கு சூரியனின் கதிர்கள் பற்றிய சிற்றளவு விளக்கத்தை இங்குக் காணவேண்டும்.

சூரியன் ஒரு வெப்ப ஆ.விக்கோள். அதன் கதிர்களால் பிறகோள்களும் நம் மண்ணுலகும் இயக்கி உயிரினங்களை வாழவைக்கின்றன. சூரியனிடமிருந்து வெளிப்படும் கதிர் களில் கண்ணுக்குப் புலனாகின்றமையும் உண்டு; புலனா காதனவும் உள்ளன. அவை :

புறஊதாக் கதிர் (Ultra Violet Ray)
அகச்சிவப்புக்கதிர் (InfraRed Ray)
வேதிய வினைக்கதிர்(Active Ray)

எனப்படுகின்றன.

இக்கதிர்கள் வானச் சூழ்நிலையில் சிறுசிறு மாற்றங் களுடன் நிலத்து மண்ணைத் தாக்குகின்றன; அல்லது தழுவுகின்றன. இக்கதிர்களுடன் கூடிய வெய்யில் வெப்பம் பல நோய் நுண்ணுயிரிகளை மாய்க்கும். மேலும் ஊட்டங்களாக ‘ஏ’, ‘டி’ முதலியவற்றை ஊட்டும்.

உழவில் புழுதி உணக்கப்பட்டால் அப்போது இக்கதிர்களின் தாக்கத்தால் வேண்டாத நுண்ணுயிரிகள் அழியும், இது பயிர் முளைக்குப் பாதுகாப்பு. நீர்ப்பசை நீங்கி சூரியக் கதிர்களின் ஒளியால் பாங்குபெறும். இதனால் ஊட்டங்கள் தழுவுவதால் எரு தரும் உரத்தை மண் புழுதி பெறுகிறது, இதனால் எருவின்றியும் நல்ல விளைச்சல் உண்டாகும்.

மேலும் சூரியனில் களங்கங்கள் எனப்படும் 'கரும்புள்ளி கள்’ உள்ளன. இவை உண்மையில் கரும்புள்ளிகள்’ அல்ல வென்றும் ஒளி மாற்றத்தின் தோற்றங்கள் என்றும் கண்டுள்ளனர். இக்கரும்புள்ளிகளின் வெப்பக்கூற்றால் மண்ணுலகில் உயிரினம் பயனடைகிறது என்றும் கண்டுள்ளனர்.

இவ்வகையிலும் சூரியனின் வெப்பக் கதிர் மண்ணிற்கு உரம் ஊட்டுவதாகிறது.

18-ஆம் நூற்றாண்டில் காணப்பட்ட இவ்வறிவியல் உண்மை கி.மு. முதல் நூற்றாண்டுத் திருவள்ளுவத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளமை வியந்து போற்றக் குரியது.

எனவே, விளைவு' என்பதிலும் திருவள்ளுவம் இக்கால "கிலத்துஅறிவியல்" பாங்கை முன்னோடி அடையாளமாகக் காட்டுகிறது.

'விளைவு' என்பதால் நேரும் பயன்பாடுகள் தாம் மாந் தர்க்கும் உயிரினங்கட்கும் இன்பத்தை வழங்குகின்றன. இத்தொடர்பில் இன்பம் அடுத்துக் காணப்படவேண்டியது.

ஈ. இன்பம்

மனத்தின் இயக்க விளைவுதான் உணர்ச்சி.

"மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி" (453) என்றார் திருவள்ளுவர். உணர்ச்சி உடம்பில்-மெய்யில் வெளிப்படுவதை (மெய்யில் படுவதை) 'மெய்ப்பாகு' என்றனர் தமிழ்ச் சான்றோர்.

உணர்ச்சி வெளிப்பாடாம் 'மெய்ப்பாடுகள்' எட்டு.

        "நகையே அழுகை இளிவரல் (இழிவு) மருட்கை (வியப்பு)
        அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
        அப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்பு"[26]

என்றார் தொல்காப்பியர். எட்டுள் இறுதியாகச் சொல்லப் பட்ட உவகைதான் 'இன்பம்’ எனப்படுவது.

எனவே, இன்பம் என்பது உள்ள நிகழ்ச்சி. இவ்வின்பம் உள்ளத்தில் எழுந்து உடலிலும் உணரப்படும்.

        "ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
        கூடி முயங்கப் பெறின்" (1330)

என்றதில் 'கூடி முயங்கப் பெறும் இன்பம்' உடலால் நேர்வது. ஊடும் காம இன்பம் உள்ளத்தால் நேர்வது. உடலால் நேர்வதும் உணர்வாக உள்ளத்தால்தான் வெளிப்படும்.

எனவே, எவ்வகையிலும் இன்பம் என்னும் உணர்வு உள்ளத்திற்கு உரியது.

உளவியலை ஆராய்ந்து இக்காலத்தில் காணப்பட்ட முடிவும் இவ்வாறே கூறுகிறது. ஆனால் இவ்வின்பத்தை வெளிப்படுத்தும் உள்ளம் என்பது உடலில் எங்கு இருக்கிறது(?), இருக்கும் இடம் எது(?) என்பதை இன்றைய அறி வியலால் இன்றளவும் காணமுடியவில்லை. திருவள்ளுவர் அதனை வெளிப்படுத்தினார்.

உள்ளத்தைக் குறிக்கத் தமிழில் மனம், நெஞ்சம், (அகம்) எனும் சொற்களும் உள்ளன. இவற்றைத் திருவள்ளுவர் 'வாய்மை' அதிகாரத்தில் அடுத்தடுத்து வைத்துள்ளார்.

"தன் நெஞ்சு அறிவது பொய்யற்க" (293)
"உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்" (294)
"மனத்தொடு வாய்மை மொழியின்" (295)
"அகம் தூய்மை வாய்மையால்' (293)

நான்கு சொற்களில் 'அகம் இடத்தைக் குறிக்கும். அவ்விடம் நெஞ்சம் என்று குறிக்கப்பட்டுள்ளது.

உள்ளம் - உள்ளே அமைந்தது.
மனம் (மன் + அம்) - நிலைத்தது (மன்-நிலைப்பு)

அகத்தே (உள்ளே) மனம் - (உள்ளம்) உள்ளது என்று பொதுவாக இடம் குறித்தார். இடம் என்றால் எந்த உறுப்பு என்னும் இடம் ? அதற்கு விடைதான் 'நெஞ்சம்' என்பது. நாம் இப்போது வடமொழியில் குறிக்கும் 'இதயம்' என்பதே நெஞ்சம். நெஞ்சில் கைவைத்துச் சொல்’ என்கிறோம். எங்கே கை வைப்பது? மார்பின் மையத்தில் கைவைப்போம். இவ்வழக்கிலும் நெஞ்சம் மார்புப் பகுதியில் அமைந்தது’ என்று அறிகிறோம். தனி உருவின்றி உணர்வே உருவாக நெஞ்சக இயக்கத்தோடு பிணைந்திருக்கிறது. இதன்படி "நெஞ்சம்" என்ற சொல்லை வைத்து உணர்ச்சியைத் தரும் உள்ளம் தெஞ்சகத்தில் உள்ளது என்றார். இன்று காணப்படாத ஒர் உண்மை அன்று திருவள்ளுவரால் ஓர் அதிகாரத்தில் நான்கு சொற்களைப் பெய்து காட்டப்பட்டுள்ளது.

உணர்ச்சிகளில் இன்பம் ஒன்று.

          "இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
          துன்பம் உறுதல் இலன்” (628)

என்னும் திருக்குறள் இன்பத்தைப் பற்றிய மூன்று கருத்துக்களைக் கொண்டுள்ளது.

"இன்பம் விருப்பத்தைத் தரும்.

இன்பத்தையே எதிர்பார்த்து இல்லாமல் அதனை விரும்பாதிருக்கவும் வேண்டும்.

இன்பத்திலேயே விருப்பம் கொள்ளாதிருந்தால் துன்பம். வராது" இவை உள்ளத்தால் எழுய் உணர்ச்சித் தொடர்புடையவை.

"இன்பம் பயக்கும் வினை" (669) என்றதில் இன்பத்தை ஒருவன் "செய்யும் செயல் தரும்" என்று. செயல் தொடர்பு உள்ளது.

மேற்காணப்பட்ட நான்கையும் பொருத்தி நோக்கினால் உடன்பாட்டுப் பொருளாக 'விரும்பிச் செயலாற்றினால் இன்பம் தோன்றும்' என்பது கிடைக்கிறது.

பொதுவாக இன்பம் என்றால் முடிவில் மாந்தர்க்குத் தோன்றுவது உடலுறவு இன்பமாக உள்ளது. இதனைச் 'சிற்றின்பம்' என்றனர் இடைக்காலத்தார். திருவள்ளுவர்க்கு இது கருத்தன்று. கருத்தாயிருப்பின் 'காமத்துப் பால்' பாடிக் காதலினைச் சிறப்பித்திருக்கமாட்டார்.

          “சிற்றின்பம் வெஃகி (அவாவி) அறணல்ல செய்யாரே
          மற்றின்பம் வேண்டு பவர்"(173)

என்னும் திருக்குறளில் உள்ள "சிற்றின்பம்" என்பது. ,சிறிதளவான இன்பம்', 'சிறு நேர இன்பம்’ எனப் பல்வகை. அவாவாலும், அவாக்கொண்டு செய்யப்படும் செயல்களாலும் உண்டாகும் உணர்வுகளையே குறிக்கும். காம இன்பத்தை மட்டும் குறிக்காது. மற்றும் "இன்பம் இடையறாது ஈண்டும்" (369) என்றார். இது இன்பம் சிறு அளவிலோ சிறுநேரத்திலோ மட்டுமன்று, தொடர்ந்தும் இருப்பது என்பதையும் குறிக்கிறது. மேலும் "பேரறிவு” (215). "பேராண்மை" (148) என்றெல்லாம் பாடியவர் 'பேரின்பம்' என்னும் சொல்லமைப்பையும் காட்டவில்லை.

எனவே, இன்பம் என்பது ஒரு நிலையை மட்டும் குறிப்பதன்று.

"தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு" (239) என்றதால்,

"காமுறுவர் கற்றறிந்தார்" (399) என்னும் கல்வி யின்பம் குறிக்கப்பட்டது.

"ஈத்துவக்கும் இன்பம்" (228) என்றதால் இல்லாத வர்க்குக் கொடுத்து அவர் மகிழ்வதைப் பார்த்து உவப்பது இன்பமாகிறது.

"செறுவார்க்கும் சேண் இகவா இன்பம்" (869) என்றதால் எதிரியின் அச்சத்தால் போரிலும் மற்றவனுக்கு இன்பம் தோன்றுவது குறிக்கப்பட்டது.

"ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்" (156) என்றதால் பிறரை ஒறுப்ப (தண்டிப்ப) தாலும் இன்பம் தோன்றுவது குறிக்கப்பட்டது.

"இன்பம் பயக்கும் மாசறு காட்சியவர்க்கு" (352) என்றதால் அறிவால் இன்பம் தோன்றுவது குறிக்கப் பட்டது.

இவை போன்று ஒன்றாக,

"இன்பம் கூடி முயங்கப் பெறின்" (1330) என்று உடலுறவு இன்பம் குறிக்கப்பட்டது.

இவ்வாறெல்லாம் இன்பத்தை விளக்கும் திருவள்ளுவர் இன்பத்துடன் துன்பத்தைத் தொடர்புபடுத்திப் பாடியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.

          "இன்பம் இடையறா தீண்டும், அவாவென்னும்
          துன்பத்துள் துன்பம் கெடின்” (369)

          "இன்பம் விழையான்; இடும்பை இயல்பென்பான்;
          துன்பம் உறுதல் இலன்" (628)

          "இன்பத்துள் இன்பம் விழையாதான், துன்பத்துள்
          துன்பம் உறுதல் இலன்” (629)

          "துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி
          இன்பம் பயக்கும் வினை” (669)

          "இன்பக் கடல் மற்றுக் காமம்; அஃதடுங்கால்
          துன்பம் அதனிற் பெரிது’’ (1166) என்றெல்லாம்

துன்பத்துடன் தொடர்புபடுத்தி இன்பத்தை விளக்கினார். துன்பத்திற்குரிய பிற சொற்களாகிய 'இடும்பை' (628) 'இன்னாமை' (630) என்பவற்றையும் உடனமைத்துக் காட்டினார்.

இவ்வாறு இன்பத்தோடு துன்பத்தை இணைப்பதும் இன்பம் பல்வகை உணர்வுகளால் எழுவதும் எனும் கருத்துக்களைக் கருத்தில் நிறுத்தி இக்கால அறிவியலுக்கு வருவோம்.

செருமனி நாட்டு உளவியல் வல்லுநர் உண்ட் (Wundi) உணர்ச்சிகளை ஆராய்ந்து உண்மை கண்டவர். அவர் கண்ட கீழ்வரும் உண்மை இங்கு காணத்தக்கது.

"இன்பம், துன்பம், ஊக்கம், ஒய்வு, கிளர்ச்சி, அமைதி என ஆறும் உணர்ச்சிக்கு அடிநிலைகள்" - இவ்வாறு உணர்ச்சியின் அடிநிலைகளைக் கண்டவர் இன்பத்தை அடுத்துத் துன்பத்தை வைத்துள்ளமை திருவள்ளுவத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.

திருவள்ளுவர் தம் திருக்குறளில் இன்பத்துடன் துன்பத்தை இணைத்துக் குறித்தமை ஐந்து குறட்பாக் களில் கண்டோம். அவற்றுள்ளும் "இன்பத்துள் இன்பம்" என்றும், "துன்பத்துள் துன்பம்" என்றும் துணுக்கமாகக் கூறியமை இரண்டின் அடிநிலைக் கிளைகள் ஆகும்.

வல்லுநர் உண்ட் அவர்கள் ஆறு அடிநிலைகளை, மேலும் ஆய்ந்து ஒரு கருத்தை வெளிப்படுத்தினார் :

          "அடிநிலையாகக் கூறப்பட்ட ஆறில்
          எவையேனும் மூன்று இணைந்தே
          காணப்படும்" என்றார். சான்றாக,

1. இன்ப ஊக்கக் கிளர்ச்சி

2. துன்ப ஊக்க அமைதி - எனக் காட்டினார். இவை இரண்டை வைத்துத் திருவள்ளுவத்தைக் காணலாம். இரண்டில் முதலில் உள்ள இன்ப ஊக்கக் கிளர்ச்சியில் இன்பத்துடன் ஊக்கம் தோன்றிக் கிளர்ச்சி உணர்வாகிறது.

திருவள்ளுவத்தில்,

          "துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி
          இன்பம் பயக்கும் வினை” (669)

என்னும் குறட்பா

          "இன்பம் பயக்கும் வினை செய்க;
          துன்பம் உறவரினும் செய்க;
          துணிவு ஆற்றிச் செய்க--"

என அறிவிக்கின்றது.

இக்குறளில் எடுத்துக் கொள்ளப்பட்டது இன்பம். அதனைத் துணிவு ஆற்றி என்றது, நெஞ்சத்துணிவைத் துண்டுவதாகிய ஊக்கத்தைக் குறிக்கும். .ெ ந ஞ் ச த் துணிவால் எழுந்த ஊக்கத்துடன் செய்க என்றது, இன்ப ஊக்கத்தில் கிளர்ச்சியால் நேர்வது. எனவே, வள்ளுவர் குறள், உளவியல் வல்லுநர் அடிநிலை விளக்கத்தைப் பின் வருமாறு குறித்துக் காட்டுவதாகிறது.

வள்ளுவர் : வல்லுநர் :
இன்பம் பயக்கும் : இன்ப
துணிவு ஆற்றி : ஊக்க
செய்க : கிளர்ச்சி

இது போன்றே வல்லுநர் காட்டிய 'துன்ப ஊக்க அமைதி'யை வள்ளுவக் குறள்

          "இன்பம் விழையான், இடும்பை இயல்பென்பான்
          துன்பம் துடைத்துான்றும் தூண்" (628)

என்பது காட்டியது. இக்குறளில் துன்பத்தைப் போக்கும் உறுதிப்பாடு கூறப்பட்டது.

துன்பம்,

அது 'இடும்பை இயல்பென்று கொண்டு உள்ளத்தின் ஊக்கத்தால்

துடைக்கப்படுவது;

துடைக்கப்பட்டதைக் கலக்கமில்லாத உறுதித்துரணில் வைப்பது’-என மூன்று கருத்துக்கள் உள்ளன. இவை "உளவிய அறிவிய"லில் பொருந்துகின்றன.

வள்ளுவர் வல்லுநர்
துன்பம் : துன்ப
(மன ஊக்கத்தால்) துடைத்து : ஊக்க
இடைவளிமண்டிலம் (Merosphare) : ஊக்க
ஊன்றும் தூண் : அமைதி

18ஆம் நூற்றாண்டளவில் ஆய்ந்து காணப்பட்ட இன்ப துன்ப விரிவுகள் திருவள்ளுவத்தில் முறையே ஒவ்வொரு குறளில் அமைந்தவையாகின்றன. திருவள்ளுவம் ஓர் உளவியல் அறிவியலில்தன் பங்களிப்பை வைத்துள்ளமைக்கு இஃதொரு சான்று.

இன்பம் சீர்குலையாமல் அமைய வேண்டும். அதற்கு இடையூறு வராமல் பாதுகாப்பு வேண்டும். அப்பாது காப்பாம் 'ஏமம்' இன்றியமையாதது.

உ. ஏமம்

ஏமம் என்றால் பாதுகாப்பு. இடையூறோ, துன்பமோ, அழிவோ நேராமல் பாதுகாப்பளிப்பதும் ஏமம். இவை வரும்போது காத்துக்கொள்வதும் ஏமம். ஏமம், ஏமாப்பு, ஏமார்த்தல் எனும் மூன்றும் ஒரே பொருளன.

நாட்டையோ மக்களையோ உயிரினங்களையோ பகை, இயற்கை, குணக்கேடு, மொழி ஆட்சி முதலியவை தாக்குமானால் பல்வகைப் பாதுகாப்புகள் வேண்டும்.

இப்பாதுகாப்பு எதனால் அமையும்? எதனால் அமையும் என்பது பொருந்தாது. எவற்றால் அமையும் என்பதே பொருந்தும்.

திருவள்ளுவர் பாதுகாப்பனவாகப் படையையும், அரண்களையும், ஆட்சித் திறனையும் கூறியுள்ளார். இவை நாட்டையும் நாட்டு மக்களையும் உயிரினங்களையும் காக்கும்.

மனத்துன்பத்தை, வாழ்க்கையை, பண்புகளைக் காக்கும் ஏமங்களாகத் திருவள்ளுவர்

          செல்வம் (1.12)
          அடக்கம் (128)
          கல்வி (398)
          கேண்மை(815)
          இனநலம் (458, 459, 306, 868)
          அரண் (742, 744, 750)

பொருளியல், உளவியல், உளப்பகுப்பியல், கல்வியியல், அரசியல், குமுகாயவியல், கட்சி அரசியல், போர்முனை இயல், வாழ்வியல்.

ஆகியவற்றை ஏமமாகக் கூறியுள்ளார். இவை காக்கும்திறத்தைக் கூறியுள்ளமை இக்கால அறிவியல் துறைகள் பலவற்றுக்கு முன்னோடியாக உள்ளது.

(1) செல்வ ஏமம்

"செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து"(112)

இதில் ஆக்கம் செல்வத்தைக் குறிக்கும். இச்செல்வம் நேர்மை உடையவனால் ஆக்கப்பட்டால் அது அவனுக்குப் பின் வாழும் மக்களுக்கும் தொடரும்; நலன்களுக்கும் ஏமம் ஆகும். இதனால் செல்வம் ஓர் ஏமப் பொருளாகிறது.

இன்றளவில் அமெரிக்க நாடு பெரும் வல்லரசு நாடு. குறிப்பிடத்தக்க மேன்மையுடைய வல்லரசு. வல்லரசுடன் வளன் அரசு. இவ்வளத்திற்கு அந்நாட்டில் செல்வம் கொழிப்பதே காரணம். பெரும் செல்வ வளம் கொண்டு அறிவியல் ஆய்வுகளால் மக்களுக்கு ஆக்கம் தருகிறது. போர்க்கருவிகளைச் செல்வத்தால் குவித்து எத்தாக்கு தலையும் அழிக்கும் பாதுகாப்பைத் தந்துள்ளது. ஈரானும் அது போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடுகளும் தம் செல்வ வளத்தால் அந்நாட்டு மக்களைப் பாதுகாக்கின்றன.

இந்நாடுகளின் செல்வவளம் இந்நாட்டு மக்களின் தலைமுறை தலைமுறைக்குப் பாதுகாப்பாக விளங்குகிறது, எதிர்கால வளங்கள் பலவற்றிற்கும் செல்வக் குவியல் பாதுகாப்பாக உள்ளது. இதுதான் திருவள்ளுவரால் 'எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து' எனப்பட்டது.

அவ்வந் நாட்டுச் செவ்வங்களின் நிலைக்கு ஒரு விதிப்பு வைத்தால், அச்செல்வம் செப்பம் உடைய வழியில் வர வேண்டும். செப்பம் தவறி வந்த செல்வம் செப்பம் தவறியோர்களாலே பாதுகாப்பற்று அழிக்கப்படும். போரால் மட்டும் அன்று; அவ்வந்நாட்டு மக்களின் செப்பமில்லாத செயல்களாலும் பாதுகாப்பற்றதாகும். இதற்கு ஒர் உவமை கூறித் திருவள்ளுவர்

"சலத்தால் (வஞ்சத்தால்) பொருள் செய்து
            ஏமார்த்தல் (பாதுகாத்தல்) பசுமட்
கலத்துள் நீர்பெய்து இரீதியற்று"
(660)

என்றார்.

எனவே, திருவள்ளுவர் குறித்த 'செல்வத்தால் பாதுகாப்பு' (இருவகையிலும்) இக்கால உலக அரசுகளால் கண்காணும் காட்சியாக வெளிப்படுகின்றது. இது பொருளிய அறிவியலின் குறியாகும்.

(2) அடக்க ஏமம்

செல்வம் பாதுகாப்புத் தருவது. அது போன்று அது பாதுகாக்கப்பட வேண்டியதும் ஆகும். செல்வத்தைப் பேணிப் பாதுகாப்பது போன்று வேறு பலவும் பாதுகாக்கப்படவேண்டும் என்பார் திருவள்ளுவர். அவற்றுள் 'அடக்கம்' ஒன்று,

"காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
            (ஏனெனில்)
அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு(122)

இக்குறளில் உயிர்க்கு ஒப்பில்லாத செல்வம் 'அடக்கம்' என்றார். எனவே, செல்வம் போன்று அடக்கமும் ஓர் ஏமம் ஆகிறது.

'அடக்கம்' ஏமம் ஆவதைத் திருவள்ளுவர் ஓர் உவமையுடன்,

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து"
(126)

என்று விளக்கினார். இதில் 'அடக்க'லை 'ஏமாப்பு' என்றார்.

'அடக்கம்' வேறு. 'அடக்கல்' வேறு. ஆனாலும், இரண்டும் தொடர்புடையவை. 'அடக்கம்' தானே அடங்குவது. 'அடக்கல்' தானே அடங்காமல் அவா எழும்போது அடக்கிக் கொள்தல்.

ஆமை இயல்பாகவே நான்கு கால்களையும் ஒரு தலையையும் உள்ளே - ஓர் ஓட்டிற்குள்ளே வைத்திருத்தல் 'அடக்கம்' அடக்காமல் வெளியே நீட்டி ஒரு பகை தோன்றும்போது உள்ளே இழுத்துக் கொள்ளுதல் 'அடக்கல்.’

இங்குக் திருவள்ளுவர் 'அடக்கல்’ என்பதை வற்புறுத்துகிறார்.

இக்கால உளவியலில் 'அடக்கல்' (Repression) என்பது ஒரு துறை. இதனை ஆராய்ந்தவர் ஆஃச்திரிய நாட்டறிஞர் சிக்மாண்டு பிராய்டு (Sigmond Freud) என்பார். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் உளப்பகுப்பியல் (Psycho-analyses) என்னும் ஓர் இயலைப் புதிதாக நிறுவினார். இவ்வாய்வில் 'அடக்கல்’ ஒன்று, இவர் கருத்தின் படி 'அடக்கல்’ என்பது பல்வகை மனப்போராட்டங்களால் விளைவது. அவற்றுள் இரண்டை இன்றியமையாதனவாகக் குறிப்பர்.

1. 'தனியொருவனின் இயல்பான அவாவிற்கும் அவனின் நேர்மையான உணர்ச்சிக்கும் நேரும் மனப் போராட்டத்தால் விளையும் அடக்கல்.’

2. 'தனியொருவனின் அவாவிற்கும் மக்கள் மரபு பற்றிய எண்ணத்திற்கும் நேரும் மனப்போராட்டத்தால் விளையும் அடக்கல்.’

இவையிரண்டையும் ஆமை உவமையாக்கப்பெற்ற குறளில் காண்கின்றோம்.

1. தனியொருவன் தன் அவா எழும்போது அவனின் உள்ளடக்கமான நேர்மை என்னும் உணர்ச்சி தடுக்கிறது. இரண்டிற்கும் போராட்டம். நேர்மை, அவாவை அடக்கல் செய்கிறது. இது ஆமை இயல்பாகவே அடங்கி இருக்கும் அடக்கல் போன்றது.

2. தனியொருவன் தன் ஐந்து பொறிகளில் எழும் அவாவினை அடக்காமல் எழுப்புவான். அப்போது அவனுக்குள்ளேயே தன்னைச் சூழ்ந்த குமுகாய மரபு என்னும் ஒழுக்க உணர்வு அவாவினைத் தடுக்கும். இரண்டிற்கும் ஒரு போராட்டம் நிகழும். அவன் அவாவைக் குமுகாய மரபு அடக்கும். இது ஆமையின் பார்வையில் தோன்றிய பகையால் உறுப்புக்களை அடக்கல் செய்வது போன்றது.

இவ்வாறாக இக்கால 'உளப்படுப்பிய'லைக் குறளில் காண்கின்றோம்.

அடுத்து, "எழுமையும் ஏமாப்பு உடைத்து" (398) என்றகிலும் இன்றைய 'உளப்படுப்பியல்' கருத்து பொதித்துள்ளது.

சிக்மாண்டு பிராய்டு.

'முதற் பருவமாகிய குழந்தைக்கும் உடலுறவு ஊக்கம் இயல்பாக உண்டு. (இயல்பாகவே இதனை அடக்கலில் கொள்வதால்) இக்குழந்தைக்கு ஆளுமை (Personality)உருவாகும்’ என்று கண்டறிந்தார்.

இவ்வுளப்பகுப்பியலில் 'அடக்கல்' ஒருதுறை.

"ஐந்தடக்கல ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து"

என்றதில்.

‘ஒரு பருவத்தில் அஃதாவது குழந்தைப் பருவத்தில் இயல்பான 'அடக்கல்' அமையும். குழந்தையால் இவ்வடக்கல் அறியப்படாதது. இவ்வடக்கலே முதுமை வரை ஏழு பருவத்திற்கும் ஆளுமையாக நிற்கும். ஏழாவது பருவம் வரை இந்த ஆளுமை ஏமாப்பு ஆகும்’

இவ்வாறு பொருள் பொதிந்த இக்குறளால் அக்காலத் திருவள்ளுவரின் இக்கால உளப்பகுப்பியல் அடக்கல்’ புலனாகின்றது. எனவே திருவள்ளுவ உளப்பகுப்பியலாம் 'அடக்கல்' ஏலம் ஆகிறது.

அடக்கம் கல்வியாளர்க்கு அமைந்தால் கல்விக்குச் சிறப்பு என்பதை,

"கற்று அடக்கல் ஆற்றுவான்" (139) என்பதால் காட்டினார். இவ்வாறு காட்டிய தொடர்பாலும் மேலே கண்ட 'அடக்கல்' பற்றிய ஒருமை எழுமை என்னும் தொடர்பாலும் அடுத்துக் கல்வி ஏமத்தைக் காண நேர்கின்றது.

இடையில் ஒருமை, எழுமை பற்றிய ஒரு குறிப்பு. உரையாசிரியர்கள் ஒரு பிறப்பு, ஏழு பிறப்பு என்று பல இடங்களில் பொருள் கொண்டனர். ஏழு பிறப்பு திருவள்ளுவர் ஏற்றதே, ஏழு ஆயினும் அடக்கம், கல்வி பற்றிய கருத்தில் ஒரு (முதல்) பருவம், ஏழு (இறுதி) பருவம் என்று கொள்வதே அறிவார்ந்த பொருளாகும்.

ஏழு பருவங்களாவன :

பெண் : பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்.

ஆண் : சிறுவன், மீனி, மறலோன், திறவோன், காளை, விடலை, முதுமகன்-இவ்வாறு 'அவிநயம்' என்னும் பழைய இலக்கணநூல் குறிக்கிறது.

3. கல்வி ஏமம்

                    “ஒரு மைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
                    எழுமையும் ஏமாப்பு உடைத்து’’ (398)

இங்கும் ஒருமை, எழுமை மாந்தப் பருவங்களையே குறிக் கும். ஒரு பருவமாகிய சிறுவன் பருவத்தில் ஒருவன் கற்க வேண்டும். கற்றால் அவனுக்கு அக்கல்வி தொடர்ந்து முதுமை வரை வரும் ஏழு பருவங்களுக்கும் பாதுகாப்பு ஆகும்.

கல்வியால் பெற்ற அறிவுப் பாதுகாப்பு ஆறறிவு மாந்தனை உண்மையில் மாந்தனாக வைத்திருக்கும்.

கல்வியை "எண்என்ப, ஏனை எழுத்து என்ப" (392) என்று இரண்டுள் அடக்கினார். சிறுவன் தன் பருவத்தில்கற்கும் எண், எழுத்து எனும் இவையிரண்டும் அவன் வாழ் நாள் வரை கல்விக்கும், செயலுக்கும், வாழ்விற்கும் அடித்தளமாக நின்று அவன் அறிவையும், அறிவார்ந்த வாழ்வையும், அவற்றால் அவனையும் பாதுகாக்கின்றன. முதற் பருவத்தில் சிறுவன் 'அ, ஆ, இ...... ' என எழுத்துக்களையும், '1,2,3......0' என எண்களையும் கற்கிறான். இவன் அவ்வாறே அவனது ஏழு பருவங்களுக்கும் துணை. யாக நிற்கின்றன. துணையாக நின்று அவன் மொழியறிவையும், கணக்கறிவையும் பாதுகாத்து ஏமம் செய்கின்றன.

எழுத்து நிலையிலும் எண்நிலையிலும் மட்டுமல்லாமல் குறியீடுகளாகவும் துணையாகின்றன. எழுத்துக்களே எண்களாக உதவுகின்றன. தமிழில்,

க—1, உ—2, ரு—5, எ—7, அ—8, ய—10,

ள—100, வ—கால் (¼), தெ—முக்கால் (¾)

வத—முந்திரி, அத—1000 என்றெல்லாம் குறியீடுகளாகத் துணைநின்று ஏமமாகின்றன.

ஆங்கிலத்தில் தேற்ற வாய்பாடாக,

AB3 BC2+CA2 -என்றெல்லாம் எழுத்தும் எண்ணுமாக முன் பருவத்தில் கற்கப்பட்டவை, பின் பருவங்களில் குறியீடுகளாக நின்று அறிவிற்கு ஏமமாகின்றன. பல கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளக் குறியீடுகளாக உதவி ஏமமாகின்றன.

இக்காலக் குழந்தைக் கல்வி மழலையிலேயே தொடங்குகின்றது. இக்குழந்தைக் கல்விமுறையில் கிண்டர்கார்டன் முறையை அறிஞர் புரோபெல் என்பார் அமைத்தார். மாண்டிசோரி அம்மையார் அமைத்த முறை அவர் பெயரால் நடந்துவருகின்றது. முதற் சிறுவன் பருவத்தில் விளையாட்டுச் செயலறிவோடு கூடிய கல்வியை இவை தருகின்றன. இம்முதற்பருவக் கல்வி முதுமைப் பருவம் முடிய அவனை அறிதிறன் (Intelligence), உடையவனாக்கி அவனுக்கு ஏமமாகின்றது.

குழந்தையின் அறிதிறனை ஆய்ந்தவர் கலிபோர்னியா நாட்டுப் பேராசிரியர் பினே (Binet) என்பவர். இவர்,

'குழந்தைப் பருவத்தில் உள்ள அறிதிறன் செப்பமாக்கப் பெற்றால் அது அவன் வாழ்நாள் வரை அவனைப் பாதுகாக்கும்' என்று கண்டறிந்தார்.

மற்றொரு பேராசிரியர் டெர்மென் (Dermen) என்பார் தம் ஆய்வில்,

'குழந்தைகள் வளர்ந்த பின்னர், தாம் குழந்தைப் பருவத்தில் பெற்ற அறிதிறனால் உலகப்புகழ் அடைவர்' என்று கண்டறிந்தார்.

இக்காலத்தில் கண்டறியப்பட்ட கல்வி அறிவியல் (Educational Science) 305;&##6ir 505a, sirgjaft.8% மிசு எளிமையாக எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்னும் தொடரில் பொதிந்துள்ளது.

மேற்கண்டவற்றால் கல்வி ஒரு ஏமம் ஆகிறது.

கல்வி ஒரு ஏமத் தொடர்பில்

கல்வியறிவுடையார் அதன் வலிமையால் பல வகையில் ஏமம் ஆவார். அவற்றுள் ஒன்று அவரை நட்பாக கேண்மையாகக் கொள்ளல். இதனை,

"மூத்த அறிவுடையார் கேண்மை" (441) என்றார்.

இவ்வகைக் கல்வி ஏமத்தொடர்பில் 'கேண்மை ஏமம்' தொடர்கின்றது.

4. கேண்மை ஏமம்

கேண்மை என்பதற்கு நட்பு என்பது பொருள். நட்பினும் அழுத்தமானது கேண்மை.

கேண்மை தனியொருவர்க்கும் வேண்டும்; நாட்டிற்கும் வேண்டும். கேண்மையின் சிறப்பான பயன், தன்னைத் தழுவியவருக்குத்தான் ஏமமாக அமைவது. அசி"தி ஏமம் தராத கேண்மை கொள்ள வேண்டாத ஒன்றாகும். இதனைத் திருவள்ளுவர்,

'ஏமம் சாராக் கேண்மை' என்று பொதுவில் குறிக்க வேண்டியவர், இதற்கு ஓர் அழுத்தம் கொடுக்க எண்ணி,

"ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை" என்றார். சிறியவரும் கேண்மை செய்வார். ஆனால், அது "புன்கேண்மை’; ஏமம் செய்யாது. இதனை

"எய்தலின் எய்தாமை நன்று" (815) என்று முடித்தார்.

எனவே புன்கேண்மை ஏமம் ஆகாது.

நல்ல கேண்மை ஏமம் ஆகும்.

இக்கருத்து திருக்குறளில் 'அரசியல்' என்னும் இயலில் உள்ளது.

இக்காலம் அரசியல் அறிவியல் (Political Science) நாட்டிற்கு இன்றியமையாததாகத் தோன்றியுள்ளது. கேண்மை ஏமத்திற்கு இன்றைய உலகத்தில் அரசாட்சி நடப்பில் நல்ல சான்றைக் கண்டு வருகிறோம்.

உலகத்து நாடுகளில் சில கூட்டுசேரா நாடுகளாக உள்ளன. இருப்பினும் தெற்காசிய நாடுகள் கேண்மை கொண்டு ஒரு கூட்டாக சார்க் (Saarc) என்னும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏழு நாடுகள் இக்கூட்டு நாடுகள். இந்திய நாட்டுடன் இதில் பாக்கித்தானமும் உள்ளது. இக்கூட்டில் கேண்மை கொண்டிருக்கிறது பாக்கித்தான். ஆனால் இக்கேண்மையில் இருந்து கொண்டே இந்திய நாட்டிற்கு எதிரான கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுகிறது. காசுமீரத்தில் சமுக்கமாகக் குண்டர்களை அனுப்பிக் கொலை, கொள்ளை, கலவரம் செய்து அம்மாநில மக்களின் ஏமத்தைக் குலைக்கிறது. பம்பாயில் குண்டுகள் வெடிக்கக் காரணமாகி அந்நகர்ப் பாதுகாப்பில் கலக்கம் ஏற்படுத்தியது.

'சார்க்’கில் கேண்மை உண்டு;

அமுக்கச் செயலால் ஏமம் இல்லை;

இதனால் கேண்மை என்பதே புன்கேண்மையாகிறது.' நாம் கண்ணால் காணும் இந்த அரசியல் அறிவியலில் முன் னோடிப் பதிவாகத் திருவள்ளுவத்தை

(கேண்மை)

              "செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
              எய்தலின் எய்தாமை கன்று" (815)

என்று பேசவைத்தார் திருவள்ளுவர். பாக்கித்தானத்தின் கேண்மை பெறுவதைவிடப் பெறாதிருத்தலே நல்லது என்று நம் நாட்டு மக்கள் எண்ணவேண்டி நேர்ந்துள்ளது.

திருவள்ளுவர் தொலைநோக்காகக் கருதியது போன்று பாக்கித்தானின் இந்தக் கேண்மையை

"இணம்போன்று இனமல்லார் கேண்மை" (822) என்றார்.

கேண்மையில் இனத்தாரும் உள்ளனர்;
இனம் அல்லாதாரும் உள்ளனர்.
இவ்விரண்டையும் அடுத்துக் காணலாம்.

5. இனநல ஏமம்

நட்பாம் கேண்மை போன்றது இனம். இங்கு இனம் என்றால் ஒருவருடன் அவருக்கு இனமாக அஃதாவது துணையாகக் கூடியிருப்பவரைக் குறிக்கும். சாதி என்பதை அன்று. கேண்மை இருவர் தொடர்ந்து ஒன்றிப் பழகுவது. இனம் கூடியிருப்பது; தொடராமலும் அமையும். நட்பு இடையறாத் தொடர்பு, இனம் ஒரு கூட்டு; செயற் பாட்டிற்குத் துணையாக உதவுவதும் பழகுவதும் இனமாதல் ஆகும்.

நட்பில் தீநட்பும் உண்டு; கேண்மையில் புன்கேண்மையும் உண்டு. இனத்திலும் நல்லினமும் உண்டு; தீயினமும் உண்டு. இதனைத் திருவள்ளுவர்,

             "நல்லினத்தின் ஊங்குங் துணையில்லை; தீயினத்தின்
             அல்லல் படுப்பது உம் இல்" (460)

என்ற குறளில் காட்டினார். இத்துடன், நல்லினம் துணையாகும் (பாதுகாப்பாகும்), தீயினம் அல்லல் தரும் என்று 'இன நல ஏம’த்தைக் குறித்தார்.

'பெரியாரைத் துணைக்கோடல்' என்னும் அதிகாரத் தால் நல்லினத்தின் நலத்தையும் சிற்றினஞ் சேராமை'யால் தீயினத்தின் தீமையையும் விளக்கினார். 'சிற்றினஞ் சேராமை"யாம் எதிர்மறையில் நல்லினத்தில் ஏமத்தை அழுத்தமாக விரித்தார்.

மக்கட் கூட்டம் இலக்கியங்களில் 'மன்பதை'[27] எனப் படும். அதனைத்தான் 'சமுதாயம்' என்கின்றனர். தமிழில் 'குமுகாயம்' என்று குறிக்கின்றோம். குமுகாய அமைப்பு இந்த இனநலத்தால்தான் உருவாகிறது. இன மாகக் கூடுவது தனியொருவர்க்கும் வேண்டியது; பொது மக்களுக்கும் வேண்டியது; நாட்டிற்கும் வேண்டியது. இனநலத்தால் அந்நலம் பெற்றவரோ, நாடோ ஏமம் பெறும். திருவள்ளுவர்.

"இனம் என்னும் ஏமம்" (306) என்று இனத்தையே 'ஏமம்' என்றார்.

ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர்க்கும் 'இனநலம்’ ஒரு பாதுகாப்பு. சான்றோர்க்கு மனநலம் நன்றாக அமைந்திருக்கும். ஆயினும்,

          "மனநலம் நன்குடைய ஆயினும் சான்றோர்க்கு
          இனகலம் ஏமாப்பு உடைத்து" (458)

சான்றோனாயினும் பொதுமக்களில் ஒருவனாயினும் உயிரோடு வாழும் வாழ்வு இம்மை வாழ்வு. உயிர் போனாலும் அவன் வாழ்நாளில் பெற்ற புகழ் உலகில் நின்று நிலவும். அப்புகழ் வாழ்வு அவனது மறுமை வாழ்வு. அண்ணல் காந்தியடிகள், வள்ளலார், பெரியார், சவகர்லால் தேரு, அறிஞர் அண்ணா முதலியோர் இயற்கை யெய்தினாலும் இன்றும் மக்கள் நெஞ்சில் புகழுடன் வாழ்கின்றனர். இவ்வாழ்வு அன்னாரின் மறுமை வாழ்வு. இந்த மறுமையைத்தான் திருவள்ளுவர் "உளதாகும் சாக்காடு" (235) என்றார். மறுமை வாழ்வு எவ்வாறு தொடர்கின்றது? அவர்களோடு நல்லினமாக இருந்தோர் இன்றும் வாழ்வதாலும், அவர்தம் கொள்கைகளை ஏற்று அவர்களுக்கு இன்றும் நல்லினமாக உள்ளோர் வாழ் வதாலும் மறுமை வாழ்வு நீடிக்கிறது. இவ்வகையில் இனநலம் மறுமை வாழ்விற்கும் ஏமம் ஆவது, இது,


"மனகலத்தின் ஆகும் மறுமை; மற்றஃதும்
இனகலத்தின் ஏமாப்பு உடைத்து" (459)

என்னும் குறளில் பதியப்பட்டுள்ளது.

'இனநலம் ஏமம்' என்று திருவள்ளுவர் காட்டிய கருத் துக்கள் குமுகாய அறிவியலில் (Social Science) வெளிப்படுத்தப்பட்டுள்ளமை வியக்கத் தக்கதாகும்.

உயிரினத்தோற்றம் அதன் படிமலர்ச்சி (Evolution)யை ஆய்ந்து ஒரு சட்டகம் அமைத்தவர் டார்வின் என்பார். இவர் கொள்கை 'டார்வின் கொள்கை' எனப்படும். இக் கொள்கை வழி ஆய்ந்தோர் பின்வரும் கருத்தை வெளியிட்டனர் :

          "குமுகாயப் படிமலர்ச்சியில் போரும்
          போட்டியும் வேண்டாதவை அல்ல;
                                                 முறையானவையே"

என்றனர்.

ஆனால், இதனை மேலும் ஆராய்ந்த குமுகாயவியலார் அக்சிலி (Huxley) என்பார் இக்கொள்கை தவறு என்று மறுத்து,

          'மாந்தருக்குள் (இனமாகக் கூடும்) கூட்டுறவும்,
          ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதும்
          குமுகாய நலத்திற்கு உதவும்' என்றார்.

இந்தக் குமுகாயவியல் (Social Science) கொள்கை. மேலே கண்ட திருவள்ளுவ இன ஏமக் கருத்தில் மிளிர்கின்றது.

இனம் இல்லாமை - ஏமம்

இனம் ஏமமாவது போன்று இனம் இல்லாமையும் ஏமமாகும். இன்றைய அரசியல் கட்சிகளின் நிலைமை மற்றையக் கட்சியுடனோ, கட்சிகளுடனோ கூட்டு சேர்ந்து தேர்தலில் ஈடுபட வேண்டியுள்ளது. இக்கூட்டு அரசியல் இனம் ஆகும். கூட்டில் கொள்கை ஒற்றுமை, குறிக்கோள் ஒற்றுமை பார்ப்பதும் மறைந்து வருகின்றது. கூட்டு சேர்வது வெற்றிக்கு மட்டும் அன்றிக் கட்சிக்கும் ஏமம் ஆக வேண்டும். இதற்கு மாறாக,

‘ஒரு கட்சியுடன் கூட்டு சேராதிருத்தலே வெற்றிக்கும் கட்சிக்கும் ஏமமாக அமையும். காரணம் கூட்டு சேரத் தகுதியின்மை பலவகையால் அமையலாம். அவற்றுள்ளும் இக்காலம் குறிப்பிடத்தக்கதாக ஒரு கட்சியின் தலைமை அதற்குரிய தகுதியைக் கைவிட்டதாகலாம். கட்சித் தலைமை பெருந்தகவான குணம் இல்லாமல் தன் மூப்பு கொண்டதாகுமானால் கூட்டின் ஏமம் குறையும், தலைமையின் தனி வாழ்விலும், பொறுப்பு நடை முறைகளிலும் ஆட்சியில் ஊழல் மலிந்திருப்பது மாகிய குற்றங்கள் பலவாக இருப்பினும் கூட்டின் ஏமம் கெடும்.'

இவ்வாறு இக்காலத்தில் பொதுவாகக் கருதப்படுகிறது. இக்கருத்து நடைமுறைச் செயற்பாட்டிற்கும் பொருந்தும் நிலை உள்ளது.

இந்நிலை பற்றிய திருவள்ளுவரின் கருத்து

"குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனன் இலனாம் ஏமாப்பு உடைத்து" (868)

சள குணமின்மையும் குற்றம் பல உண்மையும் இனம் ஆகாமலே மாற்றாரை ஏமத்தில் வைத்து விடுகின்றன. இக் கருத்து இன்றையக்கட்சி அரசியல் (Partism Political) என்று தோன்றிக் கொண்டிருக்கும் புதுமை அறிவியலின் முன் னோட்ட அடையாளமாகின்றது.

பெண்ணினத்தையும் அடக்கியே திருவள்ளுவர் ஆண்பாலிலேயே அறிவுரையும் கருத்துரையும் வழங்கியுள்ளார். இம்முறையில் இக்குறளிலும் பெண்களையும் குறிப்பிட்டே குறித்துள்ளார். இக்காலத்தில் தலைமை அமைச்சர்களாகவும், முதலமைச்சர்களாகவும் மகளிர் அமர்ந்துள்ளமையால் இது இருபாலார்க்கும் உரிய குறளாகும். படிப்போர் நாட்டு நடப்பறிந்து பொருள்கொள்ள வேண்டியுள்ளது. பொதுமறையான திருக்குறட் கருத் துக்கள் திறனாய்வு செய்யப்படும்போது எந்த ஒரு கட்சியையும் பொதுவாகச் சுட்டாது போவதே திறனாய்வுக்கு ஏமமாகும்.

6. அரண் ஏமம்

ஏமம் தனியொருவருக்கும், குமுகாயத்திற்கும் இரண்டையும் உள்ளடக்கிய நாட்டிற்கும் இன்றியமையாதது. நாட்டிற்கு ஏமமாவன பல. அவற்றுள் "அரண் ஒரு ஏமம். அரண் என்றாலே பாதுகாப்பு- ஏமம் என்று தான் பொருள். இது கடல், கோட்டை, மலை முதலியவற்றிற்கு ஆகுபெயராக அமைந்தது.

நாட்டைச் சூழ்ந்த கடல், மண்ணில் கட்டிய கோட்டை, இயற்கை மலை, பின்னிச் செறிந்து விளங்கும் இயற்கைக் காடு ஆகியனவெல்லாம் நாட்டிற்குப் பாதுகாப்பாக உள்ளமையால் திருவள்ளுவர் இவற்றை அரண்' (742) என்றார்.

இக்காலத்தில் போர்க்கருவிகள் பெரும் அழிவை விரைவில் ஏற்படுத்தக் கூடியன. வானவூர்தி வழித் தாக்குதலும், பீச்சிப்பாயும் பாய்விகளும் (Rockets), அணு குண்டும் பெருகிவரும் நிலையில் மேலே கூறப்பட்ட அரண்கள் வலுவிழந்தன ஆகலாம். ஆனாலும், இவையும் பாதுகாப்பளித்து வருகின்றன. கடல் அரணாக இருப் பதால்தான் போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன. இன்றும் யாழ்ப்பாணத்து நகரின் எல்லையில் ஒரு கோட்டை உள்ளது. இதற்குள் சிங்களப்படையினர் தங்கிப் புலிகளுடன் மோதி வருகின்றனர். இவ்வகையில் இன்றும் கோட்டை ஏமமாக உள்ளது. இயற்கையான இமயமலை இன்னும் இந்திய நாட்டிற்கு ஏமமாக உள்ளது. யாழ்ப்பாணத்துப் புலிகளுக்கு அங்குள்ள அடர்ந்த காடுகளே ஏமமாக உள்ளன. தீமையே செய்யும் சந்தனக் கட்டைக் கடத்தல் மன்னன் வீரப்பனுக்குச் செறிந்த காடுகளே ஏமம்; தீமைக்கு ஏமமாயினும் அவனளவிற்கு அரண் தான்.

அக்காலத்துக் கோட்டை அரண் தன் உள்ளேயே பெரும் வெட்டவெளியிடத்தைக் கொண்டது; கோட்டையில் சிறு சிறு பதுங்கு அவைகள் 'ஞாயிறு'[28] என்னும் பெயரில் சிறு காப்பிடம் அமைந்திருக்கும். அதற்குள் பதுங்கியிருந்து தாக்குவர்.

இக்காலத்திலும் போரின்போது ’பதுங்கு குழிகள்’ அமைக்கப்படுகின்றன. இவற்றில் போர்வீரர்கள் மறைந்திருந்து தாக்குகின்றனர். இவ்வமைப்பை அறிந்த பகைப் படையினர் எந்த இடத்தில் எந்த நேரத்தில் தாக்குதல் வருமோ என்று எதிர்பார்க்கும் கலக்கத்தில் போர் ஊக்கத்தையும் இழப்பர். இதனையும் உள்ளடக்கியே திருவள்ளுவர்,

”சிறுகாப்பிற் பேரிடத்த தாகி, உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்”(744)

என்றார்.

அரண் பற்றி மற்றொரு குறள் காட்டும் உண்மை இக்காலத்தில் அண்மையில் பாரசீக வளைகுடாப் போரின் போது வெளிப்பட்டது.

ஈராக் நாட்டு வல்லாட்சியர் சதாம் என்பவர் அண்டைச் சிறுநாடான குவைத்தை ஆட்படுத்திக் கொண்டார். இதனால் போர்மூளும் என்று எதிர்பார்க்க அவர் தம் நாட்டில் நிலத்திற்கடியில் ஒரு கோட்டையை உருவாக்கினார். அது ஒரு நகர் போன்றே அனைத்து நலங்களையும், வளங்களையும் கொண்டதாக அமைக்கப்பெற்றது. வல்லமை வாய்ந்த நிலத்தடி அரண்தான் அது. ஆனாலும், சதாம் உலகநல நாடுகளின் தாக்குதலால் பெருந்தோல்வி கண்டார். அவர் அமைத்த நிலத்தடி நகரும் ஏமத்தைத் தரவில்லை. அது மிக மாட்சிமை மிக்கதுதான். ஆயினும், ஏமமாகவில்லை. காரணம், சதாம் செய்த வேண்டாத தீமைகளால் அவர் செய்த செயல்கள்-வினைகள் மாட்சிமை அற்றவையாயின.

“எனை மாட்சித் தாகியக் கண்ணும், வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்”

 (750)

என்ற குறள் கருத்துதான் வென்றது. வினைமாட்சியின்மையால் வல்ல அரணும் “இல்லது அரண்”. ஆயிற்று.

இவ்வாறெல்லாம் இக்காலப் போர்முறை அறிவியலிலும், மக்களின் வாழ்வியல் அறிவியலிலும் திருவள்ளுவர்தம் கருத்துக்கள் நிழலாடுகின்றன. அறிவியல்களின் தொலை நோக்குப் படமாகத் திருவள்ளுவம் பதியப்பட்டுள்ளது.

இதுவரை,

எடுத்து விரித்த விளக்கங்களால் திருவள்ளுவர் வழங்கிய திருக்குறள்.

”அறிவியலும் திருவள்ளுவம்” என்பது புலனாக்கப்பட்டது.

இதற்கு அடிதளமாக,

திருவள்ளுவரை அறிவியற் கவிஞராகக் கண்டோம்
”யாம்” என்று நம்முடன் நேருக்கு நேர் பேசித் திருவள்ளுவர் காட்சி தந்தார்.
அப்பெருமகனாரின் பட்டறிவுப் பேச்சு குடும்பத்தையும், தனிமாத்தப் பண்பாட்டையும், குமுகாயத்தையும் அளவிட்டுக் காட்டியது.
”அறிவறிந்த” என்னும் ஒருசொல் அறிவியல் சொல்லாகப் பளிச்சிட்டுக் காட்டப்பெற்றது
அறிவியலில் ஓர் இயலான வானவியல் ஒரு குறளின் இரு தொடர்களில் பொதிந்துள்ளமை நயப்பில் நம்மை நிறுத்தியது.

இவற்றால் அமைந்த அடித்தளப் பாங்குடன், ”பிணியின்மை என்று துவங்கும் ஒரு குறளை நிலைக் களமாக்கி
நாட்டிற்கு அழகாகும் ஐந்தின் ஒளிக்குறட்பாக்களை விரிவுரையாக்கி,
அவற்றுள்
நோயியல், உணவியல்,
மருத்துவ இயல், உடலிய உளவியல், பொருளியல், நிலத்தியல்;
உளவியம், உளப்பகுப்பியல்:
கல்வியியல், அரசியல், குமுகாயவியல்
கட்சி அரசியல், போர்முனை இயல், வாழ்வியல்
-எனும் பதினான்குடன் முன் காணப்பட்ட வானவியலுமாகக் கூடிப் பதினைந்து இயல்களின் உள்ளீட்டுக் கருத்துக்கள் முன்னோட்டமாகவும் தொலை நோக்காகவும் அமைந்ததைக் கொண்டு உண்மையாகின்றது.
அறிவியல் திருவள்ளுவம்

 1. மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றுார்க்கிழார், இறையனார், ஆசிரியர் நல்லந்துவனார்
  -திருவள்ளுவமாலை.
 2. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
  -மணிமேகலை-22-61
 3. சுப்பிரமணியபாரதி, சி.
  - பாரதி கட்டுரை கலைகள் .
 4. திருஞான சம்பந்தர் -தேவா, பிரமபுரம்

 5.  நல்லத்துவனார் -பரிபாடல்-6-8
 6. காரியாசன் : சிருபஞ்சமூலம் - 12
 7. இளம்பெருவழுதியார் : பரிபாடல்-15-49.
 8. சொல்லன் அழிசி: குறுந்தொகை - 138 - 3
 9. பரஞ்சோதி முனிவர்: திருவிளை - இந்திரன் பழிதீர்த்த படலம்- 74- 1.
 10. அடியார்க்கு நல்லார்: சிலம்பு உரைப்பாயிரம்.
 11. மாங்குடி மருதனார்: மது. கா. 191.
 12. பெருங்குன்றுார் கிழார்: பதி: பதிகம்-9-11.
 13. காரியாசான்: சிறுபஞ்சமூலம்: 91-1.
 14. 1. சிவவாக்கியர் : சிவ : 203
 15. கடியலூர் உருத்திரங்கண்ணனார் :
  பெரும்பாணா: 28
 16. கபிலர் : புறம் : 110-2
 17. கடுவன் இளவெயினனார் : பரி : 7-18, 19
 18. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் : புறம் : 72-5
 19. இளங்கோவடிகள் : சிலம்பு : வழக்குரை-67,69
 20. தேரையர் : தேரையர் கரிசல்
 21. திருநாவுக்கரசர் : தேவாரம்
 22. கணைக்கால் இரும்பொறை : புறம் : 74-5
 23. கணிமேதையார் : ஏலா : 57-2
 24. பெருந்தலைச் சாத்தனார்: புறம்: 205-2
 25. நாலடியார்: நாலடி: 75-1
 26. தொல்காப்பியர் : தொல் : பொருள்-247
 27. கோவூர் கிழார் : புறம் : 68-10
 28. மாங்குடி மருதனார் : மது. கா : 66