அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்/004-006

விக்கிமூலம் இலிருந்து
முதற்பொழிவு
1. அறிவியல் நோக்கில் தமிழ் இலக்கியம்

"ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன்(று)
அமைத்தனன் சிற்பி; மற்றொன்றை
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்(று)
உயர்த்தினான்; உலகினோர் தாய்நீ!
யாங்கணே, எவரை, எங்ஙனம் சமைத்தற்(கு)
எண்ணமோ, அங்ஙனம் சமைப்பாய்;
ஈங்குனைச் சரண்என்று எய்தினேன்; என்னை
இருங்கலைப் புலவன்ஆக் குதியே.

"இடையின்றி அணுக்களெலாம் ஈழலுமென
இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்;
இடையின்றிக் கதிர்களெலாம் சுழலுமென
வானூலார் இயம்பு கின்றார்;
இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்
பொருட்கெல்லாம் இயற்கை யாயின்
இடையின்றிக் கலைமகளே! நினதருளில்
எனதுள்ளம் இயங்கொ னாதோ?”[1]

-பாரதியார்

அன்பு நிறைந்த பேராசிரியப் பெருமக்களே! மாணவச் செல்வங்களே!

வணக்கம்.

இன்று, நிமிஷகவி திரு.கே.சுப்பைய நாயுடு அறக்கட்டளை சொற்பொழிவுத் திட்டத்தில் 1997ஆம் ஆண்டுக்குரிய சொற்பொழிவுகள் நிகழ்த்த உங்கள் முன் நிற்கின்றேன். இதனைநிறுவியவர் பேராசிரியர் டாக்டர், சங்கரராஜு நாயுடு அவர்கள். இவர் தம் அருமைத் தந்தையார் நினைவாக இந்த அறக்கட்டளைச் சொற்பொழிவுத் திட்டத்தை நிறுவியவர். பேராசிரியர் டாக்டர் நாயுடு அவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்தித் துறையில் முதல் பேராசிரியர் - துறைத் தலைவராய் அமர்ந்து துறையைச் சிறப்புற வளர்த்து, ஒய்வு பெற்றவர்கள்; பல கருத்தரங்குகளை நடத்தியவர்கள்: வெவ்வேறு இடங்களில் பல்வேறு கருத்தரங்குகளிலும் இலக்கிய மாநாடுகளிலும் கலந்துகொண்டு துறைக்குப் பெரும்புகழ் ஈட்டியவர்கள். காரைக்குடியில் அடியேன் அழகப்பர். பயிற்சிக் கல்லூரியில் (1950ஆம் ஆண்டுகளில்) பணிபுரிந்த காலம் முதல் இவருடன் நெருங்கிப் பழகியுள்ளேன். பழகும் போது இன்முகத்துடன் னிமையாய் உரையாடி தண்டர்களை மகிழ்விப்பார்கள்.

நான் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் - துறைத் தலைவராய்ப் பொறுப்பேற்றிருந்த காலத்தில், அனைத்திந்திய கீழ்த்திசை மொழி மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை (ஆங்கிலத்தில்) வழங்குவதுண்டு. பேராசிரியர் டாக்டர் நாயுடு அவர்களும் தவறாமல் இம்மாநாடுகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை வழங்குவதைக் கடமையாய்க் கொண்டவர்கள். 1960-80ஆம் ஆண்டுகளில் நாங்கள் தில்லி, கல்கத்தா, சாந்தினிகேதம், வாரணாசி (உத்திரப்பிரதேசம்), தார்வார் (கர்நாடகம்), குரு சேத்திரம் (ஹரியானா), பூனா (மராட்டியம்), உஜ்ஜயினி (மத்தியப் பிரதேசம்) ஆகிய இடங்களில் நடைபெற்ற இம்மாநாடுகளில் கலந்துகொண்ட நாள்கள் இன்னும் என் உள்ளத்தில் பசுமையாகவே உள்ளன. குருட்சேத்திரத்தில் நடைபெற்ற மாநாட்டில், அடுத்த மாநாட்டுக்குத் திராவிடப் பகுதிக்கு நடைபெறும் தலைவர் தேர்தலில் என்னை வேட்பாளராய் நிற்க வைத்து வெற்றி பெறச்செய்தவர்கள். இந்தி வழங்கும் பகுதியிலிருந்து வரும் அன்பர்களிடம் இவர்தம் செல்வாக்கு நன்கு இருந்தமையால், அவர்தம் வாக்குகளால் வெற்றி பெற முடிந்தது.

இத்தகைய அன்பர் பேராசிரியரின் தந்தையார்தாம் நிமிஷ கவி.கே. சுப்பைய நாயுடு என்பார். இவர்தம் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பையும் உங்கள் முன் வைப்பது பொருத்தமாகும் என நினைக்கின்றேன். இப்பெரியார் திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலி மாவட்டத்தில், பாளையங்கோட்டையில் பிறந்து வளர்ந்து, தமிழக மாநிலத்தில் காவல் துறையில் 38 ஆண்டுகள் அரும்பணியாற்றி 1928ஆம் ஆண்டில் ஒய்வு பெற்றவர். கடைசிக்காலப்பணி சேரன்மாதேவியில், பணிக் காலத்தில் துப்பாக்கிச் சூட்டில் முதல் நிலை பெற்றவர். 1932ஆம் ஆண்டில் ஆக்ரா தயால்பாக்கில் (உத்திரப்பிரதேசம்) வாழ்ந்த 12 ஆண்டு காலத்தில் பேராசிரியர் டாக்டர் நாயுடு அவர்கள் ஆக்ரா முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பயின்று, இந்தியில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். ஆக்ராவில் வாழ்ந்த காலத்தில், கருவிலே திருவுடைய திரு. சுப்பைய நாயுடுவின் நாட்டம் ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டது. அதில் பக்குவம் அடைந்து, நல்லோர் கூட்டுறவு அதிகமிருந்தமையால் ’சத்சங்கி’ (நல்லோர் கூட்டுறவாளர்) என்று பெருமையுடன் குறிப்பிடப்பெற்றவர். இறுதி வாழ்வு தூத்துக்குடியில் (நெல்லை மாவட்டம்) 78 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்து 1946, சனவரி 30இல் திருநாடு அலங்கரிக்கும் நிலையில் இறைவனடி சேர்ந்தார்.

திரு. சுப்பைய நாயுடுவின் கவிதைத்திறன் அவருடைய இளவயதிலேயே அரும்புவிட்டுத் தளிர்த்து வளர்ந்தது. இளவேனிற்காலத்தில் வழக்கமாய் நடைபெறும் காமன் திருவிழாவில் மிகுசிறப்புடன் நடைபெறும் ‘எரிந்த கட்சி - எரியாத கட்சி’ நிகழ்ச்சியில் ஏதோ ஒரு பக்கம் சார்ந்து நின்று. நேருக்கு நேர் கவிதையில் விவாதம் செய்து மிகுபுகழ் பெற்றவர். பொது மக்களிடம் ‘நிமிஷ கவி’ என்ற விருதினைப் பெற்றவர்.

இப்பெரியாரின் நினைவாய் இவர்தம் அருமை மகனார் பேராசிரியர் டாக்டர் நாயுடு அவர்களால் இப்பல்கலைக்கழகத்தில் நிறுவப்பெற்ற அறக்கட்டளையின் சார்பாய் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதை 81 அகவையில் உள்ள அடியேன் பெரும் பேறாய்த் கருதுகின்றேன். என்னுடைய தமிழ்ப்பணியில் அறிவியல் தாக்கம் அதிகமிருப்பதை அறிந்தவர், துறைத்தலைவர் டாக்டர் ஆர். கோபாலகிருட்டினன். அவர் அறிவியல் நோக்கில் என் பொழிவு அமைய வேண்டும் என்று விரும்பியதால் என்னுடைய இரு சொற்பொழிவுகளை 

(1) அறிவியல் தோக்கில் இலக்கியம்

(2) அறிவியல் தோக்கில் சமயம், தத்துவம்

என்று அமைத்துக்கொண்டு முதற்பொழிவை இன்று நிகழ்த்துகின்றேன்.

நினைப்பிற்கும் எட்டாத நெடுங்காலமாய்த் தமிழர்கள் நாகரிகத்தில் சிறப்புற்று விளங்கினர் என்பது வரலாற்து அறிஞர்கள் ஒப்புக்கொண்ட உண்மை. அறிவியற்கலைகள் அவர்களிடம் பயன்முறைக் கலைகளாய் மிளிர்ந்தன என்பதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. இன்று மேனாட்டார் ‘சயன்ஸ்’ (Science) என்று குறிப்பதைத்தான் நாம் ‘அறிவியல்’ என்று வழங்குகின்றோம். ‘சயன்ஸ்’ என்னும் சொல் ‘அறிவு’ (knowledge) எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்வினின்றும் தோன்றியது. மனிதன் வாழும் சூழ்நிலை, சுற்றியுள்ள உலகம், பிற அண்டங்கள் முதலியவற்றின் தன்மைகளைத்தாம் அறிவியற் கலைகள் உணர்த்துகின்றன. பண்டைய தமிழர்கள் இன்று இருப்பன போன்ற அறிவியல் துறைகளைத் தனித்தனிக் கலைகளாய் வளர்த்து வைத்திருத்தனர் என்பதற்குத் தக்க சான்றுகள் இல்லாது போயினும், அவர்கள் அக்கலைகள் பற்றி ஒரளவு அறிந்திருந்தனர் என்பதற்கும், அவை அவரது வாழ்வில் பயன்முறை அறிவியல் துறைகளாய் (Applied Science) மிளிர்ந்தன என்பதற்கும் பல்வேறு இலக்கியச் சான்றுகள் உள்ளன. அவற்றினை இன்றைய பொழிவில் விளக்குவேன்.

பண்டைத் தமிழர்கள் வானநூல், உயிரியல், இயற்பியல், பொறியியல் முதலிய பல்வேறு துறைகளிலும் வல்லுநர்களாய்த் திகழ்ந்தனர் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. என்ன காரணத்தாலோ அவர்கள் இன்றுள்ளன போல் அத்துறைகளைத் தனித்தனியாக வரையறை செய்து பாதுகாக்கவில்லை. ஒருகால் அவ்வாறு வரையறுத்து வைக்கப்பட்டிருந்து அவை அழிந்துபட்டிருக்கவும் கூடும். அது எங்ஙனமாயினும், அவர்கள் அத்துறை ஷகளில் வல்லுநர்களாய் இருந்தனர் என்பது மட்டிலும் உறுதி.

நாகரிகமடைந்த நாடுகள் எங்ஙணும், நாள். திங்கள், ஆண்டுகள் ஒரே மாதிரி கணக்கிடப்பெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் பகல் முப்பது நாழிகை, இரவு முப்பது தாழிகை. ஆங்கிலக்கணக்குப்படி பகல் 12 மணி : இரவு 12 மணி. இரண்டரை நாழிகை ஒரு மணி எனக் கணக்கிடுகின்றோம். சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி. ஆவணி, புரட்டாசி. ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என மாதங்கள் பன்னிரண்டாய்க் கணக்கிடுதல் தமிழ் மரபு. கலியுகாதி, சாலிவாகன. ஹிஜ்ரி, கொல்லம், பாத்ரபத, தட்சிணாயனம் என்ற முறைகளில் ஆண்டுக்கணக்கு ஏட்டு முறையில் பஞ்சாங்கத்தில் இருந்து வருகிறது. அண்மையில், திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைக்குக் கொண்டுவரும் முயற்சி நடைமுறையில் உள்ளது. ஆனால், கி.மு. கி.பி. என்னும் ஆங்கில முறைதான் புழக்கத்தில் இருந்து வருகின்றது. வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முறை இதுவேயாகும். இதுடன் இது நிற்க.

பண்டைய அறிவியலறிஞர்கள்

உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர், அறிவியலறிஞர்கள் அக்காலத்தில் திகழ்ந்தனர் என்பதை,

“செஞ்ஞா யிற்றுச் செலவும்அஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந்து அறிந்தோர் போல என்றும்
இனைத்துஎன் போரும் உளரே”[2]

(செலவு - வீதி, பரிப்பு - இயக்கம்: மண்டிலம் - வட்டம்; வளி - காற்று; வறிது நிலைஇய் - 'ஆதாரமின்றித் தானே நிற்கும்' காயம் - ஆகாயம்; இனைத்து - இத்துணை அளவு)

"ஞாயிற்றின் வீதியும், அந்த ஞாயிற்றினது இயக்கமும், அவ்வியக்கத்தால் சூழப்படும் பார் வட்டமும், காற்று இயங்கும் திக்கும், ஓர் ஆதாரமுமின்றித் தானே நிற்கும் ஆகாயமும் என்று சொல்லப்பெற்ற இவற்றை ஆண்டாண்டு போய் அளந்தறிந்தவர் களைப்போல் நாளும் இத்துணையளவையுடையன என்று சொல்லும் கல்வியுடையோரும் உளர்" என்ற புலவர் கூற்றில் அத்தகைய அறிஞர்கள் இருந்தமை பெறப்படுகின்றது.
1. வானநூலறிவு

பண்டையோர் வானநூல் துறையில் அறிவுமிக்கு விளங்கினர் என்பதைப் புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களால் அறிகின்றோம். விண்ணில் மதி செல்லும் வழியாகிய வட்டத்தை இருபத்தேழு பிரிவுகளாய்ப் பிரித்து, அப்பிரிவுகளை அறிந்து கொள்ளும் அடையாளமாய் “எறிகடல் ஏழின் மணல் அளவாக”வுள்ள விண்மீன்களுள் இருபத்தேழு விண்மீன் தொகுதிகளைக் குறித்து அமைத்தனர், பண்டைய அறிஞர்கள். புறநானூற்றில் "மதி சேர் நாண்மீன் போல்”[3] என வரும் சொற்றொடருக்கு உரையாசிரியர் திங்களைச் சேர்ந்த நாளாகிய மீனையொப்ப எனக் கூறும் உரையால் இதனையறியலாம். குமணனின் வள்ளன்மையை விளக்க வந்த இடத்தில் வருவது இது, பொன்னால் செய்யப்பெற்ற நன்கலத்தில் உணவும், அதனைச் கற்றி வைக்கப்பெற்ற வெள்ளியால் செய்யப்பெற்ற பல சிறு சிறு கலங்களில் கறியமுதும் படைக்கப்பெற்றதாய் விளக்குவார், பெருஞ் சித்திரனார். தொண்டைமான் இளத்திரையன் விருத்தோம்பலைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,

"மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி
முகனமர்ந்து ஆனா விருப்பிற் றானின் றூட்டி
மங்கும் வானத்துத் திங்கள் எங்கும்”[4]

என்று விளக்குவர்.

கோள்களின் இயக்கத்தால் இயற்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். வெள்ளி என்பது ஒரு மழைக்கோள். அது தெற்கே விலகியிருப்பது மழை இல்லாமைக்கு அறிகுறி என்னும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

“வெள்ளி தென்புலத் துறைய விளைவயல்
பள்ளம் வாடிய பயனில் காலை”[5]

என்ற மள்ளனார் பாடற்பகுதி விளக்குகின்றது. இதைப் போலவே வால் வெள்ளி தோன்றுவதும், சனி மீன் (கோள்?) புகைவதும், எரிகொள்ளி வீழ்தலும் தீக்குறிகளாய்க் கொள்ளப் பெற்றிருந்தன. இவற்றை,

"மைம்மீன் புகையினும் துரமம் தோன்றினும்
தென்திசை மருங்கில் வெள்ளி ஓடினும்
வயலகம் நிறையப் புதற்பூ மலர” [6]
(மைம்மீன் - சனி, துர்மம் - வால் மீன்)

என்ற பாட்டின் பகுதியால் அறியலாம். பாரியின் நாடு புன்புலமானது கண்டு வருந்தி வந்த கபிலர். அவன் மகளிர் இருந்த பார்ப்பார் மனையடைந்து தாம் கண்டதைக் கூறுகின்றார். 'இம்மகளிர்க்குத் தந்தையாகிய வேள்பாரியின் நாடு அவன் இருந்த காலத்தில் அவன் செங்கோன்மையால் மழை பிழையாது இருந்தது; சான்றோர் பலர் நிறைந்ததாய் இருந்தது; அத்தகைய நாடு இன்று ‘பெயல்பிழைப் பறியாப் புன்புலத்த தாயிற்று' என்று இரங்கிப் பாடியதே இப்பாடல்.

இதே கருத்து சிலப்பதிகாரம் நாடுகாண் காதையிலும்,

"கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்"[7]

(கரியவன் - சனி; புகைதல் - பகை வீடுகளில் சென்று மாறுபடுதல்; புகைக்கொடி -தூமகேது)

என்ற அடிகளால் அறிகின்றோம். 'சனி புகைதலாவது இடபம், சிங்கம், மீனம் இவற்றோடு மாறுபடுதல்; இவற்றுள் சனி தனக்குப் பகை வீடாகிய சிங்க ராசியிற் புகின் உலகிற்குப் பெருந்தீங்கு விளைவிப்பான் என்பதை மகத்திற் புக்கதோர் சனி எனக் காணாய் (தேவாரம் 7.54:9) என்பதனால் உணர்க.[8] தூமம் புகைக்கொடி என்றும் கூறப்படும்; தூமகேது என்பதுவும் இதுவே: வட்டம், சிலை, நுட்பம், தூமம் என்னும் கரந்துறைகோள்கள் நான்கனுள் ஒன்று; இதன் தோற்றம் உலகிற்குப் பெருந்தீங்கு விளைவிக்கும் என்பர்"[9]என்ற உரைப்பகுதி இதனை நன்கு விளக்குகின்றது. கோள்களின் முரணிய நிலையில் உலகின் பிற பகுதிகளில் மழை இல்லையாயினும் குடகு மலையில் மழை பெய்வதும், காவிரியில் நீர் பெருக்கெடுத்து வருவதும் காவிரியின் தப்பா எனக் காவிரியின் சிறப்புக் கூற வேண்டிய இடத்தில் இக்கருத்து வருகின்றது.

"குளமீ னொடு தாட்புகையினும்
மிக்க வானுள் எரிதோன்றினும்”[10]

என்ற புறநானூற்றுப் பாடற்பகுதியும், "எரி, குளமீன், தாள் என்பன வான் மீன் விசேடங்கள்; இவை முறையே தோன்றுதலும் புகைதலும் உலக வறுமைக்கு ஏதுக்கள்” என்ற அதன் உரைப்பகுதியும் இக்கருத்தினை உணர்த்துகின்றது.

இன்னோரன்ன குறிப்புகளினின்று பண்டைத் தமிழ் மக்கள் கோள்களின் நிலையிலிருந்து மழை முதலியவற்றை அறியும் குறிநூற்புலமையுடையவராயிருந்தனர் என்பது பெறப்படுகின்றது.

சோதிடக்கலை: சங்கப் புலவர்களுள் சிலர் கணியர்களாகவும் இருந்தனர். "விளைவெல்லாம், கண்ணியுரைப்பான் கணி” என்பது புறப்பொருள் வெண்பாமாலை.[11]

கூடலூர்கிழார் என்ற புலவர் ஒரு கணி. மலை நாட்டிலுள்ள கூடலூரை இருப்பிடமாய்க்கொண்டு வாழ்ந்த புலவர். [12]இவருடைய பாடல்கள் இன்சுவையை நல்குபவை. இவர் ஒரு நாள், வானத்தில் ஒரு விண்மீன் தீப்பறக்கக் காற்றால் பிதிர்ந்து கிளர்ந்து வீழ்ந்தது கண்டார். கார்த்திகை, அனுடம், உத்தரம், மிருகசீரிடம் முதலிய விண்மீன்களின் நிலையினையும் கண்டார். இந்த நிகழ்ச்சிக்கு ஏழாம் நாளில், உலகாளும் வேந்தன் உயிர் நீப்பன் என்று உணர்ந்தார். அந்த வேந்தன் தம்மை ஆதரித்த கோச்சேரமான் யானைக்கண்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பானாக இருந்ததனால் கலக்கம் எய்தினார். அவர் கலங்கியவாறே ஏழாம் நாளில் சேரமான் விண்ணாடு புக்கான். இதற்கு அறிகுறியாய் “உற்பாதங்களாய் - யானைகள் கையை நிலத்தே நீட்டி வைத்து உறங்கின; முரசும் தானே கண் கிழிந்து போயிற்று; வெண் குற்றக் குடை கால் துணிந்து வீழ்ந்தது; குதிரைகள், செல்லும் கதியின்றிக் கிடந்தன. இத்தி நிமித்தங்கள் வேந்தனின் இறுதியை வலியுறுத்தின. இவற்றால் மனம் அழுங்கிய கவிஞர் பெருமான் இந்நிகழ்ச்சிகளை ஓர் அழகிய பாடலில் எடுத்தோதி மனம் வெதும்புகின்றார். அந்த அழகிய பாடல் இது :

“ஆடிய அழல்குட்டத்து
ஆரிருள் அரை இரவின்
முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் கயம்காயப்
பங்குனியுயர் அழுவத்துத்
தலைநாண்மீன் நிலைதிரிய
நிலைநாண்மீன் அதனெதிர் ஏர்தரத்
தொல்நாண்மீன் துறைபடியப்
பாசிச் செல்லா தூசி முன்னாது
அளக்கர்த்திணை விளக்காகக்
கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால் விசும்பி னானே
அதுகண்டு, யாமும் பிறரும் பல்வேறு இரவலர்
பறையிசை அருவி நன்னாட்டுப் பொருநன்
நோயில னாயின் நன்றுமற் றில்லென
அழிந்த நெஞ்சம் அடியுளம் பரப்ப
அஞ்சினம்; எழுதாள் வந்ததன்று இன்றே
மைந்துடை யானை கைவைத்து உறங்கவும்
திண்பிணி முரசம் கண்கிழிந்து உருளவும்
காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்
காலியற் கலிமாக் கதியின்றி வைகவும்
மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்
ஒண்டொடி மகளிர்க்கு உறுதுணை யாகித்
தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ

பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு
அளந்துகொடை அறியா ஈகை
மணிவரை அன்ன மாஅ யோனே”13[13]

(ஆடு - மேடராசி; அழற்குட்டம் - கார்த்திகை; அரை இருள் -- பாதி இரவு, முடப்பனை - முடப்பனைபோலும் வடிவையுடைய அனுட நாளில்; வேர் முதலா - வெள்ளி முதலாக; கடைக்குளம் - புனர்பூசம்; கடைகாய - கடையில் வெள்ளி எல்லையாக; பங்குனி உயர் அழுவம் - பங்குனியின் முதற் பதினைந்தின்கண்; தலைநாண்மீன் - உத்தரம்; நிலைநாண்மீன் - மூலம்; தொல்நாண்மீன் - உத்திரத்துக்கு முன் சொல்லப் பெற்ற எட்டாம் மீன் - மிருகசீரிடம்; பாசி - கீழ்த்திசை; ஊசி - வடதிசை; அளக்கர் - கடல்; எரி - தீ; கால் - காற்று; ஒரு மீன் - வீழ்கொள்ளி; பொருநன் - வேந்தன்; அழிந்த - இரங்கிய; மைந்து - வலிமை; கால் பரிந்து - கால் துணிந்து; கலிமா - குதிரை; மேலோர் உலகம் - உம்பர் உலகம்; ஆயம் - மகளிர் கூட்டம்; நசைவர்க்கு - நச்சியோர்க்கு; ஈகை - வண்மை; மணிவரை - நீலமலை)

இந்தப் பாடலைச் சற்று மேலோட்டமாய் விளக்குதல் இன்றியமையாததாகின்றது. இப்பாடலில் அழல்சேர் குட்டம் என்பது கார்த்திகை நாள். “அக்கினியை அதிதேவதையாய் உடைமையின், கார்த்திகைக்கு அழல் என்பது பெயராயிற்று. ஆடு முதல் மீன் (மேடம் முதல் மீனம்) இறுதியாய் உள்ளவை பன்னிரண்டு இராசி. அசுவினி முதல் இரேவதி ஈறாயுள்ள நாள் (நட்சத்திரம்) இருபத்தேழு. இந்த இருபத்தேழு நட்சத்திரங்களையும் இராசி பன்னிரண்டற்கும் வகுத்து அளித்தால் முதல் இரண்டே கால் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் கால்பகுதி) நட்சத்திரம் ஆடாகிய மேடத்திற்கு உரியதாகின்றது. ஆதலின், கார்த்திகையின் முதல் கால் பகுதியை ‘ஆடியல் அழல் குட்டம்’ என்றார், கவிஞர். அனுடம் என்பது ஆறு மீன்களின் தொகுதி. அது வளைந்து பனைமரம் போல் அமைந்திருத்தலின் ‘முடப்பனை’ என்று அதனைக் குறித்தார். வேர் முதலா - அடியின் வெள்ளி; அஃதாவது, முதல் நாண்மீன். உயரழுவம் என்பது முதற்பதினைந்து நாள். தலைநாண்மீன் -


உத்தரம். நிலை நாண்மீன் - எட்டாம் மீன்: “உச்சிமீனுக்கு முன் எட்டாவது அத்தமித்தலும் பின் எட்டாவது மீன் உதித்தலும் இயல்பு”, “உச்சிமீனுக்கு எட்டாம் மீன் உதயமீன்” என்று சொல்லுவர். தொன்னாண்மீன் - எட்டாம் மீனாகிய மிருகசீரிடம். ‘பாசி’ என்பது கிழக்குத் திசையையும் ‘ஊசி’ என்பது வடக்குத்திசையையும் குறிக்கின்றன. “பங்குனித்திங்களில் நட்சத்திரம் வீழின் இராசபீடை” என்பது மக்கள் நம்பிக்கை. “ஆடுகயல் தேள்தனு சிங்கத் தெழுமீன் வீழுமேல் அரசழிவாம்” என்று மற்றொரு நம்பிக்கை. கயமாகிய குளம் என்றது கயக்குளம் என்பதாகும். அஃதாவது, புனர்பூசம். இது குளம் போலும் வடிவையுடையது. இதுபற்றியே பிங்கலந்தை (நிகண்டு)யும் “அதிதிநாள் கழையா மண்மேரி, புனர்தங் கரும்பிவை புனர்பூச மாகும்” என்று கூறியுள்ளது.

இதுகாறும் கூறியவை சோதிடக் கலையின் அடிப்படையில்தான். இதன் வளர்ச்சிபற்றிச் சிறிது கூறுவேன்: பண்டைக் காலத்தில் பூமியைச் சூரியன் சுற்றுவதாய் நம்பிக்கை இருந்து வந்தது. அறிவியல் வரலாற்றாலும் கலிலியோ என்ற அறிவியல் அறிஞரும் இக்கருத்தைக் கொண்டிருந்தார் என்பது அறியக்கிடக்கின்றது.

சூரியன் பூமியைச் சுற்றும் பாதையை இராசி மண்டலம் என்று வழங்குவர். சோதிடர் சதுரமாய்க் கட்டம் அமைத்து. அதில் நான்கு பக்கங்களிலும் அடியிற்கண்டவாறு நான்கு வீடுகள் அமைப்பர்.

சுற்று வழி வட்டமாய் இருப்பதால் அதனை வட்டமாய் அமைத்து, அதனைப் பன்னிரண்டு பகுதிகளாய்ப் பிரித்துக் காட்டுவதே முறை. ஒவ்வொரு பகுதியும் 30° அமைந்த வட்டக் கோணப்பகுதி (Sector) எனப்படும். இந்தப் பகுதியில் 30° க்கு நேராயுள்ள வில் (Arc) பகுதி சூரியன் செல்லும் பாதையாகும். இதனைக் கடக்க ஒரு மாதம் ஆகிறது. பன்னிரண்டு பகுதிகளையும் கடக்க ஓராண்டு காலமாகின்றது. இந்த அடிப்படையில் சித்திரை மாதத்தில் சூரியன் மேடத்தில் இருப்பார்: பங்குனி மாதத்தில் அவர் மீனத்தில் இருப்பார். ஒவ்வொரு கோளும் (திங்கள், செவ்வாய், புதன் முதலியவை)14[14] பூமியைச் சுற்றி வர வேறு வேறு காலங்கள் ஆகும். சூரியன் பூமியைச் சுற்றி வர ஓராண்டு காலம் ஆவதைப் போலச் சனி, ஒரு சுற்று சுற்றி முடிக்க முப்பது ஆண்டு காலம் ஆகும். ஆகவே சனி ஒவ்வொரு வீட்டிலும் இரண்டரை ஆண்டு இருப்பார். ஒருவர் பிறக்கும்போது சூரியன் இருக்கும் இடம் ஜன்ம லக்னம் ஆகும். சந்திரன் இருக்கும் வீடு இராசி லக்னம் (கோசார முறையில்) எனப்படும். இராசி லக்னத்திற்கு எட்டாம் வீட்டில் சனி இருப்பின் அஃது அஷ்டமத்துச்சனி பிடித்ததாய்ச் சொல்லுவர். இஃது இரண்டரை ஆண்டு காலமாகும். இராசிலக்னத்திற்கு முன்வீட்டிலும், இராசிலக்னத்திலும், இராசி லக்னத்திற்குப் பின்வீட்டிலும் சனி இருக்கும் காலம் ஏழரையாட்டைச் சனி என்று வழங்குவர். நளனுக்குப் பிடித்தது ஏழரையாட்டுச்சனி என்பது கதை. இவற்றிற்கெல்லாம். சோதிடக் கலையின் அடிப்படையில் பலன் சொல்லப்படும்.

கலிலியோவிற்குப் பின் வந்த கோப்பர்னிகஸ் என்ற அறிவியலறிஞர், பூமி சூரியனைச் சுற்றுகின்றது என்று மெய்ப்பித்தார். ஆகவே, பூமி செல்லும் பாதையே இராசி மண்டலமாகிறது. பூமி சூரியனைச் சுற்றிவர ஓராண்டு காலம் ஆகின்றது. பூமி சூரியனைச் சுற்றிவரும்போது பூமியைச் சுற்றி வரும் சந்திரனும் சேர்ந்து சூரியனைச் சுற்றுகின்றது. பூமி சூரியனைச் சுற்றி வரும் ஓராண்டு காலத்தில் சந்திரன் பூமியைப் பன்னிரண்டு முறை சுற்றுகின்றது. சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றி வரும் காலத்தை மாதம் என்று வழங்குகின்றோம். பூமி தன்னைத் தானேயும் சுற்றிக்கொண்டுள்ளது. இவ்வாறு சுற்றும் காலம் ஒரு நாள் ஆகும். பூமி சூரியனை நோக்கியிருக்கும் பகுதி பகல்; நோக்காதிருக்கும் பகுதி இரவு. .
பூமியும் சந்திரனும் சேர்ந்து சூரியனைச் சுற்றுவதையும் சந்திரன் பூமியைச் சுற்றுவதையும் நான் ஓர் உவமையால் விளக்குவது வழக்கம். பெண் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் ஒருத்தி, நடக்கும் நிலையில் உள்ள தன் மகளுடன் ஓர் அரச மரத்துப் பிள்ளையாரைச் சுற்றி வருவதை உவமையாய்க் கொண்டு விளக்குவேன். அரசமரத்துப் பிள்ளையார், சூரியன்: பெண்மணி, பூமி; தாயின் முன்றானையைப் பிடித்துக்கொண்டு தாயைச் சுற்றி வரும் மகள் சந்திரன். இப்போது விளக்கம் முழுமையடைகின்றது அன்றோ?

நாள் என்ற கருத்தை வள்ளுவப்பெருந்தகை சுட்டுவதையும் ஈண்டுக் குறிப்பிட்டுச் செல்வேன்.

“நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.”[15]

(குறள் - 334)

என்பது வள்ளுவம். இதற்குப் பரிமேலழகர் கூறும் உரை அற்புதமானது.

“காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாய் வழங்கப்படுவதல்லது தானாய்க் கூறுபடாமையின் ‘நாளென ஒன்றுபோல்’ என்றும், அது தன்னை ‘வாள்' என்று உணரமாட்டாதார் ‘தமக்குப் பொழுது போகாநின்றது’ என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் ‘காட்டி’ என்றும், இடைவிடாது ஈர்தலான் ‘வாளின் வாயது’ என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியராகலின் ‘உணர்வார்ப்பெறின்’ என்றும் கூறினார். உயிரென்னும் சாதி ஒருமைப்பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது, ஈரப்படுவது அதுவேயாகலின், வாள் என்பது ஆகுபெயர். இனி இதனை நாள் என்பது ஒரு பொருள் போலத் தோன்றி உயிரை ஈர்வதொரு வாளாம் என்று உரைப்பாரும் உளர் (மணக்குடவர்). ‘என’ என்பது பெயரன்றி இடைச்சொல் ஆகலானும், ‘ஒன்று போல் காட்டி’ என்பதற்கு ஒருபொருட்சிறப்பு இன்மையானும், ‘அது’ என்பது
குற்றியலுகரம் அன்மையானும் அஃது உரையன்மை அறிக” என்பது மறுப்பு உரை.

காலம் என்பது அருவமாய் நிற்கும் ஒரே திரவியம். அதனை அளப்பதற்கு ஒரு கருவியும் இல்லை. ஆதித்தன் முதலிய கருவிகளால் கூறுபட்டதாய்க் கொள்ளப்படுவது. ஒருவித மயக்க நிலையேயாகும். படிப்பறியாத பால்காரி, சாணியால் கோடிட்டு வழக்கமாய் ஊற்றி வழங்கும் ஓர் அளவிற்கு அறிகுறியாய் நிற்பது போல’ என்று சொல்லி வைக்கலாம். ‘ஒரு வித மயக்கம்’ என்பதை இன்னொரு செயலாலும் விளக்கலாம். எழும்பூர் நிலையத்திலிருந்து பகல் பன்னிரண்டரை மணிக்குப் புறப்படும் ‘வைகை’ என்னும் விரைவு வண்டியில் பயணம் செய்யும் ஒருவர் பத்தரை மணிக்கே நிலையத்திற்கு வந்துவிட்டால் அவருக்கு இரண்டு மணி நேரம் கழிவது ‘காலம் மெதுவாய்ப் போகிறது போல்’ தோன்றும். அவரே வண்டி கிளம்புவதற்குப் பத்து மணித்துளிக்கு முன் வந்துகொண்டிருந்தால் ‘எங்கு வண்டி போய்விடுமோ?’ என்று மனம் பதறும்போது இந்தக் குறுகிய காலமாகிய ‘பத்து மணித்துளிகள்’ என்னும் காலம் விரைவாய் ஓடுவதுபோல் தோற்றமளிக்கும். ‘மெதுவாய்ப் போவதும்’ ‘விரைவாய் ஓடுவதும்’ மனத்தில் எழும் ‘மாயத்தோற்றங்களே’ என்பதை ஆழ்ந்து உணர வேண்டியதொன்றாகும்

அகிலம் : வெட்டவெளியும் அதனுள் அடங்கியிருக்கும் அண்டங்கள் யாவும் சேர்ந்ததுதான் அகிலம் (Universe) என்பது. கோடிக்கணக்கான விண்மீன் மண்டலங்களும், அவற்றினின்றும் விடுபெற்ற தனித்தனி மண்டலங்களும் வால்மீன்களும் (Comets) விண்கற்களும் (Meteorites) எண்ணற்றவை கதிரவன் மண்டலத்தைச் கற்றிச் சுழன்றுகொண்டுள்ளன. இவற்றின் பிறப்பு, மூப்பு, சாக்காடு இவை பற்றிய செய்திகளை இன்றைய வான நூல் வல்லுநர்கள் அறிந்து வெளியிட்டுள்ளனர். மணிவாசகப் பெருமான் இந்த அகிலத்தைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளதை ஈண்டுச் சித்திக்கலாம்.

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரித்தன”[16]
(பிறக்கம் - பெருக்கம், எழில் - எழுச்சி)
என்பது அப்பெருமானின் திருவாக்கு. இதனை விளக்குவேன். உருண்டு திரண்டு நெருப்புக்கோளமாய் (வாயு நிலையில்) இருப்பது சூரியன். அதனிடமிருந்து சிதறி வந்து குளிர்ந்து இறுகி இருப்பது இந்த நிலவுலகம். அதே விதத்தில், சுத்த சைதன்யமாயிருப்பது சிவம். அந்தச் சிவனிடத்திலிருந்து சடசக்தி வந்துள்ளது. சடசக்தி ஐம்பெரும் பூதங்களாலாகியது. அவற்றிலிருந்து (அந்தப் பூதங்களிலிருந்து) எண்ணிறந்த அண்டங்கள் தோன்றின. அவை யாவும் சிவபெருமானுக்கு உடலாய் அமைந்துள்ளன.[17] ஆதலால், அவற்றைத் 'திரு அண்டம்' என வழங்குதல் சிறப்பு. அண்டம் என்ற சொல் உருண்டை அல்லது முட்டை வடிவில் இருப்பது எனப் பொருள்படுகின்றது. இந்தப் பேரண்டம் எண்ணிறந்த கோளங்களையுடையது. அந்தக் கோளங்களின் தன்மைகளை முற்றிலும் தெரிந்துகொள்ள இயலாது. ஆராய்ந்து நோக்கினால் அவற்றின் அழகும் சீரமைப்பும் கண்டு வியப்படைவதற்கு உரியவைகளாயுள்ளன. ஒவ்வொரு கோளத்திலும் ஒரு தனியழகு பொலிகின்றது என்பதை விளக்கிச் சொல்லுமிடத்துக் கோடிக் கணக்கில் அவை அகண்டாகாரத்தில் விரிந்து பெருகுகின்றன.

இந்த அண்ட கோளக் காட்சி நமக்குப் புலப்படுவதை ஒர் உவமையால் விளக்குவர், வாதவூரடிகள்.

"இன்நுழை கதிரின் துன்அணுப் புரைய
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்" [18].

என்பது அவர் விளக்கம். இதனை விளக்க வேண்டியது இன்றியமையாததாகின்றது. ஒரு சிறிய துவாரத்தில் வீட்டுக்குள் வருகின்ற கதிரவன் ஒளியில் அணுப்போன்ற துகள்கள் - தூசிகள் - அலைந்து திரிவன நம் ஊனக் கண்ணுக்கும் தென்படுகின்றன. அது போலவே, கோளங்கள் வானத்தில் மிதந்து கொண்டுள்ளன. சிறியதாகிய அணுவுக்கும் பெரியதாகிய அண்டத்திற்கும் அமைப்பு ஒன்றேயாகும். ஆராய்ந்து பார்ப்பவர்க்கு இவ்வுண்மை தெளிவாகும். நாளைய பொழிவில் இதனை விளக்கவேன்.

இல்லத்தினுள் காற்றில் மிதந்துகொண்டு இருக்கின்ற தூசிகள் போன்றவை பூமி, சந்திரன், சூரியன் முதலிய கோளங்கள். தூசிகள் தமக்கு அற்பமானவையாய்த் தோன்றுவன போன்று இறைவனுக்கு அண்ட கோளங்கள் அற்பமானவைகளாகும். இறைவனைப்பற்றிய பேருணர்வு நமக்கு வரும்போது நமது உடலைப்பற்றியோ, நிலவுலகைப்பற்றியோ கவலையொன்றும் நமக்கு உண்டாகாது.

இறைவனது சொரூபத்தின் பாங்குகளையும் குறிப்பிடுகின்றார், மணிவாசகப் பெருமான்.

"வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்"

[19]

(வேதியன் தொகை - நான்முகர்களின் கூட்டம், மாலவன் மிகுதி - விட்டுணுவின் சேஷம்; தோற்றம் - படைப்பு: சிறப்பு - காப்பு: ஈறு - அழித்தல்; மாப்பேர் - மகாப்பிரளயம்)

எண்ணிறந்த நான்முகர்களும் அவர்கட்கெல்லாம் சேஷமாய் இருக்கும் திருமாலும், படைப்பு காப்பு அழிவு ஆகிய முத்தொழில்களும் மகாப்பிரளயமும் அதன் இருப்பும் முடிவும் ஆகிய இவை யாவும் இறைவனுடைய பாங்குகளாகும்.

சீவர்களுள் தலையாயவன் படைத்தற்கடவுளாகிய நான்முகன். ஒரு நான்முகன் கிரமமுக்தியடையும் பொழுது மகாப்பிரளயம் வருகின்றது. இங்ஙனம் நான்முகக் கடவுளர்கள் கணக்கற்ற பேர் தோன்றவும் ஒடுங்கவும் செய்கின்றனர். நான்முகர்கட்கு ஆதிமூலமாய் இருப்பவர், திருமால். ஆதலால், அவர் சேஷன் அல்லது எஞ்சியிருப்பவர் எனப்படுகின்றார்.தோன்றாதும் மறையாதும் இருப்பதால் சொரூபத்தில் சங்கரனும் நாராயணனும் ஒன்றேயாகும். மகாப்பிரளயம் உண்டாதலும் அது நீங்குதலும் எல்லாம் ஈசனுடைய "அலகிலா விளையாட்டுகளாம்." இவ்விடத்தில் ’நாராயாண’ உபநிடதத்தின் மந்திரத்தையும் சிந்திக்கலாம்.

"நாராயணன் பரப்பிரம்ம தத்துவமாகின்றான். முழுமுதற் பொருள் நாராயணன். பரஞ்சோதியாயிருப்பவன் நாராயணன், பரமாத்மாவாய் இருப்பவன் நாராயணன்."[20]

சங்கரனும் நாராயணனும் ஒன்றே என்பது அருமறையின் அமுதவாக்கு. அருமறையில் மெய்ப்பொருளுக்குக் கொடுத்துள்ள பல பெயர்களுள் 'நாராயணன்' என்பதும் ஒன்றாகும். நாரா - தன்னிடத்திலிருந்து தோன்றி வந்துள்ள பஞ்சபூதங்களுக்கும் அவற்றின் காரியமாகிய சகத்துக்கும்; அயனன் - தங்கும் இடமாய் இருப்பவன். நாரா + அயனன் - நாராயணன் என்பது அப்பெயரின் பொருளாகும். இந்தத் தத்துவத்தைப் புராணம் உருவகப்படுத்தி இயம்புகின்றது. நாராயணனுடைய உந்திக் கமலத்தினின்று நான்முகன் தோன்றி வந்துள்ளான் என்பது புராண வரலாறு.

"மெய்ப்பொருள்தான் வேத
முதற்பொருள்தான், விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாராயணன்"[21]

என்ற திருமழிசையாழ்வாரின் கருத்தையும் ஒப்பு நோக்கி உணரலாம். இந்தப் புராண வரலாற்றை மங்கை மன்னன் "உந்திமேல் நான்முகனைப் படைத்தான், உலகு உண்டவன்”[22] என்று குறிப்பிடுவார்.

தொடர்ந்து மணிவாசகர் கூறுவார்:

"படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போற் காக்கும் கடவுள் காப்பவை கரப்போன், கரப்பவை கருதாக்

கருத்துடைக் கடவுள் திருத்தகும்”.[23]

 1. பாரதியார் : பாஞ்சாலி சபதம், (இரண்டாம் பாகம்) - 205, 206
 2. 2 புறம் - 30 அடி - 1-7)
 3. 3 புறம் - 160, அடி-8.

 4. 4 பெரும்பாண். அடி - 477 - 480.
 5. 5. புறம் - 388, அடி 1-2
 6. 6. புறம் 117, அடி 1-3

 7. 7. சிலப்.10; அடி 102-3
 8. 8. விண்மீன்களுள் மகம், பூரம், உத்திரத்தின் முதல் கால்பாகம் ஆகியன சிங்கராசிக்கு உரியவை.
 9. 9. சிலப்.10. அடி 102-3 என்பதன் அடியார்க்கு நல்லார் உரைப்பகுதி.
 10. 10. புறம் - 395, அடி 34-35
 11. 11. புறப்.வெண்.மாலை-174
 12. 12. இவர் புலத்துறை முற்றிய கூடலூகிழார் என்று ஆன்றோரால் சிறப்பித்துக் கூறப்பெற்றவர். ஐங்குறுநூறு என்ற தொகை நூலைத் தொகுத்தவர் இவரே.
 13. 13 புறம் - 229
 14. 14 கோள்களின் பெயரையே நாள்களின் பெயராய் அமைத்தனர்.
 15. 15 - நிலையாமை - 4
 16. 16. திருவா - திருவண்டப் பகுதி - அடி 1-4
 17. 17vவைணவ தத்துவத்தின் சரீர சரீரி பாவனையை இதனுடன் ஒப்பிட்டு உணரலாம்.
 18. 18 .திருவா - திருவண்டப்பகுதி, அடி 5-6
 19. 19. திருவாச திருவண்டப்பகுதி, அடி 7-9.
 20. மகா நாராயனோபநிடதம் 24-13 : 4
 21. நான். திருவந் 13
 22. நான். திருவந் 13
 23. திருவா - திருவண்டப்பகுதிகள் - அடி 13-16
அனைத்தையும் படைப்பவனாகிய நான்முகன் தொல்லோன் - பழையோன் - ஆகின்றான்; படைக்கப்பட்டவற்றைக் காப்பவன். திருமால்: காக்கப்பெற்றவற்றைத் துடைப்பவன் உருத்திரன். இம்முத்தொழில்களில் கருத்தைச் செலுத்தாது உயர்ந்த நிலையில் இருப்பவன். பரமசிவம்.

மும்மூர்த்திகளும் மூன்று செயல்களைச் செய்கின்ற பொழுது அவர்கள் சீவர்களாகின்றனர். ஏனெனில், செயல் சீவகர்கட்கே உரியதாகின்றது. மேலும், மனத்தோடு கூடியிருப்பவர்கள் சீவர்கள். மனதற்ற நிலையில் சீவர்களது சீவபோதம் ஒழிகின்றது. சிவபோதத்தின் கழிவை முன்னிட்டே மும்மூர்த்திகளுக்கு அழிவு என்று சொல்லப்பெறுகின்றது. ஆனால், அம்மும்மூர்த்திகளிடமிருக்கின்ற ஆன்ம சைதன்யமோ அழிவதில்லை. ஆன்ம சைதன்யமே சுத்த சைதன்யம். அது "பரமசிவம்” எனப்படுகின்றது. அதுவே கருதாக் கருத்துடைக் கடவுள்.

இவ்விடத்தில் தாயுமான[1] அடிகளின் ’பொருள் வணக்கம்’ என்ற தலைப்பில் உள்ள பன்னிரண்டு பாடல்களுள் ஒன்றனை கண்டு சித்தித்தல் பொருத்தமாகின்றது

"அகர உயிர் எழுத்தனைத்தும் ஆகி, வேறாய்

அமர்ந்தது.என அகிலாண்டம் அனைத்தும் ஆகிப்

பகர்வனஎல் லாம்ஆகி, அல்லது ஆகிப்

பரம்ஆகிச் சொல்லரிய பான்மை ஆகித்

துகளறுசங் கற்பவிகற் பங்கள் எல்லாம்

தோயாத அறிவுஆகிச் சுத்தம் ஆகி

நிகர்இல்பசு பதியான பொருளை தாடி

தெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம்"
மேலும், அப்பர் பெருமானின்,

"நூறு கோடி பிரமர்கள் நொத்தினார்
ஆறு கோடி தாராயணர் அங்கனே
ஏறுகங் கைமணல் எண்ணின் இந்திரர்
ஈறுஇல் லாதவன் ஈசன் ஒருவனே." 25

என்ற திருப்பாடலும் நினைவிற்கு வருகின்றது.

இவ்வுலகிலுள்ள 92 தனிமங்களின் அணுக்களும் தம் மொடுதாமும் பிறிதுமாய்ச் சேர்ந்து அணுத்திரளைகள் ஆகிய திரட்சியே அண்டங்கள் என்பது அறிவியலார் ஆய்ந்து கண்ட உண்மையாகும். இந்த உண்மையினையே கவிஞர் பரஞ் சோதியார்,

"அண்டங்கள் எல்லாம் அணுவாக
அணுக்கள் எல்லாம்
அண்டங்க ளாகப் பெரிதாப்ச்
சிறிதாயி னானும்
அண்டங்கள் உள்ளும் புறம்பும்
 கரியாயி னானும்
அண்டங்கள் ஈன்றான் துணை என்பர்
அறிந்த நல்லோர்." 26

என்று அநுபவ இயலாய்க் கூறியுள்ளமையைக் கண்டு மகிழ்கின்றோம்.

மணிவாசகப்பெருமான் இந்த அண்டங்கள் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன என்று கூறியுள்ள கருத்தை மகாக்கவி பாரதியார் வேறொரு விதமாய்க் கூறுவார்:

"நக்கபி ரான் அருளால் - இங்கு
நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்
தொக்கன அண்டங்கள் - வளர்
தொகைபல கோடிபல் கோடிகளாம்!
இக்கணத் தெவரறிவார் - புவி
எத்தனை யுளதென்ப தியாரறிவார்!
நக்க பிரான்அறிவான்; -மற்று
நானறி யேன்பிற தரரறியார்;


25. தேவாரம் 5-100 , 3

26 திருவிளையாடல் புராணம் - பாயிரம் - 6 தொக்கபேர் அண்டங்கள் - கொண்ட

தொகைக்கெல்லை இல்லையென்று சொல்லுகின்ற

தக்கபல் சாத்திரங்கள் - ஒளி

தருகின்ற வானமோர் கடல்போலாம்:

அக்கடல் அதனுக்கே - எங்கும்

அக்கரை இக்கரை பொன்றிலவாம்.

இக்கடல் அதனகத்தே - அங்கங்

கிடையிடைத் தோன்றும்புன் குமிழிகள்போல்

தொக்கன உலகங்கள் - திசைத்

தூவெளி யதனிடை விரைந்தோடும்;

மிக்கதோர் வியப்புடைத்தாம் - இந்த

வியன்பெரு வையத்தின் காட்சிகண்டீர்.”27

என்று வியன்பெரு வையத்தின் காட்சியைக் காட்டுவார். இந்த இருவரின் கருத்துகளும் ஒருபுடை யொத்துள்ளமையைக் கண்டு மகிழலாம்.

பாரதியாரின் மற்றொரு பாடல், கண்ணன் காண்டீபனுக்குக் காட்டிய விசுவரூப தரிசனம் போல், பரவெளியில் உள்ள அண்டகோளங்களை ஒருங்கே காட்டுகின்றது. இந்த அண்ட கோளங்களின் அமைப்பை,

"விண்டு ரைக்க அறிய அரியதாய்

விரிந்த வான வெளியென நின்றனை;

அண்ட கோடிகள் வானில் அமைத்தனை;

அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை;

மண்ட லத்தை அணுஅணு ஆக்கினால்

வருவ தெத்தனை அத்தனை யோசனை

கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை;

கோல மே! நினைக் காளியென் றேத்துவேன்".28

என்று விளக்குவதுடன் அவற்றிடையே யுள்ள தொலைவுகளையும் கற்பனை மூலம் கணக்கிட்டுக் காட்டுவர். ஒரு மண்டலத்தைப் பொடியாக்கி, அந்தப் பொடிகளையும் அணுக்களாக்கினால் வரும் தொகை எவ்வளவோ அவ்வளவு தூரத்தில்


27. பார.கவி.தோத்.பா. கோமதியின் மகிமை - 5, 6, 7

28. பார்.கவி.தோத்.பா. மஹா சக்தி வாழ்த்து பல்வேறு அண்டங்களை இயங்கச்செய்கின்றார். இத்தகைய கோலத்தை அமைத்த இறைவனைக் காளிதேவியாகக் காண்கின்றார். 'சக்திதாசன்' என்றும் தம்மைக் கருதிக்கொள்ளுகின்றார். கவிஞர். புறமுக ஆற்றல் (Centrifugal force) என்ற இறைவனது ஆணையால் இக்கோள்கள் - அண்டங்கள் - வழி விலகாமல் சுற்றி வந்துகொண்டுள்ளன. ஒவ்வொரு கோள்களுக்கும் இடையிலும் பல்லாயிரக்கணக்கான மைல் இடை வெளிகள் உள்ளன. இந்த இடைவெளியில்தான் சில சமயம் வால்மீன்களையும் (Comets), வீழ்கொள்ளி அல்லது எரிமீன்களையும் (Meteors) காண்கின்றோம்.

இங்ஙனம் அண்டங்கள் விண்வெளியில் வெவ்வேறு வேகத்தில் சுழன்றுகொண்டும், ஒன்றையொன்று சுற்றிக்கொண்டும் உள்ள உண்மையை ஆண்டவனின், 'அலகிலா விளையாட்டாய்க்' கொள்வர், திரி கூட இராசப்பக் கவிராயர். சாட்டைத் துணையின்றியே இத்தனை அண்டங்களையும் பம்பரம்போல் ஆட்டி வைக்கின்றான் இறைவன் என்று காட்டுவர், அக்கவிஞர்.

"சாட்டிநிற்கும் அண்டமெலாம்
சாட்டையிலாப் பம்பரம்போல்
ஆட்டுவிக்கும் குற்றாலத்து
அண்ணவார்..29

என்று அழகாய்க் குறிப்பிடுவதைக் கண்டு மகிழலாம்.

பேராசிரியர் ஐன்ஸ்டைன் இந்த அகிலத்தின் வெளி வளைந்துள்ளது என்றும், அது விரிந்துகொண்டே போகின்றது என்றும் கூறுவார். இஃது ஐம்பெரும் பூதங்களுள் ஆகாயம் மிகப்பெரியது என்றும், அதனுள்தான் ஏனைய பூதங்கள் அடங்கியுள்ளன என்றும் பண்டையோர் கூறும் கருத்துக்கு இவ்விளக்கம் ஒருபுடையொத்துள்ளது. ஓர் இரப்பர் பலூன் மேல் பல புள்ளிகளை வரைந்து, அப்பலூனை ஊதினால் அது பெரிதாக ஆக ஆக அப்புள்ளிகளின் இடையிட்ட தூரமும் அகன்றுவிடுகின்றது. இதைப்போல், விண்வெளியும் விண்மீன் மண்டலங்களை ஏந்திக்கொண்டு அகன்றுகொண்டே போகின்றது என்பது இன்றைய அறிவியலார் கண்ட முடிவு. இதைப் போன்ற பலவான நூற்கருத்துகளைத் தமிழ் இலக்கியங்களில் காணலாம்.


29. குற்றாலக் குறவஞ்சி - 107

ஊழியின் முடிவில் இந்த அகிலம் முழுவதும் அணுத்தத்துவமாய் மாறும் (Invołution) என்பதையும் மீண்டும, படைப்புக் காலத்தில் அஃது அண்டங்களாய் வடிவெடுக்கும் என்பதையும் மெய்யுணர்வு பெற்ற தாயுமான அடிகள்,

"செகத்தையெல்லாம் அணுவளவும்
சிதறா வண்ணம்
சேர்த்து அணுவில் வைப்பை:அணுத்
திரளை எல்லாம்
மகத்துவமாப்ட் பிரம்மாண்டம்
ஆகச் செய்யும்
வல்லவா நீநினைத்த
வாறே யெல்லாம்.30

என்று இரத்தினச் சுருக்கமாய் விளக்குவர்.

இந்த உண்மையினையே இன்றைய அறிவியலறிஞர்கள் புலன் உணர்வைப் பன்மடங்கு பெருக்கிக்காட்டும் கருவிகளைக் கொண்டு விளக்குகின்றனர். நாம் காணும் பொருள்கள் யாவும் அனுத்திரளைகளேயன்றி வேறொன்றும் அன்று என்பதை விளங்க உரைத்தனர். இதனையே திருச்சிற்றம்பலத்தில் ஆடும் ஆனந்தக்கூத்து விளக்குகின்றது. அணுவினுள்ளும் இந்த ஆனந்தக் கூத்தினையே நாம் காண்கின்றோம்.

இந்த ஆனந்தத் திருநடனத்தை அழகியதோர் உவமையாய் வைத்துக் கதிரவன் உதயம் செய்வதைக் கம்பன் காட்டுவான். கதையில் வரும் இடத்தைச் சுட்டி விளக்கினால்தான் இதில் தெளிவு பிறக்கும்; சுவையில் ஆழ்ந்து அநுபவிக்கவும் முடியும். விசுவாமித்திரனின் வேள்வி முடிகின்றது. இராமனுக்கு முகமன் கூறிய பின் மூவரும்,

"விசியும் வார்புனல் மருதஞ்சூழ்
மிதிலையர் கோமான்
புரியும் வேள்வியும் காண்டும்நாம்
எழுகென்று போனார்.” 31


30. தாயு. பாடல் : 40 தந்தைதாப் - 5 31. பாவ. வேள்விப் - 59 என்று கவிஞன் கூறியவாறு, சனகனின் வேள்வியைக் காண மிதிலை நோக்கிப் பயணமாகின்றனர். மிதிலை நகர்க் காட்சிகளையெல்லாம் அநுபவித்துக்கொண்டு மிதிலை நகர் வீதியில் வரும்போது இராமனும் சீதாப்பிராட்டியும் சாளரத்தின் வழியாய் ஒருவரையொருவர் நோக்கியதை,

“அண்ணலும் நோக்கினான்;
        அவளும் நோக்கினாள்”32[2]

என்று காட்டி, அவர் காதல் கொண்டதை,

“பருகிய நோக்கெனும் பாசத்தாற் பிணித்து
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்
வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்.”33[3]

என்று காட்டுவான்.

“மருங்கிலா நங்கையும் வசையில் ஐயனும்
ஒருங்கிய இரண்டுடல் உயிரொன்று ஆயினார்
கருங்கடல் பள்ளியில் கல்வி நீங்கிப்போய்ப்
பிரிந்தவர் கூடினால் பேச வேண்டுமோ?”34[4]

என்று விளக்கி நம்மை வியப்பில் ஆழ்த்துவான்.

அன்றிரவு இருவருக்கும் உறக்கம் வரவில்லை. காதல் நோய் அவர்களை வாட்டுகின்றது. இதனைக் கவிஞன் அற்புதமாய் வருணிக்கின்றான் பொழுது விடிகின்றது. கதிரவன் தோன்றுகின்றான். இதனை,

“ததையுமலர்த் தார்அண்ணல் இவ்வண்ணம்
        மயல்உழந்து தளரும் எல்வை
சிதையுமனத்து இடருடைய செங்கமலம்
        முகம்மலரச் செய்ய வெய்யோன்


புதைஇருளின் எழுகின்ற புகர்முகயா
        னையின் உரிவைப் போர்வை போர்த்த
உதயகிரி எனும்கடவுள் நுதல்கிழித்த
        விழியேபோல் உதயம் செய்தான்.”35[5]

என்று காட்டுவான். “யானைத் தோலாகிய போர்வையைத் தரித்துள்ள உதய பர்வதமாகிய உருத்திர மூர்த்தியினது நெற்றியினின்று திறந்து தோன்றின. “நெருப்புக்கண்போல் உதயம் செய்தான்" என்கின்றான், கவிஞன்.

கதிர்கள் விரிவதைத் திருநடனம் புரியும் அம்பலவன் சடை விரிந்தாடுவதனோடு ஒப்பிடுகின்றான் :

“எண்ணரிய மறையினொடு கின்னரர்கள்
        இசைபாட உலகம் ஏத்த
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும்
        கரம்குவிப்ப வேலை என்னும்
மண்ணுமணி முழவுஅதிர வானரங்கில்
        நடம்புரிவான் இரவி யான
கண்ணுதல்வா னவன்கனகச் சடைவிரித்தால்
        எனவிரிந்து கதிர்கள் எல்லாம்.”36[6]

“அளவிடுதற்கு அரிய அருமறைகளை ஓதி முழக்கம் செய்கின்றனர், அந்தணர்கள், கின்னரர்கள் இசை பாடுகின்றனர்; தேவர்களும் முனிவர்களும் கைகூப்பி வணங்குகின்றனர். உலகோர் புகழ்கின்றனர்; கடல் என்னும் அழகிய மத்தளம் ஒலிக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் ஆகாயமாகிய நடன அரங்கில் நடனம் செய்கின்றான், ஒளியையுடைய கதிரவன். தில்லையில் திருநடனம் புரியும் திருக்கூத்தனது பொன்னிறமான சடை விரிந்து செங்குத்தாய் நிற்றல்போல் “பகலவனின் செந்நிறமான கதிர்கள் விரிந்து பரவின” என்கின்றான், கவிஞன். சிவபெருமான் திருநடனம் புரியும் இடம், திருச்சிற்றம்பலம். சூரியன் நடம் புரியும் இடம், அம்பரம் (ஆகாயம்). சூரியன் நடம், புரிவதாய்க் கூறியது, அவனது கிரணங்கள் பளபளக்கும் காலத்து அசைவதாய்த் தோன்றுதல் பற்றியதாகும். சூரியன் உலகத்தார் யாவராலும் புகழப்படுவதனைப் ‘பலர் புகழ் ஞாயிறு’ என்ற திருமுருகாற்றுப்படை அடியினாலும் அறியலாம்.


மணிவாசகப்பெருமான் விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும்,

“பூதங்கள் ஐந்தாகிப்
        புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப்
        பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட
        கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும்
        விளங்குதில்லை கண்டேனே” 37[7]

(புலனாகி - தன்மாத்திரைகள் ஐந்துமாகி; கேதங்கள் - துன்பங்கள்)

என்ற ஒரு பாடலில் காண்கின்றார்.

இந்தத் திருக்கூத்தைச் சேக்கிழார் அடிகளும்,

“கற்பனை கடந்த சோதி
        கருணையே உருவ மாகி
அற்புதக் கோலம் நீடி
        அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோக மாகும்
        திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
        பூங்கழல் போற்றி போற்றி.”38[8]

என்று கண்டு வழிபடுகின்றார்.

கம்பராமாயணத்தில் ஊர்தேடு படலத்தில் ஒரு பாடல்; மதிலின் ஒளியை அநுமன் கொண்டாடுவதாய் அமைந்துள்ளது. இதில் கதிரவன் மகர ரேகைக்குத் தெற்கே செல்லுவதில்லை என்பது மிகச் சமத்காரமாய்க் கூறப்பெற்றுள்ளது.

“முன்னம் யாவரும் இராவணன்
        முனியும் என்(று) அஞ்சி
பொன்னின் மாநகர் மீச்செலான்
        கதிர்எனப் புகல்வார்;


கன்னி ஆரையின் ஒளியினில்
        கண்வழுக்(கு) உறுதல்
உன்னி நாடோறும் விலங்கினன்
        போதவை உணரார்.”39[9]

(முனியும் - கோபிக்கும்; கதிர் - பகலவன் ஆரை - மதில்; விலங்கினன் - விலகிச் சென்றான்)

வானநூற்படி கதிரவன் மகர ரேகைக்குத் (Capricorn) தெற்கேயும் கடக ரேகைக்கு (Cancer) வடக்கேயும் நகர்வதில்லை என்பது வானநூல் மெய்ம்மையாகும். இலங்கை மகர ரேகைக்குத் தெற்கே உள்ளது என்பதை நாம் அறிவோம். “மூவுலகையும் ஆண்ட இராவணனது சினத்திற்கு ஆளாக வேண்டும் என்று எண்ணிக் கதிரவன் இலங்கைமேல் வானத்தே சென்று, தனது வெப்பக் கதிர்களை வீசுவதற்கு அஞ்சி என்று மக்கள் நீண்ட காலமாய்ச் சொல்லிவருகின்றனர். இது தவறு; ஆராய்ச்சி இல்லாத கூற்று. இலங்கைமாநகரின் பொன்மயமான மதிலினது ஒளியினால் சூரியனது தேரிலுள்ள குதிரைகளின் கண் கூசுதல்பற்றியே இவ்வாறு விலகிச் செல்லுகின்றான் என்பதுதான் உண்மை” என்று கற்பனைநயம் தோன்றக் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. ஒளியினால் கண் கூசிப் பார்வை மழுங்குதல் இயல்பு. இரவு நேரங்களில் நாம் சாலையில் நடையாடும்போது மோட்டார் வாகனங்களின் கண் கூசும் பேரொளி விளக்குகளின் ஒளியை அநுபவித்திருக்கின்றோம். காவல் துறையும் இவ்வித விளக்குகளைத் தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளதல்லவா?

பிறிதொரு கோணத்தில் : பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் அண்டங்களின் படைப்பையும், அவற்றின் அமைப்பையும், அவை விண்வெளியில் சுழலும் அற்புதத்தையும் இன்னொரு கோணத்தில் காண்கின்றார், ஒரு பாடலில். இவர் வைணவர். அரங்கநகர் அப்பன்மீது ‘திருவரங்கத்துமாலை’ என்ற ஓர் அற்புதமான பிரபந்தத்தைப் பாடியுள்ளார்: இஃது. ‘அஷ்டப்பிரபந்தம்’ என்ற எட்டுப் பிரபந்தங்களைக்கொண்ட தொகுப்பு நூலுள் ஒன்று.


“ஞாலத் திகிரி முதுநீர்த் திகிரி
        நடாத்தும் இந்தக்
காலத் திகிரி முதலான யாவும்
        கடல்க டைந்த
நீலத் திகிரி அனையார், அரங்கர்
        நிறைந்த செங்கைக்
கோலத் திகிரி தலைநா ளதனில்
        கொண்ட கோலங்களே.”40[10]

என்பது பாடல். அற்புதமான சாக்லட்போல் உள்ளது. சாக்லட்டை, அது பொதிந்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு பளபளக்கும் வண்ணத் தாள்களைக் களைந்து வாயில் போட்டு, உமிழ்நீருடன் கலந்து சுவைக்கும் போதுதான் அதன் சுவையை அநுபவிக்க முடியும். அங்ஙனமே இந்தப் திருப்பாசுரத்தையும் மனத்தில் வைத்து அசை போட்டுக் கரைத்தால்தான் அதன் பொருளை உணர்ந்து அநுபவிக்க முடியும்.

இந்தப் பாடலிலுள்ள “திகிரிகளை” முதலில் இன்னவையென இனங்கண்டு அறிந்துகொள்ள வேண்டும். ஞாலத்திகிரி: கதிரவனைச் சுற்றி வரும் அண்டங்களும், தன்னைத் தானே சுற்றி இயங்கும் கதிரவனும் பலகோடி மைல்களுக்கு அப்பால் பூமியில் சிறியதோர் இல்லத்தில் - திருவரங்கத்திலுள்ள இல்லத்தில் - வாழும் கவிஞனின் ஊனக் கண்ணுக்கு உருளைகளாய்த் - திகிரிகளாய்த் - தென்படுகின்றன. இப்பேரண்டச் சக்கரந்தான் ‘ஞாலத்திகிரி’ என்பது. முதுநீர்த்திகிரி: ஒவ்வோர் அண்டத்துடன் அவ்வண்டத்திலுள்ள பொருள்களும் உருமாறிச் சுழல்கின்றன. எடுத்துக்காட்டாய், கடல் நீர் - நீராவி - மழை - ஆறு - கடல்நீர் என்று சக்கரம் சுழல்கின்றது. இவ்வாறு ‘கடல்நீர்’ சுற்றுவதை ‘முதுநீர்த்திகிரி’ என்கின்றார் (முதுநீர் - கடல்). இந்தச் சக்கரத்தைப் போலவே இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்ற பருவச்சக்கரங்களும் சுழல்கின்றன. பிறப்பு, இறப்பு என்ற சக்கரமும் சுழன்று வருகின்றது. காலத்திகிரி: இது கண்ணுக்குத் தெரியாத


சக்கரம்.41[11] இதுவே ஞாலத்திகிரி, முதுநீர்த்தி கிரி முதலானவற்றை இயக்கும் ஓர் அற்புதத்திகிரி. மிகப்பெரியதோர் ஆலமரத்தை - அடையாறு ஆலமரம் போன்றதோர் ஆலமரத்தைக் கவனிப்போம். அதற்கு 200க்கு மேற்பட்ட வயது இருக்கும். 200 ஆண்டுகளுக்கு முன்னர் அது ‘தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதையில்’ ஒளிந்துகொண்டிருந்தது. ‘ஆலமர் வித்தின் அருங்குறள்’ போல் ஒளிந்துகொண்டிருந்தது என்றும் சொல்லிவைக்கலாம். காலச் சக்கரம் சுழன்று சுழன்று, விதையில் ஒளிந்துகொண்டிருந்த ஆலமரத்தை மெல்ல மெல்ல இழுத்து வெளிக் கொணர்ந்துவிட்டது. இந்த அகிலத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் யாவுமே காலச்சக்கரத்தின் சுழற்சியால் வெளி வந்தவைதாம்.

இந்தக் கருத்தைத் தெளிவாய் விளக்க இன்னொரு கருத்தைக் காட்டுவேன். சென்னையிலிருந்து நெல்லைக்குப் போகின்றோம். வழியில் விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர் ஆகிய நகர்கள் வருகின்றன. இவையாவும் முன்னமேயே இருந்த நகர்கள்தாம். இடத்தை விட்டு இடம் பயணம் செய்யும்போது முன்னமேயே இருந்த ஊர்களைத்தாம் சந்திக்கின்றோம். நம் வாழ்க்கையில் இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின்னால் நிகழப்போகும் நிகழ்ச்சிகளும் நிகழ்பவை அல்ல. 150 கி.மீ.க்கு அப்பால் இருந்துகொண்டிருக்கும் விழுப்புரத்தைப் போல, 330 கி.மீ. க்கு அப்பால் இருந்துகொண்டிருக்கும் திருச்சியைப் போல, 400 கி.மீ.க்கு அப்பால் இருந்துகொண்டிருக்கும் மதுரையைப் போல, 560 கி.மீக்கு அப்பால் இருந்துகொண்டிருக்கும் திருநெல்வேலியைப் போல, இருபது ஆண்டுகளுக்கு அப்பால் கால மண்டலத்தில் அந்நிகழ்ச்சிகள் இருந்துகொண்டுள்ளன! தூரம் என்ற திரை இந்த நான்கு நகர்களையும் மறைத்துக் கொண்டிருப்பதுபோல, காலம் என்ற திரை இந்நிகழ்ச்சிகளை மறைத்துக்கொண்டுள்ளது. இந்த உண்மையை வேறு விதமாகவும் கூறலாம். காலம் என்ற வாகனத்தில் நாம் பயணம் செய்யும்போது முன்னமே இருந்துகொண்டிருக்கும் அந்நிகழ்ச்சிகளை நாம் சந்திக்கின்றோம். இடப்பயணத்தில் நாம் இந்த நான்கு நகரங்களையும் சந்திப்பது போல, காலம் என்ற தத்துவம் எல்லா நிகழ்ச்சிகளையும் பூத்து விரியச்


செய்கின்றது. ஆகவே, நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டும் சூத்திரதாரராய் உள்ளது காலம் என்ற திகிரி.

“ஞாலத் திகிரி முதுநீர்த் திகிரி
        நடாத்தும், அந்தக்
காலத் திகிரி”

என்று சொல்லி, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பாராட்டினார், கவிஞர்.

நீளம், அகலம், உயரம் என்ற மூன்று அளவைகளோடு கலந்து பிரிக்க முடியாத நான்காவது அளவை ஒன்றுள்ளது. அதுவே காலம் என்ற அளவை என்பதை அறிவியல் முறையில் நிலைநாட்டினார், ஐன்ஸ்டைன். காலத்துக்குமேல் ஐந்தாவது அளவை ஒன்றுள்ளது என்று ஊஸ்பென்ஸ்கி என்ற இரஷ்ய அறிவியலறிஞர் கூறுகின்றார். அறிவியலறிஞர்கள் இன்னும் பலப்பல அளவைகளைப் புதியனவாய்க் கண்டறியலாம். ஆகவே, அவற்றிற்கு இடம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி, 800 ஆண்டுகட்கு முன் வாழ்ந்த திவ்வியகவி பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்,

“ஞாலத் திகிரி முதுநீர்த் திகிரி
        நடாத்தும் அந்தக்
காலத் திகிரி முதலான யாவும்”

என்று பாடினார்.

காலம் முதலான மூலச் சக்கரங்களுக்கெல்லாம் விசை கொடுத்து முடுக்கிவிட்ட உள்மூலச்சக்கரம் ஒன்றுள்ளது. அதைப் பற்றிப் பேசப்போகின்றார், திவ்வியகவி. அவர் சொல்லப்போவதைப் புரிந்துகொள்வதற்காக இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுபடுத்திக்கொள்ளலாம். நீலகிரி மலையின் உச்சியில் இப்போது பெருமிதத்துடன் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் உதகமண்டலம் அந்தக் காலத்தில் இல்லை. அது மனித நடமாட்டமில்லாத ஒரு பொட்டல்காடாய் இருந்தது. நம் நாட்டுக்கு வாணிகம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்ற வந்த ஓர் ஆங்கிலேயர் தற்செயலாய் மலைமேலேறிச் சுற்றி வந்தபோது, இப்போது உதகமண்டலம் இருக்கும் மலை உச்சியில் ஓர் அழகிய நகரத்தை நிர்மாணிக்கத் திருவுள்ளம் கொண்டார். இங்கிலாந்து நாட்டிலிருந்து ஒரு சிற்பியை வரவழைத்துக் கோடைக் கொடுமையினின்றும் தப்பி ஆங்கிலேயர் வாழ்வதற்கு உரிய நகரத்தை அமைக்கும்படி ஏவினார். நகரத்தை அணி செய்வதற்காக மனத்திற்கு இதமான ஒரு பூங்காவையும் அமைக்க வேண்டும் என்று ஒரு பெரிய திட்டமும் போட்டார், சிற்பி. அவருடைய கற்பனையில் விதம் விதமான பூச்செடிகள் பூத்துக் குலுங்கின: விதம் விதமான மரங்கள் கப்பும் கிளையுமாய் வளர்ந்து வானைத் தொட்டுக்கொண்டு நின்றன. அவர் உள்ளத்தில் தோன்றிய நயமான சோலையை அவரோடு ஒத்துழைத்த மற்றவர்கள் காணவில்லை.

ஒரு பனைமட்டையைக் கையில் வைத்துக்கொண்டு, கண்ணாம்பு நீரில் அதை அமுக்கி ஒரு கோலம் போட்டுக் கொண்டே சென்றார், சிற்பி. பின் சென்றவர்கள் அவர் கட்டளைப் படி அந்தக் கோலத்தின் புள்ளிகளிலும் வளைந்து நெளியும் கோடுகளிலும், விதைகளை விதைத்தார்கள்; செடிகளை நட்டார்கள்; பதியங்களைப் பதித்தார்கள். பலப்பல ஆண்டுகள் உருண்டோடின. அதற்குப் பிறகுதான் இப்போது உதகையில் நாம் காணும் அற்புதமான பூங்காவை (Botanical Garden)- நனவாகிய சிற்பியின் கனவை மற்றவர்களும் கண்டு மகிழ முடிந்தது. மற்றவர்களுக்கு அருவமாய் இருந்த சிற்பியின் அகக்காட்சி இப்போது மற்றவர்களுக்கும் காணக்கிடைத்த புறக்காட்சியாய் உருவாயிற்று.

இதனைப் போலவேதான், இறைவன் என்ற சிற்பியின் அகக்காட்சியிலே தோன்றியது, பேரண்டம்; பின்னர், அது புறக் காட்சியாய் மாறியது. வெறும் பாழாய் இருந்த எல்லையிலாப் பர வெளியில், பல்லாயிரங்கோடி அண்டங்கள் பூத்து மலர்ந்தன. சூரிய சந்திரர்களும் விண்மீன்களும் தோன்றி மாபெரும் உருளைகளைப் போல வெட்ட வெளியில் சுழன்றன; சுழல்கின்றன. ஒரு கணக்குப்படி சுழல்கின்றன; ஒன்றோடொன்று மோதாமல், யாரோ இட்ட கோலங்களின் கோடுகளிலும் புள்ளி களிலும் ஆணைக்கு அடங்கி நின்று, கற்பனை கடந்த வேகத்தில் சுழல்கின்றன. அந்த ஆங்கிலச் சிற்பியிட்ட கோலத்தினுள்ளும் புள்ளிகளினுள்ளும் இட்ட விதைகளினின்றும் பதித்த பதிகங் களினின்றும், காலத்திகிரியின் சுழற்சியிலே வெளிவந்த உதக மண்டலப் பூங்காவைப்போல, பேரண்டப்பூங்காவும் வெட்டவெளியிலிட்ட கோலங்களினின்றும் வெளிவந்து விரிந்து பெருகிச் சுழன்றுகொண்டிருக்கின்றது.

வெட்ட வெளியில் கோலத்தை இட்ட சிற்பியைப்பற்றி இப்போது சிந்திக்கின்றோம். அப்பெருமகன் யார்? நமது திருவரங்கத்தில் தெண்ணீர்ப் பொன்னித் திரைக்கையால் அடி வருட, அரவு அணையில் பள்ளி கொண்டு உறங்குவான்போல் யோகம் புரிந்துகொண்டிருக்கும் மணிவண்ணன் அம்மான்தான். பாற்கடலைக் கடைந்தபோது ஒரு நீல மலையை மத்தாய்க் கொண்டு கடைந்தார், அந்தக் கருமணி. அந்த மத்தைப்போல் நீலமேனியையுடையவர் நம் திருவாழி அம்மான் (நீலத்திகிரி). ஆற்றிடைக்குறையில் அறிதுயிலில் இருக்கும் அப்பெருமான் தம் திருப்பாதங்கள் நோவ எழுந்து சென்று, பனைமட்டையைக் கையில் பற்றிக்கொண்டு. சுண்ணாம்பு நீரில் அதை அமுக்கி அமுக்கியா வெட்ட வெளியில் கோலத்தைப் போடுவார்? இல்லை இல்லை. “நியதிக் கோலத்தைப் போட வேண்டும்; அதற்கு அடங்கிப் பேரண்டங்கள் உருள வேண்டும்” என்று அறிதுயில் மாயோன் சங்கற்பித்தார். அவ்வளவுதான். உடனே, அவர் கையிலிருந்த அழகிய சக்கரம் (திருவாழியாழ் வான்) - கோலத்திகிரி - அவர்தம் திருக்கையை விட்டு அகன்று, பாய்ந்து, வெறும் பாழ்வெளியில் - பரவெளியில் - சுழன்று சுழன்று சென்று, ஒரு மாபெரும் கோலத்தை இட்டுவிட்டு, மீண்டும் அவர்தம் திருக்கரத்திலே வந்து அமர்ந்துகொண்டது.

மூலத்திகிரி இட்ட கோலத்திலே காலத்திகிரி பயபக்தியோடு உருண்டு சென்றது. காலத்திகிரியினின்றும் பிறந்து, அதோடு இணைந்து நிற்கும் ஞாலத்திகிரி, முதுநீர்த்திகிரி முதலிய திகிரிகளெல்லாம் நியதி தவறாமல் தொடர்ந்து சுழன்றன. இந்தத் திகிரித் தொடரைப் பார்த்து, கடிகாரத்தினுள்ளிருக்கும் சக்கரத் தொடரை அநுபவிப்பதுபோல, அநுபவிக்கின்றார், திவ்வியகவி. நாமும் அப்பாடலை மீண்டும் ஒருமுறை படித்து அநுபவிப்போம்.

“ஞாலத் திகிரி முதுநீர்த் திகிரி
        நடாத்தும் அந்தக்
காலத் திகிரி முதலான யாவும்
        கடல்க டைந்த

“நீலத் திகிரி அனையார் அரங்கர்
        நிறைந்த செங்கைக்
கோலத் திகிரி தலைநா ளதனில்
        கொண்ட கோலங்களே.”42[12]

இப்போது ‘தூவெளியினிடை விரைந்தோடும் வியன் பெரு வையத்தின் காட்சி’ நமக்குப் புலனாகின்றதல்லவா? வியப்புக் கடலில் ஆழ்ந்து, ஆண்டவனின் படைப்பின் விந்தையில் திளைக்க முடிகின்றதல்லவா? கூர்தல் அறக் கொள்கையின் (Theory of Evolution) கூறுகளும் கவிதையில் மிளிர்வது நமக்குத் தட்டுப்படுகின்றதையும் உணர்கின்றோம். அறிவியல் தத்துவம் இலைமறை காய்போல் காட்சி தருவதையும் கண்டு அநுபவிக்கின்றோம்.

திவ்விய கவியின் மற்றோர் இடத்தில் (திருவேங்கட மாலையில்) திருவேங்கட மலையின் உயர்ச்சியைக் கூறும் பாங்கில் இராசி மண்டலத்தையும் மலையையும் பொருத்திக் காட்டுவதில் இலக்கியமும் அறிவியலும் (ஏன், சமயமும் கூடத்தான்) இணைந்து செயற்படுகின்றன. எல்லாவற்றையும் காட்ட முயல்கின்றேன் - இராமகிருஷ்ணா இனிப்பகம் அல்லது அகர்வால் பவனத்திலிருந்து சில பொருள்களை வாங்கி வந்து உங்கள் இல்லத்தில் தருவது போல்.

“துய்ய செம்பொற்கோயில்
        சுடர்எறிப்பக் கண்முகிழ்த்து
வெய்ய வன்தேர் மாஇடறும்
        வேங்கடமே.”43[13]

(துய்ய - தூய; சுடர் - காந்தி; எறிப்ப - வீசுதலால்; கண் முகிழ்த்து - கண் மூடப்பெற்று; வெய்யவன் - சூரியன்; மா - குதிரை)

திருமலையிலுள்ள பொன்மயமான திருக்கோயில் விமானத்தின் ஒளி மிகுதியாய் வீசுதலால் பகலோனின் தேர்க்குதிரைகள் கண்கூச்சமடைந்து கண் விழிக்க இயலாது கண் மூடி அம்மலையின் உயர்வினால் அதில் கால் இடறுகின்றன என்கின்றார்.


மேலே காட்டிய “முன்னம் யாவரும்” என்ற கம்பன் பாடலில் கதிரவன் தேரிலுள்ள குதிரைகளின் கண்கள் கன்னி ஆரையின் ஒளியினில் கண் வழுக்குறுதல் கூறப்பெற்றது. அக்கருத்தினையொட்டியே ஈண்டுத் திவ்வியகவி “பொற்கோயிலின் சுடர் எறிப்ப, வெய்யவன்தேர் மாஇடறும்” என்கின்றார். இரண்டையும் ஒப்பு நோக்கும்போது இலக்கியச் சுவை இருமடங்கு பெருகி நிற்கின்றது.

இப்பகுதியில் பன்னிரண்டு இராசிகளுள் மேடம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்றவை மலையின் உயர்வுடன் அற்புதமாய்ப் பொருத்திக் காட்டப்பெறுந்திறன் எண்ணி எண்ணி மகிழ்தற்குரியது.

மேடம் : திருவேங்கடமலையில் பசியால் வாடிய புலியொன்று வானத்திலுள்ள ஆட்டுக்கிடா வடிவமாயுள்ள மேட இராசியைப் பார்த்துச் சீறுகின்றது.

“வாடப் பசித்த வரியுழுவை வாலாட்டி
மேடத்தைப் பார்த்துறுக்கும் வேங்கடமே.”44[14]

(வரி உழுவை - வரிப்புலி, வாலாட்டுதல் - கோபக்குறி; மேடம் - ஆடு)

‘மேடத்தைப் பார்த்திருக்கும் வேங்கடமே’ என்ற பாடமும் உண்டு. இதற்கு, புலியானது தன் உணவிற்கும் வலிமைக்கும் தகுந்ததாகிய இடப இராசியை எதிர்நோக்கிக்கொண்டு, அவ்வகை வலிமை இல்லாத மேட இராசியைக் கண்டு வெறுத்திருக்கும் என்றும் பொருள் கொள்ளலாம். மேட இராசி சித்திரை மாதத்திற்கு உரியது.

கடகம் : இது நான்காவது இராசி. நண்டு வடிவமானது. திருமலையில் குதித்து விளையாடும் குரங்குகள் அதன் தண்குவட்டில் பொருந்தி வரும் கடக இராசியைக் கண்டு (நண்டு வடிவத்தைக் கண்டு) வெருவியோடுகின்றன.

“தாவிவரும் வானரங்கள் தண்குவட்டிற் கற்கடகம்
மேவிவரக் கண்டோடும் வேங்கடமே.”45[15]

(குவடு - மலைச்சிகரம்; மேவி - பொருந்தி)


என்பது திவ்விய கவியின் திருவாக்கு. கடக இராசி ஆடி மாதத்திற்கு உரியது.

சிங்கம் : ஆண்யானையைப் பெண் யானை யாதோ ஒரு காரணத்தால் (ஊடலால்?) பிணங்கி வருகின்றது. இந்நிலையில் அது வானத்தில் வருகின்ற சிங்க இராசியைக் கண்டு பேரச்சம் கொண்டு தானே வலியச் சென்று ஆண்யானையைத் தழுவுகின்றது.

“ஒண்சிந்து ரத்தைவெறுத் துடும் பிடிவேழம்
விண்சிங்கம் கண்டணைக்கும் வேங்கடமே.”46[16]

(சிந்துரம் - ஆண்யானை; ஊடும் - பிணங்கும்; பிடிவேழம் - பெண்யானை; விண்சிங்கம் - சிங்க இராசி)

என்பது திவ்விய கவியின் அமுதவாக்கு. ஊடுதல் - ஆணுடன் பெண் அன்பு வகையால் சிறிது மாறுபடுதல். இங்ஙனம் வலியக்கொள்ளும் சினம் இன்பத்தை மிகுவிக்கும் என்ற கோட்பாட்டை “ஊடுதல் காமத்திற்கு இன்பம்” (குறள் - 1330) என்ற வள்ளுவத்தால் உணரலாம். சிங்க இராசி ஆவணி மாதத்திற்கு உரியது.

கன்னி : திருமலையில் ஓங்கி வளர்ந்துள்ள மூங்கிலுக்கு நேராய்ப் பெண் வடிவமான கன்னி இராசி வரும்போது கம்பத்தின்மீது ஏறிக் கூத்தாடும் கழைக்கூத்தியை ஒத்திருக்கும்.

“மாதுமடக் கன்னிகழை வந்தணுகில்கம்பத்தின்
மீது நடிப் பாளொக்கும் வேங்கடமே.”47[17]

(மடம் - மடமையுடைய கழை - மூங்கில்)

மூங்கிலின் உயர்ச்சியைக் கூறியதனால் மலையின் வளம் குறிப்பிட்டவாறாகின்றது. கன்னி இராசி புரட்டாசி மாதத்திற்குரியது.

துலா : குறிஞ்சிநிலக் குடிகளாகிய குறவர்கள் வானத்தில் செல்லுகின்ற நிறைகோல் வடிவமான துலா இராசியினிடத்திலே மலையில் ஒளிரும் இரத்தினங்களை வைத்து எடை காண்பார்கள்.


“மன்னு குடிக்குறவர் வானூர் துலாத்திடையே
மின்னு மணிநிறுக்கும் வேங்கடமே.”48[18]

(மன்னு - நிலைபெற்ற; வான் ஊர் - வானத்தில் செல்லுகின்ற; துலா - துலா இராசி; மின்னும் - பிரகாசிக்கும்; மணி - இரத்தினம்) என்பது அய்யங்கரின் அற்புத அமுதவாக்கு. துலாத்து - அத்து - சாரியை. துலா இராசி ஐப்பசி மாதத்திற்கு உரியது.

தனுசு : தினைப்புனத்தைக் காக்கின்ற குறவர்கள் குளிர் மதியில் களங்கத் தோற்றமாய் இயங்கும் மான் வடிவைக் கண்டு, அதனைத் தினைப்புனத்தை மேய வரும் மான் என்று கருதி வானத்தில் வில் வடிவமாய்க் காணப்பெறும் தனுசு இராசியைக் கைவில்லாய்க்கொண்டு அம்பு எய்ய முயலுகின்றனர்.

“கொல்லைக் குறவர் குளிர்மதிமா னைக்ககன
வில்லைக் குனித்தெறியும் வேங்கடமே.”49[19]

(கொல்லை - தினைக்கொல்லை; மதி - சந்திரன்; ககன வில் - வானவில்; குனித்து - வளைத்து)

சந்திரனிடத்து உள்ள களங்கத்தை மான் என்று கூறுவார் கொள்கை ஈண்டுக் கொள்ளப்பெற்றது. தநுர் இராசி மார்கழி மாதத்திற்கு உரியது.

மகரம் : ஓங்கி வளர்ந்திருக்கும் மூங்கிலுக்கு நேராய்ச் சுறா வடிவம் போன்ற மகர இராசி வருங்கால், அது மதனவேளின் சுறவக் கொடிபோல் காட்சியளிக்கின்றது. இதனைக் கவிஞர்,

“தேனேறித் தேன்வைக்கும் திண்கழைமோல் விண்மகரம்
மீனேறி வேள்கொடியாம் வேங்கடமே.”50
[20]

(தேன் - வண்டுகள்; ஏறி - உயரப் பறந்து சென்று சேர்ந்து; திண் கழை - வலிய மூங்கில்; விண்மகரம் - மகர - இராசி; வேள் -மன்மதன்)

மதனவேள் சுறா வடிவத்தைக்கொண்ட கொடியையுடையவன். அவனுக்கு வடமொழியில் ‘மகரத்துவஜன்’ என்றும் தென்மொழியில் ‘சுறவக் கொடியோன்’ என்றும் பெயர்கள் உண்டு. மகர - இராசி தை மாதத்திற்கு உரியது.

கும்பம் : ஓங்கி வளர்ந்திருக்கும் மரக்கொம்பொன்றில் உள்ள தேனிறால் விண்ணில் செல்லும் பிறைச்சந்திரனது


வளைந்த வடிவமாகிய கொம்பு படுதலால் உடைந்து தேனைச் சொரிகின்றது. அந்தத் தேன் அதற்கு நேராய் வரும் குட வடிவமான கும்ப இராசியில் நிறைந்து வழிகின்றது.

“ஒண்கொம்பில் தேனிறால் ஊர்பிறைக்கோட் டால்உடைந்து
விண்கும்ப மாய்நிறைக்கும் வேங்கடமே.”51[21]

(தேன் இறால் - தேன்கூடு; ஊர் பிறை - செல்லும் பிறைச்சந்திரன்; கோடு - கொம்பு; விண்கும்பம் - கும்ப - இராசி; கும்பம் - குடம்)

‘பிறைக்கோட்டால்’ என்பதற்கு, வளைந்த வடிவமுடைய பிறையினது நுனி படுதலால் என்று உரைப்பினும் அமையும். கும்ப இராசி மாசி மாதத்திற்கு உரியது.

மீனம் : திருமலையிலுள்ள கோனேரியில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் கூனல் இள வெண்குருகு ஒன்று வானத்திற் செல்லும் மீன் வடிவமான மீன இராசியின் நிழல் நீரில் தெரியக் கண்டு, அதனை உண்மையான மீன் என்று கருதிக் கொத்தி ஏமாந்து போகின்றது.

“கூனல்இள வெண்குருகு கோனேரி யில்விசும்புஊர்
மீனநிழ லைக்கொத்தும் வேங்கடமே.”52[22]

(கூனல் - வளைவான; குருகு - நீர்ப்பறவை (கொக்கு); விசும்பு - வானம்; ஊர் - செல்லுகின்ற)

கோனேரி - திருமலையின் மேல் திருக்கோயிலுக்கு அருகிலுள்ள முக்கிய திவ்விய தீர்த்தம். மீன இராசி - பங்குனி மாதத்திற்கு உரியது.

இதுகாறும் இராசி மண்டலத்தில் தம் கற்பனையைச் செலுத்தின கவிஞர், விண்மீன் மண்டலத்தில் தம் கவனத்தைச் செலுத்துகின்றார்.


மூல நட்சத்திரம் : கவிஞரின் சிந்தனை வேறொரு போக்கில் ஈண்டு நடைபெறுகின்றது.

“மண்மூலம் தாஎன்று மந்திகடு வற்குரைப்ப
விண்மூலம் கேட்டேங்கும் வேங்கடமே.”53[23]

(மண் மூலம் - கிழங்கு; மந்தி - பெண்குரங்கு; கடுவன் - ஆண் குரங்கு; விண்மூலம் - மூல நட்சத்திரம்)

பெண்குரங்கு ஆண்குரங்கிடம் ‘மூலம் தா’ (கிழங்கு கொடு) என்று வேண்டியதனால் அதனிடத்து மிக்க அன்பு கொண்ட கடுவன், தன்னைப் பிடித்து மந்தியின் கையில் கொடுத்துவிடுமே என்று மூல நட்சத்திரம் அஞ்சுகின்றது என்கின்றார், கவிஞர். இந்த வருணனையில், திருமலை, வானத்து நட்சத்திர வீதிக்கு அருகில் உள்ளது என்பதும், அம்மலைக்குரங்கு தேவகணமும் அஞ்சத்தக்க வலிமையுடையதென்பதும் தெளிவாகும். ‘மூலம்’ என்ற சொல்விளையாட்டில் ஈடுபடும் கவிஞரின் கற்பனைத்திறனை வியக்கின்றோம். அசுவினி முதல் இரேவதி முடிய நட்சத்திரங்கள் இருபத்தேழு என்பதை நாம் அறிவோம்.

அவிட்ட நட்சத்திரம் : மகளிர் பொன்னூசலிலிருந்து கொண்டு உந்தி உந்தித் தள்ளி விளையாடுகின்றனர். அந்த ஊஞ்சல் அவிட்ட நட்சத்திரத்தில் படுங்கால் அங்கு அம்மகளிர் இறங்குகின்றனர்.

“நாலவிட்ட பொன்னூசல் நன்நுதலார் உந்துதொறும்
மேலவிட்டம் தொட்டு இழியும் வேங்டமே.”54[24]

(நாலவிட்ட - தொங்கவிட்ட; நுதல் - நெற்றி; உந்துதல் - வீசித் தள்ளி ஆட்டுதல்; அவிட்டம் - அவிட்ட நட்சத்திரம்; இழியும் - இறங்கும்)

இங்கும் திருமலையும் நட்சத்திர வீதியும் ஒன்றற்கொன்று அருகிலிருப்பதாய் அறிகின்றோம். இன்னும் பல அழகிய காட்சிகள் உள்ளன; அவை படித்து நுகரத்தக்கன. அவை அறிவியலுக்குப் பொருந்தாமையால் விடப்பெற்றன.


2. பொறி இயல் அறிவு


பண்டைத் தமிழர்கள் பொறியியலிலும் வல்லுநர்களாய் இருந்திருத்தல் வேண்டும் என்று ஊகிக்க இடம் உண்டு. சிந்தாமணியில் விசயை இவர்ந்து சென்ற மயில் பொறியும், பெருங்கதையில் குறிப்பிடப்பெறும் யூகியால் சமைக்கப்பெற்ற இயந்திர யானையும், புறநானூறு கூறும் “வலவன் ஏவா வான ஊர்தியும்.”55[25] இராமாயணத்தில் காட்டப்பெறும் புட்பக விமானமும் பொறியியல் அறிவினால் அமைக்கப்பெற்ற சாதனங்கள் என்று கருதலாம். அமைக்கப்பெறாவிடினும் அமைக்கலாம் என்ற அறிவியல் கற்பனையாவது எழுந்திருக்க வேண்டும் என்று கருதவாவது இடம் உண்டல்லவா? அன்று பல வேறு துறைகளில் பொறியியல் அறிவு வளர்ந்திருந்ததா என்பதை எடுத்துக்காட்டற்குரிய சான்று ஒன்றும் கிடைக்கவில்லை, இதனை இலக்கியங்களுள் காணப்பெறும் ஒருசில குறிப்புகளால் அறுதியிட்டு உரைத்தற்கில்லை.

திருச்சிக்கருகேயுள்ள காவிரி நதியின் குறுக்கே கட்டப்பெற்றுள்ள கல்லணை கரிகாற்பெருவளத்தான் காலத்தில் கட்டப்பெற்றதாய்க் கூறுகின்றனர். தஞ்சைப் பெரிய கோயிலின் மாபெரும் கோபுரமும், கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள கோபுரமும்56[26] முறையே இராசராசன் - II காலத்திலும், அவன் திருக்குமாரன் இராசேந்திரன் - II காலத்திலும் கட்டப்பெற்றன வாய் வரலாற்றால் அறிகின்றோம். இவற்றால் பொறியியலும் சிற்பக்கலையும் அற்புதமாய் வளர்ச்சி பெற்றுள்ள நிலைகளைக் காணமுடிகின்றது. அவை கட்டப்பெற்ற தொழில் நுட்ப நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

இன்று அமெரிக்கா போன்ற மேலைநாடுகளிலுள்ள பெரிய நகரங்களில் விண்ணை முட்டும் பல்லடுக்கு மாளிகைகள் கட்டப்பெற்றுள்ளன. அவ்வளவு ஏன்? இன்று நம் நாட்டிலும் மும்பை, சென்னை, கல்கத்தா போன்ற நகரங்களில் பல்லடுக்கு மாளிகைகளைக் காண்கின்றோமல்லவா? சென்னை அண்ணா சாலையிலுள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கட்டடம்


பல்லடுக்கு மாளிகைக்கு நாம் நேரில் காணும் சான்று. இத்தகைய மாளிகைகள் இலங்கை மாநகரில் திகழ்ந்தன என்பதைக் கம்பன் காட்டுவான்.

“பொன்கொண்டு இழைத்த
        மணியைக்கொடு பொதித்த
மின்கொண்டு இழைத்த
        வெயிலைக்கொடு சமைத்த
என்கொண்டு இயற்றிய
        எனத்தெரிகி லாத
வன்கொண்டல் தாவி
        மதிமுட்டுவன் மாடம்.”57[27]

இயல்பில் பொன்னால் செய்யப்பெற்று மணிகள் பதிக்கப்பெற்றுள்ள முகில் மண்டலத்திலும் மேலாய் உயர்ந்து திங்கள் மண்டலத்தையும் எட்டும் மாடமாளிகைகள் “மின் கொண்டு இழைத்தனவோ? வெயிலைக்கொண்டு சமைத்தனவோ? இன்னபடிதான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாமல் திகைக்கும்படி இருந்தன” என்று கவிஞன் கூறும் பொழுது அக்காலத்துக் கட்டடப் பேரறிஞர்களின் திறமையை ஒருவாறு விளக்குகின்றது என்பதனை அறிகின்றோம்.

அவதாரங்கள் : மச்சம்முதல் கல்கி வரை திருமால் எடுத்த (எடுக்கும்) பத்து அவதாரங்களையும் ஆய்ந்தால் அது கூர்தல் அறக்கொள்கையை விளக்குவதாய் அமையும் என்ற ஒரு சிந்தனையும் உண்டு. எல்லா ஆழ்வார்களுமே எல்லா அவதாரங்களில் ஈடுபட்டுப் பாசுரங்களை அருளியுள்ளனர். பத்து அவதாரங்களையும் பாதி வெண்பாவில் அமைத்துக்காட்டி மகிழ்வார் காளமேகம்.

“மெச்சுபுகழ் வேங்கடவா வெண்பாவிற் பாதியில்என்
இச்சையிலுள் சென்மா எடுக்கவா - மச்சாகூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாராரா
மாகோபா லாமா வாய்”

(மச்சம் - மீன்; கூர்மம் - ஆமை; கோலம் - பன்றி; சிங்கம் - நரசிங்கம்; வாமனம் - குறள் வடிவம்; மா - குதிரை என்ற பாடலின் பின்னிரண்டு அடிகளிலும் பத்து அவதாரங்களும் பாங்குற அமைந்திருத்தலைக் கண்டு மகிழலாம்.


3. உயிரியல்

இன்று டார்வின் போன்ற அறிஞர்களால் குறிப்பிடப் பெறுவது கூர்தல் அறம் (Theory of Evolution) என்ற கொள்கையாகும். இக்கொள்கைபற்றி இன்னும் அறிவியலறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துகள் இல்லாமல் இல்லை. இத்தகைய கொள்கை போன்றதொரு கருத்தினை,

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாப் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்”58[28]

என்று மணிவாசகப்பெருமானும் கூறுவர்.

பலராமன் பிறப்பு : ஏழாவது முறை கருவுற்ற தேவகி கம்சனுக்குப் பயந்துகொண்டிருந்த போது அக்கருவில் வளர்ந்து பிறக்கும் குழவியைக் கம்சனிடமிருந்து தப்புவிக்க வேண்டும் என்பது எம்பெருமானின் திருவுள்ளம். ஆகவே, அக்கரு வசுதேவனின் மற்றொரு மனைவியாகிய ரோகிணியின் கருப்பைக்கு மாற்றப்பட்டுப் பலராமனாய்ப் பிறந்தது. இவனே கண்ணனுக்கு மூத்த பலராமன்; சங்க இலக்கியங்களில் ‘நம்பி மூத்தபிரான்’ என்று குறிப்பிடப்பெறுபவன் இவனே. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு (புதியது புனையும் ஆற்றல்) புராணத்தில் ‘கதைபோல்’ அடங்கிக்கிடக்கின்றது.

இதனை, இக்காலத்து மலட்டுப்பெண் கருத்தரிப்புடன் ஒப்பிட்டு நோக்கலாம். ‘மலடி வயிற்றில் ஒரு மகன் போலே; புதையல் எடுத்த ஒரு தனம் போலே’ என்பது ஒரு திருப்புகழின் அடிகள். புதையலில் தனம் கிடைத்தல் நடைபெறக்கூடியது. சிலருக்குக் கிடைத்ததாகவும் செய்தி உள்ளது. ஆனால், ‘மலடிக்கு மகன் பிறத்தல்’ என்பது சொல்லளவில்தான் இருந்து வந்தது. இன்றைய அறிவியல் இதனையும் மெய்ப்பித்துவிட்டது. அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தைச் சார்ந்த


பெண்கள் இருவர் மலடியர் என்று மெய்ப்பிக்கப்பெற்றவர்கள். அஃதாவது, அவர்களின் சூற்பைகளில் முட்டையணுக்கள் உண்டாவதில்லை. லாஸ் ஏஞ்சலிஸ் என்ற மருத்துவ மனையில் அவர்களிடம் கருத்தரிப்பு ஏற்படச்செய்து வெற்றிகரமாய்க் கருவுயிர்ப்பு நிகழும்படி செய்துள்ளனர், அந்த மருத்துவ மனையில் பணியாற்றிய மருத்துவ வல்லுநர்கள்.

இந்த இருபெண்களின் கணவன்மார்களின் விந்தணுக்கள் வேறு இரு பெண்களின் கருப்பைக்குள் செயற்கை முறையில் செலுத்தப்பெற்றன; அதனால் அந்தப் பெண்கள் கருவுற்றனர். பின்னர், அந்தப் பெண்களின் கருப்பையில் வளர்ந்து வந்த கருக்கள் வெளியே எடுக்கப்பெற்று, இந்த மலட்டுப்பெண்களின் கருப்பைக்குள் பொருத்தப்பெற்றன. அந்தப் பெண்களின் வயிற்றில் கருக்கள் வளர்ந்து வந்தன. உரிய காலத்தில் அவரவர் மகப்பேறும் அடைந்தனர். மேற்குறிப்பிட்ட பலராமனின் பிறப்பும் இத்தகையதே என்பதைச் சிந்தித்து உணரலாம்.

இந்த உத்தியில் வெற்றி கண்ட அறிவியல் அறிஞர்கள், மேதைகளின் விந்தணுக்களைச் சேகரித்துச் சேம நிதியாய்ப் பாதுகாக்கலாம் என்ற வழியைச் சிந்திக்கின்றனர். தலைநகரில் நடைபெற்ற கால்வழி இயல் அறிஞர்களின் மாநாட்டில்59[29] மேதைகளின் விந்தணுக்களையும் முட்டையணுக்களையும் வருபயன் நோக்கிச் சேமித்து வைப்பதுபற்றியும் குறிப்பிட்டனர். மகப்பேறு அற்றவர்களுக்கு மகப்பேறு அளிக்க இம்முறை துணை செய்வதோடு உயர்ந்த மரபைப் பாதுகாக்கும் பெருமையும் உண்டு என்பதையும் தெரிவித்தனர். ஆனால், இந்த முறை “ஒழுக்க சமூக அரசியல் நெறிமுறைகள் இவற்றினின்றும்” விலக்க முடியாத சூழ்நிலைகளும் ஏற்பட வழியுள்ளது என்பதையும் இவர்கள் குறிப்பிடாமல் இல்லை.


வள்ளுவர் வாக்கு : வள்ளுவர் பெருமான் பல்வேறு நிலையான உண்மைகளை மருந்து மாத்திரை போல் சிறிய குறள் வடிவில் தந்துள்ளார். அவற்றுள் ஒன்று

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.”60[30]

என்பது. இக்குறளின் கருத்து, பிறப்பியல் உண்மைப்படி பொருந்தாத கூற்றாகின்றது. வள்ளுவர் கூற்றினைப் பொய்யென்று அவ்வளவு எளிதாகவும் கூறிவிட முடியாது. அறிவு மரபு வழியாய் இறங்கும் என்று ஒப்புக்கொள்ளாமல் சூழ்நிலையால் - அடுத்த தலைமுறைக்கு முந்திய தலைமுறை அளிக்கும் வாய்ப்புகளால் - கடத்தப்பெறுகின்றது என்று கொண்டால் இவ்வுண்மை பொருந்தும் கூற்றாய் அமைகின்றது. நாம் நம்முடைய குழந்தைகளுக்குக் கடத்துவன நிறக்கோல்களே (Chromosomes); நம்மிடம் நேரிடும் மாற்றங்கள் யாவும் நம்முடைய கரு - அணுக்களுடன் (Germ-cell) சேர்ந்திருக்க வேண்டும்; அஃதாவது, ஒவ்வொரு சிறப்பியல்களை விளைவிக்கும் மாற்றங்கள் அவற்றிற்குக் காரணமாயுள்ள குறிப்பிட்ட நிறக்கோல்களிலுள்ள குறிப்பிட்ட ஜீன்களில் (Genes) சேரவேண்டும், இஃது அறிவியல் உண்மைப்படி சாத்தியமன்று என்பதற்கு எண்ணற்ற சோதனைகள் சான்றுகளாய் அமைகின்றன.

மரபுவழி இறங்காப் பண்புபற்றி ஒரு சொல். இளைஞர் ஒருவர் மதுபானம் பருகும் பழக்கம் இல்லாத நிலையில் மகப்பேறு அடைகின்றார். பத்தாண்டுகளுக்குப் பிறகு போரில் தொண்டாற்றியதன் விளைவாய் மதுபானப் பழக்கம் அவருக்கு ஏற்படுகின்றது; எப்பொழுதும் மயக்க நிலையிலேயே இருக்கின்றார். இப்பொழுது அவருக்கு ஒரு குழந்தை பிறக்கின்றது. இந்த இரு குழவிகளுள், இரண்டாவது குழந்தை குடிப்பழக்கத்தை மேற்கொள்ளக்கூடும். இஃது இரண்டாவது குழந்தைக்குத் தந்தையிடமிருந்து பெற்ற ஜீன்களிடையே மதுபானப் பழக்கம் இருப்பதால் பெற்றதன்று; ஜீன்களிடையே அத்தகைய பழக்கம் ஒன்றும் இல்லை. முதல் மகன் குடிவெறி இல்லாத அமைதியான சூழ்நிலையில் வளர்க்கப்பெற்றதால் அவனிடம் அப்பழக்கம் அமைய வழி இல்லை. இரண்டாவது மகன் குடிவெறி நிலவும் சூழ்நிலையில் வளர்ந்ததால் அவனிடம்


அப்பழக்கம் அமைவதற்கு வழி ஏற்படுகின்றது. மதுபானப் பழக்கம் மரபு வழியாய் இறங்கும் ஒரு பண்புக்கூறு அன்று; அது சூழ்நிலையால் பெறும் பண்பாகும்.

“தக்கார் தகவிலர் என்ப அவரவர்
எச்சத்தாற் காணப் படும்” (குறள் - 114)

என்ற குறள் கூறும் கருத்தும் இதுவேயாகும். ‘தாயைத் தண்ணீர்த்துறையில் பார்த்தால் பெண்ணை வீட்டில் பார்க்க வேண்டியதில்லை’ என்ற உலகியல் பழமொழியும் இதனையே வற்புறுத்துகின்றது. எனவே, மரபுவழியும் சூழ்நிலையும் இடைவிடாது இடைவினை புரிவதாலேயே மக்களிடம் பண்புகள் அமைகின்றன என்பது பெறப்படும். மரபுவழி தவறிய இடத்தில் சூழ்நிலை அதனை நிறைவு செய்யும். எடுத்துக்காட்டாய், ஓர் இசைப்புலவனின் மகனிடம் இசைப்புலமை மரபுவழியாய் இறங்காது. அவன் தன் மகனுக்கு அளிக்கும் பயிற்சியாலும் வாய்ப்பாகத் தரும் சூழ்நிலையாலும் அவனுடைய மகனும் சிறந்த பாடகனாய்த் திகழ ஏதுவுண்டு.

கபிலரகவல் : நிறக்கோல்கள் பொருந்தா நிலையைக் கபிலரகவல் குறிப்பிடுகின்றது.

“பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே
அவ்விரு சாதியில் ஆண்பெண் மாறிக்
கலந்து கருப்பெறல் கண்ட துண்டோ?
ஒருவகைச் சாதியாம் மக்கட் பிறப்பில்
இருவகை யாகநீர் இயம்பிய குலத்து
ஆண்பெண் மாறி அணைதலும் அணைந்தபின்
கருப்பொறை உயிர்ப்பதும் காண்கின் றிவீரோ?
எந்நிலத் தெந்தவித் திடப்படு கின்றதோ
அந்நிலத் தந்தவித் தங்குரித் திடுமலால்
மாறிவே றாகும் வழக்கமொன் றிலையே.61[31]

(கருப்பொறை உயிர்ப்பு - பிள்ளை பெறுதல்; அங்குரித்தல் - முளைத்தல்)

என்ற கபிலரகவல் பகுதியில் ஓர் அறிவியல் உண்மை அடங்கியிருப்பதாய்க் கருதலாம்.


வெவ்வேறு இனத்தைச் (Species) சார்ந்த இருபிராணிகளிடையே நிறக்கோல்கள் பொருந்தா நிலை ஏற்படுகின்றது என்பது உயிரியல் காட்டும் உண்மை. எடுத்துக்காட்டாய், ஒரு பூனையும் நாயும் கலவி புரிந்து குட்டியினை ஈன முடியாது. இங்ஙனமே வாத்தும் கோழியும் இணைந்து இனப்பெருக்கம் செய்தல் முடியாது.

இயற்கை அன்னை இரண்டையும் இணைய வைப்பதில்லை. இதனால் இனம் காக்கப்பெறுகின்றது. பூனை இனமும் நாய் இனமும் வாத்து இனமும் கோழி இனமும் மாறாமல் காக்கப் பெறுகின்றன. இஃது ஓர் உயிரியல் உண்மை. ஆயினும், ஒரு குதிரையும் கழுதையும் (Donkey) கலவி புரிந்து, ஒரு கோவேறு கழுதை (Mule)யை உண்டாக்கலாம். ஆனால், கோவேறு கழுதையிடம் இனப்பெருக்கத்திற்குக் காரணமான பாலணுக்கள் உண்டாவதில்லை. முரண்பாடுள்ள நிறக்கோல்களே இதற்குக் காரணமாகும். ஆனால், சில அரிய சந்தர்ப்பங்களில், பல சிக்கலான காரணங்களால், பெண் கோவேறு கழுதைகள் கருத்தரிக்கும் தன்மையைப் பெறுகின்றன. ஆனால், ஆண் கழுதைகள் மலடாகவே உள்ளன. இதனால் கோவேறு கழுதைகள் நேர்முறையில் பல்கிப் பெருகமுடியாது என்பது அறியத்தக்கது. மேலும், சிங்கமும் புலியும் பிறப்பியல் அடிப்படையில் வேறுபட்டாலும், சில சமயம் இணைந்து “சிம்மம்” (Tiglon) என்னும் ஒரு வகைப் பிராணிகளை உண்டாக்குகின்றன என்று கூறுகின்றனர்.

மனத்தில் பதியுமாறு இன்னோர் உண்மை கபிலரகவலில் காணமுடிகின்றது.

“பூசுரர் புணர்ந்து புலைச்சியர் ஈன்ற
புத்திர ராயினோர் பூசுரர் அல்லரோ?
பெற்றமும் எருமையும் பேதமாய்த் தோன்றல்போல்
மாந்தரில் பேதமாம் வடிவெவர் கண்டுளார்?
வாழ்நாள் உறுப்புமெய் வண்ணமோ டறிவினில்
வேற்றுமை யாவதும் வெளிப்பட லன்றே”62[32]

என்ற பகுதியால், மானிட இனம் முழுவதும் ஒரே பிரிவினைச் சார்ந்தது என்ற உண்மை விளக்கப்பெறுகின்றது. ஆகவே, ஒரு கருநிறப் பெண்ணுக்கும் வெண்ணிற ஆணுக்கும் பிறக்கும்


குழவிகள் யாவும் மலடற்று இருக்கும். கோழியும் வாத்தும் வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவையாதலின் அவற்றின் கலவியினால் சந்ததியே தோன்றாமல் போயினும் போகலாம். அப்படித் தோன்றினாலும் அந்தச் சந்ததிகள் மலடாகவே இருக்கும் (எ-டு: கழுதை x குதிரை) என்பது அறியத்தக்கது.

சிகண்டி : துருபதனுக்கு மூன்றாவது பெண்பிள்ளையாய்ப் பிறந்து, பிறகு ஆணாய் மாறியவள். முற்பிறப்பில் இவள் அம்பை (காசியரசன் மகள்). காசியரசன் நியமித்த சுயம் வரத்தில் வீடுமன் அவன் புத்திரிகளாகிய அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகிய மூவரையும் வலிதிற்கவர்ந்து, தம் தம்பியர் விசித்திரவீரியன் சித்திராங்கதனுக்கு மணம் செய்விக்க முயலுகையில், அம்பை, முன்பே தான் தன் தந்தையால் சாளுவ அரசனுக்குக் கொடுக்கப்பெற்றவள் என்று அறிவர் கூற, விடுமன் அவளைச் சாளுவனிடம் அனுப்பினார். அம்பை, ஒருவனால் வலிதில் கொள்ளப்பட்டவளாகையால் அவனை மணக்கச் சாளுவன் மறுத்தனன். ஆதலால், அம்பை தவம் செய்து, வீடுமன் உயிரைப் போக்குவதாய்ச் சூளுரைத்துத் தீயிற்பாய்ந்து உயிர் துறந்தாள். காளி தேவியின் வரத்தால் துருபதனுக்கு மூன்றாவது மகளாய்ப் பிறந்தாள் என்பது வரலாறு. வீடுமனும், ஒரு பெண்ணுக்கு எதிராய் ஆயுதத்தைத் தொடுவதில்லை என்று சூளுரைத்திருந்தார்.

பாரதப் பெரும் போரில், பத்தாம் நாள் போரில், கண்ணன் சிகண்டியைக் காண்டிபன் அருகில் இருக்க வைத்தான். உடனே விடுமன் வில்லைக் கீழே போட, பார்த்தன் பரந்தாமன் ஆணைப்படி வீடுமன்மீது அம்பெய்து மூர்ச்சை அடையச் செய்தனன். வீடுமன் - அம்பை - சிகண்டி வரலாறு விடுமனுக்கும் கண்ணனுக்கும் மட்டிலுந்தான் தெரியும்.

நவீன ஆராய்ச்சியில், பெண் பூப்பெய்தும் பருவத்தில் ஆணாய் மாறும் விந்தையைக் கண்டுள்ளனர். இலட்சக் கணக்கான மங்கையருள் யாரோ ஒருவர் இவ்வாறு மாறி இருப்பதைச் செய்தித்தாள்மூலம் அறிந்துள்ளோம். பல்லாண்டுகளுக்கு முன்னர்ச் செய்தித்தாளில் பழநியம்மாள் பழநியப்பன் ஆனார் என்று வேடிக்கையாய்ச் செய்தி வெளியிடப் பெற்றிருந்தது. இந்நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது என்பதாய் நினைவு.

புராணக் குசேலர் : நம் நாட்டுப் புராணக்குசேலருக்கு இருபத்தேழு குழவிகள் இருந்தன என்பதை நாம் அறிவோம். அக்குழவிகள் கஞ்சிக்காப் படும் பாட்டை,

“ஒருமகவுக் களித்திடும்போ தொருமகவு
        கைநீட்டும்; உந்திமேல் வீழ்ந்து
இருமகவும் கைநீட்டும்; மும்மகவும்
        கைநீட்டும் என்செய் வாளால்;
பொருமியொரு மகவழும்; கண் பிசைந்தழும்மற்
        றொகுமகவு; புரண்டு வீழாப்
பெருநிலத்திற் கிடந்தழுமற் றொருமகவெங்
        ஙனம்சகிப்பாள் பெரிதும் பாவம்.

அந்தோவென் வயிற்றெழுந்த பசியடங்கிற்
        றில்லையென அழுமாம் ஓர்சேய்;
சிந்தாத கஞ்சிவார்க் கிலையெனக்கன்
        னாயெனப்பொய் செப்பும் ஓர்சேய்
முந்தார்வத் தொருசேய்மி சையப்புகும்போ
        தினியோர்சேய் முடுகி யீர்ப்ப
நந்தாமற் றச்சேயும் எதிரீர்ப்பச்
        சிந்துதற்கு நயக்கும் ஓர்சேய்”63[33]

வல்லூர் தேவராசப் பிள்ளை வருணித்து நமக்கு மகிழ்வூட்டுவர். இதனால் குழவிகள் யாவரும் சிறுவயதினராயிருந்தனர் என்று ஊகஞ்செய்யலாம். ஆகவே, சுசீலைக்குப் பல குழவிகளையுடைய பல குழந்தைப் பேறுகள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கொள்வது தவறுடையதாகாது. இப்படிக் கொண்டால் தான் கவிஞருடைய கற்பனை பொருந்துவதாக அமையும். அந்தக் கற்பனைக்கும் அறிவியல் அடிப்படையில் நல்ல விளக்கமும் ஏற்பட ஏதுவாகும்.

இதனை விளக்குவதற்கு இரட்டைப் பிறவிகள், இவற்றில் ஒரு கரு இரட்டையர், இருகரு இரட்டையர், இயல்பிகந்த இரட்டையர் போன்ற அறிவியல் கருத்துகளையும்; இரண்டுக்கு மேற்பட்ட பிறவிகளையும் இவற்றில் முக்கோவைக் குழவிகள் (Triplets), நாற்கோவை குழவிகள் (Quadruplets), ஐந்து


கோவைக் குழவிகள் (Quintuplets), எண் கோவைக் குழவிகள் (Octuplets) ஆகியவை பற்றியும் தெளிவாய் விளக்குதல் வேண்டும்.

கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய உயிரணுக்களிலிருந்து மானிட உயிர் தோன்றுவதும், பல்வேறு சிக்கலான அமைப்புகளையும் பண்புகளையும் கொண்ட ஒரு மனிதன் உருப்பெறுவதும் வியப்பினும் வியப்பேயாகும். அந்தச் சிறிய உயிரணுக்களிலிருந்தே இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று சில சமயம் ஒரே மாதிரியான பல குழவிகள் தோன்றுவதைக் காணும்பொழுது நம்முடைய வியப்பு பன்மடங்கு அதிகரிக்கின்றது. இயற்கையின் இரகசியம் புரிந்துகொள்ள முடியாத புதிராய் இருப்பதைக் கண்டு இறும்பூது அடைகின்றோம். ஈண்டு இங்ஙணம் பல விதக் குழவிகள் பிறப்பதை விளக்குவேன்.

இரட்டைக் குழவிகள் : இரட்டைப் பிறவிகள் இருவகையில் உண்டாகலாம். கருவுற்ற ஒரே முட்டையிலிருந்து இரண்டு குழந்தைகள் உண்டாகின்றன. கருவுற்ற முட்டை பிரிவுபட்டு உண்டான கருப்பத்தில் உள்ள உயிரணுக்களின் தொகுதி இரண்டு பகுதிகளாகப் பிரிந்து ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குழந்தையாக வளரும். வளர்ச்சியின் முதல் நிலையில் எல்லா உயிரணுக்களுக்கும் குழந்தையின் எல்லாப் பகுதிகளாய் வளரும் ஆற்றல் உண்டு. இவ்வாறு பிறக்கும் குழவிகளின் தோற்றம், தன்மை, உயரம், நிறம், உறுப்புகளின் அமைப்பு முதலிய மரபு வழிக் கூறுகள் அனைத்திலும் ஒரே மாதிரியாகவே இருக்கும்; இரண்டும் ஆணாய் இருக்கும்; அல்லது பெண்ணாய் இருக்கும். அஃதாவது, இவ்வகைக் குழவிகளில் பால் வேற்றுமை இராது. ஒவ்வொரு குழவிக்கும் தனித்தனிப் பணிக்குடமும், தனித்தனிக் கொப்பூழ்க்கொடியும் இருக்கும். கொப்பூழ்க்கொடிகள் இரண்டும் ஒரே நஞ்சுடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய இரட்டைப் பிறவிகளை ஒருகரு இரட்டையர் (Identical twins) என்றும், அச்சு இரட்டையர் என்றும் வழங்குவர். நம் காலத்தில் வாழ்ந்த ஆர்க்காட்டுச் சகோதரர்களை இவ்வகைக்கு எடுத்துக் காட்டாய்க் கொள்ளலாம்.

இருமுட்டைகள் கருவுறுவதால் உண்டாகும் இரட்டையர் இருகரு இரட்டையர் (Fraternal twins) வழங்கப்பெறுவர். இவர்கள் சகோதர இரட்டையர் எனவும் வழங்கப்பெறுவர். சாதாரணமாய், மாதத்திற்கு ஒரு முட்டைதான் முதிர்ந்து கருக்குழலில் செல்லும்; சில சமயங்களில் இரு முட்டைகள் (இரு சூற்பைகளிலிருந்து?) முதிர்ச்சியுற்றுச் சூற்பைகளிலிருந்து வெளிப்பட்டுக் கருக்குழலில் (Pellopion tube) செல்வதுண்டு. ஒவ்வொரு முட்டையிலும் ஒவ்வொரு விந்தணு புகுந்து இரு முட்டைகளும் கருவுறும். இவ்வாறு கருவுற்ற முட்டைகள் கருப்பையில் (Womb) வெவ்வேறு இடங்களில் பதிந்துகொண்டு வளரும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பனிக்குடமும், தனித்தனிக் கொப்பூழ்க்கொடியும் (Umbilical cord), தனித்தனி நஞ்சும் (Placenta) இருக்கும். இவ்வாறு பிறக்கும் இரட்டைக் குழவிகள் உருவம், தன்மை, உயரம் முதலானவற்றில் ஒரே மாதிரியாய் இருக்க வேண்டும் என்பதில்லை; ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண்ணாகவும் அமையலாம்; அல்லது இரண்டும் ஆணாகவோ, பெண்ணாகவோ அமையலாம். இரு முட்டைகளின் திறக்கோல்கள் பிரியும் பொழுது இரண்டனுடைய நிறக்கோல்களும் ஒரே மாதிரி அமையும் என்று சொல்வதற்கில்லை. ஒரு முட்டையில் தாய்வழிப் பாட்டனிடமுள்ள திறக்கோல்கள் அதிகமாகவும், மற்றொன்றில் தாய்வழிப் பாட்டியிடமுள்ள நிறக்கோல்கள் (Chromosomes) அதிகமாகவும் அமையலாம். மேலும், இந்த இரு முட்டைகளும் வெவ்வேறு முறையில் அமைந்த நிறக்கோல்களைக் கொண்ட இரு தனிப்பட்ட விந்தணுக்களரல் கருவுறுகின்றன. இதனால்தான் இவை பல பண்புக் கூறுகளில் வேற்றுமையுடன் அமைகின்றன. இதனால்தான் நிறம், உரோம வளர்ச்சி, உயரம், உறுப்புகளின் அமைப்பு, தோற்றம் முதலானவற்றில் சாதாரணமாய் சகோதர, சகோதரிகளிடம் காணப்பெறுவதைப் போலவே இவையும் வேறுபாடுகளுடன் அமைகின்றன.

கருவுற்ற முட்டையிலுள்ள உயிரணுக்களின் தொகுதி இரு பகுதிகளாகப் பிரியும்பொழுது முற்றிலும் இரண்டாய்ப் பிரியாமல் போகுமாயின் இயல்பிகழ்ந்த இரட்டைகள் பிறப்பதற்கு ஏதுவாகும். இவை வெவ்வேறு நிலைகளில் ஒட்டிய பாங்கில் பிறக்கும். இவற்றை ஒட்டுப்பிறவிகள் (Conjoined twins) என்று வழங்குவர். முதன் முதலில் இத்தகைய பிறவிகளுள் ஒன்று உயிருடன் சயாம் நாட்டிலிருந்து வந்ததைக் கண்டதால் இவ்வகைப் பிறவிகளை சயாம் இரட்டையர் (Siamese twins) என்று வழங்குகின்றனர். சாதாரணமாய் ஒட்டுப் பிறவிகள் உடலில் ஒரு பகுதி (எ-டு: இடுப்பு) தலை, பக்கங்கள் ஆகியவற்றில் ஏதாவது, ஓரிடத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும். பெரும்பாலும், சயாம் இரட்டையர் அச்சு இரட்டையராய் இருப்பர்.

இரட்டைப் பிறவிகள் ஏற்படுவது ஒரு மரபுவழிப் பண்பு என்று அறியக்கிடக்கின்றது. சில குடும்பங்களில் இப்பண்பு அடிக்கடி தலைகாட்டுவதாய் ஆராய்ச்சிகளால் அறிகின்றோம். ஒரே தாயிடம் தொடர்ந்தாற்போல் பல பிறவிகளையுடைய குழந்தைப்பேறு ஏற்படக் காண்கின்றோம். ஒர் ஆஸ்திரியப் பெண்மணி 69 குழந்தைகளுக்குத் தாயான செய்தியை அறிகின்றோம். புராண சுசீலையையும் இவள் தோற்கடித்து விட்டாள், குழந்தை பெறுவதில்! அப்பெண்மணி நான்கு தடவைகள் நாந்நான்கு குழந்தைகளையும், ஏழு தடவைகள் மும்மூன்று குழந்தைகளையும் பெற்றெடுத்ததாக அறியக் கிடக்கின்றது.

முக்கோவைக் குழவிகள், நாற்கோவைக் குழவிகள், ஐங்கோவைக் குழவிகள், ஐந்திற்கு மேற்பட்ட குழவிகள் விரிவஞ்சி விளக்கப்பெறவில்லை.[34]

மேலே குறிப்பிட்ட சுசீலை என்பவருக்குப் பிறந்த 27 குழந்தைகளில் ஆண் பெண் குழந்தைக ளாகக் கலந்தும் இருக்கலாம். கவிஞர் இவர்களைப் பிரித்துக்

கூறவில்லை.

4. வானியியல்

வானியல் (Meteorology) பற்றிய ஒருசில கருத்துகளையும் இலக்கியங்களில் காண்கின்றோம். மேலே செல்லச் செல்லக் காற்று இலேசாய் இருக்கும் என்பது விண்வெளி ஆராய்ச்சியால் பெறப்படும் உண்மையாகும். கடல்மட்ட அளவில் பத்து மைல் உயரத்தில் காற்று பத்தில் ஒரு பங்காகிவிடுகின்றது என்றும், இருபது மைல் உயரத்தில் அது கிட்டத்தட்ட நூறில் ஒரு பங்காய்க் குறைந்துவிடுகின்றது என்றும், முப்பது மைல் உயரத்தில் அஃது ஆயிரத்தில் ஒரு பங்காகிவிடுகின்றது என்றும் இந்த ஆராய்ச்சியால் அறிகின்றோம். இத்தகைய ஓர் உண்மையைக் கம்பநாடன் மிகச் சமத்காரமாய்க் கூறுவன். இலங்கையிலுள்ள மாளிகைகள் தேவர் உலகை எட்டும்படியாய் உள்ளன. மேருவையும் வருத்தக்கூடிய பேராற்றல் வாய்ந்த காற்று அந்த உயரத்தில் தென்றலாய் வீசுகின்றதாம்.

“நாகா லயங்களொடு
        நாகர்உல கும்தம்
பாகார் மருங்குதுயில்
        என்னஉயர் பண்ப;
ஆகாயம் அஞ்சஅகன்
        மேருவை அணுக்கும்
மாகால் வழங்குசிறு
        தென்றல்வர கின்ற.”65[35]

(அணுக்குதல் - வருத்துதல்; மாகால் - பெருமையுடைய காற்று; வழங்கு - இனிதாய் அளிக்கப்பெறுகின்ற)

என்பது கம்பன் வாக்கு. மிக்க வலிமையையுடைய காற்றுக் கடவுளும் இராவணனிடத்து அச்சத்தால் அடங்கித் தென்றலாய் இனிது வீசப்பெற்றிருந்தனன் என்று கவி சமத்காரமாய்க் கூறுவதை அறியலாம். அறிவியல் கருத்து ஈண்டு நயமாய்க் கூறப்பெற்றுள்ளது.


3. மருத்துவ இயல்

தமிழ் இலக்கியத்தில் மருத்துவ இயல்பற்றிய செய்திகளையும் சிகிச்சை முறைகளையும் காணலாம். திருக்குறளிலுள்ள ‘மருந்து’ என்ற அதிகாரத்தில் நோய்கள் வருவதன் காரணங்களையும், அவை வாராது தடுக்கும் முறைகளையும், அவை வந்தால் தவிர்க்கும் வழிவகைகளையும்பற்றிய செய்திகள் தரப்பெற்றுள்ளன.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.”66[36]

என்பது வள்ளுவம். நோய் வருவதன் காரணத்தையும், நோய் இன்னதென்பதையும் ஐயமறத் துணிந்து மருந்து செய்தல், உதிரங்களைதல், அறுத்தல், சுடுதல் முதலிய முறைகளை மேற்கொண்டு அந்நோயைப் போக்க வேண்டும் என்பது பண்டைய மருத்துவ முறையாகும். இன்றைய மருத்துவ முறையும் இதனையொட்டியே உள்ளது. அங்ஙனமே, நோயற்றவனின் வயது முதலியவற்றையும், அவனுடைய வேதனை, வலி முதலியவற்றையும், காலவேறுபாடுகள் முதலியவற்றையும் நோக்கிச் சிகிச்சை செய்தல் வேண்டும். இதனை,

“உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.”67[37]

என்று குறிப்பிடுவர், வள்ளுவப்பெருந்தகை. இங்ஙனம் பல கருத்துகள் இவண் கூறப்பெறுகின்றன.

கண் முதலிய நுட்பமான பகுதிகளில் இரும்புத்தூள் முதலியவை புகுந்துகொண்டால் காந்தத்தைக்கொண்டு இக்காலத்தில் சிகிச்சை செய்கின்றனர். பண்டையோரும் இம்முறையை அறிந்திருந்தனர் என்பதைக் கம்பன் காட்டுகின்றான். இராவண வதம் முடிந்த பிறகு தயரதன் உம்பருலகிலிருந்து நில உலகிற்கு வந்து இராமனுடன் உரையாடும்பொழுது தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றான். இதனைக் கவிஞன்,


“அன்று கேகயன் மகள்கொண்ட
        வரம்எனும் அயில்வேல்
இன்று காறும்என் இதயத்தில்
        இடைநின்ற தன்னைக்
கொன்று நீங்கலது இப்பொழுது
        அகன்றதுஉன் குலப்பூண்
மன்றல் ஆகமாம் காந்தமா
        மணியின்று வாங்க”68[38]

(அயில்வேல் - கூரிய வேல்; மன்றல் - மணம்; ஆகம் - மார்பு)

என்று குறிப்பிடுவான். அன்று கைகேயி தன் இதயத்தில் பாய்ச்சின வரம் என்னும் கூரிய வேல், இன்று இராமனைத் தழுவியதனால் அவன் மார்பாகிய காந்தம் அதனை வாங்கிவிட்டது என்று கூறுவதில் நவீன சிகிச்சை முறையின் குறிப்பைக் கண்டு மகிழலாம்.

கருவுயிர்த்த மங்கையர், குழந்தையை நீராட்டி மருந்தூட்டி வளர்க்கும் திறம் சீவக சிந்தாமணியில் காட்டப்பெற்றுள்ளது.

“காடி யாட்டித் தராய்ச்சாறும்
        கன்னல் மணியும் நறுநெய்யும்
கூடச் செம்பொன் கொளத்தேய்த்துக்
        கொண்டு நாளும் வாயுறீஇப்
பாடற் கினிய பகுவாயும்
        கண்ணும் பெருக உகிர்உறுத்தித்
தேடித் தீந்தேன் திப்பிலிதேய்த்(து)
        அண்ணா உறிஞ்சி மூக்குயர்த்தார்.”69[39]

(காடி - கஞ்சி; தராய்ச் சாறு - பிரமிச்சாறு; கன்னல்மணி - கருப்புக்கட்டி; வாயுறீஇ - வாயில் உறுத்தி; பெருக - பெரிதாகும்படி; உகிர் உறுத்தி - நகத்தால் அகலமாம்படி செய்து; அண்ணா - உண்ணாக்கு)

என்ற பாடலில், குழந்தை பிறந்தவுடன் அதற்குச் செய்யும் செயல்கள் இதில் குறிப்பிடப்பெறுகின்றன. செய்திகளை எண்ணி எண்ணி மகிழலாம். நவீன மருத்துவர்களும் அறியாத எவ்வளவு செய்திகள் இதில் காட்டப்பெறுகின்றன!6. கணித இயல்

கவிஞன் வாக்கில் கணித உண்மை கற்பனையாய்க் காட்டப்பெறுகின்றது. ஒரு வடிவக் கணிதத்திலுள்ள (geometry) தேற்றம் (Theorem) ஒன்றையும் கவிதை ஒன்றனையும் கற்பிப்பதிலுள்ள வேற்றுமையை எண்ணிப்பார்த்தால் இது தெளிவாய்ப் புலனாகும். தேற்றத்தைக் கற்பிக்கும் பொழுது ஆசிரியர் தாம் கற்பிக்கப்போகும் தேற்றத்தின் உண்மையைத் திட்டமாய் அறிந்துகொண்டுள்ளார். எனவே, நம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் அதனைக் கற்பிக்கும் பணியில் இறங்கு கின்றார். ஆனால், கவிதை கற்பிக்கும் பெரும்பாலோருக்குத் தாம் கற்பிக்கும் கவிதை மேற்குறிப்பிட்ட தேற்றத்தைப் போன்று உண்மையானதாய்த் தோன்றுவதில்லை: அஃது அழகையும் இன்பத்தையும் நல்க வல்லதாய் இருப்பினும், தேற்றத்தில் பொதிந்துள்ள உண்மையைப் போல், அ.து. அவர்கட்குப் புலனாவதில்லை; அவர்கள் மனத்தைக் கவ்வுவதுமில்லை. ஆயின், கவிதை கூறும் உண்மைதான் என்ன? கவிதை வாழ்க்கையின் உண்மைகளைக் கூறுகின்றது. "கவிதை, வாழ்விலிருந்து மலர்ந்தது; வாழ்விற்கே உரியது; வாழ்விற்காகவே நிலைபெற்றுள்ளது"70 என்று அட்சன் என்ற திறனாய்வாளர் கூறுவது ஈண்டுச் சிந்தித்தற்குரியது. பொருள்களின் தன்மைக்கேற்றவாறு காணச்செய்வது, அறிவியல்; நடந்ததை நடந்த படியே உணர்த்துவது, வரலாறு; எப்படி இருந்தது என்பதைக் கூறுவது, கணிதம். 4 + 4 = 8 என்பது போல் கூறுவது. வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவது கவிதை. அரிஸ்ட்டாட்டில் கூறுவதுபோல, "கவிதையின் படைப்புகள் மெய்ம்மையானவை அல்ல; ஆனால், உயர்ந்த உண்மைத் தத்துவம் அமைந்தவை. எப்படி இருக்க வேண்டுமோ அவை களேயன்றி, எப்படி உள்ளனவோ அவை அல்ல” என்பதைப் புரிந்துகொண்டால் கவிதை கூறும் உண்மை ஒருவாறு புலனாகும்.

கணித உண்மையையே கற்பனை கலந்த உண்மையாய் அற்புதமாய்க் கூற வல்ல ஆற்றல் மிக்கது, கவிதை. கம்பனின்
70. Poetry is made out of life, belongs to life, exists for life" - Hudson : An

Introduction to the study of Literature - p.92.

இராம காதையில் ஒரு நிகழ்ச்சி - மூல பலம் இலங்கையில் வந்து திரளுகின்றது: எல்லாத் திக்குகளிலிருந்தும் எண்ணற்ற அரக்கர்கள் வந்து சேர்கின்றனர். வந்த சேனையின் அளவைக் கணக்கிட்டுக் கூறும்படி கேட்க, அதற்குத் தூதுவர், “இச்சேனையின் ஆயிரம் வெள்ளம் என உரைப்பர், பித்தர்; கணித நூலிலுள்ள உச்ச எண்ணே இதனை அளவிட்டு உரைத்தற்குச் சாலாது”71[40] என்று பதிலிறுக்கின்றனர். ‘வெள்ளம்’ என்ற அளவினை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தொன்றுதொட்டு வழங்கிய தமிழ் எண்களையும், இடைக்காலத்தில் வந்து புகுந்த வடமொழி எண்களையும் பிங்கலந்தை என்ற நிகண்டு நூல் பின்வருமாறு வகைப்படுத்தித் தொகுத்துரைக்கின்றது.

“ஏகம் எண்மடங்கு கொண்டது கோடி”

“கோடி எண்மடங்கு கொண்டது சங்கம்”

“சங்கம் எண்மடங்கு கொண்டது விந்தம்”

“விந்தம் எண்மடங்கு கொண்டது குமுதம்”

“குமுதம் எண்மடங்கு கொண்டது பதுமம்”

“பதுமம் எண்மடங்கு கொண்டது நாடு”

“நாடு எண்மடங்கு கொண்டது சமுத்திரம்”

“சமுத்திரம் எண்மடங்கு கொண்டது வெள்ளம்”

இம்முறைப்படி நோக்கினால் எட்டாம் தானத்தது கோடி (10000000). பதினைந்தாம் தானத்தது சங்கம். இருபத்திரண்டாம் தானத்தது விந்தம். இருபத்தொன்பதாந்தானத்தது குமுதம் (ஆம்பல்). முப்பத்தாறாம் தானத்தது பதுமம் (தாமரை). நாற்பத்து மூன்றாம் தானத்தது நாடு (குவளை). ஐம்பதாம் தானத்தது சமுத்திரம் (நெய்தல்). ஐம்பத்தேழாம் தானத்தது வெள்ளம் என்பன புலனாகும். இதனை இக்காலக் கணக்குப்படி 10 + 7 + 7 + 7 + 7 + 7 + 7 + 7 = 10 என்று எழுதலாம். இந்தக் கணித எண்ணை மனத்தால் அறிந்து பார்ப்பது எளிதன்று. கணித உண்மை நம் சிந்தனையை எட்ட முடியவில்லை. ஆனால், இந்தச் சேனையின் அளவைக் கவிதை உண்மையால் காண்போம். மூலபலம் முழுவதும் ஏழரை நாழிகைக்குள் (மூன்று மணிக்குள் - 3 முகூர்த்த காலம்) அழிந்துபடுகின்றது. இதனைக் கம்பநாடன்.


"ஆனை ஆயிரம் தேர்பதி னாயிரம்
அடல்பரி ஒருகோடி,
சேனை காவலர் ஆயிரம் பேர்படின்,
கவந்தம் ஒன்று எழுந்தாடும்:
கானம் ஆயிரம் கவந்தம்நின்று ஆடிடின்
கவின்மணி கணில்என்னும்
ஏனை அம்மணி ஏழரை நாழிகை
ஆடியது இனிதன்றே.”72

என்று கூறுவான். ஆயிரம் யானைகள், பதினாயிரம் தேர்கள், ஒருகோடி குதிரைகள், ஆயிரம் சேனைக்காவலர்கள் இறந்துபட்டால் தலையில்லாத பேய் (கவந்தம்) ஒன்று எழுந்து ஆடுமாம். ஆயிரம் கவந்தங்கள் ஆடினால் இராமனது கோதண்டத்தில் கட்டப்பெற்றுள்ள அழகிய மணி ஒருமுறை "கணில்" என ஒலிக்குமாம். ஆனால், இராமனது மூல பல வதைப் போரில் அம்மணி தொடர்ந்து, தீயணைக்கும் படையினர் செல்லும் மோட்டார் வண்டியில் ஒலிக்கும் மணிபோல், ஏழரை நாழிகை ஒலித்ததாம். கவிஞன் கூறும் இந்த உண்மையைக் கொண்டு அழிந்துபட்ட மூல பலச் சேனையின் அளவினை ஒரளவு நம் மனத்திரையில் அமைத்துக்கொள்ள முடிகின்றது. மூலபலத்தின் அளவை நாம் நன்கு உணர்ந்துகொள்கின்றோம். கணித உண்மையைவிடக் கவிஞன் கூறும் உண்மை இதற்கு நன்கு பயன்படுகின்றது. இதிலிருந்து, கவிதை உண்மையின் தன்மையை ஒருவாறு நாம் புரிந்துகொள்ளலாம்.

மெய்ம்மைகளை (Facts) அப்படியே இருந்தவாறே கூறுவது கவிதை உண்மையன்று; அவற்றைத் திரித்துக் கூறுவதும் அ.தன்று; திரித்துக் கூறுவது பொய்ம்மை; புனைந்துரை. மெய்ம்மைகளை அப்படியே கூறுவது, அறிவியல். இங்ங்னம் பல்வேறு உண்மைகளை, மெய்ம்மைகளை, உணர்ச்சியுடன் உணரச்செய்வது கவிதை உண்மையாகும். அது நம் உள்ளத்தில் இன்ப உணர்ச்சிகளையோ துன்ப உணர்ச்சிகளையோ, நம்பிக்கையையோ அச்சத்தையோ, வியப்பினையோ சமய ஈடுபாட்டையோ எழுப்ப வல்லது. எனவே, கவிதை உண்மை என்பது, பொருள்களை இருந்தபடியே எடுத்துரைப்பதன்று.

72. கம்பரா.யுத்த மூலபலம் - 228. வில்லி பாரதத்திலும் இதே மாதிரி ஒரு

கணக்கு உள்ளது. அவற்றின் அழகையும் மர்மத்தையும், கவர்ச்சியையும், அவை நமக்குப் பொருள் விளக்கம் தரும் முறையினையும் எடுத்துரைப்பதாகும். சுருங்கக் கூறின், கவிதை உண்மை என்பது கற்பனை மூலமும் உணர்ச்சிகளின் மூலமும் நம் வாழ்க்கையின் உண்மையை எடுத்துரைப்பதாகும். வாழ்க்கையிலும் மனிதப் பண்பிலும் உள்ள பொதுத் தன்மையை எடுத்துரைப்பதே கவிதையின் நோக்கமாகும்.

வாழ்க்கை உண்மைகள் : வாழ்க்கை என்பது நிலை பேறுடையது; மனித இனம் இம்மன்பதையில் உள்ள வரை தொடர்ந்து நடைபெறுவது. வாழ்க்கையில் இன்பங்களும் உள்ளன, துன்பங்களும் உள்ளன ; நிறைந்திருக்கின்றன. அல்லல்களும் தொல்லைகளும் காணப்பெறுகின்றன. ஆன்மாவைக் கொல்லும் பாவம் என்ற புற்றுநோய் அங்கு உண்டு; ஆழம் காண முடியாத காதல் அங்குக் காணப்படும். வாழ்வை வளமாக்கும் நம்பிக்கை, புகழ் மனக்கச்செய்யும் துணிச்சல் போன்ற பண்புகள் அதில் இடம் பெறும். இத்தனையும் பல படலங்கள்போல் கவிந்துள்ள வாழ்க்கை நம்மைக் கவர்கின்றது; ஆனால், என்றும் அது நமக்கு மனநிறைவினைத் தருவதில்லை. இத்தகைய வாழ்க்கையைப் பற்றித்தான் மாபெருங் கவிஞர்கள் பலபடக் கூறியுள்ளனர். இவர்கள் வாழ்க்கையின் கூறுகள் யாவற்றையும் ஆழ்ந்து காண வல்லவர்கள்; வாழ்க்கையின் பல்வேறு உண்மைகளை நாம் உணரும்வண்ணம் விளக்க வல்ல ஆற்றல் பெற்றவர்கள். தமிழ் இலக்கியத்தில் கவிதை வடிவில் பொதிந்து வைத்துள்ள இத்தகைய உண்மைகள் பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னரும் கவிதைகளைப் படிக்கும் நமக்கு எடுத்து உரைத்துக்கொண்டே உள்ளன. கதிரியக்கப் பொருள்களிலிருந்து கதிர்கள் வெளிவருவதைப்போல், இலக்கியங் களிலிருந்து பல வாழ்க்கை உண்மைகள் வந்துகொண்டே உள்ளன. இவை மன்பதை என்றும் மறவாமல் நினைவில் இருத்த வேண்டிய உண்மைகள். துன்பக்கடல் போன்ற இவ்வுலகில் 'மம்மர் அறுக்கும் மருந்தாய் .73 இருந்துகொண்டு இன்பம் பயக்கவல்ல இலக்கியங்களை நாம் கவனிக்காமல் உதாசீனம் செய்தால், நமக்கு உலகில் ஆறுதல் அளிக்கக்கூடிய பொருள்களே இல்லை என்றாகிவிடும்.

7. வானொலியும் தொலைக்காட்சியும்

இறுதியாக, பாரதிதாசன் பாடல்களுள் ஒன்றைக் காட்டி என் இன்றைய உரையைத் தலைக்கட்ட நினைக்கின்றேன்.

வானொலி நிலையத்திலுள்ள நம் உள்ளங்கை அளவுகள்ள ஒலிவாங்கியின் (mike) வாய் மண்ணைத் தின்ற கண்ணனின் வாய்போல் உலகனைத்தையும் உண்டு உமிழும் வாயாய் , அமைந்துள்ளது. அங்ஙனமே தொலைக்காட்சி நிலையத்திலுள்ள நமது கண்ணைவிட மிகவும் சிறியதாய் உள்ள ஒளி உலகின் சாரக்கலம் என்னும் மாயக்கண் இந்த அகிலம் முழுவதையும் ஊடுருவிப் பார்க்க வல்லதாய் அமைந்துள்ளது.

வானவெளியில் கோடானுகோடி சூரியர்களுள் நமது சூரியனும் ஒன்று. அத்தனைச் சூரியர்களுள்ளும் நமது சூரியன் தரத்திலும் அளவிலும் மிகச்சிறியது. இந்தச் சிறிய சூரியனைச் சுற்றியோடும் கோள்களுள் மிகச்சிறியது, நாம் வாழும் பூமண்டலம் - இந்த மண்ணுலகம். அதன் பரப்பில் மிகச்சிறிய இனத்தைச் சார்ந்த மானிடர்கள் நாம்; பிணி மூப்பு சாக்காடு உடையவர்கள். இத்தகைய மக்களாகிய நாம் நிறுவிய சிறியதொரு வீட்டினுள் அமைந்த சின்னஞ்சிறிய கருவியொன்று உலகனைத்தையும் செவிசாய்த்துக் கேட்கின்றது. மற்றொன்றோ உலகம் முழுவதையும் ஏறிட்டுப் பார்க்கின்றது. உலகனைத்திலுமுள்ள கலைகளை ஒன்றாய்த் திரட்டி, எப்பகுதிகளிலும் சுரக்கும் அறிவினை ஒன்றாய்ச் சேர்த்து ஞானப்பாலாய் ஊட்டும் தாயர்களாய் அமைகின்றன, இக்கருவிகள். தேசிய ஒருமைப் பாட்டிற்காய்க் கோடானுகோடி பணத்தைச் செலவிட்டுத் தம்பட்டமடித்து அதனை நாம் நினைக்கின்றவாறு பெறமுடி யாமல் தத்தளித்துக்கொண்டுள்ளோம். ஆனால், இவை இரண்டுமோ உலக ஒருமைப்பாட்டினையே விளைவித்து வருகின்றன! உலக மக்கள் அனைவரையும் ஒருதாய் வயிற்று மக்கள் போல் ஒன்றாய்ப் பிணைக்க முயன்றுகொண்டு வருகின்றன.வானொலியும் தொலைக்காட்சியும் மின்னணுவியல் சகோதரிகள். அவர்களுள் ஒருவர், செவிமடுத்தியார்; மற்றொருவர், கண்ணம்மையார். மானிடச் சகோதரிகளைப் போலவே இவர்களிடமும் சில பொதுவான பண்புக் கூறுகள் அமைந்துள்ளன. இந்த இரு சகோதரிகளின் பிறப்பைப்பற்றிப் பாவேந்தர் கனவு கண்டுள்ளார். கவிஞர் கற்பனையில் பிறந்த இந்த இருசகோதரிகளும் பாவேந்தரின் “சஞ்சீவி பர்வதத்தின் சாரல்” என்ற காவியப்போக்கில் படைக்கப்பெற்ற ஒரு கற்பனைச் சொல்லோவியத்தில் இலைமறைவாய்க் காட்சி தருகின்றனர்: மூலிகைகள் என்ற திருநாமம் பெறுகின்றனர்.

குப்பனும் வள்ளியும் அந்த மலையில் சந்திக்கின்றனர். அந்த மலையில் இரு மூலிகைகள் இருப்பதாய்க் கற்பனை செய்கின்றார், கவிஞர். அவற்றின் அருமைப்பாட்டைக் குப்பன்,

“ஒன்றைத்தின் றால்இவ் உலகமக்கள் பேசுவது
நன்றாகக் கேட்குமற் றொன்றைவா யில்போட்டால்
மண்ணுலகக் காட்சிஎலாம் மற்றிங் கிருந்தபடி
கண்ணுக் கெதிரிலே காணலாம்.”74[41]

என்று வள்ளிக்குக் கூறுகின்றான். கவிதையின் இந்தப் பகுதியைப் படிக்கும்போது நமக்கு வானொலியும் தொலைக்காட்சியும் நினைவிற்கு வருகின்றன. ஒரு மூலிகை வானொலியையும் மற்றொரு மூலிகை தொலைக்காட்சியையும் குறிப்பிடுவதாய் நாம் கொள்ளலாம். இங்ஙனம் கவிஞரிடம் தோன்றிய கற்பனைதான் நாளடைவில் அறிவியலறிஞர்களின் ஆராய்ச்சிமூலம் புதுப்புனைவுகளாய் வடிவெடுத்தது என்று கருதுவதில் தவறொன்றும் இல்லை.

குப்பன் வள்ளியைத் துக்கிக்கொண்டு ‘விட்டெறிந்த கல்லைப் போல்’ மலையின்மீதேறிப் பாய்கின்றான். மூலிகை இருத்த இடத்தில் அவளை இறக்குகின்றான். இளவஞ்சி மூலிகைகளைக் கிள்ளிக்கொள்ளுகின்றாள். இருவரும் சிறிது வழி நடந்து, ஒரு மரத்து நிழலில் ஆர ஆமர நிற்கின்றனர். இருவரும் ஒரு மூலிகையைத் தின்றதும், வையத்து மாந்தர்கள் எந்த


மொழியில் பேசினாலும் அவர்கள் நெஞ்சம் வசமாய் அவர் பேசுதல்போல் செந்தமிழில் தங்கள் செவியால் கேட்கின்றனர். கவிஞர் கற்பனை செய்த வானொலியில் மொழிபெயர்க்கும் வேலையும் நடைபெற்றுவிடுகின்றது. இத்தாலி நாட்டான், நல்ல அமெரிக்க நாட்டான், பொல்லா ஆங்கில நாட்டான் பேசுவதைத் ‘தமிழில்’ இவர்கள் கேட்கின்றனர். அவர்கள் மனப்பான்மையைச் சஞ்சீவி பர்வதத்தில் உலவும் இவர்கள் அறிகின்றனர்.

வள்ளி சிலைபோல் மாறி நாட்டுநிலையைச் சிந்திக்கின்றாள். மூலிகையால் நாட்டின் நிலையை அறிந்தது பற்றி மகிழ்கின்றாள். மூலிகையைக் கொண்டுவந்த களிப்பில் குப்பன் வள்ளியை முத்தமிடப் போகும்போது ‘ஐயையோ ஐயையோ’ என்று ஆரவாரத்துடன் எழுந்த அவள் மொழி, அவனைத் திடுக்கிடச்செய்கின்றது. பாகவதர் ஒருவர் இராமாயணக் கதையில் அநுமன் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிக்கொண்டு போகும் கட்டத்தைக் காலட்சேபம் செய்துகொண்டிருந்த நிகழ்ச்சி அது. குப்பன் தான் நின்றுகொண்டிருந்த சஞ்சீவி மலைக்குத்தான் ஆபத்து வந்துவிட்டதென்று அஞ்சி நடுங்குகின்றான். வஞ்சி அவனது மூடத்தனத்திற்கு இரங்கி, பரிகசித்து, இராமாயணக்கதையில்தான் மலை தூக்கப்பட்டதேயன்றித் தாம் இருந்த மலைக்கு ஒன்றும் நேர்வில்லை என்று கூறிக் கதையைத் தொடர்ந்து கேட்குமாறு பணிக்கின்றாள். கதை முடிகின்ற கட்டம் வந்துவிடுகின்றது.

இப்போது கையிலிருந்த மற்றொரு மூலிகையை இருவரும் விழுங்குகின்றனர். இருவரும் இராமாயணக்கதை நடைபெறும் இடத்தை நேரில் கண்ணுறுகின்றனர். தொலைக்காட்சியில் பார்ப்பது போல நிகழ்ச்சிகள் அவர்களது கண்ணுக்குத் தெரிகின்றன. தெருவொன்றில்,

"மாளிகைக் குள்ளே மனிதர்கூட் டத்தையும்
ஆளிவாய்ப் பாகவதன் அங்கு நடுவிலே
உட்கார்ந் திருப்பதையும் ஊர்மக்கள் செல்வதையும்
பட்டைநா மக்காரப் பாகவதன் ரூபாயைத்
தட்டிப்பார்க் கின்றதையும் சந்தோஷம் கொள்வதையும்"[42]

இருவரும் காண்கின்றனர். இதுதான் புரட்சிக்கவிஞர் படைத்துக்காட்டிய கற்பனைக்கதையின் சுருக்கம். ஒரு மூலிகையால் அமெரிக்கன் முதலியோர் பேசுவதைக் கேட்பது வானொலியைக் குறிப்பிடுகின்றது என்றும், மற்றொரு மூலிகை இராமாயணக் காலட்சேபத்தை நேரில் காண்பது தொலைக்காட்சியைக் குறிப்பிடுகின்றது என்றும் கருதலாம் அல்லவா?

முடிவுரை : அன்பர்களே, இன்றைய சொற்பொழிவில் அறக்கட்டளை நிறுவிய பேராசிரியர் டாக்டர் எஸ். சங்கரராஜூ நாயுடு அவர்களைப் பற்றியும், அவர் அருமைத் தந்தையார் நிமிஷகவி சுப்பைய நாயுடு அவர்களைப்பற்றியும் சில குறிப்புகள் தந்தேன்.

பண்டைய தமிழர்களிடம் அறிவியலறிவு நிறைந்திருந்தது என்பதற்கும், அதனை அவர்கள் நன்கு வளர்த்தனர் என்பதற்கும் தனி நூல்களின் சான்றுகள் இல்லாது போயினும், அவர்களின் அறிவியற்கலைகள் பயன்முறைக் கலைகளாய் இருந்தன என்பதற்குச் சில இலக்கியச் சான்றுகளை உங்கள் திருவுள்ளத்திற்கு எடுத்துக் காட்டினேன்.

பண்டையோர் வானநூல் துறையில் அறிவுமிக்கு விளங்கினர் என்பதைப் புறநானூறு, பெரும்பாணாற்றுப்படை, சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பா மாலை போன்ற நூல்களில் சான்றுகள் கிடைக்கின்றன என்பதை நிலைநாட்டினேன். இராசி மண்டலம் இன்னது என்பதைத் தெளிவாக்கினேன். கலிலியோ கருத்தைப் காப்பர்னிகஸ் மறுத்து உண்மை நிலையை நிறுவினார் என்பதைப் புலப்படுத்தினேன். காலதத்துவத்தை வள்ளுவர் குறள் மூலம் தெளிவாக்கினேன். அகிலம் இன்னதென்பதை மணிவாசகப்பெருமானின் கருத்தை அடிப்படையாய்க்கொண்டு விளக்கினேன். திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், தாயுமான அடிகள் இவர்களின் வாக்குகளைக்கொண்டு பரம்பொருள் இன்னதென்பதைச் சுட்டி உரைத்தேன். அண்டங்கள் ‘நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன’ என்ற மணிவாசகர் கருத்துக்குப் பாரதியாரின் பாடல் விளக்கமாய் அமைந்திருப்பதைப் புலப்படுத்தினேன். இந்த அற்புதக் கருத்தைத் திரிகூடராசப்பக் கவிராயரின் பாடல் நுட்பமாய் விளக்கி நிற்பதைத் தெளிவாக்கினேன். அறிவுலக மேதை ஐன்ஸ்டைனின் கருத்தையும் எடுத்துக் காட்டினேன். அணுவின் அமைப்பையும் அண்டங்களின் அமைப்பையும் ஒப்பிட்டுக் காட்டி, இந்த இரண்டனையும் தில்லைத் திருச்சிற்றம்பலவனின் ஆனந்தக் கூத்து அற்புதமாய் விளக்குவதாய் அமைகின்றது என்பதைச் சுட்டிக் காட்டினேன். இதனை, கம்பன் காட்டும் பாங்கையும் புலப்படுத்தினேன். விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் இணைத்துக் காட்டுவதற்கு மணிவாசகர் பாடலும் சேக்கிழார் பாடலும் சான்றுகளாய் அமைந்திருப்பதை எடுத்துக் காட்டினேன். கதிரவனின் இயக்கத்தைக் கம்பன் காட்டியுள்ளதைத் தெளிவாக்கினேன். திவ்விய கவியின் பாடலைச் சாக்லட்போல் சுவைக்கச் செய்து அண்டங்களை அரங்கநாதன் அமைத்த அற்புதப் பாங்கை நயம்பட விளக்கினேன்.

இராசி மண்டலத்திலுள்ள மேடம், இடபம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீன இராசிகளைக் காட்டும் திவ்விய கவியின் கற்பனை நயத்தினையும் இலக்கியச் சுவையையும் புலப்படுத்தினேன். மூல நட்சத்திரம், அவிட்ட நட்சத்திரம் ஆகிய இரண்டிலும் காட்டப்பெறுகின்ற அற்புதக் கோலத்தைத் தெளிவாக்கினேன்.

பண்டையோர் பொறிநுட்ப அறிவினைக் கல்லணை, கம்பன் பாடல் இவற்றின் மூலம் ஒரளவு தெளிவாகின்றது என்பதைப் புலப்படுத்தினேன். அவதாரங்கள் சிறப்பைக் காளமேகத்தின் கவிதையால் காட்டினேன்.

பண்டையோரின் உயிரியல் அறிவையும் மரபு வழியையும் மணிவாசகரின் பாடல், பலராமனின் பிறப்பு, வள்ளுவரின் வாக்கு, கபிலரகவல், சிகண்டியின் கதை, புராணக் குசேலரின் வரலாறு போன்றவற்றால் விளக்கினேன்.

வானியல் துறையில் அவர்கள் பெற்றிருந்த அறிவைக் கம்பன் பாடலாலும், மருத்துவத்துறையில் அவர்கள் பெற்றிருந்த அறிவு நுட்பத்தை வள்ளுவம், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி ஆகிய இலக்கியங்களைக்கொண்டும் நிலைநிறுத்தினேன். கணித இயலில் அவர்கள் கொண்டிருந்த நுண்மாண் நுழைபுலத்தைக் கம்பராமாயணம், பிங்கலந்தை போன்றவற்றாலும் விளக்கினேன். வானொலி, தொலைக்காட்சிபற்றிய சிந்தனையைப் பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற

நெடும்பாட்டால் நெஞ்சு நெகிழும் வண்ணம் கட்டினேன் இங்ஙனமாய் என் முதற்பொழிவை,


"மனமெனும் தோணி பற்றி
மதியெனும் கோலை யூன்றிச்
சினமெனும் சரக்கை ஏற்றிச்
செறிகடல் ஒடும் போது
மதன்எனும் பாறை தாக்கி
மறியும்போது) அறிய ஒண்ணாது
உனையுனும் உணர்வை நல்காய்
ஒற்றியூர் உடைய கோவே”[43]


என்ற அப்பர் சுவாமிகளின் தேவாரப் பாடலுடனும்,


"செந்தழலே வந்து அழலைச்
செய்திடினும் செங்கமலம்
அந்தரம்சேர் வெங்கதிரோற்கு
அல்லால் அலராவால்,
வெந்துயர்வீட் டாவிடினும்
வித்துவக்கோட் டம்மா! உன்
அந்தமில்சீர்க் கல்லால்
அகம்குழைய மாட்டேனே”[44]


என்ற குலசேகரப்பெருமாளின் திருவித்துவக்கோட்டு அம்மானின் திருப்பாசுரத்துடனும் இன்றைய பொழிவை நிறைவு செய்கின்றேன்.

வணக்கம்.

 1. தாயா 3 பொருள் வணக்கம்.
 2. 32. பால. மிதிலைக் - 35
 3. 33. பால. மிதிலைக் - 37
 4. 34. பால. மிதிலைக் - 38
 5. 35. பால. மிதிலைக் - 150.
 6. 36. பால. மிதிலைக் - 153.
 7. 37. திருவாச. கண்டபத்து - 10.
 8. 38. பெரியபு. தில்லைவாழ் அந்தனர் - 2
 9. 39. கம்பரா - சுந்தர. ஊர்தேடு - 21
 10. 40. திருவரங்கத்துமாலை - 84
 11. 41. இதுவே வைணவ தத்துவத்தின் அசித்தின் ஒரு பகுதியான காலதத்துவம்; இது சத்துவசூனியம் என்றும் வழங்கப்பெறும்.
 12. 42. திருவரங்கத்துமாலை - 34
 13. 43. திருவேங்கடமாலை - 9
 14. 44. திருவேங்கடமாலை - 16
 15. 45. திருவேங்கடமாலை - 17
 16. 46. திருவேங்கடமாலை - 18
 17. 47. திருவேங்கடமாலை - 19
 18. 48. திருவேங்கடமாலை - 20
 19. 49. திருவேங்கடமாலை - 21
 20. 50. திருவேங்கடமாலை - 22
 21. 51. திருவேங்கடமாலை - 23
 22. 52. திருவேங்கடமாலை - 24
 23. 53.திருவேங்கடமாலை 25
 24. 54.திருவேங்கடமாலை - 26
 25. 55. புறம் - 27
 26. 56. இவை விமானம் இருக்கவேண்டிய இடத்தில் உள்ளன. பிற்காலத்தில் இவை கோயிலின் முதல் நுழைவாயிலில் அமைக்கப்பெற்ற இராச கோபுரமாய் மாற்றப்பெற்றுள்ளன.
 27. 57. கம்பரா. யுத்த கா. ஊர்தேடு - 1
 28. 58. திருவா. சிவபு. அடி 26-31.
 29. 59. 1983ஆம் ஆண்டு திசம்பர்த் திங்களில் Fifteenth International Congress of Genetics என்ற மாநாடு 10 நாள்கள் நடைபெற்றது. ஐம்பது நாடுகளிலிருந்து 2500 கால்வழி இயல் அறிஞர்கள் இதில் கலந்துகொண்டனர்.
 30. 60. குறன் - 398
 31. 61. கபிலரகவல் - அடிகள் : 68-77.
 32. 62. கபிலரகவல்-அடி 78-83.
 33. 63. குசேலோபாக்கியானம் - குசேலர் மேற்கடலைக் அடைந்தது செய் 70 - 71.
 34. 64. வாழையடி வாழை என்ற என் நூலில் (மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 108) இயல் 20இல் கண்டு தெளிக.
 35. 65. கம்பரா. சுந்தர. ஊர்தேடு - 2
 36. 66. குறள் - 948
 37. 67. குறள் - 946
 38. 68. கம்பரா, யுத்த, மீட்சி - 118
 39. 69. சீவக சிந் - முக்தி இலம்பகம் - 2703 (105)
 40. 71. கம்பராம, யுத்த படைக்காட்சி - 30.
 41. 74. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - அடி 43-47 (பாரதிதாசன் கவிதைகள் - முதற்பகுதி)
 42. 75. சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
 43. 75. தேவாரம் (அப்பர்) : 4.46:2
 44. 77. பெருமாள் திருமொழி 5 : 6