அறிவியல் வினா விடை-இயற்பியல்/மின்னியல்
11. மின்னியல்
1. மின்னியல் என்றால் என்ன?
மின்சாரத்தையும் மின்பண்புகளையும் ஆராயுந்துறை.
2. மின்ஒலி இயல் என்றால் என்ன?
மின் ஒலிபற்றி ஆராயுந்துறை. இதில் மின்னாற்றல் ஒலியாற்றலாகிறது.
3. மின்னியக்கவியல் என்றால் என்ன?
மின் வினைகளுக்கும் காந்த விசைகளுக்குமிடையே உள்ள தொடர்பினையும் அவற்றின் எந்திரக் காரணிகளையும் வினைகளையும் ஆராயுந்துறை.
4. மின்பகிர்வு இயக்கவியல் என்றால் என்ன?
மின்னோட்டப் பகிர்வு பற்றி ஆராயுந்துறை.
5. மின்காந்தவியல் என்றால் என்ன?
காந்தத்திற்கும் மின்சாரத்திற்கும் உள்ள தொடர்பை ஆராயுந்துறை.
6. மின்கலம் என்றால் என்ன?
மின்னாற்றலை வேதியாற்றலாகச் சேமித்து வைத்திருக்கும் கலம். இதை ஒல்டா என்பவர் 1799இல்
முதன்முதலாக அமைத்தார்.
7. மின்கலங்களின் வகைகள் யாவை?
1. முதன்மை மின்கலங்கள் - பசை மின்கலம்.
2. துணைமின்கலம் - சேமக்கலம்.
8. மின்கல அடுக்கு என்றால் என்ன?
மின்கலத் தொகுதி.
9. மின்கல அடுக்குத்திறன் என்றால் என்ன?
இதன் உழைக்கும் ஆற்றலும் மின்சாரம் தரும் ஆற்றலும் ஆகும். இது ஆம்பியரில் கூறப்படும்.
10. சேமக்கல அடுக்கு என்றால் என்ன?
இது துணை மின்கலமே. மின்னாற்றலை வேதியாற்ற லாகச் சேமித்துவைப்பது.
11. தொடரடுக்கு இணைப்பு என்றால் என்ன?
இதில மின்கலத்தின் நேர்மின்வாய் அடுத்த மின்கலத்தின் எதிர்மின்வாயுடன் இணைக்கப்பட்டிருகுகும்.
12. தொடரடுக்கு இணைப்பின் பயன் யாது?
அலங்கார விளக்குகளிலும், துருவு விளக்கிலும் பயன்படுவது.
13. பக்க அடுக்கு இணைப்பு என்றால் என்ன?
இதில் எதிர் மின்வாய்கள் எல்லாம் ஒன்றாகவும் நேர் மின்வாய்கள் ஒன்றாகவும் இணைக்கப்பட்டிருக்கும்.
14. பக்க அடுக்கு இணைப்பின் பயன் யாது?
வணிக மின் இணைப்பில் பயன்படுவது.
15. திட்டமின்கலம் என்றால் என்ன?
ஒல்ட்டா மின்கலம். இதன் மின்னியக்குவிசை திட்ட நிலையாக எடுத்துக் கொள்ளப்படுவது. வெஸ்டன் மின்கலமும் இவ்வகை சார்ந்ததே.
16. மின்கலம் நீக்கி என்றால் என்ன?
மின்கலம் இல்லாமல் ஒரு திசை மின்னோட்டத்தை அளக்குங் கருவி.
17. மின்சாரம் என்றால் என்ன?
நிலையாகவுள்ள அல்லது நகரும் மின்னேற்றங்களி லிருந்து உண்டாகும் விளைவு.
18. மின்சாரத்திற்கும் காந்தத்திற்குமுள்ள தொடர்பை ஆராய்ந்தவர் யார்?
மைக்கல் பாரடே
19. மின்னோட்டம் என்றால் என்ன?
மின்னழுத்த வேறுபாட்டால் உண்டாகும் ஒட்டம்.
20. மின்னோட்ட வகைகள் யாவை?
1. ஒரு திசை மின்னோட்டம் - மின்கலம்.
2. இரு திசைமின்னோட்டம் - வீடுகளில் பயன்படுவது.
21. மின்னோட்டப் பலன்கள் யாவை?
1. ஒளிப்பலன் - மின்விளக்கு. 2. வெப்பப்பலன் - வெப்ப அடுப்பு. 3. காந்தப்பலன் - மின்காந்தம். 4. வேதிப்பலன் - மின்னாற்பகுப்பு.
22. மீ மின்னோட்டம் என்றால் என்ன?
பயனுறு மின்னோட்டம். மின்சுற்றில் கணக்கிடப் படுவது.
23. சுழிப்பு மின்னோட்டம் என்றால் என்ன?
இது வரம்பு மீறிய மின்னோட்டமாகும்.
24. இதன் தீமை யாது?
தீவிபத்துக்கு வழிவகுக்கும்.
25. நிலைமின்சாரம் என்றால் என்ன?
அசையா நிலையிலுள்ள மின்னேற்றங்கள் உண்டாக்கும் மின்சாரம்
26. மின்சாரம் உண்டாக்கும் இருமுறைகள் யாவை?
வெப்ப ஆற்றல் மூலமும் நீராற்றல் மூலமும் மின்சாரத்தை உண்டாக்கலாம்.
27. மின்னோட்ட அலகு யாது?
அலகு ஆம்பியர்.
28. மின்திறன் என்றால் என்ன?
மின்தொகுதியில் நடைபெறும் வேலையின் அளவைக் குறிப்பது. அலகு வாட்.
29. மின்தடை என்றால் என்ன?
கம்பிகளில் மின்னோட்டம் செல்லும்பொழுது அலை ஏற்படுத்தும் தடை. அலகு ஒம்.
தடித்த எழுத்துக்கள்
30. ஓம் விதி யாது?
மாறா வெப்பநிலையில் மின்னழுத்த வேறுபாட்டிற்கு மின்னோட்டம் நேர் வீதத்திலும் மின்தடைக்கு எதிர்வீதத்திலும் இருக்கும்.
I=ER
E=IR
I - மின்னோட்டம். E - மின்னழுத்த வேறுபாடு R மின்தடை இவ்விதி 1827இல் கண்டறியப்பட்டது.
31. தடையளிப்பி (ரெசிஸ்டர்) என்றால் என்ன?
ஒரு மின்சுற்றில் தெரிந்த தடையைப் பகுதியாக சேர்த்தல்.
32. வீட்சன் மின்சுற்று என்றால் என்ன?
ஒரு தடையின் மதிப்பை அளக்கப் பயன்படும் சுற்று.
33. மின்தடை மாற்றி என்றால் என்ன?
இது மின்தடையின் அளவைத் தேவைக்கேற்ப மாற்றியமைக்கும் கருவி.
34. மின் எதிர்ப்பு என்றால் என்ன?
ஒரு மின்சுற்றில் எதிர் மின்னோட்டத்திற்கு ஏற்படும் மொத்த எதிர்ப்பு.
35. இது எவ்வாறு உண்டாகிறது?
இது மின்தடை, மின்நிலைமம், மின்மறுப்பு ஆகியவற்றின் கூட்டு விளைவுகளால் உண்டாவது. ஓம்களில் அளக்கப்படுவது.
36. தடம் மாற்றி என்றால் என்ன?
மின்னோட்டமானியுடன் பக்க இணைப்பில் குறைந்த தடையை இணை. இதுவே தடம் மாற்றி. இம்மானியின் எல்லையை இது மாற்றும்.
37. மின்னியக்குவிசை என்றால் என்ன?
ஒரு மின்கலத்தின் இருமுனைகளுக்கிடையே நிலவும் மின்னழுத்த வேறுபாடு. அலகு ஒல்ட்
38. மின்னியக்குவிசை, மின்னோட்டம், மின்தடை ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பு என்ன?
C = E C. C-மின்னோட்டம். E-மின்னியக்குவிசை R-தடை
39. வாட் என்றால் என்ன?
திறனின் எஸ்.ஐ. அலகு. ஒரு வினாடிக்கு ஒரு ஜூல் என அது வரையறுக்கப்பட்டுள்ளது.
40. வாட்மணி என்றால் என்ன?
மின்னளவுகளில் பயன்படுத்தப்படும் ஆற்றல் அலகு.
41. வாட்டுமானி என்றால் என்ன?
மின்சுற்றுத்திறனை நேரடியாக வாட்டுகளில் அளக்குங் கருவி.
42. கிலோசைக்கிள் என்றால் என்ன?
ஒரு வினாடிக்கு 1000 சுற்றுகள். மின்காந்த அலை அதிர் வெண் அளவு.
43. கிலோ ஒல்ட் என்றால் என்ன?
மின்னழுத்த வேறுபாட்டின் அலகு 1000 ஒல்ட்டுகள்.
44. கிலோவாட் மணி என்றால் என்ன?
ஒரு மணி நேரத்தில் 1000 வாட்டுகள் மின்சாரம் செலவழித்தல். இது யூனிட் என்றும் கூறப்படும்.
45. கிலோவாட் மணிமானி என்றால் என்ன?
இது மின்னாற்றலை அளக்கும் கருவியமைப்பு. இது மின்சாரம் பயன்படும் எல்லா இடங்களிலும் குமிழ்ப் பலகையில் பொருத்தப்பட்டிருக்கும்.
46. ஆம்பியர் மணி என்றால் என்ன?
மினனேற்றத்தின் செயல்முறை அலகு. 3600 கூலூம்கள்.
47. ஆம்பியர் விதியைக் கூறுக.
கடத்தி ஒன்றின் வழியாக மின்னோட்டம் செல்லும் பொழுது, மின்னோட்டத்திசையில் காந்த ஊசியை நோக்கி ஒருவர் நீந்துவதாகக் கொள்க. இப்பொழுது காந்த ஊசியின் வடமுனை அவர் இடப்புறமாக விலகும்.
48. ஆம்பியர் திரும்புகை என்றால் என்ன?
காந்த இயக்க விசையின் எல்லை அலகு.
49. மின்பெருக்கல் என்றால் என்ன?
மின்னோட்டங்களின் அல்லது ஒலிகளின் வலிமையை மிகுத்தல்.
50. மின்பெருக்கி என்றால் என்ன?
மின் பெருக்கலைச் செய்யும் கருவி.
51. மின்வாய் என்றால் என்ன?
மின்னோட்டம் உள்செல்லும் வெளிவரும் வழி.
52. மின்வாய் வகைகள் யாவை?
1. நேர்மின்வாய் (+) 2. எதிர்மின்வாய் (-).
53. நேர்மின்வாய் என்றால் என்ன?
எதிரயனிகளைக் கவரும் முனை.
54. எதிர்மின்வாய் என்றால் என்ன?
நேரயனிகளைக் கவரும் முனை.
55. எதிரமின்வாய்க்கதிர் என்றால் என்ன?
எதிர்மின் வாயிலிருந்து மின்னணுக்கள் உமிழப்படும். இந்த உமிழ்வே எதிமின்வாய்க்கதிர்கள்.
56. எதிர்மின்வாய்க்கதிர் அலை இயற்றி (CRO) என்றால் என்ன?
எதிர்மின்வாய்க் கதிர்க்குழாய் அடிப்படையில் அமைந்து மின்குறிபாடுகளின் உருக்களைக் காட்டுங் கருவி.
57. எதிமின்வாய்க் கதிர்க்குழாய் (CRT) என்றால் என்ன?
திரையில் மின்குறிபாடுகளை ஒரு கோலமாக மாற்றுங் குழாய்.
58. இதன் அடிப்படையுள்ளவை யாவை?
மின்வாய்க் கதிர் அலை இயற்றி, தொலைக்காட்சி பெறுங் கருவி.
59. மின்பகுளி என்றால் என்ன?
மின்னாற்பகுபடு நீர்மம் - காடி கலந்த நீர்.
60. மின்னாற்பகுப்பு (பிரிப்பு) என்றால் என்ன?
ஒரு கூட்டுப் பொருளை அதன் பகுதிப் பொருள்களாக மின்சாரத்தைச் செலுத்திப் பிரித்தல். காடி கலந்த நீரில் மின்சாரத்தைச் செலுத்த, அது ஆக்சிஜனாகவும் அய்டிரஜனாகவும் பிரியும். மின்னாற்பகுப்பு நடை பெறுங் கலம் எது மின்முறிகலம்.
61. டிபை கக்கல் கொள்கை யாது?
மின்பகுளிகளின் குறிக்கோளற்ற நடத்தையை விளக்குங் கொள்கை.
62. இக்கொள்கையை யார் எப்பொழுது வெளியிட்டனர்?
டிபை, கக்கல் ஆகிய இருவரும் 1923இல் வெளியிட்டனர்.
63. முனை என்றால் என்ன?
மின்சுற்றுப்புள்ளி. இத்துடன் கடத்தி ஒன்றை (கம்பி) இணைக்கலாம்.
64. முனையம் என்றால் என்ன?
பல கட்டடங்கள் தொகுதியாகக் கருவியமைப்புகளுடன் உள்ள இடம்.
65. இருமுனைவாய் என்றால் என்ன?
இது எதிர்மின்னோட்டத்தை நேர் மின்னோட்டமாக மாற்றுவது.
66. இதை அமைத்தவர் யார்?
பிளிமிங்.
67. மின்சுற்று என்றால் என்ன?
ஒரு மின்கலத்தின் மின்னோட்ட வழி.
68. இதன் வகைகள் யாவை?
மூடிய சுற்று - விளக்கு எரிதல்.
திறந்த சுற்று - விளக்கு எரியாமல் இருத்தல்.
69. மின்சுற்றை மூடித்திறப்பதற்குரிய அமைப்புகள் யாவை?
தொடுசாவிகள், குமிழிகள், பொத்தான்கள், சொடுக்கிகள்.
70. கிட்டச்சுற்று என்றால் என்ன?
இதில் காப்பிடப்பட்ட கம்பிகள் உறை நீங்கிய இடத்தில் சேருவதால் உண்டாகும் மின்னோட்ட வழி.
71. இதன் குறைகள் யாவை?
1. தீ விபத்து உண்டாதல்.
2. வீணாக மின்சாரம் செலவழிதல்.
72. இக்குறைகளை எவ்வாறு போக்கலாம்?
1. உருகிகளைப் பயன்படுத்தல்.
2. மின்கம்பிகளைக் காப்பிடுதல்.
73. கட்டம் என்றால் என்ன?
ஒரு மின்சுற்றிலுள்ள நிலை.
74. கட்டப்படம் என்றால் என்ன?
கொடுக்கப்பட்ட அழுத்தத்திலும் வெப்பநிலையிலும்
ஒருபொருள் இருக்கும் நிலையைக் குறிக்கும் வரைபடம்.
75. கிர்காப்பு விதிகளைக் கூறுக.
1. பல்வேறு கடத்திகளில் இணையும் ஒரு சந்தியில் பாயும் மின்னோட்டங்களின் எண்ணியல் கூட்டுத்தொகை ஒரு சுழி.
2. ஒரு மூடிய வலைச்சுற்றிலுள்ள கடத்திகளின் மின்னோட்டம், மின்தடை ஆகியவற்றின் பெருக்கற் பலன்களின் எண்ணியல் கூட்டுத்தொகை, அம் மின்சுற்றி லுள்ள மின்னியக்கு விசைகளின் எண்ணியல் கூட்டுத் தொகைக்குச் சமம்.
76. புவி இணைப்பு என்றால் என்ன?
மின்கடத்தியை மண்ணிற்குள் செலுத்துதல். வீட்டு மின் இணைப்போடு தொடர்புடையது.
77. மின்னேற்றம் என்றால் என்ன?
அடிப்படைத் துகள்களின் மூலப்பண்பு.
78. மின்னேற்றத்தின் வகைகள் யாவை?
நேர்மின்னேற்றம் (+), எதிர்மின்னேற்றம் (-)
79. மின்னேற்றத்தின் சிறப்புகள் யாவை?
1. ஒத்த மின்னேற்றங்கள் ஒன்றை மற்றொன்று விலக்கும்.
2. எதிர்மின்னேற்றங்கள் ஒன்றை மற்றொன்று ஈர்க்கும். அலகு கூலும்.
80. மின்னேற்ற அடர்த்தி என்றால் என்ன?
ஒரு பருப்பொருளின் அலகுப் பருமனிலும் அலகுப் பரப்பிலும் உள்ள மின்னேற்றம்.
81. இதன் வகைகள் யாவை?
1. பரும மின்னேற்ற அடர்த்தி - அலகு கூலும்.
2. மேற்பரப்பு மின்னேற்ற அடர்த்தி அலகு கூலும்.
3. நீள் மின்னேற்பு அடர்த்தி - அலகு கூலும்.
82. மின்னேற்றம் செய்தல் என்றால் என்ன?
இழந்த மின்னாற்றலை ஒரு மின்கல அடுக்கிற்கு வழங்கல்.
83. மின்னிறக்கம் என்றால் என்ன?
1. ஒரு சுமை வழியாக மின்னோட்டத்தை ஒடச் செய்து
ஒரு மின்கலத்திலிருந்து ஆற்றலைப் பிரித்தல். 2. ஒரு மின்தேக்கியில் அதன் முனைகளில் சுழிஅளவுக்கு மின்னழுத்த வேறுபாட்டைக் குறைத்தல். 3.அயனிவயமாதல் காரணமாக வளி அல்லது காற்றுவழியாக மின்னேற்றம் ஒடுதல்.
84. மின்புலம் என்றால் என்ன?
மின்னேற்றம் நுகரும் விசையுள்ள பகுதி.
85. மின்பாயம் என்றால் என்ன?
காந்தப்புலத்தில் மின்பாய அடர்த்தி, உரிய பரப்பு ஆகிய இரண்டின் பெருக்கல் பலன்.
86. மின்பாய அடர்த்தி என்றால் என்ன?
ஓரலகு பரப்பிலுள்ள மின்னேற்றம்.
87. மின்காந்தக் கொள்கை யாது?
மின்காந்த அலைகளாக ஒளி செல்கிறது என்னுங் கொள்கை.
88. இதை வகுத்தவர் யார்?
இக்கொள்கையை மாக்ஸ்வெல் என்பார் 1873இல் வகுத்தார்.
89. மின்காந்த அலை என்றால் என்ன?
ஒரு மின்னேற்றத்திலிருந்து வெளிச்சென்று பரவும் அலைக்கழிவு. இது வானொலி அலையே.
90. வரிச்சுற்று என்றால் என்ன?
ஒரு தேனிரும்பில் அடுத்தடுத்து மின்கம்பி கொண்டு சுற்றப்படும் சுற்று.
91. மின்காந்தம் என்றால் என்ன?
தேனிரும்பை உள்ளகமாகக் கொண்ட வரிச்சுற்றே மின்காந்தம்.
92. மின்காந்தம் ஏன் தற்காலிகக் காந்தம் ஆகும்?
மின்சாரம் இருக்கும் வரையில்தான் அதில் காந்தம் இருக்கும்.
93. மின்காந்த நிறமாலையில் உள்ள அலைகள் யாவை?
வானொலி அலைகள்.
94. மின்காந்தம் பயன்படும் கருவிகள் யாவை?
மின்மணி, மின் பளுத்துக்கி.
95. மின்காந்தச் சூழல் என்றால் என்ன?
குறிப்பிட்ட பரப்பு அல்லது வெளியில் தோன்றும் வானொலி அதிர்வெண் புலங்கள்.
96. மின்காந்தத் தூண்டல் என்றால் என்ன?
காந்த விசைகளைக் கடத்தி ஒன்று வெட்டுகின்ற பொழுது, அக்கடத்தியில் மின்சாரம் உண்டாகிறது.
97. இதைக் கண்டறிந்தவர் யார்?
மைக்கல் பாரடே, 1831.
98. மின்காந்தத் தூண்டல் பயன்படுங் கருவிகள் யாவை?
தூண்டுசுருள், மின்னியக்கி, மின்னியற்றி.
99. தூண்டுசுருள் என்றால் என்ன?
மின்தூண்டல் அடிப்படையில் வேலை செய்யுங் கருவி. குறைந்த மின்னழுத்தமுள்ள நேர்மின்னோட்டத்திலிருந்து அதிக மின்னழுத்தத்தை உண்டாக்குவது.
100. இதன் பயன்கள் யாவை?
1. மின்னேற்றக் குழாய்களில் வளிநிறமாலைகளை உண்டாக்குவது.
2.அரிய வளிகளின் வழியாக மின்னேற்றத்தை ஆராய்வது.
3. எக்ஸ் கதிர்களை உண்டாக்குவது.
4. அகக்கனற்சி எந்திரத்தில் மின்பொறியை உண்டாக்கப் பயன்படுவது.
101. லென்ஸ் விதியைக் கூறுக.
தூண்டிய மின்னோட்டம் எப்பொழுதும் அதை உண்டாக்கும் மாற்றத்தை எதிர்க்கும் திசையில் அமையுமாறு ஒடும். 1835இல் இவ்விதியை முதன்முதலில் இவர் வகுத்தார். இது ஒருவகை ஆற்றல் மாற்ற விதியே.
102. மின்நிலைமம் என்றால் என்ன?
ஒரு சுற்றிலுள்ள முழுத் தூண்டலுக்கும் அதை உண்டாக்கும் மின்னோட்டத்திற்கும் உள்ள வீதம். ஒரு மின்சுற்றின் வழியாகச் செல்லும் மின்னோட்டத்தில் உண்டாகும் மாற்றத்தை எதிர்க்கவல்ல திறன்.
103. வரம்பு மின்னழுத்தம் என்றால் என்ன?
பெரும மின்னழுத்தம். மின்னேற்பி சேதமுறாமல் தாங்கக் கூடியது.
104. மின்னழுத்தம் என்றால் என்ன?
ஒல்ட் என்னும் அலகினால் குறிக்கப்படும் மின்னழுத்த வேறுபாடு அல்லது மின்னியக்கு விசை.
105. மின்னழுத்தமானி என்றால் என்ன?
மின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவுங் கருவி.
106. உயர்மின்னழுத்தம் என்றால் என்ன?
உயர் மின்னழுத்த வேறுபாடு. பலநூறு ஒல்ட்டுகளுக்கு மேல். இம்மின்னழுத்தமுள்ள மின்சாரம் செல்லத் தடித்த கம்பிகள் உண்டு.
107. மின்கடத்தும் பொருள்கள் யாவை?
செம்பு, அலுமினியம் முதலியவை மின்சாரத்தைக் கடத்தும்.
108. மின் கடத்தாப் பொருள் யாது?
ஒரு மின்தேக்கியில் கடத்துப் பரப்பைப் பிரிப்பது மின்கடத்தாப் பொருள் - காற்று.
109. மின்திருத்தல் என்றால் என்ன?
இது இருதிசை மின்னோட்டத்தை ஒருதிசை மின்னோட்டமாக மாற்றுவது.
110. மின்திருத்தி என்றால் என்ன?
ஒரு திசையில் மட்டுமே அதிக அளவு மின்னோட்டத்தைச் செலுத்துங் கருவி.
111. அயனி என்றால் என்ன?
மின்னணு இழப்பு அல்லது ஏற்பினால் உண்டாகும் மின்னேற்றத் துகள்.
112. அயனியாக்கல் என்றால் என்ன?
ஒர் அணுவிலிருந்து மின்னணுக்களை நீக்கல் அல்லது அணுவோடு அவற்றைச் சேர்த்தல்.
113. அயனியாக்கு ஆற்றல் என்றால் என்ன?
ஒர் அணுவிலிருந்து மின்னணுக்களை நீக்கல் அல்லது அணுவோடு அவற்றைச் சேர்த்தல்.
114. அயனியாக்கு கதிர்வீச்சு என்றால் என்ன?
ஒரு தொகுதியில் அயனிகளை உண்டாக்கவும் அயனி யாக்கவும் தேவைப்படும் ஆற்றலைக் கொண்ட கதிர்வீச்சு.
115. வெப்ப அயனி என்றால் என்ன?
மினனேற்றத்துகள். வெண்சுடர் பொருளினால் உமிழப் படுவது.
116. கோல்ராச்சு விதி யாது?
அயனிவயமாதல் நிறைவுறும் பொழுது, அயனிகளின் கடத்தும் திறன்களின் கூட்டுத்தொகைக்கு மின்பகுளியின் கடத்தும் திறன் இணையானது. இந்நிகழ்ச்சி ஒரு பொருள் சிதையும்பொழுது ஏற்படுவது.
117. வெப்பமின்னிரட்டை என்றால் என்ன?
சீபெக் விளைவு அடிப்படையில் அமைந்தது. வெப்ப நிலைகளை அளக்கப் பயன்படுவது.
118. சீபெக் விளைவு என்றால் என்ன?
வேறுபட்ட இரு உலோகக் கம்பிகள் சேர்ந்த சந்திகளை வெவ்வேறான வெப்பநிலைகளில் வை. இப்பொழுது அவற்றின் சுற்றில் மின்னோட்டம் நிகழ்கிறது. இவ்வெப்ப மின்னோட்ட நிகழ்ச்சியே சீபெக் விளைவு.
119. இதை யார் எப்பொழுது கண்டறிந்தார்?
சீபெக் என்பார் 1826இல் கண்டறிந்தார்.
120. முதல் மின்விளக்கை அமைத்தவர் யார்? எப்பொழுது?
தாமஸ் ஆல்வா எடிசன், 1879இல்
121. மின்விளக்கில் நடைபெறும் ஆற்றல் மாற்றம் என்ன?
வெப்ப ஆற்றல் ஒளியாற்றலாகிறது.
122. மின்விளக்குகளின் வகைகள் யாவை?
1. இழைவிளக்குகள் - குமிழ் விளக்குகள்.
2. இழையிலா விளக்குகள் - ஆவி விளக்கு.
123. ஆவி விளக்குகளின் பல வகைகள் யாவை?
படிகக்கல் அயோடின் விளக்கு, ஒளிர்குழாய் விளக்கு, பாதரச ஆவிவிளக்கு கரிப்பிறை விளக்கு.
124. ஆவிவிளக்குகளின் நன்மைகள் யாவை?
1. குறைந்த மின்செலவு 2. கருநிழல் ஏற்படாமை. 3. குளிர்ச்சி.
125. மின்காந்தக் குறுக்கீடு என்றால் என்ன?
இது மின்னணுக் கருவியமைப்புகள் உமிழும் காந்த அலைவுகளால் உண்டாவது.
126. இதன் தீமைகள் யாவை?
தொலைக்காட்சி உருப்பதிவு இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது. தற்பொழுது உலகெங்கும் பார்வைக்குப் புலப்படா அச்சுறுத்தலாக உள்ளது.
127. நெகிழ்செலுத்தும் அமைப்புகள் என்றால் என்ன?
திண்மநிலைக் கட்டுப்படுத்திகள் அடிப்படையில் அமைந்தவை. ஆற்றல் அலைக்கழிவுகளைக் குறைக்க வல்லவை.
128. இவற்றின் சிறப்பியல்புகள் யாவை?
1. மிகுவிரைவு. 2. துல்லியம். 3. நம்புமை.
129. பாரடே விளைவு என்றால் என்ன?
காந்தப் புலத்திற்கு உடன்பட்ட ஒரே பண்புள்ள ஊடகத்தின் வழியே, மின்காந்தக் கதிர்வீச்சு செல்லும் போது அதன் முனைப்படு தளத்தின் சுழற்சியே இவ்விளைவு. இது ஊடகத்தின் கதிர்வீச்சு வழியின் நீளத்திற்கும் காந்த ஒட்ட அடர்த்திக்கும் நேர்வீதத்தில் இருக்கும்.
130. பாரடேயின் மின்னாற்பகுப்பு விதிகள் யாவை?
1. ஒரு மின்பகுளி வழியாக மின்னோட்டம் செல்லும் போது கரைசலிலிருந்து வெளிப்படும் உலோகத் தனிமத்தின் நிறை, மின்னோட்டம் செலுத்தப்படும் நேரத்திற்கு நேர்வீதத்தில் இருக்கும்.
2. ஒரு மின்பகுளி வழியாக மின்னோட்டஞ் செல்லும்போது, வெளித் தள்ளப்படும் உலோகத்தின் நிறை அதில் பாயும் மின்னோட்ட வலிமைக்கு நேர்வீதத்திலிருக்கும்.
3. வெவ்வேறு மின் பகுளிகள் வழியாக ஒரே அளவு மின்னோட்டம் பாயும்பொழுது வெளித்தள்ளப்படும் உலோகத் தனிமங்களின் நிறை, அவற்றின் மின்வேதி இணைமாற்றுக்கு நேர்வீதத்தில் இருக்கும். இவ்விதிகளை 1832இல் இவர் அறிவித்தார்.
131. பாரடேயின் மின்காந்தத் தூண்டல் விதிகள் யாவை?
1. ஒரு கடத்தியைச் சூழ்ந்துள்ள காந்தப்புலம் மாறுகின்ற பொழுது, மின்னியக்கு விசை அதில் உண்டாகிறது.
2. புலமாற்ற அளவுக்கு விசையின் எண்மதிப்பு நேர் வீதத்திலிருக்கும்.
3. உண்டாக்கப்பட்ட மின்னியக்கு விசையின் திசை, புலத்தின் சார்திசையைப் பொறுத்தது.
132. பிளமிங்கின் இடக்கை விதியைக் கூறுக.
இடக்கைக் கட்டைவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகிய மூன்றையும் ஒன்றுக்கு மற்றொன்று செங்குத்தாக இருக்குமாறு வை. ஆள்காட்டி விரல் காந்தப்புலத்தின் திசையையும் நடுவிரல் மின்னோட்டத்திசையையும் காட்டுவதாக இருக்கட்டும். அப்பொழுது கட்டைவிரல் விசையின் திசையையும் அதன் மூலம் கடத்தி நகரும் திசையையும் காட்டும்.
133. உருகிகள் என்றால் என்ன?
இவை தாமே உருகி மின்னோட்டத்தைத் தடுப்பவை. இவை உருகிக்கூட்டில் இருக்கும்.
134. உருகிகளின் அமைப்பு யாது?
1. வெள்ளியமும் காரீயமும் சேர்ந்தவை.
2. உருகுநிலை குறைவு.
3. மின்னழுத்தம் அதிகமாகும் பொழுது உருகி மின்னோட்டத்தைத் துண்டிக்கும்.
135. மின்கட்டுப்படுத்தி என்றால் என்ன?
குழாய் மின்விளக்குச் சட்டத்திலுள்ள ஒரு சிறிய நீள்சதுர உலோகப்பெட்டி. இதற்கு மின்தடையும் நிலைமமும் உள்ளன. ஆகவே, அதன் மின்எதிர்ப்பு எதிர் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது.
136. மின்மாற்றி என்றால் என்ன?
இருதிசை மின்னோட்ட அழுத்தத்தை அதிர்வெண் மாற்றமில்லாமல் கூட்டவோ குறைக்கவோ பயன்படுங் கருவி.
137. இதன் இருவகைகள் யாவை?
1. ஏற்ற மின்மாற்றி - மின்னழுத்தத்தை அதிகமாக்குவது.
2. இறக்க மின்மாற்றி - மின்னழுத்தத்தைக் குறைப்பது.
138. இதிலுள்ள இரு சுருள்கள் யாவை?
முதல் சுருள், துணைச்சுருள்.
139. தடுவாய் (கிரிட்) என்றால் என்ன?
இது ஒருவலையமைப்பு:வாணிப அளவில் மின்சாரத்தைப் பகிர்ந்து வழங்குவது.
140. மின்னியக்கமானி என்றால் என்ன?
ஒரு திசை, இரு திசை மின்சுற்றுகளில் மின்னோட்டம், மின்னழுத்தம், மின்திறன் ஆகியவற்றை அளக்குங் கருவி.
141. மின்னோட்டமானி என்றால் என்ன?
சிறு அளவுள்ள மின்னோட்டங்களை அளக்கப் பயன் படுங் கருவி.
142. இதன் வகைகள் யாவை?
இயங்குசுருள் மின்னோட்டமானி, தொடு மின்னோட்ட மானி, வீழ் மின்னோட்டமானி.
143. கவரகம் அல்லது மின்னகம் என்றால் என்ன?
மின்னியக்கி அல்லது இயற்றியின் பகுதி. முதன்மை மின்னோட்டத்தைக் கொண்டு செல்வது.
144. இதன் அமைப்பு யாது?
இது சிறிய இயற்றியில் சுழலும் கம்பிச் சுருளாகவும் பெரிய இயற்றியில் நிலைக்கம்பிச் சுருளாகவும் இருக்கும்.
145. இதில் முறுக்கு விசையின் வேலை என்ன?
இது கவர் சுருளில் செயற்பட்டுப் பளுவிற்கு எதிராக வேலை நடைபெற உதவுவது.
146. தூரிகை என்றால் என்ன?
நகரும் பகுதியோடு உள்ள மின்தொடர்பு. மின்உந்தி அல்லது இயற்றியில் இருப்பது.
147. தூரிகை மின்னிறக்கம் என்றால் என்ன?
அதிக மின்னழுத்தமுள்ள கூரிய முனைகளுக்கருகில் தோன்றும் ஒளிர்வான வளிமின்னிறக்கம்.
148. திசைமாற்றி என்றால் என்ன?
மின்னோட்டத்திசையை மாற்றுங் கருவி.
149. மின்னியக்கி என்றால் என்ன?
மின்னோட்டத்தை உண்டாக்கும் கருவி உந்து வண்டியிலும் மிதிவண்டியிலும் இருப்பது. அளவில் சிறியது.
150. மின்னியற்றி என்றால் என்ன?
எந்திர ஆற்றலை மின்னாற்றலாக்கும் பெரிய எந்திரம். தொழிற்சாலைகளில் பயன்படுவது.
151. பன்னிலைமானி என்றால் என்ன?
மின்னோட்டம், மின்தடை, மின்னழுத்தம் முதலியவற்றை அளக்கப் பயன்படுங் கருவி.
152. ஒல்ட்டாமானி என்றால் என்ன?
மின்னாற்பகுப்பு முறையில் மின்னோட்டம் அல்லது மின்னேற்றத்தை உறுதி செய்யப் பயன்படும் கருவி.
153. ஒல்ட்டுமானி என்றால் என்ன?
ஒரு மின்சுற்றில் எவையேனும் இருபுள்ளிகளுக்கிடையே நிலவும் மின்னழுத்த வேறுபாட்டை அளக்குங் கருவி.
154. மின் எண்ணி என்றால் என்ன?
மின்துகள்களைக் கண்டறியவும் எண்ணிப் பார்க்கவும் மின்காந்தக் கதிர்வீச்சை அறியவும் பயன்படுங் கருவி. எ-டு கெய்கர் எண்ணி.
155. கூலுமானி என்றால் என்ன?
ஒரு மின்சுற்றில் செல்லும் மின்னேற்றத்தின் அளவை அளக்கப் பயன்படுங் கருவி.
156. கூலும் விதி யாது?
இரு காந்த முனைகளுக்கிடையே ஏற்படக் கூடிய கவரும் அல்லது விலக்கும் விசையானது, அவற்றின் முனை வலிமைகளின் பெருக்கல் பலனுக்கு நேர்வீதத்திலும் அவற்றிற்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்வீதத்திலும் இருக்கும்.
157. நாடா ஒலிப்பதிவு என்றால் என்ன?
மின்காந்த முறையில் நாடாவில் செய்தியைப் பதிவு செய்யும் முறை.
158. இதை அறிமுகம் செய்தவர் யார்?
போல்சன்.
159. தொலைவரைவு என்றால் என்ன?
மின்காந்தப் பயன் அடிப்படையில் வேலை செய்யும் தொலைத் தொடர்புக் கருவி.
160. இதைக் கண்டறிந்தவர் யார்?
மோர்ஸ், 1844.
161. தொலைபேசி என்றால் என்ன?
மின்தூண்டல் நெறிமுறையில் வேலை செய்யும் தொலை தொடர்புக் கருவி.
162. இதைக் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?
கிரகாம் பெல், 1787.
163. கைத்தொலைபேசி என்றால் என்ன?
எவ்விடத்திலிருந்தும் ஒருவருடன் நேரிடையாகப் பேசக் கூடிய நடமாடும் தொலைபேசி. வானொலி அடிப்படை யில் வேலை செய்வது.
164. ஒலிப்பெருக்கி என்றால் என்ன?
மின்னோட்டங்களை ஒலியாக மாற்றுங் கருவி. ஒலி பெருக்கப்படுவதால் தொலைவில் கேட்கும்.
165. பிரித்தறிவி என்றால் என்ன?
மின்னோட்டத்தைப் பிரித்தறியும் கருவி.
166. வட்டுச்சங்கு என்றால் என்ன?
மின்சாரத்தால் தொழிற்சாலைகளிலும், பொது இடங்களிலும் இயங்குவது.
167. இடைமாற்றி (ரிலே) என்றால் என்ன?
வலுக்குறை மின்னோட்டத்தினால் வறுமிகு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்துங் கருவி.
168. ஆற்றல்மானி என்றால் என்ன?
ஆற்றல், விசை, திறன் ஆகியவற்றை அளக்கும் கருவி.
169. விரைவுமானி என்றால் என்ன?
இயக்கத்தில் இருக்கும் ஒர் ஊர்தியின் விரைவைக் காட்டப் பயன்படுங் கருவி.
170. மின் உந்தி என்றால் என்ன?
மின்னாற்றலை எந்திர ஆற்றலாக மாற்றும் எந்திரம்.
171. பயனுறுதிறன் என்றால் என்ன?
மிகக் குறைந்த உட்பாட்டிற்கு மிக அதிக வெளிப் பாட்டை உண்டாக்கும் ஒரு கருவியமைப்பின் திறன். விழுக்காடாகத் தெரிவிக்கப்படுவது.
172. குதிரைத்திறன் என்றால் என்ன?
மின் உந்திகளின் திறன் உரிய குதிரைத்திறனிலேயே கூறப் பெறுவது. 1 குதிரைத்திறன், 2 குதிரைத்திறன்.
173. இதன் ஆற்றல் எத்தகையது?
ஒரு வினாடிக்கு 550 அடி பவுண்டு விசை. இது 74.57 வாட்டுக்குச் சமம்.
174. இந்த அலகை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஜேம்ஸ் வாட்
175. நீர்மின்சாரம் என்றால் என்ன?
மின்னியக்கியை நீரால் சுழல வைத்து மின்னாற்றலைப் பெறுதல். மேட்டூர், சிவசமுத்திரம் முதலிய இடங்களில் இம்மின்சாரம் பெறப்படுகிறது.
176. நீர்மின்னாற்றல் என்றால் என்ன?
நீரோட்டத்தினால் உண்டாகும் மின்சாரம். (மேட்டூர்)
177. அனல் மின்னாற்றல் என்றால் என்ன?
வெப்ப வழி உருவாகும் மின்சாரம்.
178. அனல் மின்நிலையம் என்றால் என்ன?
நிலக்கரியை எரித்துப் பெறும் வெப்ப ஆற்றலால் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம்.
179. மின்னாய்வி என்றால் என்ன?
மின்சுற்று மூடிய நிலையில் அதில் மின்சாரம் உள்ளதா என்பதைக் கண்டறியும் திருப்புளி போன்ற கருவி. மின் பழுது நிலையில் இது பயன்படுவது.
180. காப்பறிமானி (மெகர்) என்றால் என்ன?
இது மின்காப்புப் பொருளின் தன்மையை ஆராயப் பயன்படும் கருவி. காப்பு போதுமானதா என்பதை அறிய உதவுவது. பழுதடைந்த மின்காப்புகளைக் கண்டறியவும் இக்கருவி பயன்படுகிறது.
181. நுண்பெருக்கி (மைக்) என்றால் என்ன?
ஒலியலைகளை மின்னோட்டமாக மாற்றுங் கருவி. பேசுவதற்குப் பயன்படுவது.
182. மின்னியக்கமானி என்றால் என்ன?
ஒரு திசை, இரு திசை மின்னோட்டச் சுற்றுகளில் மின்னோட்டம் மின்னழுத்தம், மின்திறன் ஆகியவற்றை அளக்கும் கருவி.
183. மின்துருவி என்றால் என்ன?
மின்னணுக்களின் அடர்த்தியை அளக்கும் கருவி.
184. மின்பொறி என்றால் என்ன?
ஒரு தடுப்புப் பொருள் வழியாக மின்னேற்றம் ஏற்படும்பொழுது உண்டாகும் ஒளியும் ஒலியும்.
185. மின்பொறிக் கட்டை என்றால் என்ன?
மின்பொறியை உண்டாக்க அகக் கனற்சி எந்திரத்தில் உள்ளது.
186. ஒளிச்செதுக்கல் என்றால் என்ன?
ஒளிப்படக் கலை மூலம் செதுக்கும் முறை.
187. ஒளிமுடிப்பு என்றால் என்ன?
ஒரு போட்டி முடிவை ஒளிப்படம் எடுத்து முடிவு செய்தல்.
188. ஒளிமானி என்றால் என்ன?
ஒளிமூலங்கள் இரண்டின் ஒளி வீசுதிறனை ஒப்பிட்டுப் பார்க்கப் பயன்படுங் கருவி.
189. முனைப்படுஒளி என்றால் என்ன?
புலவரைவொளி. இதில் மின்புலமும் காந்தப் புலமும் ஒற்றைத் தளங்களுக்கு வரையறை செய்யப்படுகின்றன.
190. முனைப்படு ஒளியை உண்டாக்குவது எது?
புல ஒளியாக்கி (போலராய்டு)
191. மின் உலோகவியல் என்றால் என்ன?
ஒரு உலோகத்தை அதன் தாதுவிலிருந்து மின்முறையில் பிரித்தல்.
192. உலர்நகலி என்றால் என்ன?
எழுத்து வடிவச் செய்தியை நகல் எடுக்கும் மின் கருவி யமைப்பு.
193. ஒளிர்தல் என்றால் என்ன?
ஆற்றலை உறிஞ்சி மின்காந்தக் கதிர்வீச்சுக்களை உமிழும் பொருளின் பண்பு.
194. இதற்கு ஒர் எடுத்துக்காட்டு தருக.
இருட்டறையில் பச்சையக் கரைசல் வழியாக ஒளியைச் செலுத்த, அக்கரைசலிலிருந்து நல்ல சிவப்பு நிற ஒளி நாலாத் திசைகளிலும் உமிழப்படும்.
195. வெண்ணொளிர்வு என்றால் என்ன?
உயர் வெப்ப நிலைகளில் மின் விளக்கு இழைகளில் உண்டாகும் ஒளி.
196. இருள் வெளி என்றால் என்ன?
மின்னிறக்குக்குழாயின் காற்றழுத்தத்தை 0.1 செ.மீ. அளவுக்குக் குறைக்கும் பொழுது ஊதாநிற நேர் மின்பிழம்பில் எதிர் மின்வாய்க்கருகில் ஓர் இருள் பகுதி தோன்றும். இதுவே பாரடே இருள் வெளி.
197. குரூக்ஸ் இருள்வெளி என்றால் என்ன?
அழுத்தத்தை 0.01 செ.மீ. அளவுக்குக் குறைக்கும் பொழுது எதிர் மின் பிழம்பு எதிர் மின்வாயிலிருந்து விடுபட்டு மற்றொரு இருள் பகுதி தோன்றும். இதுவே குரூக்ஸ் இருள்வெளி. இதில் மின்பிழம்பின் நீளம் குறைந்திருக்கும்.
198. மின் வில் என்பது என்ன?
மின்னோட்டம் செல்லும் பொழுது, மின்வாய்களுக் கிடையே ஏற்படும் ஒளிர் வெளி.
199. மின் நாற்காலி என்பது என்ன?
குற்றவாளிகளை உட்கார வைத்து மின்சாரத்தைச் செலுத்திக் கொல்லும் நாற்காலி. அமெரிக்கா முதலிய நாடுகளிலுள்ளது.
200. மின்மணி என்றால் என்ன?
மின்காந்தப் பயனுள்ள அழைப்பு மணி.
201. முனைப்படுதல் (துருவகரணம்) என்றால் என்ன?
இது ஒல்ட்டா மின்கலத்தில் ஏற்படும் குறை. துத்தநாகத்திலிருந்து வெளியாகும் அய்டிரஜன் குமிழிகள் செப்புத் தகட்டில் குவியும். இதனால் கம்பி
வழியாகச் செல்லும் மின்னோட்டம் தடைப்படும். இதைப் போக்க ஆக்சிஜனை அளக்கக் கூடிய முனைச் செயல் நீக்கியைப் (மாங்கனீஸ் இரு ஆக்சைடு) பயன்படுத்த வேண்டும்.
202. உள்ளிட நிகழ்ச்சி என்றால் என்ன?
இது ஒல்ட்டா மின்கலத்தில் ஏற்படும் குறை. இதில் தூய்மையற்ற துத்தநாகத்திலிருந்து வெளியாகும் கரித்துணுக்களுக்கும் துத்தநாகத்திற்குமிடையே சிறு மின்னோட்டங்கள் நிகழும். இதனால் கம்பி வழியாகச் செல்லும் மின்னோட்டம் தடைப்படும்.இதைப் போக்கத் துத்தநாகத்தகட்டை இரசக்கலவை செய்ய வேண்டும்.
203. மின்முலாம் பூசுதல் என்றால் என்ன?
மின்னாற் பகுப்பு அடிப்படையில் ஒர் உலோகத்தை மற்றொரு உலோகத்தின் மீது படியச் செய்தல். செப்பு வளையலுக்குத் தங்க முலாம் பூசுதல்.
204. மின்னச்சு என்றால் என்ன?
மின்னாற் பகுப்பு மூலம் மூல எழுத்தின் படி எடுத்தல்.
205. படி எடுத்தல் என்றால் என்ன?
மின்னாற்பகுப்பு முறையில் செய்யப்பட்ட மூலத்தின் பதிவைப் பயன்படுத்துவதற்கு தயார் செய்தல்.
206. எரிபொருள் மின்கலம் என்றால் என்ன?
வேதி வினைமூலம் வேலை செய்து மின்சாரத்தை உண்டாக்குவது. இதன் பயனுறுதிறன் 45 -60% எ-டு. அய்டிரஜன் எரிபொருள் மின்கலங்கள்.
207. இலித்திய - அயனி மின்கல அடுக்கு என்றால் என்ன?
துணை மின்கல அடுக்கு எதிர்முனை (-) இலித்திய ஆக்சைடு நேர்முனை (+). மின்பகுளி நீர்ம ஊடகம். இதை ஜப்பான் உருவாக்கி உள்ளது. (1994)
208. துகள் பொழிவு என்றால் என்ன?
அதிக அளவு அயனிகள் உண்டாதல். உண்டாக்கப்பட்ட மின்னணுக்களும் அயனிகளும் அதிக அணுக்களை அயனிவயமாக்குதல்.
209. மூளை மின் வரையம் (EEG) என்றால் என்ன?
பெருமூளைப் புறணியின் நரம்பணுக்களால் உண்டாக் கப்படும் மின்னழுத்தத்தால் ஏற்படும் மாற்றங்களைப் பதிசெய்தல்.
210. இதய மின்வரையம் என்றால் என்ன?
இதயத் தசைகள் சுருங்கும்பொழுது மின் வேறுபாடு களின் ஒளிப்படப் பதிவு.
211. மின் வேதி இணை மாற்று என்றால் என்ன?
1 ஆம்பியர் மின்னோட்டத்தில் 1 வினாடியில் மின்னாற்பகுப்பு மூலம் வெளிவரும் உலோக நிறை.
212. மின் வளர்ப்பு என்றால் என்ன?
மின் தூண்டலில் தாவரங்களை வளர்த்தல்.
213. மின்பாய்வு என்றால் என்ன?
மின்சாரம் உடலில் பாய்வது. இதனால் இறப்பு நிகழும்.
214. மின்னோட்டங்காட்டி என்றால் என்ன?
மின்னோட்ட மானியின் எளிய வகை. இதன் பயன்கள்: 1. மின்னோட்டத்தைக் கண்டறிய. 2. மின்னோட்டத்தில் உண்டாகும் காந்த பலனை அறிய. 3. மின்னோட்டத் திசை அறிய.