அறிவியல் வினா விடை-வேதியியல்/வேதி முறைகள்

விக்கிமூலம் இலிருந்து

5. வேதிமுறைகள்

1. வேதிமுறை என்றால் என்ன?

1. கரைசலிலிருந்து அதன் பகுதிப் பொருள்களைப் பிரித்தல். - உப்புக்கரைசல். 2. தாதுக்களிலிருந்து உலோகத்தைப் பிரித்தல் - பெசீமர் முறை - எஃகு.

2. வடித்துப்பகுத்தல் என்றால் என்ன?

ஒரு நீர்மக் கரைசலைப் பிரிக்கும் முறை. கடல்நீரைக் காய்ச்சி வடிக்க உப்பு வாலையில் தங்கும்.

3. இதன் வகைகள் யாவை?

1. சிதைத்து வடித்தல் - நிலக்கரி.
2. பகுத்துவடித்தல் - நிலக்கரித்தார்.
3. வெற்றிட வடித்தல் - உயர்வெப்ப நிலையிலுள்ள நீர்மத்தைப் பிரித்தல்.
4. நீராவி வடித்தல் -அனிலைன்.

4. உலர் வடித்துப் பகுத்தல் என்றால் என்ன?

ஒரு கெட்டிப் பொருளை வெப்பப்படுத்த ஆவியாகும். அதைச் சுருக்க மீண்டும் அது நீர்மமாகும். எ-டு. கால்சியம் அசெடேட்டை உலர் வடித்துப் பகுக்க அசெடோன் கிடைக்கும்.

5. பகுத்துவடித்தல் என்றால் என்ன?

இரண்டிற்கு மேற்பட்ட கலவாத நீர்மங்கள் சேர்ந்த கலவையை, அந்நீர்மங்களின் வேறுபட்ட கொதிநிலைகளில் பகுத்துப் பிரித்தல். எ-டு, பெட்ரோலியம்.

6. பகுத்துப்படிகமாக்கல் என்றால் என்ன?

ஒரு நீர்மத்தில் கரைந்துள்ள இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களைப் பிரிக்கும் முறை. இதில் அவற்றின் வேறுபட்ட கரைதிறன்கள் பயன்படுத்தப்படுகின்றன. எ-டு. உப்புக் கரைசலிலுள்ள உப்பைப் படிகமாக்கிப் பிரித்தல்.

7. வீழ்படிவு என்றால் என்ன?

தயிர் போன்று கரையாப் பொருள். வேதிவினையினால் ஒரு கரைசலில் உண்டாவது. எ-டு. அய்டிரோகுளோரிகக் காடியில் வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலைச் சேர்க்க வெள்ளிக் குளோரைடு வீழ்படியும்.

8. வீழ்படிதல் என்றால் என்ன?

வீழ்படிவு உண்டாகும் செயல் வீழ்படிதல் ஆகும்.

9. கழிவுறச் செய்தல் என்றால் என்ன?

1. கரைவதும் கரையாததுமான கனிமக்கலவையைக் கரைப்பான்களோடு சேர்த்து வினைப்படுத்தும் முறை.
2. பொன் முதலிய விலை உயர்ந்த உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரிக்கும் முறை.

10. வெற்றிட வடித்துப்பகுத்தல் என்றால் என்ன?

குறைந்த அழுத்தத்தில் நீர்மங்களை வடிக்கும் முறை. இதனால் கொதிநிலை உயரும் அல்லது தாழும். இது நீர்மக் கலவையைப் பிரிக்கும் முறை.

11. புடமிடல் என்றால் என்ன?

வெள்ளி அல்லது பொன்னை அதன் மாசுகளிலிருந்து வெப்பப்படுத்திப் பிரிக்கும் முறை. இதில் எளிதில் ஆக்சிஜன் ஏற்றம் பெறக்கூடிய உலோகம் (காரீயம்) பயன்படுத்தப்படுகிறது.

12. பதங்கமாதல் என்றால் என்ன?

ஒரு திண்மத்தை வெப்பப்படுத்தி நேரடியாக ஆவியாக்கல். எ-டு, சூடம். கலவையைப் பிரிக்கும் முறை,

13. பதங்கமாகும் பொருள்கள் யாவை?

சூடம், அயோடின்.

14. தெளிய வைத்து இறுத்தல் என்றால் என்ன? திண்மத்தை நீர்மத்திலிருந்து பிரிக்கும் முறை, திண்மத்தைப் படியவைத்து நீர்மத்தை ஊற்றுதல்.

15. வடிபொருள் என்றால் என்ன?

வடிகட்டல் மூலம் பெறப்படும் பொருள். கலவையைப் பிரிக்கும் முறை. உப்புக்கரைசலை வடிதாள் வழியாகச் செலுத்தத் தாளின் மேல் உப்பும் முகவையில் வடிபொருளும் (நீர்) கிடைக்கும்.

16. வடிகட்டல் என்றால் என்ன?

கலவையைப் பிரிக்கும் முறைகளில் ஒன்று. வடிதாள், உருக்கி இணைத்த ஒன்று. வடிதாள், உருக்கி இணைத்த கண்ணாடி முதலியவை வடிகட்டிகள்.

17. வடித்த நீர் என்றால் என்ன?

காய்ச்சி வடித்தல் மூலம் தூய்மை செய்யப்பட்ட நீர். ஊசிமருந்து கலக்கவும் வேதி ஆய்வுகள் செய்யவும் பயன்படுவது.

18. வண்டல்படிதல் என்றால் என்ன?

மைய விலக்கியினாலோ ஈர்ப்பினாலோ தொங்கல் படிதல். துகள்களின் சராசரி அளவை மதிப்பிட படிதல் விரைவு பயன்படும்.

19. இதன் பயன் யாது?

இந்நுணுக்கம் மைய விலக்கி உதவியுடன் பெரு மூலக்கூறுகளின் சார்பு மூலக்கூறு நிறை காணப்பயன்படுதல்.

20. கரைத்து நீக்கல் என்றால் என்ன?

நிறவரைவியல் கம்பத்தில் கரைப்பான் மூலம் பரப்பூன்று பொருளை நீக்குதல்.

20. சிதைத்து வடித்தல் என்றால் என்ன?

காற்றுப் புகாக் கலத்தில் நிலக்கரியைப் போட்டு நன்கு வெப்பப்படுத்த, நிலக்கரி பிரிந்து பல பொருள்களின் ஆவிகளை வெளிவிடும். இவற்றை வடித்துப்பகுத்தல் வாயிலாகப் பிரிக்கலாம்.

22. பிரித்தல் என்றால் என்ன?

1. தாதுவிலிருந்து உலோகத்தை நீக்குதல். 2. ஒரு கலவையிலிருந்து கரைதிறன் மூலம் ஒரு பகுதியைப் பிரித்தல்.

23. அருவிமுறை என்றால் என்ன?

பல நிலைகளில் நடைபெறும் முறை. எ-டு. யுரேனியத்தை வளமாக்கும் விரவல் முறை.

24. வெள்ளீயமேற்றல் என்றால் என்ன?

பித்தளை, வெண்கலம், செம்பு ஆகியவற்றிற்கு மெல்லிய வெள்ளீயத் தகடேற்றல்.

25. எஃகுத் தணிப்பு என்றால் என்ன?

காய்ச்சிய எஃகை விரைவாக குளிரச் செய்ய நீரில் அல்லது எண்ணெயில் தோய்த்தல்.

26. நேர்முனை மின்னேற்றஞ் செய்தல் என்றால் என்ன?

அரிமானத்தைத் தடுக்கும் முறை, அலுமினிய உலோகக் கலவையில் அலுமினிய ஆக்சைடை மெல்லியதாகப் படிய வைத்தல்.

27. சிலிகன் முலாம்பூசுதல் என்றால் என்ன?

உயர்வெப்பநிலையில் உலோகத்தில் சிலிகனைப் பரவச் செய்தல்.

28. உருக்கி இணைத்தல் என்றால் என்ன?

உலோகம், பீங்கான் முதலியவற்றைத் தூள் செய்து, அவற்றின் உருகுநிலைக்குக் கீழ் வெப்பப்படுத்த, அவை உறையும். இச்செயலே உருக்கி இணைத்தல்.

29. உருக்கி இணைத்த கண்ணாடி என்றால் என்ன?

உருக்கி இணைத்தல் முறையில் செய்யப்படுவது. இதில் துளை இருக்கும். ஆகவே, எடையறிபகுப்பில் வீழ்படிவுகளை வடிகட்டவும் பயன்படுதல்.

30. வறுத்தல் என்றால் என்ன?

உலோகத்தைப் பிரித்தலுக்குமுன், தாது காற்றில் சூடாக்கப்படுதல். இதனால் அதிலுள்ள மாசுகள் நீக்கப்படுதல். இதனால் அடுத்த நிலையை மேற்கொள்ள ஏதுவாகும். உலோகப் பிரிப்பு முறைகளில் ஒன்று. எடு. இரும்பின் சல்பைடு தாதுவை வறுத்தல்.

31. தோய்த்தல் என்றால் என்ன? இதன் நன்மை என்ன?

எஃகைப் பதப்படுத்தும் முறை. இதனால் கிடைக்கும் எஃகு அதிகக் கடினமில்லாததாகவும் உடையும் தன்மை இல்லாததாகவும் இருக்கும்.

32. சல்போனிகக் காடியாக்கல் என்றால் என்ன?

ஒரு கரிமப் பொருளில் சல்போனிகக் காடித் தொகுதியைச் சேர்த்தல்.

33. கட்டுப்படுத்தி ஆற்றுதல் என்றால் என்ன?

வெப்பப்படுத்தும் முறைகளில் ஒன்று. எஃகினைச் செஞ்சூடேற்றிப் பின்னர்க் குளிரச் செய்ய அது மென்மையாகும்.

34. உருக்கிப் பகுத்தல் என்றால் என்ன?

தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரிப்பதற்குமுன் அவற்றைத் தூய்மையாக்கும் முறை.

35. நீர்மமாக்கல் என்றால் என்ன?

ஒரு பொருளை நீர்மநிலைக்கு மாற்றுதல். லிண்டே முறையில் வளி நீர்மமாகும்.

36. சல்பேட்டாக்கல் என்றால் என்ன?

சல்பைடை ஆக்சிஜன் ஏற்றம் செய்வதன் மூலம் ஒரு கூட்டுப் பொருளைச் சல்பேட்டாக்குதல்.

37. வன்கந்தமாக்கல் என்றால் என்ன?

ரப்பரின் பண்பை உயர்த்தும் முறை, இதில் கந்தகத்துடன் ரப்பர் சேர்த்துச் சூடாக்கப்படும்.

38. இம் முறையைத் தற்செயலாகக் கண்டறிந்தவர் யார்?

1829இல் சார்லஸ் குட் இயர் என்பார் கண்டறிந்தார்.

39. வன்கந்த ஆற்றல் என்றால் என்ன?

அதிகம் வெடிக்கும் கலவை. இதில் சோடியம் நைட்ரேட்டு நைட்ரோகிளசரின் வீட்டுக்கரி கந்தகம் ஆகியவை சேர்ந்திருக்கும்.

40. வெற்றிட உலோகப் படிய வைப்பு என்றால் என்ன?

பூகம் உலோகத்தை முதலில் ஆவியாக்கி அந்த ஆவியை மட்ட உலோகத்தின் மீது செலுத்திக் குளிரவைக்கும் பொழுது பூசும் உலோகம் மெல்லிய படலமாக அதன்மீது படியும். இது வெப்ப ஆவியாக்கல், எதிர் மின்வாய் உமிழ்வு ஆகிய முறைகளில் செய்யப்படுகிறது.

41. மண்டலத் தூய்மையாக்கல் என்றால் என்ன?

சில உலோகங்கள், உலோகக் கலவைகள் அரைகுறைக் கடத்திகள் முதலியவற்றிலுள்ள மாசுகளின் அளவைக் குறைக்கப்பயன்படும் நுணுக்கம்.

42. உறைக்கடினமாக்கல் என்றால் என்ன?

எஃகின் மேற்பரப்புக் கடினத் தன்மையை உயர்த்தும் முறை. இம்முறை பல்லிணை, கிறங்குதண்டுகள் ஆகியவற்றின் பகுதிகள் செய்வதில் பயன்படுகிறது.

43. குறுக்கம் என்றால் என்ன?

வளியை அல்லது ஆவியைக் குளிர்வித்து நீர்மம் அல்லது திண்மமாக மாற்றுதல்.

44. குறுக்கலினை என்றால் என்ன?

இதில் இரு மூலக்கூறுகள் சேர்ந்து ஒரு மூலக்கூறு நீங்குதல். இது வழக்கமாக நீர். இதனைக் கூட்டு நீங்கல் வினை எனலாம். இவ்வினை ஆல்டிகைடுகளுக்கும் கீட்டோன்களுக்குமுள்ளது.

45. அடர்ப்பித்தல் என்றால் என்ன?
1. துத்தநாகத்தை அதன் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறைகளில் ஒன்று.
2. அடர்வு, ஒரு கரைசலின் ஓரலகு பருமனின் பொருள் அளவு, அலகு மோல்.

46. தூய்மையாக்கல் என்றால் என்ன?

தாதுவிலிருந்து பிரித்தெடுத்த உலோகத்தைத் தூய்மை படுத்தும் முறை. இதற்கு மின்னாற்பகுப்பு பயன்படுவது. எ-டு. துத்தநாகம்.

47. நுரைமிதப்பு என்றால் என்ன?

தாதுக்களிலிருந்து தாதுக்கனிமத்தைப் பிரிக்கும் முறை. அழுத்தப்பட்ட காற்று நுரைப்பி சேர்க்கப்பட்ட தாதுக் கலவையில் நுரை உண்டாகுமாறு சேர்க்கப்படுகிறது. இச்செயலால் தாதுத்துகள் நீங்குகின்றன.

48. சுடர் ஆய்வு என்றால் என்ன? உலோகங்களைக் கண்டறியும் ஆய்வு.

49. எரிநிலை என்றால் என்ன?

இது மிகக் குறைந்த வெப்பநிலை. இதில் போதிய அளவு ஆவி எரிநீர்மத்தால் மின்பொறியில் எரியுமாறு வெளிவிடப்படுகிறது. இதைப் பற்று நிலை எனலாம்.

50. பாய்மமாக்கல் என்றால் என்ன?

பாய்மம் = நீர்மம் + வளி. இது தொழிற்சாலை நுணுக்கம். இதில் திண்மத் துகள் தொகுதி, தொங்கல் நிலைக்குக் கொண்டுவரப்படுகிறது. இதற்கு உலையில் அதன் வழியே மேல் நோக்கிச் செலுத்தப்படுகிறது.

51. நாகமுலாம் இரும்பு என்றால் என்ன?

கந்தக்காடியில் துப்புரவு செய்த உருகிய துத்தநாகத்தில் இரும்பு தோய்த்து எடுக்கப்படுகிறது. இதுவே நாகமுலாம் இரும்பு.

52. கந்தக ஏற்றம் என்றால் என்ன?

கந்தகத்தையும் அதன் கூட்டுப் பொருள்களையும் ஆக்சிஜன் ஏற்றம் செய்து சல்பேட் உப்புகளைப் பெறுதல். மண்ணில் இது குச்சிவடிவ உயிர்களால் நடைபெறுவது.

53. கார்பாக்சைல் நீக்கம் என்றால் என்ன?

கரிமக்காடியின் கார்பாக்சைல் தொகுதியிலிருந்து கரி ஈராக்சைடை நீக்குதல்.

54. இயல்பு நீக்குதல் என்றால் என்ன?

மெத்தனால், பைரிடின் முதலிய இயல்பு நீக்கிகளைச் சேர்த்து, ஈத்தைல் ஆல்ககாலைக் குடிப்பதற்குத் தகுதியற்ற தாக்குதல்.

55. நைட்ரேட்டு நீங்குதல் என்றால் என்ன?

சில குச்சி வடிவ உயிர்கள் உயிர்ப்பினால் மண்ணிலிருந்து நைட்ரேட்டு உப்புகளை நீக்குதல்.

56. நிலை இறக்கம் என்றால் என்ன?

இது ஒரு வேதிவினை. இதில் வழக்கமாக ஒரு மூலக்கூறு பல படி நிலைகளில் எளிய மூலக்கூறுகளாகச் சிதையும். எ-டு. அமைடுகளின் ஆஃப்மன் நிலை இறக்கம்.

57. நீர்நீக்கல் என்றால் என்ன?

ஒரு பொருளிலிருந்து நீரை வெளியேற்றுதல்.

58. நீர்த்தல் என்றால் என்ன?

சில படிககங்கள் நீரை ஈர்த்தல். எ-டு. கட்டசுண்ணாம்பு.

59. உருக்கல் என்றால் என்ன?

ஊதுலையில் ஓர் உலோகத்தை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுத்தல். எ-டு. செம்பு அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுதல்.

60. துத்தநாகம் பூசல் என்றால் என்ன?

காற்றில்லாமல் துத்தநாகத்தூளை வெப்பப்படுத்தி துத்தநாகப் பூச்சு பூசுதல், வில் சுருள்கள், திருகாணிகள் முதலியவை செய்வதில் இம்முறை பயன்படுதல். இப்பொருள்கள் அரிமானத்தடை உள்ளவை.

61. இம் முறையைப் புனைந்தவர் யார்?

ஷெராடு. ஆகவே இதற்கு ஷெராடைசிங் என்று பெயர்.

62. மாண்ட் முறை என்றால் என்ன?

தூய நிக்கலைப் பெறும் தொழிற்சாலை முறை.

63. பார்க் முறை என்றால் என்ன?

காரீயத்தைத் தூய்மையாக்கும் முறை.

64. பெசிமர் முறை என்பது யாது?

எஃகு தயாரிக்கும் முறை.

65. சீக்களர் முறை என்றால் என்ன?

உயரடர்த்தி பாலியீத்தின் தயாரிக்கும் தொழிற்சாலை முறை.

66. இம்முறையில் விளையூக்கிகள் யாவை?

டிட்டானியம் குளோரைடு, அலுமினியம் அல்கைல்கள்.

67. இதை அறிமுகப்படுத்தியவர் யார்?

ஜெர்மன் வேதியியலார் சீக்ளர் 1953இல் இதை அறிமுகப்படுத்தினர்.

68. சயனமைடு முறை என்றால் என்ன?

தங்கத்தை அதன் தாதுவிலிருந்து பிரிக்கும் முறை, இதில் பொட்டாசியம் சயனைடு கரைசல் பயன்படுத்தப்படுகிறது.

69. குயுமினி முறை என்றால் என்ன?

பினால் செய்யும் முறை.

70. ஹேபர் முறை என்றால் என்ன?

தொழில் முறையில் அம்மோனியா உண்டாக்கும் முறை.

71. லிண்டு முறை என்றால் என்ன?

இறுக்கு விசையினால் வளிகளை நீர்மமாக்கும் முறை.

72. சீமன்முறை எதற்குப் பயன்படுகிறது?

எஃகு உருவாக்கும் திறந்த உலை முறை.

73. பெசிமர் முறையைக் காட்டிலும் இது சிறந்தது. ஏன்?

இதில் மென்மையான எஃகு கிடைக்கிறது.

74. சிலிகன் முறை என்றால் என்ன?

அய்டிரஜன் உண்டாக்கும் முறை, டவுன் முறை என்றால் என்ன? மின்னாற் பகுப்பு முறையில் குளோரினைப் பிரிக்கும் முறை.

76. டவ் முறை என்பது யாது?

பினாயில் தயாரிக்கும் முறை.

77. டியூமாஸ் முறை என்றால் என்ன?

ஒரு கரிமச் சேர்மத்திலுள்ள நைட்ரஜன் அளவைக் காணும் முறை. பிரஞ்சு வேதியியலார் ட்யூமாஸ் பெயரில் அமைந்தது.

78. கிரால் முறை என்றால் என்ன?

மக்னீசியம், சோடியம், கால்சியம் ஆகியவற்றால் உலோக ஏலைடுகளை ஒடுக்கும் முறை.

79. விக்டர் மேயர் முறையின் பயன் யாது?

ஆவியடர்த்தியை அளக்கும் முறை. விக்டர் மேயர் பெயரால் அமைந்தது.

80. வேக்கர் முறை என்றால் என்ன?

குப்ரிகக் குளோரைடு நீர்த்த கரைசலில் எத்தீன் எத்தனாலாக ஆக்சிஜன் ஏற்றம் பெறுதல்.

81. வில்லியம்சன் தொகுப்பு என்றால் என்ன?

ஈதரை உண்டாக்கும் முறை பிரிட்டிஷ் வேதியியலார் அலெக்சாண்டர் வில்லியம்சன் என்பவர் பெயரால் அமைந்தது.

82. ஓலர் தொகுப்பு என்றால் என்ன?

ஓலர் சேர்க்கை. 1828இல் பிரடரிக் ஒலர் என்பார் தொகுத்த யூரியா.