உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக் கதைகள்/இரு கிளிகள்

விக்கிமூலம் இலிருந்து

15. இரு கிளிகள்

இரண்டு கிளிகளை ஒருவன் மிகச் செல்லமாக வளர்த்தான். தீனி கொடுப்பான்; சுதந்திரமாகப் பறக்க விடுவான். அவைகளும் பறந்து திரிந்து, அவனது கூண்டுக்கே திரும்பி வந்து தங்கிக்கொள்ளும்.

அவை இப்படி வளருங்காலத்திலே, ஒருநாள் வெளியே பறந்தபோது ஒரு வேடனின் வலையிலே சிக்கிக் கொண்டன. அவ் வேடன் அவ்விரண்டையும் தனித் தனியே இருவரிடம் விற்றுவிட்டான்.

வளர்த்த பாசத்தினாலே — பல நாட்கள் — அவன் — கிளிகளை வளர்த்தவன்—எங்கெங்கோ அலைந்து தேடிக் கொண்டேயிருந்தான்.

கடைசியாக ஒருநாள், தங்கி இளைப்பாறிப் போகலாம் என்று ஒர் ஆசிரமத்தின் உள்ளே நுழைந்த போது—தான் வளர்த்துக் காணாதுபோன பச்சைக்கிளிகளில் ஒன்று, ஆசிரமத்தின் கூண்டில் அடைப்பட்டிருப்பதைக் கண்டான். கண்டதும் தனது கிளியே என மகிழ்ச்சியுடன் பார்த்தான்.” அது “வாருங்க சாமி, வாருங்கோ, வந்து உட்காருங்க. ஆகாரம் என்ன சாப்பிடு நீங்க? சில நாள் ஆசிரமத்தில் தங்கிப் போங்க"—என்று சொல்லியது. தான் வளர்த்த கிளி ஆசிரமத்திலே சந்நியாசிகள் பேசும் சொற்களையே திருப்பிச் சொல்கிறது என்று எண்ணி மிகவும் களித்தான்.

மற்றொரு கிளியும் எங்கே என்று தேடிக் கண்டுபிடித்து, இதையும் சேர்த்து வாங்கிப் போகலாம் என்று அதையும் தேடினான்

சற்று தூரம் சென்றபின் அங்கே ஒரு கசாப்புக் கடையில் கிளி இருந்தது; அது தன் கிளியா எனப்பார்க்கப் போனான்.

இவனைக் கண்டதும் கிளி,

“வா ஐயா, வா, ஆட்டுக்கறி வேணுமா?— கோழிக்கறி வேணுமா?

ஆட்டுக்கறி 5 பணம், கோழிக்கறி 6 பணம்; வெட்டு, கொத்து” என்றது.

அதுவும் தான் வளர்த்த கிளிதான் என்று தெரிந்து கொண்டான்.

அவனுக்குச் சிந்தனை—

“ஒரே தாய் வயிற்றிற் பிறந்து, ஒரே ஆண்டிலே வளர்ந்த இரண்டு கிளிகள், இப்படி மாறுபட்டும் வேறுபட்டும் பேசுவதேன்?” என.

கடைசியாக, அவரவருடைய அறிவு திறமை, சொல், செயல் எல்லாம் அவரவர்களின் சுற்றுச்சார்புக்கும் சூழ்நிலைக்கும் ஏற்பவே அமைகிறது என்பதைக் கண்டு, மனமுடைந்து திரும்பினான்.

எப்படி—ஆசிரமத்தில் வாழ்ந்த கிளி?

எப்படி—கசாப்புக் கடையில் வாழ்ந்த கிளி?

இதனைக் கண்ட பின்பேனும், மக்களாய்ப் பிறந்தவர்கள் சுற்றுச்சார்புக்கும் சூழ்நிலைக்கும் அடிமைப்பட்டு விடாமல் வாழ்வதே நல்லது.